- Joined
- Aug 31, 2024
- Messages
- 668
- Thread Author
- #1
9
‘நூதனத் திருட்டு! கடந்த ஆறுமாதங்களாக, தீவிரமாக தேடப்பட்டு வந்த குற்றவாளி, நேற்றிரவு, முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் சந்திரன் வீட்டில் திருடும்பொழுது பிடிபட்டான். காத்திருந்து கண்ணி வைத்து பிடித்தது சிஐடி’ என்ற நியூஸ் தமிழகத்தையே கலக்கிக் கொண்டிருந்தது.
‘கடந்த ஆறுமாத காலமாக, பெரிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசாங்க அதிகாரிகள் வீட்டில், பல்வேறு விதமான நுட்பங்கள் பயன்படுத்தி, எதிலும் மாட்டாமல் காவல்துறையினரிடம் கண்கட்டி வித்தையாடிய, கார்த்திக் என்கிற கார்த்திகேயன், சிபிஐ ஆஃபீஸர் நாராயணனின் தீவிர வேட்டையில் பிடிபட்டான். சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான, டேஸ்டி ஃப்ரூட்ஸ் கம்பெனியில் வேலை செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவனுடன் வந்த தாமு என்பவன் தப்பியோட்டம்’ என்று செய்தித்தாளின் மூன்றாவது பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது.
இந்த செய்தி முறைப்படி தினமீன் பத்திரிக்கைக்கு வர, முதலில் பதிவிடுவதற்குமுன், விஷயம் உண்மையா என்று உறுதிசெய்ய விஷ்ணுவிடம் வந்தது. அதைப்பார்த்த விஷ்ணு அதிர்ச்சியின் உச்சிக்குச் சென்றான்.
‘கார்த்திக் திருடனா? அதுவும் மாதக்கணக்காக தேடப்படும் குற்றவாளியா? அவந்தி! அவந்திகிட்ட இதை எப்படி? மைகாட்! தப்பு பண்ணிட்டேன். இது தெரியாம நிறைய தப்பு பண்ணிட்டேன். தெரிஞ்சிருந்தா அப்பவே தடுத்திருப்பேன்’ என்று மனதுக்குள் புலம்பியபடி உடனே சுந்தரேசனுக்கு போன் செய்து விஷயம் சொன்னான்.
“இல்லடா. அப்படியெல்லாம் இருக்காது” என்றவர் விஷ்ணுவின் உறுதியில் அதிர்ச்சியாகி, “என்னடா சொல்ற?”
“ஆமா அங்கிள். இந்த நியூஸ் உண்மைதான். இப்ப என்ன பண்றது?”
“உண்மையான விஷயம்னா போட்டுரு விஷ்ணு. மத்தது கடவுள் விட்டவழி” என்றவருக்கு உடலெல்லாம் ஒருமுறை ஆட்டம் கண்டது. ‘அவனைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. பார்த்ததும் ஒருவரைப்பற்றி கணிக்கும் நான், எப்படி ஏமாந்தேன்?’ என மறுகியவர் இதை மருமகளுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வது எப்படி என்று திணறிக் கொண்டிருந்தார்.
அவருடைய திணறலுக்கு முற்றுப்புள்ளி வைத்தான், அவரின் மகன் கௌஷிக். காலையில் வாக்கிங் சென்று வீட்டினுள் நுழையும் போதே, “அம்மா எங்கேயிருக்கீங்க?” என தாயை அழைத்தபடி வந்தான்.
“என்னடா? காலையிலேயே கத்திகிட்டு வர்ற? காரணமில்லாமல் கத்தமாட்டியே. என்ன விஷயம்?”
“இதைப்பாருங்க” என்று கையிலிருந்த பேப்பரைக் கொடுத்து படிக்கச்சொல்லி, அந்தச் செய்தியை மட்டும் காண்பிக்க, அதைப் படித்து முடித்ததும். வனஜாவிற்கு அவந்திகாவை அலறவைக்கும் வெறி வந்தது. சமீபகாலமாக, இந்த கார்த்திக்கை மனதில் வைத்துதானே தங்களை எதிர்த்து பேசுகிறாள்.
அதன்பின், “அவந்தி வெளியில வாடி” என்று கௌஷிக் கத்தினான்.
அதேநேரம் சுந்தரேசன் உள்ளே வர, நிலைமையை சரியாக யூகித்தவர், “கௌஷிக் வேண்டாம். அவளே இப்பத்தான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்திருக்கா. இப்ப எதுவும் பேசவேண்டாம் போ” என்றார்.
