தன் தந்தையை குற்றவாளியை போல அனைவரும் கேள்வி கேட்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் கதிர்வேலன் கோவம் கொண்டு அனைவரையும் எதிர்த்து பேச வாய் எடுக்கும் முன்னே, “என் பக்கம் தான் தப்பு இருக்கு. முல்லைக்கு நான் பண்ணது பெரிய நம்பிக்கை துரோகம், ஆனா இதெல்லாம் என்னை மீறி நடந்த விஷயம், இருந்தாலும் இந்த தப்புக்கான தண்டனையை நானே ஏத்துக்குறேன், இப்போ நான் என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க” என்று பாண்டியன், அவரே முன் வந்து மீனா ஜீவா செய்த அவசர கல்யாணத்துக்கு உண்டான தண்டனையை தானே ஏற்றுக்கொள்ள முடிவு செய்து இருந்தார்.
“பின்ன என்னப்பா முருகா. அதான் பாண்டியனே இறங்கி வந்து என்னவேணும்னு கேக்குறாரே, இப்போ அவர்கிட்ட இருந்து என்னதான் நீ எதிர் பார்க்குற” என்று பெரியவர்கள் கேட்க,
“வேற என்ன. ஆசை வார்த்தை பேசி முல்லையை இவங்க குடும்பம் ஏமாத்தியதற்காக, முல்லையை பெத்த அப்பா என்ற ஸ்தானத்துல என் புருஷன் முருகன் காலுல விழுந்து இந்த பாண்டியன் மன்னிப்பு கேட்கணும்” என்ற பார்வதியின் வார்த்தையை கேட்டு கூடி இருக்கும் அனைவரின் முகமும் இறுக்கமாக மாறி இருக்க, கேசவன் மற்றும் முருகனின் முகம் மற்றும் பிரகாசமாக ஜொலித்தது.
“ஏய். யார் காலுல விழுந்து. யார் மன்னிப்பு கேக்குறது” என்ற கதிர்வேலன் தன் கை காப்பை முட்டி வரை ஏற்றிக்கொண்டு பார்வதியை ஆத்திரதோடு நெருங்கி வர,
“நான் பண்ண தப்புக்கு என் அப்பா ஏன் மன்னிப்பு கேட்கணும். நானே முருகன் மாமா காலுல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்” என்ற ஜீவானந்தம் முருகனை நெருங்கி வர,
“யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டாம்ம்” என்று சத்தமாக கத்தி சொன்னாள் முல்லை.
வந்ததில் இருந்து அமைதியாக நின்று இருந்த முல்லையின் வார்த்தையை கேட்டு அனைவரும் அவளை பார்க்க,
“யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டாம்ம், பாண்டியன் மாமா என்னை அவர் வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு போக நினைத்தது உண்மை தான். ஆனா. ஏன்? எப்படி? என்ற கேள்வி எல்லாம் தாண்டி இப்போ ஜீவா மாமாவுக்கும் மீனாவுக்கும் கல்யாணம் முடிஞ்சிடுது. அதனால இனி இந்த விஷயத்தை காரணம் காட்டி என் பாண்டியன் மாமாவையோ, இல்ல என் அம்மா பிறந்த குடும்பத்தையோ பழி வாங்க எனக்கு இஷ்டம் இல்லை. இந்த பஞ்சாயத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
உங்கள எல்லாம் என் அப்பா இங்க அவசரப்பட்டு வர வச்சி இருக்காரு. அவருக்காக நான் உஙகங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். யாரும் இனி இந்த விஷயத்தை பற்றி பேசாதீங்க” என்ற முல்லையின் வார்த்தையை கேட்டு பார்வதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டு இருக்க, இதே தருணம் பாண்டியணை அசிங்கப்படுத்த எண்ணிய முருகனுக்கோ, அவர் சொந்தங்களுக்கு மத்தியில் பெருத்த அவமானமாக இருந்தது.
