Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 263
- Thread Author
- #1
மொட்டு வெடித்தது!
தடாகத்தில் ஒரு அழகிய தாமரை மொட்டு தண்ணீருக்கு மேல் தலை தூக்கி நின்றது. அதன் குவிந்த இதழ்களுக்குள்ளே நறுமணம் ததும்பிக் கொண்டிருந்தது. இரவெல்லாம் அந்த நறுமணம் வெளியில் வருவதற்கு முயன்று நாலாபுறமும் மோதிப் பார்த்தும் வெளியில் வரமுடியாதபடியால் உள்ளுக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்தது. தாமரை மொட்டுக்கும் அது மிக்க வேதனையளித்தது.
உதய நேரத்தில் நறுமணத்தின் குமுறலும் மோதலும் அதிகமாயின. திடீரென்று கீழ் வானத்தில் ஒரு ஜோதி தோன்றியது. உதயசூரியனின் அமுதனைய கிரணங்கள் தடாகக் கரையில் இருந்த விருக்ஷங்களின் இடையே நுழைந்து வந்து தாமரை மொட்டைத் தொட்டன. அந்த இனிய ஸ்பரிசத்தினால் மொட்டு சிலிர்த்தது. இதழ்கள் விரிந்தன. இரவெல்லாம் உள்ளே விம்மிக் கொண்டிருந்த நறுமணம் விடுதலையடைந்து தடாகத்தையும் தடாகக் கரையையும் வானவெளியையும் நிறைத்தது.
அவ்விதமே, சிவகாமியின் இதயமாகிய தாமரை மொட்டுக்குள்ளே இத்தனை நாளும் விம்மிக் குமுறிக் கொண்டிருந்த எண்ணங்களும் உணர்ச்சிகளும் மாமல்லரிடம் தனியாகப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்ததும், கரையை உடைத்துக் கொண்ட ஏரி வெள்ளத்தைப் போலப் பிரவாகமாய்ப் பெருகின. மாமல்லர் முதன் முதலில் அரண்ய வீட்டுக்கு வந்ததைக் குறிப்பிட்டபோதுதான் சிவகாமியின் வார்த்தைப் பிரவாகம் சிறிது தடைப்பட்டது.
அப்போது கிடைத்த சந்தர்ப்பத்தை மாமல்லர் பயன்படுத்திக் கொண்டு கூறினார்: "ஆம்! எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது. நானும் சக்கரவர்த்தியும் முதன் முதலில் உங்கள் அரண்ய வீட்டுக்கு வந்தபோது, உன் தந்தையின் தெய்வச் சிலைகளுக்கு மத்தியிலே நீ நடனமாடிக் கொண்டிருந்தாய். ஆயனர் ஸ்வரக்கோவை பாடிக் கொண்டும், தாளம் போட்டுக் கொண்டும் இருந்தார். எங்களைக் கண்டதும் ஆயனர் பாட்டையும் தாளத்தையும் நிறுத்தினார். நீயும் ஆட்டத்தை நிறுத்தினாய். உன்னுடைய விரிந்த கண்கள் இன்னும் மலருமாறு விழித்து எங்களை நோக்கினாய். என் தந்தை 'நிறுத்த வேண்டாம்; ஆட்டம் நடக்கட்டும்!' என்று வற்புறுத்தினார். அதன் மேல் ஆயனர் பாடத் தொடங்க, நீயும் ஆடத் தொடங்கினாய்! ஆட்டம் முடிந்ததும் நான் பலமாகக் கரகோஷம் செய்தேன். நீ மகிழ்ச்சி ததும்பிய கண்களினால் என்னை ஏறிட்டுப் பார்த்தாய். அந்தப் பார்வையில் நாணம் என்பது அணுவளவும் இருக்கவில்லை..."
"பிரபு! தாங்கள் கூறியதெல்லாம் உண்மைதான். அப்போது நான் பன்னிரண்டு பிராயத்துப் பெண். உலகம் அறியாதவளாயிருந்தேன். தாங்கள் வானத்தில் ஜோதி மயமாய்ப் பிரகாசிக்கும் சூரியன் என்பதையும், நான் கேவலம் பூமியில் புல் நுனியில் நிற்கும் அற்பப் பனித்துளி என்பதையும் அறியாதவளாயிருந்தேன். ஆகையினால், தங்களை ஏறிட்டுப் பார்க்கச் சிறிதும் தயக்கமடையவில்லை. சூரியனை ஏறிட்டுப் பார்க்கத் துணியும் கண்கள் கூடிய சீக்கிரத்தில் கூசிக் குனிய நேரிடுமென்று அறியாமல் போனேன்!..."
"சிவகாமி! நான் சூரியனுமல்ல; நீ பனித்துளியுமல்ல. நீ தீபச்சுடர்; நான் அதைச் சுற்றிச் சுற்றி வரும் விட்டில்!.."
