Stories that touch hearts

Home  /  05. மீனாட்சி (அவள் இதயம் துடிக்கும் வரை)  /  Chapter 2

CHAPTER 2

இதயம் – 2

By Meenatchi · October 13, 2026

0

அத்தியாயம் 02

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை.

அதிகாலை முதலே அந்தக் கிராமமே ஒரு இனிய பக்தி உணர்வில் விழித்திருந்தது.

ஊர் கோவிலில் இருந்து ஒலித்த பக்திப் பாடல்கள் காற்றோடு கலந்து வீடுகள் தோறும் கேட்டுக்கொண்டிருந்தன.

சில வீடுகளின் வாசலில் பெண்கள் கோலம் போட்டுக்கொண்டிருந்தனர். சிலர் பூஜைக்காக பூக்களைப் பறித்துக்கொண்டிருந்தனர்.

எங்கும் வெள்ளிக்கிழமைக்கே உரிய பரபரப்பு.

ஆனால் இசையின் வீட்டின் முன் மட்டும் அந்த அமைதியான காலைப் பொழுதுக்கு முற்றிலும் மாறாக, நான்கு பெண்கள் நின்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர்.

“கலா பணம் போட்டாளா? போடலைன்னா லோன் பணத்தையும் கட்டாமல் விட்டுட்டு போயிடலாம்னு நினைச்சிட்டாளா?”

“எங்ககிட்ட வாங்கின காசுக்கு வட்டி கூட ஒழுங்கா கொடுக்கல. இப்போ லோன் கட்ட வேண்டிய நேரம் வந்ததும் ஆளே காணோம் ஊருலயே இல்லை!”

“உங்க அப்பா கணேஷ்கிட்ட கேட்டா, ‘எனக்கு எதுவும் தெரியாது’ன்னு சொல்லிட்டு வேலைக்குப் போயிடுறாரு. நாங்க யாருகிட்ட போய் கேக்கறது?”

என்று ஒவ்வொருவரும் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தனர்.

உண்மையில் இசையின் அம்மா கலா, ஊரில் சிலரிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருந்தாள்.

அதோடு சில கடன்களையும் பெற்றிருந்தாள்.

அந்தப் பணத்தைச் சரியாகத் திருப்பிக் கொடுக்காமல்,  வெளிநாட்டில் வேலைக்குச் சென்று விட்டாள்.

கலா – கணேஷ் தம்பதிக்கு மூன்று குழந்தைகள்.

மூத்த மகள் தமிழிசைக்கு பதினெட்டு வயது.

அவளுக்கு அடுத்ததாக பத்து வயது தர்சன்.

கடைசியாக இரண்டு வயது அன்பு.

கணேஷுக்கு நிலையான தொழில் என்று எதுவும் அமையவில்லை. கிடைத்த வேலைகளைச் செய்து குடும்பத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். குடும்பச் செலவுகள் அதிகரிக்க, ஒரு கட்டத்தில் சொந்தமாக ஏதாவது செய்து முன்னேற வேண்டும் என்று நினைத்த கணேஷும் கலாவும் நிலக்கடலை தோட்டம் செய்யத் தொடங்கினார்கள்.

ஆனால் அவர்கள் நினைத்தது போல விவசாயம் கை கொடுக்கவில்லை.

ஒருபுறம் பயிர்ச்செலவு… மறுபுறம் எதிர்பார்த்த விளைச்சல் இல்லாதது… இறுதியில் கையில் வந்ததைவிட செலவு அதிகமாகிப் போனது.

தோட்டத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க கடன் வாங்கினார்கள்.

அந்தக் கடனை அடைக்க இன்னொரு கடன் என்று, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் கடன் சுமை பெரிதாகிக் கொண்டே போனது.

ஒரு கட்டத்தில், அந்தக் கடனை தங்களால் மட்டும் சமாளிக்க முடியாது என்பதை கணேஷும் கலாவும் உணர்ந்தார்கள்.

வேறு வழியின்றி கலா வெளிநாடு செல்ல முடிவு செய்தாள்.

வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து கடன்களை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிடலாம் என்று நினைத்தாள்.

ஆனால் அவள் மனதை மிகவும் வலித்த முடிவு ஒன்றை எடுக்க வேண்டியிருந்தது.

