Stories that touch hearts

Home  /  29. ராஜேஷ் (மதில் தாண்டுமா மனசு)  /  Chapter 27

CHAPTER 27

மனசு – கடைசி பகுதி

By karuppiahrajesh70@gmail.com · November 19, 2026

0

​மதில் தாண்டுமா மனசு – 27​

அனுஷா இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்த அந்த மருத்துவமனையே கோலாகலமாக மாறியிருந்தது. மதுமிதாவும் நவீனும், “இது எனக்குரிய குழந்தை… இது எனக்குரியது!” என்று தங்களுக்குள் செல்லமாக உரிமைப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.​அவர்களைப் பார்த்துச் சிரித்த கனகம், “இந்த ரெண்டு பயலுகளும் கொஞ்சம் முன்னாடி பிறந்திருந்தா, எவனையாவது ஒருத்தன உனக்குப் பிடிச்சுக் கட்டி வச்சிருப்பேன் மது!” என்று கிண்டலடிக்க, வனஜாவோ, “இல்ல அண்ணி… இந்த ரெண்டு பயலுகள்ள ஒருத்தன் பொண்ணா பிறந்திருந்தா, என்னோட நவீன்குட்டிக்குப் பிடிச்சுக் கட்டி வச்சிருப்பேன்!” என்று வழிமொழிந்தார்.​அமுதா அனுஷாவின் படுக்கையருகே அமர்ந்து, குழந்தைகள் அவளுக்குத் தொந்தரவு தராமல் கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தார். மறுபுறம், தனக்கு ஒரே நேரத்தில் இரண்டு பேரன்கள் பிறந்த சந்தோஷத்தில் திளைத்த சிவம், மருத்துவமனையில் இருந்த அனைவருக்கும் இனிப்புகளை வழங்கித் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருந்தார். கார்த்திக்கும் ராதிகாவும் வந்து குழந்தைகளைப் பார்த்து நலம் விசாரித்துச் சென்றனர்.​பிரசவத்தின் மூலமாக உடலில் சொல்ல முடியாத வலிகள் இருந்தாலும், தன் மழலைச் செல்வங்களை அருகில் கண்ட அனுஷாவின் இதயம் ஆனந்தக் கண்ணீரில் நனைந்திருந்தது. மறுபுறம், தனக்குக் குழந்தைகள் பிறந்த செய்தியைக் கேள்விப்பட்ட ஆனந்தன், தனது அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இனிப்பு வழங்கித் தன் மகிழ்ச்சியைக் கொண்டாடினான்.​இதற்கிடையில், மீனாவும் சங்கரும் தங்களது ஹோட்டலிலேயே அனுஷாவுக்கும் அவளுடன் இருப்பவர்களுக்கும் சேர்த்துச் சுடச்சுடச் சமைத்துக் கொண்டிருந்தனர். சமையல் முடிந்ததும், அனைத்தையும் பதமாக எடுத்துக்கொண்டு விரைவாக மருத்துவமனைக்குச் செல்ல மீனா துரிதப்படுத்திக் கொண்டிருந்தாள்.​மருத்துவமனையில் ஒரு வார காலம் கழித்து வீடு திரும்பிய அனுஷாவும் குழந்தைகளும், நலம் பெற்றனர். குழந்தை பிறந்து முப்பதாவது நாளில், கோலாகலமாகப் பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. ஒரு குழந்தைக்கு ‘வருண்குமார்’ என்றும், மற்றொரு குழந்தைக்கு ‘சந்தோஷ்குமார்’ என்றும் ஆனந்தன் பெயர் சூட்டினான்.​முருகனின் பெயரான ‘குமார்’ இணைக்கப்பட்டிருப்பதால், முதல் மொட்டைக் காணிக்கையைத் திருச்செந்தூரில் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் தீர்மானித்தனர். அதன்படி, குழந்தைகள் பதினோறாவது மாதத்தை எட்டியபோது, குடும்பத்தினர், சொந்த பந்தங்கள் மற்றும் ஆனந்தனின் கம்பெனித் தொழிலாளர்கள் என அனைவரையும் அழைத்துக்கொண்டு திருச்செந்தூருக்குப் பயணம் செய்தனர். அங்கு வருணுக்கும் சந்தோஷுக்கும் மொட்டை அடித்து, காதணி விழாவும் சிறப்புடன் நடத்தப்பட்டது. அதேவேளையில், தன் மகளுக்கு வேண்டிய வரம் நிறைவேறியதன் நன்றிக்கடனாக, வனஜாவும் தன் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தினார்.​அனுஷாவின் வாழ்க்கை இப்போது ஆனந்தத்தின் கலகலப்போடு அதிவேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. வருணும் சந்தோஷும் திடுதிடுவென வளர்ந்து மூன்று வயதை எட்டியிருந்தனர்.