“உன் முன்னாள் மனைவி பண்ணுனதுக்கு நான் என்னடா பண்ணுனேன்? என்க….என்னடி மரியாதை இல்லாமல் ஆம்பளை கிட்ட பேசுறனு அறைய கை ஓங்கியவனை பார்த்தவள்,ஒரு ஆம்பளைகிட்ட மரியாதை இல்லாம வாடா போடான்னு பேசுறேன்னு கேட்குறீல… அதுக்கு முதல்ல நீ ஒரு பொம்பளைன்னு எனக்கு மரியாதை கொடுத்தியாடா?” என்று விரலை நீட்டித் துணிச்சலாகக் கேட்டாள்.
அவளது அந்த அஞ்சாத பார்வையும், தன் கண்களைப் பார்த்து மிடுக்காகப் பேசும் அந்தத் துணிச்சலான பேச்சும் ராயனின் நெஞ்சுக்குள் மின்னலெனப் பாய்ந்தது. கோபத்திற்கு நடுவிலும், இத்தனை வருடங்களுக்குப் பிறகும் மாறாத அவளது அந்த கம்பீரத்தையும் அழகையும் அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை!
அவள் மீதுள்ள ஆத்திரமும், நெஞ்சை அடைக்கும் அடங்காத காதலும் ஒரே நேரத்தில் மோத, அவள் பதிலுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அந்தப் பார்வையிலேயே உறைந்து நின்றவன் பின்னர் விஷமத்துடன் “அப்போ… நான் என்ன பண்ணாலும், பதிலுக்கு நீயும் பண்ணுவ! அப்படித்தானே?” என்று அவளை மேலுக்கீழமாக ஒரு விசித்திரமான பார்வை பார்த்துக்கொண்டு ராயன் ஒருமார்க்கமாகக் கேட்க, “தேவைப்படும் நேரத்தில் திருப்பிப் பண்ணலாம்… அதுல தப்பே இல்லை!” என்று எழிலும் சற்றும் சளைக்காமல் பதில் சொன்னாள்.
அவளது அந்தப் பதில் பேச்சில் ராயனின் கோபம் உச்சக்கட்டத்தை எட்டவும், “மவளே! இப்போ பாரடி…” என்று கருவிக் கொண்டவனோ, நொடிப் பொழுதில் அவளது முகத்தை வேகமாகத் தன் பக்கம் இழுத்தவன் அவள் உதடுகளைத் தன் உதடுகளால் கவ்வி, மென்று எடுத்துவிட்டான்.திடீரென்று நிகழ்ந்த அவனின் இந்த வலிமையான, ஆக்ரோஷமான முத்தத்தை எழில் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
திகைப்பும் அதிர்ச்சியும் அவளை ஆட்கொள்ள, திமிறியபடி தன் பிஞ்சுக் கைகளால் அவனின் அகன்ற தோள்களில் ஓங்கி ஓங்கி அடித்தாள்.
பித்தளை குண்டானால் அடித்தாலே அவனுக்கு அது எறும்புக் கடித்தது போலத்தான் இருக்கும்; அப்படியிருக்க, அவளின் இந்த மென்மையான கரங்கள் பட்ட அடியில் அவனுக்கு வலிக்குமா என்ன?ஆனால், அவளது அந்த அடி அவனது காதலை இன்னும் தூண்ட, முத்தத்தின் வீரியம் அதிகரித்ததே தவிர குறையவில்லை.தோட்டத்தில் மாடு கட்டும் சத்தம் கேட்கவே, மெதுவாக அவளது உதடுகளை விடுவித்தான்.
அவனது ஆக்ரோஷமான முத்தத்தில் அவளது உதடுகள் கன்றிச் சிவந்து போயிருப்பதைப் பார்த்தவன், மெல்லிய எள்ளலோடு அவளது முகம் அருகில் குனிந்தவன், “உதட்டோட போனது… தேவையில்லாம வாயைக் கொடுத்து உடம்பு ஃபுல்லா புண்ணாக்கிக்காதே! புரியுதா? இனிமே பார்த்துப் பேசு…” என்று அதட்டலாகச் சொல்லிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து சென்றான்.
வெளியே அத்தனை இறுக்கத்தைக் காட்டியவனின் அடர்ந்த தாடி மீசைக்குள் ஒளிந்திருந்த உதடுகளில், கடந்த மூன்று வருடங்களாகக் காணாமல் போயிருந்த அந்த ஒற்றைப் புன்னகை இப்போது மின்னிக் கொண்டிருந்தது.
எழிலின் நிலைமையோ முற்றிலும் வேறாக இருந்தது. தன் வாழ்நாளில் இதுவரை அனுபவித்திராத ஒரு விசித்திரமான உணர்ச்சிப் பெருக்கு அவளை ஆட்கொண்டது. ஒரு ஆணின் முதன்முதலான, அதுவும் ராயனின் இந்த ஆக்ரோஷமான முத்தம் அவளுக்குள் விவரிக்க முடியாத என்னென்னவோ அதிர்வுகளை ஏற்படுத்த, கால் முட்டிகள் தளர்ந்துபோக, சுவரிலேயே அப்படியே சாய்ந்து நின்று மூச்சு வாங்கினாள்.