“ஏய் முல்லை என்ன பேசுற நீ” என்று பார்வதி கோவமாக முறைத்ததும், “எல்லாம் தெரிந்து தான் பேசுறேன். இன்னைக்கு மட்டும் இல்லை என்னைக்குமே நான் என் மாமாவுக்கு எதிரா எந்த காரியமும் பண்ண மாட்டேன்” என்ற முல்லையின் மனதில் “மாமா” என்ற சொலுக்கு உரியவராக பாண்டியன் மட்டுமே இருக்க, கதிர்வேலனோ முல்லை பேசும் எல்லா சொற்களும் ஜீவாவை எண்ணி தான் என்று தப்பான மனகணக்கு போட்டுகொண்டான்.
முல்லையின் பேச்சை கேட்டு பாண்டியன் பெருமிதம் அடைய, “நீ வீட்டுக்கு வா. உன் காலை உடைத்து அடுப்புல வைக்கிறேன்” என்ற பார்வதியின் வார்த்தையை காதில் வாங்காமல் முல்லை இயல்பாக நின்று இருந்தாள்.
முல்லையின் இத்தகைய செயலில் பாண்டியனுக்கு அவள் மீது அவர் கொண்ட அன்பு பல மடங்காக உயர்ந்து இருக்க. முருகனுக்கோ இந்த தருணம் பெருத்த அவமானமாக இருந்தது.
“இங்க பாரு முருகா. உன் பொண்ணு வயசுல சின்னவளா இருந்தாலும் ரொம்ப பக்குவமா, அதுவும் அவளோட தாய் மாமனுக்கு பாதகம் இல்லாத மாதிரி பேசி இந்த பிரச்சனையை சுலபமா தீர்த்து வச்சிட்டாள், அதுவும் இல்லாம மாமா மச்சான்க்குள்ள இந்த பிரச்சனை எல்லாம் வரது சகஜம் தான் பா. இப்போ என்ன. அதான் பாண்டியன் அவருக்கே தெரியாம தான் அவரோட பெரிய பையன் கல்யாணம் நடந்ததா சொல்லுறாரே. பின்ன என்ன பா விடு, அதெல்லாம் என்ன ஏதுன்னு அவங்க கேட்டு தெரிஞ்சிகிட்டோம், நீ இனி இதெல்லாம் நினைத்து பிரச்சனையை பெருசாக்காத” என்றார் பெரியவர் ஒருவர்.
யார் பேசுவதையும் காதில் வாங்காத முருகனுக்கோ, சபைக்கு நடுவே வைத்து முல்லை தன் பேச்சை மீறிய கோவத்தோடு சேர்த்து, பாண்டியணை பழி வாங்க முடியவில்லை என்ற ஆதங்கமும் அவர் மனதில் கருவேலம் செடியை போல முல்லை மேல் அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச அன்பையும் அவர் இதயத்தில் இருந்து உரிந்து எடுத்து இருந்தது.
“சரி சரி அப்புறம் என்ன. பஞ்சாயத்து முடிந்தது” என்று பெரியவர் சொல்ல,
“ஐயா ஒரு நிமிடம்” என்ற ரோஜாவின் குரலில் பெரியவர்கள் அனைவரும் அதே இடத்தில் நின்று இருக்க,
“என்னமா. உனக்கு எதாவது சொல்லணுமா” என்று ஒருவர் கேட்க,
“ஆமா ஐயா. நான் முல்லைகிட்ட ஒரு ஐந்து நிமிடம் தனியா பேசணும்” என்றாள் ரோஜா.
“இதுல என்னமா இருக்கு. முல்லை உன் அத்த பொண்ணு தானே, தாரலாமா பேசு” என்று ஒரு பெரியவர் சொல்ல,
“இல்ல ஐயா. இவங்கெல்லாம் எங்கள இனி முல்லைகிட்டயே நெருங்க விட மாட்டாங்க” என்றாள் ரோஜா.
