• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
7

அது நடந்து நான்கு நாள் கழித்து, மாலை நேரம், அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு தோழிகள் இருவரும் நடந்து செல்லும் பொழுது, “டேய்! சரவணா. சரவணா நில்லுடா. எங்கடா போற? எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்டா” என்று ஒருவன் ஆராதனாவின் பின்னால் இருந்து, முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தவனை அழைத்தபடி ஒருவன் வந்தான்.

அந்த பெயரைக் கேட்டதும் வேகமாக தலைதூக்கிப் பார்த்த ஆராதனாவிற்கு, அவள் கண்முன் ஒரு வாலிபன் துக்கம் நிறைந்த முகத்தோடு நண்பனைத் திரும்பிப் பார்த்தது தெரிந்தது.

“என்னடா சரவணா? ஏன் இப்படிப் பண்ற? நீ இப்படி இருக்கிறதால செத்தவங்க திரும்பி வந்துவிடப் போறாங்களா என்ன? நீ இப்ப எங்கேயும் போக வேண்டாம். ரொம்ப குழப்பத்துல இருக்கிற. வா மேன்சன் போகலாம்” என்றழைத்தான்.

“வேண்டாம்டா. என்னை விடு. நான் யாருக்காக வாழணும்? என் குடும்பத்தில் உள்ள எல்லாருடைய உயிரையும் பறிகொடுத்துட்டு, நான் ஏன் உயிரோட இருக்கணும்? எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சிடா” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

“டேய்! அது ஒரு விபத்துடா. இப்படியெல்லாம் அழுதா வேலு அப்பாவும், மத்தவங்களும் திரும்ப வந்திருவாங்களாடா?”

அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஆராதனாவிற்கோ சகலமும் அதிர்ந்தது. அதிர்ச்சியில் தோழியின் கையைப் பிடித்தவளை என்னவென்று பார்த்தாள் வேதவல்லி.

ஏனென்றால், தோழி திடீரென்று நின்றதும் திரும்பியவள், அருகில் புசு புசுவென்று ஒரு குழந்தை அவளைப் பார்த்து சிரிக்க, வேதவல்லி சகலமும் மறந்து குழந்தையின் குறும்புச் சிரிப்பில் கலந்து கொண்டு, அவளுடன் சைகை பாஷையில் உறவாடிக் கொண்டிருந்தாள். அவளின் அதிர்வுக்கு என்ன காரணம் என்று தோழியைப் பார்த்தவளுக்கு, அவளின் அதிர்ந்த முகமே பதிலாய்க் கிடைத்தது. அப்பொழுது தான் அந்த நண்பர்களின் பேச்சைக் கேட்டாள்.

“டேய்! உனக்கு நாங்க இருக்கோம்டா. ஆமா. உனக்கு வேற சொந்தங்கள் இருக்காங்களா? இருந்தா அவங்க ஏன்டா சாவுக்கு வரல? எதாவது சொன்னாதானடா தெரியும்.”

“இங்க இல்ல பாலாஜி. அவங்க திருநெல்வேலியில் தான் இருக்காங்க. அதுவும் இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியாது. தாத்தா, மாமா, அத்தை, மாமா பொண்ணுங்க ரெண்டு பேர் இருக்காங்கடா. எனக்கு அவ்வளவா விவரம் தெரியலடா” என்றான் கலங்கிய குரலில்.

“அவங்களைப் போயி பார்க்கலாம்ல சரவணா?”

அக்கறையாகக் கேட்ட நண்பனிடம், “இல்லடா வேண்டாம். நல்லாயிருக்கும் போது போயி பார்த்தா பரவாயில்லை. இப்ப எல்லாத்தையும் இழந்துட்டு அநாதரவா நிற்கிறப்பப் பார்க்க மனசில்லடா. நான் உங்களோடவே இருக்கேன். உங்க ரூமை ஷேர் பண்ணிக்கறேன். என்னோட கஷ்டத்தை அவங்ககிட்டத் திணிக்க நான் தயாரா இல்லடா. அதுவுமில்லாம எங்கன்னு போயி தேடுவேன்? விடுடா எல்லாம் விதிவிட்ட வழி. நாமளும் போவோம்” என்று தத்துவம் பேசினான் சரவணன்.

