Stories that touch hearts

Home  /  01. சீமா (பாறைக்குள் ஓர் பனித்துளி)  /  Chapter 3

CHAPTER 3

பனித்துளி 3

By seema · October 11, 2026

0

சிவக்கம் அரசு மருத்துவமனையில் தலைமை அலுவலர் அறையிலிருந்து பணிமாறுதல் ஆணையை வாங்கிக்கொண்டு கலங்கிய மனதோடு நர்ஸ்கள் ஓய்வறைக்கு வந்தாள் எழில்.

அங்கே கையில் பைல்களோடு காத்திருந்த உஷா, “என்னடி எழில்… மேடம் வரச் சொல்லியிருந்தாங்களே, என்ன விஷயமாம்?” என்று ஆர்வம் தாங்காமல் கேட்டாள்.

எழில் எதுவும் பேசாமல் தன் கையிலிருந்த அதிகாரப்பூர்வக் கடிதத்தை உஷாவிடம் நீட்டினாள். அதை வாங்கிப் படித்த உஷாவின் கண்கள் அகல விரிந்தன.

“என்னடி இது… உனக்கு டிரான்ஸ்பர் வந்துடுச்சா?!” என்று அதிர்ச்சியோடு கேட்டவள், அதில் இருந்த ஊரின் பெயரை உரக்கப் படித்தாள்.

‘மேதினூர்'”டிரான்ஸ்பர் போட்டது சரிதான்… ஆனா இந்த மேதினூர் ஊரு பெயரை எங்கே யோசிச்சு பார்த்த மாதிரி இருக்கே…” என்று முணுமுணுத்த உஷா, வேகமாகத் தன் ஹேண்ட் பேக்கைத் திறந்து போனை எடுத்தாள். கூகுள் தேடலில் ‘மேதினூர்’ என்று டைப் செய்து பார்க்க, ‘கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடிக்கு அருகில் உள்ள மலை கிராமம்’ என்று திரையில் காட்டியது.

“ஏய்! இது கன்னியாகுமரி மாவட்டத்துல இருக்குடி…” என்று உஷா போனைப் பார்த்தபடி பிரமிப்புடன் சொல்ல, எழில் பதற்றமானாள்.”அப்படியாடி? அடுத்த வாரமே அங்கு ஜாயின்ட் பண்ணனும்னு போட்டிருக்கு! என்னடி இது… இப்படித் திடீர்னு உங்களையெல்லாம் விட்டுட்டுப் போகணுமா?” என்று எழில் கண்களில் நீர் மல்க வருத்தமாகக் கேட்டாள்.

அதைக் கேட்டு பெருமூச்சு விட்ட உஷா, லேசான கடுப்புடன், “ஆமா… நீ தான் ஆசைப்பட்டு அங்கே போகப்போற பாரு! அரசாங்க வேலைல இதெல்லாம் கேட்டும் வாங்க முடியுமா, சொன்னதைச் செஞ்சுதானே ஆகணும்?” என்றாள் நொந்தபடி.

அன்று மாலை டியூட்டி முடிந்ததும், மனமும் உடலும் சோர்வடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் எழில்.மகள் சோர்ந்து போய் வருவதைப் பார்த்த தாய் வள்ளி வழக்கம் போல மருத்துவமனையின் கடுமையான வேலையால் வந்த சோர்வுதான் என்று நினைத்துக்கொண்டவர் “எழில், போய் கை கால் கழுவிட்டு வாமா…” என்று அன்போடு சொன்னார்.

தனது அறைக்குச் சென்று முகம் கழுவி, உடைகளை மாற்றிக்கொண்டு பிரஷ்ஷாகி வந்தவளிடம், சுடச்சுட காபி கப்பை நீட்டினார் வள்ளி.

அந்தக் காபியை வாங்கி மெல்லப் பருகியவள், தாயின் முகத்தைப் பார்த்து, “அம்மா… எனக்கு டிரான்ஸ்பர் போட்டுட்டாங்கமா…” என்றாள் தயக்கத்துடன்.வள்ளி ஆச்சரியத்துடன், “டிரான்ஸ்பரா! எந்த ஊருக்குடி?” என்க, “கன்னியாகுமரி மாவட்டத்துல மேதினூர்னு ஒரு ஊராம்மா…” என்றாள் எழிலரசி.

‘கன்னியாகுமரி’ என்ற வார்த்தையைக் கேட்டதுமே வள்ளியின் கண்கள் மின்னைப்போலப் பிரகாசித்தன! “அப்படியாடி! கன்னியாகுமரியா… அங்க போனா நம்ம விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை எல்லாம் தினமும் பாக்கலாமாடி!” என்று ஆசையோடு கேட்டார்.

அம்மாவின் பேச்சைக் கேட்ட எழில் தன் தலையிலேயே தட்டிக்கொண்டவள் “ஏம்மா… அது கன்னியாகுமரி ஊருக்குள்ள இல்லை! மேதினூர்ங்கிறது ஒரு காட்டு மலைக் கிராமம்! அங்கே போய் அந்த மலை மேல எப்படி வேலை பார்க்கிறதுன்னு நானே தலையைப் பிடிச்சுட்டு யோசிச்சுட்டு இருக்கேன்… உன் புத்தி எங்க போகுது பாரு!” என்று அலுத்துக் கொண்டாள்.