அவருக்கு என்றைக்கு அவனிடம் மதிப்பிருந்தது, சொன்னதும் கேட்க. சத்தமாகச் சிரித்தவன், “அப்புறம்? என்னப்பா காமெடி பண்ணிட்டிருக்கீங்க. அந்த கார்த்திக்கு சப்போர்ட் பண்ணி, என்கிட்ட எப்படில்லாம் சண்டை போட்டா. அதுமட்டுமா, என்னை கொலை செஞ்சிருவேன்னு சொன்னாளே. இப்ப சொல்லச் சொல்லுங்க. ஏய் அவந்தி! வெளில வா சொல்றேன்ல.”
அவனின் குரல் அவந்திகாவின் அறையில் பிரதிபலிக்க, முதலில் வந்த ஈஸ்வரிக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது. ஈஸ்வரியைத் தொடர்ந்து அவந்திகா வர,
“மகாராணி! கொஞ்சம் கீழ இறங்கி வர்றீங்களா?”
“என்னடா கௌஷிக், காலையிலேயே கத்திட்டிருக்க? மரியாதையெல்லாம் தூள் பறக்குது.”
“நான் கத்துறேனா? இறங்கி வந்து இந்த நியூஸைப் படிச்சி பாரு. யார் கத்துவாங்கன்னு தெரியும்” என்றவன் குரலில் அத்தனை வன்மம்.
“அவளுக்குக் கொஞ்சநாளா, பயம் விட்டுப்போயிருச்சி கௌஷிக். சேர்க்கைகள் சரியில்லை பாரு. இனிமேல் சரியாகிரும். இல்லன்னா சரியாக்கிருவோம்” என வனஜா நக்கலாக பேசினார்.
தாய், மகன் இருவரின் முகபாவனை, பேச்சில் உள்ள உள்குத்து, தன்னை கடித்து விழுங்க காத்திருக்கும் மிருகங்களாக தோன்ற, ஈஸ்வரியின் கையை இறுக்கிப்பிடித்தபடியே கீழே வந்தவள், பிடித்த கையை விடாமலேயே நின்றாள்.
அவளை நெருங்கிய கௌஷிக், “இந்தா இதைப் படிச்சிப்பாரு. உன்னோட வருங்கால புருஷனோடப் புகழை, எல்லா நியூஸ் பேப்பரிலும் பாடியிருக்காங்க. ஏன் உன்னோட தினமீன்தான் இது. இதுலயும் வந்திருக்கு பார்” என்று கொடுத்தான்.
“வனி வேண்டாம். அவ சின்னப்பொண்ணு. இதையெல்லாம் தாங்கமாட்டா. டேய் கௌஷிக்! நீயாவது கேளுடா’ என்ற சுந்தரேசனை ஏறிட்ட அவந்திகா,
“நீங்க பதறுற அளவுக்கு, அப்படி என்ன நியூஸ் மாமா? யாரைப்பற்றி” என்று பேப்பரை வாங்கி, அவள் அத்தை காட்டிய செய்தியை படிக்கப்படிக்க சற்று முகம் மாறியது. “இல்ல இருக்காது” என்றவளுக்கு கால்கள் தள்ளாட, அவளைப் பிடித்து ஷோஃபாவில் அமரவைத்து, அந்த செய்தியை படித்த ஈஸ்வரிக்கும் அதிர்ச்சி.
“என்னடி? அன்னைக்கு பிச்சைக்காரன்னு சொன்னதுக்கு அவ்வளவு கோபப்பட்ட? ஓஹோ! இப்பப் புரியுது. பிச்சைக்காரன்னு சொல்லாம கொள்ளைக்காரன்னு சொல்லி இருக்கணுமோ. இதை நீ அன்னைக்கே சொல்லியிருந்தா, மாத்தி சொல்லியிருப்பேன்ல அவந்தி” என்றவன் அவளின் இறுகிய முகத்தைப் பார்த்தபடியே, “நான் செய்யுற தொழில், உயிருக்கு உலை வைக்கும்னு சொல்லிதான மூடின. அதை நான் திரும்பவும், ஒரு வாரத்துக்குள்ள திறந்தது வேற விஷயம். இதுக்கு என்ன சொல்ற? தெய்வீகத் தொழிலா? இதுவும் மக்கள் வயித்துல அடிக்கிறதுதான். என்ன நான் ஸ்லோவா பண்றதை, அவன் ஸ்பீடா பண்றான். ஓ... இவர் கொஞ்சம் காஸ்ட்லி திருடன்ல. பெரிய பெரிய பணக்காரங்க வீட்லதான் திருடுவான்ல” என்று கையில் இருந்த செய்தித்தாளைக் காண்பித்து, முடிந்த மட்டும் குரலில் நக்கலை சேர்த்து, வார்த்தையால் குதறினான்.