“நீ சொல்றதும் சரிதான். வா மேன்சன் பக்கத்துலதான இருக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடு. தண்ணி அடிக்கிறவனா இருந்தா, அதை வாங்கிக் கொடுத்து உன்னை அமைதிப்படுத்தலாம். அநியாயத்துக்கு நல்லவனா இருக்க. விபத்துல ஒருத்தராவது மிஞ்சியிருக்கலாம்” என்று அங்கலாய்த்தபடி நண்பனை அழைத்துச் சென்றான்.

நடந்து அவர்களைக் கடந்து செல்லும் போது, “நான் நிம்மதியா தூங்கியே பல நாள் ஆச்சிதுடா. என்னைக்கு அவங்களைப் பறிகொடுத்தேனோ, அன்னைக்கே இந்த சரவணன் போயிருக்கணும். எல்லாம் என்னால தான்டா. என்னையும் தான் திருப்பதிக்கு கூப்பிட்டாங்க. நான் மாட்டேன்னு சொன்னேன். இப்படி திரும்ப வராத இடத்துக்கே போவாங்கன்னு தெரியாமல் போச்சேடா” என்று அழுதான்.

அவனின் அழுகையைப் பார்க்க சகிக்காமல், “போதும்டா. எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க” என்றபடி இருவரும் சென்றார்கள்.

அதுவரை இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆராதனாவிற்கு, ‘இது நிஜம் தானா? கண் முன்னாடி நடந்தது, நான் பார்த்தது, கேட்டது அனைத்தும்?’ ஒரு கணம் என்னவென்று புரியாமல் இருந்தவளை, வேதவல்லி உலுக்கி, “ஏன் அவனுங்களைப் பார்த்துட்டு இருக்க? அவங்களை உனக்குத் தெரியுமா? யேய் ஆரு! ஏன்மா ஒரு மாதிரியாகிட்ட? என்கூட நல்லாத்தான வந்த. என்னன்னு சொல்லுமா? என தவிப்புடன் கேட்டாள்.

“வள்ளி... வள்ளி...”

“என்னம்மா? என்னாச்சின்னு சொன்னாத்தான தெரியும்?”

“சரவணா அத்தான் வள்ளி.”

“சரவணான்ற பெயர்ல நிறைய பேர் இருப்பாங்கடி. எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில பிரச்சனை இருக்கும். இவனுக்கு என்ன பிரச்சனையோ?”

“இல்லடி. எனக்குத் தெரியும். இது சரவணாதான். அவங்க குடும்பம் முழுசையும் விபத்துல பறிகொடுத்துட்டதா அழுதுகிட்டிருந்தாங்க. மாமா பேருல்லாம் சொன்னாங்க. எதுக்கும் விசாரிச்சிக்கலாம் வேதா.”

“சரிடி விசாரிக்கலாம். சேகர் அங்கிள்கு இந்த ஏரியால்லாம் பழக்கமா இருக்கும். விசாரிச்சிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்” என்றாள்.

மறுநாள் சேகர் மூலம் அந்த விடுதியில் (மேன்சன்) விசாரிக்க, அவன் சொன்னது உண்மை என்றானது. சரவணனோ, மாமானின் குடும்பம் கிடைத்தில் சந்தோஷமடைந்தான்.

ஆராதனாவிற்கோ, ஒருபுறம் சந்தோஷம் என்றால், இன்னொரு புறம் அத்தையின் குடும்பமே இல்லாமல் போய்விட்டதே என்று வருந்தினாள். ‘ட்ரெயினிங் டைம் முடிஞ்சதும், அப்பாகிட்டக் கூட்டிட்டுப் போயி அத்தானை நிறுத்திர வேண்டியதுதான். ஆனால், கல்யாணம்?”

‘கண்டிப்பாக முடியாது’ என்றே தோன்றியது. ஊருக்குப் போகும் பொழுது சரவணன் கிடைத்ததை தந்தையிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று தோழியிடமும் சொல்லி விட்டாள். அவன் குடும்பம் இல்லை என்பதை, நேரில் சொல்லி அவர்களைத் தேற்றுவதற்குத் தான் அங்கு கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியமென்று பட்டதால் மறைத்தாள்.

