Stories that touch hearts

Home  /  29. ராஜேஷ் (மதில் தாண்டுமா மனசு)  /  Chapter 12

CHAPTER 12

மனசு – 12

By karuppiahrajesh70@gmail.com · October 16, 2026

0

மதில் தாண்டுமா மனசு – 12​

அந்த ஞாயிற்றுக்கிழமையின் பகல் பொழுது, ஆனந்தனுக்கு முட்களின் மேல் நகர்வதைப் போல மிக மெதுவாகவே கடந்து கொண்டிருந்தது. ‘அனுஷா அந்த அனாதை ஆசிரமத்திற்கு வேலைக்குச் செல்ல சம்மதித்துவிட்டாளா? அல்லது ஊரை விட்டே போய்விடுவாளா? இனி அவளைப் பார்க்கவே முடியாதா?’ என்ற எண்ணங்கள் அவன் நெஞ்சைக் குடைந்து கொண்டேயிருந்தன.​மாலை நிழல் சாயத் தொடங்கியதும், தன் மனப் போராட்டத்தைத் தாங்க முடியாமல், “மது… சீக்கிரமா புறப்படு, டியூஷனுக்கு நேரமாச்சு!” என்று அவசரப்படுத்தினான்.​மதுமிதாவோ அசட்டையாக, “இன்னைக்கு சண்டே ஹாலிடே மாமா… நான் ‘ஜெயிலர்’ படம் பாக்கணும்!” என்றாள்.​”நாளைக்கு ஏதோ செமினார் கிளாஸ் இருக்குன்னு பிரிப்பேர் பண்ணணும்னு சொன்னியே…” என்று தன் பதற்றத்தை மறைக்கக் பொய்யாகச் சாக்குப்போக்கு சொன்னான் ஆனந்தன்.​அங்கே நின்றிருந்த மீனா நமுட்டுச் சிரிப்புடன் குறுக்கிட்டாள். “ஆமாம் ஆமாம்… உன்னோட மருமக காலேஜ் படிக்கிறாள், செமினார் எடுக்கப் போறாள்! சும்மாவாவது இரு அண்ணா… உனக்கு கார்த்திக் அண்ணன் வீட்டுல இருக்கிற டீச்சரைப் பார்க்கணும்னா நீயே போய் பாரு, எதுக்கு பாப்பாவை சாக்கு வைக்கிற?” என்று அவன் மனதை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டினாள்.​தன் பிள்ளையைப் பற்றி யாராவது சின்னதாகப் பேசினாலே பொங்கி எழும் கனகத்திற்கு, பெற்ற மகளாக இருந்தாலும் மீனா சொன்னது பிடிக்கவில்லை. “என்ன வார்த்தைடி பேசுற? விளையாட்டுக்குப் பேசுறதா இருந்தாலும் என் பிள்ளையைப் பார்த்து அவளைப் பார்க்கப் போறியா, இவளைப் பார்க்கப் போறியானு வாய்க்கு வந்தபடி பேசலாமா?” என்று சலித்துக் கொண்டார்.​அப்போது சூழ்நிலையின் அடர்த்தி அறியாத சந்தோஷ், நடுவில் அமர்ந்து வண்டி ஓட்டுவது போல ‘ப்ரும்ம்ம்…’ எனச் சத்தமிட்டுச் சிரித்துக்கொண்டான்.​மீனா தன் தாயைச் சமாதானப்படுத்தும் தொனியில், “அம்மா, கொஞ்ச நேரம் சும்மா இரு. இன்னைக்கு லீவ்னு அண்ணனுக்கும் தெரியும். அப்புறம் எதுக்கு மதுவைக் கூப்பிடுறான்? நான் சும்மா தமாஷுக்குச் சொன்னா, நீ எங்கேயோ இருந்து ஓடிவந்து எறிந்து விழுகிறாயே!” என்றாள்.​அதற்கு மேல் அங்கு நிற்பது ஆனந்தனுக்குச் சங்கடமாக இருந்தது. “விடுமா அம்மா… கார்த்திக் வீடு வரைக்கும் ஒரு வேலையா போக வேண்டி இருக்கு, அப்படியே பாப்பாவையும் கூட்டிட்டுப் போகலாம்னு பார்த்தேன். லீவு நினைவில்லை. அவதான் விளையாட்டா சொன்னேன்னு சொல்றாளே…” என்று சமாளித்துவிட்டு, வேகமாகக் பைக்கைக் கிளப்பிக்கொண்டு நகர்ந்தான்.​ஆனந்தன் சென்றதும் மீனா தாயின் தோளைப் பிடித்து, “உன்னைப் போலவே உன்னோட மகனுக்கும் அந்தப் பொண்ணு மேல ஒரு விருப்பம் இருக்குமா! கார்த்திக்கால இந்த கல்யாணம் முடியாதுன்னு வருத்தப்படுறியே… காதலால முடிஞ்சா வேண்டாம்னு சொல்லவா போற?” என்றாள் இரகசியக் குரலில்.