• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
662
12


கார் கண்ணாடியில் பார்த்தான். தலையெல்லாம் பூவாக இருக்க தாலிகட்டி முடித்து பொட்டு வைக்கும் போது, அவள் பார்த்த அதிர்ச்சிப் பார்வையும், பார்ப்பவர்களுக்கு முகத்தை மெல்ல வருடுவது போல் இருந்தாலும், அந்த சரவணன் மேல் தன் கை படாமல் அவள் கொடுத்த தண்டனையும், கையில் கட்டுப் போடும் போது முறைத்த பார்வையும் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. “ஏஞ்சல் ரௌடி” என்று வாய்விட்டுச் சொல்லி தலையில் இருந்த பூவை தட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றான்.

“என்னண்ணா அவனைப் பிடிச்சாச்சா? எல்லா பிரச்சனையும் சால்வ் பண்ணியாச்சில்ல?” என்ற தங்கையின் கேள்விக்கு,

“எல்லாம் முடிஞ்சிதுமா. அவனை அரஸ்ட் பண்ணியாச்சி. இனி எந்த பிரச்சனையும் இல்லை. சரிமா டிபன் ரெடியாகிட்டா எடுத்து வை. நான் அரை மணி நேரத்துல கிளம்பணும். இம்பார்ட்டன்ட் மீட்டிங் ஒண்ணு இருக்கு” என்று மாடிக்குச் செல்லத் திரும்பியவன் சட்டையைப் பிடித்து இழுத்தாள். “என்ன?” என்று சரண் கேட்க,

“அண்ணா அது வந்து இந்தக் கல்யாணத்தை நிறுத்தவே முடியாதா?”

வந்த சிரிப்பை அடக்கி, “அது... அது கண்டிப்பா முடியாதுடா. அவரைப் பாரு உனக்குப் பிடிக்கும்” என்றான்.

“எனக்குப் பிடிக்கும்னு எப்படிச் சொல்ற?”

“அது அப்படித்தான். விளக்கம் கேட்காத.அப்பா எங்க?”

“அப்பாவை காலையிலேயே லேண்ட் விஷயமா பார்க்கணும்னு வந்தாங்க. அவங்களைக் கூப்பிட்டு வெளியே போயிருக்காங்க” என்றவள், “அண்ணா கார் ஓட்டும் போது பார்த்து ஓட்டு. லேட்டா கிளம்பி அவசரமா வண்டி ஓட்டிட்டுப் போகாத” எனவும்,

“எனக்கேவா” என்றான்.

“ஆமாண்ணா. அனுபவம் பேசுது. பார்த்துப் போயிட்டு வாண்ணா. நான் அப்பா கூட போறேன்” என்று அண்ணனை அனுப்பி வைத்தாள்.

விடுதியில் ஆராதனா நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார, ஆடை மாற்றி வந்த வேதவல்லி, “என்ன ஆரு கிளம்பலையா?” என கேட்க,

“எங்க?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.

“தினமும் எங்க இந்த டைம் கிளம்புவோமோ அங்க” என்று நக்கலாக சொல்லி, பின், “ட்ரெயினிங் லாஸ்ட் டைம் இது. லீவு போட முடியாது. லீவு போட்டு ட்ரெயினிங் சர்டிபிகேட்ல எதாவது கரும்புள்ளி வச்சிட்டாங்கன்னா?”

“சே... இது வேறயா. இருடி நானும் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்.”

அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததில் இருந்து, அனைவரும் தன்னையே வித்தியாசமாகப் பார்ப்பது போல் தோன்றியது. ஒரு சிலர் என்ன ஆராதனா சொல்லவே இல்ல என்று சென்றார்கள். என்ன என்று புரியாமல் விழித்தவள் கோப்பு ஒன்றை சரி செய்து வாங்க மேலாளர் அறைக்குச் செல்ல,

“என்ன ஆராதனா உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? எப்ப? எங்கிட்ட சொல்லவே இல்லை. என்னைக்கு நீங்க வேலைக்கு வர்றதுக்கு முந்தியா? இல்லையே அப்ப நாட் மேரீட்ல இருந்தது” எனக் கேட்டான்.

