• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
10


திருமணம் முடிந்ததும் பாகீரதி தான் வாங்கி வந்திருந்த செயினை, அண்ணனின் கையில் கொடுத்து தாரிணிக்கு போடச் சொன்னாள்.

அவனோ புத்தம்புது மனைவியை மோதல் பார்வை பார்த்தான்.

‘ஷப்பா! ஏதோ காதல் பார்வை பார்க்கிறதா நினைப்பு போல. எப்பப்பாரு ஒரே முறைப்ஸ்தான்.’ மனதினுள் மணவாளனிடம் மல்லுக்கட்டியவள், அவனிடம் மட்டும் அப்பாவியாக, தனக்கு இதில் சம்பந்தம் இல்லையென்று தலையாட்டினாள்.

‘நானும் நம்பிட்டேன்’ என்றொரு பார்வை வீசி, செயினை அவள் கழுத்தில் அணிவித்தான். சற்று நேரத்திற்கெல்லாம் விடைபெற்றுக் கிளம்பத் தயாராக, மாமனாரிடம் தற்பொழுது திருப்பூர் செல்வதாகவும், சென்னை வந்ததும் அவர்களை வீட்டிற்கு வரச்சொன்னான்.

அதற்குள் நண்பர்கள் குழு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கிளம்ப ஆரம்பித்த பொழுது, அவர்களிடம் வந்த ப்ரவீண், “தம்பிங்களா ஒரு சின்ன ஹெல்ப். என் தங்கையை எங்க வீட்ல கொண்டு விடமுடியுமா?” என்றான்.

பேய்முழி முழித்தவர்களிடம், “நீங்க நல்ல பசங்கன்றதை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நிரூபிச்சீங்க. அந்த தைரியத்துலதான் என் தங்கையை உங்களோட அனுப்பறேன். பார்த்து பத்திரமா கூட்டிட்டுப் போய் விட்டிருங்க” என்றவனுக்குத் தெரியுமா, அந்த நல்லவர்களில் ஒருவன்தான் திருப்பதிக்கு தன் தங்கையை திருமணம் செய்யப்போனது. அதற்கு அந்த மற்றவர்கள் துணை போனதென்பது.

தங்கையிடம் சென்றவன், “நாங்க அப்பாவை பார்த்துட்டு அப்படியே மருதமலை போயிட்டு, அப்பாவோட சென்னை வர்றோம் அம்மு. அம்மாவை சமாளிக்கணும்” என்றான்.

அண்ணன் சொல்வதில் உள்ள உண்மை உணர்ந்தவள், சம்மதித்து நண்பர்களுடன் செல்ல, ப்ரவீணின் கார் திருப்பூர் நோக்கிப் பயணித்தது.

செல்லும் வழியில், “ஏன் பாகீரதி? உன் அண்ணனுக்கு எங்களைப்பற்றி எதுவுமே சொல்லலையா?” என்ற நிதிஷிடம், “எதை?” என்று புரியாமல் கேட்டாள்.

“அதான்பா. அந்த திருப்பதி மேட்டர்” என ராஜேஷ் சொல்ல,

“ம்கூம்... சொல்லியிருந்தா நீங்க கார்ல போகமாட்டீங்க பசங்களா? கார்தான் உங்க மேல போகும்” என அசால்ட்டாக சொன்னாள்.

“என்னது?” என ஒட்டுமொத்தமாக அதிர்ந்தவர்களை அலட்சியப்படுத்தி, “உண்மையைத்தான் சொன்னேன். எங்கண்ணனுக்குத் தெரியாத வரைக்கும்தான் நீங்க பிழைச்சீங்க. இனிமேலும் சொல்லாமலிருக்கிறது நீங்க நடந்துக்கிற விதத்தைப் பொருத்துதான்’ என்றாள் சற்று மிரட்டலாகவே.

“ஹேய்! என்ன நீயும் மிரட்டுறியா?” என உஸ்மான் உஸ்ணமாக கேட்க,

“நோ நோ மிரட்டலாம் செய்யலபா. ஆனா, எங்கண்ணனுக்கு தெரிஞ்சா என்னால அவங்களை கண்ட்ரோல் பண்ண முடியாதுன்னு சொல்றேன். அவ்வளவுதான்பா” என்றாள் அதே அசால்ட்டுடன்.

