- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
21
மண்டபத்தின் உள்ளே நுழைந்த வசீகரன் குடும்பத்தினரைப் பார்த்த பரிபூரணி பார்க்காததுபோல் உள்ளே சென்றுவிட்டாள். யார் அவர்களை அழைத்தது என்பதற்குப் பதில் தான்தான் அழைத்ததாக மலையரசனிடமிருந்து வந்தது. அவரை ஏனென்ற பார்வை பார்த்தாலும் எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டாள். மகளின் அமைதியே அவருக்குத் தைரியத்தைக் கொடுத்ததோ!
ஜனனியின் வளைகாப்பு விழா விமரிசையாக நடக்க, அனைவரும் வளையல் போட்டு முடியும் நேரத்தில் ஆனந்தி, ஐஸ்வர்யா வர ஏனோ ஆனந்தியைப் பார்த்ததும் எழும் உணர்வுக்குப் பெயரில்லாமல் போனது. கண்டிப்பாக அதற்கு வெறுப்பு என்ற பெயர் மட்டும் இல்லை. அவரின் அன்பான வார்த்தைகளை, பரிவான தலைவருடலை எதிர்பார்க்கிறாளோ! மனம் ஒரு குரங்கென்று சும்மாவா சொன்னார்கள்.
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல், “ஜனனிக்கா இதோ வர்றேன்” என்று நகர்ந்து அவர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் சென்று கதவடைக்கும் நேரம், கதவைத் தள்ளிக்கொண்டு வந்து அவள் முன் நின்றான் அவளின் வசீகரன்.
“நீங்களா? இங்க என்ன பண்றீங்க?” என்றாள் பதற்றமாய்.
“எதாவது பண்ணலாமான்னுதான் பார்க்கிறேன். எங்க, நீதான் விடமாட்டேன்றியே” என்று அங்கலாய்த்தான்.
“என்னது? மீனிங் தப்பா வருது வசீகரா. முதல்ல இங்கயிருந்து கிளம்புங்க” என்றாள் கண்டிப்புடன்.
“நமக்குள்ள தாம்பத்தியம் இருந்திருந்தா என்னைவிட்டுப் போக மனசு வந்திருக்காது சொன்னதான? பேசாம அதை முயற்சிக்கலாமா?” கேட்டுவிட்டுக் கண்சிமிட்டினான்.
“லூசா நீங்க. என்ன பேச்சிது? அர்த்தம் புரிஞ்சிதான் பேசுறீங்களா?” என்றவள் உடல் நடுங்க ஆரம்பிக்க அதை மறைத்து முறைத்து நிற்க... அவனோ அவளை நெருங்க, இவள் பின்வாங்கியபடி, “வேண்டாம்ங்க. இது சரியில்லை. நீ..நீங்க இ..இதை செய்யக்கூடாது. தப்பு” என்றாள் நடுங்கிய குரலில்.
“தப்பு செய்தாலாவது நீ என்னோட வருவியான்னு பார்க்கிறேன் பரி” என்று அவள் கையைப் பிடிக்க, பட்டென்று அவன் கன்னத்தில் அடித்து கண்ணீர் கண்களினூடே நடுங்கிய கையைப் பார்த்தபடி தரையில் அமர்ந்தவள், “நீங்க என் வசீகரன் இல்ல. நீங்க போங்க. உங்களைப் பார்க்கிற நேரமெல்லாம் எனக்கு வலியைத்தான் கொடுக்குறீங்க. உங்களால இந்த மாதிரி என்னை எப்படி...” வார்த்தையில்லாமல் தேம்பி அழ,
“வலிக்குதா பரிபூரணி?” என்றதில் சட்டென்று நிமிர்ந்து அவனைக்காண, அவனின் ‘பரிபூரணி’ ஏனோ மனதைப் பிசைய சொல்லாமல் ஒரு வலி அவளுள்.
“எனக்கும் வலிக்குது. உன்னோட விலகல் வலிக்குது. நான் உன்கிட்ட தப்பா நடந்துப்பேன்னு நீ நினைத்தது வலிக்குது. என்னை நீ புரிஞ்சிக்கிட்டது இவ்வளவுதான்னு நினைக்குறப்ப, அது இன்னும் வலிக்குது.” கண்மூடி வேதனை மிகுந்த குரலில் சொன்னவன் கண்திறந்து அவள் முன் அமர்ந்து, “வலின்றது உனக்கு மட்டும் இல்லை பரி.. எனக்குமே இருக்கு. எப்ப உன்னைப் பற்றிய உண்மை தெரிஞ்சதோ, அதுவும் அப்... அவர் பண்ணினது தெரிஞ்சதோ அப்பயிருந்து ஒவ்வொரு நிமிடமும் செத்துக்கிட்டுருக்கேன். வலி வலி வலி மட்டும்தான் இங்க அதிகமிருக்கு” என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டினான்.
‘எல்லாமே தெரிஞ்சிருச்சா? யார் சொன்னது? கடவுளே இது என் வசீகரனுக்கு எவ்வளவு பெரிய தண்டனை.’ மனம் நினைக்க கணவனவனின் வேதனை அவளையும் வாட்ட கண்சிமிட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மிஸஸ்.பரிபூரணி வசீகரன்.
