• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
May 1, 2025
Messages
23
🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶

தூரம் 13

காலை வேளையில் தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் அனுபமா. கூந்தல் நுனியில் இருந்து வடிந்த, இரு சொட்டு நீர்த் துளிகள் அவள் குளித்து விட்டு வந்ததைப் பறைசாற்றி நிலத்தை முத்தமிட்டன.

அனுபமாவின் முகத்திலும் மறையாத புன்னகை வீற்றிருந்தது. அதற்குக் காரணம் கதிர் தான். அப்பெண்ணவளின் புன்னகையின் முகவரி அவளது கண்ணாளன் அன்றி வேறு யாராக இருக்க முடியும்?

இன்று அவனோடு பேசிய இருபது நிமிடங்களும் அவளுக்கு இரண்டு இலட்சத்தினும் அதிகமான இன்பத்தை அள்ளிக் கொடுத்திருந்தது.

யாருடன் பேசினாலும், யார் என்ன தான் அன்பைத் தந்தாலும் அவளுக்கு கதிரின் அன்பு தரும் இன்பம் அலாதியானது. அவனால் கிட்டும் மகிழ்வுக்கு ஈடு இணை ஏதும் இல்லை.

தோட்டத்தில் நட்டு வைத்த ரோஜாச் செடிகளில் பூத்திருந்த இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற மலர்கள் அவ்விடத்தே மணம் பரப்பி தலை சாய்த்தன.

பூவொன்றைக் கொய்து காதோரம் சொருகிக் கொண்டாள். பூக்களை எங்கு கண்டாலும் அதில் ஒன்றைப் பறித்து இவ்வாறு அவளுக்கு சூட்டி விடுவது கதிரின் பழக்கம்.

அவன் தன்னருகே வந்து காதோரம் விரல் உரசி, ரகசியங்கள் கொஞ்சம் பேசி பூச்சூட்ட மாட்டானா என நினைக்கையில் மெல்லிய ஏக்கத்திரை ஒன்று படர்ந்தது, ஏந்திழையின் நெஞ்சோரத்தில்.

செல்ஃபி எடுத்து அதனைத் தன்னவனின் எண்ணிற்கு அனுப்பி வைத்தவளின் இதழ்களில் முறுவல் மலர்ந்தது. இதற்கு அவன் என்னவென்று பதிலளிப்பான்? காத்திருந்து பார்ப்போமே என எண்ணியவளாய் வீட்டினுள் நுழைய எத்தனித்தவளைத் தடுத்து நிறுத்தியது, "அனு" எனும் அழைப்பு.

நடைக்குத் தடை விதித்தவளாய் குரல் வந்த திசையை நோக்கிய அனுபமாவுக்கு அங்கு நின்ற பெண்ணைக் கண்டதும் சட்டென முகம் சுருங்கியது. இருப்பினும் அதைக் காட்டிக் கொள்ளாமல் இளநகையொன்றை உதிர்த்தாள்.

அவள் ஸ்ரேயா. ரஜனின் எதிர் வீட்டில் வசிப்பவள். அவளை ஏனோ அனுவுக்கு பிடிக்காது. எதிரி என்றில்லை. ஆனால் அவளது குணமும் பேச்சும் பிடிபடாது என்பதால் அவளிடமிருந்து தள்ளியே நிற்பாள்.

தன்னைப் பார்த்தாலே ஏளனச் சிரிப்பை உதிர்க்கும் ஸ்ரேயா இன்று ஏன் தன் வீட்டிற்கு வந்திருக்கிறாள்? அவளின் திடீர் விஜயத்திற்கு காரணமின்றி இருக்காது. என்னவாக இருக்கும் என்ற வினாவோடு எதிரில் நிற்பவளை ஏறிட்டாள், அனுபமா.

"என்ன அனு சுகமா?" திடீரென்ற சுகநல விசாரிப்பில் மற்றவளுக்கு புருவங்கள் இடுங்கின.

"நல்லா இருக்கேன்" ஒற்றை வரியோடு பதிலைச் சுருக்கிக் கொண்டாள்.

