• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
May 1, 2025
Messages
23
🩶 தூரம் வேண்டாம் தங்கமே!

தூரம் 14

அகல்யாவுடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அன்பினால் நம் கவலை மறக்கடிக்கும் போது உடன் பிறந்தவர்களும் வரமாகின்றனர்.

தந்தை வந்து அழைக்கும் வரை அவளோடு கதையளந்து கொண்டிருந்தாள், அனு. தங்கை சென்றதும் மீண்டும் அவளை வெறுமை சூழ்ந்து கொண்டது.

ஐந்தே நிமிடங்கள் தான். அலைபேசி சிணுங்கியது. இந்த நேரத்தில் கதிர் அழைக்க மாட்டானே என எண்ணியவளாய் திரையைப் பார்க்க, அவனது முகம் தான் தெரிந்தது.

நொடியும் தாமதிக்காமல் அழைப்பை ஏற்க, "அம்மு" எனும் அழைப்போடு முத்தங்களை வாரி இறைக்கத் துவங்கியிருந்தான், கணவன்.

எதிர்பாராத அழைப்பில் ஆர்வமானவளுக்கு சற்றும் எதிர்பாராமல் கிடைத்த முத்தங்கள் வெப்பத்தில் தவிக்கும் சந்தர்ப்பத்தில் உடல் முழுதும் பனிக்கட்டிகள் பொழிவது போல் இருந்தன.

தன் அன்பனிடமிருந்து கிடைத்த எக்கச்சக்கமான முத்தங்களை இமை மூடி, இதழ் கடித்து, இதமாக அனுபவிக்க ஆரம்பித்தாள்.

"அம்முக் குட்டியோ! என் செல்லமே! பட்டுக் குட்டி" கெஞ்சலில் கரைந்த, அன்பொழுகும் அழைப்புகள் அவளுக்கு போதையூட்டுவதாய் அமைந்தன.

"என்னங்க?" வெட்கத்துடன் சிணுங்கினாள், பாவை.

"வீடியோ கால் எடு. உன்ன பாக்கனும் அம்மு" வழமையிலும் அதிகமான தேடல் அவனுள் இருப்பதை அவளால் உணர முடிந்தது.

"சரி எடுக்கிறேன்" வீடியோ அழைப்பை ஏற்படுத்த, தன் தேவதையின் வனப்புச் சொட்டும் வதனத்தை இமை கொட்டாமல் பார்க்கலானான்.

"என் தங்கத்துக்கு என்னாச்சு? லவ் கூடிப் போன மாதிரி இருக்கு" சின்னச் சிரிப்போடு கேட்டாள், மனைவி.

"தெரியலம்மு. இன்னிக்கு லவ்வு உச்சத்துல இருக்கு. அதுக்கு மூனு காரணம் இருக்கு" என்று கூற, "மூனு காரணமா? ஒவ்வொன்னா சொல்லுங்க. கேப்போம்" ஆர்வத்துடன் அவனை நோக்கினாள்.

"இன்னிக்கு ரெஸ்டாரன்ட்ல ஒரு பொண்ண பாத்தேன்" என அவன் சொல்ல, "பொண்ணா? அது யாரு? நீங்க எதுக்காக பாத்தீங்க?" சடசடவென கேள்விகள் பிறந்தன.

"எதேர்ச்சையா கண்டது டா. ஆனா அவ முகம் திரும்பவும் என்ன பாக்க வெச்சிடுச்சு" என்று அவள் கூற, "திரும்ப பாத்தீங்களா?" ஒரே ஒரு செக்கனில், அதோ இதோ விழுந்து விடுவேன் எனும் ரீதியில் கண்ணீர் தேங்கி விட்டது அவளுக்கு.

"அம்மு ஹேய்" பதறி விட்டான், அவன்.

அவளின் நீர் கோர்த்த விழிகள் அவனுள் பதற்றத்தை உருவாக்கின.

