• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
May 20, 2025
Messages
54
காதல்
பிரிவு
ஏக்கம்
சுகவதை
அவன் நேசம்!

வாரத்திற்கு ஒரு கவிதையைப் பதிவிட்டு விடுவாள் வள்ளி.

அவன் சிங்கப்பூர் சென்றிருந்த முதல் வாரத்தில் இக்கவிதையைப் பதிவிட்டிருந்தாள்.

எப்பொழுதும் அவள் வரிவரியாய் நீண்ட கவிதையாய் எழுதியே வாசித்திருந்தவனுக்குத் தன்னுணர்வுகளை நான்கே சொற்களில் அவள் வடித்திருப்பதைப் படித்துப் பேருவகையும் ஆச்சரியமும் கொண்டான்.

இக்கவிதை தாங்கியிருக்கும் உணர்வு அவனுக்கானது அல்லவா! அதுவே அவனை மேலும் பரவசத்திற்குள் ஆழ்த்தியது.

அன்றைய நாள் முழுவதும் இக்கவிதையை அவனது உதடுகள் அவ்வப்போது பூரிப்புடன் உச்சரித்த வண்ணம் இருந்தன.

சுகவதை - எத்தனை அழகான சொல்லாடல். எப்படி இவளால் இப்படி ஒரே சொல்லில் தன்னை வீழ்த்திச் சாய்க்க முடிகிறது என்று எண்ணிப் பரவசப்பட்டான். அவளின் ஒவ்வொரு காதல் கவிதையின் உணர்வாய் உயிராய் தானே இருக்க வேண்டுமெனப் பேராசைக் கொண்டது அவனுள்ளம். அவன் நினைவெங்கிலும் அவளே நிறைந்திருந்தாள்.

அவளுடன் இது வரை அலைபேசியில் பேசியதே இல்லை அவன்! அவளுடைய கைப்பேசி எண் கூட அவனிடம் இல்லை. ஆனாலும் இக்கவிதை அவள் அவனிடம் பேசிய உணர்வை அவனுக்களித்தது.

'இது நான் உங்களுக்காக எழுதிய கவிதை' என்று தனக்கே தனக்காய் ஒரு கவிதையை அவள் எழுதித் தரும் நாளுக்காய் பரபரப்பான மனத்துடன் காத்திருக்கத் துவங்கினான் கார்த்திகேயன்.

ஆனால் அடுத்து வந்த வாரங்களில் எவ்வித கவிதையும் அவள் பதிவிடவேயில்லை. என்னவாகியிருக்கும் என்று எண்ணி குழம்பியவன், இந்தியா சென்றதும் அவளிடம் பேசிக் கொள்ளலாம் என்று மனத்தை ஆற்றுப்படுத்திக் கொண்டான்.

இந்த இரு வார இடைவெளியில் தான் வள்ளியின் தந்தை செல்வகுமார் நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இரு நாள்கள் கழித்துச் சாதாரண அறைக்கு மாற்றப்பட்ட செல்வகுமாருக்கு, அடுத்த ஒரு வாரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டி இருக்க, அதற்கான பணத்திற்காக வள்ளி தனது சொந்தங்களைக் கேட்டு நொந்து போயிருந்த நேரத்தில் செல்வகுமாரின் அக்கா மகன் உதயன் தான் அவர்களுக்குத் தேவையான உதவிப் புரிந்து உடனிருந்து பார்த்துக் கொண்டான்.

வள்ளியை விட ஐந்து வயது மூத்தவனான உதயனுக்குப் படிப்பின் மீது நாட்டமில்லாது போகப் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிப் பெறவில்லை. அதன் பிறகு தூத்துக்குடியில் தந்தையின் உணவுத் தொழிலைத் தான் எடுத்துச் செய்து கொண்டிருக்கிறான். உதயனின் தாயும் தந்தையும் மூன்று வருடங்களுக்கு முன்பு இறைவனடி சேர்ந்து விட்டனர்.