"உனக்கென்ன நல்லா தானே இருப்ப?" அவளின் வார்த்தைகளில் இகழ்ச்சி துளிர் விட்டதை அனுவால் உணர முடிந்தது.

"நிச்சயமா நல்லா தான் இருப்பேன். என் குடும்பம், புருஷன், புள்ளனு சந்தோஷமா இருக்கேன்" அனுபமாவின் பார்வை தன் வயிற்றின் மீது மென்மையாகப் படிந்தது.

"அதே தான். இது தான் என் மனச உறுத்துற விஷயம். கொஞ்ச நாளா காதுல விழற செய்திய பல்ல கடிச்சு கேட்டுட்டு இருந்தேன். நீ ப்ரெக்னன்டா இருக்கிற விஷயத்த கேள்விப்பட்டதும் முடியல. சகிச்சுக்க முடியாம வந்துட்டேன்"

"நான் ப்ரெக்னன்டா இருக்கிறத உன்னால சகிச்சுக்க முடியலயா? ஏன்? எனக்கு புரியல. எதுக்காக இங்க வந்து மர்மமா பேசிட்டிருக்க?" இப்போது அனுவால் சகிக்க முடியவில்லை. எனவே பொங்கி விட்டாள்.

அவளின் சீற்றம் கண்டு ஸ்ரேயாவின் முகம் மாறியது. வன்மம் கக்கும் வார்த்தைகளை அனுபமா மீது வீசத் துவங்கினாள்.

"ரைட்டு! உன் கிட்ட மர்மமா பேசி பிரயோசனம் இல்ல தான். ஏன்னா நீ தான் எல்லாத்தையும் வெளிப்படையா பண்ணிட்டு கெத்தா இருக்கிற ஆளாச்சே"

"திரும்பவும் சொல்லுறேன். தெளிவா பேசு. இல்லனா வந்த வழியே பாத்து போயிடு. வீணா தகராறு பண்ண வராத" பெருமூச்சுகளை விடத் துவங்கிற்று, அவளின் நாசி.

"தெளிவாவே கேக்கிறேன். உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு தானே? கர்ப்பமாவும் இருக்க தானே? அப்படி இருக்கும் போது ஏன் உன் புத்திக்கு ரஜன் கேக்குறது?" ஸ்ரேயா கேட்ட கேள்வியில் அனுவின் விழிகள் சிவப்பேறத் துவங்கின.

"எனக்கு ரஜன் கேக்குதா? அவர் என்ன பெரிய மன்மதனா? எனக்கு கதிர் இருக்கார். அவரைத் தவிர வேற யாரும் எனக்கு தேவையில்ல. தேவை இல்லாம பேசாத ஸ்ரேயா" சீற்றத்தோடு சீறினாள், பாவை.

"வாயால இப்படி சொல்லுற. ஆனா நடக்கிறது வேற விஷயமால்ல இருக்கு? ஊருல எப்படி எப்படி பேசுறாங்க பாத்தியா?"

"ஊருல பேசுறதுக்கு எல்லாம் நான் காரணமாக முடியாது. ஊருல பேசாத பேச்சு இருக்கா?"

"நெருப்பில்லாம புகை வராது அனு.‌ அதனால தான் மனசு உறுத்துது. உனக்கும் ரஜனுக்கும் தொடர்பு இருக்குனு பேச்சு வருது. நான் எதுக்காக உன் கிட்ட மெனக்கெட்டு வந்து பேசுறேன் தெரியுமா? நான் ரஜன லவ் பண்ணுறேன். அவன் கிட்ட போய் இத சொல்ல முடியாது இல்லையா? அதனால தான் உனக்கு தூரமாவே இருக்க சொல்லிட்டு போக வந்தேன்" என்று ஸ்ரேயா சொல்ல,

"ஏய் நிறுத்து" கையை நீட்டித் தடுத்தாள், அனு.

"உனக்கு ரஜன் வேணும்னா தாராளமா லவ் பண்ணு. அதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. உன் கிட்ட ஒன்னு கேக்கிறேன். நான் கதிரோட பொண்டாட்டி. இது தெரிஞ்சும் என் கிட்ட வந்து இப்படி சொல்ல உனக்கு அசிங்கமா இல்ல?" அருவருப்போடு பார்த்தாள்.