“அடப்பாவிகளா! ஒருத்தன் மாத்தி ஒருத்தன் நம்மள ரௌண்ட் கட்டிட்டுத்தான் இருக்கானா? இவன் இல்லன்னா அவன். எவன்கிட்ட மாட்டினாலும் முடிஞ்சோம்டா சாமி. மதன் வாய்விட்டே புலம்பினான்.

“வாட் யூ சே மதன்?” என பாகீரதி கேட்க,

“ம்... உன் பாடிகார்ட்ஸ் பற்றி சொன்னேன். உங்கண்ணன் பரவாயில்லை. உன் முறைப்பையன் இருக்கானே, என்னை முறைக்கிற முறைப்புல முடியலபா” என்றான்.

“என்ன உளர்ற? எங்கண்ணன் ஓகே. யார் அந்த முறைப்பையன்?” என்று பாகீரதி தன் கேள்வியை ஆரம்பித்தாள்.

‘டேய் மதன்! இது ஸ்ரீ அண்ணனுக்குத் தெரிஞ்சது யூ காலி மேன். க்ளோஸ் யுவர் மௌத்’ என மூளை அறிக்கை விட, “இல்ல பாகீ. சும்மாதான் ஒரு ப்ளோல சொல்லிட்டேன். டிரைவர் அண்ணா சென்னை போய்ச்சேர எவ்வளவு நேரமாகும்?” என்று பேச்சை மாற்றினான்.

அவளோ தோள்குலுக்கி வெளியே வேடிக்கை பார்க்க, “என்னடா” என்ற நண்பர்களிடம், பின்னர் ஒருநாள் ஸ்ரீனிவாசன் பற்றி ஒரு சின்ன இன்ட்ரோ கொடுத்து வைத்து, அதன்பின் அவர்களும் ஸ்ரீனிவாசனுக்கு அடங்கியது தனிக்கதை.

திருப்பூரில் அவினாசி ரோடிலிருக்கும் அந்த பெரிய வீட்டிற்குள் கார் பிரவேசிக்க, காரிலிருந்து இறங்கி தாரிணியை இறங்கச்சொல்லி கண்களால் சைகை செய்தான் பிரவீண்.

மலங்க மலங்க விழித்தாலும், ‘ஏன் வாயால சொல்லமாட்டாங்களோ!’ என மனம் வாதாட, “இது யார் வீடு? உங்களுக்கு இங்க வீடு இருக்கிறதா பாக்கி சொன்னதில்லையே? இங்க யார் இருக்காங்க?” என கேள்வி மேல் கேள்வி கேட்டு பேசிக்கொண்டே போனவளை நிறுத்த, ‘ஸ்ஸ்ஸ்..’ என வாயில் விரல் வைக்க, பயத்தில் அவள் சத்தத்தை நிறுத்தியதும், “ஒண்ணுக்கு நாலு கார்மெண்ட்ஸ் வச்சிட்டு, வீடு இல்லாம இருப்பாங்களா என்ன? எல்லாமே தெரிஞ்சிக்கலாம். இப்ப சைலன்ட்டா வா” என்றான் அவளின் அதிர்ச்சியை உணராதவனாய்.

“ஏனுங்க தம்பி! வரும்போதே அம்மணிய முறைச்சிட்டு வாறீங்க. பயந்திருமுல்லங்க” என்றபடி ஒரு நடுத்தரவயதுப் பெண்மணி ஆரத்தியுடன் வந்தார்.

“அம்மா! அது” என ப்ரவீண் இழுத்தான்.

“அம்மாவா!” என அதிர்ந்தவளைப் பார்த்து,

“ஆமா அம்மாதான். எங்கம்மா பாரதி” என்றான் தெளிவாய்.

கணவனின் வார்த்தையில் பொய்யில்லை என்பதை உணர்ந்த தாரிணி, “அப்ப சந்திரா ஆன்ட்டி?” என்றாள் கேள்வியாய்.

