அத்தியாயம் -1
அந்தப் வளாகத்தின் நுழைவாயிலில், ‘அவிநாஷ் அபார்ட்மென்ட்’ என்கிற அதன் பெயர், பெரிய பெரிய எழுத்துக்களால் அழகாக பொறிக்கப்பட்டிருந்தது.
வளாகத்தின் உள்ளே அந்த இன்னோவா கார் நுழையும் போது நேரம் இரவு எட்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
உள்ளே சென்ற வாகனம் ஒரு வட்டமடித்து C பிளாக் முன்பு சென்று நின்றது. அதன் கதவைத் திறந்து ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கினாள் ஷைலஜா.
ஷைலஜா.. நாற்பத்தி இரண்டு வயது. ஆனால் அவளைப் பார்த்தால் முப்பத்து இரண்டுக்கு மேல் மதிப்பிட முடியாது. அப்படி ஒரு இளமையான தோற்றம் ஷைலஜாவுக்கு.
அந்த நேரத்திலும் அவள் உடுத்தியிருந்த அந்தக் காட்டன் புடவை சிறிதும் கசங்காமல், காலையில் உடுத்திக் கொள்ளும் போது எப்படி நேர்த்தியாக மடிப்பு கலையாமல் இருந்ததோ, அதே போன்று தான் இப்போதும் இருந்தது.
நீள் வட்ட முகம். பளிச்சென்று மின்னிடும் அழகான பெரிய கண்கள். அதில் இலேசாகத் தீட்டிய மை. நெற்றியில் இரு புருவங்களுக்கும் இடையே சிறிய நீள வடிவப் பொட்டு.
குட்டையான தலைமுடி. அதைச் சேர்த்து போனி டெய்லாக போட்டுக் கொண்டிருந்தாள். முன் இரு பக்கங்களிலும் மட்டும் இலேசான சிறிது வெள்ளை முடிகள். அதுவும் அவளுடைய அழகுக்குக் கொஞ்சம் கூடுதல் அழகைச் சேர்த்திருந்தது எனலாம்.
முழங்கை அளவு நீளமும் காலர் கழுத்தும் கொண்டு அணிந்திருந்த ஜாக்கெட்டில் அவளுடைய தோரணையை இன்னும் அதிகமாக்கிக் காட்டியது.
அந்த அழகான முகத்தில் இலேசாக கொஞ்சம் சோர்வு மட்டும் தெரிந்தது. இறங்கி சிறிது நடந்து, ஒரு ஓரத்தில் இருந்த மின்தூக்கியில் நுழைந்தாள். மூன்றாவது மாடிக்கான பட்டனை அழுத்தினாள்.
அது மூன்றாவது மாடியைச் சென்றடைந்ததும் இறங்கி, வரிசையாக இருந்த வீடுகளில் கடைசி ஓரத்தில் இருந்த, தன்னுடைய பத்தாம் நம்பர் வீட்டின் முன்பு சென்று நின்றாள்.
கைப்பையில் இருந்த சாவியை எடுத்து பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்தவள், சுவிட்ச்சை அழுத்தி விளக்குகளை எரிய விட்டாள்.
அவளையும் அறியாமல், மனதில் ஒரு விதமான சோர்வு உள்ளே ஊடுருவி நுழைந்து கொண்டது. கைப்பையை சோபாவில் எறிந்து விட்டு, அங்கேயே தொப்பென்று அமர்ந்து கொண்டாள்.
அது மூன்று படுக்கையறை கொண்ட பெரிய வீடு. அவ்வளவு பெரிய வீட்டில் அவள் மட்டும் தான் இருந்தாள் தனிமையில். இனி அடுத்த நாள் காலை அலுவலகத்திற்குக் கிளம்பிச் செல்லும் வரை அவளுடன் இருக்கப் போவது அந்த தனிமை மட்டும் தான்.
வீட்டில் இருந்த அந்த அமைதி, அவளை இன்னமுமே ஆயாசப்படச் செய்தது. தனிமை என்பது அவளுக்குப் புதிதல்ல தான்.
