ஓம் சரவண பவ
சொர்ணா சந்தனகுமார்
கண்ணில் ஒளி வீசுதடி
1
அழகென்ற சொல்லுக்கு முருகா!
உந்தன் அருளின்றி உலகிலே
பொருளேது முருகா!
அழகென்ற சொல்லுக்கு முருகா!
சுடராக வந்த வேல்முருகா!
கொடும் சூரரை போரிலே
வென்ற வேல்முருகா!
கனிக்காக மனம் நொந்த முருகா!
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா!
காலை வேளையில் சென்னையிலிருந்து மேல்மருவத்தூர் நோக்கி அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த சிகப்பு நிற ஸ்கார்பியோவில் கண்மூடி அமர்ந்து டி.எம் சௌந்தர்ராஜனின் கணீர் குரலில் அழகன் முருகனின் பாடலைக் கேட்டு ரசித்தபடியே வந்தாள், “சுபஸ்ரீதேவி.”
மெல்ல கண்விழித்து தன்னருகில் இறுகிய முகத்துடன் ரோட்டை வெறித்தபடி கார் ஓட்டிக் கொண்டிருக்கும் தன் வருங்காலக் கணவனாகப் போகும் ஆனந்தை பார்த்தாள். ‘பாடலுக்கு ஏற்றார்போல் அழகாகத்தான் இருக்கிறான்’ என்றே மனதில் தோன்றியது.
அவன் அழகாக இருக்கிறான் என நினைத்தவளால், ஏனோ அவனை காதலாகப் பார்க்கவோ, மனதில் நிறைக்கவோ தோன்றவில்லை. ‘ஒரு வேளை அரேஞ்ச் மேரேஜ் என்பதால் பார்த்தவுடன் பிடிக்காமல், பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்குமோ?’ நினைத்த நிமிடம் அவள் அடித்த கௌண்ட்டில் அவளுக்கே உள்ளூர சிரிப்பு கிளம்பியது. அதை அவன் கண்டுவிடக்கூடாது என்பதற்காக வெளியே வேடிக்கை பார்த்தபடி மறைத்தாள். முதல்முறையாக அவனுடன் வெளியே வருகிறாள். வருகிறாள் என்பதை விட முதல்முறையாக அவன் முகத்தையே இப்பொழுது தான் தலை நிமிர்ந்து பார்க்கிறாள்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாப்பிள்ளையுடன் தனியாக சென்று வர, பெற்றவர்கள் ஆயிரத்தெட்டு கண்டிசன்கள் போட்டு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
கோவிலுக்கு அழைக்க வந்த ஆனந்திடம் வந்த சுபாவின் தந்தை வரதராஜன், “தம்பி! கோவிலுக்குப் போகணும்னு உங்கம்மா வந்து பர்மிசன் கேட்டதாலதான் என் பொண்ணை உங்களோட அனுப்புறேன். எங்களுக்கு இது பழக்கமில்லை. கல்யாணத்துக்கு முன்னாடியே கட்டிக்கப்போற பொண்ணோட வெளியே போறது, அது கோவிலுக்கே இருந்தாலும் சரி. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு, பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க. கோவிலுக்குப் போயிட்டு வேற எங்கேயும் போகக்கூடாது. நேரே வீட்டுக்குத்தான் வர்றீங்க” என்று இப்படிதான் இருக்க வேண்டும் என்பதாக அடித்துப் பேசி, “ஆமா எதுல போறீங்க?” என்றார்.
“என்னோட ஸ்கார்பியோல தான் மாமா.”
“சரி கோவிலுக்கு போனதும் போன் பண்ணுங்க” என்று அனுப்பி வைத்தார் வரதராஜன்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த சுபாவிடம், “என்ன சுபா முதல் தடவை என்னைப் பார்க்கிற மாதிரி பார்க்கிற?” என்று பேச்சை ஆரம்பித்தான் ஆனந்த்.
அவளுக்குத்தானே தெரியும் இன்றுதான் அவன் முகத்தை இவ்வளவு அருகிலும், முழுமையாகவும் பார்க்கிறாள் என்று. ஆண்களிடம் பேசக்கூடாது.. பழகக்கூடாது என சின்ன வயதிலிருந்தே தாய், தந்தை சொல்லிக்கொடுத்து வளர்த்ததை அட்சரம் பிசகாமல் கேட்டு வளர்ந்தவள் சுபஸ்ரீதேவி. அதை இன்றுவரை கடைபிடிக்கிறாள். பெற்றவர்கள் தனக்கு நல்லது மட்டுமே செய்வார்கள் என்பதால், அவளின் உலகம் எப்பொழுதும் அவள் குடும்பத்தைச் சுற்றியே இருக்கும்.