​கனகம் ஆச்சரியத்துடன், “அப்போ ஆனந்துக்கும் அந்தப் பொண்ணை பிடிச்சிருக்காடி?” என்றார்.​”நீ ஒருமுறை அந்தப் பொண்ணு மருமகளா வரணும்னு ஆசைப்பட்டாயே, அதை நான் அண்ணன்கிட்ட சொன்னப்போ அவன் முகத்துல ஒரு வெளிச்சம் தெரிஞ்சதே… அதை நீ பார்த்திருந்தா கண்டிப்பா ‘ஆமாம்’னு சொல்லியிருப்பாய்!” என்றாள் மீனா.​கனகத்தின் மனம் நெகிழ்ந்தது. ‘அவனுக்குக் காலகாலத்தில் நடக்க வேண்டிய நல்லதெல்லாம் ஒழுங்கா நடந்திருந்தா, அவன் மனசு இப்படி அலைபாயுமா? எது எப்படியோ, அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா சரிதான்’ என்று தனக்குள் வேண்டிக்கொண்டே தன் வேலைகளைக் கவனிக்க நகர்ந்தார்.​தயக்கத்துடனும் நெஞ்சு படபடப்புடனும் கார்த்திக்கின் வீட்டிற்குள் நுழைந்தான் ஆனந்தன். வரவேற்பறையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த வனஜா, “வா ஆனந்த்…” என்று புன்னகையுடன் வரவேற்று, “இன்னைக்கு டியூஷன் லீவுதானேப்பா?” என்று கேட்டார்.​”ஆமாம் அத்தை… பக்கத்துல ஒருத்தரைப் பார்க்க வந்தேன், அப்படியே உங்களையும் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். நான் வரக்கூடாதா என்ன?” என்று இயல்பாகப் பேச முயன்றான்.​”அப்படிச் சொல்லலப்பா, தெரியாதத்தனமா டியூஷனுக்குப் புறப்பட்டு வந்துட்டியோன்னு நினைச்சேன்.”​அனுஷா ஆசிரமத்திற்குச் செல்கிறாளா இல்லையா என்பதை எப்படித் திறமையாகக் கேட்பது என்று அவனுக்குப் புரியவில்லை. “வீட்டுல யாரும் இல்லையா அத்தை? நீங்க மட்டும் தனியா இருக்கீங்க?” என்று மெல்ல ஆரம்பித் தான்.​”டீச்சர் அம்மா குடும்பம் மாடியில இருக்காங்கப்பா.”​”டீச்சருக்கு இந்த ஸ்கூல் வேலை பிடிச்சிருக்கா அத்தை?”​வனஜா ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தி, “அதை ஏன் கேட்கிற ஆனந்த்? நல்லா போய்க்கிட்டு இருந்தவ, திடீர்னு அனாதை பிள்ளைகளுக்குச் சேவை செய்யப் போறேன்னு எங்கேயோ கண்காணாத இடத்துக்குப் போறதுக்குச் சிபாரிசு கேட்டு அலைஞ்சா. நல்லவேளை, அந்த வேலைக்கு வேற ஒருத்தங்க சேர்ந்துட்டதா சொல்லிட்டாங்களாம்!” என்று அவன் தவித்துக் கொண்டிருந்த கேள்விக்கும் பதிலளித்தார்.​அந்த வார்த்தையைக் கேட்டதும் ஆனந்தனின் நெஞ்சில் இருந்த பாரம் சட்டென்று குறைந்தது. மனதிற்குள் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டான். தன் வருகைக்கான காரணம் நிறைவேறியதால், “சரி அத்தை, நான் புறப்படுறேன்…” என்றான்.​”இரு ஆனந்த், கார்த்திக் இப்போ வந்துடுவான்…” என்று வனஜா தடுக்க,​கார்த்திக்கின் பெயரைக்கேட்டதும் ஆனந்தனுக்கு லேசான எரிச்சல் ஏற்பட்டது. “கார்த்திக் அடிக்கடி வந்து பார்த்துட்டுப் போவானா அத்தை?” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டான்.​”வார லீவுக்கு கண்டிப்பா வந்து பார்த்துட்டுப் போவான்ப்பா.”​”சரி அத்தை, நான் பார்க்க வந்த ஆளு எனக்காகக் காத்துட்டு இருப்பாரு… நான் அப்புறமா வரேன்!” என்று கூறிவிட்டு வண்டியை எடுத்தான்.