அவனோ, “எதைக்கொண்டு அதை சரி செய்யுறதுன்னு தெரியலை பரி. உன் வலிக்கும் என் வலிக்குமான நிவாரணம் நீ மட்டும்தான். நீ ம்னு ஒரு வார்த்தை சொல்லு பரி. என் மனைவியைத் தப்பாப் பார்த்த, பேசின அவங்களுக்கு மன்னிப்புக்கும் மேல ஒரு தண்டனை கொடுப்பேன்” என்றவனின் ரௌத்திரமான வார்த்தைதனில் அவளின் உள்ளம் குளிர்ந்ததோ! அவளறியாமல் அவளின் பிடிவாதம் தளர்ந்து கொண்டிருந்தது.
“மன்னிப்புன்ற வார்த்தை எதையும் சரிசெய்யாது என்பதனால்தான் எங்க வீட்டிலுள்ள யாரும் உன்னை வந்து பார்க்கலை. பார்க்கலைன்றதைவிட பார்க்க விடலை நான். அதே மாதிரி வெளியில் தப்பாகத் தெரிந்தாலும் நியாயமானவங்களும் என் வீட்டுல இருக்காங்க பரி. நீ நம்பலைன்னாலும் அதுதான் உண்மை.”
“எனக்கு நீ வேணும். நீ மட்டும்தான் வேணும். உன் இதயம் எனக்காக் துடிக்கிறது உண்மைனா, இன்னைக்கு ராத்திரி பனிரெண்டு மணிவரை இதே மண்டபத்துல இருப்பேன். அந்த நேரம் தாண்டினா, உண்மையிலேயே உனக்கு என்மேல எதுவும் இல்லைன்னு இங்கிருந்து கிளம்பிருவேன். அதுக்கப்புறம் எங்க, எப்படி இருக்குறேன்றது நீ உட்பட என் குடும்பம் யாருக்குமே தெரியாத இடம் போயிருவேன்.”
‘என்ன?’ என்று பூரணி முகம் பயத்தைக் காட்ட, அதில் புன்னகைத்தவன், “இது உன்னைப் பயமுறுத்த சொல்லலை பரி. இனியும் இங்கேயிருந்து உன்னைத் தொல்லை பண்றதுல எனக்கு விருப்பமில்லை. மீறி இருந்தா என் கால்கள் உன்னைத் தேடிதான் வரும்! என் பார்வை உன்னை மட்டுமே சுத்தும்! என் இதயம் உன்னை மட்டுமே யாசிக்கும்! உன்னை விடமாட்டேன், விட்டுக்கொடுக்க மாட்டேன்னு சொன்ன நானே இப்ப உன்னை விட்டுட்டுப் போறேன்.”
“ஒருவேளை உனக்கு வேற யாரையாவது பிடிச்சிருந்தா என்னை மறந்து கல்யாணம் செய்துக்கோ” என்றதில் ‘உன்னை மறந்து இன்னொருவனை நினைக்க, நான் ஏனடா உன்னுடன் சேர்த்து இத்தனை வேதனைகளைச் சுமந்து கொண்டிருக்கிறேன்’ என்ற கோபம் எழுந்தபோதிலும் அமைதியாகவே அவனைப் பார்த்திருந்தாள்.
“இப்படியொரு வாய்ப்பு நமக்குக் கிடைக்குமா தெரியாது. ஐ லவ் யூ பரி” என்றவன் அவளருகில் சென்று இறுக தன்னுடன் சேர்த்தணைத்து முகமெங்கிலும் முத்தத்தால் நிறைத்து இதழில் அழுத்தமாக முத்தமிட்டு அவளைவிட்டு வேகமாக விலகிச் சென்றான் வசீகரன்.
இரவு பனிரெண்டு மணிவரை அவளுக்காகக் காத்திருந்தவன் மனைவி வருவதுபோல் தெரியவில்லை என்றதும், தொண்டையடைத்த வேதனையை விழுங்கி, “நான் இல்லைனாலும் நீ நல்லாயிருக்கணும் பரி. எங்கேயிருந்தாலும் என் நினைவுகள் எல்லாம் உன்னைச் சுற்றியே இருக்கும். நான் போறேன்” என்றவன் மண்டபத்தின் வரவேற்புப் பகுதிக்கு வர சுற்றிலும் ஒரே இருட்டாகயிருந்தது.
‘இந்த இருள்தான் இனி தன் வாழ்க்கை முழுவதும்.’ வருத்தத்துடன் விரக்திப்புன்னகை சிந்தி வெளியே செல்ல கதவை நெருங்குகையில் பளிச்சென்று அத்தனை விளக்குகளும் எரிந்தது.
திடீரென்ற ஒளி அவன் கண்களை கூசச்செய்ய, ஒரு கையால் கண்ணை மூடித்திறந்து பார்க்க, தன்னை நோக்கி தென்றலென வருடிச் செல்லும் புன்னகையுடன்! வசீகரிக்கும் பார்வையுடன்! மயக்கும் மான்விழியில் தன்னை வீழ்த்தும் தீவிரத்துடன் வரும் மனைவியவளைக் கண்டு மெய்மறந்து நின்றான் வசீகரன்.