அவன் பேச்சில் அதிர்ந்தவள், “அப்படில்லாம் எதுவுமில்லை சார்.”

“ஓ... ஐம் சாரி. நெத்தில உள்ள பொட்டைப் பார்த்து தப்பா நினைச்சிட்டேன். இப்ப சிட்டியில வயசுப் பொண்ணுங்களுக்கு இதுவும் ஒரு பேஷனாகிப் போச்சி.” சொல்லிக் கொண்டே பைலை சரி செய்தான்.

வேகமாக தன் இருக்கையில் வந்து அமர்ந்தவள். “மை காட்! இதைக் கவனிக்காமலா வந்தேன். அதான் எல்லாரும் வி;த்தியாசமா என்னைப் பார்த்தாங்களா?” என்று தன் கையடக்கக் கண்ணாடியை எடுத்து முகம் பார்த்தாள்.

“சே... எப்படிக் கவனிக்காமல் விட்டேன். இந்த வேதா கூட சொல்லவேயில்லை. எப்படி வச்சிருக்கான் பாரு அழுத்தமா. விட்டா ஓடிருவேன்னு நினைச்சானோ என்னவோ. தேய்த்துக் கழுவினாலும் போகாது போலவே. அது ஏன்டா மச்சான், உன் மேல மட்டும் கோவமே வரமாட்டேன்னுது. நீ பண்ணின வேலைக்கு, அந்த இடத்தில் வேற யாராவதா இருந்திருந்தா, இந்நேரம் தாலியைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போயிருப்பா. இல்ல போலீஸ்ல பிடிச்சிக் குடுத்திருப்பா...”

“ம்க்கும் எங்க போலீஸ் போக? அதான் போலீஸ் படையையே காவலுக்கு வச்சி தாலி கட்டினவனாச்சே. ம்... புத்திசாலி தான். செல்வியா இருந்த என்னை, கண்மூடி முழிக்கிறதுக்குள்ள திருமதியா மாத்தின புண்ணியவானாச்சே. அடுத்து என்ன பண்றது? முதல்ல ஆபீஸ் வேலையைப் பார்க்கலாம். மற்றதை அப்புறம் பார்க்கலாம்” என்று வேலையில் இறங்கினாள்.

வேலை முடித்து வெளியே வர, சேகர் வர முடியாத சூழ்நிலையில் இருப்பதாகச் சொன்னதால், வேறு ஆட்டோவிற்காக பேருந்து நிலையத்தில் வந்து நின்றார்கள்.

“சேகர் அங்கிள் வந்திருந்தா பாதுகாப்பா இருந்திருக்கும். ம்... அவருக்கு என்ன அவசர வேலையோ.”

“ஆமாடி. நமக்கும் பாதுகாப்பா இருப்பார். அவங்களுக்கும் பாதுகாப்பா இருப்பார்” என்றாள் நக்கலாக.

“அந்த அவங்க எவங்க ஆரு?”

“ம்... புதுசா உனக்குக் கிடைச்ச அண்ணனைச் சொன்னேன்.”

“பார்றா! மரியாதையெல்லாம் தூள் பறக்குது.”

“ஆமா. பெரிய மரியாதையைக் கண்டுட்ட” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு கார் சர்ரென்று வந்து, அரை வட்டமடித்து நிற்க, காரிலிருந்து அழகுடன் பாங்காக இறங்கியவனைப் பார்த்து ஆராதனா ‘இவனா?” என்று அதிர்ந்தாள்.

வேதவல்லியோ அவனைப் பார்த்து ‘ஹாய்’ சொன்னாள்.

