• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
May 1, 2025
Messages
13
🩶 தூரம் வேண்டாம் தங்கமே!

தூரம் 08


அன்றைய விடியல் மிக மகிழ்வோடு‌ ஆரம்பித்தது, அனுபமாவுக்கு. தான் கர்ப்பமாக இருக்கும் விடயத்தை வீட்டாரிடம் சொல்ல வேண்டும் என நினைத்தவளின் கரம் தன் வயிற்றில் பதிந்தது.

மென்மையாக வயிற்றை வருடிக் கொடுக்க, தேகம் சிலிர்த்துப் போனது. எத்தனை இதமான உணர்வு அது? தாய்மையின் துவக்கம் அவளை இனிமையாய் ஆக்கிரமித்தது.

காலைக்கடன்களை முடித்து விட்டு உடை மாற்றி வந்தவள், முதலில் தன் அன்னைக்கு அழைப்பு விடுக்க, அவரோ அழைப்பை ஏற்கவில்லை.

கணவனின் முகம் கண்முன் வந்து செல்ல, அவனை மறந்து விட்டோமே என நினைத்தவளாய் தன்னவனுக்கு அழைத்தாள். அவன் வேறொரு அழைப்பில் இருப்பதாகக் காட்ட, கடுப்பானது அவளுக்கு.

"நான் கால் எடுக்கிற நேரம்னு தெரியும் தானே? இந்த நேரம் யார் கூட பேசிட்டு இருப்பார்? வரட்டும். வந்ததும் நல்லா நாலு கேள்வி கேக்கணும்" என வாய் விட்டே புலம்பியவளுக்கு மண்டை சூடானது.

குட்டி போட்ட பூனை போல் குறுக்கும் மறுக்கும் நடந்தாள், நங்கை. மீண்டும் அழைத்த போதும் அவன் வேறு அழைப்பில் இருந்ததால் அலைபேசியைத் தூக்கி கட்டிலில் போட்டாள்.

"இது இருந்தா தானே இவ்ளோ டென்ஷன்? என் ஞாபகம் வந்தா கூப்பிடட்டும்" புசு புசுவென மூச்சுகளை விட்டவள், அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியில் செல்ல, அவள் விழிகளோ அகல விரிந்தன.

அவளின் குடும்பத்தினர் அங்கு நின்றனர். அவளது தந்தை பழக்கூடை ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார்.

"என்னப்பா இந்த நேரத்துல?" தந்தையைக் கண்டவளுக்கு முகம் மலர்ந்தது.

"என் பொண்ண பாக்க நேரம் காலம் வேணுமா?" என அவள் தலையை வருடிக் கொடுக்க, "இப்போ தான் உன்னை பெத்து கையில தூக்கின மாதிரி இருக்கு. அதுக்குள்ள நீ அம்மாவாகிட்ட" மங்களம் அவளை அணைத்து உச்சி முகர்ந்தார்.

"ம்மா" தாயை ஆச்சரியமாகப் பார்த்தவளுக்கு இந்த விடயம் எப்படி அவருக்குத் தெரிந்தது என்ற சிந்தனை.

"இவன் தான் சொன்னான் அனு" கையில் இருந்த அலைபேசியைத் திருப்பிக் காண்பித்தார் சீதா.

"ஹாய் அம்மு" இரு கைகளையும் அசைத்துச் சிரித்தான், கதிர்.

"நீங்களா?" கணவனைக் கண்டவளின் விழிகள் இரவு நேரத்து விண்மீன்கள் போன்று ஜொலிக்கத் துவங்கின.

"நானே தான். எப்படி சர்ப்ரைஸ்?" என்று அவன் கண் சிமிட்ட, "இதுக்காக தான் என்னோட கால் ஆன்ஸ்வர் பண்ணலயா?" எனக் கேட்டாள், அவள்.

"மாமா தான் அக்காவோட எக்ஸ்பிரஷன பாக்கனும்னு சொல்லி வீடியோ கால் பண்ண சொன்னாங்க. எங்களை பாத்ததும் நீ சந்தோஷப்பட்ட தானேக்கா?" என அகல்யா கேட்க, "ம்ம்ம்" தலையை அசைத்தவளுக்கு கணவன் மீது காதல் பெருகியது.

"நாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு கிஃப்ட் தர்றோம்" அனைவரும் பெரிய ஃபோட்டோ ஃப்ரேம் ஒன்றைப் பரிசளித்தனர்.

அதில் ஒரு தாய் தன் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவது போல் இருக்க, "வாவ்" மகிழ்வில் பூரித்துப் போனவளுக்கு தாய்மை சுரந்தது.

தன்னவளின் முகத்தில் தெரியும் அப்பட்டமான ஆனந்தத்தை விழித்திரைக்குள் சேமித்து இன்பம் கொண்டான், அனுபமாவின் காதல் கண்ணாளன்.

"மாப்பிள்ளை காலையில் விஷயத்தை சொல்லிட்டார். எங்களுக்கு கால் தரையில் படல. ஓடி வந்துட்டோம்" என்று சொன்ன தாயைப் பார்த்தவளுக்கு அவர் புதிதாய்த் தெரிந்தார்.

தாய்மையை உணரும் நொடிகள் அவளுக்கு தன் தாயை நினைவுறுத்தினவே. தன்னைச் சுமக்கும் போது அவரும் இப்படித் தான் இருந்திருப்பாரோ, தன் தந்தையும் இவ்வாறு தான் கதிரைப் போன்று மகிழ்ந்திருப்பாரோ என்றவாறு அவளது கற்பனைச் சிறகுகள் படபடத்தன.

"நீங்க எல்லாரும் வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னிக்கு முழுக்க இங்க தான் இருக்கனும்" என்றாள், அனு.

"வேலை விஷயமா வெளியே போகலாம்னு நெனச்சேன்" என்ற தந்தையைப் பாவமாகப் பார்க்க, அவரும் மகளின் பேச்சுக்கு இணங்கி விட்டார்.

அனுபமாவின் அன்றைய நாள் மிக மகிழ்வாகவே சென்றது. தங்கையுடன் கதைத்து மகிழ்ந்தாள். தாயின் அறிவுரைகளும், தந்தையின் அன்பான கட்டளைகளும் அவளை ஆனந்தத்தின் ஆழ்ந்து போக வைத்தன.

மாமியாரும் கூட அவ்வளவு அக்கறையோடு கவனித்துக் கொண்டார். வழமையிலும் காட்டிய அதிகமான கரிசனை அவளுக்கு இதமாகத்தான் இருந்தது.

அத்தனைக்கும் காரணமான கதிரை அவள் மனம் அடிக்கடி நினைவு கூர்ந்தது‌. அவனோடு இன்று காலையில் பேசாத வருத்தம் அவளுக்கு இருக்கத் தான் செய்தது.

என்ன தான் மற்றவரோடு, பெற்றவரோடு அன்பாகப் பேசக் கிடைத்தாலும் கூட, அவளின் மனம் தன்னவனுக்காக, அவளோடு செலவிடும் நேரத்திற்காக ஏங்கியது. இது தான் அன்பின் இயல்பு. என்ன தான் எம்மைச் சுற்றி அன்பு காட்டும் உறவுகள் அதிகமாக இருந்தாலும், நாம் நேசிக்கும் உறவையே நம் மனம் நாடிச் செல்லும்.

எப்போது இரவு வரும் என்ற யோசனையோடு காத்திருக்க, இரவும் ஓடோடி வந்தது. அன்புக் கணவனுக்காக அவள் காத்திருக்க, இதோ அவனும் வந்து விட்டான். எடுத்த மாத்திரத்திலேயே அவனைக் காதல் சுமந்த கண்களால் களவாடி நின்றாள், அனுபமா.

"அம்மு" அன்பு கனியும் அவனது குரல் அவளின் ஆழ் மனதினுள் ஊடுறுவிச் சென்று, ஒவ்வொரு அணுக்களையும் புத்துணர்ச்சியில் ஆழ்த்தியது.

"திரும்ப கூப்பிடுங்க" தேன் சிந்தும் குரலில் அவள் கூற, "அம்மு! அம்மு! அம்மு!" என்று அழைக்க உருகிப் போனாள், மனைவி.