“ஆமா. நெருங்க விட மாட்டோம் தான். நீ ஏன் முல்லைகிட்ட பேசனும், அதெல்லாம் முடியாது. இனி முல்லை நிழலை கூட நீங்க தொடக்கூடாது”“என்ற பார்வதி முல்லையின் கையை பிடித்துக்கொண்டு காரில் ஏற முயன்றதும்,
“முல்லை. நீ போகாத. நான் உன்கூட பேசணும்” என்ற ரோஜா
வேகமாக முல்லையை அழைத்துக்கொண்டு தன் தந்தை அருகே சென்றவள்,
“அப்பா. முல்லையை உங்களுக்கு மருமகளா ஆகிக்க தானே உங்களுக்கு ஆசை. இப்போ கூட அதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு அப்பா” என்ற ரோஜாவின் வார்த்தையில் உள்ள அர்த்தத்தை புரிந்துக்கொண்ட முல்லையின் கண்கள் கண்ணீரை வெளியேற்ற,
அதே தருணம் பாண்டியனின் கண்கள் கதிர்வேலனை தன் அருகே அழைத்தது.
“என்ன ப்பா. அந்த முருகன் மண்டையை உடைத்து இந்த ரவா லட்டை நம்ம வீட்டோடு அழைச்சிட்டு வரட்டுமா.?” என்று கதிர்வேலன் கேட்க,
“வாத்தி. பேசாம நீங்க முல்லையை கல்யாணம் பண்ணிக்கொங்க” என்று ரோஜா சொன்னதும்,
“அவ்ளோ தானே பண்ணிடலாம்” என்ற கதிர்வேலன் ரோஜாவின் வார்த்தையை உள்ளுற உணர்ந்தவன், “எ. என்ன சொல்றிங்க?” என்று விழிகள் பிதுங்கி கேட்டார்.
“சொல்லு கதிர். முல்லையை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று பாண்டியன் கேட்க,
“ஏன் முல்லை. உன் மாமா சாரை நீ கல்யாணம் பண்ணிகுறியா” என்று ரோஜா கேட்டதும்.
கலங்கிய விழிகளின் சொந்தக்காரியான முல்லையின் கண்கள் கதிர்வேலனை பார்த்ததும், கதிர்வேலனின் கண்களில் காதல் தோல்வி அப்பட்டமாக தெரிந்தது.
ஆனால் அந்த தோல்வி முல்லையை நினைத்து தான் என்பதை அறிந்திடாத முல்லைக்கு என்ன பதில் சொல்வது என்று தயக்கம் ஏற்பட்ட நிலையில்,
“சரி வாத்தி. முல்லை அப்புறம் சொல்லட்டும், முதல்ல நீங்க சொல்லுங்க. உங்களுக்கு முல்லையை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சம்மதமா” என்று ரோஜா கேட்க,
தன் அண்ணனை நேசித்த பெண் எப்படி தன்னை மனமுடிக்க சம்மதம் தெரிவிப்பாள், மீறி இந்த திருமணத்திற்கு முல்லை சம்மதம் சொன்னாலும் அது கட்டாயத்தின் அடிப்படையில் தான் இருக்கும் என்று எண்ணிய கதிர்வேலன் முதல் ஆளாக.
“இல்ல. எனக்கு முல்லையை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை” என்று அவர் சொல்லி முடிக்கும் தருணம்.
“ஏய். உனக்கு வெக்கமா இல்ல. அடுத்த முகூர்த்ததில் உனக்கும் என் தம்பிக்கும் கல்யாணத்த வச்சிக்கிட்டு இங்க இவங்ககிட்ட நின்னு சம்மந்தம் பேசிக்கிட்டு இருக்கியே. அப்படி என்னடி உனக்கு இந்த குடும்பத்து மேல பாசம் பொத்திகிட்டு வருது.“ என்று அனைவரின் முன்னிலையிலும் காட்டு கத்தல் கத்திய பார்வதி, முல்லையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு காரை நோக்கி நடக்க,
முல்லைக்கோ.“எனக்கு முல்லையை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை” என்று கதிர்வேலன் சொன்ன வார்த்தை மட்டுமே அவள் காதில் கேட்டுக்கொண்டே இருந்த நிலையில்.
