மதில் தாண்டுமா மனசு – 23
புதியதாகச் சொந்த வீடு கட்டி, குடும்பத்தோடு அங்கே குடியேறிய பிறகு மீனா தன் தாய் வீட்டிற்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தாள். ஆனால், கணவர் சங்கருக்குப் புதிதாகக் கடை அமைந்து, அதில் புதிய தொழில் தொடங்கியிருந்ததால் அவளுக்குப் பொறுப்புகள் அதிகரித்தன. அங்கும் இங்கும் அலைவது சிரமமாக இருந்ததால், சிறிது சிறிதாக அவள் தாய் வீட்டிற்கு வந்து செல்வதைக் குறைத்துக்கொண்டாள்.
மறுபுறம், மதுமிதாவின் தந்தை வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய பிறகு, அவள் தன் தாய்வழிச் சொந்தங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதனால் தன் தாய்மாமனை அடிக்கடி வந்து பார்ப்பதையும் தவிர்த்தாள். எப்போதாவது தோன்றினால் மட்டுமே மீனாவோடு சேர்ந்து வந்து பார்த்துவிட்டுச் செல்வதோடு சரி.
இப்படியாக ஒரு வருட காலம் வேகமாக ஓடி மறைந்தது.
ஆனால், இந்தக் காலகட்டத்தில் சந்தோஷின் மனம் சொல்லொண்ணாத் துயரத்தில் வாடிப்போனது. முன்பு போலக் கலகலப்பான மனநிலையில் அவன் இல்லை; எப்போதும் ஒருவித அமைதியுடனே காணப்பட்டான். வீட்டில் இருந்தவர்களோ, “முப்பது வயதைத் தாண்டிவிட்டதால், பக்குவப்பட்ட பருவத்தை எட்டிவிட்டான் போலும்” என்று அவனது அமைதிக்கு வேறு காரணம் கற்பித்துக் கொண்டார்கள். ஆனால், மனநலம் குன்றிய அந்தப் பிள்ளையின் உள்ளம், தன் சகோதரியும் அவளது குழந்தையும் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற ஏக்கத்தாலேயே உள்ளுக்குள் உடைந்து கொண்டிருந்தது யாருக்கும் புரியவில்லை. அந்தப் பிரிவு அவனை ஆழமாகப் பாதித்திருந்தது.
அப்படியொரு நாளின் அதிகாலையில், யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சந்தோஷ் தன் உறக்கத்திலேயே உயிரையும் விட்டுவிட்டான்.
தினமும் காலையில் கனகம் அவனை எழுப்பிக் கழிவறைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அன்றும் அதே போல அவனை எழுப்பிக்கொண்டிருந்தார். ஆனால், சந்தோஷ் சிறிதும் அசைந்து கொடுக்காமல் படுக்கையிலேயே அமைதியாகக் கிடந்தான்.
உள்ளுக்குள் பதற்றம் தொற்றிக்கொள்ள, “சந்தோஷ்… சந்தோஷ்…” என்று அவனது கன்னத்தில் தட்டி எழுப்பினார் கனகம். அவரது பதற்றமான குரல் கேட்டு அனுஷாவும் விரைந்து அறைக்குள் வந்தாள்.
அவளும் உடன் சேர்ந்து சந்தோஷைச் சத்தமிட்டு எழுப்பிப் பார்த்தாள்.
அசைவற்ற அவனது உடலைப் பார்த்த நொடியில், சந்தோஷ் உயிரிழந்துவிட்டான் என்பதை அனுஷா புரிந்துகொண்டாள். கனகத்திற்கும் அந்தக் கசப்பான உண்மை புரிந்துதான் போனது. ஆனால், அந்தத் தாயின் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. பித்துப் பிடித்தவர் போல, தன் மகனை எழுப்பும் முயற்சியை அவர் நிறுத்தவே இல்லை.
அனுஷா தங்களது அறையில் இருந்த ஆனந்தனிடம் சந்தோஷ் இறந்துபோன செய்தியைத் தெரிவித்தாள். இடிந்துபோன ஆனந்தன் அப்படியே அமர்ந்துவிட்டான்.
அவனைச் சுயம் கொள்ளச் செய்த அனுஷா, “உங்கம்மா இறந்துபோன சந்தோஷை எழுப்பிக்கிட்டு இருக்காங்க; கூட போய் அவங்களைச் சமாதானப்படுத்துங்கள்” என்று சொல்லிவிட்டு, தன்னுடைய மொபைல் போனில் மீனாவைத் தொடர்பு கொண்டு சந்தோஷின் இறப்புச் செய்தியைத் தெரிவித்தாள். அதைப் போலத் தன் தாய் வீட்டுக்கும் பெரியம்மா வீட்டுக்கும் சந்தோஷின் இறப்புச் செய்தியைச் சொல்லிவிட்டாள்.
