- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
17
எங்கே போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்.
தாயே உயிர் பிரிந்தாயே!
கண்ணே நீயோ என்னுயிர் தானே!
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்.
நான் பாடும் தாலாட்டு
நீ தூங்க காதோரம்
என்றென்றும் கேட்கும்.
அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்னை விட்டா எனக்காரு அம்மா.
கண்களில் கண்ணீர் அவனறியாமல் வடிய, தாயின் மரணம் நேரில் அவன் கண்முன் நடப்பது போல் தெரியவும் தாயின் நினைவு சரவணனை வாட்டியது.
சரணை உலுக்கிய அபிஷேக், “என்னடா? உனக்கே இன்னும் ட்ரீட்மெண்ட் தரணும் போலருக்கே”
“ப்ச்... இல்லடா நான் நார்மலா தான் இருக்கேன். அம்மா இல்லன்றது எனக்குப் புரியுது. ஆனாலும், மனசு அம்மாவைத் தேடுது. அவளுக்கு வாய் பேச வராதுன்னு உனக்குத் தெரியும். ஆனா, அந்த சம்பவத்திலிருந்து குட்டிமாக்கு தண்ணின்னா பயம். பள்ளமான இடம்னா பயம். வீட்டுல எதற்காவது பள்ளம் தோண்டினா கூட அங்க நிற்கமாட்டா. ஸ்கூல், காலேஜ்ல டூர் கூப்பிட்டுப் போனாலும் மறுத்திடுவா.”
“இனி அபி என்னோட பொறுப்புடா. அவளைச் சரி பண்ண வேண்டியது என்னோட கடமை. இனி நான் உங்க வீட்டுக்கு அடிக்கடி வருவேன். மத்தவங்க பார்வைக்கும், அபிக்கும் சாதாரணமா வர்ற மாதிரி இருக்கும், ஆனா, நான் ட்ரீட்மெண்ட் தான் கொடுப்பேன். சரி டைமாகுது கிளம்பு அப்புறம் உன் தங்கச்சி உன்னை ஒரு வழி பண்ணிருவா” என்று சிரித்தபடி இருவரும் விடைபெற்றுக் கிளம்பினார்கள்.
சரண் சொன்னது போல் ஆராதனாவைச் சந்திக்கவோ, போனில் பேசவோ முயற்சிக்கவே இல்லை. ஆராதனா, வேதவல்லி இருவருக்கும் பயிற்சி முடிய சில வாரங்களே இருக்க, இன்னொரு நிறுவனத்திற்கு நேர்காணல் சென்று அதில் தேறியதும், பத்து நாட்களில் பணியில் சேருவதாகச் சொல்லி வந்தனர்.
அந்த விடுமுறைக்கு ஊருக்கு நெல்லை எக்ஸ்பிரசில் செல்வதற்கு இரயில் நிலையம் வர, நேரம் ஆக ஆக ஆராதனாவிற்குள் கோவம் ஏறிக்கொண்டே இருந்தது. ஊருக்குச் செல்லும் முன் கணவனை ஒரு முறையாவது பார்க்கத் துடித்தாள்.
‘என்ன புருஷன் இவங்க? பொண்டாட்டி ஊருக்குப் போறாளே, ஒரு தடவை பார்க்கலாம்னு தோணுதா? பெரிய ரொமாண்டிக் ஹீரோ மாதிரி லுக் மட்டும் விடுறது.’
‘நீ சொன்னியா?” என்று மனசாட்சி கேட்க, ‘ஏன் சொல்லணும்? அதான் பாசமலர் இருக்கே. இங்கே ஆ..ன்னு கொட்டாவி விட்டா கூட சொல்லிருவாளே. இப்பச் சொல்லாம இருப்பாளா என்ன?’ நேரம் நெருங்க எங்கே கணவனைப் பார்க்காமல் சென்று விடுவோமோ என்ற பயம் வர, கண்கலங்குவது போல் தோன்ற அதை மறைக்கத் தோழியிடம் பேச்சுக் கொடுத்தாள்.
அவள் முகத்தின் கவலையைப் பார்த்த வேதவல்லி, “ஆரு அண்ணாவ மிஸ் பண்றியா?” என்று வேதா நேரடியாகக் கேட்க,
இல்லையென்று தலையாட்டியவள் பின், “தெரியலை வள்ளி. பார்க்கணும்னு தோணுது. பார்க்க கூடாதுன்னும் தோணுது.”
அவளின் வள்ளியில் வருத்தம் உணர்ந்தவள், “ஏதோ தோணுதுல்? ஷப்பா! அண்ணா வாங்க. அண்ணிக்கு எதோ தோணுதாம்” என்றாள் புன்னகையுடன்.
