• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நிலவாக உனக்குள் - 11

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
34
அத்தியாயம் - 11
விடிந்ததும் வினோத், முகிலன் முகத்தில் விழித்தான் கரண். அன்று போன வினோத் திரும்ப வரமாட்டானென நினைத்த கரண், காவலரோடு வந்து நிற்கும் வினோத்தைக் கண்டதும் உள்ளுக்குள் உதறல் எடுத்த கலவரத்தை மறைக்க முயன்று தோற்று போய் நின்றிருந்தான்.

இருவரும் கேள்வி கேட்கும் முன், தான் பதில் சொல்லி அனுப்பிவிட வேண்டுமென நினைத்து, “நான்தான் அன்னைக்கே சொல்லிட்டேனே சார். எனக்கு எதுவும் தெரியாதுன்னு. போலீஸைக் கூட்டிட்டு வந்தா மட்டும் எனக்குத் தெரியாததை நான் எப்படிச் சொல்ல முடியும்” கடுகடுவெனச் சொன்னான்.

“நாங்க எதுக்கு வந்திருக்கோம்னு கேட்காமாலே நீயே பதில் சொல்றன்னா, உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்குன்னு அர்த்தம். நீயா சொல்லிட்டா நல்லது. இல்லை, கேட்கிற விதத்தில் கேட்டா உனக்குத் தெரியுமா தெரியாதான்னு தெரிஞ்சிரப் போகுது” என்ற முகிலன் தன் கை விரல்களை மடக்கி முறுக்கினான். பேச்சில் தைரியத்தைக் காட்டினாலும் கரணின் கண்களில் இருக்கும் பயம் அவனைக் காட்டி கொடுத்தது.

முகிலன் பார்வை தன் மீதே படிந்திருப்பதைக் கண்ட கரண், “என்ன சார் மிரட்டிப் பார்க்கீங்களா? அதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நானில்லை” என எகிறிப் பேச,

“வினோ, இவன் சரிபட்டு வரமாட்டான். நான் சாருக்கு கால் பண்ணிட்டு வரேன். உள்ள கொண்டு போய் நாலு தட்டுத் தட்டினாத்தான் எல்லாத்தையும் வெளிய கக்குவான்.” கைப்பேசியை முகிலன் காதில் வைக்க.

“சார், ஒரு நிமிஷம். கரண், நீங்க ஏன் நகுலுக்காகச் சிக்கலில் மாட்டனும். அவர் பிரச்சனையை அவர் பார்த்துக்கட்டும். சார், நீங்க எதுக்காக நகுலை தேடி வந்திருக்கீங்க?” கரணை முறைத்த மீனு முகிலனிடம் கேட்டாள்.

நகுல் சங்கவியைத் திருமணம் செய்ததைச் சொல்லி, அவளையும் நகுலையும் கூட்டிட்டு போக வந்ததாகச் சொன்னான். இங்கு இல்லை என்றதும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததாகச் சொன்னான்.

“சங்கவியா? நகுலோட மனைவி பேர் ஹரிணியாச்சே” மீனு குழப்பத்தில் கேட்க.

“அவங்க முதல் மனைவியா இருப்பாங்க. அவங்களை விவாகரத்துப் பண்ணிட்டுதான் சங்கவியைக் கல்யாணம் கட்டிக்கிட்டார் நகுல்.”

மீனு அதிர, “சார், நாங்க ஃபேமிலி டூர் போறப்ப நகுல் ஹரிணியையும் அவர் குழந்தைகளையும்தான் கூட்டிட்டு வருவார்.”

“மீனு நீ போ. நான் பேசிக்கிறேன். சார், ஹரிணிதான் நகுல் மனைவி சங்கவி இல்லை. நீங்க தப்பா யாரையோ தேடிட்டு வந்திருக்கீங்க. எனக்கு ஆபீஸ்க்கு நேரமாச்சு. நீங்க கிளம்புங்க” எனச் சொல்லி முடிப்பதற்குள் அவன் கன்னம் தகதகவெனத் தீப்பட்டது போல் எரிந்தது.