"பிரபு! நான் சொல்ல ஆரம்பித்ததை விட்டு வேறு விஷயத்துக்குப் போனது தவறுதான் மன்னியுங்கள். நான் ஆடி நிறுத்தியதும் நீங்கள் கரகோஷம் செய்தீர்கள், எனக்கு அப்போது உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை. உங்கள் தந்தை உங்களைப் பார்த்து, 'சிவகாமியோடு சற்று நேரம் விளையாடிக் கொண்டிரு! ஆயனரோடு பேசியான பிறகு உன்னைக் கூப்பிடுகிறேன்' என்றார். நீங்கள் என் அருகில் வந்தீர்கள். இருவரும் கைகோத்துக் கொண்டு காட்டுக்குள்ளே குதித்தோடினோம்."
"காட்டிலே நான் பார்த்து வைத்திருந்த அழகான இடங்களையும் செடி கொடிகளையும் காட்டியான பிறகு தங்களை வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்று நான் வளர்த்து வந்த கிளிகளையும் புறாக்களையும் காட்டினேன். பிறகு என் தந்தை செய்து வைத்திருந்த சிலைகளைக் காட்டத் தொடங்கினேன். நடன வடிவச் சிலைகளைப் பார்க்கும் போது தாங்கள், 'நானும் நடனக் கலை பயில விரும்புகிறேன்' என்றீர்கள். அந்தச் சிலைகளில் ஒன்றைப்போல் அபிநயத் தோற்றத்தில் நின்றீர்கள். அதைப் பார்த்துவிட்டு நான் கலீரென்று சிரித்தேன். 'குழந்தைகள் அதற்குள்ளே வெகு சிநேகமாகி விட்டார்களே!' என்று நம் தந்தைமார் பேசிக் கொண்டார்கள்.
"அன்றுமுதல் தங்களுடைய வருகையை நான் ஆவலுடன் எதிர்பார்க்கலானேன். குதிரையின் சத்தமோ ரதத்தின் சத்தமோ கேட்கும் போதெல்லாம் தாங்கள்தான் வந்து விட்டீர்கள் என்று என் உள்ளம் துள்ளி மகிழ்ந்தது. உதய சூரியனையும் பூரண சந்திரனையும், வண்ண மலர்களையும், பாடும் பறவைகளையும், பறக்கும் பட்டுப் பூச்சிகளையும் பார்க்கும்போது எனக்குண்டான குதூகலம் தங்களைப் பார்க்கும்போது உண்டாயிற்று. ஆனால் சூரிய சந்திரர்களிடமும், புஷ்பங்கள் பட்சிகளிடமும் பேச முடியாது. தங்களிடம் பேசுவது சாத்தியமாயிருந்தபடியால், தங்களைக் கண்டதும் பேச ஆரம்பித்தவள் மூச்சுவிடாமல் பேசிக் கொண்டேயிருப்பேன்..."
"உண்மைதான், சிவகாமி! அந்த நாளில் உன்னைப் பார்க்கும்போது, உன் தந்தையின் அற்புதச் சிலைகளில் ஒன்றைப் பார்ப்பது போன்ற மகிழ்ச்சி எனக்கும் உண்டாகும். ஆனால் சிலை பேசாது; நீயோ ஓயாமல் பேசுவாய். பறவைகளின் குரல் ஒலிகளில் எவ்வளவு பொருள் உண்டோ , அவ்வளவு பொருள்தான் உன் பேச்சுக்களிலும் இருப்பதாக எனக்குத் தோன்றும். ஒன்றும் புரியாவிட்டாலும் நெடுநேரம் கேட்டுக் கொண்டிருப்பேன்..."
"என் பேச்சைப் போலவேதான் நமது சிநேகமும் அப்போது அர்த்தமற்றதாயிருந்தது. கொஞ்ச நாளைக்கெல்லாம், தாங்கள் சக்கரவர்த்தியுடன் தேச யாத்திரை சென்றீர்கள். அப்புறம் மூன்று வருஷ காலம் அரண்ய வீட்டுக்கு நீங்கள் வரவில்லை. மறுபடியும் எப்போதுமே தங்களைப் பார்க்கமாட்டோ மோ என்ற ஏக்கம் எனக்குச் சிற்சில சமயம் உண்டாகும். இல்லை, தாங்கள் எப்படியும் ஒருநாள் வருவீர்கள் என்று தைரியம் அடைவேன். தாங்கள் வருவதற்குள்ளே நடனக் கலையிலே சிறந்த தேர்ச்சியடைந்துவிடவேண்டுமென்றும், தாங்கள் திரும்பி வந்ததும் அற்புதமாய் ஆட்டம் ஆடித் தங்களைத் திகைக்கச் செய்ய வேண்டுமென்றும் எண்ணுவேன். தாங்கள் மீண்டும் வரும்போது தங்களுடைய உருவம் எப்படியிருக்குமென்று கற்பனை செய்து பார்க்க அடிக்கடி முயல்வேன். ஆனால் மனத்தில் உருவம் எதுவுமே வராது.... கடைசியாக ஒருநாள் தாங்களே வந்துவிட்டீர்கள்! முற்றும் புதிய மனிதராய் வந்தீர்கள்..."