அவளுக்கு மிகவும் பழக்கமான ஒன்று தான் இந்த தனிமை. ஆனாலும் கடந்த நான்கைந்து வருடங்களாகத் தான் தனிமையைக் கொஞ்சம் உணரத் தொடங்கி இருந்தாள்.
அவள் கணவன் மாதவன் அவளை விட்டு, இவ்வுலகை விட்டுப் பிரிந்து பன்னிரெண்டு வருடங்கள் ஆகி விட்டன. ஷைலஜாவிற்கு அப்போது வெறும் முப்பது வயது தான்.
அவர்களது ஒரே மகள் நேஹாவுக்கு அப்போது எட்டு வயது. அந்த முப்பது வயதில் தன் ஒரே மகளுடன் தனியாக இருப்பது அவளுக்குப் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.
அவளை அந்த இளம் வயதில் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி உறவினர்கள், நண்பர்கள் என்று அவளுக்கு எவ்வளவோ அறிவுரை கூறி இருந்தாலும் அவளுக்கு என்னமோ அந்தச் சமயத்தில் திருமணத்தில் நாட்டமில்லை என்பது மட்டும் அல்லாமல், தன் கணவன் மாதவனின் இடத்தில் வேறொரு மனிதனை வைத்து யோசித்துப் பார்க்கக் கூட அவள் விரும்பவில்லை என்பதால் வேண்டாம் என்று மறுத்து விட்டாள்.
மகளை நன்கு படிக்க வைத்து ஆளாக்கி அவளுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணம் மட்டும் தான் அப்போது அவளுக்குள் இருந்தது.
மாதவனுடன் திருமண வாழ்வில் அவள் இணைந்த போது அவளுக்கு இருபத்தோரு வயது. அவர்களின் இனிதான காதல் வாழ்க்கையில் அடுத்த வருடமே நேஹா பிறந்தாள்.
மனைவி ஷைலஜா மீதும் மகள் நேஹா மீதும் உயிரையே வைத்திருந்தான் மாதவன். நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் இருந்தான்.
எந்தக் கவலையும் இன்றி ஓடிக் கொண்டிருந்தது வாழ்க்கை. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, மாதவன் எப்போதும் போல் அன்று காலையில் வேலைக்குக் கிளம்பிச் சென்றவன், மாலையில் வீடு திரும்பும் போது எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் சிக்கி, உயிரற்ற உடலாகத் தான் வீடு வந்து சேர்ந்தான்.
இடிந்து போய் விட்டாள் ஷைலஜா. என்ன தான் படித்த தைரியம் மிக்க பெண்ணாக இருந்தாலும் கணவன் இல்லாத அவளுடைய எதிர்கால வாழ்க்கை அவள் கண் முன்னே வந்து அவளைப் பயமுறுத்தியது.
தன்னெதிரே அழுது கொண்டே நின்றிருந்த நேஹாவைப் பார்த்தாள். பாவம்! அந்த வயதில், தன் தந்தைக்கு என்ன நேர்ந்தது என்பது பாதி புரிந்தும் பாதி புரியாததுமான ஒரு மனநிலையில் தான் இருந்தாள் அந்தக் குழந்தை.
தாய் அழுவதைக் கண்டு அவளும் அழுதாள். அழும் மகளை வாரி அணைத்தாள் ஷைலஜா. தன் குழந்தைக்கு, தான் மிகவும் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டாள்.
உறுதியுடன் எழுந்தாள். ஆக வேண்டிய காரியங்களை எல்லாம் நடத்தி முடித்தாள். நல்லவேளையாக பணத்திற்குக் கவலையில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நடக்கப்போவது அறிந்தது போல, தன் சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை அந்த வயதிலேயே சேமிக்கவும் செய்திருந்தான் மாதவன்.
அதனால் அப்போதைக்கு அதைப் பற்றிய கவலை கொள்ளத் தேவையில்லாமல் போயிற்று ஷைலஜாவிற்கு.
கணவன் இல்லாத வீடு என்னவோ போல் ஏற்றுக்கொள்ள முடியாமல் சிரமமாகத் தான் இருந்தது முதலில். எங்கு திரும்பினாலும் அவனுடைய ஞாபகம் ஏதோ ஒரு வகையில் வந்து விடும் அவளுக்கு.
