- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
5
ராகவனின் சொல்லை மறுக்க எண்ணிய ஆராதனா, “அங்கிள்” என்றழைத்தாள்.
அவள் குரலுக்குத் திரும்பியவர், “அந்தத் தகுதி எனக்கு இருக்கா தெரியல. இருந்தாலும் நீ அங்கிள்னு கூப்பிட்டது சந்தோஷமாயிருக்குமா” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போது, “தர்ஷினி” என்ற சத்தம் வர, அந்தத் திசையில் திரும்பிய குழந்தையைக் கண்டதும், குழந்தையின் பெற்றோர் என்று யூகித்துவிட்டான் சரண்.
“அங்கிள் நீங்க சீக்கிரம் கிளம்புங்க. குழந்தையோட அம்மா வர்றாங்கன்னு நினைக்கிறேன். அவங்க வந்தா எந்த அசம்பாவிதமும் நடக்கலாம். மத்ததை நாங்க சமாளிக்கிறோம்” என்று அவசரமாக அனுப்பி வைத்தார்கள். மீண்டும் நன்றி கூறி விடை பெற்றார் ராகவன்.
அவர் சொல்லிச் சென்ற வார்த்தைகள், இருவருக்கும் கேட்டுக் கொண்டே இருந்தது. ‘ஜோடிப் பொருத்தமும், குணப்பொருத்தமும் சூப்பர்.’
குழந்தையின் அம்மா அருகில் வந்ததும், நினைவிலிருந்து கலைந்து சுதாரித்த ஆராதனா, அவளிடம், “நீங்க தான் இவளோட அம்மாவா?” என கேட்டாள்.
“ஆமா. ஏன் கேட்குறீங்க?”
“இல்லங்க மேடம். அப்படியே ரெண்டு போட்டா எப்படி இருக்கும்னு யோசிக்கிறேன்.”
“ஹலோ! என்ன பேசுறீங்க? முன்னப்பின்னத் தெரியாதவங்ககிட்ட கொஞ்சம் கூட டீசண்டே இல்லாம பேசிட்டிருக்கீங்க” என்று குழந்தையின் தாய் பேசிக் கொண்டிருக்கும் போதே குழந்தையின் தகப்பனும் வர,
“என்ன பேசுறேனா. நாங்க மட்டும் வரலன்னா. உங்க குழந்தையோட நிலை என்னன்னு தெரியுமா? பார்க் வர்றது குழந்தைகளை விளையாடவிட்டு வேடிக்கை பார்க்க. நீங்க வேடிக்கை பார்க்க இல்லை புரியுதா?” என்றாள் காட்டமாக.
“எ...என்னங்க சொல்றீங்க? என்ன நடந்துச்சி? இவளோட அப்பா கூடத்தான் அனுப்பி வச்சேன். ஆனா, திரும்பி வரும்போது இவர் மட்டும் தனியா வந்தார். இவர்கிட்ட கேட்டா, நான் எப்ப கூப்பிட்டுப் போனேன்னு சொல்லிட்டார். நான் கூப்பிட்டுப் போகச் சொன்னதைக் கவனிக்கவே இல்லையாம். அப்புறம் தான் குழந்தையைத் தேட ஆரம்பிச்சோம். என்னாச்சிங்க?” என்றவள் குரலில் என்னவோ ஏதோவென்ற பதற்றம்.
“நல்லாத் தேடுனீங்க போங்க” என்று அங்கு நடந்ததை ராகவன் பேரை மறைத்துக் கூறினாள்.
“ஐயையோ! என் குழந்தை. கடவுளே! இத்தனை பேர் இருக்கிற பொது இடத்தில் கூடவா, குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை?”
“ஆமா. இப்பக் கதறுங்க. ஏங்க பிள்ளைகளுக்குச் சாதாரண தொடுகைக்கும், தவறான தொடுகைக்கும் அர்த்தம் சொல்லித் தரமாட்டீங்களா? யார் என்ன அர்த்தத்தில் பார்க்கிறாங்க, முத்தம் கொடுக்கிறாங்கனு சொல்லித்தரணும். இப்பவே சொல்லிக் கொடுத்தால்தான, குழந்தைங்க வளர வளர பக்குவப்பட்டு, ஆண், பெண் உறவை பிரிச்சிப் பார்க்கத் தோணும். என்னதான் சொல்லித் தர்றீங்களோ குழந்தைகளுக்கு. இது ஆணும், பெண்ணும் சரிசமமா பழகுற காலம். இல்லைன்னு சொல்லலை. காலம் மாறினாலும் ஒரு சில கட்டுப்பாடுகள் மாறாதுங்க. மாறவும் கூடாது. அப்புறம் ஆதி மனிதன் காலத்துக்கு நாமும் போக வேண்டியதுதான். இனிமேலாவது பார்த்து ஜாக்கிரதையா இருங்க” என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினாள்.
