Stories that touch hearts

Home  /  01. சீமா (பாறைக்குள் ஓர் பனித்துளி)  /  Chapter 8

CHAPTER 8

பனித்துளி 8

By seema · October 17, 2026

0

காலை நேரத்து மலைக் காற்றும், விதவிதமான பறவைகளின் கூச்சலும் எழிலின் மனதிற்கு இதமாக இருந்தாலும், மர வீட்டின் ஜன்னலில் பார்த்த அந்த உடற்பயிற்சி செய்யும் உருவம் அவள் நினைவின் ஒரு மூலையில் மெலிதாக நிழலாடிக் கொண்டே இருந்தது.

குயிலா, நாகர்கோவிலில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். இன்று கல்லூரிக்கு நேரமாகிவிட்டதால், எழிலுக்கு பாய் சொல்லிவிட்டு வேகமாக வீட்டிற்குள் ஓடி வந்தாள்.

அரை மணி நேரம் கடந்திருக்க, தங்கையின் அவசரத்தைப் பார்த்தவன், வழக்கம்போலத் தன் வண்டியை எடுத்தவன், குயிலாவைப் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு, வேகமாகச் சென்று பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டவன் பஸ் ஏறி அவள் புறப்படும் வரை காத்திருந்துவிட்டு, மீண்டும் வீட்டை நோக்கித் தன் வண்டியைத் திருப்பினான்.

வீட்டை நெருங்கும்போதே, ராயனின் பார்வையும் கவனமும் வலது பக்கமாக இருக்கும் ஹாஸ்பிடலை நோக்கித்தான் தானாக ஓடியது.

வண்டியின் வேகத்தைக் குறைத்தவனின் மனதிற்குள் ஏதோ ஒரு புதுத் தவிப்பு.’எதற்கும் சும்மா ஒரு எட்டு உள்ள போயி அவளைப் பார்த்துட்டு வரலாமா…?’ என்று அவன் மனம் தூண்டியது.

ஆனால் அவனது மனசாட்சியோ ‘என்னடா ராயா… புதுசா என்னென்னவோ பண்ணுற? ஊர்ல இருக்குற எவளைப் பத்தியும் யோசிக்காத உனக்கு, இப்போ அந்தப் பொண்ணை மட்டும் ஏன் பார்க்கணும்னு தோணுது?’ என்று அது கேள்வி கேட்டது.

ஹாஸ்பிடலுக்கு போகும் வழியில் பைக்கை ஓரமாக நிறுத்தியவனின் மனதிற்குள், உள்ளே போகலாமா வேண்டாமாயென்று பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

அப்போது, தூரத்தில் அவனது அப்பா மருது கம்பீரமான நடையோடு மருத்துவமனைப் பக்கமாக நடந்து வந்துகொண்டிருப்பது கண்ணில் பட்டது.

“அய்யயோ… இவரு வேற இந்த நேரத்துல வராரு!” என்று திடுக்கிட்ட ராயன், அப்பாவிடம் மாட்டிக்கொள்ளக் கூடாதென்னும் பதற்றத்தில், யோசிப்பதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, வண்டியின் ஆக்ஸிலேட்டரைத் திருகி வேகமாக வீட்டின் பக்கம் வண்டியைத் திருப்பினான்.

மருத்துவமனையில் அன்று நோயாளிகளின் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. ஊசி போடுவது, மாத்திரை கொடுப்பதென வேலைகள் சீக்கிரமே முடிந்ததால் எழில் சற்று ஓய்வாக உட்கார்ந்திருந்தாள்.

அப்போது அவளது போனிற்கு கால் வரவும், யாரென்று எடுத்து பார்க்க, அவளது நெருங்கிய தோழி உஷாவின் பெயர் மின்னியது.

வேகமாக அட்டென் பண்ணவும், “ஹலோடி… எப்படி இருக்க?” என்று உஷா அன்போடு நலம் விசாரிக்க, பரஸ்பரம் நலம் விசாரணை முடிந்ததும் இருவரும் தங்களின் அன்றாட வேலைகளைப் பற்றியும், புதிய இடத்தைப் பற்றியும் அரட்டையடிக்கத் தொடங்கினர்.

“அந்த மலைக்கிராமம் எப்படிடி இருக்கு? உனக்கு செட் ஆயிடுச்சா?” என்று உஷா ஆவலுடன் கேட்டாள்.

எழில் ஜன்னல் வழியே தெரிந்த பச்சைப்பசேல் மலைகளையும் அமைதியான சூழலையும் பார்த்தபடியே, “இடம் ரொம்ப நல்லா இருக்குடி… காத்தும் சூழலும் மனசுக்கு அவ்ளோ அமைதியா இருக்கு. நீயும் கூடவே இங்க இருந்தா இன்னும் நல்லா இருக்கும்டி…” என்று தன் மனதிலிருந்த ஏக்கத்தைச் சொன்னாள்.