சிறு வயதில் ஊருக்குச் செல்லும் பொழுதினில் உதயனுடன் விளையாடுவாள் வள்ளி. மற்றபடி அவன் மீது பெரியதாக ஏதும் அபிப்பிராயம் இருந்ததில்லை அவளுக்கு.

வள்ளி பருவப்பெண்ணான புதிதில் ஒரு நாள் அவளை நேரில் பார்த்த உதயன், "மாமா உங்க பொண்ணு இருக்கக் கலருக்கு, ஐம்பது பவுன், நூறு பவுன் நகைப் போட்டா தான் எவனாவது கட்டிக்கிட வருவான்" என்று உரைத்து விட்டான்.

"நீ இருக்கும் போது, வேற எவனுக்கோ நான் ஏன்டா என் பொண்ணைக் கட்டிக் கொடுக்கனும்?" என்று செல்வகுமார் கூற,

"என்னது நான் உங்க பொண்ணைக் கட்டிக்கிறதா? நானே கருப்பு, நானும் கருப்பான பொண்ணைக் கட்டிக்கிட்டா எங்களுக்குப் பொறக்கிற குழந்தை எப்படி இருக்கும் மாமா? நான்லாம் நல்லா பளபளனு தங்க நிறத்துல உள்ள பொண்ணைத் தான் கட்டிப்பேனாக்கும்" என்று விட்டான் உதயன்.

அன்றிலிருந்து உதயனைச் சுத்தமாகப் பிடிக்காது வள்ளிக்கு. வரதட்சணை வாங்காத மாப்பிள்ளையைத் தான் மணம் செய்வேன் என அன்று முடிவு தான் வள்ளி.

இன்று வரை அவளின் திருமணம் நடைபெறாமல் தாமதமாகிக் கொண்டே போக, அதுவும் ஒரு காரணமாக அமைந்து போனது. அது இல்லாமல் தனது சம்பளப் பணத்தில் ஒரு பாதியை திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோருக்கு அளிப்பேன் எனவும் பெண் பார்க்க வருபவர்களிடம் உரைத்து விடுவாள். இவளின் இந்தக் கட்டளைக்கு ஏற்ப மாப்பிள்ளை கிடைக்காமல் இவளது திருமணம் தாமதமாகிக் கொண்டு போக, உதயன் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மணமகள் கிடைக்காமல் அவனின் திருமணமும் தாமதமாகிக் கொண்டே போனது.

தனிமை அவனைக் கொல்லும் நேரங்களில், 'பேசாம வள்ளியையே கல்யாணம் செஞ்சிக்கலாமா?' என்று பல முறை நினைத்திருக்கிறான்.

இந்நிலையில் மருத்துவமனை வாசம் முடிந்து குணமாகி வீட்டிற்கு வந்த செல்வகுமார் உதயனிடம், "உதயா எனக்கு ஏதாவது ஆகிட்டா பாப்பாவும் முத்துவும் தனியாகிடுவாங்களேனு தவிச்சிப் போய்ட்டேன்டா! நான் ஒன்னு கேட்பேன், எனக்காகச் செய்வியா?" எனக் கேட்டார்.

"சொல்லுங்க மாமா! எதுனாலும் செய்றேன்" என்றவன் வாக்குக் கொடுத்ததும்,

"என் பொண்ணைக் கட்டிக்கோடா" என்றார்.

இந்த உரையாடல் நடக்கும் சமயம் எவருமே இவர்களின் அருகில் இல்லை. அதனால் இந்தப் பேச்சைப் பற்றி வள்ளியும் வள்ளியின் அன்னை முத்துலட்சுமியும் அறியாது போயினர்.

