- Joined
- Aug 31, 2024
- Messages
- 628
- Thread Author
- #1
ஓம் சரவண பவ
சொர்ணா சந்தனகுமார்
உன்னைத் தேடி தேடியே
1
சென்னை வடபழனி :
“அண்ணா... அண்ணா எழுந்திரு. என்று தட்டி எழுப்பிய தங்கையின் குரலில் எழுந்து அமர்ந்தவனிடம், காப்பியை நீட்டியபடி, "டைம் ஆகுது அண்ணா. எவ்வளவு நேரம் தூங்குவீங்க? ஒரு கம்பெனி மேனேஜரே இப்படித் தூங்கினா கம்பெனி என்ன ஆகிறது? ம்... கெட்டப் கெட்டப். அச்சோ! பார்த்துக்கிட்டே இருக்காதண்ணா. தினமும் உனக்கு இதே வேலையாகிப் போச்சி. முதல்ல சீக்கிரம் எழுந்து போயி ப்ரஸ் பண்ணிட்டு வாண்ணா. காஃபி ஆறிரப்போகுது. அப்புறம் நீ சூடா காஃபி குடிக்க முடியாது? கூலா ஜூஸ்தான் குடிக்க முடியும்.”
திரும்பவும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் முன் அண்ணனின் தோள் தொட்டு, “என்ன?” என்று சைகையால் கேட்டாள்.
நிதர்சனம் உறைக்க, கண்களில் நீர் துளிர்க்கவும், எதுவும் பேசாமல் சட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து குளியலறை சென்றான்.
சென்ற அண்ணனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் மனதின் எண்ணங்களை அறிந்து சின்னப் பெருமூச்சுடன் தோளைக் குலுக்கியபடி அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.
குளியலறை சென்றவன் தங்கையின் நிலையை எண்ணி மனம் வருந்தினாலும் எப்பொழுதும் போல் அதை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு வெளியே வந்தவன் அதைத் தன் தாயிடமும் பகிர்ந்தான். தங்கை அறையை விட்டு வெளியே சென்றிருந்ததால் காப்பியைக் கையிலெடுத்து ஒரு மிடறு குடித்தவன், “என் காப்பியை விட குட்டிமா நல்லாவே போடுறா” என்று பின் குளியல் மற்றும் இதர வேலைகளை முடித்து கீழே வந்தவன் கண்ணில் தனக்கு முன்னாடியே அலுவலகம் செல்லக் கிளம்பியிருந்த அப்பா பட்டார்.
"குட் மார்னிங்பா."
"குட் மார்னிங்டா தம்பி. என்ன கிளம்பியாச்சா? உன் தங்கச்சி எதோ கோவமா இருக்கிற மாதிரித் தெரியுது. எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லு. இல்லைன்னா எதாவது பறந்து வந்திடப் போகுது” என்றார் கேலியாகவே.
“திடீர்னு ஏன்பா. இருங்க பார்த்திட்டு வர்றேன்” என்று சமையலறையில் மதிய உணவு எடுத்து வைத்துக் கொண்டிருந்த தங்கையின் அருகில் வந்து "குட் மார்னிங் செல்லம்" என்றான்.
திரும்பி அவனை முறைத்தவள், “இது நான் காஃபி கொடுக்க வந்தப்பவே சொல்லணும். அப்பல்லாம் என் வாயையே பார்த்துட்டு இருந்து, இப்ப வந்து என்ன பேச்சி வேண்டிக் கிடக்கு. போண்ணா நீ ரொம்பவும் இமேஜின் பண்ணுற. அப்படிப் பண்ணாதன்னு சொன்னா கேட்கிறியா? நீ ரொம்ப மோசம்ணா. நடக்கிறது தான் நடக்கும். நம்மளோட கற்பனைக்காக எல்லாம் எதுவும் இயற்கைக்கு மாறா மாறிடப்போறது இல்ல" என்று சின்ன வருத்தத்துடன் தன் இயலாமையும் சேர பொரிந்து தள்ளினாள்.
“சரிடா சரி. இனி உன் முன்னாடி அப்படிப் பண்ண மாட்டேன். ஓகேவா? என்று சரணடைந்தான்.
“என் பின்னாடியும் பண்ணக் கூடாது ஓகே. நிதர்சனத்தை ஏத்துக்கோண்ணா. இதையெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தவன் நீ. நீயே அதை மறக்கலாமா?" என்றவள் குரலில் அவ்வளவு வருத்தம்.
