- Joined
- Aug 31, 2024
- Messages
- 34
- Thread Author
- #1
அத்தியாயம் - 7
மெல்ல மெல்ல நகர்ந்து நாள்கள் பத்தை கடந்திருந்தது. நகுல் வரவும் இல்லை. வினோத்தைத் தொடர்பு கொள்ளவும் இல்லை.
இரண்டு மூன்று நாள்கள் காத்திருந்த வினோத் அதற்கு மேல் தாமதிக்காமல் காவல்துறையில் வேலை செய்யும் தன் நண்பனைச் சந்தித்து விபரங்கள் கூறி, சங்கவி கொடுத்திருந்த நகுலின் கைப்பேசி எண்ணை வைத்து அவன் வீட்டு முகவரியைத் தெரிந்து கொண்டான்.
முகவரி தெரிந்த பிறகு பொறுமை என்பது இருக்குமா வினோத்துக்குச் சிறுத்தையாகப் பாய்ந்து சென்று நகுல் வீட்டுக் கதவைத் தட்ட, ஒரு பெண் எட்டிப் பார்க்க, அவள் புடவையைப் பிடித்து இரு குழந்தைகள் நிற்க, “நகுல் வீடுதானே அவர் இருக்காரா?” என்றான்.
“ஆமா அவர் வீடுதான். அவர் ஆபீஸ் போயிருக்கார். நான் அவரோட மனைவிதான் நீங்க யாருன்னு விபரம் சொன்னா அவரிடம் சொல்றேன்” அவன் முகம் வாடியதைக் கண்டு கேட்டாள்.
மனைவி என்ற வார்த்தை காதில் விழுந்ததும் மனம் எரிமலையாகக் குமுற, அதை மறைத்து, “நகுலோட ஃப்ரெண்ட் நான். பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு பார்க்க வந்தேன். அவனுக்குக் கால் பண்ணேன் அவன் எடுக்கலை. அதான் வீட்டுக்கு வந்துட்டேன். வினோத்துன்னு சொல்லுங்க” என்று வெளியில் வந்தவன் கோபத்தை இரண்டு சக்கர வாகனத்தில் காட்டினான்.
எதையோ எதிர்பார்த்து வந்தவன் ஏமாற்றமாகச் செல்வதைக் கண்டு வினோத்தையே பார்த்திருந்தாள் நகுலின் மனைவி செல்வி.
ஒரு கயவனை நம்பி ஏமாந்துவிட்டாளே! ஆத்திரம் தலைக்கேற உள்ளே வந்த வினோத், “சங்கவி!” எனக் கத்தினான். அவளைத் தவிர மற்ற அனைவரும் பதறியடித்து வந்தனர்.
“வினோ, ஏன் கத்துற? பக்கத்து வீட்டுக்குக் கேட்கப் போகுது. எதுனாலும் அமைதியா பேசு” கலக்கமாக தெய்வானைச் சொல்ல.
“அவளை முதல்ல வெளிய வரச் சொல்லுங்கம்மா” மனதில் சுமந்திருக்கும் வேதனையைச் சொல்ல முடியாமல் சோபாவில் அமர்ந்தான்.
திவ்யா, இலக்கியா வந்துவிட்டால், உலகமே கையில் வந்தது போல் துள்ளிக் குதிக்கும் ஆட்டுக் குட்டியைப் போல் துள்ளி துள்ளிக் குதிப்பாள். பத்து நாள்களாக வீட்டிற்குள் உலா வருபவர்களைக் கண்டு காணாமல் இருந்தாள்.
சங்கவியின் பேச்சு, செயல், அன்பு எல்லாமே மாறிவிட, அவளின் பாராமுகமும் இவர்கள் விலகிச் செல்வதும் மனதில் முள்ளாகக் குத்தியது. பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தனர்.
வினோ தொண்டைக் கிழிய கத்தியும் வெளிய வராத சங்கவியிடம் ஆத்திரம் வந்தாலும், அதைக் காட்டும் நேரம் இதுவல்ல என்று சங்கவியிடம் சென்று வெளியில் வரச் சொன்னாள்.