செல்வகுமார் இவ்வாறு உரைத்ததும், உதயன் என்ன சொல்லவெனத் தெரியாது அவரைப் பார்த்திருந்தான். எந்தப் பெண் கிடைத்தாலும் மணம் செய்து கொள்ளும் மனநிலையில் இருந்தவனுக்கு, இதில் சம்மதம் தான் என்ற போதும் வள்ளியின் விருப்பத்தை அறிய விரும்பினான்.

அதனால் இவரின் உடல்நிலை சீரானதும் இதைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம் என்று எண்ணியவனாய், "எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க மாமா. யோசிச்சு சொல்றேன்" என்று விட்டான் உதயன்.

இரு நாள்கள் கழித்து வந்த வாரயிறுதி நாளில் வள்ளியை அருகே இருந்த பூங்காவிற்கு அழைத்துச் சென்றான் உதயன்.

தந்தையின் உடல்நிலை குறித்து ஏதோ பேசத் தான் தன்னைத் தனியே அழைத்து வந்திருக்கிறான் என்று எண்ணி உடன் வந்தவள், "என்ன உதயா? அப்பாவோட ஹெல்த் கண்டிஷன் பத்தி டாக்டர் எதுவும் சொன்னாங்களா? அதைப் பத்தி பேசத் தான் கூட்டிட்டு வந்தியா?" எனப் பதட்டத்துடன் கேட்டிருந்தாள்.

அவளின் பதட்டத்தைக் கண்டதும், "மாமாக்கு ஒன்னுமில்லை வள்ளி. நான் வேற விஷயமா பேச வந்தேன்" என்றவன் சற்று தயங்கியவனாய்,

"நாம கல்யாணம் செஞ்சிக்கலாமா வள்ளி?" எனக் கேட்டான்.

அன்று கார்த்திகேயன் இவளிடம் கேட்டிருந்த அதே இடத்தினில் இன்று இவனும் அதையே கேட்டிருக்க, இவள் அதிர்ந்த விழிப் பார்வையுடன் அவனைப் பார்த்தாள்.

அவளின் பார்வைக் கண்டு, "உன்கிட்ட இப்படிக் கேட்க எனக்குத் தகுதியில்லனு எனக்கே தெரியும். அன்னிக்கு கருப்பா இருக்கப் பொண்ணு வேண்டாம்னு நான் சொன்னப்ப எனக்கு இருந்த மெச்சூரிட்டி வேற! இப்ப என் நிறம் உனக்குக் குறையா தெரியலையானு நீ யோசிக்கலாம். எனக்கு முப்பத்திரண்டு வயசாகுது வள்ளி. அப்பா அம்மா இல்லாம தனியா வாழுற இந்த நிலைமைல எனக்குனு ஒருத்தி வந்தா போதும்ங்கிற மனநிலைக்கு வந்துட்டேன் வள்ளி" என்றவன் கூறியதைக் கேட்டுப் பரிதாபமாக அவனைப் பார்த்தாள் வள்ளி.

அவனின் மனவேதனை அவளுக்குப்‌ புரிந்தது. அவளுக்கு அந்நிமிடம் என்ன சொல்லவென்றே தெரியவில்லை.

அவளின் கலக்கமான பார்வையில், "உனக்கு என்னைப் பிடிக்காதுனு தெரியும்? ஆனாலும்..." என்றவன் இழுக்கவும்,

"முன்னாடி உங்களை எனக்குப் பிடிக்காது தான் உதயா. ஆனா நட்ட நடுகாட்டுல நின்னுட்டு தத்தளிச்சிட்டு இருந்த நேரத்துல, நான் இருக்கேன்னு வந்து அப்பாவோட ஆப்ரேஷனுக்கு அவ்ளோ உதவி செஞ்சிருக்கீங்க. இப்பவும் எங்களுக்கு மாரல் சப்போர்ட்டா இருக்கீங்க. உங்களை எப்படிப் பிடிக்காம போகும் உதயா. ஆனா கல்யாணம் வேண்டாமே!" என்று அவள் தயங்கியவாறு உரைக்க, இவனுக்குக் கவலையாகிப் போனது.

