New member
- Joined
- May 1, 2025
- Messages
- 13
- Thread Author
- #1

தூரம் 10
அனுபமாவின் புகைப்படத்தைப் பார்த்தவாறே உறங்க முயன்றான், கதிர். வழமை போல் அவள் பேசாததால் உறக்கம் வர மாட்டேன் என அடம்பிடித்தது.
"அம்மு! என் கூட பேசனும்னு தோணவே இல்லயா? போடி" அவளிடம் கோபித்துக் கொண்டவனை தூக்கம் தழுவச் செல்லும் கணம், அலைபேசி அலறியது.
வெடுக்கென்று எழுந்து அமர்ந்தவன் அலைபேசித் திரையைப் பார்க்க, அவனது அன்பு மனையாட்டி மங்களகரமான மென்னகையோடு ஒளிர்ந்து கொண்டிருந்தாள்.
"அம்மு" என்று அவனின் ஒட்டுமொத்த கலங்களும் உத்வேகத்துடன் உயிர் பெற்றெழ, உடனடியாக அழைப்பை ஏற்றான்.
"தங்கம்" தவிப்பு தாறுமாறாகத் தேங்கி நின்றிருந்தது, அவள் குரலில்.
திரையில் தெரிந்த அவள் வதனத்தை இமைக்கவும் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான், காளை.
அவன் வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டன. இனம்புரியாத உணர்வொன்று அவனை ஆட்டிப் படைக்க, அவளை இழுத்து அணைத்து தன்னுள் புதைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.
"தூங்கலயா?" என்று கேட்டவளைப் பார்த்து, "தூங்க விட்டா தானே?" என்றான்.
"யாரு தூங்க விடல?" அடுத்த வினா வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக வெளிவந்தது.
"அடுத்த வீட்டு கவிதா" என்றவனை அவள் முறைக்க, "கோவம் வருதுல்ல. அப்பறம் என்ன கேள்வி? நீ தான் என்னை தூங்கவே விட மாட்டேங்கிற. கனவுல மட்டும் தான் வருவேனு பார்த்தா நினைவுல கூட வந்து தூங்க விடல" குற்றம் சாட்டும் குரலில் உரைத்தான்.
"சாரிங்க. அப்பாவுக்கு உடம்பு சரியில்லைனு சொல்லவும் அங்க போயிட்டேன். ஃபோன் வேற ஆஃப் ஆகிடுச்சு. வீட்டுக்கு போய் சார்ஜ் போட்டுட்டு இப்ப தான் வந்தேன். தூங்கிட்டீங்களோனு நெனச்சு சாஞ்சுட்டும் எதுக்கும் கால் பண்ணி பாத்தேன்" என்றவளுக்கும் அவனோடு பேசாத வருத்தம் இருக்கவே செய்தது.
"மாமாவுக்கு உடம்பு எப்படி இருக்கு?" என விசாரிக்க, "டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனோம். இப்போ கொஞ்சம் பரவாயில்லை" என்றவள், "சாப்பிட்டீங்களா தங்கம்?" என்று கேட்டாள்.
"அச்சோ இல்ல" தலையில் கை வைத்தவனுக்கு அப்போது தான் சாப்பிடவில்லை என்ற எண்ணமே வந்தது.
"என்ன நீங்க? நான் வரலனா சாப்பிட்டு இருக்க மாட்டீங்களா? டைமுக்கு சாப்பிட சொல்லி இருக்கேன்ல?" என முறைத்தாள்.
"சத்தியமா மறந்து போச்சு அம்மு. வேலை விட்டு வந்து உனக்கு கால் எடுத்துட்டு தானே சாப்பிடுவேன். இன்னிக்கு நீ பேசலயா எனக்கும் ஞாபகம் வரல" என்றவனுக்கு லேசாக பசியெடுக்கத் துவங்கிற்று.