“அவங்களும் என்னோட அம்மாதான்” என்றான் அவள் கண்கள் பார்த்து அழுத்தமாய். அந்த பார்வை சொல்லியது, ‘இதற்கு மேல் என்னிடமிருந்து எதையும் கேட்காதே என்று.’

அதில் கொஞ்சமே பயமும், நிறைய குழப்பமும் வர, ‘டேய்! என்னை கன்ப்யூஸ் பண்றான்டா. இவனை இழுத்துட்டுப் போங்கடா! இவனை இழுத்துட்டுப் போங்கடா!’ என்று சமீபத்தில் பார்த்த விஜயசாந்தி நடித்த தெலுங்கு தமிழாக்கப் படத்தில், வில்லன் வக்கீல் சொல்லும் வசனம் மனதில் தோன்ற, குழப்பத்திலும் வந்த சிரிப்பை அடக்க முயற்சித்தாள்.

என்னவென்று பார்த்தவனின் பார்வையை உணர்ந்து, ‘ஒன்றுமில்லையென்று’ தோளைக்குலுக்க, ஏனோ அந்த அழகில் அழகாய் விழத்தான் தோன்றியது ப்ரவீணுக்கு.

அவர்கள் இருவரின் பார்வையையும் சின்னச் சிரிப்புடன் பாரதி ரசித்திருக்க, “என்னம்மா ஆரத்தி எடுக்க இவ்வளவு நேரமா?” என்று அங்கு வந்த கணபதியின் குரலில், கணவனிடமிருந்து பார்வையை விலக்கி அவரைப் பார்த்தவள் முகம் பேயறைந்தாற் போலானது. கணவன், அம்மா என்றழைத்த பெண்மணியின் தோளில் கைபோட்டு சிரித்தபடி நின்றவரைப் பார்த்தவள் மனம், ‘பாக்கி நீ சொன்ன லேடி இவங்கதானா? உன் அண்ணனுக்குத் தெரிஞ்சா தாங்கமாட்டான் சொன்னியேடி. உங்கண்ணனே இவங்களுக்கு காவலுக்கிருப்பான் போலிருக்கே!” தோழிக்காக உருகினாள் அந்நிலையிலும்.

“என்னம்மா பார்க்கிற? பாகீரதி அப்பா எப்படி இன்னொரு லேடியோடன்னுதான?” என்று கணபதி கேட்டார்.

‘ம்...ம்கூம்’ என பல திசையில் தலையசைய,

“வீட்டுக்குள்ள போனதும் பேசிக்கலாம். பாரதி நீ ஆரத்தி எடு” என்றதும் ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்ப, “உட்காரும்மா” என்று மெத்திருக்கையைக் காட்டினார் கணபதி. வேகமாகக் கணவனைப் பார்த்ததும் கண்ணால் அவன் சைகை செய்ததில் உட்காரப் போனவள், பின்னாலிருந்து வந்த, “ஹாய் அண்ணி” என்ற வார்த்தையில் அப்படியே நின்று திரும்பிப் பார்த்தாள்.

தன் வயதை ஒத்த ஒருவன் வந்து, “ஹாய் அண்ணி நான் நவீன். செகண்ட் இயர் பி.எஸ்சி ஃபேஷன் டெக்னாலஜி” என்று தன்னை அறிமுகப்படுத்தினான்.

தலைவலிப்பது போலிருந்தது தாரிணிக்கு. அவளின் அதிர்ந்த முகம் பார்த்த ப்ரவீணுக்கோ பாவமாகத்தான் இருந்தது. ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சிகளைத்தான் தாங்குவாளென்று. இவளே இப்படியென்றால் அம்முவிற்கு உண்மை தெரியும்போது, என்னாகுமென்று நினைக்கும்போதே மனம் கலங்கியது. மெல்ல மனைவியை நோக்கி கால்கள் நகர, அதற்குள் வேலை செய்யும் பெண்ணிடம் சின்னச்சின்ன வேலைகள் சொல்லியபடி வந்த பாரதி, “என்னமா ஒரே நாள்ல ஷாக்மேல ஷாக் தர்றாங்களா?” என்றதும் புரியாத குழந்தையாய் பார்த்தவளிடம், “இதான் எங்கள் குடும்பம். நான் இவங்களுக்கு வப்பாட்டி இல்லமா. பொண்டாட்டிதான்” என்றதும் பையன்கள் இருவரும் “அம்மாஆஆ” என்றபடி சத்தம் போட்டனர்.