மீனாவை நேசித்த கதிர்வேலனுக்கு தன்னை திருமணம் செய்துக்கொள்ள விருப்பமில்லை என்று எண்ணியவள்,
இனி எக்காரணத்தைக் கொண்டும், எந்த சூழ்நிலையிலும் கதிர்வேலனின் கண் முன்னே வந்து விடக்கூடாது என்று முடிவெடுத்து, கனத்த இதயத்துடன் குன்னக்குடியில் இருந்து சிவகங்கைக்கு சென்ற முல்லையை தடுத்து நிறுத்த உரிமை இருந்தும்,
முல்லையின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஆளாக அவள் சென்ற பாதையை பரிதாபமாக பார்த்து இருந்தான் கதிர்வேலன்.
பஞ்சாயத்து நடந்த இடத்தில் இருந்து கோவமாக ரோஜா காரில் ஏறி அமர்ந்தாள்.
“அப்பா. நீங்க நாகா கூட கிளம்புங்க, எனக்கு பக்கத்துல கொஞ்சம் வேலை இருக்கு நான் முடிச்சிட்டு வந்துடுறேன்”
என்று கதிர்வேலன் சொல்ல,
“ஏய் மீனா. ஜீவாவை அழைச்சிட்டு வா. நம்ம அண்ணன்கூட காருல போகலாம்” என்று தன் மகளை அழைத்தார் கஸ்தூரி.
“ரோஜா. அவங்க ரெண்டு பேர் இந்த காருல ஏறினா நான் காருல இருந்து இறங்கிடுவேன்” என்று பாண்டியன் சொல்ல,
“அப்பா. எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம். அத்த. சீக்கிரமா வந்து காருல உக்காருங்க” என்று ரோஜா சொல்ல, கஸ்தூரி முதல் ஆளாக காரில் ஏறி அமந்துக்கொண்டார்.
ஜீவாவின் வருகைக்காக மீனா நின்று இருக்க, “மீனா. நீ உன் அம்மாகூட வீட்டுக்கு போ. அண்ணனை நான் அழைச்சிட்டு வரேன்” என்று கதிர்வேலன் சொன்னதும், மீனா தயக்கத்துடன் ஜீவாவை பார்க்க, அவனோ அவளை கண்டுகொள்ளாமல், முல்லை சென்ற பாதையை வெறித்து பார்த்து இருந்தான்.
“அடியே மீனா. வா” என்று மீண்டும் கஸ்தூரி அழைத்ததும், மீனா அங்கிருந்து கிளம்பியதும், “அண்ணா. நீ வா உன்கூட நான் பேசணும்” என்ற கதிர்வேலன் ஜீவாவை அழைத்துக்கொண்டு நேரே கதிர்வேலனின் சிலம்பம் திடலுக்கு சென்றார்.
தன் தம்பி எதற்க்காக தன்னை அழைத்து வந்தான் என்று ஜீவா அறிந்து இருந்தாலும், “என்ன விஷயம்” என்று கடமைக்கென்று கேட்க, “நான் எதைப்பற்றி கேட்க போறேன்னு உனக்கு தெரியாதா” என்று கேட்டார் கதிர்வேலன்.
“இங்க பாரு கதிரு. உன்னோட எந்த கேள்விக்கும் என்னால பதில் சொல்ல முடியாது, மீறி நீ என்னை கட்டாயப்படுத்தி எதையாவது தெரிஞ்சிக்க ஆசைப்பட்டா அப்புறம் நான் உசுரோடவே இருக்க மாட்டேன்” என்ற ஜீவாவின் பதிலில் கதிர்வேலனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
“என்ன அண்ணா நீ. என்ன பேச்சு பேசுற. உயிரை விடுற அளவுக்கு என்ன அண்ணா உனக்கு பிரச்சனை” என்று மீண்டும் கதிர்வேலன் அதே கேள்வியை அழுத்தத்துடன் கேட்டதும்,
“ஏய். ஒரு முறை சொன்னா உனக்கு புரியாதா. என்னை எதுவும் கேக்காத, நான் எதுவும் சொல்ல மாட்டேன்” என்ற ஜீவா. சிலம்பம் தடலை விட்டு கால் நடையாக நடந்து அங்கிருந்து வெளியேறி இருந்தார்.