"போங்க. போய் சாப்பாட்டை எடுத்துட்டு வாங்க" என கட்டளையாகச் சொல்ல, "தங்கள் கட்டளையே சாசனம் தேவி" இடை வரை குனிந்தவன் சென்று கை கழுவி விட்டு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வந்தான்.
திரையில் அவளைக் காணாமலிருக்க, "அம்மு" என அழைத்தான்.
"இதோ வந்துட்டேன்" என்றவாறு உணவுத் தட்டை எடுத்துக் கொண்டு வந்தவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தான்.
"என்ன இது?"
"தட்டு. சாப்பிடப் போறேன்" என்றவாறு சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள, "நீ சாப்பிடாம இருந்துட்டு தான் எனக்கு திட்டுனியா?" எனக் கேட்டான்.
"நான் ஒன்னும் மறக்கல. உங்களோட பேசும் போது சாப்பிட இருந்தேன். ஆனா நீங்க அப்படி இல்ல. மொத்தமா மறந்துட்டீங்க. அடுத்தது நான் வீட்ல தான் இருக்கேன். நீங்க தூரமா இருக்கீங்க. தனியா இருக்கீங்க. நல்லா சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்கனும். டைமுக்கு சாப்பிடனும். புரிஞ்சுதா?" அவளின் வார்த்தைகளில் வன்மை தெரிந்தது.
"பசிக்குது டி. சாப்பிடலாம்" என்றவன் சாப்பிட ஆரம்பிக்க, "இம்புட்டு பசிய வெச்சுக்கிட்டு மறந்து போச்சாம் மறந்து" என்றவாறு அவளும் உண்ண ஆரம்பித்தாள்.
அவன் ஊட்டி விட்டு சாப்பிட்ட தருணங்கள் நினைவூஞ்சலில் ஆடத் துவங்க, அனுபமாவின் பார்வை கணவன் மீது ஏக்கத்துடன் படிந்தது.
"என்னம்மா?" அன்பாகக் கேட்டான், அவன்.
"வீட்டுல இருக்கும் போது ஊட்டி விடுவீங்க தானே? அது ஞாபகம் வந்துச்சு. உங்க கையால சாப்பிடனும் போலிருக்கு" என்றாள், மெல்லிய குரலில்.
"அதுக்கென்ன ஊட்டி விட்டா போச்சு" எனக் கூறி உணவுக் கவளத்தை எடுத்து அவளை நோக்கி நீட்ட, அவள் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
"ஆஆ காட்டு" என்றதும் அவள் வாயைத் திறக்க, "ஆஆ ஊட்டி விட்டாச்சு" என ஊட்டுவது போல் பாசாங்கு செய்ய, ஒரு வாய் உணவருந்தி அவளும் மனதாரப் புன்னகை பூத்தாள்.
"அப்போ எனக்கு?" என்று கேட்கும் போது அவளும் ஊட்டி விட, "ம்ம்ம் டேஸ்டா இருக்கு. என்ன இருந்தாலும் என் அம்மு கையால சாப்பிடறது போல் வருமா?" ரசித்துச் சொன்னான், வேங்கை.
அவளின் ஏக்கம் அவனுள்ளும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தத் தான் செய்தது. எனினும் அதை வெளிக்காட்டி அவளை இன்னும் தவிக்க வைக்காமல் சமாதானப்படுத்தத் துணிந்தான்.
இன்னும் எத்தனை நாட்கள் இது போல தொலைவில் இருந்து தொலைபேசி மூலம் வாழ்க்கை நடத்த வேண்டுமோ என நினைக்கையில் இதயம் சுணங்கியது.
இருவரும் சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்தார்கள். கட்டிலில் இருந்த புகைப்படத்தைக் கதிர் காட்ட, அவள் வதனம் சூரியனைக் கண்ட தாமரை போல் மலர்ந்தது.