"சொல்லுங்க" என அவள் பார்க்க, "நான் ஒன்னுமே சொல்லல. என்னால தானே நீ அழுற" சொல்ல மாட்டேன் என்பதாக தலையை இடமும் வலமும் ஆட்டி வைத்தான்.

"தயவு செஞ்சு சொல்லுங்க. சொல்ல வந்தத சொல்லி முடிச்சிடுங்க" அவள் பரபரக்க, "என்னால முடியாது. சும்மா சும்மா நானே உன்ன அழ வெக்கனுமா?" தன்னால் தான் அவள் அழுகிறாள் என நினைத்து அவன் மனம் கவலை கொண்டது.

"இல்லங்க. உங்களால அழல. இப்போல்லாம் சும்மா அழுகை வருது. நீங்க சொல்லுங்க" என்றவளைப் பார்த்து, "அப்போ கண்ண தொட" என்றான்.

"ம்ம் சரி. அழ மாட்டேன்" கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டவளை தவிப்போடு பார்த்தான்.

தான் அருகில் இன்றி அவள் எவ்வளவு கஷ்டப்படுகிறாள்? அவளை அன்பாகப் பார்த்துக் கொள்ளத் தானே மணமுடித்தான்? ஆனால் அவளின் அழுகையே தற்போதெல்லாம் காணக் கிடைக்கின்றது. எனவே நொந்து போனான்.

"சொல்லுங்க" மீண்டும் அதையே கேட்டாள், காரிகை.

"அந்த பொண்ணு சைடால பாக்க உன்ன மாதிரியே இருந்தா. சொன்னா நம்ப மாட்ட. அப்படியே உன்ன பாக்குற மாதிரி இருந்தது. சட்டுனு திரும்பிட்டு திரும்பவும் பாத்தேன். அப்போ அவ என் பக்கமா திரும்பினா. நேரா பாக்கும் போது உன்ன போல இல்ல. அந்த பொண்ணு அழுதுட்டு இருந்தது டா.

எனக்கு உன் ஞாபகம் வந்துருச்சு. நான் என் வேலய பாக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா அதுக்கு பிறகு என்னால நிதானமா இருக்க முடியலம்மு. ஏதோ நீ அழுற மாதிரியே ஒரு எண்ணம். இன்னிக்கு நீ அழுதியா?" அவன் கேட்ட கேள்வியில் திடுக்கிட்டுப் போனது, அவளிதயம்.

உண்மை தானே? இன்று ஸ்ரேயாவின் வார்த்தைகள் அவளை நிலை குலைய வைத்ததால் அழுதாள் அல்லவா? அவ்வளவு தூரத்தில் இருந்த போதும் அவனால் தன்னை உணர முடிகிறதே.

தன்னவனின் மார்போடு சாய்ந்து அவனை இறுக்கி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் ஒரு உணர்வு அவளை உந்தித் தள்ளியது.

"ஏன்ம்மு சைலன்ட் ஆகிட்ட? நெஜமாவே நீ அழுதியா?" என்று கேட்க, அவளிடம் பதில் இல்லை.

ஆம் என்றால் காரணம் கேட்பான். இல்லை என்று பொய் சொல்லவும் மனமில்லை. எனவே பேச்சைத் திசை திருப்ப முற்பட்டாள்.

"முதலாவது காரணம் சொல்லிட்டீங்க. உங்க லவ்வு கூடினதுக்கு அடுத்த ரெண்டு காரணத்தையும் சொல்லுங்களேன்" நாடியில் கை வைத்துக் கொண்டாள்.

"கடைக்கு சாப்பிடப் போனேன். பிரியாணி இருந்தது. அதை தான் ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன். உனக்கு பிரியாணின்னா பிடிக்கும்ல? நீ சாப்பிட்டு முடிச்சாலும், நான் சாப்பிடும் போது என் கிட்டவும் ஆ காட்டி ஊட்டி விடச் சொல்லுவ தானே?" என்று சொல்லும் போதே அவனுக்கு கண்கள் கலங்கின.