“ஹாய் தங்கையே” என்று சிரித்தான் சரண்.

அவனின் சிரிப்பை சில வினாடிகளேனும் ரசித்தவள். “நீங்க இங்க ஏன் வந்தீங்க?” என கேட்க,

“ஏன் நான் வந்ததுல உனக்கென்ன பிரச்சனை? நான் என் தங்கையைப் பார்க்க வந்தேன். அப்படித்தானம்மா?” என்று சிரிக்க,

“ஆமா அண்ணா. அவ மூலமா எனக்கு ஒரு அண்ணன் கிடைச்சதுல பொறாமை.”

“வள்ளீஈஈஈ...” என்று பல்லைக் கடித்தபடி அதட்டலிட, அவளருகில் வந்த சரண், அவளின் கையைப் பிடித்து உள்ளங்கையை பார்வையிட்டு, “இப்ப வலி எப்படியிருக்குமா? அவனுக்கு நீயே தான் தண்டனை கொடுக்கணுமா? ஏன் நான் இல்ல? இந்தக் கையோட எப்படி வேலை பார்த்த? இப்ப பார் கையெல்லாம்...” என்று குரல் கம்ம சொல்லிக் கொண்டிருந்தவனை, சில விநாடிகள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள், பின் சுதாரித்து கையைப் பின் இழுத்தாள்.

“எல்லாத்துக்கும் நீங்கதான காரணம். எல்லாம் உங்க ப்ளான்படி தான நடந்தது. ஏன் நீங்க நினைச்சிருந்தா நேத்தே பிடிச்சிருக்க முடியாதா?” என்றாள் கடுப்புடன்.

“சாரிமா. நான் சொன்னேன் போலீஸ்தான் ஒத்துக்கலை. அவன் மொத்த க்ரூப்பையும் பிடிக்கணும்னா, அவன் பிளான் வச்சே அவனைப் பிடிக்கணும்னு சொல்லிட்டாங்க. அதுல நான் சின்ன சின்ன சேஞ்சஸ் பண்ணினேன். அவ்வளவு தான்.”

“எவ்வளவு ஈசியா சொல்லிட்டீங்க, அவ்வளவுதான்னு. எனக்குன்னு பேரண்ட்ஸ், கூடப்பிறந்தவங்க இல்லன்னு நினைச்சீங்களா? இல்ல உங்களுக்குத் தான் யாரும் இல்லையா? என் கல்யாணம் எப்படில்லாம் நடக்கணும்னு கற்பனை செஞ்சிருந்தேன். எல்லாத்தையும் ஒரே நிமிஷத்துல காலி பண்ணிட்டீங்களே. நான் எங்க அப்பா, அம்மா முகத்துல எப்படி முழிப்பேன். எத்தனை நாள் என்னால இதை மறைக்க முடியும் சொல்லுங்க? உங்க வீட்ல போயி அப்பா எனக்கு கல்யாணமாகிருச்சி. இவதான் என் மனைவின்னு தைரியமா என்னைக் கூப்பிட்டுப் போய் நிறுத்த முடியுமா? சொல்லுங்க நிறுத்த முடியுமா?” என்றவள் குரல் உயர்ந்து வர,

மனைவியின் வார்த்தையில் இருந்த நியாயத்தில் அவளின் கோவங்கள் சரணைப் பாதிக்கவில்லை. ‘அந்த சமயத்தில் அவளைக் காப்பாத்தணும், வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு தோணிச்சி. ஆனா, இப்ப அவ கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லித்தானே ஆகணும்.’