கட்டிக்கப் போகிறவன் என்ற முறையில் ஆனந்த் அழைத்த போதிலும், முதலில் மறுத்தவள் சுபா தான். ‘நான் கல்யாணத்துக்குப் பின்னாடி போய்க்கிறேன். இப்ப வேண்டாம்மா ப்ளீஸ்மா, அண்ணா இருந்தாலாவது அவனையும் கூட்டிட்டுப் போவேன். இப்படி முன்னப்பின்ன பழக்கமில்லாத ஆணோட போகமாட்டேன்’ என்று அடம்பிடித்தவளை...
‘அவர் உன்னைக் கட்டிக்கப்போற பையன்டா தேவி. நானே இதுக்கு சம்மதிக்க மாட்டேன்தான். ஆனா, அவங்க வீட்டுப் பெரியவங்க வந்து அதுவும் கோவிலுக்குன்னு கேட்கும் போது மறுக்க முடியல செல்லம். ப்ளீஸ் அம்மாவுக்காகடா. நல்ல பையன்தான் இருந்தாலும், மனசுல ஒரு கசப்பு வந்துட்டா, கல்யாணத்துக்குப் பிறகு தொட்டதெல்லாம் தப்பாகவே முடியும். இதுக்கு முன்னாடி அம்மா இப்படிச் சொல்லியிருக்கேனா போயிட்டு வாடா செல்லம்’ என்று மகளை சம்மதிக்க வைத்தவர், மகளின் கைபிடித்து நிறுத்தி,
‘என்னதான் உறவாகப்போகிறவர்னு இருந்தாலும், நீ கொஞ்சம் விலகியே இருக்கணும் பாப்பா. எப்ப எது நடக்கும்னு தெரியாது. நிரந்தரமில்லாத வாழ்க்கைட. நாமதான் கண்ட்ரோலா இருந்துக்கணும்’ என்று பொறுப்பான தாயாய் சொல்லி அனுப்பினார் சண்முகசுந்தரி.
‘எனக்கு ஒரு மாதிரி இருக்குமா. நான் வீட்லயே இருக்கேனே. அப்பா நீங்களாவது சொல்லக்கூடாதா?’ என தந்தையை சப்போர்ட்கு அழைத்தாள்.
‘எனக்குமே வேற வழி தெரியல பாப்பா?’
‘நீங்க யாராவது என்னோட வரலாம்லபா?’
‘அடுத்த வாரம் கல்யாணம் வச்சிக்கிட்டு நாங்க ஊரைச் சுத்திக்கிட்டிருந்தா வேலைக்காகுமா பாப்பா. நீ போயிட்டு வா’ என்றதும் தரையை உதைத்து, தன் விருப்பமின்மையைக் காட்டிவிட்டு அறைக்குள் சென்றாள்.
“என்ன யோசனை சுபா? கேட்ட கேள்விக்கு பதில் வரல? இன்னைக்குள்ள வந்திருமா?” கேலியாக கேட்ட ஆனந்திற்கு,
மெல்லிய புன்னகையை வெளியிட்டு, “இல்ல நான் பர்ஸ்ட் டைம் உங்களோட, உங்களோடன்றதை விட வெளி ஆ(ள்)ண் ஒருத்தரோட வரேன். அதான் யோசனை” என்று மனதிலுள்ளதை மறைக்காமல் சொன்னாள்.
“என்னது வெளி ஆணா? நான் உன்னைக் கட்டிக்கப்போறவன் சுபா. என்னை எப்படி வெளி ஆள்னு சொல்லலாம்?” என்றான் கோவமாக.
“அ...அது கல்யாணம் முடியுறது வரை நீங்க...” என்று முடிக்காமல் வார்த்தைகளை மென்று விழுங்கியபடி, “சாரி” என்றாள்.
அவள் விழுங்கிய வார்த்தைகள் முகத்திலறைய, ஆனந்திற்கு சட்டென்று முகத்தில் கடுமை ஏறி கார் பறந்தது.