ஒரு அடியில் கரண் கலங்கி நிற்க, கைகளை முறுக்கியபடி நின்ற முகிலன், “நானும் பார்த்துட்டே இருக்கேன் ரொம்ப அதிகமா பேசிட்டு இருக்க. நகுலைப் பற்றித் தெரிஞ்சும் விபரங்களைக் கொடுக்காம எங்களையே அதிகாரம் பண்றீயா? கழுத்தைப் பிடிச்சு இழுத்துட்டு போறதுக்குள்ள எல்லாத்தையும் சொல்லியிருக்கனும்” முகிலன் திரும்பவும் கையை ஓங்க.

கரணை முறைத்துவிட்டு உள்ளே சென்று வெளியில் வந்த மீனு, “சார், இவர்தான் நகுல். இவங்கதான் ஹரிணி. இவங்க உங்க தங்கச்சியா?” வினோத்திடம் மீனு கேட்க, இல்லையெனத் தலையை ஆட்ட, “சார், நகுலோட நம்பர் தரேன் குறிச்சிக்கோங்க” என கரண் கைப்பேசியிலிருந்து நகுல் எண்ணைப் பார்த்துச் சொன்னாள்.

நகுல் படத்தை மட்டும் தன் கைப்பேசியில் படம் பிடித்துக் கொண்ட முகிலன் கண்ணனுக்கும் ஹெட்கான்ஸ்டபில் வரதனுக்கு அனுப்பி வைத்தான்.

இருவரும் சென்ற அடுத்த நொடி கரண் மீனுவிடம் சண்டை போட, அவளுக்குப் பதிலுக்குப் பேச, குழந்தைகள் இருவரும் அழ ஆரம்பித்தனர்.

சாலைக்கு வந்த வினோத்தும் முகிலனும் அடுக்குமாடி குடியிருப்பைத் திரும்பிப் பார்க்க, திவ்யாவும் இலக்கியாவும் வெளியில் வர, இன்னொரு பக்கமிருந்து சந்துரு வந்தான். ஐவரும் அவரவர் வந்த வாகனத்தில் ஒருவரையொருவர் தெரியாதது போல் சென்றனர்.

உணவகம் ஒன்றில் ஐவரும் ஒரே மேசையில் அமர்ந்திருக்க, “வினோ, ஒவ்வொரு வீட்டிலும் நாங்க விசாரிச்ச வரை நகுலைப் பற்றி நல்லவிதமாத்தான் சொல்றாங்க” என்றாள் திவ்யா.

“எல்லோரும் ஒன்னு போல நகுல் வீட்டை விற்கலை, வாடகைக்கு விட்டிருக்கிறான்னு சொல்றாங்க” எனச் சந்துரு சொல்ல.

“அது ஒரு பெரிய விஷயம் இல்லை சந்துரு. ஏன்னா, விற்கிறோம்னு சொன்னா கௌரவக் குறையும்னு அப்படிச் சொல்லியிருப்பான். பசுத் தோல் போர்த்திய புலியா இருப்பான்” என்றான் முகிலன்.

வினோத்தின் கைப்பேசி ஒலிக்க, காதில் வைத்ததும் வள்ளியம்மை பதற்றத்தில் பேசியதைக் கேட்டு எழுந்த வினோத், நால்வரிடமும் விபரத்தைக் கூற, அவசர அவசரமாக அங்கிருந்து ஓடினர்.

******
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
34
துணிகளைத் துவைக்கும் இயந்திரத்தில் துணிகளைப் போட்டுவிட்டுப் பொத்தானை அழுத்திய தெய்வானை, இயந்திரம் இயங்காமல் இருப்பதைக் கண்டு திரும்பத் திரும்பப் பொத்தானை அழுத்திப் பார்த்தாள். அவர் விரல் வலித்ததுதான் மிச்சம் இயந்திரம் இயங்குவதாக இல்லை.