அதற்கு உஷா சிரித்துக்கொண்டே, “கவலைப்படாத எழிலு! நானும் ட்ரான்ஸ்பருக்கு அப்ளை பண்ணியிருக்கேன். எனக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சா கண்டிப்பா நானும் அங்கேயே வந்துவிடுகிறேன்”

“வா வா… சீக்கிரம் வந்துடு!” என்று எழில் சந்தோஷமாக சொன்னாள்.

உண்மையிலேயே சுற்றி இருக்கும் 15 கிராமங்களுக்கு பொதுவாக அதுதான் ஒரு சிறிய ஆரம்ப சுகாதார நிலையம் என்பதால், அங்கே ஒரு மருத்துவர், ஒரு செவிலியராக எழில், ஒரே ஒரு அட்டெண்டர், மற்றும் ஒரு வாட்ச்மேன் மட்டுமே பணியில் இருந்தார்கள்.

அந்த ஒரு டாக்டரும், மருத்துவமனைக்குக் கூடுதலாக இன்னும் ஒரு நர்ஸ் இருந்தால் வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வசதியாக இருக்கும் என்று அரசிற்குத் தொடர்ந்து கடிதம் எழுதிப் போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்.

தோழியிடம் பேசி முடித்ததும் போனை வைத்த எழிலுக்கு, உஷாவும் வந்துவிட்டால் இந்த அமைதியான கிராமத்தில் வாழ்க்கை இன்னும் அழகாக மாறிவிடுமென்ற எண்ணம் மனதிற்குள் இனிமையைச் சேர்த்தது.

மேலும் இரண்டு நாட்கள் கடந்திருக்க…மதிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

ஹாஸ்பிடல் அமைதியைச் சற்று கலைப்பது போல, மருது தனது கம்பீரமான குரலில், “டாக்டர் தம்பி இருக்காரா?” என்று சத்தமாகக் கேட்டார்.

அங்கே உட்கார்ந்திருந்த டாக்டர், “வாங்க மருது ஐயா… என்ன இந்தப்பக்கம்? உடம்புக்கு எதுவும் முடியலையா?” என்று மரியாதையுடன் எழுந்து வந்து கேட்டார்.

“எனக்கென்னப்பா… மலையை அடிச்சுப்போடுற உடம்பு! என் மவனுக்குத்தான் ரெண்டு நாளைக்கு முன்னாடி காட்டுல அருவா பட்டு கை லேசா வெட்டிக்கிச்சு. ஊசி எதுவும் போடணுமா, இல்ல வேற ஏதும் கட்டு கட்டணுமான்னு பாத்து அனுப்பி வையுங்க,” என்று கரடுமுரடான குரலில் சொன்ன மருது, மகனை டாக்டருக்கு முன்னால் தள்ளிவிட்டார்.

ராயன் அமைதியாக நின்று கொண்டிருந்தாலும், அவனது பார்வை முழுக்க அங்கே நின்றிருந்த எழிலின் மீதுதான் இருந்தது.

டாக்டர் அவனின் கையைப் பார்த்துவிட்டு, “பெரிய காயம் தான் இப்போது ஆறிகிட்டு வருது…சிஸ்டர்.. மருந்தை எடுத்துட்டு வந்து, இவருக்குக் காயத்தைச் சுத்தம் பண்ணி புதுசா ஒரு கட்டு போட்டுடுங்க,” என்று எழிலரசியிடம் கூறினார்.

“உள்ளேயிருந்தவள் சரிங்க டாக்டர்,” என்று மெல்லிய குரலில் சொன்னபடி மருந்துப் பாட்டிலைக் கையில் எடுத்தபடி வந்து அவனை நிமிர்ந்து பார்த்த நொடியில், அவளது கண்கள் வியப்பால் விரிந்தன.

இத்தனை நாளில் குயிலா தன் அண்ணனைப் பற்றிப் பெருமையாகவும், பாசமாகவும் அடுக்கி வைத்த கதைகள் அனைத்தும் அவளது நினைவுக்கு வந்தன.

“எங்க அண்ணன் ஊருக்கே ராஜா மாதிரி அக்கா… யாருக்கும் பயப்பட மாட்டாரு, ஆனா தங்கச்சினா உயிர்!” என்று குயிலா விவரித்த அந்தப் பெருமைக்குரிய இளந்திரையன்… இவன் தானா?

மருதுவின் கம்பீரமான குரலும், எதிரே நிமிர்ந்து நிற்கும் ராயனின் தோரணையும், குயிலா சொன்ன கதைகளோடு அப்படியே கச்சிதமாகப் பொருந்திப் போயின.

எழிலின் முகத்தில் தெரிந்த அந்தத் திடீர் திகைப்பையும் ஆச்சரியத்தையும் கவனித்த ராயனுக்கு, அவளது மாறாத விழிகளைப் பார்க்கும்போது மனதிற்குள் மெல்லிய பெருமிதம் எழுந்தது.