சரண் அவளைக் கல்லூரி எதிரில் பார்த்த பொழுதுதான், முதன் முறையாக அவனுடன் வெளியில் வந்திருந்தாள். அதுவும் சேகரின் துணையுடன். என்னதான் அத்தானாக இருந்தாலும், அவனைத் தொட்டுப் பேச விட மனம் இடம் கொடுக்கவில்லை. ஏனோ, அவனைத் தனக்கானவன் என்ற இடத்தில் வைக்கவும் மனமில்லை. அத்தை மகன் என்ற உறவிலேயே பழகினாள்.

“இன்று அவனை, அந்தச் சரணைப் பார்த்ததும் மனம் ஏன் தவிக்கிறது? அவன் பார்வையில் என்ன இருந்தது? என்னால் ஏன், அவனின் கண்ணை நேருக்கு நேராகப் பார்த்துப் பேச முடியலை? கடவுளே! இது என்ன விதமான தவிப்பு? யாருக்காக இத்தனை வருஷமாகக் காத்திருந்து, அவனுக்காக இங்கே வந்தேனோ, அவன் கிடைத்தும் என்னால உறவுக்கார என்ற உறவைத் தவிர வேற எதுவும் தோணமாட்டேன்னுது. என்னடா ஆராவுக்கு வந்த சோதனை” என்று புலம்பியபடி கண்ணயர்ந்தாள்.

மறுநாள் காலையில் வேகமாகவே எழுந்த சரண், நேற்று எண்ணியதை இன்று செயலாக்கும் முடிவோடு, சேகர் பெண்களை அழைக்க விடுதிக்குப் போகும் முன் சந்திக்கக் கிளம்பினான்.

“என்னண்ணா சீக்கிரம் கிளம்பிட்ட?” என்று காஃபியை நீட்டியபடி கேட்ட தங்கையிடம்,

“இன்னைக்கு வெளிய கொஞ்சம் வேலையிருக்குமா. நான் அதை முடிச்சிட்டுத் தான் ஆஃபீஸ் போகணும். நான் இன்னைக்கு கேன்டீன்ல சாப்பிட்டுக்கறேன்” என்றான்.

“ம்... சரிண்ணா” என்று ஒத்துக் கொண்டாலும், ஏனோ அண்ணனின் செயலில் வித்தியாசத்தை உணர்ந்தாள்.

“அண்ணா எதுவும் பிரச்சனை இல்லையே?” அண்ணனின் முகம் பார்த்தவளிடம், உண்மையைக் கூற முடியாமல் சற்றுத் தடுமாறி சமாளித்தவன், “பிரச்சனையா? அதுவும் என்கிட்டயா? நோ சான்ஸ். என்னைப் பார்த்தா வந்த பிரச்சனையெல்லாம், சே! போயும் போயும் இவன்கிட்டயா வந்தோம்னு ஓடிப் போயிரும். அப்புறம்” என்று அவளுக்குத் தினமும் அளிக்கும் அறிவுரை மழையைப் பொழிந்து, நான் நார்மலாக தான் இருக்கிறேன் என்பதை நிரூபித்து, அவள் சிரித்ததும், “அப்பாகிட்ட சொல்லிருமா” என்று விடைபெற்றுச் சென்றான்.

சேகர் விடுதி வாசலுக்குள் நுழையும் முன், அவரைப் பிடித்தவனிடம் என்னவென்று அவர் கேட்க, அங்கிள் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும். ஆனா, அதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல. சின்ன ஹெல்ப் பண்ணனும் அங்கிள்” என்றான் பீடிகையுடன்.

“என்னப்பா எதாவது பிரச்சனையா?”

“பெருசா எதுவுமில்லை. நீங்க தப்பா நினைக்கக் கூடாது. நீங்க இந்த டைம் கூப்பிட்டுப் போவீங்களே ரெண்டு பொண்ணுங்க. அவங்கள்ல ஒரு பொண்ணை நான் ஒரு பையனோட பார்த்தேன். அத்தையோட ஹாஸ்டலில் இருக்கிற பொண்ணு. தப்பா யாரையும் செலக்ட் பண்ணி அவஸ்தைப்படக் கூடாதேன்னு தோணிச்சி. இதை அவங்ககிட்ட நேர்ல கேட்க முடியாது .அதனால தான் உங்ககிட்ட விசாரிக்கிறேன்.”

