• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் - 16

“ம்மா நீ சொல்றது எல்லாம் சரிதான்.வாழ்கையில முதல் முறையா உன்னையத் தவிர வேற யாரோ முகம் தெரியாத மனுஷங்க வாழ்த்தும்போதும், பாராட்டும்போதும் எப்படி இருக்கு தெரியுமா?. இதெல்லாம் எனக்கு கனவுமா”

“கனவுல இருந்து விழிச்சுக்கோ… கனவுல மெதந்துகிட்டே இருந்தா நீ போறதுக்கு முன்னாடியே உன் சீட்டுல வேற யாராவது இடம் புடிச்சு கால் மேல கால் போட்டு உக்காந்துகிட்டு உன்னையவே என்னனு கேப்பாங்க “

“சரிமா சரிமா… என்ன சமையல் இன்னைக்கு? “

“தெரியலடா கிச்சன் போய் பாத்தாதான் தெரியும் “

“என்னமா உன்ன நம்பி மூனு ஜீவன்கள் இருக்குன்ற பொறுப்பே இல்லாம பேசிட்டு இருக்க “

“சும்மாவே இருக்க போர் அடிக்குது நானே டின்னர் சமைக்குறேனு சொல்லிட்டு யாமினி கிச்சன்ல ஏதோ பண்ணிட்டு இருக்காடா “

“அப்படியா சரி சரி “

“ஏன் உங்கிட்ட சொல்லலையா? “

“நான் எங்கமா அவ கிட்ட பேசுனே?”

“ஃபோன குடுக்கவா? பேசுறியா? இல்லமா வேணா. சிக்கல்ல இருந்தாதான் அடிக்கடி நெனப்பு வரும். அதான் நீ இருக்கீல ஒன்னும் பிரச்சன இல்ல “

“டேய் பெரிய ராசா நீ அவ்வளோ பெரிய ஆளாடா? “

“நான் உன் புள்ளமா! “

அம்மாவுடன் பேசிய பிறகு ஏதோ பெரிய சக்தி கிடைத்ததைப் போன்று இருக்கும். வீட்டில் இருக்கும்போது கூட இப்படித் தோன்றாமல் இருக்கலாம். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் அவளைப் பிரிந்து இருக்கும்போது அவள் குரலில் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையுமே ஆறுதல் சொல்லி கைபிடித்து வழிகாட்டும். அதை உணர்ந்தவருக்கு மட்டும்தான் அந்த உணர்வு புரியும்.

அம்மா தான் சொல்ல வந்ததை பல பென்டுகளில் நுழைத்துத் திருப்பி வளைந்து நெலிந்து சொன்னாலும், அவள் சொல்ல வந்த கருத்து “விமர்சனங்களைக் கடந்து தினமும் தவறாமல் வீடியோ போடுவதுதான் நல்ல முன்னேற்றத்தையும் வெற்றியையும் கொடுக்கும்” என்பதுதான்.

அவனும் அதைத் தன் மூளைக்குள் படிய வைத்தான். அன்றைய நாளுக்கான வீடியோவில் கதையைத் தொடர, அந்த நோட்டில் அம்மா கையால் எழுதிய கதையை விட்டதில் இருந்து தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தான்.

தன் மகன் புகழ் மயக்கத்தில் மூழ்கி மடிந்து விடக் கூடாது என்கிற எண்ணத்தோடு கோக்கு மாக்காகப் பேசி எச்சரிக்கைப் படுத்தினாலும், தன் ரத்தத்தில் இருந்து பிறந்தவனை ஊரார் பாராட்டும் அழகைப் பார்த்து ரசிக்க எந்த அம்மாவுக்குத்தான் புடிக்காது?. பேரார்வம் பூக்க கைபேசியில் தன் மகன் சேனலுக்குள் நுழைந்தாள் ஜோதி.