சில நிமிடங்கள் கடந்திருக்கும். தோட்டத்திலிருந்த மாடுகளுக்குக் தழைகளைப் போட்டுவிட்டு உள்ளே வந்த ராயன், சமையலறையில் இன்னும் அதே அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தவளைப் பார்த்தவன், “கனவு கண்டது போதும் டி…” என்றான் நக்கலாக.
அவனது குரலில் சட்டெனச் சுதாரித்த எழில், அவனை நிமிர்ந்து பார்க்கக்கூட முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு வெந்த கஞ்சியை ஒரு பித்தளை டம்ளரில் ஊற்றி, அதை மிதமான சூட்டிற்குப் பதமாக ஆற்றி எடுத்துக்கொண்டு மயிலா படுத்திருந்த கட்டிலை நோக்கிச் சென்றாள்.
பின்னர் பொறுமையாக மயிலாவைத் தூக்கி எழவைத்து, கஞ்சியைக் குடிக்க வைத்தாள். ஆனால், இதையெல்லாம் உணரும் நிலையில் மயிலா இல்லை; காய்ச்சல் அந்த அளவிற்கு உடம்பைக் கொளுத்திக் கொண்டிருந்தது.
கஞ்சியைக் குடிக்க வைத்துவிட்டு எழுந்தவள், “அம்மாவைப் பார்த்துக்கோங்க… எனக்கு ஹாஸ்பிடலுக்கு டியூட்டிக்கு நேரம் ஆச்சு, நான் கிளம்புறேன். நடுவுல வந்து பார்க்கிறேன்,” என்று ராயனிடம் ஒற்றை வரியில் கூறியவள் அவனது முகத்தைக் கூட அவள் ஏறெடுத்துப் பார்க்கவில்லை;
அவசர அவசரமாகத் தன் வீட்டிற்குள் வந்து கதவைச் சாத்தியவள், நேராக அங்கிருந்த சிறிய கண்ணாடியின் முன்னே போய் நிற்க..கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது.
அவளது கீழ் உதடு சிவந்து, லேசாகக் கன்றி வீங்கியிருந்தது. அவனது அந்த அசுரத்தனமான முத்தத்தின் வடு அப்படியே அங்கே தடம் பதித்திருந்தது. அதைப் பார்த்ததும் அவளது நெஞ்சுக் கூடு வேகமாக அடித்துக்கொள்ள, விரல்களால் தன் கன்றிய உதடுகளைத் தொட்டுப் பார்த்தவளின் நெஞ்சுக்குள் ஆத்திரமும், அதையும் தாண்டிய ஒரு புதுவிதக் கூச்சமும் போட்டி போட்டன.
“அறிவுகெட்டவன்! மனுஷனா இவன்? மிருகம் மாதிரி நடந்துக்கிறான்!” என்று உதட்டைக் கடித்துக்கொண்டு முணுமுணுத்தாள்.ஆனால், அந்த ஆத்திரத்திற்கு நடுவிலும் அவனது மீசையின் உராய்வும், அந்த அசுரத்தனமான பிடியும் தந்த உணர்வு அவளது உடலெங்கும் ஒரு மெல்லிய சிலிர்ப்பைப் பரப்பியது.
தன் முகத்தில் வழிந்த வியர்வையையும், நெஞ்சின் தவிப்பையும் கட்டுப்படுத்த முயன்று, அவசரமாகத் தன் சீருடையை அணிந்துகொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பினாள்.மருத்துவமனைக்குச் செல்லும் வழியெல்லாம் அவளது மனம் ராயனைப் பற்றியே சிந்தித்தது.
‘அவனுக்குத் திருமணம் நடந்தது உண்மைதான். ஆனால், அதில் அவனது தவறு எதுவுமே இல்லையே? ஊரார் கட்டாயத்தால் நடந்த கல்யாணம்… அதுவும் அந்தப் பெண் இன்னொருத்தனைக் காதலித்ததால் முறிந்துபோன ஒன்று. இதில் இவன் ஏன் தன் வாழ்க்கையே பாழாய்ப் போனதாக நினைக்கிறான்? என்னை ஏன் இப்படிப் பழிவாங்குகிறான்?’ என்ற கேள்விகள் அவளுக்குள் வரிசையாக எழுந்து குடைத்தன.
மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தவளுக்கு வேலை ஓடவில்லை. இடையிடையே மயிலா அம்மாவின் காய்ச்சல் நினைவுக்கு வர, மதிய இடைவேளையின் போது காய்ச்சல் மருந்துகளை எடுத்துக்கொண்டு மீண்டும் மருதுவின் வீட்டிற்கு போனாள்.
வீட்டு வாசலில் காலடி எடுத்து வைத்தபோது, அங்கே திண்ணையில் ஏதோ யோசனையில் உட்கார்ந்திருந்த ராயன், எழில் வருவதைப் பார்த்ததும் அவனது விழிகள் சட்டென அவளது உதடுகளின் பக்கம் சொக்கி நின்றன.