“என்ன தம்பிங்களா? தப்பா எதுவும் சொல்லலீங்ளே. அம்மணி புரியாம முழிக்கிறாங் பாருங்க. அதானுங்க” என்று அவர்களை சமாதானப்படுத்தி, “ஏனுங் பாப்பா புரிஞ்சிதுங்ளா?” என கேட்டார்.

அவளோ, ‘இல்லை’யென பாவமாய் தலையசைத்தாள்.

அவளின் நிலை மற்றவர்களுக்கும் புரிய, தன்னறைக்கு அழைத்துச் சென்ற பாரதி, ஒரு சுடிதார் எடுத்துக்கொடுத்து குளித்து மாற்றி வரச்சொல்லி, வந்ததும் பெரியவர்கள் காலில் சிறியவர்கள் விழுந்து ஆசிவாங்கினர்.

சாப்பிட்டு முடித்ததும், “தம்பி உங்க ரூமுக்கு பாப்பாவை அழைச்சிட்டுப் போங்க” என்றார்.

மாடியில் அந்த அறைக்குள் நுழைந்த தாரணி, சுற்றியுள்ள எதையும் உணராமல், அங்கிருந்த கட்டிலில் தலையில் கைவைத்து அமர்ந்தாள்.

அவளையே பார்த்திருந்தவன், “சாரி உன்னை குழப்புறதுக்காக கூட்டிட்டு வரல. என்னோட குடும்பத்தை நீயும் தெரிஞ்சிக்கணும்னுதான்” என்று மேலே தொடரும் முன் கைபேசி ஒலிக்க, தோழியின் நம்பரைப் பார்த்ததும் எடுக்கவா? வேண்டாமா? என்ற யோசனையிலேயே அழைப்பு நின்றிருந்தது.

மறுமுறை மிளிர்ந்த அழைப்பை எடுத்ததும், “ஹாய் தர்ணி எப்படியிருக்க? வீடு பிடிச்சிருக்கா? புது இடம்னு யோசிக்காத தர்ணி. அண்ணா உன்கூடவே இருக்காங்கள்ல. உங்க வீட்ல உள்ளவங்களை விட நல்லாவே பார்த்துப்பாங்க.”

‘ஆமா பார்த்துப்பாங்க. வந்ததிலிருந்து குழம்ப வச்சே சாகடிக்கிறாங்க. இவ என்னடான்னா சர்டிபிகேட் கொடுக்கிறா. போடி இவளே!’ என மனதில் திட்டி, “ம்.. ரொம்ப நல்லா பார்த்துக்கிறாங்க பாக்கி” என்றாள் அவனை முறைத்தபடி.

“தர்ணி” என இழுக்க,

“என்ன பாக்கி? எதாவது சொல்லணுமா?”

“ம்... நாம திருப்பதி போன விஷயம் அம்மா, அண்ணனுக்குத் தெரியும். ஆனா, அப்பாவுக்குத் தெரியாது. அதுக்கான காரணம் என்னன்னு நமக்கு மட்டும்தான் தெரியும். எதாவது உளறிடாத தர்ணி. அண்ணனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சிதுன்னா அப்பாவோட பேசவே மாட்டாங்க. குடும்பத்துக்குள்ள அனாவசியமான பிரச்சனை வரும்” என்றதும் மேலும் மேலும் கணவனை முறைக்க, “நான் நீ சொல்லிருவன்னு சொல்லலை தர்ணி. பட், என்னைப் புரிஞ்சிக்கோ தர்ணி” என்றாள் குரலில் படபடப்புடன்.