“ப்பூ... இவ்வளவு தானா? நானும் என்னவோன்னு நினைச்சேன். அவன் அந்தப் பொண்ணோட அத்தைப் பையன். நான்தான் விசாரிச்சி சொன்னேன். இதுவரை ரெண்டு டைம் வெளிய போயிருக்காங்க. நான் தான் கூப்பிட்டுப் போயிருக்கேன். பொண்ணு செம உஷார். அவளைப் பற்றின பயம் தேவையில்லை” என்றார்.

“அப்ப அவன் அந்தப் பொண்ணோட அத்தைப் பையனா?” என்று திரும்பவும் கேட்டான். அவனுக்குள் ஒரு நப்பாசை. அப்படி இருந்துவிடக் கூடாது என்று.

“ஹ்ம்ம்.. அப்படி இல்லபா. அவன் திருநெல்வேலிக்காரன் தான். அப்பா பேரு வேலு. இந்தப் பொண்ணு சொல்றதைதான் அவனும் சொன்னான். ஆனாலும், மனசுல சின்ன உறுத்தல். அவனை எங்கேயோ பார்த்த நியாபகம். அது நல்லவனாவா? கெட்டவனாவா தெரியல?” என்றார்.

“அங்கிள் அவனுக்குத் தெரியாம ஒரு போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி வையுங்க. எதுக்கும் நானும் விசாரிக்கிறேன். இங்க இருக்கிற வரை அவங்க ரெண்டு பேரும் அத்தையோட பொறுப்பு. ஆனா, அத்தைக்கு நான் பாதுகாப்பு. மறக்காம போட்டோ எடுத்து அனுப்புங்க. நான் வர்றேன்” என்று கிளம்பினான்.

சேகரிடம் பேசிவிட்டு வந்த பின்புதான் அவன் மனம் கொஞ்சம் நிம்மதியானது. அலுவலகம் நுழையும் போதே சிரித்த முகமாக வந்தான். அவனுக்காகவே, அவனுக்கு முன்னரே வந்த சக்தி, அவனின் சிரித்த முகத்தை ரசித்தபடி அமர்ந்திருக்க, சரணுக்குப் பின்னால் வந்த சிவா அவனைத்தான் பார்த்து சிரிக்கிறாள் என்று நினைத்துத் துள்ளிக் குதித்தான்.

சேகர் சொன்னது போல், இரண்டு நாட்களில் சரவணனின் புகைப்படம் சரணிடம் வந்து சேர்ந்தது.

இன்றுடன் ஆராதனா வேலைக்குச் சேர்ந்து ஐந்து மாதமாகிறது. இன்னும் ஒரு மாதம்தான் பயிற்சி. முடிந்ததும் இதே கம்பெனியில் தொடர்ந்து வேலை செய்யலாம். இல்லையெனில் வேறு கம்பெனியில் சேருவது நம் இஷ்டம் என்று இருந்தாது.

ஆராதனா, வேதவல்லி இருவருக்கும் இந்த கம்பெனி பிடித்திருந்தால், வேறு எங்கும் செல்ல விருப்பமில்லாமல் இருந்தார்கள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
ஒரு ஞாயிறு காலையில் சரணுக்கு விடுமுறை என்பதால், நியா அவளின் சமையல் வேலையை கொஞ்சம் நிதானமாகவே ஆரம்பித்தாள். ஞாயிறு ஒன்பது மணிக்கு பொட்டிக் திறந்தால் போதும் என்பதால், சமையல் முடித்து தானும் கிளம்பி வருகையில், சரணும் கீழிறங்கி வந்தான்.

“அண்ணா! இன்னைக்கு லீவ் தான?”

“லீவ்னா பத்துமணி வரைக்கும் இழுத்துப் போர்த்திட்டுத் தூங்கலாமா அக்கா.?” என்ற ராஜாவிடம்,

“அப்படி இல்லடா. மற்ற நாள் புல்லா ஒர்க் டென்சன் இருக்கும். இன்னைக்கு லீவு?தான தூங்கினா உடலுக்கும், மனசுக்கும் கொஞ்சம் ரிலீஃபா இருக்கும்ல.”