சங்கவி நிமிர்ந்து திவ்யாவின் முகம் பார்க்க, அவளோ சன்னலைப் பார்த்திருக்க, ஏளனச் சிரிப்பு சிரித்தவள் வெளியில் செல்ல, அவள் பின்னாடியே திவ்யாவும் சென்றாள்.
“இப்ப எதுக்குக் கத்திட்டு இருக்க? நகுல் வரேன்னு சொல்லியிருக்கார்ல. அதுக்குள்ள நீ ஏன் அவர் வீட்டுக்குப் போன? இப்ப என்ன அவர் கல்யாணம் ஆனவர். ரெண்டு குழந்தைங்க இருக்குன்னுதானே கத்துற? அதெல்லாம் தெரிஞ்சுதான் காதலிச்சேன். நகுல் எதையும் மறைக்கலை எல்லா உண்மையையும் சொல்லியிருக்கார். அவ சரியில்லைன்னுதான் அவர் என்னையே காதலிச்சார்.”
மனசாட்சியை விற்றுவிட்டுச் சுயநலமாகப் பேசும் சங்கவியை, ‘பாளார்! பளார்!’ என அறைந்தாள் திவ்யா.
“நீ இவ்ளோ கேவலமா எப்படி மாறின? ஒரு குடும்பமே உன்னால நாசமாகும்னு தெரிஞ்சும் எப்படித் துரோகம் பண்ண மனசு வந்தது?” அதற்கு மேல் பேச முடியாமல் தரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள் திவ்யா. இலக்கியாவும் அமர விழிகள் நீரில் நனைந்தன.
காதலால் தெரியாமல் தவறு செய்துவிட்டாள். அவள் வாழ்க்கை நன்றாக அமைந்தால் போதும் என நினைத்திருந்தவர்களுக்கு, செய்வது தப்பு என்று தெரிந்தும் செய்திருக்கிறாளே என்பதை மனம் ஏற்க மறுத்தது. தன்னைக் கட்டுப்படுத்த நினைத்தும் முடியாமல் அடித்துவிட்டாள்.
‘பட்! பட்!’ எனத் தலையில் அடித்துக் கொண்டு சந்திரன் அழ, சரவணன் ஓடி வந்து கையைப் பிடிக்க, ஏற்கனவே அழுது அழுது ஓய்ந்த போன தெய்வானை, இதைக் கேட்டதும் மயங்கிச் சரிந்தார்.
சந்துருவும் வள்ளியம்மையும் அவரைத் தாங்கிப் பிடிக்க, இலக்கியா தண்ணீர் எடுத்து வர உள்ளே ஓட, திவ்யா தலையணையை எடுத்து வந்து தெய்வானை தலையைத் தூக்கி வைத்தாள்.
குழந்தையாகவே பார்த்திருந்தவள் இன்று பூதாகரமாக நிற்பதைக் கண்டு அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல், நடப்பதை எல்லாம் பார்த்தவாறே ஆடாமல், அசையாமல் அமர்ந்திருந்தான் வினோத்.
ஒரு நிமிடமும் பல யுகமாகக் கரைய, எழுந்த வினோத், “சரி உன்னோட முடிவுதான் என்ன? அந்த ரெண்டு குழந்தைங்க முகமும் அவங்க சிரிச்ச சிரிப்பும் இன்னும் என் கண்ணில் நிற்கு. ஆனால், நீ மனசாட்சியே இல்லாம இருக்க, உன்னிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை. இனிமே நீதான் சொல்லனும்” விரக்தியாகக் கேட்டான்.
“நகுல் விவாகரத்து வாங்க ஒரு வருஷம் ஆகும்னு சொல்லியிருக்கார். அதுவரை கல்யாணம் பற்றிப் பேச வேண்டாம்னு சொல்றார். விவாகரத்து வாங்கிட்டு அவரே வீட்ல வந்து பேசுற வரைக்கும் நீங்க பொறுமையா இருங்க” ஏதோ சாதனைச் செய்யப் போவது போல் கட்டளையிட்டாள். மயங்கிச் சரிந்திருந்த தெய்வானையை மனதில் ஈரம் இல்லாமல் பார்த்துச் சென்றாள்.