ஆராதனாவை நேருக்கு நேராகப் பார்த்து, “நாளை மறுநாள் என் தங்கைக்கு நிச்சயதார்த்தம் இல்லாமல் இருந்திருந்தா, கூப்பிட்டுப் போயிருப்பேன். என் தங்கைக்கு அந்தக் குறை இல்லாமல் இருந்திருந்தா, இவன் இல்லன்னா இன்னொருவன்னு நினைச்சி கூப்பிட்டுப் போயிருப்பேன். உன் மனசு முழுவதும் நான் இருந்து, என்னோடவே வரணும்னு உனக்குத் தோணியிருந்தா, இப்பவும் சரி, நீ வர்றேன்னு சொல்லு நான் கூப்பிட்டுப் போறேன். எல்லார்கிட்டேயும் பேசி கன்வின்ஸ் பண்ண என்னால் முடியும். பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறவன் நானில்லை. வா போகலாம்” என்று மனைவியைக் கைபிடித்து இழுத்தான்.

அதுவரை அவன் பேச்சில் அசையாமல் நின்றிருந்தவள், அவன் இழுத்ததும் கையைத் தட்டிவிட்டு, “என்னால எங்கேயும் வர முடியாது. நான் வரமாட்டேன். ஐ... ஐ...”

“ஐ லவ் யூவா! சீக்கிரம் சொல்லுமா. எனக்கும் உன் வாயால அந்த வார்த்தையைக் கேட்கணும்னு ஆசையா இருக்கு” என்றதும், நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேதவல்லி சத்தமாகச் சிரித்துவிட்டாள்.

தோழியை முறைத்து கணவனிடம் திரும்பி, “ஐ ஹேட் யூ” என்று சொல்ல,

“தேங்க்யூ” என்றான் அவன்.

“தேங்க்யூவா?” என்று விழித்தவளிடம்,

“லவ் - ஹேட், ஆங்கிலத்தில பிரிச்சா நாலு லெட்டர்ல வருது. தமிழ்ல இரண்டு லெட்டர். பரவாயில்லை சீக்கிரம் மாறிரும்” என்று அவளருகில் கொஞ்சம் நெருக்கமாக வர,

“ஏ...ஏன் என் பக்கத்துல வர்றீங்க? தள்ளி நில்லுங்க.”

“சும்மா இருமா. நான் உன்னை எதுவும் செய்யமாட்டேன். அதுவும் நடுரோட்டுல மனைவிகிட்ட அநாகரிகமா நடக்கிற அளவுக்கு நான் முட்டாள் கிடையாது. உனக்கொரு விஷயம் தெரியுமா செல்லம். இந்த விருப்பு, வெறுப்பு ரெண்டுக்கும் உள்ள இடைவெளி கம்மிதானாமே. அது எப்ப வேணும்னாலும் மாறலாமாம். நீ இப்ப என்மேல கோபமா இருக்க. இதுவே இரண்டொரு நாள்ல விருப்பமா மாறலாம். சரி சரி முறைக்காத. இரண்டொரு மாசத்துல, அதுக்கும் முறைப்புதானா? இரண்டொரு வருஷத்துல, சரிதான் அதுவுமில்லையா? அச்சச்சோ! அப்புறம் இருபதாவது கல்யாண நாள் வந்திரும். ப்ளீஸ்! மனசை மாத்திக்கோ” என்று கெஞ்சலில் இறங்கியவன், “சரி எனக்கான ஸ்பெஷல் தண்டனை ரெடியாகிருச்சா?” என்றான்.

உள்ளூர சிரிப்பு வந்த போதும், ‘அன்னைக்கு பார்க்கில் பார்க்கும் போது, இந்தப் பூனையும் பால் குடிக்குமா ரேஞ்சில் பேசிட்டு, இன்னைக்குத் தாலி கட்டினதும், என்னமா கௌண்ட் கொடுக்குறடா மச்சான். இரு உன்னைச் சுத்தல்ல விடுறேன். ஸ்பெஷல் தண்டனையா வேணும்?’ என்று மனதினுள் நினைத்து,

“தண்டனையெல்லாம் கிடையாது. ஏன்னா நாங்க இன்னும் ஒரு வாரத்துல ட்ரெயினிங் முடிஞ்சி ஊருக்குப் போயிருவோம். அதுக்கப்புறம் இங்க வர்றதா ஐடியா இல்லை. எங்கப்பாவோட டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல உட்கார்ந்து, ஹாயா வேலை பார்க்கப் போறேன். அப்பா கல்யாணப் பேச்சை எடுக்குறதுக்கு முன்னாடி, நம்ம உறவுக்கு ஒரு என்டிங் கார்டு போடணும்” என்றாள்.

