ராயனின் கண்கள் இயல்பாக எழிலின் மீது நிலைப்பதையும், எழில் தலையைக் குனிந்துகொள்வதையும் தமிழும் அவளது கணவர் செபாஸ்டியனும் டக்கென்று கணித்துவிட்டனர்.
காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். அத்துடன் காதலின் மொழியை நன்கு அறிந்தவர்களாயிற்றே. ‘ஆஹா… இங்கே ஏதோ பெரிய விஷயமே ஓடிக்கிட்டு இருக்கு போலயே!’ என்று இருவரும் ஒருவரையொருவர் பார்த்து மௌனமாகச் சிரித்துக் கொண்டனர்.
பின்னர், சிறிது நிமிடங்கள் பொதுவான பேச்சுக்கு பிறகு, ரவியும் அவரது குடும்பத்தினரும் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.இரவு நேரமானதும், மெல்லிய மழைக்கீற்றுகளோடு சில்லென்றக் காற்று ஊருக்குள் வீசத் தொடங்கியது.
சிறிய சமையலறைக்குள் வள்ளி தனது மகள்களோடு கதைகதையாகப் பேசிக்கொண்டே இரவு உணவைச் சமைத்துக் கொண்டிருந்தனர்.
வெளியே திண்ணையில், அந்த குளிர்ந்த மழைக்காற்றை வாங்கியபடி செபாஸ்டியனும் ரவியும் அமர்ந்து ஊர் விஷயங்களையும், பழைய கதைகளையும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மருதுவும் அவர்களோடு வந்து சேர்ந்துகொள்ள, ஆண்களின் உரையாடல் இன்னும் சுவாரஸ்யமாக மாறியது.
சமையலறையிலிருந்து மணக்க மணக்கச் சாப்பாடு தயாராகி வர, அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டே இரவு உணவைச் சாப்பிட்டு முடித்தனர்.மூன்றாவது நாள் திருவிழா…வழமை போல விடிந்தது. அதிகாலையிலேயே வீடே பக்திப் பரவசத்தாலும், திருவிழாச் சந்தோஷத்தாலும் களைகட்டியிருந்தது.
அப்போது தாம்பூலத் தட்டோடு சிரித்த முகமாக உள்ளே நுழைந்தார் மருது. தட்டில் பட்டுப் புடவைகள், வேட்டிச் சட்டைகள் மற்றும் குழந்தைகளுக்குத் துணிமணிகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
“ஐயா… இன்னைக்குத் திருவிழாவுல முக்கியமான நாள். இதுல எழிலுக்கும் உங்களுக்கும் எங்களால முடிஞ்சதைச் சின்னதா வாங்கி வச்சிருக்கோம். இதை உடுத்துக்கிட்டுத்தான் கோயிலுக்கு வரணும். எனக்கு இதெல்லாம் உங்களுக்கு வாங்கித் தர என்ன உரிமை இருக்குன்னு நீங்க யோசிக்க வேண்டாம்…அன்பா கொடுக்கிறதை மறுக்காம வாங்கிக்கோங்க!” என்று கம்பீரமாகவும் உரிமையோடும் சொன்னார்.
அவரது அன்பான பேச்சையும் மரியாதையையும் தட்ட முடியாமல், ரவியும் குடும்பத்தினரும் மறுப்பேதும் சொல்லாமல் தட்டைப் பெற்றுக்கொண்டனர்.
மருது கிளம்பிச் சென்றதும்,எழில் தனக்காகச் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்தப் புடவையை எடுத்துப் பார்த்தாள். அது அடர் நீல நிறத்தில் , மெல்லிய தங்க இழைகளால் நெய்யப்பட்ட பட்டுப் புடவை. பார்த்தவுடனேயே அவளது கண்கள் விரிந்தன. அது அவளுக்கு மிகவும் பிடித்த நிறம்!’இது கண்டிப்பா அந்த அசுரனோட செலக்ஷனாத்தான் இருக்கும்… என் மனசுல என்ன இருக்குன்னு இவனைத் தவிர வேற யாருக்குத் தெரியும்?’ என்பதைச் சொல்லாமலே புரிந்துகொண்டவளுக்குள், மெல்லிய பூரிப்பும் அலைபாயும் வெட்கமும் ஒருசேர எழுந்தன..
சிறிது நேரத்தில் அனைவரும் புத்தாடை அணிந்து, கோயிலை நோக்கிப் புறப்பட்டனர்.மலையடிவாரத்தில் அமைந்திருந்த மலையம்மன் திருக்கோயில் வண்ண வண்ண மின்விளக்குகளாலும், மாமரத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.