"நீயும் வெகுவாக மாறிப் போயிருந்தாய், சிவகாமி! உருவத்திலும் மாறியிருந்தாய்; குணத்திலும் மாறியிருந்தாய். நான் எதிர்பார்த்ததுபோல் என்னைக் கண்டதும் நீ ஓடிவந்து என் கரங்களைப் பற்றி வீட்டுக்குள் அழைத்துப் போகவில்லை. தூண் மறைவிலே நாணத்துடன் நின்று கடைக்கண்ணால் என்னைப் பார்த்தாய். 'கலகல' என்று சிரிப்பதற்கு மாறாகப் புன்முறுவல் செய்தாய்! அந்தக் கடைக்கண் பாணமும் கள்ளப் புன்னகையும் என்னைக் கொன்றன."
"ஓடிவந்து முகமன் கூறி உங்களை வரவேற்க முடியாமல் ஏதோ ஒன்று என்னைத் தடைசெய்தது. முன்னால் வரலாமென்றால் கால் எழவில்லை. ஏதாவது பேசலாமென்றால் நா எழவில்லை. நின்ற இடத்திலேயே நின்றேன். என்னை நானே, 'சிவகாமி! உனக்கு என்ன வந்துவிட்டது?' என்று கேட்டுக் கொண்டேன். அதே சமயத்தில் அப்பாவும், 'சிவகாமி! ஏன் தூண் மறைவில் நிற்கிறாய்? வந்து சக்கரவர்த்திக்கு நமஸ்காரம் செய்! பல்லவ குமாரரைப் பார்! எப்படி ஆஜானுபாகுவாய் வளர்ந்திருக்கிறார்?' என்றார். நான் தயக்கத்துடன் வந்து நமஸ்காரம் செய்தேன். அப்போது சக்கரவர்த்தி, 'ஆயனரே! சிவகாமியும் வளர்ந்து போயிருக்கிறாள்! முதலில் எனக்கு அடையாளமே தெரியவில்லை . கற்சிலை செய்வதோடு நீர் தங்கச் சிலையும் செய்ய ஆரம்பித்துவிட்டீரோ என்று நினைத்தேன்' என்றார். இதனால் என்னுடைய நாணம் இன்னும் அதிகமாகிவிட்டது. சற்று நேரம் பேசாமல் நின்றுவிட்டு அப்புறம் வீட்டிலிருந்து நழுவிக் காட்டுக்குள்ளே சென்றேன். தாமரைக் குளக்கரையில் உட்கார்ந்து எனக்கு என்ன வந்துவிட்டது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்."
"சற்று நேரத்துக்கெல்லாம் என் பின்னால் மிருதுவான காலடிச் சத்தம் கேட்டது. ஆனால் நான் திரும்பிப் பார்க்கவில்லை. தாங்கள் வந்து என் கண்களைப் பொத்தினீர்கள். மூன்று வருஷத்துக்கு முன்னால் இப்படிக் கண்களைப் பொத்தும் போது நான் உங்கள் பெயரைச் சொல்லிக் 'கலகல' என்று சிரித்துக் கைகளைத் தள்ளி விட்டுத் திரும்பிப் பார்ப்பேன். இப்போது தங்களுடைய கரங்கள் என் கண்களை மூடியபோது, என் தேகம் செயலற்று ஸ்தம்பித்தது. என் உள்ளத்திலோ ஆயிரக்கணக்கான அலைகள் எழுந்து விழுந்து அல்லோலகல்லோலம் செய்தன."
"பிறகு நீங்கள் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து என் கையை உங்கள் கையோடு சேர்த்துக் கொண்டீர்கள். நான் செயலற்றுச் சும்மா இருந்தேன். 'சிவகாமி! என் பேரில் கோபமா?' என்றீர்கள். நான் மௌனமாய் உங்களைப் பார்த்தேன். 'ஆமாம் கோபம் தான் போலிருக்கிறது!' என்று கூறி, தங்களுடைய யாத்திரையைப் பற்றி ஏதேதோ சொல்லிக் கொண்டே போனீர்கள். ஆனால், நீங்கள் சொன்னது ஒன்றும் என் காதில் ஏறவேயில்லை. 'நீங்கள் என் அருகில் உட்கார்ந்திருக்கிறீர்கள்; நம் இருவருடைய கரங்களும் ஒன்றுபட்டிருக்கின்றன' என்னும் ஒரு உணர்ச்சி தான் என் மனதில் இருந்தது. அந்த நினைவு என்னை வான வெளியிலே தூக்கிக் கொண்டுபோய் மேக மண்டலங்களின் மேல், மிதக்கச் செய்தது. தடாகத்துத் தண்ணீரில் மிதக்கும் தாமரை இலைகளின் மேலே நின்று என்னை நடனமாடச் செய்தது. தண்ணீருக்குள்ளே அமுக்கிக் கீழே கீழே கொண்டு போய் மூச்சுவிட முடியாமல் என்னைத் திக்குமுக்காடச் செய்தது."