"சரி இதை அப்படியே வந்து உன் அப்பாகிட்ட சொல்லிடு வள்ளி. அப்புறம் நாளைக்கு நான் தான் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டேன்னு உன் அப்பா சண்டைப் போடக்கூடாது பாரு அதுக்குத் தான் சொல்றேன்" என்றான்.

"நான் ஏன் அப்பாக்கிட்ட சொல்லனும்?" என்று புரியாமல் இவள் கேட்க,

அவளின் தந்தை தன்னிடம் பேசியதை உரைத்தான்.

அவள் பெருத்த அதிர்வுடன் அப்படியே அமர்ந்து விட்டாள்.

தந்தையின் கவலையும் அவரின் நிலையும் இவளுக்கு நன்றாகவே புரிந்தது. இந்நிலையில் தான் இதைத் தந்தையிடம் உரைத்து அவரின் உடலுக்கும் உயிருக்கும் ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்வது என்று கவலையாகிப்‌ போனது வள்ளிக்கு.

"நீ தான் நாளைக்கு ஊருக்குப் போறல உதயா! கொஞ்ச நாள் போகட்டும் மாமானு சொல்லிடேன்! அப்பா திரும்பவும் இதைப் பத்தி பேசினா பார்த்துக்கலாம் உதயா" என்றதோடு இப்பேச்சை முடித்துக் கொண்டாள் வள்ளி.

ஆனால் அவனோ அவளது தந்தையிடம், "வள்ளிக்கு என்னைக் கட்டிக்கிறதுல விருப்பமில்லையாம் மாமா" என்று போட்டுக் கொடுத்து விட்டே ஊருக்குச் சென்றிருந்தான்.

அடுத்து வந்த நாள்களில் எல்லாம் அவளை உதயாவிற்கு மணம் செய்து வைப்பதற்கான மூளைச்சலவையைச் செல்வகுமார் செய்த வண்ணம் இருக்க, "என்ன தான்ப்பா பிரச்சனை உங்களுக்கு? எனக்குப் பிடிக்கலைனா விடுங்களேன்! நீங்க எங்களை விட்டு போனாலும் அம்மாவை நான் தனியாளாய் காப்பாத்துற அளவுக்குத் தான் என்னை வளர்த்து வச்சிருக்கீங்க. எங்களைக் காப்பாத்த யாரும் தேவையே இல்லைப்பா. அதுக்காக ஒரு கல்யாணம் எனக்கு வேண்டவே வேண்டாம்" என்று அவள் கத்திவிட்டு அலுவலகத்திற்குச் சென்றுவிட, அன்று ரத்த அழுத்தம் அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் செல்வகுமார்.

இதற்கு மேல் இத்திருமணத்தை அவள் ஒப்புக் கொள்ளாமல் இருக்கவே முடியாது எனும் சூழலுக்குத் தள்ளப்பட நொந்து போனாள் வள்ளி.

கார்த்திகேயனை காதலிக்கிறேன் என்று வீட்டில் உரைக்க அத்தனை பயம் கொண்டாள். இதனால் தந்தையின் உடலுக்கு ஏதேனும் பாதிப்பு வந்திடுமோ என்று அச்சம் கொண்டாள்‌.

குன்றத்தூர் முருகன் கோவில் சுற்றுப் பிரகாரத்தில் அமர்ந்தவளாய், 'கார்த்தி தான் எனக்குக் கணவனா வேணும் முருகா' உதடுகள் முருகரிடம் வேண்டுதல் வைத்து முணுமுணுக்க, கண்களில் இருந்து பெருகி வழிந்தது கண்ணீர்.