காலையில் அவன் கொடுத்த முத்தத்தின் வடு இன்னும் அவளது உதட்டில் லேசாகக் கன்றி வீங்கியிருப்பதைப் பார்த்தவனுக்குள், மீண்டும் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.அவனது பார்வையை உணர்ந்தவள் முகத்தை திருப்பியபடி, அவனைக் கடந்து உள்ளே செல்ல முயன்றாள்.
“என்னடி… மதியமே வந்துட்ட? டியூட்டி முடிஞ்சு போச்சா, இல்ல என்னைப் பார்க்காம இருக்க முடியாம ஓடி வந்தியா?” என்று திண்ணையிலிருந்தபடியே நக்கலாகக் கேட்டான்.
அவனது குரலில் இருந்த கேலியைக் கேட்ட எழில் திரும்பி அவனை முறைத்துப் பார்த்தவள், “உங்களைப் பார்க்குறதுக்கு எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அம்மாவுக்கு உடம்பு எப்படி இருக்குன்னு பார்க்க வந்தேன்!” என்று காரமாகப் பதில் சொன்னாள்.
“அம்மாவைப் பார்க்க வந்தவ… எதுக்குடி முகத்தை திருப்பிட்டு போற? காலையில வாங்குனது இன்னும் ஆறலையோ?” என்று அவன் குரலைத் தாழ்த்தி, அவளது காதோரம் கேட்கும் வகையில் கிசுகிசுப்பாகக் கேட்க… எழிலின் முகம் அப்படியே ரத்தச் சிவப்பாக மாறியது!
“நீங்க என்ன வேணாலும் நினைச்சுக்கோங்க!” என்று சொல்லிவிட்டு, ராயனைச் சட்டை செய்யாமல் நேராக மயிலா படுத்திருந்த அறைக்குள் சென்றாள்.அங்கே மயிலா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்.
மெதுவாக அருகே சென்று அவரது நெற்றியைத் தொட்டுப் பார்க்க, காய்ச்சலின் வேகம் இன்னும் குறையவில்லை. கவலையோடு வெளியே வந்தவள், “நடுவுல அம்மா எதனா சாப்பிட்டாங்களா… எழுந்தாங்களா?”.
“இல்லை,” என்றான் ராயன் சுருக்கமாக.
“சரி, எழுந்தாங்கனா கஞ்சியைக் கொடுத்துட்டுத் திரும்பவும் இந்த மாத்திரையைக் கொடுங்க,” என்று சொல்லிவிட்டு அவள் நகர்ந்தாள்.
எழில் வாசலை நோக்கிச் செல்லும்போது, “ஏய்… நீ சாப்பிட்டியாடி?” என்று ராயன் திடீரெனக் கேட்டான்.உண்மையைச் சொல்லப்போனால், காலையிலிருந்த பரபரப்பில் அவள் எதுவுமே சாப்பிடவில்லை என்பதுதான் நிஜம். ராயனின் அந்த ஒற்றைக் கேள்வி, அவள் நெஞ்சிற்குள் ஏதோ ஒரு புதுவித இதத்தைக் கொடுத்தது. ஆனால், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து போக முயன்றாள்.
“உன்னைத்தான்டி கேட்குறேன்! சாப்பிட்டியா இல்லையா?” என்று அவன் கொஞ்சம் அதட்டலாகக் கேட்டான்.
திரும்பி பார்த்த எழில், “சும்மா இப்படி மூச்சுக்கு மூச்சு ‘டி’ போடுறதை நிறுத்துங்க! எனக்கு ரொம்ப எரிச்சலா வருது… நீங்க இப்படி என்னைக் கூப்பிடுறது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவே இல்லை!” என்றாள் கோபமாக.
ராயனோ புருவங்களை உயர்த்தி, “ஏன்? நான் கூப்பிடாம வேற யாரு கூப்பிடணுமாம்? உன் வருங்கால புருஷனா?” என்று நக்கலாகக் கேட்டான்.
அதைக் கேட்ட எழில் அவனை வெறுப்பேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், “ஆமாம்..என்னைக் கட்டிக்கப் போறவர் கூப்பிட்டா போதும்! நீங்க கூப்பிடாதீங்க, எனக்கு அருவருப்பா இருக்கு!” என்றாள் திமிராக.
“ஓ… மாப்பிள்ளையெல்லாம் பார்த்துட்டியா?” என்று ராயன் குரலில் லேசான இறுக்கத்தோடு கேட்டான்.
“அதெல்லாம் பார்த்தாச்சு!” என்று அவனைக் கிளறிப் பார்க்கும் தொனியில் எழில் சொல்ல, அதைக் கேட்டதும் ராயனின் கண்கள் சிவந்தன. அவளை நோக்கி இரண்டடி முன்னால் வந்தவன், “அந்தத் திமிர்லதான் இவ்வளவு ஆடுறியாடி? எவன் அந்த மாப்பிள்ளைனு பார்த்துடுறேன்… நீ அவனை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறனு நானும் பாக்குறேன்டி!” என்று அவளது தோளைப் பற்றி அசுரத்தனமாகக் கர்ஜித்தான்.
பனி சிந்தும்…