முதல் வீடியோவை ஓடவிட்டு கேப்பொலியைக் கேட்டுக் கொண்டிருந்தாலும், அந்த சத்தம் மூளைக்கும் மனதிற்கும் இடையில் காதருகே சிக்கிக்கொண்டது. அதைப் பெரிதுபடுத்தாமல் தன் வலது கை கட்டை விரலால் மேல் தள்ளி ஒவ்வொரு கருத்தையும் வாசித்துப் பெருமையடைந்தாள்.

அடுத்த வீடியோவையும் அதே போல் ஓடவிட்டு கருத்துகளில் கண் வைத்து சொக்கி இருந்தாள் ஜோதி. அதில் ஒரு வார்த்தை மட்டும் செவியைக் கடந்து, மூளையில் முள்ளாய்க் குத்திப் புரிதலை ஏற்படுத்திவிட்டு பின் சட்டென்று மனதிற்குள் புகுந்து அவளை ஆட்டி வைத்தது.

“அக்பர் “ என்கிற அந்த சத்தம் அவளை ஏங்கோ இழுத்துச் சென்றது. அது அவள் தொண்டைக் குழியில் சிக்கிய கண்ணாடிச் சில்லாய் சதையை அறுத்து வதைத்துக் கொண்டிருந்தது. வேதனையில் தலை சுற்றிக் கீழே விழுந்தாள்.

சோஃபாவில் அமர்ந்திருந்தவள் திடீரென சரிந்து கீழே விழுவதைப் பார்த்த சிபி “அம்மா “ என்று அலறினான். சத்தம் கேட்டு உள்ளிருந்து ஓடி வந்த யாமினி அவளைத் தண்ணீர் தெளித்து எழுப்பி வசதியாக அமரச் செய்தாள். “என்னமா ஆச்சு? “ என்று சிபியும் யாமினியும் மாறி மாறி கேட்க “ஒன்னும் இல்ல திடீர்னு என்னமோ ஆகிருச்சு. இப்போ பரவாயில்ல. நல்லாயிருக்கு. அப்பாகிட்டையும் ஆதி கிட்டையும் சொல்லாதீங்க கண்டத யோசிச்சு பயப்படுவாங்க. நீங்களும் ஒன்னும் குழப்பிக்க வேண்டாம் நான் நல்லாதான் இருக்கேன் “ என்று சொல்லி சமாதானம் செய்தாள் ஜோதி.

யாமினி சமையலை கவனிக்க சமயலறைக்குள் நுழைந்தாலும், சிபி அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அங்கேயே இருந்தான். அவளது பார்வையும் சிந்தனையும் வேறு எதன்மீதோ இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டவன் அவளுக்கு தனிமையைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

மாறுபட்ட மனவோட்டத்தில் மாட்டிக்கொண்டு மீண்டு எழ முடியாமல் தவிக்கும் ஜோதியின் மனதை யாராலும் படிக்க முடியாது. அவள் கனவனைத் தவிர.

ஜிம்மில் இருந்து வீடு திரும்பும் தன் கனவனுக்காக ஜோதி பல மணி நேரம் காத்திருந்தாள்.

அதே நேரத்தில் ஆதி அடுத்த வீடியோவிற்குத் தயாராகி, பேசத் தொடங்கினான். வீடியோ வழக்கமான பானியின் அடிப்படையில் தொடங்கியது.

பேருந்தில் பயணம் கொண்ட நாயகனும் நாயகியும் எப்படியோ ஒரு வழியா தயக்கத்தை மீறி தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள். அதிலே ஒன்றரை மணி நேரம் முடிந்து விட்டது. பேருந்து போய்ச் சேரும் கொடைக்கானலும் இன்னும் அறை மணி நேரத்தில் வந்துவிடும். அதுவரைதான் இந்த நெருக்கமும் பழக்கமும். அதன் பிறகு இவளை இழந்து எப்படி நான்? என்று மனதிற்குள் அசைபோட்ட அக்பர்.