"வாட் அ சர்ப்ரைஸ்! நானும் இன்னிக்கு பிரியாணி தான் சாப்பிட்டேன். அம்மா சமைச்சு அகல்யா கிட்ட கொடுத்து அனுப்பிருந்தாங்க" என்று சொன்னவளைக் கண்டு முகம் மலர்ந்தவனாக, "நெஜமாவா?" என்று கேட்டவனைப் பார்த்து தலையசைத்தாள், அவள்.

"அகல் எனக்கு ஊட்டி விட்டா" என்று சொல்ல, அவன் வழங்கிய முறுவலிலும் ஒரு வித ஏக்கம் படர்ந்திருந்தது.

அவன் எப்போதும் இப்படி இருக்க மாட்டான். இன்று தன் நினைவுகள் அதிகமாகத் தாக்கியதால் மிகவும் உடைந்து போய் தன் அருகாமையை நாடுகிறான் என்பதை அறிந்து கொண்டாள், அனுபமா.

"எனக்கும் உனக்கு ஆசயா ஊட்டி விடனும் போலிருக்கு அம்மு" என்று குழந்தை போல் கூற, "கண்டிப்பா ஊட்டி விடலாம். நீங்க இங்க வந்த பிறகு நான் கையால சாப்பிடவே மாட்டேன். நீங்க தான் ஊட்டனும். ஆச தீர ஊட்டுங்க. சரியா?" தலையை இரு புறமும் ஆட்டி ஆட்டி அவள் கேட்க, அவனும் அதை ஏற்றுக் கொண்டான்.

"என் தங்கம்ல? சிரிங்க பாப்போம்" என்று கேட்க, "என்னால முடியலம்மு. ரொம்ப மிஸ் பண்ணுறேன்" என்றான், தவிப்போடு.

அவளைத் தன் கையணைப்புக்குள் நிறுத்திக் கொள்ள அவன் மனம் துடித்தது. அவளின் வாசம் நுகர, நாசி தவித்தது. அவளைச் சுமந்த இதயம் இரட்டிப்பு வேகத்தில் துடிக்கலாயிற்று.

"நான் கேட்டு முடியலன்னு சொல்லுவீங்களா? நான் கோவம்" உதட்டைச் சுழித்துக் காட்டினாள்.

"அச்சோ அம்மு. நான் சிரிக்கிறேன். இதோ பார்" இதழ் விரித்துச் சிரித்துக் காட்ட, "இது! இது சூப்பர்" சிரிப்போடு கூறினாள்.

"கள்ளி! கோவப்பட்டே காரியம் சாதிப்ப" பொய்யாக முறைத்தான், கதிர்.

"என் தங்கம்! செல்லக் குட்டி. என் மாமா" அவனைக் கொஞ்சித் தீர்த்தாள், தாரகையவள்.

தன்னவள் வதனத்தை இமை சிமிட்டாமல் பார்க்கலானான், கதிர். அவள் இப்படிக் கொஞ்சுவதெல்லாம் அரிது தான். கதிர் அவளை நூறு முறை கொஞ்சினால், பதிலுக்கு அவள் கொஞ்சுவது பத்து தடவை தான். ஆனால் அந்தக் கொஞ்சம் கொஞ்சலும் அவனை அடியோடு சாய்த்து விடும்.

"மூனாவது காரணத்தைச் சொல்லவா?" என்று அவன் கேட்க, "சொல்லுங்க" என்றாள்.

"அது என் ஏஞ்சலோட ஃபோட்டோ பார்த்தது" என்றவனின் கண்களில் படர்ந்தது, அப்பட்டமான ரசனை.

"ஓஓ! அந்த போட்டோவா? எப்படி இருந்தது?"

"அழகோ அழகு. ஏன்ம்மு நீ அம்புட்டு அழகா இருக்க? அதுவும் தலையில பூ வெச்சு ப்பாஹ். அந்த போட்டோவைப் பாக்கும் போது என் லவ்வு மூட்டை மூட்டையா கூடிப் போச்சு"

"அந்த போட்டோவைப் பாக்கும் போது மட்டும் தானா? என்ன பாக்கும் போது இல்லையா?" அவள் முகம் சுருக்க, "ஆமா" என தோளைக் குலுக்கினான்.