“ம்... நான் பார்த்துக்கறேன் பாக்கி. நீ டென்சனாகாத. உனக்கு என்னைப்பற்றி தெரியும்தான. நான் சமாளிச்சிக்கறேன்” என்று கைபேசி அழைப்பைத் துண்டித்தாள்.

“அம்முவா? கொடு நான் பேசுறேன்” என வந்தவனிடம், “வச்சாச்சி” என்றாள் கோவக்குரலில்.

‘எதுக்கு இந்த முறைப்பும் கோவமும்?’ என நினைத்ததை கேட்காமல் திரும்பினான்.


எதுவும் கேட்காமல் செல்பவன் மேல் கோவம் கோவமாக வந்தது தாரிணிக்கு. ‘அங்கே ஒருத்தி அண்ணன் அண்ணன்னு உருகுறா. இவங்க என்னடான்னா யாரையோ காண்பிச்சி அம்மா அம்மான்றாங்க. கடவுளே! கல்யாணத்தைப் பண்ணி வச்சி, இந்த பத்தொன்பது வயசு சின்னப்பிள்ளையை பாடாய்ப்படுத்தி கண்ணைக்கட்ட வைக்குறியே. இந்தப் பிரச்சனையை எப்படி தீர்க்கிறது தெரியலையே?’ என உள்ளுக்குள் புலம்பியபடி இருந்தாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
‘பிரச்சனையை எப்படி தீர்ப்பது?’ என புலம்பியபடி தலையில் கைவைத்து அமந்த தாரிணியிடம் வந்த பாரதி, “ஏனுங்கம்மணி தலையைப் பிடிச்சி உட்காந்துட்டீங்க? ரொம்ப குழப்புறோமுங்ளா?” என அவளருகில் அமர்ந்த பாரதியையே பார்த்திருந்தாள். உடல் வளர்ச்சியிலும், உருவத்திலும், முகத்திலும் ஒரு பக்குவம் தெரிந்தாலும், அமைதியான குணம். சந்திராவோ தோற்றத்தில் சின்னப்பெண்ணைப் போன்ற தோற்றத்திலிருப்பவர். இப்பொழுதும் பாகீரதிக்கு அக்காவா என நினைக்கத் தோன்றும் தோற்றம். கொஞ்சம் கண்டிப்பான தாய். கண்டிப்பான முதலாளி கூட.

யோசனையிலேயே பாரதியைப் பார்த்து, ‘சிரிக்கவா! வேண்டாமா!’ என யோசித்தவள் தலையை வருடி, “இங்க யாரும் கெட்டவங்க இல்ல கண்ணு. யாரும் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யல. இதெல்லாத்துக்கும் ஒரே காரணம் எங்க பொண்ணு பாகீரதிதான். அவ ஒருத்திக்காக மட்டும்தான் எங்க வாழ்க்கை முறையவே மாத்திக்கிட்டு, நிறைய விட்டுக்கொடுத்துப் போறோம். இன்னையில் இருந்து நீங்களும் எங்க வீட்டுப்பொண்ணு. முழுக்கதையையும் உங்க புருஷன் சொல்வாருங்க. உங்களுக்கு என்ரகிட்ட எதாவது கேட்கணுமுங்ளா?”

“அது நீங்க ஏன் வயசுல சின்னவங்களை வாங்க போங்க சொல்றீங்க? அதுவும் நீங்க பெத்த பையனைக் கூட” என்று தன் பெரிய சந்தேகத்தைக் கேட்டாள்.

ஹா..ஹா... என வாய்விட்டுச் சிரித்தவரை, உள்ளே வந்த ப்ரவீண் பார்த்தபடி நிற்க, “தம்பி உங்க ஒய்ஃப் சூப்பருங்க. என்னயிருந்தாலும் என்ர பொண்ணு பாகீ செலக்ஷனாச்சுங்ளே” என்றார்.