"இப்ப நான் என்ன செய்றது முருகா" என்று வாய்விட்டே புலம்பிய நிமிடம்,

"அவன்கிட்டயே பேசுமா" என்று அவளருகில் ஒருவர் அலைபேசியில் பேசியவாறு செல்ல, முருகரே தனக்கான வழியைக் காண்பித்த உணர்வில் உடனே கார்த்தியிடம் பேசுவதற்கான முயற்சியில் ஈடுபட்டாள்.

அங்கிருந்தே சத்யாவிற்கு அழைத்துப் பேசி அவனது சிங்கப்பூர் புலன எண்ணை வாங்கி, அவனுக்கு அழைத்தாள்.

அவளின் உள்ளம் படபடவெனத் துடிக்க, மூளையோ வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டிருந்தது.

ஏதோ அழைப்பு என விட்டேற்றியாய் எடுத்தவன், வள்ளியின் ஹலோ என்ற குரலிலேயே அடையாளம் கண்டு கொண்டான்.

"ஹலோ! வள்ளி! வள்ளி நீயா பேசுற?" துள்ளலான குரலில் இன்ப ஆச்சரியத்துடன் கேட்டான்.

தன்னைப் பிரிந்து இருக்க முடியாமல் அழைத்து விட்டாளோ என்று எண்ணி அவனின் மனம் குதூகலித்திருந்தது.

"ஆமா கார்த்தி" எனும் போதே அவளின் குரல் தழுதழுத்துப் போக,

அவளது குரலில் இருந்த தவிப்பில், 'இல்லை வேறு ஏதோ பிரச்சினை' என்று அவனின் மூளை எடுத்துக் கொடுக்க, தீவிரமடைந்த முகத்துடன், "என்னடா என்னாச்சு? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?" அக்கறையான அன்பான குரலில் வினவினான்.

அவனின் அக்கறையில் இவளின் கண்களில் கண்ணீர் பெருகி வழிய, "நாம கல்யாணம் செஞ்சிக்கலாமா கார்த்தி" அழுகைக் குரலில் கேட்டிருந்தாள்.

அவன் மனம் மகிழ்வு கொள்ளாமல் பரிதவிக்க, "எதுவும் பிரச்சினையா டா அங்க?" எனக் கேட்டான்.

"ஹ்ம்ம்" என்றவளாய் மூக்கை உறிஞ்சியவள், "நாம கல்யாணம் செஞ்சிக்கலாம் கார்த்தி! உங்களை விட்டு பிரிச்சிடுவாங்களோனு பயமா இருக்கு. என்னால உங்களைத் தவிர யாரையும் கணவனா நினைச்சி கூடப் பார்க்க முடியலை கார்த்தி" எனக் கூறி அழுதாள்.

அவளின் அழுகை இவனின் காதல் நெஞ்சைச் சுட்டுக் கண்களை நிறைக்க, "பொண்டாட்டி அழுதா புருஷனுக்கு மனசு தாங்குமா சொல்லு" மென் குரலில் வினவினான்.

"ஹான்" என்று திகைத்தவள், "என்னை விட்டுட்டு போய்ட்டீங்க தானே" என விசும்பலுடன் உரிமையாய் கேட்க,

"உன்னை விட்டுட்டு வந்து அதே சுகவதையைத் தான் நானும் அனுபவிச்சிட்டு இருக்கேன்டா வள்ளி" என்றவன்,

"என் பொண்டாட்டியை எப்படி நான் வேறொருத்தருக்கு விட்டுக் கொடுப்பேனாம். தைரியமா இருடா. நாளைக்கே அம்மா அப்பாவை வந்து உங்க வீட்டுல பேசச் சொல்றேன். நான் இந்தியா வந்தன்னிக்கே கல்யாணம் வச்சிக்கலாம் சரியா" அவளுக்கான ஆறுதல் வார்த்தைகள் பல பேசி தேற்றினான்.

மறுநாளே கார்த்திகேயனின் பெற்றோர் அவளின் வீட்டில் பெண் கேட்டு வந்து நின்றனர்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top