பழுது பார்ப்பவனை இப்போ கூப்பிட்டாலும் இரண்டு மூன்று நாள்கள் கழித்துதான் வருவான். அதற்குள் துணி நிறையச் சேர்ந்துவிடுமே, என்ன செய்ய என யோசித்தவர் கூடையில் துணிகளை எடுத்துக் கொண்டு பின் பக்கம் துவைக்கும் கல்லுக்கு வந்தார்.

“அண்ணி, வாஷிங் மெஷின் ரிப்பேர் ஓடலை. அதனால், பின்னாடித் துணி துவைச்சிட்டு இருக்கேன் தேடாதீங்க” என வள்ளியம்மைக்குக் குரல் கொடுத்தார்.

அவர் குரல் கேட்டு வந்த வள்ளி, “தெய்வா, நானும் கூடச் சேர்ந்து துவைக்கேன். தனியா எப்படித் துவைப்ப?” பதில் கொடுத்தபடியே வந்து நின்றார்.

“வேண்டாம் அண்ணி, சந்துரு, வினோத் துணி மட்டும்தான். மற்ற எல்லோர் துணியை நேத்து துவைச்சாச்சு. நானே பார்த்துக்கிறேன்” என்ற தெய்வானை துணிகளுக்கு வழலை (Soap) போட ஆரம்பிக்க, வள்ளி பின்பக்க படிக்கட்டில் உட்கார்ந்துவிட்டார்.

தெய்வானையும் வள்ளியும் வெளியில் சென்றவர்கள் போன விபரம் என்னென்னு தெரியலை என்று அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, முன் பக்கம் ஏதோ சத்தம் கேட்க, “தெய்வா, எல்லோரும் வந்துட்டாங்க போல, நான் போய்க் கதவைத் திறக்கேன்” என்றபடி எழுந்து சென்றார்.

வள்ளியம்மை வீட்டிற்குள் சென்ற அடுத்த நொடி பின்பக்கக் கதவு தானாக மூடிக் கொண்டது. திரும்பிப் பார்த்த வள்ளி காற்றில் மூடுவதாக நினைத்துச் செல்ல, ‘எதுக்குக் கதவைச் சாத்திட்டுப் போறாங்க? அதான் நான் இருக்கேன்ல’ எனத் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

‘கர்ர்ர்! கர்ர்ர்!” என்ற சத்தம் கேட்கச் சுற்றிப் பார்த்துவிட்டு எதுவும் இல்லையென்றதும், கைகளைக் கழுவிவிட்டுத் தென்னை மரம் பக்கம் சென்று எட்டிப் பார்த்தார். சத்தம் நின்றுவிடத் துவைக்கும் கல்லுக்குத் திரும்ப வந்து வேலையைத் தொடர்ந்தார்.

தன் அருகில் யாரோ மூச்சு விடுவது போல், ‘புஷ்! புஷ்!’ எனச் சத்தம் கேட்க, குனிந்திருந்தபடியே அங்கும் மிங்கும் கண்களைச் சுழலவிட எதுவும் இல்லாமல் இருக்கக் கொஞ்சம் உள்ளுக்குள் பயம் கிளம்ப, “அண்ணி! அண்ணி!” எனக் கதவில் கண்களைப் பதிய வைத்துக் கூப்பிட, அவரோ எந்தச் சத்தமும் கேட்காமல், முன்பக்க கதவைத் திறக்க முடியாமல் அதனுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.

‘இவ்வளவு கத்தியும் அண்ணி சத்தம் கொடுக்காம இருக்காங்க. எதுவும் பிரச்சனையா இருக்குமோ’ என்று துவைப்பதை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் செல்ல, கதவைத் திறக்க முடியாமல் அதனுடன் போராட, பின்னாடி யாரோ நிற்பது போல் தெரிய திரும்பியவர், விக்கித்துத் துவைக்கும் கல்லில் கல்லாக உட்கார்ந்துவிட்டார்.