தெளிவாக நிமிர்ந்தவள் “கார்த்திக் அப்படி கிடையாது. அப்படியே இருந்தாலும், இது என்னோட, என் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இதுல தலையிடாம இருக்கிறது எல்லாருக்கும் நல்லது” என பொதுப்படையாக சொன்னாள்.
“எதுடி உன்னோட பிரச்சனை? இது இந்த குடும்பத்தோட மானப்பிரச்சனை. இதுல உன்னோட பெயர் மட்டும் இல்லாம, எங்க பெயரும் சேர்ந்து கெடும். எனக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு. நீ பாட்டுக்கு ஆடுன்னு விடுறதுக்கு என்னால முடியாது” என்று வனஜா ஒருபுறம் அவளை வறுத்தெடுத்தார்.
இதையெல்லாம் வேடிக்கை பார்க்க மட்டுமே சுந்தரேசனால் முடிந்தது. என்ன பேசினாலும், அது தப்பாகவே முடியுமாதலால், மருமகளுக்கு ஆதரவாக பேசமுடியாமல் நின்றார். ‘கார்த்திக் ஏன் இப்படி பண்ணினான்? அவனின் தோற்றத்திற்கும், தொழிலுக்கும் சம்பந்தமேயில்லையே. ஹ்ம்... ரெண்டுக்கும் சம்பந்தம் இருந்தால் என்ன. இல்லாட்டி என்ன?” மனக்கசப்புடன் நினைத்தார்.
“அத்தை! இப்ப என்னதான் பண்ணனும்னு சொல்ல வர்றீங்க?”
“ம்... அவனை விட்டுட்டு, என் பையனை கல்யாணம் பண்ணிக்கோ” என்றார் அலட்சியமாக.
“அது உங்க கனவுல கூட நடக்காது. எனக்கு ஹஸ்பண்ட்னா, அது என்னோட கார்த்திக் மட்டும்தான் இது என்னைக்கும் மாறாது. நான் மாறவும் விடமாட்டேன்” என்றாள் அழுத்தமாக.
விதியோ! உனக்கு சி.என் தான் பொருத்தமென்று சொல்லிச் சிரித்தது.
“அதையும்தான் பார்த்திடலாமே!” வனஜா வன்மத்துடன் சொல்ல,
“ஈஸூமா வாங்க ரூம்கு போகலாம்” என்று அழைக்கவும், அவரோ குற்றவுணர்ச்சியில் அவந்திகாவிடம் மன்னிப்பை யாசித்தார்.
சிரித்த முகமாகவே அவரை அணைத்துக் காதருகில், “நீங்க ஃபீல் பண்ண வேண்டாம் அத்தை. இது உங்களுக்கு தெரியாம நடந்ததுன்னு தெரியும். இதுல உங்களைக் கொண்டுவரமாட்டேன். இது என்னோட பிரச்சனை. நான் சமாளிச்சிக்கிறேன்” என்றாள்.
அவளை அணைப்பிலிருந்து விலக்கி, முன் நிறுத்தி, “உன் மனசுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும்மா. அவன் நல்லவன்தான். ஏன் இப்படி பண்றான்னு புரியல. அவன் வந்ததும் பேசிக்கலாம்” என்றார்.
“ரொம்ப நல்லாயிருக்கே இந்த நாடகம். ஒரு நர்ஸூக்கு இந்தளவு இடம் கொடுக்கிறது சரியில்ல அவந்தி. என்ன இருந்தாலும், நம்மகிட்ட கைநீட்டி சம்பளம் வாங்குறவ. அவளைப்போய் கட்டிப்பிடிச்சி ஆறுதல் தேடுற. அறிவில்லை உனக்கு.”
“ஆமா அத்தை. அறிவில்லைதான். நான் ஒண்ணும் இருக்குன்னு சொல்லலையே. அந்த அறிவை நீங்க வளர விட்டிருந்தால்தானே வளர்றதுக்கு. அப்புறம் ஈஸூம்மாவை மரியாதையில்லாம பேசுற வேலையெல்லாம் வேண்டாம்” என்று வனஜாவை எதிர்த்து சத்தமாகவே சொன்னாள்.
வனஜா பேச வாயெடுக்குமுன், “அவந்தி வேண்டாம் வா. அதிகம் பேசினா தையல் பிரிஞ்சிரும். அவங்களுக்குத்தான் உன் உயிர்மேல அக்கறை இல்லைன்னா, நானும் அப்படியே இருக்க முடியாது” என்று அறைக்குள் அழைத்துச் சென்றார்.
“ம்க்கும்... ரொம்பத்தான் அக்கறை. இப்படி எத்தனை நாள் பார்த்துக்கறேன்னு நானும் பார்க்கிறேன்.”