பேசிக் கொண்டிருந்தவளை விழியகலாதுப் பார்த்துக் கொண்டிருந்த சரணுக்கு, திரும்பவும் பழைய நினைவுகள் மேலெழும்பின. அவளின் ஒவ்வொரு வார்த்தைகளிலும், தன் தாய் சிறு வயதில் தனக்கும், தங்கைக்கும் கூறிய அறிவுரைகள் கண்முன் நிழலாடியது. இன்னும் கூடுதல் சுவாரஸ்யத்துடன் அவளைப் பார்க்க ஆரம்பித்தான்.
குழந்தையின் அப்பாவிடம் திரும்பியவன், அவர்களை ரொம்பக் கூனிக்குறுக வைக்க வேண்டாம் என்று நினைத்து, “இனிமேலாவது தொடுதல் பற்றிய வித்தியாசத்தைச் சொல்லிக் கொடுத்து வளருங்க சார். குழந்தை கூட வர்றது தெரியாம போயிருக்கீங்க. பார்த்துக்கோங்க சார். நம்மளைச் சுத்தி எல்லாருமே நல்லவங்களா இருக்கமாட்டாங்க. பக்கத்து வீட்டுக்கு அனுப்புறதா இருந்தா கூட கொஞ்சம் யோசிச்சி அனுப்புங்க” என்றவன் குழந்தையிடம் குனிந்து, “பாப்பா! அப்பா, அம்மா இல்லாம யார் கூப்பிட்டாளும், அவங்களோட நீங்க போகக்கூடாது. அது ரொம்பவே தப்பு. உங்களைக் கட்டிப்பிடிச்சாலோ, முத்தம் கொடுத்தாலோ அப்படிப் பண்ணாதீங்க சொல்லணும். இல்லைன்னா நேரே அப்பா, அம்மாகிட்ட வந்து சொல்லிரணும். சரியா?” என்று பக்குவமாய்ச் சொன்னான்.
புரிந்ததோ, இல்லையோ, இவ்வளவு நேரம் பேசாத குழந்தை, “சரிங்க அங்கிள்” என்றாள்.
குழந்தையைக் கன்னம் கிள்ளி முத்தமிட்டவன், “குட் கேர்ள்” என்றான்.
குழந்தையின் அப்பாவிடம் பேச ஆரம்பித்தது முதல், குனிந்து குழந்தைக்குச் சரிசமமாக உட்கார்ந்து பேச ஆரம்பித்தவனையே பார்த்துக் கொண்டிருந்த, ஆராதனாவின் மனம் ஏனோ, அவளையும் மீறி அவனிடம் செல்ல சண்டித்தனம் செய்தது. பாட்டியின் முகம் கண்முன் தோன்றி அடக்கியது. உள்ளே எழுந்த ஏக்கத்தை என்ன செய்தும் அவளால் தடுக்க முடியவில்லை.
“ரொம்ப தேங்க்ஸ் சார். எங்க பேரண்ட்ஸ் எதுவும் சொல்லிக் கொடுத்து வளர்க்காததால, எங்களுக்கு அது பெரிய விஷயமாகவே தெரியலை. இனி ஜாக்கிரதையா இருக்கோம். என் பெயர் ஹரி. இங்க பக்கத்துல தான், காஃபி ஷாப் வச்சிருக்கேன். ரிலாக்ஸா இருக்க வந்த இடத்துல, கடையில் இருந்து போன் வந்தது. அதனாலதான் போயிட்டேன். என் ஒய்ஃப் சொன்னதை நான் கவனிக்காம இருந்திருக்கேன். உங்க நட்பு கிடைத்தது சந்தோஷம்” என்று பரஸ்பரம் கைகுலுக்கி விடை பெற்றார்கள்.
ஒரே நேரத்தில் இரு வேறு விதமான நட்பு கிடைத்த மகிழ்ச்சி மனதினில் இனிக்க, சரணிடம் திரும்பி நன்றாக பல் தெரிய சிரித்தபடி, “நானும் கிளம்பறேன் சார்” என்று சொன்னாள்.
அவளை இவ்வளவு நேரமாகப் பலவித பாவனையில் பார்த்துக் கொண்டிருந்தவனிடம், ‘நான் கிளம்புறேன் சார்’ என்று சொல்லி தெற்றுப் பற்கள் தெரிய சிரித்தபடி தலையசைக்க, அந்தத் தெற்றுப்பல் சிரிப்பழகில் சொக்கித்தான் போனானோ சரண்! இதுவரை அவளின் குணத்தையும், பேச்சையும் மட்டுமே பார்த்து மயங்கியவன், முதல்முறையாக அவளின் அழகில் மயங்கி நின்றான்.