அன்று இரவு, வழக்கம் போல் சிதம்பரம் நகரில் இயங்கி வந்த தனது எலக்ட்ரானிக்ஸ் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்தார் எழிலின் தந்தை ரவி. அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து இரவு உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, தந்தையிடம்  டிரான்ஸ்பர் பற்றிய விஷயத்தைச் சொன்னாள்.

விஷயத்தைக் கேட்ட ரவி, சாப்பிடுவதை நிறுத்திவிட்டு “அப்படியா…” என்று பெருமூச்சு விட்டவர், “சரி, நாம முதல்ல குடும்பத்தோட அந்த ஊருக்குப் போயி சூழல் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வரலாம். ஊரு செட் ஆச்சுன்னா, நீயும் அம்மாவும் அங்க போய் வீடு எடுத்து இருங்க.நான் கடையைப் பார்த்துக்கிட்டு இங்கேயே தங்கிடுறேன்,” என்றார்.

உடனே குறுக்கிட்ட வள்ளி, “அது எப்படிங்க சரியா வரும்? நாங்க ரெண்டு பேரும் அங்க போயிட்டா, நீங்க இங்க சமையலுக்கும் சாப்பாட்டுக்கும் என்ன பண்ணுவீங்க? அதுவும் இல்லாம உங்களை விட்டுட்டு நாங்க எப்படி தனியா இருக்குறது?” என்று கவலையோடு கேட்டார்.

“சரிதான்…அப்போ பொண்ணை மட்டும் அந்தத் தொலைதூர மலைக் கிராமத்துல தனியா இருக்க சொல்றியா? அதுதான் சரியா வருமா சொல்லு?” என்று ரவி நியாயமாகக் கேட்க, இருவருக்கும் இடையே லேசான விவாதம் தொடங்கியது.

எழில் தலையிட்டு, “அப்பா, அம்மா… முதல்ல நாம மூணு பேரும் அங்க போய், ஹாஸ்பிட்டலையும் அந்த ஊரையும் பார்ப்போம். அப்புறம் மத்ததை யோசிக்கலாம். இப்போதே முடிவெடுக்க வேண்டாம்,” என்று இருவரையும் சமாதானப்படுத்தினாள்.

ரவியும், “சரிம்மா” என்று ஏற்றுக்கொண்டார்.

அன்று இரவு உணவு முடிந்ததும் படுக்கைக்குச் சென்ற மூவருக்கும் தூக்கம் வரவில்லை; வெவ்வேறு சிந்தனைகள் மனதை ஆக்கிரமித்தன.’புதிய ஊர் எப்படி இருக்குமோ, மலைப்பாதை பாதுகாப்பானதுதானா?’ என்று எழிலும், ‘மகளின் எதிர்காலமும், குடும்பத்தைப் பிரிந்து வாழ வேண்டிய சூழலும் வரக்கூடாது’ எனப் பெற்றோரும் யோசித்தபடியே உறங்கச் சென்றனர்.

மறுநாள் எழில் வழக்கம்போல மருத்துவமனைக்குச் சென்று தன் பணியை முடித்தாள். அடுத்த இரண்டு நாட்கள் அவளுக்குத் தொடர் விடுமுறை என்பதால், கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் ரயிலில் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை உறுதிசெய்தனர்.

அன்று இரவே, தங்களுக்குத் தேவையான துணிமணிகளைப் பைகளில் அடுக்கிக்கொண்டு, மூவரும் சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனை நோக்கிப் புறப்பட்டனர். அரைமணி நேரத்தில் முதலாம் பிளாட்ஃபாரத்தில் ரயில் வந்து நிற்க, புதிய வாழ்க்கையையும் எதிர்பாராத மனிதர்களையும் நோக்கிச் செல்லும் அந்த இரவுப் பயணம், எழிலின் வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்குக் காத்திருந்தது.

ராயனும் அவனது நண்பர்களும் நேராகச் சென்று நின்றது, அந்தப் பழமையான விருட்சத்தின் முன்னால் தான். ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் அந்தப் பெரிய மரம், அவர்களின் குலதெய்வத்தின் சொரூபமாகவே வழிபடப்பட்டு வருகிறது.

மரத்தின் கிளைகள் எங்கும் நேர்த்திக்கடனாகக் கட்டப்பட்ட தாலிக் கயிறுகளும், காணிக்கைச் சங்கிலிகளும், காற்றில் மெல்ல அசைந்து ஒலியெழுப்பும் வெண்கல மணிகளும் நிறைந்து காணப்பட்டன.

அந்த ஆதி விருட்சத்தின் முன் நின்ற ராயன், தன் இரு கரங்களையும் கூப்பி தலைவணங்கினான். அவனோடு நண்பர்கள் மூவரும் பயபக்தியுடன் கண்ணை மூடி நின்றனர்.