இடையிடையே பாவம் நேஹா, தன் தந்தையைப் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு, அவளுக்குப் புரியும் படியும் அதே நேரம் தன் தந்தையை நினைத்து அவள் மனதில் எந்த ஒரு பயமோ கலக்கமோ ஏற்படாதவாறும் பார்த்துப் பார்த்து பதில் கூற வேண்டியிருந்தது அவளுக்கு.
இனி அவளுக்குத் தந்தையும் தாயும் தானே தான்; மாதவன் இனி திரும்பி வர மாட்டான்; இறைவனோடு மேலுலகத்திற்குச் சென்று இணைந்து விட்டான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக நேஹாவுக்குப் புரிய வைத்தாள் ஷைலஜா.
நேஹாவும் புரிந்து கொண்டாள். தன் தாயின் நிலையை அறிந்தது போல், அவளுக்கு எதிலுமே சிரமம் தராமல் மிகவும் சமர்த்தாகவே இருந்தாள்.
அப்படியே ஒரு ஆறு மாத காலங்கள் ஓடி விட்டன. அதன் பிறகு தான் ஷைலஜா, ஒரு நிலைக்கு வந்து அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
மாதவன் சேர்த்து வைத்த சேமிப்பு இருந்தாலும், வாழ்நாள் முழுதும் அதை மட்டுமே வைத்து சமாளிக்க முடியாது அல்லவா! அதனால் ஏதாவது செய்தாக வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
பொதுவாகவே அவளுக்கு வண்டிகள் ஓட்டுவது என்றால் மிகவும் விருப்பம். இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாது நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதிலும் ஆர்வம் காட்டுவாள். கற்றும் வைத்திருந்தாள்.
மாதவன் இருக்கும் போது, எங்கேயாவது கார் எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பும் நேரத்தில், போகும் போது மாதவன் ஓட்டினால், வரும் போது, தான் தான் ஓட்டுவேன் என்று பிடிவாதம் பிடித்து ஓட்டி வருவாள் ஷைலஜா.
அவள் ஆர்வம் மாதவனுக்குத் தெரிந்த விஷயம் என்பதால் ஒன்றும் சொல்லாமல் கொடுத்து விடுவான் அவளிடம்.
மனைவி, கார் ஓட்டும் லாவகத்தைப் பார்த்து ஆச்சரியம் தாங்காது மாதவனுக்கு.
“சூப்பரா வண்டி ஓட்றே ஷைலு நீ!” என்று பாராட்டுவான் மனைவியை.
“அப்படியா?” நம்ப முடியாமல் கேட்பாள் ஷைலஜா.
“ஆமா ஷைலு.. நிஜமா தான் சொல்றேன். சொல்லப்போனா என்னை விட நீ தான் நல்லா ஓட்றே. டிராஃபிக் அதிகமா இருக்கிற இடத்தில கூட கொஞ்சமும் பயமில்லாம ஈசியா ஹேண்டில் பண்றே. இவ்வளவு அழகா ஓட்ட எப்படி கத்துகிட்டே நீ? வெரி குட் பொண்டாட்டி! ஐ லைக் இட் வெரி மச்!” மனதார பாராட்டவும் செய்வான்.
அதிலும் தங்கள் அருகில் வண்டியில் செல்பவர்களை சரியாக ஓட்டவில்லை என்று மாதவனிடம் குற்றம் வேறு சாட்டுவாள் ஷைலஜா. அவர்களுக்குக் கேட்காதவாறு அவனுடைய காதில் மெல்ல முணுமுணுப்பாள்.
“பாருங்க, வண்டிய எப்படி ஓட்றான்னு. சுலோ பண்ண வேண்டிய இடத்தில கூட சுலோ பண்ணாம ஓட்றதப் பாரு. அங்கே அவனப் பாருங்க, வண்டியத் திருப்புறப்ப ஹார்ன் போடத் தெரியுதான்னு. இவங்கள எல்லாம்..” என்று திட்டிக் கொண்டு வருவாள்.
அப்போதெல்லாம் மாதவன் கேலி செய்வான்.