அடுத்த நிமிடம் அவள் முன் நின்றிருந்தான் சரண். அவனைப் பார்த்ததும் முகத்தில் சிரிப்பு தன்னால் வர, அவளருகில் வந்தமர்ந்தான்.
“நீங்க பேசிட்டிருங்க. நான் தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வர்றேன்.”
“செல்லம் ஏன்டி சிரிச்ச? பாரு நீ சிரிச்சா நான் ப்ரீஸ் ஆகிடுறேன். உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே உன் தெத்துப்பல் சிரிப்புதான்” என்று புன்னகைக்க,
கணவனை முறைத்து, “எனக்கு தெத்துப்பல்லா?” என்றாள்.
“ஹி..ஹி கொஞ்சோண்டு” என்று அவன் கைபேசி எடுத்து திருமணத்தன்று காலையில் எடுத்த நிழற்படங்களைக் காட்டினான்.
அதைப் பார்த்தவள் “இது நானா?” என அதிசயித்தாள்.
“அவ்வளவு களேபரத்துலயும் கலகலன்னு சிரிச்சிருக்க பாரு” என்றான்.
அவனைக் கையால் இடித்து, “இதை எனக்கு அனுப்பி விடுங்களேன்” என்று கேட்டாள்.
“செல்லம் இட்ஸ் ஒன்லி மீ. உனக்கு வேணும்னா இப்ப சிரி நான் எடுக்குறேன்.”
“ஒண்ணும் தேவையில்லை. நீங்க கிளம்புங்க. ட்ரெயின் எடுக்கப் போறாங்க. இந்த வேதா எங்க?”
“நான் இங்கதான் இருக்கேன். அண்ணா கிளம்பினதும் வர்றேன்” என்றாள்.
“சரி நான் கிளம்புறேன்” என்றவன் மனைவியிடம் நெருங்கி வந்து அவள் பார்த்திருக்கும் போதே கன்னத்தில் முத்தமிட்டுக் கிளம்பினான்.
அவன் முத்தமிட்ட இடத்தை தொட்டு ரசித்தபடி தன் பயணத்தைத் தொடர்ந்தாள் அவனின் சரிபாதி.
திருநெல்வேலி டவுன்:
ஆராதனாவும், வேதவல்லியும் ஊருக்கு வந்து இரண்டு நாட்களாகிறது. வேதவல்லி வந்ததுமே ‘இன்னும் நான்கு நாட்களில் உனக்கு நிச்சயதார்த்தம்’ என்ற தகவல் சொன்னார்கள். ‘கல்யாணத்துக்குப் பிறகு விருப்பம் இருந்தால் வேலைக்குப் போகலாம். பையன் சென்னைதான்’ என்ற தகவல் கிடைத்தது.
‘நல்லவேளை தாலி கட்டுறதுக்கு முன்னாடி உனக்கு கல்யாணம்னு சொல்லாம விட்டாங்களே. அதுவரைக்கும் சந்தோஷம்தான்’ என மனதினுள் நினைத்தாள்.
கீர்த்தனா மட்டும் தன் அக்காவை அடிக்கடி வித்தியாசமாகப் பார்த்தாள்.
‘என்னடா இவ இப்படிப் பார்க்கிறா?’ என்று மனதில் கேட்டதை அவளிடமே கேட்க,
“இல்ல ஏதோ வித்தியாசம் இருக்கு உன்கிட்ட. சம்திங் ராங். உன்னோட முகம் டாலடிக்குதே. என்ன எதுவும் லவ் மேட்டரா? அக்கா அத்தானைப் பார்த்திட்டியா?” என்று ஆர்வத்தில் கேட்டாள்.
“ப்ச்... அப்படில்லாம் ஒண்ணுமில்லடி. உன் தொல்லையில்லாமல் இருக்கிறேன்ல. அதான் உனக்கு அப்படித் தெரியுதோ என்னவோ.”
தாய் செல்வியுமே மகளிடம் வித்தியாசத்தை உணர்ந்தார். அதனால் கணவரிடம் சொல்லி நல்ல பையனாகப் பார்த்து, அவள் ஊருக்குப் போவதற்குள் பொண்ணாவது பார்க்க வரட்டும் என்றதும், கேசவனுக்கு அது நல்ல விசயமாகப் பட்டது. அதைத் தன் தந்தையிடமும் சொல்லி, சென்னையில் வேலை செய்யும் பையனாக பார்த்து, வேதவல்லி நிச்சயம் முடிந்த மறுநாள் ஆராதனாவைப் பெண் பார்க்க வரச் சொல்லி, அதை மனைவியிடமும் சொன்னார்.
அதைக் கேட்ட கீர்த்தியோ, “அவசரப்படுறீங்கப்பா. எதுக்கும் அக்காகிட்ட ஒரு வார்த்தை சொல்லிருங்க” என்றாள்.
