• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
May 1, 2025
Messages
13
🩶 தூரம் வேண்டாம் தங்கமே!

தூரம் 12

நீண்ட நாள் வறட்சிக்குப் பின், பல காலமாகத் தன்னுள் தேங்கிய நீரை மேகமானது பெருமழையொன்றின் மூலம் எவ்வாறு வெளியேற்றுமோ, அப்படியிருந்தது அனுபமாவின் அழுகை.

இத்தனை நேரம் அடக்கி வைத்த சோகம், வெறுமை, வலி, வேதனை என அனைத்தும் அணை கடந்த வெள்ளமாக அவள் இதயத்தில் ஊற்றெடுத்து விழி வழியே பெருக்கெடுத்து நதியாக ஓடின.

ஓவென்று கதறிய மனைவியின் அழுகையில் செயலிழந்து போனான், அனுவின் கணவன். அவள் இப்படியழுது அவன் பார்த்ததே இல்லை. அவளைத் தேற்றும் இடத்தில் அவனும் இல்லை.

"அம்மு! என்ன பாருடா. அழாதம்மு. முதல்ல அழுகையை நிறுத்து. எனக்கு என்னமோ பண்ணுது டி. இப்படி அழாத. இம்புட்டு தூரம் தொலைவுல இருந்துக்கிட்டு உன் கண்ணீர நான் எப்படி தொடப்பேன்? அழுகாத டா. ப்ளீஸ்" அவனது உயிரை உலுக்கிப் போட்டது, அந்த அழுகை.

"நான் அழனும். ப்ளீஸ்ங்க. என்னால சத்தியமா முடியல. என்னை அழ விடுங்க. இல்லன்னா மூச்சு முட்டி செத்துப் போயிடுவேன்" என்று விம்மிக் கொண்டே கூற,

"அம்மூஊஊஊ" என அலறினான், ஆடவன்.

அவனது அலறலில் நிதானித்தவள் மௌனத்தைக் கையிலெடுத்துக் கொண்டாள்.

"என்னாச்சு? ஏன் அழுற? இப்படி அழாத டா. எனக்கு பயமா இருக்கு. என்ன நடந்துச்சுனு சொன்னா தானே தெரியும். யாராவது ஏதாவது சொன்னாங்களா? ஏதாவது பிரச்சனையா? எதுவா இருந்தாலும் சொல்லுமா. நான் பார்த்துக்கிறேன்" என்றவனது நெஞ்சம், வழமையைக் காட்டிலும் மும்மடங்கு வேகமாக துடிக்கத் தொடங்கியது.

"ஆம்" என்று தலையை ஆட்டியவளுக்கு அவனிடம் என்னவென்று சொல்வது என்றெண்ணி தயக்கமாக இருந்தது.

இந்த விடயத்தை எப்படி சொல்வது? அவள் மீது தவறில்லை தான் என்றாலும் கூட அவளால் வாய் திறந்து அதனைச் சொல்ல இயலவில்லை. சொல்வதை நினைக்கும் போதே மனம் கலங்கியது.

"சொல்லு டா. என்னாச்சு? உன் பக்கத்துல நான் இல்லையேம்மா. உன்ன அணைச்சுக்கவோ, தலையை தடவி ஆறுதல் சொல்லுற இடத்துலயோ நான் இல்ல. ரொம்ப தூரமா இருக்கேன்ம்மு.

இந்த நேரத்துல நீ இப்படி அழலாமா? உனக்கு ஆறுதல் சொல்ல முடியலன்னு என்னை நினைச்சு எனக்கு கோபமா வருது. ப்ளீஸ் அம்மு புரிஞ்சுக்க. என்ன கஷ்டப்படுத்த வேணாம்" என்றவனுக்கும் கண்கள் கலங்கி விட்டன.

அவனைப் பார்க்கும் போது அவளுக்கு அழுகை பொங்கியது. அவனை அணைத்துக் கொண்டு தன் மனதின் பாரம் தீர அனைத்தையும் சொல்லிக் கதற வேண்டும் போல் இருந்தது.

அவள் விம்முவதைக் கண்டு "போய் தண்ணி குடி" என்று சொல்ல, அவளோ நகர்ந்தபாடில்லை.

"போனு சொன்னேன்" அவன் சற்றுக் கடினமாகச் சொல்ல, எழுந்து சென்று தண்ணீரை எடுத்துப் பருகினாள்.

"முகத்தைக் கழுவிட்டு வா" என்று கூற, சாவி கொடுக்கப்பட்ட பொம்மையாக அவன் சொன்னவாறு குளியலறைக்குள் சென்று குளிர்ந்த நீரை முகத்தில் அடித்துக் கழுவிக் கொண்டாள்.

அவள் உடலின் வெம்மை சற்று மட்டுப்படுவது போல் இருந்தது. என்றாலும் உள்ளமோ அதை நினைக்கும் போது குமுறிக் குமுறி வெடிக்கலாயிற்று.