“பேசாம நீ ட்ரெய்னிங் ஸ்கூல் வேணா ஆரம்பிக்கலாம் போல ஷைலு. நல்ல ஸ்ட்ரிக்டா சூப்பரா நடத்துவே போல!”
மாதவன் அப்போது ஒரு பேச்சுக்குக் கூறியது, இப்போது அதை நிஜமாக்கினால் என்ன என்று ஷைலஜாவின் மனதில் தோன்றத் தொடங்கியது.
நன்றாக யோசித்து, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் துவங்குவது என்று முடிவெடுத்து விட்டாள்.
உடனே அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தவர்களிடம் எல்லாம் விசாரிக்கத் தொடங்கினாள். கூகுளிலும் தேடி அதற்கான செய்திகளைச் சேகரித்தாள்.
முதலில் பயிற்சிப் பள்ளிக்கு ஒரு இடம், பிறகு பயிற்சி கொடுப்பதற்கு வண்டிகள், பயிற்சி கொடுப்பதற்கு நல்ல பயிற்சி மிக்க பயிற்சியாளர்கள், எல்லாவற்றுக்கும் மேல், பயிற்சி தந்த பிறகு அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வாங்கித் தர வேண்டிய வேலைகள் என்று, அதை ஆரம்பிப்பதற்குப் பின்னால் இத்தனை வேலைகள் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டாள்.
ஒரு புறம் அவளுக்குப் பயமாக இருந்தாலும், அவளுடைய அந்த ஆர்வம் அவளுக்கு உந்துதலாக இருந்தது. எப்படியும் பயிற்சிப் பள்ளி ஆரம்பித்தே ஆக வேண்டும் என்கிற உறுதியுடன் வேலை பார்த்தாள்.
கடைசியில் அவளுடைய கனவு ஒரு நாள் நனவாகியது. தன் கணவனின் பெயரான மாதவனைச் சுருக்கி ‘மாதா ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி’ என்று தனது பள்ளிக்குப் பெயர் வைத்தாள். தன் கணவனின் சேமிப்பில் இருந்து முதல் போட்டாள்.
ஒரு இடத்தை வாடகைக்குப் பிடித்தாள். இரண்டு கார், இரண்டு பைக் என்று ஆரம்பித்தாள் முதலில். ஆண்களுக்கு கற்றுத் தர ஆண் பயிற்சியாளர்களையும், பெண்களுக்குக் கற்றுத் தர பெண் பயிற்சியாளர்களையும் நியமித்தாள்.
அவள் எதிர்பார்த்ததை விட நன்றாகவே ஓடியது பயிற்சிப் பள்ளி. அடுத்த இரண்டு வருடங்களில் இன்னும் இரண்டு வண்டிகள் வாங்கினாள். அந்த இடத்தையும் சொந்தமாகவே வாங்கி விட்டாள்.
அவளுடைய கடும் முயற்சியால் இன்று ‘மாதா ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி’ ஒரு புகழ்பெற்ற ஓட்டுநர் பள்ளியாக உருவெடுத்து இருந்தது.
காலையில் மகள் நேஹாவை பள்ளியில் விட்டு விட்டு அவளும் அவளுடைய பள்ளிக்குச் சென்று விட்டு, மாலை மகளை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீடு வந்து சேருவாள். அம்மாவும் மகளும் நல்ல தோழிகளாயினர்.
அவளுக்குப் பிடித்த ஒரு வேலை. அதே தொழிலாக அமைந்ததால் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் தொழிலைக் கவனித்தாள்.
கணவன் இல்லாத தனிமையை அவளுடைய அந்தப் பயிற்சிப் பள்ளி நீக்கியது என்றே கூறலாம். தனிமை என்பதே துளியும் மனதில் வரவில்லை அவளுக்கு. காலங்கள் உருண்டோடியது. நேஹாவும் வளர்ந்து கல்லூரிக்குச் செல்லும் வயதை அடைந்தாள்.
அப்போதிருந்து தான் ஷைலஜாவிற்கு அந்த வாழ்க்கை கொஞ்சம் சலிப்பு தட்ட ஆரம்பித்தது.