வெறும் இரண்டு வயதுதான் ஆன அன்புவை தன்னுடன் அழைத்துச் செல்ல முடியவில்லை.

அதனால் தன் மூத்த மகள் தமிழிசையிடம் அன்புவின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, கடனை அடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கலா வெளிநாடு சென்றாள்.

பதினெட்டு வயதிலேயே தாயாக வேண்டிய கட்டாயம் தமிழிசைக்கு வந்தது.

தன் வயதுப் பெண்கள் வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருந்த அந்த வயதில், தமிழிசை தன் தங்கையின் ஒவ்வொரு தேவையையும் பார்த்துக்கொண்டு, தம்பி தர்சனையும் கவனித்துக்கொண்டு, குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கத் தொடங்கினாள்.

கலாவின் அம்மா ஏற்கனவே இறந்து போயிருந்தார்.

அவளுடைய அப்பாவும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு தனியாக வாழ்ந்து வந்தார்.

கலாவுக்கு ஒரு தங்கை இருந்தாள்.

அவள் பெயர் சரோ.

சரோவும் வெளிநாட்டில்தான் இருந்தாள்.

அதனால் கலாவின் குடும்பத்திற்கு உடனிருந்து உதவ யாரும் இல்லை.

கணேஷின் பக்கத்திலும் அதே நிலைதான்.

கணேஷ் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவரால் பேரன், பேத்திகளைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை.

கணேஷின் அம்மா வந்தாலும், வயதும் உடல்நிலையும் காரணமாக மூன்று குழந்தைகளின் பொறுப்பையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இப்படி இரு குடும்பங்களிலும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளக்கூடிய பெரியவர்கள் யாரும் இல்லாத சூழ்நிலை.

அதனால்…

குடும்பத்தின் பாரம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழிசையின் தோள்மீது வந்து விழுந்தது.

அவளுக்கு அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள விருப்பமா என்று யாரும் கேட்கவில்லை.

அவளால் முடியுமா என்றும் யாரும் கேட்கவில்லை.

சூழ்நிலை அவளைப் பொறுப்பானவளாக மாற்றிவிட்டது.

தம்பி தர்ஷனின் படிப்பு…

இரண்டு வயது அன்புவின் கவனிப்பு…

வீட்டு வேலை…

சமையல்…

அப்பாவுக்கு உதவுவது…

வாசலில் வந்து நிற்கும் கடன்காரர்களை சமாளிப்பது…

எல்லாமே தமிழிசையின் வாழ்க்கையாகிவிட்டது.

சில நேரங்களில் இரவு எல்லோரும் தூங்கிய பிறகு, வீட்டின் வாசலில் தனியாக உட்கார்ந்திருப்பாள்.

அப்போது அவளுக்கு ஒரே ஒரு எண்ணம்தான் வரும்.

“எனக்கும் ஒரு வாழ்க்கை இருக்குன்னு யாருக்காவது நினைப்பு இருக்கா?”

என்று.

ஆனால் மறுநாள் காலையில் அன்புவின் அழுகை கேட்டதும்…

அந்தக் கேள்வியையும் மறந்துவிட்டு மீண்டும் எழுந்து வேலை செய்ய ஆரம்பித்துவிடுவாள்.

ஏனென்றால்…

அவளுடைய வாழ்க்கையைவிட, அவளை நம்பி இருந்த மூன்று உயிர்களின் வாழ்க்கை அவளுக்கு முக்கியமாகிப் போயிருந்தது.

“அன்புவை நல்லா பார்த்துக்கோம்மா.”

“நீங்க எதையும் நினைச்சுக்காதீங்கம்மா… நான் பார்த்துக்கிறேன்.”

“உனக்கு இப்ப பதினெட்டு வயசுதானே இசை…”

“தெரியும் மா.”

“உன் வாழ்க்கையையும் நீ பார்த்துக்கணும்.”

“என் வாழ்க்கைன்னு தனியா எதுவும் இல்ல மா… அன்பு, தர்ஷன், அப்பா, நீங்க… இதுதான் எனக்கு.”

“நான் சீக்கிரமா கடனை அடைச்சுட்டு வந்துடுறேன்…”

“நீங்க அதைப் பத்தி கவலைப்படாம போயிட்டு வாங்க மா.”