“என்டிங் கார்டுனா?” என்றவன் குரலில் வித்தியாசம் காட்ட,

“டைவர்ஸ்” என்று விளையாட்டுத்தனமாக சொல்ல, வார்த்தை முடியும் வேளையில், கன்னத்தில் கைவைத்து, ‘ஆ..’ என்றலறினாள்.

அவளை அடித்து, முகத்தை ஒற்றைக் கையால் பிடித்த காரில் சாய்த்தவன் “என்னடி பேச்சு பேசுற. வாயிருக்குன்னா என்ன வேணும்னா சொல்லுவியா? இன்னைக்கு காலையிலதான் கல்யாணம் நடந்திருக்கு… அதுக்குள்ள டைவர்ஸ் பற்றி பேசுற. நான் உனக்காகன்னு ஒவ்வொண்ணும் பார்த்துப் பார்த்துப் பண்றேன். ஏதோ பொம்மைக் கல்யாணம் மாதிரி பேசிட்டிருக்க. சாமி சந்நிதானத்துல மனப்பூர்வமா எங்கம்மா தாலியை உன் கழுத்துல கட்டியிருக்கேன். எங்கம்மா எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்குத் தெரியாது. அது உன் கழுத்துல இருக்குதுன்னா, என் அன்பு மொத்தமும் இங்க இருக்குதுன்னு அர்த்தம்” என்று அவளைக் கைகாட்டினான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
662
சிறிது இடைவெளி விட்டு, “இதுக்கு மேல உன் விருப்பம். எனக்கு மனைவின்னா எப்பவும் நீ... நீ மட்டும்தான் போடி” என்று முகத்தில் இருந்த கையை விலக்கியவன் கண்கலங்க காரினுள் சென்றமர்ந்தான். கண்ணாடியில் ஆராதனா கண்ணில் நீர் வழிய நின்றது தெரியவும், ‘சே! ஏன்டா அவசரப்பட்டு அடிக்கிற அளவுக்குப் போயிட்ட? அதுவும் திருமணமான அன்னைக்கே. பொண்ணு மேல கையை வைக்கிறது எவ்வளவு பெரிய தப்பு. மிருகமாடா நீ. எப்படி இப்படி ராட்சசனான சரண். அவள் எவ்வளவு பெரிய தப்புப் பண்ணினாலும் கை நீட்டுறது என்ன பழக்கம்? அப்படி என்ன கண்ணை மறைக்குற அளவு கோவம். அம்மாவுக்கு இது பிடிக்காதே. அச்சச்சோ! அம்மா என்னைப் பார்த்து கேள்வி கேட்டா என்னால எப்படித் தாங்க முடியும்? உடனே நான் தனுகிட்ட சாரி கேட்கணும்” என்று காரிலிருந்து இறங்கி வந்தான்.

அவள் அந்த இடத்திலேயே அசையாமல் நின்றிருப்பதைப் பார்த்து, “சாரி. சாரிமா. நீ சொன்னதும் கோவத்துல, ரியலி சாரிடா. நான் யார்கிட்டேயும் இந்த மாதிரி மரியாதைக் குறைவா நடந்துக்கிட்டதில்லை. நான் ஒரு நிமிஷம் யோசிக்க மறந்துட்டேன். ஐம் சாரி தனு. சத்தியமா இனி இது மாதிரி செய்யமாட்டேன். உனக்கு என்னை டை... டைவர்ஸ் பண்றதுதான் சந்தோஷம்னா, அ... அதை நீ தாராளமா செஞ்சிக்கலாம்” என்று சற்றுத் திணறலுடன் சொல்லி முடிக்க, அவன் கன்னத்தைப் பிடித்து நின்றிருந்தான். அந்த ‘ஆ’ என்ற சத்தம் மட்டும் அங்கு இல்லை.