ஆனந்தன் மெல்ல எழுந்து சந்தோஷ் கிடந்த அறைக்குள் நுழைந்தான். “சந்தோஷ் என் செல்லக்குட்டி, எந்திரிமா! எந்திரிச்சு வந்து ஒண்ணுக்குப் போயிட்டு படுத்துக்கோடா தங்கம்!” என்று கண்ணீர் வடியச் சொல்லிக் கொண்டிருந்தார் கனகம். “நான் கூப்பிடக் கூப்பிட எந்திரிக்க மாட்டேங்கிறான்; எழுப்புடா!” என்று ஆனந்தனிடம் சொன்னவர், “சந்தோஷ்… சந்தோஷ்… அண்ணன் வந்துட்டான் பாரு, அண்ணனைக் கூப்பிடுடா!” என்று கதறித் துடித்தார்.
சிறிது நேரத்தில் மீனாவும் மதுமிதாவும் சங்கரோடு நுழைந்தார்கள். மீனாவைப் பார்த்ததும், “வாடி வாடி மீனா! இந்தா அக்கா வந்துட்டா பாருய்யா, உன்னைப் பாக்க அக்கா வந்துருக்கா! அக்காவைக் கூப்பிடுடா, அக்காவைக் கூப்பிடு!” என்று புலம்பினார். மதுமிதாவின் கையைப் பிடித்து, “மாமாவை எழுப்பு, மாமாவை எழுப்பு!” என்று சொன்னவர், “சந்தோஷ்… இதோ பாப்பா வந்துட்டா, பாப்பா வந்துட்டாடா!” என்று தழுதழுத்த குரலில் சொல்லிக்கொண்டு பைத்தியம் பிடித்தவர் போல நடந்து கொண்டிருந்தார்.
மீனாவுக்குத் தன் சகோதரனின் இழப்பு தாங்கிக் கொள்ள முடியாத அழுகையைத் தந்தது. தாய்க்கு என்ன நேர்ந்ததோ என்ற பதற்றமும் அவளைப் தொற்றிக்கொண்டது. “அம்மா, நீ கொஞ்ச நேரம் அமைதியா இரும்மா! கொஞ்ச நேரம் அமைதியா இரு!” என்று அவரைத் தாங்கிக் கொண்டு நின்றாள்.
மதுமிதாவுக்கு நடப்பது ஓரளவு புரிந்தாலும், அவள் குழந்தையாய் இருப்பதால் அப்போது அவளால் எதுவும் செய்ய இயலவில்லை. ஆனந்தன் பேச்சற்றுப் போனான்.
சிறிது நேரத்தில் வனஜாவும் அமுதாவும் அவர்களது குடும்பத்தோடு ஆனந்தன் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
கார்த்திக் ஆனந்தன் அருகில் சென்று, “ஆனந்த், அடுத்து ஆக வேண்டியதைப் பாரு. நீயே இப்படி உடைந்து போய் நின்றால் யாரு இவங்களுக்கு ஆறுதல் சொல்லிச் சமாதானப்படுத்துவது?” என்று தைரியம் கொடுத்தான். ஆனாலும் ஆனந்தன் நொறுங்கிப் போய்விட்டான். கார்த்திக் சொன்னதை ஏற்று உடனடியாக வெளியே வந்து, சொல்ல வேண்டிய சொந்தபந்தங்களுக்குச் சொல்லிவிட்டான். ஊர் முறைப்படி சொல்ல வேண்டியவர்களுக்குத் தெரிவித்துவிட்டு, கார்த்திக்கோடு சேர்ந்து சந்தோஷைத் தூக்கிச் சென்று குளிப்பாட்டி, நாற்காலியில் அமர்த்தி இதர சடங்குகளைச் செய்து வைத்தான்.
கனகம் அந்த அறையை விட்டு வெளியே வராமல் அப்படியே மூலையில் ஒடுங்கி அமர்ந்திருந்தார்.
சந்தோஷுக்கு நெருங்கிய சொந்தங்கள் அனைவரும் உள்ளூரிலேயே இருப்பதால் நெடுநேரம் யாரும் காத்திருக்கவில்லை. அடுத்தடுத்த சடங்குகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. சந்தோஷை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் போது கனகத்தை அழைத்து வந்து, அவன் முகம் பார்க்கச் செய்து பாலூட்டச் சொன்னார்கள்.
”என் பிள்ளையைக் கொண்டு போய் விடாதீங்க! என் பிள்ளையைக் கொண்டு போகாதீங்க!” என்று அந்த உடலைக் கட்டிக்கொண்டு விட மறுத்து அழுதார் கனகம்.