ஜீவா ஏன் உண்மையை மறைக்க வேண்டும் என்ற கேள்வி கதிர்வேலன் மனதில் எழுந்த தருணம், கதிரின் கைபேசிக்கு அவன் நண்பன் நாகராஜனிடம் இருந்து அழைப்பு வர, “என்னடா அவங்கள வீட்டுல விட்டுட்டியா” என்று விசாரித்தான் கதிர்வேலன்.
“இப்போ தான் நண்பா இறக்கி விட்டேன். அப்புறம் உங்க அப்பா உனக்கு ஒரு வேலை கொடுத்து இருக்கார்” என்ற நாகராஜன் சில வேலைகளை கதிரிடம் சொல்லி முடித்தவன், “அப்புறம் உங்க பாசமலர் கூட உங்கள உடனே போன் பண்ண சொன்னாங்க” என்ற நாகராஜன் கைபேசி இணைப்பை துண்டித்ததும், கதிர்வேலன் சற்றும் தாமதிக்காமல் தன் தங்கை ரோஜாவை கைபேசி வாயிலாக அழைத்தான்.
தன் அண்ணனிடம் இருந்து வந்த அழைப்புக்கு, “வாத்தி. உங்களுக்கு அறிவு இருக்கா” என்று எடுத்ததும் கேட்ட தன் தங்கையின் கேள்வியில் குழம்பி போனான் கதிர்வேலன்.
“என்னாச்சு அம்மா. ஏன் என்னை திட்டுறீங்க” என்று கதிர் புரியாமல் கேட்க,
“பின்ன. நீங்க பண்ண வேலைக்கு உங்கள கொஞ்சுவாங்களா. நான் தான் உங்களுக்கும் முல்லைக்கும் கல்யாணம் பண்ண அப்பாக்கிட்ட சம்மதம் கேட்டேனே. உங்கள யார் அதுக்குள்ள முல்லையை உங்களுக்கு கல்யாணம் பண்ண விருப்பம் இல்லைன்னு பொய் சொல்ல சொன்னாங்க” என்று கோவமாக கேட்டாள் ரோஜா.
ரோஜாவின் கேள்வியில் கதிரின் முகத்தில் கவலை குடிகொண்டது.
“கேக்குறேனே. உங்கள யார் அப்படி முந்திரி கொட்டை மாதிரி பேச சொன்னாங்க” என்று ரோஜா கேட்க,
“அப்படி பேசாம. வேற எப்படி பேச சொல்றிங்க. என்னை கல்யாணம் பண்ணிக்க முல்லைக்கு இஷ்டமான்னு கேக்கும் போது, அவ முகம் போன போக்கை நீங்க பார்த்தீங்க தானே” என்ற கதிர்வேலனின் கேள்வியில் ரோஜாவிற்கு மேலும் கோவம் எழுந்தது.
“அவளுக்கு இன்னைக்கு மட்டும் இல்ல. என்னைக்குமே என்னை பிடிக்காது” என்று கதிர் சொன்னதும், “உங்கள முல்லைக்கு பிடிக்காதுன்னு அவ உங்ககிட்ட சொன்னாளா” என்று கேட்டாள் ரோஜா.
“இதெல்லாம் சொன்னா தான் புரியுமா என்ன. அவ கண்ணை பார்த்தே நான் கண்டு பிடிப்பேன்” என்று கதிர் சொல்ல,
“அநேகமா உங்க கண்ணை செக் பண்ணி கண்ணாடி போடணும் போல” என்று கடுப்புடன் சொன்னாள் ரோஜா.
“என்ன மா நீங்க. நான் முல்லையை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைனு சொன்னது தப்புன்னு நீங்க சொல்றிங்களா” என்று கதிர் கேட்க,
“அது தப்பு இல்ல வாத்தி. நீங்க பண்ணது முட்டாள் தனம்” என்றாள் ரோஜா.