"அப்போ நீ நெஜமாவே ரஜன் கூட பழகல தானே?" சந்தேகம் மாறாத தொனியில் ஸ்ரேயா வினவ, "என் கதிர் இருக்கும் போது வேற எவனும் எனக்கு தேவயில்ல. அந்த மாதிரி நெனச்சா அவங்களுக்கு தான் கேவலமான புத்தி. அப்பறம் ரஜன் ரஜன்னு என் கிட்ட பேசுறியே. இத போய் அவர் கிட்ட பேசு. உன் லவ்வு ரஜனுக்கு புரிய வாய்ப்பிருக்கு. அதை விட்டுட்டு என் கிட்ட வாதாடுறதுல ஒன்னும் மாறப் போறதில்ல. கொஞ்சம் புத்தியோட நடந்துக்க. திரும்ப என் கிட்ட இந்த விஷயமா ஏதாவது பேச வந்தா, நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்" கோபத்துடன் கூற, துள்ளலுடன் சென்றாள், ஸ்ரேயா.

அனுபமா ரஜனோடு பழகவில்லை என்ற ஆனந்தம் அவளுக்கு. அவளை அற்பமாகப் பார்த்தாள், அனு. என்ன விதமான மனிதர்கள் இவர்கள்?

கோரமான கேள்விகளால் ஒருவரின் மனதைக் குத்திக் கிழித்து விட்டு, தன் பாதையில் தடை விலகியதை எண்ணி சந்தோஷப்படவும் இவர்களால் முடிகிறதே. ஒருவரைக் காயப்படுத்தி விட்டு கொஞ்சம் கூட குற்றவுணர்வே இல்லாமல் இருக்கவும் முடிகிறதே.

இந்த ஊரார் தன்னைப் பற்றி என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்? தன் வாழ்க்கை கதிருக்கானது. அவனுக்காக தன்னை வழங்கி அன்பொழுக வாழ்ந்து வருகிறாள். தன் மனம் அவனைத் தவிர யாரையும் இம்மியளவும் நினக்காது.

அப்படிப்பட்ட தன்னை ஏன் இவ்வாறு கீழ்த்தரமாகப் பேசுகிறார்கள்? தன் மீது எந்தத் தவறும் இல்லை அல்லவா? அப்படியானால் அவர்களது மனம் தான் தேவையற்ற எண்ணங்களால் அசுத்தமாகி விட்டனவா?

நினைக்க நினைக்க அவளால் தாங்க முடியவில்லை. எத்தனை சந்தோஷமாக அவளது நாள் ஆரம்பித்தது? ஆனால் அந்த அழகான பூஞ்சோலை போன்ற புன்னகையை இந்த அருவருக்கத்தக்க விடயங்கள் அடியோடு சிதைத்து விட்டனவே. தனக்கு ஏன் இப்படியொரு நிலை? அழுகை பெருக்கெடுத்து வந்தது.

அவளும் எவ்வளவு தான் தாங்குவது? எந்த வீணான பழியையும் கூட தாங்க முடியும். ஆனால் தன் நடத்தையை தவறாக சித்திரிப்பதை எந்தப் பெண்ணால் தான் சுலபமாக தாங்கிக் கொள்ள முடியும்? மென்மனம் படைத்த பேதை மொத்தமாக கலங்கி நின்றாள்.

தன்னவனின் அருகாமையை எதிர்பார்த்தது, அவளது உள்ளம். அவன் தோள் சாய்ந்து தன் வலி கூறி கதறியழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் அது முடியாது அல்லவா? விழியோரம் வழிந்த இரு சொட்டு நீரை கட்டை விரலால் சுண்டி விட்டாள்.

உள்ளே சென்றவளுக்கு பயங்கரமாகப் பசித்தது. சாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு அமர்ந்தவளுக்கு திடீரென்று கதிரின் நினைவு.

அவன் அருகில் இருந்து ஊட்டி விடுவது போன்ற பிரம்மை தோன்ற, அப்படியே மேசையில் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.