​அப்போது ஒருநாள் காலையிலேயே மீனா தேடி வந்து அனுஷாவை அழைத்துச் சென்றாள். வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு என்னவென்று புரியவில்லை. சிறிது நேரத்தில் திரும்பி வந்த அனுஷா, “ஆனந்த்… நம்ம மது பெரிய மனுஷி ஆயிட்டா!” என்று சொல்ல, கனகம் ஆச்சரியமடைந்து, “அதனாலதான் உன்னை மீனா காலையிலேயே அழைச்சிட்டுப் போனாளா?” என்றார்.​அனுஷா புன்னகையுடன், “ஆமாம் அத்தை, நான்தான் நேரில் பார்த்து உறுதி செய்தேன்” என்றாள். இதைக் கேட்டதும் பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த வருண், “நானும் இப்போ பெரிய ஆளாயிட்டேன்!” என்றான். உடனே சந்தோஷும் எழுந்து, “நானும் நல்லா பெருசா வளர்ந்துட்டேன்!” என்று மார்தட்டிக்கொள்ள, அனைவரின் முகத்திலும் சிரிப்பு மலர்ந்தது.​கனகம் கேலியாக, “இருக்கிறதே ஒரு பொண்ணுதான்… நீங்க ரெண்டு பேரும் இப்போவே பெரிய ஆளாயிட்டீங்கன்னா, அவளை யாருக்குக் கட்டி வைக்கிறது?” என்று சொல்லிச் சிரிக்க, அந்த இடமே கலகலப்பானது.​மதுமிதாவுக்கு ஏழாவது நாளில் புனித நீராட்டு வைபவம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலையில் சீர்வரிசைப் பொருட்களுடன் தாய்மாமன் வீட்டில் இருந்து புறப்பட்ட மேளம், அந்தத் தெருவைச் சுற்றிக்கொண்டு மீனாவின் வீட்டை வந்தடைந்தது. ஆனந்தும் அனுஷாவும் இணைந்து மதுமிதாவுக்குப் புனித நீர் ஊற்றி விழாவைச் சிறப்பாகச் செய்து முடித்தனர்.​புதுப்பொலிவுடன் அலங்கரிக்கப்பட்டு நாற்காலியில் அமரவைக்கப்பட்டிருந்த மதுமிதாவுக்கு, தாய்மாமன் மாலை மாற்றும் சம்பிரதாயம் தொடங்கியது. அப்போது வருணும் சந்தோஷும், “மதுவுக்கு நான்தான் மாலை போடுவேன்! நான்தான் போடுவேன்!” என்று போட்டி போட்டுக்கொண்டு முண்டிடித்துக்கொண்டு நின்றனர்.​இருவரையும் தன் கைகளில் தூக்கி வைத்துக் கொண்ட ஆனந்தன், இருவரின் கைகளிலும் இரண்டு மாலைகளைக் கொடுத்து, “சரி… ரெண்டு பேருமே மாலையைப் போடுங்கள்” என்றான். மதுமிதா வெட்கத்துடன் குனிந்து அவர்களிடம் மாலையைப் பெற்றுக் கொள்ள, குழந்தைகளைக் கையில் வைத்துக் கொண்டே ஆனந்தன், “என்ற பசங்க ரெண்டு பேரும் உன் கழுத்துல தாலி கட்டுவாங்கடா?” என்று ‘நாட்டாமை’ பட வசனத்தைப் பேசிச் சிரிக்க, மதுமிதாவோ செல்லமாகச் சிணுங்கிக்கொண்டே, “உன்ற பசங்க ரெண்டு பேரும் உதைப்படப் போறாங்க!” என்று பதிலடி கொடுக்க, அந்த இல்லம் முழுவதும் மகிழ்ச்சியின் எதிரொலியாகச் சிரிப்பொலி விண்ணைப் பிளந்தது.​அனுஷாவின் மனநிலையில் முன்பு இருந்த ‘முதல் கணவனுக்குச் செய்யும் துரோகம்’ என்ற எண்ணம் தற்போது முற்றிலும் மறந்து போயிருந்தது. தாண்டவே முடியாது என்று தயங்கி நின்ற மதிலை எப்படித் தாண்டினாள் என்று இப்போது வரை அவளுக்குத் தெரியவில்லை; ஆனால், அவள் அந்த மதிலைத் தாண்டி வர ஆனந்தன் கை கொடுத்தான் என்பது அவளது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.​அதேபோல, ஆனந்தனும் எந்த ஒரு இடத்திலும் அனுஷாவின் முதல் கணவனைப் பற்றிய பேச்சுகளையோ, அவளுக்கு முன்பு வேறு திருமணம் ஆனதைப் பற்றியோ மறந்தும் சொல்லிவிடக் கூடாது என்பதில் தீர்மானமாய் நின்றான். அவன் அனுஷாவைத் திருமணம் செய்து கொண்டால் போதும் என்ற நிலையிலோ, தன்னைத் தியாகியாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலோ திருமணம் செய்து கொள்ளவில்லை. அனுஷாவைப் பற்றி எந்த ஒரு விஷயமும் தெரியாதபோதே, அவள் மீது கொண்ட காதலினால் மட்டுமே அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டிருந்தான். மற்றபடி, ‘இன்னொருவர் மனைவி’ என்ற குத்தல் பேச்சை எந்தக் காலத்திலும் அவன் உபயோகப்படுத்த மாட்டான். அவன் அனுஷாவுக்கு மட்டும் வாழ்க்கை கொடுத்தவன் அல்ல; இறந்து போன வருணுக்கும் முழுமையான வாழ்க்கை கொடுத்துவிட்டான்—தன் மகனாக அவனது பெயரைத் தினமும் உச்சரித்துக் கொண்டிருப்பதன் மூலம்!​

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!