"போங்க நான் கோவம்" கண்களை உருட்டி, உதட்டை வளைத்துத் தன் கோபத்தைப் பறைசாற்றினாள்.

"அடியே சண்டைக் கோழி! அந்த போட்டோல இருக்கிறதும் நீ தானே? எதுக்கு டி இந்த கோவம்?" புரியாமல் பார்த்தான், அவன்.

"அது எனக்குத் தெரியாது. ஃபோட்டோ பாத்தது அப்போ. இப்போ என்னை மட்டும் தான் அழகுன்னு சொல்லனும். அதை சொல்லக் கூடாது"

"அய்யோ! குழப்பாத அம்மு. உன்னோட பேசுறது ரொம்ப கஷ்டம்" தலையில் கை வைத்துக் கொண்டான்.

"அப்போ வேற யாரோட பேசுவீங்க?" அதற்கும் வரிந்து கட்டிக் கொண்டு வர, "யம்மா தாயே ஆள விடு. தொட்டதுக்கெல்லாம் வம்பு பண்ணினா நானும் என்ன தான் பண்ணுறது? உன் மாமா பாவம் இல்லயா?" பாவமாகப் பார்த்தான், அவன்.

"இல்ல" சட்டென்று வந்தது, பதில்.

"அடிப்பாவி! இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னால மாமா, தங்கம், வெள்ளி, பித்தளைனு கொஞ்சுன" வாயில் கை வைத்துக் கேட்க,

"நான் மட்டும் தான் கொஞ்சனுமா? உங்களுக்கு வேணும்னா நீங்க கொஞ்சுங்க"

"என் பொண்டாட்டிய கொஞ்சாம வேற யார கொஞ்சப் போறேன்" என்றவன், "என் செல்லமே! தங்கப்புள்ள. ராசாத்தி. அம்முக் குட்டி! என் கண்ணு" அவளை விதவிதமாகக் கொஞ்ச, வெட்கத்தில் சிவந்தது, அவள் முகம்.

"ஓய்" என அழைத்தவன், "போதும் வெட்கப்பட்டது" என்று சொல்ல, "போங்க" சிணுங்கினாள், அனு.

"அழகி டி நீ! என் கூட சண்ட போடாத சரியா? இரக்கமா பேசு"

"சரி தங்கம். நான் இரக்கம் தான். சண்ட போட்டாலும் இரக்கம். ரொம்ப ரொம்ப இரக்கம்" கைகளை விரித்துக் காட்டினாள், காரிகை.

"தெரியும்மா. உன் பாசத்த நீ சொல்லித் தான் தெரிஞ்சுக்கனும்னு இல்ல. என் செல்லக் குட்டி நீ" அவளை அன்பொழுக நோக்கினான்.

"எனக்கு ஒன்னு தாங்க" கண்களை மூடிக் கொண்டு நிற்க, அவள் மனம் அறிந்தவனாக நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தான்.

திரையினூடாகக் கிட்டிய நெற்றி முத்தம் அவள் மனதின் சுணங்கல்களை வாரிச் சுருட்டி தூரமாக வீசியது. அவளின் காயங்கள் அனைத்திற்கும் அவனது அன்பு மருந்தாகிற்று.

"மிஸ் யூ தங்கம்" தவிப்போடு அவள் மொழிய, "மிஸ் யூ டூ. லவ் யூ அம்மும்மா" என்றான், காதல் வழிய.

இமை சிமிட்டக் கூட மறந்தவளாக அவனைத் தன் விழி வழியே மனத் திரைக்குள் சேமித்துக் கொள்ளத் துவங்கினாள், அனுபமா. என்ன தான் நன்றாகப் பேசினாலும், அவனிடம் ரஜனின் விடயத்தை மறைப்பது மனதை உறுத்தவே செய்தது.

தூரம் தொடரும்.........!!

ஷம்லா பஸ்லி
 

Latest profile posts

வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top