காப்பு கட்டிய பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் கோயிலைச் சுற்றி வந்து கொண்டிருந்தனர். நாதஸ்வரச் சத்தமும், தவில் ஓசையும் அந்த மலையடிவாரத்தையே அதிர வைத்துக் கொண்டிருந்தன.
கோயில் வளாகத்தைச் சுற்றிப் பஞ்சுமிட்டாய் கடைகள், வளையல் கடைகள், வண்ணக் பலூன்கள், மரக்கடை பொம்மைகள் எனச் சிறார்களைக் கவரும் கடைகள் நிரம்பிக் கிடந்தன. சுடச்சுடப் பொரியும் மிளகாய் பஜ்ஜியின் வாசமும், மல்லிகைப் பூவின் மணமும் காற்றோடு கலந்து வீசின.
கோயிலின் பிரதான மண்டபத்தின் அருகே, காப்பு கட்டிய தன் நண்பர்கள் பட்டாளத்தோடு ராயன்,தூய வெள்ளை வேட்டிச் சட்டையில், நெற்றியில் திருநீற்றுப் பட்டையோடு, மீசையை முறுக்கிக்கொண்டு நின்று கொண்டிருந்தான்.
புதுப் புடவையில் தேவதை போல நடந்து வந்த எழிலைக் கண்டதும், ராயனின் கண்கள் ஒரு நொடி நிலைத்துப் போயின. தன் தேர்வு வீண் போகவில்லை என்பதை அவளது அழகைப் பார்த்தே உணர்ந்தவன், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தன் நண்பர்களிடம் பேசுவது போலப் பாவனை செய்தான்.
எழிலும் அவனது அந்தத் திருட்டுப் பார்வையை ஓரக்கண்ணால் கண்டு, உதட்டோரப் புன்னகையோடு சாமி கும்பிட நடைபாதையில் நடந்தாள். சிறிது நிமிடங்களில் சாமி கும்பிட்டு முடித்துவிட்டு அனைவரும் கோயில் பிரகாரத்தில் வந்து நின்றனர்.
அக்கா தமிழும் அத்தான் செபாஸ்டியனும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடைகளை நோக்கிச் செல்ல, ரவியும் மருதையனும் கோயிலின் நந்தவனப் பகுதியில் அமர்ந்து ஊர்ப் பெரியவர்களிடம் பேசத் தொடங்கினர். எழில் கோயில் பிரகாரத்தின் தூணோரம் நின்று, கூட்டத்திற்கு நடுவே நின்றிருந்த ராயனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
நண்பர்களுடன் தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பது போல் நடித்தாலும், ராயனின் பார்வையின் குறியாக எழில்தான் இருந்தாள்.
மதிய வேளையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான கடா வெட்டித் தடபுடலாகச் சமைக்கப்பட்ட கறி விருந்து பரிமாறப்பட்டது. ஊர் மக்களோடும், ரவியின் குடும்பத்தினரோடும் சேர்ந்து மருதுவும் மயிலாவும் திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பினர்.
வீட்டிற்கு வந்ததும் மருது தன் மனைவியைப் பார்த்து, “மயிலா…” என்று ஒரு தீர்க்கமான குரலில் அழைக்க, “சரிங்க…” என்று கணவனின் எண்ணத்தைப் புரிந்துகொண்டவராகப் பதிலளித்தார் மயிலா.
தட்டில் பூ, பழம், வெற்றிலை பாக்கு, குங்குமம் என மங்கலப் பொருட்களை அடுக்கிக்கொண்டு, இருவருமாக நேராக எழிலின் வீட்டிற்குப் புறப்பட்டு வந்தனர்.
திடீரெனத் தாம்பூலத் தட்டோடு வீட்டிற்குள் நுழைந்தவர்களைப் பார்த்த ரவியும் வள்ளியும், “வாங்க… வாங்க!” என இன்முகத்தோடு வரவேற்று அமர வைத்தனர்.
மருது நிதானமாகத் தொண்டையைச் சரிசெய்து கொண்டு பேசத் தொடங்கினார்.