“போங்க. உங்களுக்கு வேணும்னா இப்பவே போய் பண்ணிக்கோங்க. எதாவது பேசணுமேன்னு வாய் தவறி அந்த ஒரு வார்த்தை வந்திருச்சி. அடிச்சல்ல, அதோட விட வேண்டியதுதான? டைவர்ஸ் தர்றாராம். என்ன செய்யணும், கையெழுத்து போட்டுத் தரவா? ஏய்! வள்ளி அங்க நின்னு என்னத்தை வேடிக்கை பார்க்கிற. பார்த்தவரை போதும் இப்ப வர்றியா இல்லையா?” என்று தொழியயுயும் அதட்டலிட்டாள்.

“ஹேய்! என்ன விளையாடுறீங்களா ரெண்டு பேரும். ஏதோ ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப் சண்டைக்கு நடுவில் மூணாவதா நான் நுழையக் கூடாதுன்னு பார்த்தா, எனக்கேவா?” பதிலுக்கு அவளும் பாய்ந்தாள்.

சரண் கார் கதவைத் திறந்து நிற்க, அதை அறைந்து சாத்திய ஆராதனா, மறுபுறம் கதவு திறந்து உள்ளே அமர்ந்தாள். ‘சே! கட்டின புருஷனை கைநீட்டி அடிக்கிறது என்ன பழக்கம் ஆரா உனக்கு? பாட்டி மட்டும் உயிரோட இருந்திருந்தா அவ்வளவுதான். நான் பண்ற வேலைக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துருக்கும்.”

இருவரும் பின்னால் அமர, ஓட்டுனர் இருக்கைக்கு வந்தவன் கன்னத்தைப் பிடித்தபடி ‘ஷப்பா.! சரியான ரௌடி. ஆ.. ஊ..னா கைதான் நீளுது. அம்மா உங்க மருமக என்னை மன்னிச்சிட்டா’ என்றவன் கன்னத்தில் வைத்த கையை எடுக்காமல், பின்னால் திரும்பி, “செல்லம் ஏன்டா பின்னாடி உட்கார்ந்துட்ட? என் பக்கத்துல ஒரு சீட் இருக்கே. இங்க உட்கார்ந்திருக்கலாம்ல?”

கணவனை முறைத்து, ‘சே... இவங்களை அடிச்சதுக்குப் போயி பீல் பண்ணோமே’ என்று நினைத்து, “ஏன் ஒண்ணு பத்தலையா?”

“செல்லம் ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப்குள்ள இதெல்லாம் இப்ப சகஜம்டா. நான் இயேசுநாதர் மாதிரி. இப்ப எந்த கன்னத்துல அடிச்ச லெப்ட்லயா இல்ல ரைட்லயா? ஹான் ரைட்லதான். லெப்ட் இப்ப ப்ரீயாதான் இருக்கு. ஒன்ஸ்மோர் ட்ரை பண்றியா?” என்றான் வந்த புன்னகையை அடக்கி.

வந்த சிரிப்பை அடக்கப் படாதபாடு பட்டு, “இப்ப ஹாஸ்டல் கூப்பிட்டுப் போகப் போறீங்களா? இல்ல இறங்கி பஸ் பிடிச்சி போகவா?” என்று மிரட்ட,

“இதோ எடுத்துட்டேன்” என்று காரை வேகமாக எடுக்க, வேதவல்லி விழுந்து விழுந்து சிரித்தாள்.

“ஏன்மா அண்ணன் அடி வாங்குனதுல அவ்வளவு சந்தோஷமா?”