“ஹையோ! ஏன் இந்த ஸ்பீடு போறீங்க? ப்ளீஸ் கம்மி பண்ணுங்க” என்று அவள் சொல்லச் சொல்ல கேட்கவில்லை ஆனந்த்.
“உனக்கு நான் வெளி ஆளா?” என்பதிலேயே இருந்தான். முறைப்படி சுபஸ்ரீதேவியின் புகைப்படம் தெரிந்தவர் மூலமாகத்தான் வந்தது.
தாய் புகைப்படம் கையில் கொடுத்து, “பிடிச்சிருக்கா சொல்லுடா? மேற்கொண்டு பேசலாம்” என்று சொன்னார்.
போட்டோவைப் பார்த்தவன் கண்கள் அதைவிட்டு நகருவேனா என்றது. நொடி கூட தாமதிக்காமல், “இந்தப் பொண்ணு ஓகேம்மா” என்றான்.
இவர்களை விட பெண் வீட்டார் வசதியாக இருந்ததால், முதலில் யோசித்தவர் பின், அவர்கள் கொடுக்காமல் பெண்ணின் புகைப்படம் நமக்கு எப்படி வருமென்று துணிந்து மகனுக்காக பெண் கேட்டார்.
வரதராஜனுக்கு, ‘பையன் பெங்களுரில் வேலை பார்க்கிறான். பார்க்க முகலட்சணமாக இருக்கிறான். விசாரித்த வரையில் நல்ல குணம்’ என்று கேள்விப்பட்டிருந்தார். தங்களின் அளவிற்கு வசதியில்லையென்றாலும், வசதி கம்மியானவர்களும் இல்லை. மத்திய சென்னையிலும் சொந்த வீடு இருக்கிறது. அந்த இடத்தில் வீடு இருப்பவர்கள் இப்போதைய நிலைக்கு கோடீஸ்வரனே!
பெண்பார்க்க வருவதாக சொல்லாமல் பையன் வீட்டினர் திடீரென வர, அதே நாள் தோழி ஒருத்தியின் திருமணத்திற்கு அண்ணன் ப்ரேமுடன் சென்றுவிட்டிருந்தாள் சுபா.
மறுமுறை நிச்சயதார்த்தத்தின் போதும் சுபாவின் குனிந்த தலை நிமிரவில்லை. ஆனந்திற்கு ‘இவளுக்கு நம்மைப் பிடிக்கவில்லையோ?’ என்ற சந்தேகம் வந்தது. அதெல்லாம் சுபா அடுத்து தோழியுடன் பேசிய வார்த்தையில் காணாமல் போய் மனம் நிம்மதியானது.
சுபாவினருகில் வந்த அவளின் தோழி அகிலா, “ஏய் லூசு! நீ மாப்பிள்ளைப் பையன் முகத்தைப் பார்த்தியா? இல்லையா?” என்று கேட்க,
இல்லையென்று தலையசைத்த சுபா, பின் குறும்புடன் “யாரைப் பார்த்து என்ன வார்த்தை கேட்டுட்ட அகி? அதுவும் என்னைப் பார்த்து? கல்யாணத்துக்கு முன்னாடி, அந்த தப்பைப் பண்ண மாட்டேன்னு உனக்குத் தெரியாதா என்ன?”
“நெனைச்சேன் நீ இப்படித்தான் பண்ணுவேன்னு. பாருடி மாப்பிள்ளை, உன் கடைக்கண் பார்வைக்காக உன்னையே பார்த்திட்டிருக்காரு. நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்காம, நீ தலையைக் குனிஞ்சி தரையில புதையல் தேடிட்டிருக்க? நீயெல்லாம் அறுபதுகளில் பிறக்க வேண்டிய கேஸ்டி. தப்பிப்போய் தொண்ணூறுல பிறந்திட்ட” என சோகமாய் முகத்தை வைத்தபடி சொன்னாள்.