அவரின் முகத்தையே பார்த்திருந்த தாரிணியின் எண்ணம் உணர்ந்த பாரதி, “என்னடா என்ர பொண்ணு சொல்றேன்னு பார்க்குறீங்களாம்மணி? அவளும் ஒரு வகையில என்ர பொண்ணுதானுங். அப்புறம் ஏன் மரியாதையா கூப்பிடுறீங் கேட்டீங்கள்ல? என்ர பெரிய புள்ளைக்கு வயசுக்கு மீறின பக்குவம் இருக்கு. அப்பனுக்கு பாடம் எடுத்தவருங்க. அதான் அவருக்கு மட்டும் தனி மரியாதை. சின்னவனுக்கு இருக்காது. வா போ தான்” என்றார் சிரித்தபடி.

“நானும் இதை விடச்சொல்றேன். விடமாட்டேன்னுறாங்க” என்றபடி மனைவியின் மறுபுறம் அமர்ந்தான் பிரவீண்.

‘இவங்க என்ன இவ்வளவு கேசுவலா பக்கத்துல உட்கார்றாங்க’ என அதில் லஜ்ஜையுற்றவள் யாருமறியாவண்ணம் பாரதியின் புறம் நகர்ந்து அமர, அதைக் கவனித்தவன் கண்கள் சுருங்கி விரிந்தது.

“சரி நீங்க தூங்குங்க. காலையில சீக்கிரமா எழுந்து கோவிலுக்கு போயிட்டு ஊருக்கு கிளம்பணும். நான் வர்றேனுங்” என்று எழுந்து இரண்டெட்டு எடுத்துவைக்க அவரின் கைபிடித்திருந்தாள் தாரிணி. ‘தூங்குங்க’ என்று சொன்னதுமே ஏதோ ஒரு நினைவில் கையைப்பிடிக்க, என்னவென்பதுபோல் பார்த்த பாரதியிடம், “நான் உங்களோட படுக்கவா?” என்று தலைகவிழ்ந்தாள்.

மகனைத் திரும்பிப் பார்த்தவர், அவனின் சம்மதமான தலையாட்டலில், “சரிங்கம்ணி வாங்க போகலாம்” என்றார்.

“அவங்கதான் அப்பாவுக்கு பாடம் எடுத்ததா சொன்னீங்க? அ... அம்மா சொல்லவா? அத்தை சொல்லவா?” என தடுமாறினாள்.

“அத்தை! சொல்லுமா” என்று அவளின் தடுமாற்றத்தைத் தடுத்தார் பாரதி.

“ம்... சரிங்க அத்தை. ஆனா, நான் யாருக்கும் எந்த பாடமும் எடுக்கலையே. என்னை எதுக்கு வாங்க போங்க சொல்றீங்க? வா போ சொல்லுங்க.”

“சொல்லலாமே! தப்பில்லையே!” மனதில் மகிழ்வுடன் அவளை அணைத்தபடி வெளியேற, சிரிப்புடனே செல்பவர்களைப் பார்த்திருந்த ப்ரவீணுக்கு தாரிணி தன் மனைவியாக வந்ததை நினைக்கையில், மனதினுள் ஏதோ ஒரு நிம்மதி வந்தது,.

மறுநாள் காலை மருதமலை சென்று வந்ததும் சென்னை கிளம்பி வர, “சந்திராவை விசாரிச்சதா சொல்லிருங்க” என்ற பாரதியின் வார்த்தையைக் கேட்டதும், ‘இவங்க ரிலேஷன்ஷிப் அவங்களுக்கும் தெரியுமா?’ என்று தாரிணி விழித்தாள்.

“தெரியும் தாரணிமா” என்று அவள் முகத்தின் கேள்வி பார்த்து ஒரே போடாக போட்டார் கணபதி.

‘அச்சோ! என்னை கன்ப்யூஸ் பண்றாங்களே’ என மனம் திரும்பவும் அந்த வில்லன் வசனத்தைச் சொல்லி புலம்பியது.

ப்ரவீணிடம் வந்த பாரதி, “என்ர மருமககிட்ட விளக்கம் சொல்லிருங்க தம்பி. ரொம்ப குழப்பத்தில் இருக்காங்” என்றார்.

“சரிங்கம்மா” என்றவன் அவளை அழைத்துச் சென்று, “இங்க பார் தண்ணி...”