"ஓய் என்ன? என் அம்முக் குட்டிக்கு என்னாச்சு? சந்தோஷமா?" என்று அவன் கேட்க, இரண்டு கைகளையும் முழுதாக விரித்து "ரொம்ம்ம்ம்ப" என்றாள், கண்களை மூடித் திறந்து.

"அடடா! என்னோட குழந்தை" என்றவனுக்கு அவளின் பட்டுக் கன்னங்களைப் பிடித்து ஆட்டி கொஞ்சித் தீர்க்க வேண்டும் போல் இருந்தது.

"என்ன?" அவள் ராகம் இசைத்தவள் சட்டென இளகி "என் கிட்ட வந்துடுங்களேன்" எனக் கூறுகையில் அக்குரலில் ஏக்கம் சரிசமமாக கலந்திருந்தது.

"ஏன்ம்மு திடீர்னு?" என்று அவன் வினவ, "தெரியலங்க. ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன். அம்மா, அப்பா, தங்கச்சி, அத்தைனு ஃபேமிலி எல்லார் கூடவும் அளவுக்கு மீறி சந்தோஷமா இருந்தாலும் என் மனசு உங்கள தான் தேடுது. என்ன இருந்தாலும் நீங்க பக்கத்துல இருக்குற மாதிரி வராதுல்ல?

எனக்கு உங்க தோள்ல சாஞ்சுக்கணும் போல இருக்கு. என் சந்தோஷத்தை உங்களோட பரிமாறிக்கணும். அதுவும் பக்கத்துல இருந்து உங்க முகத்தை நான் பாக்கணும். இந்த சந்தோஷமான நேரத்துல உங்க கைய கெட்டியா பிடிச்சுக்கனும்.

கவலையா இருந்தா மட்டும் இல்லங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தாலும் கூட என் மனசு உங்கள எதிர்பார்க்குது" என்று சொன்னவள், அவன் முகத்தில் ஏக்கம் படர்வது கண்டு "பேபி கிட்ட பேசுறீங்களா?" என்று கேட்க, நொடியில் முகம் மலர்ந்து போனான், கதிர்.

"பேசலாமா?" என்று அவன் ஆச்சரியமாகப் பார்க்க, "வாய் இருக்குல்ல. பேசலாம்" என்றவள் அலைபேசியைத் தன் வயிற்றருகே வைக்க, அவனுக்கு உடல் சிலிர்த்தது. அருகில் இல்லாத போதும் தன்னுள் ஏதோவொரு மாற்றம் ஏற்படுவதை அவனால் உணர முடிந்தது.

அவனது முகத்தில் தெரிந்த உணர்ச்சிக் கலவைகளை இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள், இனியவள்.

"பாப்பா! நான் யாருன்னு தெரியுமா? நான் தான் உங்க அப்பா. நான் பக்கத்துல இல்லையேனு கோபப்படாதீங்க. அம்மாவ நல்லபடியா பார்த்துக்கங்க. அப்பா இல்லாத குறைய அம்மா தீர்த்து வெப்பாங்க. அப்பா வந்ததும் நாம ஜாலியா விளையாடலாம். அதுவரை அம்மாவுக்கு கஷ்டம் கொடுக்காம சமத்தா இருக்கணும். அப்பா சீக்கிரமே உங்கள பாக்க வந்துடுறேன். சரியா?" எனும் போது அவன் குரல் கரகரத்தது.

"தங்கம்" என்று அனு அழைக்க, நெடிய மூச்சொன்றை வெளியேற்றி நொடிப் பொழுதில் தன்னை சரிப்படுத்திக் கொண்டான், அவன்.

"என்னங்க?"

"சினிமால எல்லாம் பாத்திருக்கேன் அம்மு. வைஃப் ப்ரெக்னன்டா இருக்கும் போது ஹஸ்பண்ட் அழகா குனிஞ்சு நின்னு குழந்தையோட பேசுவான். வயித்துல கையை வெச்சு ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க. அந்த மனைவியும் சந்தோஷமா ஹஸ்பண்டை பார்ப்பா. ஆனா அந்த தருணங்கள் நம்ம வாழ்க்கையில் இல்லல்ல? அது நெனவு வரவும் கொஞ்சம் அப்சட் ஆகிட்டேன். இப்போ ஓகே" என அவன் புன்னகைக்க,

"எல்லா தருணங்களும் எல்லார் வாழ்க்கையிலும் நடந்து விடாது. நாம எதிர்பார்க்குறது ஒன்னு, ஆனா நம்ம வாழ்க்கை நமக்காக வெச்சிருக்கிறது வேறொன்னா இருக்கலாம். அதுக்காக அத நெனச்சு கவலைப்படுறதால எதுவும் மாறப் போறதில்ல தானே?" என்றாள், அவள்.