“நீ எனக்காகத் தான் சொல்றன்னு தெரியும். ஆனாலும், பெரிய அத்தை போன் பண்ணி, நான் வீட்டுக்கு வர்றேன்னு சொன்னாங்க. அத்தை திடீர்னு வந்தா எதாவது காரணம் இருக்கும். அதான் நானும் ப்ரஷ் ஆகிட்டேன். வெளிய கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சிட்டு வந்திடறேன்” என்றான்.

வெற்றி அவர்கள் அருகில் வந்து, “எல்லாரும் இங்க தான் இருக்கீங்களா? அக்கா போன் பண்ணி வர்றேன்னு சொல்லியிருக்காங்க” என்றார்.

“பழைய நியூஸ்பா. வேற எதாவது இன்ட்ரஸ்டிங்கா சொல்லுங்க.”

“நான் என்ன நியூஸ் சொல்றது? அக்கா கொண்டு வர்ற நியூஸ்தான் ஹாட் நியூஸ்.”

“என்ன... என்ன... என்ன?” என்று மூவரும் மொத்தமாக கேட்க,

“சஸ்பன்ஸ்” என்ற ஒரே வார்த்தையில் முடித்தார் வெற்றி.

“போங்கப்பா. இது சீட்டிங்” என்றது இளைஞர் பட்டாளம்.

“யார் சீட்டிங் பண்றாங்க?” என்றபடி அத்தை உள்ளே வர, “உங்க தம்பி தான் அத்தை. நீங்க என்ன விஷயமா வர்றீங்கன்னு தெரியும் சொன்னாங்க. சொல்லச் சொன்னா சஸ்பென்சாம்” என்று நொடித்தாள்.

“சரி உட்காருங்க” என்று ஒரு கவரை எடுத்து வெற்றி கையில் கொடுத்து, “இது நியாகுட்டிக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை” என்று தடாலடியாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு, “இதான் பையன் போட்டோ. பையனை உனக்குப் பிடிக்கும். நல்ல குடும்பம். நல்ல குணம். நம்ம நியா குட்டியை சூப்பரா பார்த்துப்பாங்க. அவளைப் பற்றி தெரிஞ்சி தான் சம்மதிச்சாங்க. பையனுக்கும் பொண்ணைப் பிடிக்கும்.”

“அவ வேண்டாம்னு சொல்லச் சொல்ல உங்களை மாதிரித் தலையாட்டிட்டுப் போக என்னால முடியாது. இதை விட நல்ல சம்பந்தம் எங்க தேடினாலும் கிடைக்காது. அதை இதைன்னு காரணம் காட்டி வந்த நல்ல வரனை கோட்டை விட்டுராத. அவ்வளவு தான் நான் சொல்லுவேன். அதுக்கு மேல உங்க விருப்பம். எனக்கும் கொஞ்சம் மரியாதை இருக்கும்னு நினைக்கிறேன். எல்லாரும் யோசிச்சி நல்ல முடிவா எடுங்க. நான் வர்றேன்” என்று கறாராகப் பேசி, வந்த வேகத்திலேயே கிளம்பியவரை நிறுத்தி, சாப்பிட்டுப் போகச் சொல்ல, “நான் சாப்பிட்டுட்டேன். அர்ஜென்டா ஒருத்தரைப் பார்க்கணும். இந்த டைம் விட்டா இன்னும் இழுத்தடிக்கும். நீங்க சாப்பிடுங்க” என்று கிளம்பிவிட்டார்.

தந்தியிடம் வந்த நியா, “இந்த அத்தைக்கு வேற வேலையே இல்லையாப்பா? நான் வேண்டாம்னு சொல்ற உறவை, ஏன் என்மேல திணிக்கிறாங்க? எனக்குக் கல்யாணத்துல விருப்பமில்லன்னு எத்தனை தடவை சொல்றது. நல்ல பையனாம் நல்ல பையன். எவனா இருந்தாலும் எனக்கு வேண்டாம்” என்று சொன்னாள்.

எதிரிலிருந்த மூவரும் அவளருகில் வர, “அக்கா ஒத்துக்கோ. பெரியம்மா சொன்னா சரியாத்தான் இருக்கும்.”