கடற்கரையில் கரம் கோர்த்தவாறு இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் அது. அகல்யா விதவிதமாக போஸ் சொல்லிக் கொடுத்து அழகாக இருக்குமாறு கூற, அனு வெட்கித்து தன்னவன் தோளில் முகம் புதைக்க, அவன் அவளைக் காதலும் சிரிப்புமாய் நோக்குவது போல் இருந்தது மற்றொரு புகைப்படம்.
"அந்த மொமன்ட்ஸ் ரொம்ப அழகுல்ல? நெனச்சி பாக்கும் போதே ஹாப்பியா இருக்கு" என்றான், கதிர்.
"ஆமாங்க. நீங்க வந்ததும் நாங்க பீச் போவோம். சரியா?"
"பீச் மட்டும் இல்ல. பார்க், ஷாப்பிங் மால், ட்ரிப்னு நெறய போகலாம். என் தங்கத்த எல்லா இடமும் கூட்டிட்டு போவேன்" என்றவனைப் பார்த்து, "போகலாம் போகலாம்" விளையாட்டுப் பொருளைக் கண்ட குழந்தை போன்று குதூகலமாய் மொழிந்தாள்.
"லவ் யூ செல்லம்" அவளுக்கு பறக்கும் முத்தத்தை வழங்க, "கேட்ச்" என்றவாறு அதனைப் பிடித்து தன் மார்பில் வைத்துக் கொண்டாள்.
"அழகி டி நீ" என்றவன் அவளைக் காதல் சொட்டும் பார்வை பார்க்க, "மிஸ் யூங்க" அவன் நெற்றியில் முத்தங்களிரண்டு வைத்தாள், வஞ்சி.
"இன்னிக்கு நான் வேலை செய்யுற ரெசாட்கு ஒரு கப்பிள் வந்திருந்தாங்க. புதுசா கல்யாணமானவங்க போல. வந்ததுல இருந்து அவங்க செல்ஃபி எடுத்துட்டு இருந்தாங்க. அவங்களை பாத்ததும் எனக்கு உன் ஞாபகம் வந்துருச்சு அம்மு.
நாங்க கல்யாணமான புதுசுல ஒரு ரெஸ்டாரன்ட் போனோம் நெனவிருக்கா? கையைப் பிடிச்சுட்டு பத்து நிமிஷம் கண்ணு மூடாம பாத்துட்டு இருக்கனும்னு சொல்லி கேம் வெச்சோமே. அதெல்லாம் நெனவு வந்துருச்சு.
கடைசியா போகும் போது வந்து என் கிட்ட ஒரு ஃபோட்டோ எடுத்து தர முடியுமான்னு கேட்டாங்க. நானும் எடுத்து கொடுத்தேன். தோள்ல கை போட்டு நின்னத பாக்கும் போது ஒரு மாதிரியாகிட்டேன். உன் கிட்ட ஓடி வந்து உன்ன அள்ளித் தூக்கிக்கனும் போல இருந்துச்சு டி" ஏக்கம் வழிந்தோடக் கூறினான்.
"எல்லாம் பண்ணலாம். என் கிட்ட வாங்க. நாம ஊர் சுத்தலாம். ஃபோட்டோ எடுக்கலாம். தோள்ல கை போடலாம். ஓகேயா?" தலையை இரு பக்கமும் அசைத்து அசைத்து அவள் பேசிய பாங்கை ரசனை மீதூற நோக்கின, அவன் விழிகள்.
"சரிம்மு. காத்துட்டு இருக்கேன்" என்றவனுக்கு தூக்கத்தில் கண்கள் சொருகியது.
"தூக்கமா?" என்று அவள் வினவ, "நீ பேசு டா" என்றான்.
"டயர்டா இருக்கும்ல? தூங்கி எழும்புங்க"
"உன் கூட பேச முடியாதே. என்ன போக சொல்லாதம்மு. நான் இருக்கேன்" கெஞ்சினான், அவன்.