​”சரிப்பா… முக்கியமான விஷயத்தை நல்லபடியா முடிச்சிட்டு வா!” என்றார் வனஜா, அவன் மனதை முழுமையாகப் புரிந்துகொண்ட புன்னகையுடன்.​ஆனந்தன் சென்ற சிறிது நேரத்திலேயே கார்த்திக் வந்து சேர்ந்தான்.​வனஜா அமைதியாக, “வா கார்த்திக்… இப்பதான் ஆனந்த் வந்துட்டுப் போனான். உனக்காகக் காத்திருந்துட்டு அவசர வேலையாப் போயிட்டான்” என்றார்.​கார்த்திக் முகத்தைச் சுளித்து, “அவனை எதுக்கு இங்க வர விடுறீங்க?” என்றான் சலிப்புடன்.​”என்னடா இப்படிப் பேசுற? நீ பார்த்த பொண்ணைக் கட்டிக்கலைன்னால் உன் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்ல முடியுமா?”​”சரி சரி, அவன் பேச்சை விட்டுட்டு வந்த விஷயத்தைப் பார்ப்போம்… என்னம்மா இந்த அனுவுக்குப் பிரச்சனை?” என்று அவன் கேட்கும்போதே, அமுதாவும் சிவமும் மாடியிலிருந்து இறங்கி வந்தனர்.​அவர்களைத் தொடர்ந்து அனுஷாவும் கீழே வந்தாள். “வாங்க அண்ணா… அண்ணியையும் நவீனையும் கூட்டிக்கிட்டு வரலையா?” என்று அன்போடு விசாரித்தாள்.​கார்த்திக் நேரடியாகவே விசாரித்தான்: “ஏன் அனு, நாங்க உன்னைப் பத்திரமா பாத்துக்க மாட்டோம்னு முடிவு பண்ணிட்டியா? எதுக்கு அனாதை ஆசிரமத்துக்குப் போறேன்னு சொல்லிட்டு இருக்கிறாய்?”​அனுஷா குழப்பத்துடன், “ஏன் அண்ணா இப்படி கேக்குறீங்க?” என்றாள்.​அமுதா குறுக்கிட்டு, “பின்ன என்னடி… காலையில இருந்து நீ செய்யுற காரியம் அப்படித்தானே இருக்கு!” என்றார்.​அனுஷா தாயை ஒருமுறை பார்த்துவிட்டு, “உங்ககிட்டயும் சொல்லி புலம்பிட்டாங்களா அண்ணா? அது ஒன்னும் இல்லை… ஆதரவற்ற குழந்தைகளுக்கு என்னால முடிஞ்ச சேவையைச் செய்யணும்னு நினைச்சேன். ஆனா, காலையில தற்செயலா ஆனந்தனைச் சந்திக்க நேர்ந்தது. அவர் சொன்ன வார்த்தையைக் கேட்டதும் என் முடிவை மாத்திக்கிட்டேன்.”​கார்த்திக் புருவங்களை உயர்த்தி, “அப்படி என்ன வார்த்தை சொல்லி உன் மனசை மாத்தினானாம் அவன்?” என்றான் ஆச்சரியத்துடன்.​அனுஷா தாழ்ந்த குரலில், “அவர் என் மனசைத் திசைதிருப்பல அண்ணா, நிதர்சனமான உண்மையைச் சொன்னாரு. ‘நீங்க ஆசிரமத்துக்குப் போயிட்டா, உங்க பெற்றோர் பிரிவால ரொம்பக் கஷ்டப்படுவாங்க’ன்னு சொன்னாரு. அந்தப் பிரிவின் வலி என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்! என்னோட வருணைப் பிரிஞ்ச பிறகு, அவன் என்னை வந்து சேர மாட்டானான்னு நான் தவிப்பது போல, என் பெத்தவங்களை நான் தவிக்கவிட்டுடக் கூடாதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்” என்றாள் உருக்கமாக.​அமுதா, “அதைத்தானே நாங்களும் காலையில இருந்து சொல்றோம்!” என்றார்.​”என்னை மன்னிச்சுக்கோங்க… இனிமே அப்படி ஒரு முடிவை நான் நினைக்கக்கூட மாட்டேன்!” என்று அனுஷா உறுதியளித்தாள்.​இவை அனைத்தையும் உற்று கவனித்துக் கொண்டிருந்த வனஜாவின் மனதில் எண்ணங்கள் வேகமாகச் சுழன்றன. ‘அனுஷா ஆனந்தனின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கிறாள் என்றால், அவள் மனதில் அவனுக்கு ஒரு நல்ல இடம் இருக்கிறது. அதேபோல, ஆனந்தனும் சும்மா வரவில்லை… காலையில் தான் சொன்ன வார்த்தையின் பலன் என்னவென்று அறியவே இங்கு ஓடி வந்திருக்கிறான். இவன் மனதிலும் அனுவின் மீது சொல்ல முடியாத அன்பு ஒளிந்திருக்கிறது!’ என்று துல்லியமாகக் கணித்தார்.​”சரி அமுதா, அவதான் இனிமே அப்படிப் போக மாட்டேன்னு சொல்றாளே… அதை விட்டுட்டு எல்லாரும் சாப்பிட வாங்க” என்று வனஜா அழைத்தார்.​அனுஷா பரிமாறத் தயாராக, கார்த்திக், “நான் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுக்கிறேன், ராதிகா காத்துட்டு இருப்பா” என்று கூறி விடைபெற்றான்.​இரவு, அமுதாவும் வனஜாவும் முன் அறையில் படுக்கை விரித்துப் படுத்திருந்தனர்.​வனஜா மெல்லிய குரலில், “நம்ம ஆனந்த் அனுவை விரும்புறான் அமுதா… எனக்கு நல்லாவே தெரியுது!” என்றார்.​அமுதா வியப்புடன், “எதை வச்சுக்கா அவ்வளவு உறுதியா சொல்றே?” என்றார்.​”கார்த்திக் வர்றதுக்கு முன்னாடி ஆனந்த் வந்திருந்தான். காலையில அனுக்கிட்ட பேசினதைப்பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லாம, அவள் என்ன முடிவு எடுத்திருக்கான்னு தெரிஞ்சுக்கவே துடிச்சுப் போய் வந்திருக்கான். நான் ஆசிரமத்துக்கு வேற ஆள் சேர்ந்துட்டதா சொன்னதும் அவன் முகத்துல ஒரு நிம்மதி வந்துச்சு பாரு… அதை வச்சே கண்டுபிடிச்சுட்டேன்!”​அமுதா வருத்தத்துடன், “அந்தப் பையன் தங்கமான பையன்தான் அக்கா… ஆனா அவனுக்கு இரண்டாவது தாரமான பொண்ணு வேண்டாம்னு கார்த்திகிட்ட சொல்லிட்டானே!” என்றார்.​”அவன் என்ன காரணத்துக்காக அப்படிச் சொன்னான்னு தெரியலமா… ஆனா, அனுவை அவனுக்குப் பிடிச்சிருக்கு. கண்டிப்பா அவளைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிப்பான்.”​”அப்போ… அனுவுக்கு ஏற்கனவே கல்யாணமான விஷயத்தை அவன்கிட்ட மறைச்சுடலாம்னு சொல்றியா?” என்று தயங்கியபடி கேட்டார் அமுதா.​வனஜா தீர்க்கமாக, “ஐயோ! அப்படி ஒரு தப்பை நான் உயிரோடு இருக்குற வரைக்கும் செய்ய விடமாட்டேன்! பின்னாடி விஷயம் தெரியவந்தா வாழ்க்கை சீரழிஞ்சுடும். எல்லா உண்மையையும் சொல்லிதான் அவனுக்குக் கல்யாணம் முடிச்சு வைக்கணும்!” என்றார்.​”ஆனா கார்த்திகிட்ட அவன் வேண்டாம்னு சொன்னானே…”​”கார்த்திக் தன்னோட வீட்டுல ஒரு பொண்ணை வச்சுக்கிட்டு இன்னொரு இடத்துல பொண்ணு தேடுறானேங்கிற கோபத்துல கூட அவன் அப்படிச் சொல்லியிருக்கலாம். இல்லன்னா அனுவை மனசுல நினைச்சுக்கிட்டு அப்படிச் சொல்லியிருக்கலாம். எது எப்படியோ… நான் நினைக்கிறபடி இது நல்லபடியா நடந்தா, அந்தத் திருச்செந்தூர் முருகனுக்கு முடி காணிக்கை செலுத்துறேன்!” என்று கைகூப்பினார் வனஜா.​அமுதா லேசான தயக்கத்துடன், “ஆனந்தனே சம்மதிச்சாலும்… நம்ம பொண்ணு சம்மதிக்கணுமே அக்கா?” என்று தன் அடுத்த பயத்தைப் பகிர்ந்தார்.​வனஜாவோ அசைக்க முடியாத நம்பிக்கையுடன், “அவள் கையில, கால்ல விழுந்தாவது இந்த நல்ல வாழ்க்கையை அமைச்சு வச்சிருவோம்!” என்று உறுதியாகக் கூறிவிட்டுத் தன் கண்களை மூடினார்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!