“என்ன பயமா இருக்கா? உன் பையனால் நான் இப்படித்தானே பயந்திருப்பேன். அப்ப என்னைக் காப்பாத்த நீ வந்தியா? உன் பையனுக்கு ஒன்னுன்னதும் ஓடி வந்து என் கால்ல விழுற. நீ இருந்தால்தானே உன் பையனைக் காப்பாத்துவ. இப்ப உன்னைக் காப்பாற்ற யார் வரான்னு பார்க்கிறேன்” ஏற்கனவே சிலையாக இருந்த தெய்வானை, நாய் பேசியதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றிருந்தார்.

வள்ளிக்கு வெளியில் நடப்பது எதுவும் தெரிய கூடாதென்று, வீட்டைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாள் சங்கவி. ‘கதவை ஏன் திறக்க முடியலை? வெளியில் யாரும் பூட்டியிருப்[பாங்களோ’ என நினைத்தவர் பின் பக்க வழியாகச் சென்று பார்க்கலாமெனப் பின்பக்கம் வர, அங்கும் கதவைத் திறக்க முடியாமல் தடுமாறினார்.

சங்கவியால் தனக்கோ அல்லது தெய்வானைக்கோ ஆபத்து என்பதை உணர்ந்த வள்ளி, சன்னலைத் திறந்து யாரையாவது உதவிக்கு அழைக்கலாமென, முன்பக்க சன்னலுக்கு ஓடினார். ஆனால், அதையும் திறக்க முடியாமல் திணறி நின்றார். பிரச்சனை தெய்வானைக்கு என்பதைப் புரிந்து கொண்டார்.

உடனே தன் கைப்பேசியில் சரவணன், சந்திரனை அழைக்க, இருவருக்கும் அழைப்பு போகவில்லை. வினோத், சந்துருக்கு அழைக்க அவர்கள் கைப்பேசியும் அமைதியாக இருந்தது. அதை மாற்றி மாற்றிப் பார்த்த வள்ளி தூக்கியெறிந்தார்.

வள்ளியம்மை சமையல் அறைக்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து பின்பக்க கதவைத் திறக்க முயன்று முடியாமல், சன்னல் கண்ணாடிகளை உடைக்க, “சங்கவி, நான் சொல்றதைக் கேளு. வினோத்தும் சந்துருவும் உனக்காகத்தான் போலீஸ் கூடப் போயிருக்காங்க. உன்னைக் கொலை பண்ற அளவுக்கு உன் அண்ணனுங்க மோசமானவங்க இல்லை” எப்படியாவது சமாதானம் செய்துவிடலாமென நினைத்துப் பேசினார் தெய்வானை.

வெறிக் கொண்டு சிரித்த சங்கவி, “போலீஸா? அந்தப் போலீஸை கைக்குள்ள போட்டுத்தானே என்னைக் கொலை பண்ணான். அவன் கண்டுபிடிக்கமாட்டான். போலீசை வைத்துத் தடயங்களை அழிப்பான் பார்க்கியா? நீ உயிரோட இருந்தால்தானே பார்ப்ப” அரக்கியாக நின்ற சங்கவி தெய்வானை மீது பாய்ந்தாள்.

கண்ணாடிகளை உடைத்து வள்ளி எட்டிப் பார்க்க, தெய்வானை மீது நாய் ஆக்ரோஷமாக நிற்பதைக் கண்டு, “சங்கவி, அவ உன்னைப் பெத்தவ. அவளை ஒன்னும் பண்ணிடாதே. சங்கவி ஏய் சங்கவி” எனக் காட்டுக் கத்தல் கத்தியும், வள்ளியின் கதறல் சங்கவியின் காதில் கேட்டும் கேட்காதது போல் இருந்தாள்.