“ஆமாடா! குட்டிமா. அத்தை சொல்றதைக் கேளு. எல்லாப் பையன்களும் கெட்டவனா இருக்கமாட்டாங்க. உன்னை விட உனக்காக அத்தை பல தடவை யோசிச்சிதான் முடிவு பண்ணியிருப்பாங்க. இனி டிமிக்கி கொடுக்க முடியாது செல்லம். அப்பாவோ, நானோ இதைச் சொல்லியிருந்தா என்ன குதி குதிச்சிருப்ப?”

அண்ணனின் வார்த்தையில், யோசனையில் கண்கலங்க நின்றிருந்தவளை, “என்னம்மா? எல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சி ஒத்துக்க. எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். இந்தா போட்டோ. நீயே முதல்ல பாரு.” வெற்றி மகளின் கையில் கொடுத்ததும், தூக்கி மேஜையில் வைத்துவிட்டு, “நான் கிளம்பறேன்” என்று வேகமாக ஸ்கூட்டியை எடுத்துக் கிளம்பினாள்.

அந்த நிலையிலும் அண்ணனின் கட்டளைப்படி அவள் சென்றது அனைவருக்கும் சிரிப்பு வர, “அப்பா நான் அவள் பின்னாடி போறேன், நீங்க சாப்பிட்டு, சாப்பாடு எடுத்துட்டு வாங்க. அவ டென்சன்ல வண்டி ஓட்டிட்டுப் போறா” என்று காரை எடுக்க,

“அண்ணா நானும் வர்றேன். அக்கா கூட இன்னைக்கு புல்லா நான் இருக்கேன்” என்ற ராஜாவை ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.

நியா ஸ்கூட்டியை ஓட்டிய போதும் அவள் கவனம் ஏனோ ரோட்டில் இல்லாம்ல வீட்டைச் சுற்றியே வந்தது. “சே! எவன் இந்த கல்யாணத்தைக் கண்டு பிடித்தானோ? எவன் அவன்? அந்த நல்லவன். எங்க அப்பா, அண்ணா மாதிரி வர முடியுமா?”

அந்த நல்லவன் தான் வேண்டும் என்று தன் வாயாலே சொல்லப் போவதை அறியாது புலம்பினாள் பேதை.

‘எப்படியும் அத்தை முடிவெடுத்தால் அவரின் பிடிவாதமே ஜெயிக்கும். இவனோட தான் நம்ம கல்யாணமா?’ போட்டோ பார்க்காமல், ஏன் அவன் பெயர் கூடக் கேட்காமல், முகம் தெரியாத அவனை கடித்துக் குதறிக் கொண்டிருந்தாள். “இடியட் வேற பொண்ணே கிடைக்கலையா? பார்த்ததும் பிடிச்சிதாம்” என்றவளுக்குத் தெரியாது போட்டோவைப் பார்த்தது பெரியவர்கள் மட்டுமே. அவனில்லை என்று.

“பொண்ணு கொஞ்சம் லட்சணமா இருந்தா எல்லாருக்கும் தான் பிடிக்கும். எனக்கு அவனைப் பிடிக்க வேண்டாமா. வரட்டும் அவனை ஓட ஓட விரட்டுறேனா இல்லையா பாரு.” மனதில் நினைத்ததை புலம்பியபடியே சென்றவள், தெருவின் சாலையில் இருந்து நெடுஞ்சாலைக்கு ஏறும் பொழுது, ஹார்ன் அடிக்காமல், சுற்றிலும் வண்டி வருகிறதா என்று பார்க்காமல் செல்ல, அந்த நேரம் வந்த கார் அவளை இடித்தது.

கார் என்னவோ நிதானமாகத் தான் வந்தது. நடுவில் திடீரென வந்த ஸ்கூட்டியைப் பார்த்ததும் முதலில் அதிர்ந்து, சட்டென்று பிரேக் பிடித்தும் ஸ்கூட்டியின் மேல் மோதியது.

நியா ஹெல்மெட் போட்டிருந்ததாலும், அதே நேரம் வேறு வண்டிகள் வராததாலும், கை ஊன்றியதால் உள்ளங்கையிலும், முட்டிப் பகுதியிலும் சிராய்ப்புகள் விழுந்தது.