அதன் பிறகு, கடனை அடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கணேஷ் தினமும் கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்.

காலையில் வீட்டை விட்டு கிளம்பினால், மாலை சோர்ந்து போய்தான் வீட்டுக்கு வருவார்.

அவர் வாங்கி வரும் சம்பளம்…

வீட்டு செலவு, தர்ஷனின் படிப்பு, அன்புவின் செலவு என்று அப்படியே கரைந்து போய்விடும்.

கையில் ஒரு ரூபாய் கூட மிச்சம் இருக்காது.

குடும்பத்தின் பாரம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழிசையின் தோளிலும் விழுந்தது.

வீட்டு வேலை…

நான்கு பேரின் துணிகளைத் துவைப்பது…

சமையல் செய்வது…

அன்புவை பார்த்துக்கொள்வது…

எல்லாமே அவளுடைய பொறுப்பாகிப் போனது.

பதினெட்டு வயதிலேயே அவள் வயதுக்கு மீறிய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாள்.

அதோடு நின்றுவிடவில்லை.

கலாவைத் தேடி வீட்டுக்கு வரும் கடன் கொடுத்தவர்கள், வாசலில் நின்று கேட்கும் கேள்விகள், தினமும் கேட்கும் பணம்…

இவை எல்லாவற்றையும் தமிழிசைதான் சமாளிக்க வேண்டியிருந்தது.

“கலா எப்போ வரப்போறாங்க?”

“எங்களுக்கு பணம் எப்போ கொடுக்கப் போறீங்க?”

“வெளிநாட்டுக்குப் போயிட்டா கடன் அடைக்க வேண்டியதில்லையா?”

என்று ஒவ்வொருவரும் வந்து கேட்கும்போது, தமிழிசைக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாது.

சில நாட்களில் அவர்களின் பேச்சு எல்லை மீறிவிடும்.

அப்போது மனதுக்குள் பயமும் அழுகையும் இருந்தாலும், அதை வெளியில் காட்டாமல் நின்றுவிடுவாள்.

“எங்க அம்மா பணம் அனுப்புனதும் கொடுத்துடுறோம்… தினமும் வந்து இதையே கேட்காதீங்க.”

“எப்போ அனுப்புவாங்கன்னு உனக்குத் தெரியுமா?”

“தெரியாது…”

“அப்போ எப்போ பணம் தருவீங்க?”

அந்தக் கேள்விக்கு அவளிடம் பதில் இருக்காது.

அவள் சில நொடிகள் அமைதியாக நின்றுவிட்டு,

“பணம் கிடைச்சதும் கொடுக்குறோம்னு சொல்லிட்டோம்ல… தினமும் வந்து வாசல்ல நின்னு எங்களை நெருக்காதீங்க.”

என்று கொஞ்சம் வாய்த்துடுக்காகவே பேசிவிடுவாள்.

அது அவர்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இல்லை.

தன்னுடைய இயலாமையை மறைக்கத்தான்.

அவர்கள் சென்ற பிறகு வாசலை மூடிவிட்டு, அங்கேயே சில நொடிகள் சுவரில் சாய்ந்து நிற்பாள்.

கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை அவள் கைகளால் துடைத்துக் கொள்வாள்.

அழக்கூடாது…

அழுதால் யாரைப் பார்த்துக்கொள்வது?

அன்பு அவளைத் தேடும்.

தர்ஷன் சாப்பாடு கேட்பான்.

அப்பா வேலை முடிந்து வீட்டுக்கு வருவார்.

அதனால் கண்ணீரைக்கூட தனக்குள் மறைத்துக்கொண்டு, மீண்டும் சமையலறைக்குள் சென்று அடுத்த வேலையை ஆரம்பித்துவிடுவாள்.

அவளுக்கே தெரியாமல்…

அவளுடைய பதினெட்டு வயது வாழ்க்கை, ஒரு குடும்பத்தின் முழுப் பொறுப்பாக மாறிக்கொண்டிருந்தது.

அவளுடைய வாழ்க்கை அன்றிலிருந்து அவளுக்காக இல்லாமல்… அவளைச் சுற்றியிருந்தவர்களுக்காகவே மாறிப் போனது.

கணேஷ் தினமும் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வெகு நேரம் கழித்துத்தான் வீடு திரும்புவார்.