அவனிடம் நடந்ததை சொல்லி விட வேண்டும் போல் இருந்தது. ஆனால் இதைக் கேள்வியுற்றால் அவன் எவ்வாறு நடந்து கொள்வானோ? தன் நிலையை எண்ணி அதிகமாக கவலை கொள்வானோ என்று நினைத்த போது பயமாக இருந்தது‌. ஆதலால் சொல்லாமல் இருக்க முடிவு செய்தாள்.

"அம்மு! இப்போ ஓகேவா?" அக்கறை ததும்பும் குரலில் அவன் கேட்க, தலையின் இரு பக்கமாகவும் ஆட்டி வைத்தாள்.

ஆம் என்று சொல்லவும் முடியவில்லை. இல்லை என்று சொல்லவும் முடியவில்லை.

"இப்படி எல்லாம் பண்ணாத அம்மு. வயித்துல பாப்பா இருக்கிறது நினைவில்லையா? இப்போ நீ சந்தோஷமா இருக்கணும். இந்த மாதிரி அழுதா அது உனக்கும் கஷ்டம். எனக்கும் கஷ்டம். என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியல டா. சும்மாவே உன்னை விட்டுட்டு வந்துட்டேன். உன்ன பக்கத்தில் இருந்து பார்த்துக்க முடியலனு குற்ற உணர்ச்சியா இருக்கு.

நீ இப்படி அழுதா என்னால தாங்க முடியாது ம்மு. நீ தான் உன்ன பாத்துக்கணும். நான் வரும் வரைக்கும் பத்திரமா இருக்கணும். உன் சந்தோஷத்த தவிர வேறு எதுவும் எனக்கு தேவயில்ல. நீ சந்தோஷமா இருக்கனும். நான் ஆசைப்படுறது அது ஒன்னு மட்டும் தான்" என்றவனுக்கு அவளை இதற்கு மேல் சமாதானப்படுத்தத் தெரியவில்லை.

அருகில் இருந்தால் அவளைத் தன் மாரோடு அணைத்துக் கொண்டிருப்பான். சோகம் தீரும் வரை சிகை கோதிக் கொடுத்திருப்பான். தன் ஒட்டுமொத்த அன்பையும் பறைசாற்றுவதாய் உச்சந்தலையில் முத்தம் பதித்திருப்பான்.

அவளைத் தன் தோளில் சாய வைத்திருப்பான். மடி மீது தலை வைத்து இதமான வருடலுடன் உறங்க வைத்திருப்பான். இல்லையென்றால் எங்காவது அழைத்துச் சென்று துக்கம் களைந்திருப்பான்.

ஆனால் தற்போது அவனால் என்ன செய்து விட முடியும்? இந்தத் தூரம் இருவரையும் பிரித்து வைத்திருக்கிறதே. வார்த்தையால் அன்றி வேறு எந்த ஆறுதலையும் கொடுக்க இயலாத கையறு நிலையில் நொந்து போனான், கதிர்.

சந்தோஷம் என்ற வார்த்தை அவளில் விரக்திப் புன்னகையை மலரச் செய்தது. அவளின் சந்தோஷம் தான் தொலைந்து போய் விட்டதே. இன்னும் என்னென்ன துயரங்கள் தன்னைத் துளைத்தெடுக்கக் காத்திருக்கின்றனவோ என நினைக்கும் போது மீண்டும் அழுகை பீறிட்டது.

விழியோரம் வழிந்த ஒற்றை நீர்த் துளியை அவன் பார்க்கும் முன்பு சட்டென துடைத்துக் கொண்டாள். அழக் கூடாது அழக் கூடாது. நான் அழுதால் என்னவன் தாங்க மாட்டான் என்று மனதிற்குள் உருப்போட்டுக் கொண்டவள் அழுகையை அடக்கி வைக்க பெரும் போராட்டமொன்றைத் தான் நடத்தலானள்.

பசியில் இருந்தவன் உணவை எடுத்து சாப்பிட ஆயத்தமாக, "நீ சாப்பிட்டியா?" என்று கேட்டான்.

மறுப்பாகத் தலையசைத்தவளை கேள்வியாக நோக்க, "பசிக்கலங்க" என்றாள்.

"அதென்ன பசிக்கல? போய் சாப்பாடு எடுத்துக்கிட்டு வா" என்று அவன் சொல்ல, "சாப்பிடவே மனசில்ல. வேண்டாம் தங்கம்" கெஞ்சலுடன் தலை சரித்தாள்.

"மனசுக்கு தேவை இல்லாம இருக்கலாம். ஆனா உன் வயித்துக்கு சாப்பாடு தேவை. பாப்பா வேற இருக்குல்ல? நீ இந்த மாதிரி கவனக் குறைவா இருக்கலாமா?" என்று அவன் கேட்ட போது தான் அவளுக்கு குழந்தையின் ஞாபகமே வந்தது.

தன்னைக் கடிந்து கொண்டாள், அவள். இந்தப் பிரச்சினையில் தன்னுள் உருவெடுத்த உயிரைக் கவனிக்காமல் இருக்கலாமா? இனி கவனமாக இருக்க வேண்டும் என நினைத்தவளாய் தட்டில் இரண்டு தோசைகளை வைத்துக் கொண்டு வந்தாள்.