உணவு திறந்தபடி கிடக்க, மேசையில் தலை வைத்தபடி அமர்ந்திருக்கும் அனுவின் தோளைத் தொட்டது, ஒரு கரம். தலை நிமிர்ந்து பார்க்க, அகல்யா நின்றிருந்தாள்.

"வா அகல்" தன்னை நிலை மீட்டுக் கொண்டு தங்கையை வரவேற்றாள்.

"நல்ல வேலை நீ இன்னும் சாப்பிடலக்கா. அம்மா செஞ்ச ஸ்பெஷல் பிரியாணி உனக்காக கொண்டு வந்திருக்கேன். வா சாப்பிடலாம்" என்று அக்காளின் கையைப் பிடித்து அவளது அறைக்கு அழைத்துக் கொண்டு சென்றாள், அகல்யா.

பிரியாணி என்றதும் தாயின் நினைவு வர, கவலைகள் கொஞ்சம் நீங்கப் பெற்றவளாய் தங்கையோடு நடக்கலானாள், சகோதரி.

அகல்யா கை கழுவி வந்ததைப் பார்த்த அனு, "வீட்ல சாப்பிட்டு தானே வந்திருப்ப. அதை எனக்கு குடு டி" என்று கேட்க, "நானும் சாப்பிடுவேன். இன்னிக்கு டேஸ்ட் பிரம்மாதமா இருந்துச்சு" என்று ஒரு கவளத்தை அள்ளிச் சாப்பிட்டாள்.

மௌனித்துக் கிடந்த சுவை நரம்புகள் தம் இருப்பிடத்தை உணர்த்தும் போராட்டத்தில் இறங்க, அனுவுக்கும் பசியெடுக்க ஆரம்பித்தது.

"இதெல்லாம் அநியாயம் தெரியுமா? எனக்கு தராம நீயே சாப்பிட்டனு அம்மா கிட்ட சொல்லி குடுக்கிறேன். இரு" முகத்தை உப்பிக் கொண்டாள், காரிகை.

"ஹா ஹா" தமக்கையின் முகப்வனைகளில் சிரிப்பு பீறிட்டது, அகல்யாவுக்கு.

"சிரிக்காத டி" என்ற அனுவின் வார்த்தைகள் அத்தோடு நிறைவு பெற்றிருந்தன.

ஏனெனில் அகல்யா தான் அவளுக்கு ஊட்டி விட்டிருந்தாளே? தங்கை ஊட்டியதும் அவளின் சில்மிஷம் அறிந்தவளாக அனுபமா சமாதானமடைந்து உணவை மெல்லத் துவங்கினாள்.

நன்றாகப் பசித்தது. வாயைத் திறந்து காட்டியவளுக்கு அன்போடு ஊட்டினாள், அகல்யா. கொண்டு வந்ததை மன நிறைவோடு ஊட்டி முடிக்க,

"என்ன? அதிசயமா ஊட்டி விட்டிருக்க?" என்று வினவினாள், அனு.

"என் ஃப்ரெண்டு நித்யா அவளோட அக்காவுக்கு தினமும் ஊட்டி விடுவாளாம். அதை கேட்டதுல இருந்து எனக்கு ஒரு மாதிரி போச்சு. அதனால அம்மா கிட்ட சொல்லி பிரியாணி செஞ்சு எடுத்துட்டு வந்தேன்" கதை போல் சொன்னாள்.

"அந்த நித்யாவ பாத்து பண்ணுறத நீ இன்னுமே விடலயா?" அவள் நக்கலாகக் கேட்க, "போங்கக்கா" முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள், தங்கை.

"சும்மா சொன்னேன் டா. நல்ல விஷயமா இருந்தா மத்தவங்கள பாத்து கத்துக்கலாம். தப்பில்ல" தங்கையின் தலையை வருடிக் கொடுக்க, "என் செல்ல அக்கா" அவளின் கன்னங்கள் இரண்டையும் பிடித்து ஆட்டிய அகல்யாவின் செய்கையில் அனுவின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

தூரம் தொடரும்......!!

ஷம்லா பஸ்லி
 

Latest profile posts

வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top