அதனால் கலாவிடம் பணம் கொடுத்தவர்கள், அவளைக் காண முடியாமல் கணேஷிடம் வந்து பிரச்சினை செய்வதும், அவர் இல்லாத நேரங்களில் இசையிடம் வந்து கேட்பதும் வழக்கமாகிவிட்டது.

இன்றும் அப்படித்தான்.

“இன்னைக்கு லோன் கட்ட வேண்டிய நாள். பணம் எங்க?”

ஒரு பெண் இசையை நோக்கி குரலை உயர்த்தினாள்.

இசை இதுவரை அமைதியாகத்தான் நின்றிருந்தாள்.

ஆனால் மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை கேட்டதும் அவளுடைய பொறுமை உடைந்தது.

“எத்தனை தடவை சொல்றது? உங்ககிட்ட  யார் பணம் வாங்கினாங்களோ… அவங்ககிட்ட போயி கேளுங்க!”

“அம்மா ஊர்ல இல்லாத நேரத்துல இங்க வந்து என்னை ஏன் கேக்கறீங்க?”

“வீட்டுக்குள்ள குழந்தை இருக்கு. அப்பாவும் வீட்டுல இல்ல. இப்படிச் சத்தம் போட்டு என்னை நிக்க வச்சு கேள்வி கேக்காதீங்க!”

இசையின் குரலில் கோபம் கலந்திருந்தது.

அவளுடைய கண்களில் அவமானமும் வேதனையும் தெரிந்தது.

“அம்மா உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தா, அம்மாவிடமே கேளுங்க. அவங்க எப்ப பணம் அனுப்புவாங்கன்னு எனக்குத் தெரியாது. அவங்க வாங்கின பணத்துக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?”

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. உங்க அம்மாதானே பணம் வாங்கிட்டு போயிருக்கா?”

“அதுக்காக நான் என்ன பண்ண முடியும்?”

இசை சத்தமாகக் கேட்டாள்.

அவளுடைய வார்த்தைகளில் இருந்த கோபத்தைக் கேட்டதும் அந்தப் பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அந்த நேரத்தில்…

அந்தச் சத்தம் அருகில் இருந்த வீட்டிற்குள்ளும் தெளிவாகக் கேட்டது.

அருள்மொழி நேற்று இரவு நீண்ட நேரம் வரை தனது மனைவியின் நினைவுகளில் மூழ்கியிருந்தான்.

பல நாட்களுக்குப் பிறகு சிறிது நேரமாவது அமைதியாகத் தூங்கியிருந்த அவன், வெளியே கேட்ட சத்தத்தால் விழித்துக்கொண்டான்.

கண்களைத் திறந்ததும் அருகில் படுத்திருந்த வர்ணாவைப் பார்த்தான்.

குழந்தை இன்னும் தூக்கத்தில் இருந்தாள்.

வெளியே பெண்களின் குரல் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.

அருள்மொழி எழுந்து வெளியே வந்தான்.

வாசலில் நின்றபடி சத்தம் வரும் திசையைப் பார்த்தான்.

இசையின் வீட்டின் முன் நான்கு பெண்கள் நின்றிருந்ததும், அவர்களுடன் இசை வாக்குவாதம் செய்துகொண்டிருந்ததும் தெரிந்தது.

அருள்மொழி சில நொடிகள் அங்கேயே நின்று பார்த்தான்.

அந்த நேரத்தில் வர்ணாவும் விழித்துக்கொண்டு மெதுவாக அழத் தொடங்கினாள்.

அவளைப் பார்த்த அருள்மொழி உடனே உள்ளே சென்று குழந்தையைத் தூக்கிக்கொண்டான்.

“அழாதே வர்ணா பாப்பா. அப்பா இருக்கேன்.”

என்று அவளைத் தோளில் சாய்த்துக்கொண்டான்.

பிறகு அவன் மெதுவாக வெளியே வந்தான்.

சில அடிகள் நடந்து, இசை நின்றிருந்த இடத்திற்கு அருகில் சென்று நின்றான்.

அவனைப் பார்த்ததும் இசையின் பேச்சு உடனே நின்றது.

அவளுடைய முகத்தில் அதிர்ச்சியும் சங்கடமும் தெரிந்தது.