தொடக்கத்தில் இருந்த தயக்கத்தை உதிர்த்து தன் தடித்த குரலால் அவளைப் பார்த்து ஒன்று கேட்டார்.

“ஜோதா… “

“ ம்ம்ம் “

“இன்ஸ்டாகிராமில் இருக்கியா? “

“ம்ம்ம் ஆமா” என்று சொல்லி தன் கைபேசியை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டைக் காண்பித்தாள். அதைப் பார்த்துக் கொண்டவர் தனது கைபேசி இன்ஸ்டா கடலுக்குள் அவள் பெயர் வீசித் தேடினார். அவள் கைபேசியில் பார்த்த அதே முகப்பு படத்தைப் பார்த்ததும் அவளைத் தொடர்ந்தார். அவர் தொடர்ந்துள்ளது அவளிடம் காட்டினார். அவளும் “ஓகே “என்று சொல்லி கைபேசியை இருவரும் பைக்குள் வைத்தார்கள். மீதம் இருந்த ஒரு மணி நேரம் மௌனத்திலே கழிந்தது.

அவ்வப்போது இருவரும் ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்து புன்னகித்துக் கொண்டார்கள்.

“கொடைக்கானல் பஸ்டான்டு வந்துருச்சு… இறங்கிக்கங்கப்பா “ என்றார் நடத்துனர்.

பேருந்தில் நிறைந்திருந்த சுற்றுலா கூட்டமும் சொந்த ஊர் கூட்டமும் விரைந்து களைந்தார்கள். இவர்கள் இருவர் மட்டும் இருக்கையை விட்டு எழ மனமில்லாமல் இருந்தார்கள்.

அக்பர் கைப்பேசிக்கு ஏதோ ஒரு அழைப்பு வர அவர் எழுந்து நின்று பேசி முடித்துவிட்டு தன் உடமைகளைக் கையில் பற்றிக் கொண்டு ஜோதாவை ஏக்கத்தோடு பார்த்தார். அந்த பார்வை அவரது கவலை நிலையை அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தது. அவளும் தன் பையை எடுத்துக் கொண்டாள். இருவரும் கீழே இறங்கினார்கள்.

அக்பரின் கால்கள் தத்தி தத்தி பின்நோக்கி மெல்ல நடக்க “ஓகே பாய் “ என்றார்.

ஜோதாவும் ஒரு சொட்டுப் போலி சிரிப்பை சிந்தியபடியே “ம்ம்ம் பாய் டேக் கேர் “ என்றாள். அவள் முகத்தைப் பார்த்து சிரித்தபடியே தலையைத் திருப்பி நடந்து கூட்டத்திற்குள் நுழைந்து பின் அவள் கண்ணை விட்டு மறைந்தார் அக்பர். அவள் அதே இடத்தில் நின்றுகொண்டு இருந்தாள்.

பிறகு எப்போது அந்த பேருந்து நிலையத்திற்குச் சென்றாலும் அவளுக்கு அவர் நினைப்பு வராமல் இருந்ததே இல்லை. அவருக்கும் அப்படித்தான் என்பதை அவள் உறுதியாக நம்பினாள்.

சுந்தர் அண்ணாவிற்கு திருமணம் நிச்சயம் ஆனது, ஜோதா தனியாக பேருந்தில் பயணம் செய்து பத்திரமாக வீடு வந்து சேர்ந்தது, அன்று இரவு ஆட்டுக்கறி குழம்பும் இட்லியும் சமைத்துச் சாப்பிட்டது, ஒரே ஹாலில் படுத்துக் கொண்டு வெட்டிக் கதை பேசியே தூக்கத்தைத் தொலைத்தது என்று ஜோதாவின் குடும்பம் குதூகலமாய் இருந்தது.

சிரிப்பு வெளிப்படையாக இருந்தாலும் அக்பரைப் பற்றிய சிந்தனை அவள் மனதைக் குடைந்து கொண்டு இருந்தது.