கீழே விழுந்தவளை அருகில் நின்றிருந்தவர்கள் தூக்கிவிட, பின்னாலேயே வந்த சரண் ஸ்கூட்டி விழுந்து கிடப்பதைப் பார்த்ததும், பயந்து காரை ஓரம் நிறுத்தி வந்தான். “குட்டிமா” என்ற அண்ணனின் குரல் கேட்டு, “அண்ணா” என்று அரற்றியவள் ஹெல்மெட்டைக் கழற்றி, அண்ணனின் தோள் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

“அக்கா என்னாச்சி அடிபடலையே?” என்று வந்த ராஜா ஸ்கூட்டி கீழே கிடப்பதைப் பார்த்து, அதைத் தூக்கி ஓரம் கட்டி வந்தான். அந்த சமயம் தண்ணீர் கொடுத்த ஒருவருக்கு சரண் நன்றி சொல்ல, “முதல்ல தங்கச்சியை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போப்பா” என்று சொல்லிச் சென்றார்.

ரோட்டிலிருந்து கொஞ்சம் விலகி வந்து, “என்னடா?” என்று கேட்க,

அந்த நேரம் இடித்தக் காரை கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு வந்தவன், “அதை நான் சொல்றேன்” என்றான்.

அந்தப் புதியவனை எங்கோ பார்த்த நினைவு சரணுக்கு, புதியவனுக்கும் அதே எண்ணம்தான். ஆனால், இருவருக்கும் அதைப் பற்றி ஆராய நேரமில்லாததால் கவனத்தை மாற்றினர்.

“இவங்க?” என்று நியாவைக் கை நீட்டிக் கேட்க,

“என் தங்கை தான்.”

சற்று கோவத்தில், “ஏன் சார்? நான் கம்மியான வேகத்துல வந்ததால சுதாரிச்சி நிறுத்திட்டேன். அடி சின்னதா போச்சி. இதுவே வேகமா வந்திருந்தா? மெயின் ரோடு வரும்பொழுது, ஹார்ன் அடிச்சி ரெண்டு பக்கமும் பார்த்துட்டு வரத் தெரியாதா? ஏடாகூடமா எதாவது ஆச்சிதுன்னா யார் சார் பொறுப்பு? உயிர் போனா வருமா?” என்று திட்டி, அழுது கொண்டிருந்த நியாவை முதல் முறையாக நன்றாக கவனித்தவனுக்கு, அதற்கு மேல் பேசத் தோன்றவில்லை.

அவளின் கண்ணீர் வழியும் கண்களும், அழுகையைக் கட்டுப்படுத்த உதடுகடித்து, பயத்தில் அண்ணனின் கையை அழுந்தப் பற்றியிருப்பதும் பட, சட்டென்று அவளுக்காக இளகினான்.

“சாரி சார். தப்பா எடுத்துக்காதீங்க. அவ எப்பவும் நார்மலா மெயின் ரோடு பிடிக்கும்போது இருவது கிலோ மீட்டர் ஸ்பீடுல தான் வருவா. காலையில சின்ன டென்சன். கோவப்பட்டு வந்ததால கவனம் சிதறியிருக்கும். அவ சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்றான்.

‘ஏன் அவ சாரி கேட்க மாட்டாளா?’ என்பது போல் பார்த்த புதியவனின் பார்வையை உணர்ந்த சரண், “அவ பயத்துல இருக்கிறா. ப்ளீஸ் நீங்க கிளம்புங்க” என்றான்.

தன் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டை எடுத்தவன், சரணின் கையில் கொடுத்து, “கையில ரத்தம் வருது. கல் குத்தியிருக்கும் போல தொடைச்சி விடுங்க” என்று அவளைப் பார்த்தபடி சொல்ல, அதுவரை அண்ணனின் தோள் சாய்ந்திருந்தவள் படக்கென்று நிமிர்ந்து அந்தப் புதியவனைப் பார்த்தாள்.

பார்த்தவளின் விழிகளின் வழியே, இதயமெனும் கூண்டுக்குள் பகிங்கரமாக வந்தமர்ந்தான். இருவரின் நினைவிலும் எங்கேயோ சந்தித்த நியாபகம். ஆனால், நினைவில்லை.

அப்பொழுதுதான் அதைக் கவனித்த சரணும், “குட்டிமா வாடா. டாக்டர்கிட்ட போகலாம்” என்று பதட்டத்துடன் அழைத்தான்.