“நீங்க என்ன வேணா சொல்லுங்க. ரவா லட்டுக்கு என்னை பிடிக்காது. அதனால தான் நானே முன் வந்து இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொன்னேன்” என்று கதிர் சொல்ல,
“இல்ல வாத்தி. நீங்க பண்ணது சரியில்ல. பாவம் முல்லை. நீங்க அப்படி சொன்னதும், முல்லையின் முக மாற்றத்தை நான் கவனிச்சேன். பாவம் அவள்” என்று ரோஜா சொன்னதும் கதிரின் மனதிரையில் முல்லையின் கலங்கிய விழிகள் ஒரு நொடி தோன்றி மறைந்தது.
“ஆமா. அவ கவலையா தான் இருந்தாள். ஆனா அந்த கவலைக்கு காரணம் அவ ஆசைப்பட்ட வாழ்கை அவளுக்கு கிடைக்கல என்ற வருத்தம் தான்” என்று கதிர்வேலன் சொல்ல, ரோஜாவிற்கு இதற்கு மேலும் அவனுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது என்று எண்ணியவள், சட்டென்று தன் கைபேசி இணைப்பை துண்டித்தாள்.
தன் தங்கை ரோஜா சொன்னதை எண்ணி பார்த்த கதிருக்கு ஏனோ முல்லை இவனை நேசிக்கும் விஷயம் நம்ப முடியாத உண்மையாக தான் இருந்தது.
அதற்கு காரணம் இவர்கள் இருவருமே ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் உணர்வுகளை இதுவரை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளாத காரணமாக தான் இருந்தது.
இதே தருணம் குன்னக்குடியில் இருந்து முருகன். வீட்டுக்கு வந்த கையோடு முல்லையை வார்த்தையால் வதைக்க ஆரம்பித்து இருந்தார்.
“உண்மையில் நீ எனக்கு பிறந்த பெண் தானா?” என்ற முருகனின் கேள்வியில் முல்லைக்கு அவள் தேக ரத்தம் உறைந்து போனது.
“எல்லாம் கொழுப்பு. உடம்பெல்லாம் திமிரு. நம்ம மானத்தை வாங்க இவ எத்தனை நாள் காத்து இருந்தாள் தெரியல. இதோ இப்போ நம்ம சொந்தக்காரங்க எதிர்ல நம்ம மரியாதையே போச்சு” என்று பார்வதி அவர் பங்குக்கு முருகனுக்கு கோவம் வரும்ப்படி பேசிக்கொண்டு இருந்தாள்.
“மாமா. உங்க பொண்ணு பண்ண காரியத்துக்கு அங்கேயே இவளை நீங்க நாலு சாத்து சாத்தி இருக்கனும்” என்று கேசவன் சொல்ல, இவர்கள் யார் பேசுவதையும் காதில் வாங்காத முல்லைக்கு வாழ்க்கையே வெறுத்து போனது.
“ஹ்ம். இனி இவளை அடித்து எல்லாம் எந்த பயனும் இல்லை. பார்வதி. இவளுக்கு சோறு தண்ணி கண்ணுல காட்டாத. கழுதைக்கு அப்போ தான் நம்ம அருமை புரியும்” என்ற முருகன் கோவமாக வீட்டில் இருந்து வெளியேறியவரை தொடர்ந்து கேசவனும் சென்றான்.
“ஏய். இதுவரைக்கும் சித்தி கொடுமைனா என்னன்னு நீ பார்த்ததே இல்ல தானே. இனி பார்ப்ப பாரு” என்ற பார்வதி முந்தனையை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு கோவமாக தன் அறைக்குள் புகுந்து இருந்தார்.
யார் என்ன பேசினால் என்ன. நான் இருக்கும் மனநிலைக்கு நீங்கள் எனக்கு அறுசுவை விருந்தே கொடுத்தாலும் என்னால் அதை சாப்பிட முடியாது, என்று தனக்குள் எண்ணிய முல்லை அவள் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டு கட்டிலில் சோர்ந்து விழுந்தவளின் காதில் கதிர்வேலனின் சொற்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டு இருந்தது.