புதிதாக இந்த ஊருக்கு வந்திருக்கும் ஒருவர் முன்பாக இப்படியொரு பிரச்சினை நடக்கிறதே…

என்ற கவலை அவளுடைய முகத்தில் தெளிவாகப் படிந்தது.

அவள் தலை குனிந்தாள்.

அதைப் பார்த்த அருள்மொழியின் மனதில் ஏதோ ஒரு உணர்வு எழுந்தது.

தன்னுடைய வாழ்க்கையிலும் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும், இப்போது அவள் எதிர்கொள்ளும் சூழ்நிலையைப் பார்த்ததும் அவளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் தோன்றியது.

தன் சொந்த சோகத்தை சில நொடிகளுக்கு ஒதுக்கி வைத்தான்.

வர்ணாவை ஒரு கையால் அணைத்துக்கொண்டு, மற்றொரு கையால் மெதுவாக அந்தப் பெண்களை நோக்கி,

“சரி… முதலில் கொஞ்சம் அமைதியாகப் பேசுங்க.”

என்றான்.

பெண்கள் அனைவரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர்.

அவர்களில் ஒருத்தி,

“நீங்க யாருங்க?” என்று கேட்டாள்.

அருள்மொழி அமைதியாக,

“நான் இந்த ஊருக்கு புதிதாக வந்திருக்கிறேன். நேற்றுதான் இங்கே குடியேறினேன். இவர்களுடைய வீட்டுக்கு அருகில்தான் இருக்கிறேன்.”

என்றான்.

பிறகு இசையைப் பார்த்தான்.

அவள் இன்னும் தலைகுனிந்தபடியே நின்றிருந்தாள்.

அருள்மொழி மீண்டும் அந்தப் பெண்களை நோக்கி,

“இங்கே என்ன பிரச்சினை? ஏன் இவ்வளவு சத்தமாகப் பேசுறீங்க ?”

என்று கேட்டான்.

அந்த நான்கு பெண்களில் வயதில் மூத்தவள் முன்னால் வந்து,

“தம்பி… இந்தப் பொண்ணோட அம்மா கலா எங்ககிட்ட பணம் வாங்கியிருக்கா. வட்டிக்கும் பணம் வாங்கியிருக்கா. சில லோனும் எடுத்திருக்கா. இப்போ பணம் கட்ட வேண்டிய நேரத்துல ஆளையே காணோம். அதனாலதான் இங்க வந்து கேக்கறோம்.”

என்றாள்.

மற்றொரு பெண் உடனே,

“எங்களுக்கும் பணம் தேவைங்க. இன்னைக்கு லோன் கட்ட வேண்டிய நாள். நாங்க எங்க போய் கேக்கறது?”

என்றாள்.

அருள்மொழி அமைதியாக அவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

அவன் பார்வை ஒரு கணம் இசையை நோக்கிச் சென்றது.

அவள் முகத்தில் இருந்த அவமானமும் வேதனையும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

அவன் மெதுவாக,

“கலா எங்கே இருக்கிறார்?”

என்று கேட்டான்.

இசை தலைநிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“அம்மா… வெளிநாட்டுக்குப் போயிருக்காங்க.”

அருள்மொழி சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

பிறகு அந்தப் பெண்களை நோக்கி,

“சரி. கலா வாங்கிய பணத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும். இங்கே வந்து பிள்ளைகளிடம் சண்டை போட்டால் பிரச்சினை தீராது.”

அவன் குரலில் கோபம் இல்லை.

ஆனால் உறுதி இருந்தது.

அந்தப் பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

இசை மட்டும் அருள்மொழியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நேற்று  இந்த ஊருக்கு புதிதாக வந்தவன்…

இன்று தன்னுடைய அவமானமான சூழ்நிலையில் தனக்காக நின்று பேசுகிறான்.

அவளுடைய மனதில் அந்த எண்ணம் மட்டும் மெதுவாக பதிந்தது.

அருள்மொழிக்கும் அப்போது தெரியவில்லை…

இசையின் வாழ்க்கையில் தான் முதல் முறையாக இப்படி ஒரு நேரத்தில் துணையாக நிற்கிறான் என்று.

அவளுக்கும் தெரியவில்லை…

அவள் வாழ்க்கையில் அருள்மொழி என்ற பெயர் இனி சாதாரணமாக கடந்து செல்லப்போவதில்லை என்று.