ஒருவாறாக அவரிடம் இருந்து பிரித்துச் சந்தோஷை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றார்கள். ஆனந்தன் சந்தோஷுக்குக் கொள்ளி வைத்து சடங்குகளை முடித்துவிட்டுத் திரும்பினான்.
வந்திருந்த சொந்தபந்தங்கள் அங்கேயே தலை முழுகிக்கொண்டு ஓரிருவராக வீடு திரும்பினார்கள். அங்கு கூடியிருந்தவர்களில் சிலர், “இந்தப் பையனை நினைத்துதான் ஆனந்தனுக்கு நிறைய பேர் பொண்ணு கொடுக்க மறுத்துட்டாங்க. இப்ப போனவன் கொஞ்சம் முன்னாடியே போயிருந்தா நல்ல வாழ்க்கை அவனுக்கு அமைஞ்சிருக்கும்” என்றும், இன்னும் சிலர், “அனுஷா யோகக்காரி; வந்த வேகத்திலேயே ஒரு இடத்தை காலி பண்ணிட்டா, இனி தொந்தரவு இல்லாமல் இருந்திருப்பாள்” என்றும் கிசுகிசுத்தார்கள்.
மேலும் சிலரோ, “இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா அன்னைக்கே பொண்ணு கொடுத்து இருப்பாங்க. இவ வந்த பிறகு கரெக்டா அவன் செத்து இருக்கானா, ஏதாவது செஞ்சு இருப்பாளோ?” என்று வீட்டில் இருப்பவர்கள் காதுபடவே பேசிக்கொண்டு சென்றார்கள்.
அனுஷாவிற்கு அவர்கள் பேசியது பிடிக்கவில்லை என்றாலும், தானும் இதற்குக்காரணம் என்று வீட்டில் இருப்பவர்கள் நினைப்பார்களோ என்ற அச்சம் அவளுக்குத் தோன்றியது.
அதேபோல, கனகத்திற்கு இந்தப் பேச்சுகளில் நம்பிக்கை இல்லை என்றாலும், ‘தான் கட்டி வைத்த பொக்கிஷம் தன்னை விட்டுப் பிரிந்து செல்ல இதுவும் கூட ஒரு காரணமாய் இருக்குமோ?’ என்ற யோசனை அவர் உள்ளத்தில் நிழலாடியது.
மீனாவுக்கோ அவன் உபயோகமற்ற ஒரு பொருளாகவே இருந்தாலும், அதைத் தன் பிறந்த காலம் முதல் தற்போது வரை பேணிப் பாதுகாத்தவள், இன்று அது இல்லாமல் போய்விட்டதே என்ற ஏக்கம் வாட்டியது. அதற்காக அனுஷா கால் வைத்த நேரம் என்று அவள் கணக்குப் போடவில்லை.
ஆனந்தனோ, ‘இப்போது வரை அவன் ஒருவனுக்காகவே தனக்கு ஒரு வாழ்க்கை அமையாமல் போனாலும் பரவாயில்லை’ என்று வாழ்ந்தவன், இப்போது அவனும் இல்லை என்றான பிறகு, அதைச் சொல்லி அழவும் தனக்குச் சொந்தம் இல்லை என்ற நிலையில் தவித்துக்கொண்டிருந்தான்.
சந்தோஷ் இறந்த நாளிலிருந்து, வாழ்ந்து செழித்து இறந்தவர்களுக்கு செய்யும் சடங்குகள் அனைத்தையும் சந்தோஷுக்குக் குறை ஒன்றும் வைக்காமல் செய்துவிட வேண்டும் என்று கனகம் தீர்மானித்திருந்தார். பதினாறு நாட்கள் படையலிட்டு விரதமிருந்து, பதினாறாம் நாள் காரியங்களைச் செய்ய ஆனந்தன், கார்த்திக், சிவம் மற்றும் சில ஆண்கள் மட்டும் அருகில் இருக்கும் சேதுக்கரை சென்று செய்துவிட்டு வீடு திரும்பியிருந்தார்கள்.
இப்போது அந்த வீடு அமைதியின் உருவமாக மாறிப்போயிருந்தது. புதிதாக அடிக்கப்பட்ட சுண்ணாம்பு வாடையில் வீடு புதுமையாகவே காட்சி தந்தது. அது மற்றவர்களுக்குப் புதுமையாகத் தெரிந்தாலும், அங்கே வாழ்ந்த கனகத்திற்கும் ஆனந்தத்திற்கும் அது வெறுமையாகவே காட்சி தந்தது.
ஆனந்தன் தன்னுடைய அறையில் தன் தம்பியின் நினைவுகளோடு அமர்ந்திருந்த நேரத்தில், உள்ளே நுழைந்த அனுஷா, ” என்னங்க இப்படியே இன்னும் எத்தனை நாளைக்கு இருக்க போறீங்க.” என்று கேட்டாள். கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்தான் ஆனந்தன்.