அதற்குள் தன் கையில் உள்ள கர்சீப்பைக் கொடுத்து, “ஒரு நிமிஷம் இருங்க” என்று சொல்லி, தன் காரில் இருந்து மெடிக்கல் கிட்டை எடுத்து வந்து, அவள் கைபிடிக்க அவன் கையை நீட்ட, முதலில் யோசித்தவள் மற்றவர்கள் தன்னையே பார்த்திருப்பதை அறிந்ததும் கை நீட்டினாள்.

இரத்தத்தைத் துடைத்து மருந்து வைத்துக் கட்டினான்.

“நீங்க டாக்டரா?” என்ற சரணின் கேள்விக்கு,

‘ஆம்’ என்ற தலையாட்டலைப் பதிலாகக் கொடுத்து விட்டு, சார் செப்டிக் இன்ஜெக்ஷன் போடணும். இங்கேயே போட்டுக்கலாமா? இல்லை பக்கத்துல எதாவது ஹாஸ்பிடல் போறீங்களா?”

“ஏன் நீங்களே போடுங்களேன்?” என்ற சரணிடம்,

“இல்ல இங்கன்னா சரிவராது. வேணும்னா காருக்குள்ள உட்காரச் சொல்லுங்க. உங்க தங்கைக்கும் மத்தவங்க பார்ப்பாங்கன்ற தயக்கம் இருக்காது” என்றான்.

“ஆமா டாக்டர். நீங்க சொல்றதும் சரிதான்” என்று தங்கையை அழைத்து காரினுள் உட்கார வைத்தவன் வெளியே நிற்க, அவளின் சுடிதாரின் கைப்பகுதியை லேசாக தூக்கி விட, கூச்சத்தில் தடுத்தவளின் கையை விலக்கி ஊசி போட்டான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த நியாவிற்கு, ஊசியின் வலி கூட தெரியவில்லை. ஊசி போட்டு நிமிர்ந்தவன் அவளின் பார்வையைச் சந்திக்க, அதில் சற்றுத் தடுமாறினான். பின், “அவ்வளவு தான் முடிஞ்சிருச்சி” என்று அவன் வாய் தன்னிச்சையாகச் சொன்னது.

‘அவ்வளவு தானா?’ என்றது நியாவின் மனம்.

சற்று நேரம் முன்புதான், ‘கல்யாணம் எவன் கண்டுபிடித்தான்?’ என்று கேட்டவள். அதை மறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சரணுக்கும், ராஜாவிற்கும் அவர்களுக்குள் நிகழும் மாற்றங்கள் தெரிய வாய்ப்பில்லை.

“என்னடா இது உலக அதிசயமா இருக்கு. இந்த நியாகுட்டி ஊசி போட்டுக்கிறதுக்கு ஊரையே கூட்டுவா” என்றவனுக்குத் தங்கையின் இந்த அமைதி வித்தியாசமாகப் பட்டது. தம்பியிடம் திரும்பி, “இன்னைக்கு பொட்டிக் நீ பார்த்துக்கடா. நான் இவளை வீட்டில் விட்டுட்டு வர்றேன். வேலை இல்லைனா ஷாப் மூடிட்டு வந்திரு. நீ வீட்ல ரெஸ்ட் எடுமா. நான் கொஞ்ச நேரத்துல வந்திருவேன்” என்றவனிடம், ஏதோ சொல்ல வந்த நியாவிடம், “ஒண்ணும் சொல்ல வேண்டாம். நான் சொன்னதைச் செய்” என்று முடித்தான்.

“தேங்க் யூ டாக்டர். உங்க உதவியை என்னைக்கும் மறக்கமாட்டேன்.”

அந்தப் புதியவன் தன்னுடைய அடையாள அட்டையைக் கொடுத்து, “சரியானதும் போன் பண்ணிச் சொல்லுங்க” என்று விடைபெற்றுக் கிளம்பினான்.

சரண் தங்கையை வீட்டில் விட்டு, அப்பாவிடம் நடந்ததைச் சொல்லி சாப்பிட வைத்து, மாத்திரை கொடுக்கச் சொல்லி சேகரைச் சந்திக்க கிளம்பினான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top