“ஒரு நல்ல விஷயம் பேசிட்டுப் போகலாம்னுதான் வந்தோம். இன்னைக்கு எங்க ஆத்தா மலையாத்தாக்கு ரொம்ப விசேஷமான நாளு. மனசுல எந்தத் தயக்கத்தையும் வச்சுக்காம உங்கள் ஊருக்கு நேர்ல வந்து பேசணும்னு நினைச்சோம் ஆனால் இன்னைக்கு அதுக்கான நல்ல நேரமும் அமைஞ்சிடுச்சு”
“வீட்டில் இருந்த அனைவரும் அமைதியாக அவரையே பார்க்க, “எங்க பையன் ராயனுக்கு, உங்க பொண்ணு எழிலைப் பொண்ணு கேட்டு வந்திருக்கோம். பையனைப் பத்தி நீங்க தாராளமா ஊர்ல விசாரிச்சுக்கோங்க… படிப்புதான் இல்லை, ஆனா என் பிள்ளை நல்ல உழைப்பாளி. கை நிறையச் சம்பாதிக்கிறான்”
“பேருக்குத்தான் நான் கூடப் போய் விவசாயத்துல நிக்கிறேன், அவனுக்கு எப்போ மீசை முளைச்சதோ அன்னைல இருந்து எனக்கு அப்பனா இருந்து என் குடும்பச் சுமையையெல்லாம் அவனே சுமந்துக்கிட்டு இருக்கான். விதியோ எங்கள் அவசரத்தால் அவனுக்கு நடந்த கல்யாணம் மறுநாளே அம்மன் முன்னாடி முடிந்து போய் விட்டது. ஒரு நாள் கூட அந்த பொண்ணுக்கு என் மகன் புருஷனாக வாழலை. பொறுமையா யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க…”
மருதுவின் இந்த அதிரடியான பேச்சு, அங்கிருந்த அனைவரையும் ஒரு கணம் உரைய வைத்தது.
முன்னறிவிப்பு இல்லாமல் இப்படித் தன் வீட்டிற்கே வந்து பொண்ணு கேட்பார்கள் என்பதை எதிர்பார்க்காத எழில், கண்கள் விரிந்து, அளவற்ற சந்தோஷத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்துபோய் நின்றிருந்தாள்.
திடீரென வந்த இந்த வரன் பேச்சைக் கேட்டு என்ன சொல்வதென்று தெரியாமல் யோசனையோடு ரவியும் வள்ளியும் மகளைத் திரும்பிப் பார்த்தனர். எழிலின் முகத்தில் மின்னிய அந்தத் தனித்துவமான மலர்ச்சியும், வெட்கமும் அவளுக்கு இந்த திருமணத்தில் முழு விருப்பம் இருக்கிறது என்பதை அவர்களுக்கு அப்பட்டமாக உணர்த்தியது.
தன் மகளின் மகிழ்ச்சியைக் கண்ட ரவியின் மனம் லேசானது. ‘எல்லாம் அந்த மலையாத்தாவின் சித்தம் போல…’ என நினைத்துக்கொண்டவர், முகமெல்லாம் புன்னகையோடு, “தாராளமா ஐயா… எங்க பொண்ணை உங்க வீட்டு மருமகளா அனுப்பி வைக்க எங்களுக்கு முழு சம்மதம்!” என்று கூறி மருது கொண்டு வந்த தாம்பூலத் தட்டை தம்பதிகளாக வாங்கிக்கொண்டார்.
அவர்களது பதிலைக் கேட்டதும் மயிலாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது.”ரொம்ப சந்தோஷம்!” என்று நெகிழ்ந்த மருது, “பையன் காப்பு கட்டியிருக்கிறதுனால, திருவிழா முடிஞ்சு மூணாம் நாள்தான் காப்பு அறுப்பாங்க. அதுவரைக்கும் அவன் கோயில்லதான் தங்கியிருப்பான். அது முடிஞ்ச பிறகு நாங்க முறைப்படி உங்க வீட்டுக்கு வந்து நிச்சயம் பண்ணிக்கலாமா… இல்ல நேரடியா கல்யாணத்தையே வச்சுக்கலாமா?” என்று கேட்டார்.
அதற்கு ரவியும் வள்ளியும் ஒருசேர, “மாப்பிள்ளைக்கு எப்படி வசதியோ, அதுக்கு ஏத்த மாதிரி ஏற்பாடு பண்ணுங்க சம்பந்தி… எங்களுக்கு எல்லாமே பரிபூரண சம்மதம்!” என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.
“இது போதும் சம்பந்தி!” என்று திருப்தியோடும், நிறைந்த சந்தோஷத்தோடும் மருதுவும் மயிலாவும் தங்களது வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர்.
பெரியவர்கள் பேசி முடித்துச் சென்றதும், அக்காளின் கிண்டல் பார்வையிலும், தந்தையின் அன்பான பார்வையிலும் எழிலின் கன்னங்கள் வெட்கத்தால் சிவந்தன. கோயில் வளாகத்தில் விரதத்தோடு இருக்கும் தன் அசுரனின் நினைவுகள் அவளது நெஞ்சை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டன.
திங்கட்கிழமை செபாஸ்டின் காலேஜுக்கு வேலைக்குச் செல்ல வேண்டியிருந்ததால், சனிக்கிழமை அதிகாலையிலேயே டிரைனில் முன்பதிவு செய்திருந்தனர். பின்னர் அவர்கள் எல்லாரும் மருது மற்றும் மயிலாவிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.
பனி சிந்தும்…