அவள் தன்னைவிட்டு நடந்து கொண்டிருப்பது புரிய மயக்கத்திலிருந்து வெளியே வந்தவன், “மிஸ்.ஆராதனா ஒரு நிமிஷம்” என்றான்.
‘இவன் ஏன் திடீர்னு கூப்பிடுறான்?’ என்று திரும்பிப் பார்த்தவள். “ம்... சொல்லுங்க சார். என்ன விஷயம்?” என கேட்டாள்.
அவள் முன் வந்து நின்று, “நான் சொல்றதைத் தப்பா எடுத்துக்கக் கூடாது. பட்டுன்னு அவசரப்படவும் கூடாது. அதுக்கு என் பாடி தாங்காது” என்று பெரியதாக எதையோ சொல்வதுபோல் நிறுத்தினான்.
ஆராதனாவிற்குள் பலவித எண்ணங்கள். ‘அச்சச்சோ! ஐ லவ் யூ சொல்லப் போறானா? அப்படி அவன் சொன்னா, நான் என்ன மாதிரி ரியாக்ட் பண்ணனும்? அடிக்கனுமா? அடங்கனுமா?’ என்று மனம் பலவாறு யோசிக்க, இதயத் துடிப்பு எகிறியது. இருந்தும் அதை மறைத்து, “அது நீங்க சொல்ற வார்த்தையில்தான் சார் இருக்கு” என்ற பதிலை அவளின் வாய் மொழிந்தது.
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று சட்டென்று கேட்க, கோவத்தில் அவனைப் பட்டென்று அடித்திருந்தாள் அந்த திருநெல்வேலிக்காரி.
என்னதான் அவன் ஏதோ கேட்கப்போகிறான் என்றாலும், இவள் எதிர்பார்த்திருக்காத கேள்வியை அவன் கேட்டதும் பயத்தில் அடித்து, “லூசாலே நீ? சரியான கிறுக்கனா இருக்கா? என்னையப் பாத்து ஒரு அர மணிதேரம் இருக்குமாலே. நான் நல்லவளா, கெட்டவளா தெரியுமாலே ஒனக்கு. ஏதோ சமயத்துக்கு உதவி பண்ணியேனு நின்னு பேசுனா, சுத்த வெருவாக்கெட்டத்தனமா கேக்க. இதத்தான் ஒங்கம்மா சொல்லிக் தந்தாவளா?” என்று அவனை அரள வைத்தாள்.
அவளின் பேச்சை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சரண், “ஒரு நிமிஷம். எனக்கு இந்த மாதிரித் திட்டுறதெல்லாம் வராது. உங்களை முதல்ல கோவில்ல வச்சிப் பார்த்ததும், சத்தியமா சொல்றேங்க, எனக்கு எங்க அம்மா முகம் தாங்க நியாபகம் வந்தது. நீங்க பேசுறது, உங்களோட வார்த்தைகள் ஒவ்வொண்ணும் எங்கம்மாவைத்தான் நியாபகப்படுத்திச்சி. எனக்கு எங்கம்மான்னா உயிர். அவங்ககிட்டச் சொல்லாம எதையும் செய்யமாட்டேன். காலையில உங்களைக் கோவில்ல பார்த்ததுமே சொல்லிட்டேன். அவங்களும் சிரிச்சி சம்மதம் சொல்லிட்டாங்க. இப்பச் சொல்லுங்க? என்னைக் கல்யாணம் பண்ணிக்கறீங்களா?” என்றான்.
ஒரு நிமிடம் கையை இறுக மூடி உணர்வுகளை அடக்கியவள், அவனை அடித்தது தவறென்ற போதும், அவனது கேள்வியை மறுமுறை மனதிற்குள் சொல்லிப் பார்த்தாள். ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கறீங்களா?’ மறந்தும் இரண்டாவது முறை சொல்லும் பொழுது கூட மாற்றவில்லை.
வேலை விட்டு விடுதி வந்தவள், காற்றுக்காக ஜன்னல் திறக்க, எதேச்சையாக பூங்கா பக்கம் வேடிக்கை பார்க்க, ஒரு ஆண் சிறு பெண்ணிற்கு முத்தம் தொடர்ந்து கொடுத்தபடி நின்றிருந்ததைப் பார்த்தாள். உள்ளே திரும்பும் வேளையில் சந்தேகம் வந்து, தன் முழு கவனத்தையும் அந்த இடத்தில் வைத்தாள். அந்தக் குழந்தையின் தகப்பனாக இருக்கும் என்று உள்ளே செல்லத் திரும்பியவள், அந்த ஆணின் தொடுகை அசிங்கமானதாக, பார்க்க சகிக்க முடியாததாக இருந்தது.