“என்னம்மா … அப்படியே பார்த்துட்டு நிற்கிறீங்க? சீக்கிரம் மருந்தைப் போட்டு கட்டை கட்டுங்க…சின்ன புள்ள போல ஊசிக்கு பயந்து கிட்டு வரமாட்டேன்னு சொன்னவனை  வம்படியா இழுத்துட்டு வந்திருக்கேன்.எனக்குக் காட்டுல ஆயிரம் வேலை கிடக்கு,” என்று மருது குரலை உயர்த்தியபடி வெளியே போன பிறகுதான் எழில் தன் சுயநினைவிற்கே வந்தாள்.

“ஆ… இதோ வந்துட்டேன் ஐயா,” என்று லேசான தடுமாற்றத்துடன் சொன்னவள், அவனின் அருகில் வர வர, ராயனின் இதயம் வழக்கத்தை விட வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

பின்னர் அவளது மென்மையான கை விரல்கள் காயத்தின் மீது பட்ட நொடியில், ராயனின் உதடுகளில் யாருக்கும் தெரியாத ஒரு சிறிய புன்னகை அரும்பியது.

எழிலோ அவனது முகத்தைப் பார்க்கத் துணிவின்றி, படபடக்கும் இதயத்தோடு காயத்தைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.

ராயன் வலியை வெளிக்காட்டாமல் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது கவனமான பார்வையும், படபடப்பில் லேசாக அசைந்த இமைகளும் அவனுக்குள்ளே ஏதோ ஒரு புதுக் கிளர்ச்சியை ஏற்படுத்தின.

“கொஞ்சம் வலிக்கும் சார்… பொறுத்துக்கோங்க,” என்று எழில் மெல்லிய குரலில் முணுமுணுத்தபடி பஞ்சை அமுக்கினாள்.

“காயத்தோட வலி பரவாயில்லை மேடம்… ஆனா அதைவிட உங்க கை படும்போது வலி சுத்தமா தெரியவே இல்லை,” என்று ராயன் மிக மெதுவாக, அங்கிருந்த டாக்டர் காதில் விழாத வண்ணம் ரகசியக் குரலில் சொன்னான்.

அந்த வார்த்தையைக் கேட்டதும் எழிலின் கை சட்டென்று நின்றது. நிமிர்ந்து அவனது கண்களைப் பார்த்தாள். அவனது விழிகளில் தெரிந்த குறும்புத்தனமும், ஆழமான பார்வையும் அவளது கன்னங்களில் லேசான செம்மையை வரவழைத்தன.

இதயத் துடிப்பு இன்னும் கொஞ்சம் எகிற, இருந்தும் லேசாக அவனை முறைத்துவிட்டு சட்டென்று தலையைக் குனிந்துகொண்டு துணிப் பட்டையை எடுத்து அவனது கையில் சுற்றத் தொடங்கினாள்.

அப்போது, “என்னம்மா… கட்டு கட்டி முடிச்சாச்சா?” என்று உரத்த குரலில் கேட்டபடி மருது உள்ளே வந்தார்.

“இதோ… முடிஞ்சிடுச்சுங்க ஐயா. ரெண்டு நாளைக்கு பிறகு வந்து மறுபடியும் கட்டு மாத்திக்கலாம்,” என்று எழில் இயல்பு நிலைக்குத் திரும்பி பதில் சொன்னாள்.

“சரிம்மா… வர்றோம்!” என்ற மருது, மகனைப் பார்த்து, “வாடா… கிளம்புவோம்,” என்றார்.

ம்ம் என்ற ராயன் மெதுவாக எழுந்து நின்று, தன் கையிலிருந்த கட்டைப் பார்த்தான். பிறகு எழிலைப் பார்த்து, “ரொம்ப நன்றி மேடம்… ரெண்டு நாள் கழிச்சுதானே வரச் சொன்னீங்க? கண்டிப்பா தவறாம வந்துடுறேன்!” என்று ஒரு சிறப்பு அழுத்தத்தோடு சொன்னான்.

அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்து எழில் தன் கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டு அவனை முறைத்தாள்.

மருது முன்னால் நடக்க, ராயன் அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொண்டே கதவைத் தாண்டி வெளியே சென்றான்.

ராயன் அங்கிருந்து போய் விட்டாலும், அவனது பார்வையும், அந்த மெல்லிய ரகசியக் குரலும் எழிலின் மனதிற்குள் லேசாக புயலைக் கிளப்பாமலில்லை.

அவன் வீசிய அந்த ஒரு வரிப் பேச்சு, அவளது நெஞ்சுக்குள் எதையோ செய்து கொண்டிருந்தது.’ஏன் இவன் பார்வை நம்மை இப்படி இம்சப்படுத்துது? ஊருக்கே பெரிய வீட்டு பிள்ளை, தங்கச்சிக்கு உயிரான அண்ணன்னு சொல்றாங்க… ஆனா யாரென தெரியாத என்கிட்ட ஏன் இப்படிப் பேசினான்?’ என்று அவள் மனம் கேள்வி கேட்டுத் தவித்தது.

பனி சிந்தும்…

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!