முன்பக்க வாசலுக்கு ஓடிய வள்ளி அங்கும் சன்னல் கண்ணாடிகளை உடைத்து, சாலையில் போவோரை உதவிக்குக் கூப்பிட, அவரின் குரல் யாருடைய காதிலும் கேட்கவில்லை. வீடு முழுவதும் சங்கவியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததால் உள்ளே நடப்பது எதுவும் வெளியில் கேட்கவில்லை. தொண்டை வற்றிப் போய்த் திரும்பவும் பின் பக்கம் ஓடி வந்தார்.

தெய்வானையின் கை, கால்களில் நகங்களால் கீறியிருந்தாள் சங்கவி. அதைக் கண்ட வள்ளி, “ஐயோ! பாவி மகளே பெத்தவன்னு பார்க்காம கொடுமை பண்றியே. ஏய்! சங்கவி அவளை விட்டுடு அவ உனக்கு என்ன கெடுதல் பண்ணா? கொஞ்சம் பொறுமையா இருக்கமாட்டியா? உனக்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்கத்தானே போயிருக்காங்க” தன் பலம் கொண்டு கத்தினார்.

நாயின் உருவத்தை மாற்றிய சங்கவி தன் கோர முகத்தைச் சன்னல் பக்கம் நின்ற வள்ளியின் முன் காட்டி, “சும்மா கத்தாத அத்த. அவனுங்க கண்டுபிடிக்கப் போகலை. தடயங்களை அழிச்சிட்டு நகுலை கொலைகாரனா ஆக்கி உள்ள தள்ளப் போயிருக்கானுங்க”

“அடப்பாவி உயிரோட இருக்கும் போதுதான் நாங்க சொல்றதைக் கேட்கலை. பேயா இருந்தும் தப்பு எதுன்னு தெரியலையா? நீ நிஜமாவே பேய்தானா? பழிவாங்க வந்திருக்கன்னா தப்பு செய்தவனைக் கொல்லு. அதைவிட்டுட்டு எந்தப் பாவமும் செய்யாதவங்களை ஏன் சித்ரவதை பண்ற?” வள்ளி ஆத்திரத்திலும் இயலாமையிலும் கதறினார்.

“நான் சொல்றது புரியலை இல்ல, நம்பல இல்ல… ஆ… ஆ… ஆ…” எனக் கத்திய சங்கவி நாயாக மாறி, வள்ளி அலற! அலற! தெய்வானை மீது ராட்சசி ஆட்டம் ஆடினாள். தன் வெறி அடங்கியதும் காற்றாக மாயமாகிப் போனாள்.

அவள் மறைந்ததும் வீட்டின் கதவுகள் தானாகத் திறந்தன. தட்டுத் தடுமாறி ஓடி வந்த வள்ளி தெய்வானையைத் தன் மடியில் தூக்கி வைத்து நெஞ்சில் அடித்து அழுதார்.

உள்ளே நடப்பது எதுவும் தெரியாமல் கதவையும் அழைப்பான் மணியையும் அடித்துக் கொண்டிருந்த சந்திரனும் சரவணனும் திடீரென்று கதவு திறந்து, வள்ளியின் ஓலம் கேட்க, பதறியடித்து உள்ளே வர, தெய்வானையைக் கண்டு இருவரும் தலையில் அடித்து அலறினர்.

மூவரும் அலறும் சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டினர் ஓடி வர, இரத்த சகதியில் கிடந்த தெய்வானையைக் கண்டு அவர்களும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

சந்திரன் தன் கைகளால் தூக்கிப் பிடித்திருந்த தெய்வானையின் தலை வலுவிழந்து மெல்ல மெல்ல அவர் கைகளில் சரிந்தது. வீறிட்டு அலறும் பல ஓலங்களின் சத்தம் காதைக் கிழித்தது.

தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top