“சரி சரி சாரி. இனி அப்படிப் பண்ணினா என்னடான்னு சட்டையைப் பிடித்து கேளு” என்று தங்கையிடம் மன்னிப்பு கேட்டு தகப்பனிடம் வந்து அமர்ந்தான்.
“அப்படி என்னடா பண்ணிட்ட அவளை? இந்த குதி... குதிக்கிறா?” என கேட்டார்.
“இப்பத்தான்ப்பா ஒரு பஞ்சாயத்து முடிச்சேன். திரும்பவுமா போதும் விடுங்க உங்க பையன் பொழைச்சிப் போகட்டும்.”
‘நான் இப்ப என்ன கேட்டுட்டேன்னு, இவன் இத்தனை சீன் போடுறான்’ என யோசனையில் இருந்தார்.
"அப்பா... அண்ணா" என்று நான்கைந்து முறை அழைத்து அலுத்துப் போனவள், அவர்களின் முன் வந்து, "நான் எத்தனை முறை கூப்பிடுறது? காது கேட்கலையா?" முகம் சிவக்க காளியாக மாறிக் கொண்டிருந்தவளை,
"ஹையோ! இல்லமா. நிஜமா கவனிக்கலைமா. நாங்க சுவாரஸ்யமா பேசிட்டு இருந்தோமா, அதனால நீ கூப்பிட்டதைக் கவனிக்கலைடா." காதைப் பிடித்துக் கொண்டு அப்பாவும், அண்ணனும் சரண்டர் ஆகினர்.
அதைப் பார்த்த பின், “அப்படி வாங்க வழிக்கு” என்று மலை இறங்கினாள் அவள்.
“சரி வாங்க. சாப்பிட்டு, சாப்பாடு எடுத்திட்டுக் கிளம்புங்க. கமான் க்விக்.” இருவரையும் விரட்டிக் கொண்டிருந்தாள் அவர்களின் செல்லப் பெண் நியா!
கடவுள் முருகன் மேலுள்ள பற்றுதலால், கோவில் அருகே வீடு வேண்டும் என்று, வடபழனி முருகன் கோவிலிலிருந்து சற்று தள்ளி இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டார் வெற்றி.
நடுத்தர வர்க்கத்தினருக்கும் மேலான குடும்பம். இவர்கள் வந்த சமயம் இடங்களின் விலையேற்றம் அதிகம் இல்லாததால், பதினைந்து சென்ட்டில் நிலம் வாங்கி இருந்தார். அதில் ஐந்து சென்ட்டில் வீடு கட்டிக் கொண்டு, மீதி இடங்களில் பழ வகை மரங்கள், காய்கறி, செடிகள், ரோஜாச் செடிகள் என வீட்டிற்கு நிறைவாக அழகாக இருக்கும் செடிகள் என கண்ணிற்கு குளிர்ச்சியாக பச்சை வர்ண ஆடை அணிந்தது போலிருக்கும் அவர்களின் வீடு. காலையில் சென்னை நகருக்குள் குயில்களின் ஓசை கேட்குமா? இதோ அழகான வடிவமைப்புடன் பறவைகளின் கீதங்களும் கேட்கும் வீடு, சென்னை நகருக்குள் இருப்பது இப்போதைய காலத்தில் அதிசயமே!
அப்பா வெற்றி! ரியல் எஸ்டேட் பிசினஸ் மேன். சென்னை வந்த புதிதில் சற்று பின் தங்கியிருந்த நில விற்பனை, நாளுக்கு நாள் சூடுபிடித்தது. மொத்தமாக இரண்டு மூன்று ஏக்கர் என விரைவில் டெவலப் ஆகும் இடமாகப் பார்த்து நிலம் வாங்குவதில் கெட்டிக்காரர். வாங்கிய இடத்தை அநியாய விலைக்குத் தள்ளாமல், நடுத்தர வர்க்கத்தினரும் வாங்கும்படி ப்ளாட் போட்டு லாபம் பார்ப்பதில் வல்லவர். மனைவி இறந்த பின் தன் பிள்ளைகளையே ஆதாரமாகக் கொண்டு வாழும் மனிதர். மனைவியின் நினைவில் தொழில் முதல் வீடு வரை, "தனலக்ஷ்மி ரியல் எஸ்டேட்" "தனலக்ஷ்மி இல்லம்" என புதிதாக ஆரம்பிக்கும் அனைத்தும் மனைவியின் பெயரில் தான் இருக்கும்.