இதென்ன ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கை என்று தோன்றியது அவளுக்கு.
நேஹாவும் தோழிகளுடன் சேர்ந்து குரூப் ஸ்டடி என்று விடுமுறை நாட்களில் சென்று விடுவாள். கல்லூரி நாட்களில் அதெல்லாம் சகஜமாக நடைபெறும் ஒரு விஷயம் தானே! அதனால் ஷைலஜாவும் செல்ல அனுமதித்தாள் அவளை.
ஒரு சில நாட்களில் அவளுடைய தோழிகள் சிலர் சேர்ந்து அங்கு, அவர்கள் வீட்டிலும் வந்தனர் சேர்ந்து படிப்பதற்கு என்று.
இடையே கல்லூரியில் இருந்து ஃபேக்டரி விசிட், சுற்றுலா என்று சென்று வந்தாள் நேஹா. சிறிது சிறிதாக தனிமை எனும் கொடுமையை உணர ஆரம்பித்தது ஷைலஜாவின் மனம்.
நேஹா கல்லூரி படிப்பை முடித்தாள். இறுதி வருடம் படிக்கும் போதே தன்னுடன் படிக்கும் ஹரீஷ் என்கிற ஒரு பையனைக் காதலித்தாள். அதைத் தன் அம்மாவிடமும் மறைக்காமல் சொல்லி விட்டாள்.
ஷைலஜா, மகளின் காதலுக்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. நல்ல பண்பான குடும்பமாக இருந்தால் கண்டிப்பாக திருமணம் செய்து வைப்பதாக வாக்களித்தாள் மகளிடம்.
ஹரீஷின் குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள். நல்ல பதில் தான் கிடைத்தது அவளுக்கு. ஹரீஷை வீட்டிற்கு வரவழைத்துப் பேசினாள். மரியாதை தெரிந்த நல்ல பையனாகத் தெரிந்தான் அவளுக்கு. சந்தோஷமாக ஒப்புதல் கொடுத்தாள் மகளிடம்.
படிப்பு முடிந்ததும் வேலையும் கிடைத்தது ஹரீஷுக்கு. உடனே அவளாகவே ஹரீஷின் குடும்பத்திடம் தொடர்பு கொண்டாள். அவர்களும் சம்மதம் தந்தனர். இப்போது ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு தான் நேஹாவுக்கும் ஹரீஷுக்கும் திருமணம் முடிந்தது.
ஹரீஷுக்கு பெங்களூரில் மாற்றல் வந்தது. வேறு வழியில்லை, போய்த்தான் ஆக வேண்டும். இருவரும் பெங்களூரு சென்று விட்டனர். அங்கு சென்ற பிறகு நேஹாவுக்கும் வேலை கிடைத்து விட்டது. தவறாமல் வாரத்திற்கு ஒரு முறை தன் அம்மாவிடம் பேச வீடியோ காலில் வந்து விடுவாள் நேஹா.
ஆனாலும் வீட்டில் இருந்த தனிமை, முன்பை விட அதிகம் வாட்டத் தொடங்கியது ஷைலஜாவிற்கு. அந்தத் தனிமையை எப்படி வெல்வது என்று தான் தெரியவில்லை அவளுக்கு. சில இரவு நேரங்களில் காரணமே இல்லாமல் ஓவென அழ வேண்டும் போல் இருக்கும் அவளுக்கு.
தனக்கு எதற்கு அழுகை வருகிறது? தான் ஏன் காரணமே இல்லாமல் கலங்குகிறோம்; இப்படி எதற்குமே பதில் கிடைக்கவில்லை ஷைலஜாவிற்கு.
தனக்கு யாருமே இல்லாதது போன்ற ஒரு உணர்வு அவளை அழுத்தியது. யாராவது தன்னை தோளில் சாய்த்துக் கொள்ள மாட்டார்களா; நான் இருக்கேன் உனக்கு என்று தலையைக் கோதி விட மாட்டார்களா என்று மனம் ஏங்கியது அவளுக்கு.
தன் தனிமையை ஷைலஜா எப்படி வெல்லப் போகிறாள்? அதிலிருந்து மீண்டு வருவாளா? பார்க்கலாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில்.