“ஹா ஹா இல்லண்ணா. என்னோட செல்ல ஆரு பல்ப் வாங்கினாளே அந்த சந்தோஷம்” என்றதும், ஆராதனா ஐந்தாறு அடிகள் அவளுக்குப் போட, “உனக்கு ப்ரண்டா இருந்து இந்த அடி கிடைக்கலன்னா தான் சந்தேகப்படணும். அப்படித்தான அண்ணா” என்று சரணை அவர்களுக்குள் அழைக்க,

“ஷ்யூர் ஷ்யூர்” என்று சிரித்தான்.

“உங்களை, போங்க” என்று வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவளுக்கு, அனைத்து பிரச்சனைகளையும் மீறி மனதில் ஒரு நிம்மதி வந்தது.

“நல்ல ஜோடி தான் போங்க” என்ற வேதாவை முறைத்துத் திரும்பும் போது சென்டர் கண்ணாடியைப் பார்க்க, சரணும் அவளைப் பார்க்க, அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவள் மனதிலோ கவிதை வரிகள்.



உன் கண்விழிப் பார்வையில்

காந்தமிருக்கிறதா என்ன?

தூரத்திலிருந்த நான்,

வேகத்தில் உனை நெருங்குகிறேன்.

நெருப்பாயிருந்த எனை

உன் மின்காந்த விழிகளால்

தண்ணீராய் மாற்றும்

விந்தை செய்தாயடா.!

உன் விழிகளுள்

விழுந்தெழ முயற்சித்தும்

முடியாமல் தவிக்கிறதென் நெஞ்சம்.

எனை மீட்கும் வழியறியாது,

மீண்டும் உன்னிடமே

சரணடைகிறேன்.

உந்தன் கண்களுக்குள்ளே!

கணவனின் பார்வையில் இருந்து பார்வையைத் திருப்ப முடியாமல் திணறியவள், தன்னை மீட்டெடுத்து, “ஆமா! இந்த பார்வைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. முதல்ல ரோட்டைப் பார்த்து ஓட்டுங்க. என்னைப் பார்த்து ஓட்டினா... இல்லை வேண்டாம். நான் எதுவும் அபசகுனமா சொல்ல, நீங்க கை வைக்க, எனக்குத் தேவையா? முதல்ல ரோட்டைப் பாருங்க சார்” என்றவள், “ஏன்டி? அண்ணன் நொண்ணன்னு கொஞ்சுற. இதைச் சொல்ல மாட்டியா? பத்தே நிமிஷத்தில் போக வேண்டிய ஹாஸ்டலுக்கு இருபது நிமிஷமாகியும் போகல” என்று திட்ட,

அப்பாவியாய் முழித்த வேதவல்லியைப் பார்த்தவன், “பாவம்தான் என் தங்கை. கொஞ்ச நேரம் மாட்டின நானே இந்த பாடுபடுறேன். கூடவே இருக்கிறவ நிலைமை. ஐயகோ!” என்று சரண் சொல்ல, அவனை செல்லமாக அடிக்க ஓங்கிய கையை இறக்கினாள்.

“பேசாம எங்க வீட்டுக்கு வந்திருமா வேதா. உனக்கு ஒரு சூப்பர் மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கேன். அவனைப் பார்த்தா சென்னை சிட்டியே அரளும்” என்றான்.

“மாப்பிள்ளை ரௌடி வேலை பார்க்கிறாரா?” என்று ஆராதனா நக்கலாக கேட்க,

“இல்லை போலீஸ்” என்ற பதில் சரணிடம் இருந்து அல்ல வேதவல்லியிடம் இருந்து வந்தது.

இருவரும் அவளை ஆச்சர்யமாகப் பார்க்க, அப்பொழுதுதான் தான் உளறியிருப்பதை உணர்ந்தாள் வேதா.