நியா! அவரின் செல்ல மகள். இருபத்து நான்கு வயது அழகுப் பெண். சாயலில் அம்மாவின் பாதியாக இருப்பதால் அப்பாவிற்கும், அண்ணனுக்கும் செல்லம். கலாட்டாவிற்குப் பெயர் நியா. வீட்டில் மட்டும் தான். வெளியே யாரிடமும் பேச மாட்டாள். ஆண்களின் கண் பார்வையைக் கண்டு கொள்ளாமல், எப்பொழுதும் தெளிவான மனதுடன் இருப்பவள்.
பேஷன் டிசைனரிங் படித்து சொந்தமாக, "தனலக்ஷ்மி பொட்டிக்" வைத்திருக்கிறாள். தங்களின் சொந்த இடத்தில் அப்பாவின் அலுவலகம் அருகே நியாவுடைய பொட்டிக்கும் சேர்ந்திருக்கும். ஆடைகள் வடிவமைத்து, அதற்கேற்ற நகைகள் செய்து தருவது அவளின் தொழில். ஆர்டர்களின் பெயரில் வெளியிலும் செய்து கொடுப்பாள். கொஞ்சம் நடுத்தரமான ஏசி ஷாப் இவளுக்கு கீழ் மூன்று பெண்களை வைத்து பொட்டிக் நடத்துகிறாள்.
மகன் சரண்! இன்னும் நான்கு நாட்களில் இருபத்து ஒன்பதாவது பிறந்தநாள் காணப் போகும் இளைஞன். பிஇ முடித்து தனியார் ஐடி கம்பெனியில் மேனேஜர் பதவியில் இருப்பவன். யாரையும் மனம் நோக பேச மாட்டான். அவனின் பார்வையில், பேச்சில், செயலில் ஒரு நேர்மை இருக்கும். பெண்களை எல்லாம் அக்கா, தங்கை என்ற ரீதியில் பேசுவதோடு சரி. இதுவரை எந்தப் பெண்ணிடமும் அசடு வழிய நின்றதில்லை. அவனின் கம்பீரமும், அழகும், நடவடிக்கையும் பிடித்து பெண்களாக அவனிடம் சென்றாலும், திரும்பி வரும் பொழுது பாசமலர் தங்கையாகவே வருவார்கள். எதிலும் ஒரு எல்லையுடன் பழகுபவன். பார்த்தவுடன் ஒருத்தரை கணித்து விடுவான்.
அனைவரையும் கணிப்பவன் ஒருவரிடம் மட்டும் தன் கணிப்பு தப்பாக போவதை அறியவில்லை.
அப்பாவின் சாயல். அவனின் குணம் அப்படியே அவனின் அன்னையைப் போல் இருக்கும். தெளிவான பேச்சி, விவேகமான செயல்கள் என, அதனாலேயே சின்ன வயதிலேயே மேனேஜராகவும் இருக்கிறான். சரணுக்கு தாய்மேல் வெறித்தனமான அன்பு என்று சொல்லலாம். இந்த வயது வரையிலும் தாயிடம் சொல்லாமல் எதையும் செய்ய மாட்டான். மனதளவில் அவன் தாய் உயிருடன் இருக்கிறார். தாயுடன் உறவாடுவான்.. உரையாடுவான். அவன் மனதிலுள்ள பாரங்களை இறக்கி வைக்கும் இடம் அம்மா.
இதனால், அவன் அசாதாரமான நபரும் கிடையாது. எல்லோருக்கும் ஆறறிவு என்றால் இவனுக்கு மட்டும் ஏழு அறிவா என சந்தேகப்படும் அளவு புத்திசாலி. தங்கை என்றால் உயிர். தாயின் மறுபதிப்பாக நினைப்பவன். அவளுடன் இருக்கும் பொழுது அவளின் குறை தெரியாமல் பார்த்துக் கொள்வான். அவளும் இதுவரை தன் குறைகளைப் பெரிதென்று எண்ணவில்லை. படிக்கும் பொழுது எழுந்த கேலி, கிண்டல் வார்த்தைகள் அனைத்தையும் சமாளித்து அது மற்றவரின் குணக்குறை என்று விட்டு விடுவாள்.