அவசர அவசரமாக சாப்பிடுபவளைப் பார்க்க, அவனுக்கு என்னவோ செய்தது. தன் கண்மணியின் முகத்தில் தெரியும் சோகம் எதுவாயினும் அதைத் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் வேண்டிக் கொண்டான்.

"ஏன்ம்மு இப்படி இருக்க? நீ சாப்பிடுற வேகமே உனக்கு எவ்ளோ பசிக்குதுன்னு காட்டிக் கொடுக்குது. பட்டினி கிடந்து ஒன்னும் ஆகாது டா. இனி ஒழுங்கா சாப்பிடனும். சரியா?" என்று கேட்க,

"சரிங்க" சம்மதமாகத் தலையை அசைத்தாள், அவள்.

"இதோ பார் அம்மு. மறுபடியும் சொல்லுறேன். உனக்கு ஏதாவது பிரச்சினையோ கவலையோ எது வந்தாலும் என் கிட்ட ஷேர் பண்ணு" என்றான்.

"அது என்னால முடியாதுங்க. நீங்க தூரமா இருக்கீங்க. வேலை செஞ்சு களைச்சு போய் வர்றீங்க‌. உங்க கிட்ட கவலையான விஷயங்களை சொல்லி மனசு கஷ்டப்படுத்த என் மனசு இடம் கொடுக்க மாட்டேங்குது" என்றாள், கவலையோடு.

"சந்தோஷமான விஷயம் ஒன்னு இருந்தா ஓடோடி வந்து சொல்லுவ தானே?" எதிர்க் கேள்வி கேட்டான்.

"அது சந்தோஷம். இது கவலை"

"சந்தோஷத்த எப்படி என் கிட்ட பகிர்ந்துக்கிறியோ, அதே மாதிரி கவலையையும் சொல்லனும். மகிழ்ச்சியை ஒருத்தர் கூட பகிர்ந்துக்கிட்டா அது இரட்டிப்பாகும். ஆனா கவலையை பகிர்ந்தா அது பாதியா கொறஞ்சி போன மாதிரி உணர்வோம். மத்தவங்க கிட்ட சொல்றியோ இல்லயோ, நீ என் கிட்ட எல்லாம் சொல்லனும். புரிஞ்சுதா?" என்று கேட்க, தலையை அசைத்தாள்.

அவனிடம் இதுவரை எதையும் மறைத்ததில்லை, அவள். முதல் தடவையாக மறைப்பது மிகக் கடினமாக இருந்தது. குற்றவுணர்வு மனதைக் குடைந்தது. இருப்பினும் அதனைச் சொல்லவில்லை.

அவன் தன்னை எப்போதும் சந்தேகப்பட மாட்டான். இந்த விடயத்தைச் சொன்னால் தன்னை எண்ணி எண்ணி யோசனையில் ஆழ்ந்திருப்பான். கவலை கொள்வான்.

கதிர் மிக மென்மையான மனம் படைத்தவன். அவனால் இது போன்ற விடயங்களைத் தாங்கிக் கொள்ள முடியாது. அதிகம் யோசித்து யோசித்து தன்னையே வருத்திக் கொள்பவன் அவன். அதனால் அனுபமா இந்த விடயத்தைத் தன்னுள் பூட்டி வைக்க முடிவெடுத்தாள்.

"அம்மு" என்று அவன் அழைக்க, "சொல்லுங்க" என்றாள்.

"என்ன யோசிக்கிற?" என்று கேட்க, "ஒன்னும் இல்லங்க. எனக்கு ஒரு வாட்டி முத்தம் குடுங்க" என்று சொல்ல,

"ஒன்னு என்ன? நிறைய தருவேன் என் அம்மு தங்கத்துக்கு" நெற்றி, கன்னம், கண்கள், மூக்கு, உதடு என ஒவ்வொரு இடத்திலும் ஏராளமான முத்தங்களைக் கொடுத்தான், கதிர்.

விழி மூடி அவற்றை ஏற்று அனுபவித்தவளின் மனம் தற்போது சற்றே சமன்பட்டது. அவள் காயத்திற்கு மருந்து அவன் தானே? அவன் முகத்தையே நெடுநேரம் நோக்கினாள்.

"தூங்குவோமா செல்லம்?" என்று அவன் கேட்க, அவளும் தலையசைத்தாள்.

"நாளைக்கி பேசுவோம். குட் நைட்" என்று சொல்ல, "ஓகே டா. லவ் யூ" என்றவன், "அம்மு" என கூப்பிட்டான்.

"என்னங்க?"

"உண்மயாவே எதுவும் இல்லயே? நீ நல்லா தானே இருக்க?" அவன் குரல் மென்மையாக வெளிப்பட, "இ..இல்லங்க" என்றாள்.

"சரிம்மா. நல்லா தூங்கு. நாளைக்கி பேசுறேன். மிஸ் யூம்மு" என்றவாறு அழை
ப்பைத் துண்டிக்க, அவனை எண்ணியவாறே உறங்கிப் போனாள், பாவை.

தூரம் தொடரும்......!!

ஷம்லா பஸ்லி
2015-06-15
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top