“தண்ணி இல்லை தாரிணி” என வெடுக்கென்று சொல்ல,

“எதோ ஒரு ணியா இருந்துட்டுப் போ. உன்கிட்ட இப்ப எல்லாத்தையும் சொல்ல முடியாது. அதை புரிஞ்சிக்கிற பக்குவமும் உனக்கு இப்ப இல்லை. அதுக்கான காலம் வரும்போது சொல்றேன்.”

“ஏன்? ஏன் புரிஞ்சிக்க முடியாது சொல்றீங்க?” என எகிறியபடி வந்தவள், “நானென்ன குழந்தையா? சின்னப் பொண்ணு மாதிரி என்னை ட்ரீட் பண்றீங்க? ஐம் மெச்சூர்ட் கேர்ள்” என்றாள்.

“ஆமாமா. பார்த்தேனே உன்னோட மெச்சூர்ட. மெச்சூர்டா இருக்கிறவதான் அம்முவை கூட்டிட்டு திருப்பதி போனியா? மெச்சூர்டா இருக்கிறவதான் பத்தொன்பது வயசு பொண்ணுக்கும், பையனுக்கும் மேரேஜ்கு சாட்சியா போனியா?” என்றான் உயர்ந்த குரலில்.

அவனின் குற்றச்சாட்டில், “அ..அது நான் எதுவும் பண்ணல” என திணறியவள், பின் தன்னை சமாளித்து, “அது மெச்சூரிட்டி இல்லன்றதில்ல. எப்படியாவது தடுக்கணும்னுதான் நினைச்சேன். பாக்கிதான்...”

“என்ன நிறுத்திட்ட? சரி அம்மு ஏன் அவசரமா மேரேஜ் பண்ணிக்கப் போனா?” அதைக் கேட்கும்போது தான் ஏன் தான் இந்த கோணத்தில் யோசித்ததில்லை என்றெண்ணினான்.

“அ...அதெல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாது.”

“ஏன் சொல்ல முடியாது?”

“ஏன்னா அவ உங்க எல்லார் மேலயும் அளவு கடந்த பாசம் வச்சிருந்தா.”

“வச்சிருந்தாள்னா? இப்ப இல்லைன்றியா?” என்றான் கேள்வியாய்.

“அப்படில்லாம் இல்ல. ஆனா, இந்த திருப்பூர் விஷயம் தெரிஞ்சா உங்களை விட்டு விலகிருவா.”

“ஓ... அப்ப நீ?” ‘நீயும் என்னைவிட்டு விலகிவிடுவாயா?’ என்கிற ரீதியில் கேட்கப்பட்ட கேள்வியை முழுவதும் புரிந்து கொள்ளாமல் போனாள் அவனின் மனைவி.

“எனக்கு முதல்ல அவதான் முக்கியம்.” பட்டென்று பதில் வர,

“அப்ப நான் முக்கியமில்லையா?” என்றான் சற்று ஏக்கமும் சேர.

கணவனின் குரலிலுள்ள வித்தியாசம் அறியாதவளோ, “அவளாலதான் நீங்க. உங்களால அவ இல்ல புரிஞ்சிதா. உங்க ரெண்டு பேர்ல யார் முக்கியம்னு கேட்டா, அவதான்னு சொல்வேன். அந்த நிலைக்கு என்னை கொண்டு வராதீங்க. இப்ப எனக்கு வழிவிடுங்க. உங்களைப் பொருத்தவரை மெச்சூரிட்டி இல்லாத பொண்ணாகவே இருந்துட்டுப் போறேன்” என்று முன்னே செல்ல,

அவளின் பேச்சில் வாயடைத்திருந்தவன், “மெச்சூரிட்டி இவளுக்கு இல்லையா. நிறையவே இருக்கு. அதான் என் தங்கைக்கு தோழியாயிருக்கா” என சிரித்துக்கொண்டே அவளைத் தொடர்ந்தான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
Tharani née mattumella nonum confuse ahi erruken. Enna 4 chapter wait pannuvum author will explain
ஹா..ஹா நானும் வெயிட் பண்ணுறேன்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top