அவளின் ஒவ்வொரு பாத அடிக்கும் அவன் பேசிச் சென்றபின் உள்ள நிகழ்வுகள் வந்து சென்றது.
முத்தமிட்டு வேகமாக விலகிச் சென்றதும் பிரமை பிடித்தாற்போல் நீண்ட நிமிடங்கள் அமர்ந்திருக்க, அவனின் ஒவ்வொரு வார்த்தையும் அவனைச் சுற்றியே வலம் வந்தது. யாரோ தோளில் கைவைக்கவும் “வசீகரா!” என்று சந்தோஷத்தில் திரும்பியவள் அங்கு நின்றிருந்த தோழியைக் கண்டதும், “சண்மு” என்று அணைத்துக்கொண்டாள்.
“பூரணி என்னாச்சி? உன்னைக் காணோம்னு தேடிட்டு வந்தா இங்கயிருக்க. ஏன் முகமெல்லாம் கலங்கியிருக்கு? எதாவது பிரச்சனையா?” என்றாள் அவள் கண்ணீர் துடைத்து.
“என் வாழ்க்கையே பிரச்சனைதான் சண்மு. அவங்க மட்டும்தான் வாழ்க்கைன்னு ஆன பிறகும் சேர்ந்து வாழ ஏதோ தடுக்குது. என்ன முடிவெடுக்குறதுன்னே தெரியலை. இதுல நீயும் எனக்காகன்னு வாழ்க்கையை ஏற்படுத்திக்கலை. ரொம்பவே கஷ்டமாயிருக்கு சண்மு” என்றாள்.
“பூரணி! என் வாழ்க்கை உன்னால பாதிக்கலை. இதுவரை வந்த யாரையும் எனக்குப் பிடிக்காததாலதான் இன்னும் கல்யாண வாழ்க்கை அமையலை. மத்தபடி நீ நினைக்கிறது மாதிரியில்லை” என்று சமாதானப்படுத்த முயல,
“பொய் சொல்ற சண்மு. நான் சுயநலமா நடந்துக்குறேன்ல?”
“அப்படியா? போடி லூசு. நீயா எதையாவது கற்பனை செய்துக்காத. இன்னைக்கே ஒரு நல்ல சம்பந்தம் வந்தா உடனே கழுத்தை நீட்டிருவேன் சரியா? சரி சிரி” என்று பூரணியின் வாயை சிரிப்பதுபோல் தன் கையால் வைத்து, “இது அழகு” என்றாள்.
“சித்தி நீங்க ஏன் வீட்டுக்கு வரலை? நான் உங்களைக் கேட்டுட்டேயிருந்தேன்” என்ற கிருஷின் குரலில் இருவரும் எழ, “என்னை அங்க யாருக்கும் பிடிக்காதேடா” என்றாள் எதோ யோசனையில்.
“யார் சொன்னது? உங்களை எல்லாருக்கும் பிடிக்கும் சித்தி. உங்களைப் பார்த்ததும் எனக்கு எப்படி அடையாளம் தெரிஞ்சது சொல்லுங்க? வீட்டுல அம்மா எப்பவும் உங்களை நினைச்சி ஃபீல் பண்ணுவாங்க. அப்பா ஆறுதலா உங்களுக்காகதான் பேசுவாங்க. தினமும் நைட் உங்க பெயர் வராம இருக்காது.”
‘வீட்டைவிட்டு வந்ததில் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்திருக்குமோ’ என்றது பூரணியின் மனசாட்சி.
“பாட்டி மட்டும் உங்களை சில நேரம் திட்டுவாங்க. பாட்டிக்கு ஹார்ட் அட்டாக் வந்த பிறகு உங்களைத் திட்டுறதில்லை. உங்களை கூட்டிட்டு வரச்சொல்லி சித்தப்பாகிட்ட சண்டை போடுறாங்க” என்றான்.
ஹார்ட் அட்டாக்கிலேயே அதிர்ந்து நின்றவள், “ஹார்ட் அட்டாக் யாருக்குன்னு சொன்ன கிருஷ்?” என்றவள் குரலில் பதற்றம் மட்டுமே!
“பாட்டிக்குதான் சித்தி. நாம ஹாஸ்பிடல்ல பார்த்தோம்ல அன்னைக்கு வீட்டுக்கு வந்ததும் பாட்டிகிட்ட சித்தப்பா சண்டை போட, அம்மாவும் சேர்ந்து ரொம்ப நேரம் சத்தமா கேட்டுட்டிருந்திச்சி. அதுக்கப்புறம் பாட்டிக்கு நெஞ்சுவலி வந்திருச்சி. சரியாகி வீட்டுக்கு வந்ததிலிருந்து உங்களைத்தான் கேட்கிறாங்க. எப்ப சித்தி வருவீங்க? சித்தப்பா உங்க போட்டோவையே பார்த்து பேசிட்டிருக்காங்க” என்றான்.