அகிலாவின் அங்கலாய்ப்பில் சிரித்தவள், “போடி நல்ல பொண்ணா வளர்றது ஒண்ணும் தப்பில்ல. எனக்கு இதான் பிடிச்சிருக்கு. அதே டைம் அப்பா, அம்மாவிற்கும் பிடிச்சிருக்கு. கல்யாணத்திற்குப் பிறகு ஃபுல் அன்ட் ஃபுல் ஹஸ்பண்டோட தான இருக்கப்போறேன். வாழ்நாள் முழுக்க அவங்க முகத்தையே பார்த்திட்டிருக்கேன் போதுமா” என்றவள் தோழியிடம், “அம்மா அடிக்கடி சொல்வாங்க அகி. தாலி கழுத்துல ஏறுறதுவரை எதுவும் நிரந்தரமில்லைமா. நாம எப்பவும் நிதானமா இருக்கணும்னு. நிறைய நியூஸ் பார்த்திருக்கேன், கேள்விப்பட்டிருக்கேன். எத்தனை கல்யாணம் மணமேடை வரை வந்து கூட நின்றிருக்கு தெரியுமா? மனசுல ஆசையை வளர்த்து எதாவது அசம்பாவிதம் நடந்து அவஸ்தைபடுறதைவிட, ஆசையை வளர்த்துக்காம இருக்கலாம்.”
“ஸோ, கல்யாணத்துக்குப் பிறகு என் ஹஸ்பண்டை எப்படிப் பார்த்துக்கணும்னு எனக்கும் தெரியும். நீ தேவையில்லாம யோசிச்சி உன் மூளையை பாய்ல் பண்ணாத. பாவம் உனக்கிருக்கிறதே இத்துனூண்டு” என்று கேலி செய்ய...
தோழியை செல்லமாக அடித்து, “ஏதோ கல்யாணப் பொண்ணுன்றதால உன்னை விடுறேன். இல்ல?”
“இல்லன்னா என்னடி பண்ணுவ?”
“ம்... என்ன பண்ணுவேனா! இருடி டெமோ காண்பிக்கிறேன்” என்று சுபாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் அகிலா.
“ச்சீ... லூசு எல்லாருக்கும் முன்னாடி” என்று கன்னத்தைத் துடைத்தவள் முகச்சிவப்பை பார்த்த ஆனந்த் மயங்கித்தான் போனான். அத்துடன் அவனின் சந்தேகமும் தீர்ந்தது. ஷப்பா... வேற எதுவும் ப்ராப்ளம் இல்ல. கொஞ்சம் ஓல்ட் டைப். அதுக்காக முகம் கூடவா பார்க்கக்கூடாது.’
திருமணத்திற்கு முன் சுபாவுடன் தனியாக சந்திக்க சந்தர்ப்பம் ஒன்று கிடைக்குமா? என்று நினைத்த ஆனந்திற்கு கிடைக்காது என்றே தோன்றியது. ‘ம்கூம்... இது வேலைக்காகாது’ என்று தாயிடம் சென்று அவரைப் பேசிப்பேசியே கரைத்து, சம்பந்திகளிடமும் பேசவைத்து தனியே செல்ல ஒரு வழியாக அனுமதி வாங்கினான். மகனிடமும் சம்மதம் கேட்ட பின்னரே அனுமதியளித்தார் வரதராஜன்.
சுபாவைத் தன்னுடன் அனுப்புவதற்கு அவர் கொடுத்த ஆயிரத்தெட்டு அறிவுரையில் காதில் ரெத்தம் வராத குறைதான். ‘கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படின்னா.. கல்யாணத்துக்குப் பிறகு’ என விழித்தான்.
அவனுக்குத் தெரியவில்லை? திருமணத்திற்குப் பின் மாப்பிள்ளைகளை மாமனார் என்றும் எதிர்த்துப் பேசியதில்லை. மாறாக, இன்னும் மதிப்புடன் நடத்துவார்கள் என்று.
“மாமா நான் பத்திரமா கூட்டிட்டு வர்றேன்” என்றே அழைத்துச் சென்றான் தன் சொல்லை காப்பாற்ற முடியாமல் போகப்போவதை அறியாமல் போனானோ!
ஒரு வழியாக அனைவரும் சம்மதித்து, சுபாவைப் பார்த்தவன் கண்களைத் திருப்ப முடியாமல், அவளையே பார்த்துக்கொண்டு “போகலாமா?” என்றழைத்தான்.
சம்மதமாகத் தலையசைத்து, பின் சீட்டில் வந்தமர ஆனந்தின் முகம் ப்யூஸ் போன பல்பானது. ‘அடிப்பாவி, உனக்காக என்னென்ன காரணமெல்லாம் கண்டுபிடிச்சி, எல்லாரோட கால்ல, கையிலயும் விழாத குறையா கேட்டு உன்னைத் தனியா கூட்டிட்டுப் போறேன், இப்படிப் பின்னாடி போய் உட்கார்றாளே. உனக்குத் தேவைதான்டா ஆனந்த்’ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டான்.