புதிதாக இந்த ஊருக்கு வந்த அருள்மொழியின் முன்னால் தான் இப்படி அவமானப்பட்டு நிற்க வேண்டிய நிலை வந்துவிட்டதே என்ற எண்ணம் இசையின் மனதை இன்னும் அதிகமாகக் காயப்படுத்தியது.

தன்னால் எதுவும் செய்ய முடியாத இயலாமை அவளுக்குள் கோபமாக மாறியது.

அதோடு, அருள்மொழி தன்னைப் பார்த்து இரக்கப்பட்டு உதவ முன்வந்ததும் அவளுடைய மனதில் ஏதோ ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது.

அவள் கோபமாக அருள்மொழியைப் பார்த்தாள்.

“என்னங்க நீங்க…? எதுக்கு நீங்க நடுவுல வந்து பேசறீங்க? இது எங்க வீட்டுப் பிரச்சினை. நாங்க பார்த்துக்கறோம்!”

அருள்மொழி அமைதியாக அவளைப் பார்த்தான்.

“நான் உதவி செய்ய வேண்டும் என்றுதான்—”

அவன் சொல்லி முடிப்பதற்குள் இசை இடைமறித்தாள்.

“வேணாங்க! யாரும் எனக்கு உதவி பண்ண வேண்டாம். ஏற்கனவே இவங்க முன்னாடி நின்னு நானே அவமானப்பட்டுட்டு இருக்கேன். இப்போ நீங்களும் வந்து எனக்காகப் பேசினா… நான் இன்னும் என்னவோ பண்ண முடியாதவ மாதிரி ஆயிடுவேன்!”

அவளுடைய குரல் நடுங்கியது.

அவள் கண்களில் கோபத்தோடு கண்ணீரும் தேங்கியிருந்தது.

அருள்மொழி அவளைப் பார்த்துக்கொண்டே அமைதியாக நின்றான்.

அவளுடைய கோபத்திற்குப் பின்னால் இருந்த வலியை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

ஆனால் இசைக்கு அந்த நேரத்தில் யாருடைய ஆறுதலும் தேவையில்லை.

தன்னை யாரும் பரிதாபமாகப் பார்க்கக் கூடாது என்பதுதான் அவளுடைய ஒரே எண்ணமாக இருந்தது.

அவள் அருகில் விளையாடிக்கொண்டிருந்த தன் இரண்டு வயது தங்கை அன்பு அழைத்தாள்.

“அன்பு… இங்க வாடி!”

சிறுமி ஓடிவந்ததும் இசை அவளைத் தூக்கிக்கொண்டாள்.

பிறகு அங்கே நின்றிருந்த பெண்களைப் பார்த்து,

“எங்க அம்மா வாங்கின காசு அவர்கிட்டதான் இருக்கு. அவங்க வந்ததும் நீங்க கேட்டுக்கோங்க. இப்போ என் வீட்டுக்கு முன்னாடி நின்னு இப்படிச் சத்தம் போடாதீங்க!”

என்று கோபமாகச் சொல்லிவிட்டு,

அருள்மொழியை ஒருமுறை கூட பார்க்காமல் தன் தங்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.

கதவு அவளுக்குப் பின்னால் மெதுவாக மூடியது.

வாசலில் நின்றிருந்த அருள்மொழி சில நொடிகள் அந்தக் கதவையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் தன்னை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படிப் பேசவில்லை என்பது அவனுக்குப் புரிந்தது.

அவளால் தாங்க முடியாத அளவுக்கு மனம் காயப்பட்டிருக்கிறது.

என்ற எண்ணம் மட்டும் அவனுக்குள் தோன்றியது.

அவன் கையில் இருந்த வர்ணா அவன் சட்டையைப் பிடித்துக்கொண்டாள்.

அருள்மொழி அவளைப் பார்த்தான்.

பிறகு இசையின் வீட்டுக் கதவை நோக்கி இன்னொரு முறை பார்த்துவிட்டு, அமைதியாகத் தன் வீட்டை நோக்கி நடந்தான்.

ஆனால் அவன் மனதில் மட்டும் இசையின் கோபமான முகமும்…

அந்தக் கோபத்துக்குப் பின்னால் மறைந்திருந்த கண்ணீரும்…

மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தது.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!