"என் தங்கம்ல? செல்லக் குட்டில்ல? அம்மு சொன்னா கேப்பீங்க தானே?" கொஞ்சலில் இறங்கினாள், பெண்ணவள்.
"இல்ல. நான் போக மாட்டேன்" அவன் முரண்டு பிடிக்க, "இன்னிக்கு பேசலனா என்ன? நாளைக்கி பேசலாம். நான் எங்கேயும் போக மாட்டேன். காலையில் எழுந்து வேலைக்குப் போகனும்ல? தூங்குங்க உசுரு" என்றாள், அவள்.
"ம்ம் சரி" அவன் தலை சம்மதமாக ஆடியது.
"என் தங்கம்" என்று செல்லம் கொஞ்ச, "போகாதம்மு" தாயின் சேலை நுனி பிடித்துக் கெஞ்சும் சேயாய் மாறினான், அவன்.
"சரி. நான் போகல. நீங்க தூங்குங்க" என்றவள் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, சில நிமிடங்களில் அவளைப் பார்த்தபடியே உறங்கிப் போனான்.
"மிஸ் யூ புள்ள. நம்ம கஷ்டம் எல்லாம் சீக்கிரமே தீரும். உங்களுக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன். நீங்க எப்பவும் நல்லா இருக்கனும்" அவன் நெற்றியில் அன்போடு ஒரு முத்தம் வைத்தவள் அழைப்பைத் துண்டித்து விட்டுத் தூங்கினாள்.
நாட்கள் இப்படித் தான் இவர்கள் இருவருக்கும் நகர்ந்து சென்றன. ஏக்கம், தவிப்பு, காத்திருப்பு, சோகம் ஒரு பக்கம் வாட்டி வதைத்தது. மறு பக்கம் அன்பு, அக்கறை, ஆறுதல் என்பன அதனை சரி செய்தன.
ஒருவருக்கு ஒருவர் அன்பாக, ஆதரவாக, ஆறுதலாக தோள் கொடுத்து நின்றனர். அந்தத் தூரம் அவர்களது ஆழ்ந்த நேசத்தை பக்குவப்படுத்தி, பிரிந்து வாழ்ந்தாலும் இணைந்து வாழப் பயிற்றுவித்திருந்தது.
தெளிந்த நீரோடை போல் தான் சென்றது அவர்களின் வாழ்க்கை. வழமை போல் அலட்டல் இல்லாமல் அன்பாய்க் கடந்து சென்றன, நாட்கள்.
ஒரு மாதம் பறந்து சென்றது. அன்று வைத்தியரிடம் சென்று விட்டு வந்தாள். அவளோடு சென்று வந்த கவிதா அனுவை ஒரு பூங்காவிற்கு அழைத்துச் சென்றாள்.
"இங்க எதுக்குக்கா வந்தோம்?" கவிதாவிடம் கேட்க, "உன் கிட்ட ஒன்னு கேக்கனும்" என்றாள்.
கவிதா கதிரின் அடுத்த வீட்டில் குடியிருப்பவள். அனுவை விட இரு வருடங்கள் மூத்தவள். அனுவோடு நட்புப் பாராட்டி அவளுக்குத் தோழி போல் இருப்பவள் தான் கவிதா.
"என்ன விஷயம்?" என்று கேட்டாள், காரிகை.
கவிதா தயங்கி நின்றாள். அவள் முகம் எதையோ எண்ணி சுருங்கியது போல் தோன்றியது.
"சொல்லுங்கக்கா. ஏதோ சொல்ல வந்துட்டு ஏன் யோசிக்கிறீங்க?" அனுவை ஏதோவொரு படபடப்பு ஆட்கொண்டது.
தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அடுத்து கவிதா கேட்ட கேள்வியில், பல கோடி அதிர்வலைகள் தாக்கியது போல் விக்கித்துப் போய் நின்றாள், கதிரின் மனைவி.
தூரம் தொடரும்.......!!
ஷம்லா பஸ்லி
2025-06-12