“இது எப்ப சொல்லவேயில்லை” என்று ஆச்சர்ய பாவனையில் ஆராதனா கேட்க,

“ம்... அதுவா? இன்னைக்கு அந்த போலீஸ் பார்த்த பார்வையும், பேச்சும் அப்படி” என்றாள். “அதுக்காக அடுத்த ஸ்டெப் போயிறாத ஆத்தா. என்ன நடந்தாலும், வீட்ல பார்க்கிற பையனைத்தான் மேரேஜ் பண்ணிப்பேன்.”

‘ம்.. நல்ல பெண்’ என்று சரண் மனதினுள் பாராட்ட, விடுதியும் வந்தது. அவர்களை இறக்கிவிட்டு, மனைவியை மட்டும் கூப்பிட, கொஞ்சம் பிகு செய்தாலும் அருகில் வந்தாள்.

“செல்லம் இன்னைக்கு நம்ம கல்யாணம் முடிஞ்சி முதல் நாள். இன்னைக்கு கண்டிப்பா என் நினைவு வரும். ஆனால், அதையெல்லாம் ஒதுக்கிட்டு ஹாயா தூங்கு” என்று அவள் எதிர்பாராத நேரம் அவள் கைபிடித்து அதில் இதழ் பதித்து “பை செல்லம்” என்று கிளம்பினான்.

ஒரு ஆணின் முதல் முத்தம். அவளுக்கு விவரம் தெரிந்ததில் இருந்து, அப்பாவோ, தாத்தாவோ கூட முத்தமிட்டதில்லை. ஊர் பகுதிகளில் அதற்கென்று ஒரு வரைமுறை போல். பெற்ற பெண்களே ஆனாலும், ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல் வீட்டு ஆண்கள் முத்தம் கொடுப்பதில்லை. அப்படி வளர்ந்த ஆராதனாவிற்கு, கணவனின் முத்தம் உடலில் புதுவிதமான யுத்தம் செய்ய ஆரம்பித்தது.

தோழியிடம் வந்த வேதவல்லி, “ஆரு ஆரூ” என்று உலுக்கி, “என்ன கையையே பார்த்திட்டிருக்க? ஏய்! என்னடி ஒரு மார்க்கமா நிற்கிற?” என்றாள்.

“ம்... என்ன சரண்.”

“என்னது சரணா? ஆஹா! பிடிச்சிருச்சாடி. அடிப்பாவி! நீ இவ்வளவு சீக்கிரம் மாட்ட மாட்டேன்னு நினைச்சா, ரெண்டே நிமிஷம் தனியா பேசினதுல கவுந்துட்டியேடி. சவால்லாம் விட்டியே ஆரு” என்று அங்கலாய்க்க,

அவளின் பேச்சில் முற்றிலும் தெளிந்த ஆராதனா, “என்னடி தனியா நின்னு புலம்பிட்டிருக்க? வா உள்ள போகலாம்” என்றாள் எதுவும் அறியாதவளாய்.

“நான் புலம்புறேனா? என்னைப் பார்த்து சரண்னு சொன்னியே. அது பொய்யா?”

“நான் எப்ப சொன்னேன்” பேசாம வாயை மூடிட்டு வா” என்று உள்ளே சென்றாள்.

“சே... இந்த ஹீரோயினுக்கு தோழியா இருக்கிறவங்க பாடு ரொம்ப திண்டாட்டம்பா. அவங்க சொல்றதுக்கு எல்லாம் ஜால்ரா தட்டணும். அவங்க சிரிச்சா சிரிச்சி, அழுதா ஆறுதல் சொல்லி, வெரி பேட்யா. தோழிகளே! இனிமேலாவது திருந்தி இந்த தோழி போஸ்டை தியாகம் செய்யுங்க. ஏதோ ஜனங்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லணும்னு தோணிச்சி சொல்லிட்டேன். ஆரு நில்லுடி வர்றேன்” என்று அவள் பின்னால் ஓடினாள்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top