அவன் முகத்தைப் பார்க்க அவனைத் தேடியது. வலது கைக்கு எட்டும் தூரத்தில் அவளது செல்ஃபோன் சார்ஜ் ஏறிக்கொண்டு இருந்தது. அந்த இணைப்பைக் துண்டித்து விட்டு இன்ஸ்டாகிராமில் குதித்தால், அதில் அவன் இருக்கிறான் என்று பச்சை விளக்கு பளிச்சென்று எரிந்தபடியே சொன்னது.

அவனிடம் பேச வேண்டும் என்று துடிக்கும் அவளுக்கு என்ன பேசுவது என்பதில் தெளிவு இல்லை. அதனால் பேசாமல் இருந்தாள். அவனை தன்னிடம் பேச வைக்க வேண்டும் என்றும் நினைத்தாள்.

கண்ணாடி முன் நின்று அவளை அவளே ரசித்தபடியே ஒரு புகைப்படம் எடுத்து ஸ்டோரியில் பதிவேற்றினாள். அதுவரை தன் முகத்தை இணையத்தில் பதிவிடுவிது என்றால் ஆகாத காரியம் அவளுக்கு.

அன்று அவன் மீது இருந்த ஆசை தைரியத்தை வரவழைத்து அப்படிச் செய்ய வைத்தது.

அந்த புகைப்படத்தை அவன் பார்த்து விட்டானா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள நினைத்தே பல நூறு முறை பார்த்து சலித்துவிட்டாள். அவளுக்கே அந்த புகைப்படத்தின் மீது வெறுப்பு வந்துவிட்டது. பார்க்க ஆள் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருந்ததால், அவர் இந்த மாதிரி சிறு விஷயங்களைப் பொருட்படுத்த மாட்டார். அடுத்தவர் ஸ்டோரி பார்த்து நேரத்தைப் போக்க மாட்டார் என்று நினைத்து அந்த ஆசையில் இருந்து திரும்பி , செல்ஃபோனை சார்ச் செய்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று படுத்து உறங்கிவிட்டாள்.

இடையில் அவளது அம்மா பல முறை எழுப்பியும் தூக்கத்திலிருந்து விழிக்காமல் இருந்தாள். உடல் அசதி அவளை மறுநாள் காலையில்தான் எழும்ப விட்டது. புகைப்படத்தை அவர் மட்டுமே பார்க்கும்படி அமைத்திருந்தாள். கடைசியில் அவர் பார்க்க மாட்டார் என்கிற முடிவுக்கு வந்ததால், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தூக்கத்தில் மங்கலான கண்ணோடு இன்ஸ்டாவில் நுழைந்தாள்.

நுழைந்ததும் சிவப்பு நிற இதயம் என்னைப் பார் என்று சொல்லி முன் வந்து நின்றது. ஆசையில் முகமும் பார்வையும் பளபளப்பானது. அந்த இதயத்தை அழுத்தினாள். அது அதை யார் கொடுத்தார் என்பதைக் காட்டியது. யார் பார்க்க வேண்டும் என்று நினைத்து இந்த ரசனையான நடகத்தை நடத்தினாளோ அவரே பார்த்து விரும்பியும் விட்டார்.

அப்போது சிரிப்போடு சேர்த்து அச்சமும் அவளை அணைத்துக் கொண்டது. இதுவரை அவளுக்குப் புரியாத வெக்கத்தின் விளக்கமெல்லாம் அன்று வரிசையாகப் புரிந்தது.

அவர் இன்ஸ்டாவில் கொடுத்த இதயம் அவளை அழகியாகவும், நம்பிக்கையுடையவளாகவும், அனைவருக்கும் பிடித்தவளாகவும், தைரியமானவளாகவும், ரசனைக்குரியலளாகவும் மொத்ததில் சிறந்தவளாக உணரச் செய்தது. ஏதோ ஒரு பிடிமானத்தைக் கொடுத்தது. அவர் மீது மீண்டும் மீண்டும் விழச் செய்தது.

தொடரும்...♡
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top