குழந்தையை எண்ணி பயந்தவள், “வள்ளி! பார்க் வரை போயிட்டு வர்றேன்” என்று சுடிதார் துப்பட்டாவைத் தூக்கித் தோளில் போட்டு ஓடாத குறையாக பூங்காவைச் சென்றடைந்தாள். அங்கே அவள் கண்டது உண்மையென உறுதிப்பட, குழந்தையைத் தன்னருகில் இழுத்து அவனை அடித்திருந்தாள். நடுவில் சரணின் வரவில் ஒரு ஆண் துணை வந்ததில் ஒருபுறம் சந்தோஷம்தான். அதிலும் தன்னிடம் எதுவும் கேட்காமல் நடந்ததை அவனே யூகித்ததை மனதினுள் மெச்சிக்கொண்டாள்.
ஆனால், அவனின் இந்தக் கேள்வி, ‘ஏன் கேட்டான்? என்னைப் பார்த்துக் கேட்க எது தூண்டியது?’ காலையில் வேலைக்குச் சென்று திரும்பி வந்து முகம் கூடக் கழுவாமல், தலையும் கலைந்து இருப்பது அவளுக்கேத் தெரியும். ‘நான் அந்த அளவு பெரிய அழகெல்லாம் இல்லையே? தெரியாத பொண்ணுகிட்ட எப்படிக் கேட்கத் தோணிச்சி? அதுவும் நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். இல்லை எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? இப்படியான கேள்விகள் கேட்காமல், நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கறீங்களா?’ என கேட்டிருக்க, இதனாலேயே அவன் மேல் இருந்த நல்லெண்ணம் வலுப்பெற்றது.
பின் அவனுக்குப் புரிய வைக்கும் பொருட்டு, தன்னை முதலில் நிலைப்படுத்திக் கொண்டாள். அவன் கண்ணை நேருக்கு நேராகப் பார்த்தவள் ஒரு நிமிடம் தடுமாறித்தான் போனாள். அவனின் பார்வையில் தடுமாறியவளுக்கு அவனிடம் காலம் காலமாக பழகிய உணர்வு.
காலையில் வேதா சொன்னது நினைவு வந்தது. ‘ஹேண்ட்சம்.’ நிஜமாகவே ஆறடிக்கு இரண்டு இஞ்ச் மட்டுமே கம்மியான உயரம் இருக்கும். மாநிறம் தான். ஹைட்டுக்கு ஏற்ற உடற்கட்டு. டெய்லி ஜிம்முக்குப் போவானோ? என்று நினைக்கத் தோன்றும் அவனைக் கண்டால். மொத்தத்தில் பார்க்க அம்சமாக இருந்தான்.
சரணின் பார்வை ஆராதனாவின் பதிலுக்காய் ஏக்கத்துடன் அவள் மேல் படிந்திருந்தது.
‘இல்லை இது தப்பு ஆரு. நீ இங்க வந்த காரணமென்ன? பண்ற வேலை என்ன? கண்ட்ரோல், கண்ட்ரோல் யுவர் செல்ஃப்’ என்று நிதானத்திற்கு வந்தவள், நிமிர்ந்து அவனைப் பார்த்து “சாரி சார். எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. நான் படிச்சி வேலைக்காக திருநெல்வேலியில் இருந்து சென்னை வந்ததே என்னோட அத்தானைத் தேடித்தான். அவங்க சென்னையில தான் இருக்காங்க. சின்ன வயசுலயிருந்தே எங்க பாட்டி, அத்தானைத்தான் கட்டிக்கணும்னு சொல்லியே வளர்த்துட்டாங்க. சரியோ? தவறோ? இப்ப எங்க பாட்டி உயிரோட இல்லை. அவங்க ஆசையை நிறைவேத்துறது என்னோட கடமை. எங்க அத்தான் பேமிலியைத் தேடிக் கண்டுபிடிக்கணும். நடுவுல மாற முடியாது. மாறுறதைப் பற்றி நான் யோசிக்கவும் இல்லை.”
“ப்ளீஸ்! இனிமேல் இதைப்பற்றி பேசிட்டு என்கிட்ட வராதீங்க. உங்கமேல தனி மரியாதை வச்சிருக்கேன். அதை நீங்களே கெடுத்துக்காதீங்க. இந்த நினைப்பை இப்போதே உங்க மனசிலிருந்து தூக்கி எறிஞ்சிருங்க. நான் வர்றேன்” என்று திரும்பி நடக்க ஆரம்பித்தவள் அதிர்ச்சியில் நின்றாள்.