"அது உண்ம தான். ஆனா சில நேரங்கள்ல யோசனை வருது. நமக்கு ஏன் இப்படி? முதல் குழந்தையை நீ சுமக்குற. ஆனா உன் கூட நான் இல்ல. இந்த அழகான நிமிஷங்கள சேர்ந்து அனுபவிக்கிற நெலம இல்ல. அதெல்லாம் திரும்ப வரப் போறதும் இல்ல"

"என்ன பண்ணுறது? சில விஷயங்கள் இப்படித் தான். ஒரு எக்ஸாம் இருக்குனு வெச்சுக்கங்க. எந்த பிரச்சினையும் இல்லாம நல்லபடியா வந்து எக்ஸாம் செய்யுற ஒருத்தரும் இருப்பார். நோயோட வந்து சிரமப்படுற ஒருத்தரும் இருப்பார். வீட்டுல விசேஷத்த வெச்சுட்டு வந்து பரபரப்பா எழுதுற ஒருத்தரும் இருப்பார். தாத்தா இறந்து போன துக்கத்தை தாங்கிக்கிட்டு அவரோட இறுதிக்காரியத்துக்கு போகனுங்கிற தவிப்போட வந்த ஒருத்தரும் இருப்பார்.

நமக்கு ஏன் இப்படினு யாரும் அந்த நேரத்துல யோசிக்க முடியாது. எக்ஸாம் பண்ணலனா தன் இலட்சியத்தை அடைய முடியாதுன்னு இருக்கிற பட்சத்தில் எந்த சூழ்நிலையா இருந்தாலும் ஏத்துக்க தான் வேணும். யோசிச்சு கவலைப்படுறதால எதுவும் நடக்காது இல்லையா?" என்று அவள் சொல்ல, அவனும் சற்றே தெளிவுற்றான்.

"எனக்கு எல்லாமே புரியுதும்மு. இருந்தாலும் சில சமயம் ஏதாவது யோசனை வந்து எமோஷனல் ஆகிடுறேன். இப்படி ஏன் ஆச்சுனு யோசிச்சு கவலைப்படாம இருக்கிற சூழ்நிலையை சந்தோஷமா கையாளப் பாப்போம்" என்றவனது முகம் களங்கமற்ற முழு நிலவாக விகசித்தது.

"என் தங்கம்" அவனைப் பார்த்துப் புன்னகைக்க, "நாங்க ரெண்டு பேரும் நல்ல ஜோடில்ல? ஒரு டைம் நீ அப்செட் ஆகுற. நீ தெளிவா இருந்தா நான் இப்படியாகிடுறேன்" என்றான்.

"அதுல என்ன இருக்கு? நீங்க அப்சட்டானா நான் சமாதானப்படுத்தனும். என்னை நீங்க சரி பண்ணுவீங்க. ஒருத்தர் உடையும் போது இன்னொருத்தர் தோள் கொடுத்து ஃபிக்ஸ் பண்ணுற மாதிரி இருந்தா போதும். வாழ்க்க சந்தோஷமா இருக்கும்" என்று சொல்ல,

"என் அழகி! எம்புட்டு அழகா, தெளிவா பேசுறா பாரேன்" அவன் நெட்டி முறிக்க, அவள் முறுவலித்தாள்.

"பின்ன? கதிர் பொண்டாட்டின்னா சும்மாவா?" என்று கேட்டவள் அவனுக்குத் திரையில் முத்தமிட, அதே சமயம் அ
வனும் முத்தம் வழங்க வர, இதழ்கள் இதமாய் இணைந்து மீண்டன.


தூரம் தொடரும்.......!!


ஷம்லா பஸ்லி
2025-06-10
 
Top