“சொல்லலாம்மா. நாளைக்கு வேதா நிச்சயம் முடிஞ்சதும் நானே சொல்லிருறேன்.”
வேதாவின் நிச்சயதார்த்தத்திற்கு காலையில் அவளை அலங்கரித்த ஆராதனாவிடம், “அண்ணாவும் இருந்தா நல்லா இருக்கும்ல ஆரு?” என கேட்க,
“உனக்கு வேற வேலையில்லையா. கம்முன்னு இருடி. ஏற்கனவே கீத்து வித்தியாசமா பார்க்கிறா. இதுல நீயே என்னைக் காட்டிக் கொடுத்திருவ போல” என்று அதட்டி அமைதியானாள்.
அதற்குள் மாப்பிள்ளை வீட்டினர் வர, பெண்ணை அழைத்து வந்த ஆராதனா மாப்பிள்ளையைப் பார்த்து திகைக்க, வேதவல்லியின் கையை அழுத்தி, “ஏய்! மாப்பிள்ளையைக் கொஞ்சம் நிமிர்ந்து பாரு” என்று இரகசியமாக சொல்ல, நிமிர்ந்து பார்த்த வேதவல்லி, ‘இவனா?’ என்று அங்கு மாப்பிள்ளையாக அமர்ந்திருந்த முகிலனைப் பார்த்து அதிர்ச்சியானாள்.
“ஏய்! ஆரு! இன்ஸ் இங்க எப்படி? எனக்கு ஒண்ணும் புரியலடி?”
“அங்க என்ன ரெண்டு பேரும் காதைக் கடிச்சிட்டு இருக்கீங்க” என்று கலைவாணி கடிந்தார்.
“இங்க வாம்மா” என்று முகிலனின் தாய் அழைத்து பக்கத்தில் அமர வைத்து சகஜமாகப் பேச, முகிலனின் பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்தாள் வேதவல்லி.
“இது ஒரு மாசத்துக்கு முன்னாடி நடந்திருக்க வேண்டியது. பையன் பொண்ணைப் பார்க்கிறதுக்கே மாசம் ஓடிப்போச்சி” என்று முகிலனின் தாய் சொன்னதும்தான், அன்று அவன் பார்த்த பார்வையின் அர்த்தம் புரிந்தது. ‘பொறுப்பான பதவியில் இருப்பவன், முன்னப்பின்ன தெரியாத பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்குவானா?’ என்று நினைத்திருந்தவள், ‘தன் உறவென்று தெரிந்த பின் தான் பார்த்திருக்கிறான்’ என்று தெரிந்ததும் மனம் நிம்மதியாக அவனை தலைநிமிர்ந்து பார்த்தாள்.
“ஹாய்! ப்யூட்டி!” என்று உதடசைத்து யாருமறியாமல் கண்ணடித்தான். அவனின் சேட்டையில் முறைக்க முயன்று தோற்று, வெட்கத்தில் தலை குனிய, இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் என்று முடிவானது.
ஆராதனாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென தோழி அமைதியாகி யாரையோ பார்ப்பதைக் கண்டு திரும்பிய வேதவல்லி சந்தோஷத்தில், “அண்ணா வாங்க. கொஞ்சம் முன்னாடி தான் உங்களை நினைச்சேன். நீங்க இருந்தா நல்லாயிருக்குமேன்னு” என்றாள்.
“ஓ... அதான் நான் இங்க வந்ததுக்குக் காரணமா?” பரிசுப்பொருள் ஒன்றைக் கையில் கொடுத்து, “வாழ்த்துகள்மா” என்றான்.
“அண்ணா உண்மையைச் சொல்லுங்க? உங்க ஒய்ஃப் பார்க்கத்தான வந்தீங்க?” என மற்றவர்கள் அறியாமல் கேட்க,
மனைவியைப் பார்த்தபடி, “அதுக்கும்தான்” என்றான்.
கணவனைப் பார்த்ததும் சந்தோஷமும் பயமும் என்று கலவையான உணர்ச்சியில் இருந்தாள் ஆராதனா. அவன் பார்வை தன்னையே பார்த்திருப்பதை அறிந்தவள், அவ்விடத்தில் அமர முடியாமல் ஒரு மாதிரி நெளிந்து கொண்டிருந்தாள்.
அருகில் இருந்த கீர்த்தனா, “அக்கா ஏன் ஒருமாதிரியா இருக்க? முகமெல்லாம் வேர்க்குது. மாப்பிள்ளையோட ப்ரண்டை உனக்கு ஏற்கனவேத் தெரியுமா?” என்ற நேரடியாகக் கேட்டாள்.