இதுல கவலைப்படவோ ஆச்சிரியப்படவோ ஒன்னுமே இல்லையே. என்னைக்குமே என்னை மாமா சாருக்கு பிடிக்காது தானே. அவர் நேசித்தது மீனாவை தானே. அதனால் தான் இன்னைக்கு பாண்டியன் மாமா கேட்டக்போது கூட என் மேல விருப்பம் இல்லைனு சொல்லிட்டாரு” என்று தனக்குள் எண்ணிய முல்லைக்கும் கதிர்வேலனின் மனதில் அவள் தான் இருக்கிறாள் என்ற உண்மை தெரியாமல் போனது.
முல்லையின் வீட்டில் இருந்து வெளியேறிய கேசவன் நேரே ASI சுந்தரேசனின் வீட்டுக்கு தான் சென்றான்.
கேசவனை பார்த்ததும், “என்ன கேசவா. உனக்கு கொடுத்த வாக்கை நான் நிறைவேற்றி விட்டேன் பார்த்தியா” என்று கேட்டான் சுந்தரேசன்.
“சார். நீங்க வேற மாதிரி சார். நான் கூட உங்கள வாய் சொல் வீரன்னு தான் நினைச்சேன் சார். ஆனா உண்மையில் நீங்க காரியக்காரன் சார்” என்று கேசவன், சுந்தரேசனை பார்த்து வாயால் பெருமை பீத்தினான்.
“ம். இது ஆரம்பம் தான். இனிமே தான் அந்த கதிர்வேலன் குடும்பத்துக்கு அடி மேல் அடி விழப்போகுது” என்ற சுந்தரேசனின் முகத்தில் அப்படியொரு வன்மன் தெரிந்தது.
“ஆனா சார். அந்த ஜீவாவும் மீனாவும் எப்படி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாங்க” என்று கேசவன் கேட்க,
“அதெல்லாம் தெரிஞ்சிகிட்டா. நீ என் இடத்துல இருப்ப. நான் உன் இடத்துல இருப்பேன்” என்று சுந்தரேசன் சொல்ல,
“எப்படியோ சார். என் மாமன் பொண்ணு முல்லையை மறுபடியும் எங்க வீட்டுக்கு வர வச்சிட்டீங்க, எனக்கு அது போதும் சார்” என்று மகிழ்ச்சியாக சொன்னான் கேசவன்.
“ஆமா. உன் மாமன் மகளை வச்சி அந்த கதிர்வேலனோட அப்பனை பழி வாங்க போறதா சொன்னிங்க. என்ன பஞ்சாயத்துல வச்சி அந்த ஆளை அசிங்க படுத்தினீங்களா” என்று சுந்தரேசன் கேட்க,
“அட இல்ல சார். நம்ம நினைத்த எதுவும் அங்க நடக்கல” என்ற கேசவன்.
காலையில் குன்னக்குடி பஞ்சாயத்தில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் சொல்லி முடித்தான்.
“என்ன சொல்ற கேசவா. ஒவ்வொரு விஷயத்தையும் நம்ம பார்த்து பார்த்து பண்ணும் போது, உன் பக்கம் இருந்து இப்படி சொதப்புனா நல்லாவா இருக்கு” என்று சுந்தரேசன் கேட்க,
“எல்லாம் அந்த முல்லையால வந்துச்சு, அவ தான் கடைசி நேரத்துல காலை வாரி விட்டுட்டா” என்று கோவமாக சொன்னான் கேசவன்.
“என்ன நீ இவ்ளோ சாதாரணமா சொல்லுற. சரி. இனி இது உன் பிரச்சனை. நீ கேட்ட உதவியை நான் பண்ணிட்டேன். இப்போ நான் கேட்ட விஷயம் என்னாச்சு” என்று சுந்தரேசன் கேட்க, “நான் கஸ்தூரி அக்காகிட்ட விஷயத்தை சொல்லிட்டேன். அவங்க உங்க விஷயத்தை பார்த்துப்பாங்க” என்றான் கேசவன்.
“ம். எல்லாம் சரியா நடக்கணும். அந்த கதிர்வேலன் குடும்பம் என் முன்னாடி மண்டி போடணும்” என்ற சுந்தரசன் தான் ஜீவா மீனா திருமணம் நடக்க காரணமாக இருந்த ஆசாமி.