“தாயே மலையம்மா…எங்க பாட்டன், முப்பாட்டன் காலத்துல இருந்து எங்களை எப்படி உன் கண்ணிமை போலக் காத்து கூடவே இருந்தியோ… அப்படியே இனிவரும் எங்களோட சந்ததிகளோடும் உன் கருணை என்றுமே இருக்கணும் தாயே…” என்று மனமுருகி வேண்டிக்கொண்டான் ராயன்.

பின்னர் பிரகாரத்து மரப்பீடத்தின் மேல் கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்த திருநீற்றை அள்ளி, தன் அகன்ற நெற்றி நிறையப் பூசிக்கொண்டான். அவனது நண்பர்களும் அதைத் தொடர்ந்து விபூதியை இட்டுக்கொண்டனர்.

அவர்கள் சாமி கும்பிட்டு முடித்த அந்த மறுகணமே… “இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை… துப்புகெட்ட பயல்களா!” என்ற கம்பீரமான அதிகாரக் குரல் அங்கிருந்த அமைதியைக் கலைத்தது.

இளந்திரையன் திரும்பிப் பார்க்க, தோளில் கிடந்த துண்டை உதறிப்போட்டு, தன் தடித்த மீசையை முறுக்கிவிட்டபடியே கோபமும் கண்டிப்பும் கலந்த பார்வையோடு அங்கே வந்து கொண்டிருந்தார் அவனது அப்பா, மருது!

“ஏண்டா… மத்த நாள்லதான் காடு கரைன்னு காட்டான் பயலுக போல அலைஞ்சிட்டு கிடக்குறீங்க, இன்னைக்கு நம்ம கோயில்ல விசேஷம் ஆச்சே! எல்லா பயலும் இங்க இருக்கணும்னு ஒரு பயலுக்குகூட சுரணை இல்லையா?” என்று கர்ஜித்தார் மருது.

அவரது அதட்டலில் நால்வரும் அமைதியாக நிற்க, பயபக்தியோடு அடிமேல் அடி வைத்து முன்னால் வந்த சொக்கன், “மாமா… அது வந்து…” என்று சாக்குப்போக்குச் சொல்லி வாயைத் திறந்தான்.

“நீ வாயை மூடுடா! நாலு செவுள்ல விட்டேன் பேந்துரும்!” என்று மருது விரலை நீட்டி எச்சரிக்க, சொக்கன் சட்டென்று வாயை மூடிக்கொண்டான்.பின்னாடி மெதுவாக நகர்ந்த சொக்கன், பக்கத்தில் நின்ற பரமையனிடம், ” என்னடா இன்னைக்கு மாமா ரொம்ப பொங்குறாரு?” என்று முணுமுணுத்தான்.

அவனுக்குப் பின்னால் நின்ற மூக்கையன் லேசாக எட்டிப் பார்த்து, “கொஞ்சம் வேகமாச் சொல்லுடா… சித்தப்பாக்கு கேட்கட்டும், இன்னும் ரெண்டு போடுவாரு!” என்று நக்கலாகக் கிசுகிசுத்தான்.

பரமையன் கடுப்பாகி, “ஏண்டா நீ வேற… செத்த கம்முனு இருடா!” என்று அவனை அடக்கினான்.

இவர்கள் பின்னால் நின்று முணுமுணுப்பதைக் கவனித்துவிட்ட மருது, “ஏண்டா! நான் இங்க பேசிட்டு இருக்கேன்… நீங்க உங்களுக்குள்ள குசு குசுன்னு பேசிட்டா என்னடா அர்த்தம்? போங்கடா! போய் முதல்ல சோத்தத் தின்னுங்க… துரைமாருங்க வர வரைக்கும் இங்க விருந்து அப்படியே காத்துக்கிட்டு இருக்குமாக்கும்!” என்று நக்கலாக முறைத்தார்.

ராயனை மட்டும் தலையிலிருந்து கால் வரை ஒரு கூர்மையான பார்வை பார்த்துவிட்டு, தோள் துண்டை உதறிப் போட்டபடி பந்தியை நோக்கி நடந்தார் மருது.அவர் போனதுதான் தாமதம், அங்கே சொக்கனின் அப்பா குப்பன் கையில் சுருட்டோடு வந்து சேர்ந்தார்.

இந்த நால்வர் கூட்டணியைப் பார்த்ததும் அவருக்கு இரத்தக் கொதிப்பு ஏறாத குறைதான்!

“ஏம்ல… உதவாக்கரை நாலு பயலுக்கும் உருப்படப் போறதா ஐடியாவே கிடையாது! நேரம் கழிச்சு வந்து சேர்ந்திருக்கானுவ பாரு… எங்க தலைவிதியைப் பார்த்து எங்களுக்கே சிரிப்புதான் வருது!” என்று தலையிலடித்துக்கொண்டார்.

அவரைப் பார்த்து ராயன் ஒரு அசட்டுச் சிரிப்புடன் தன் மீசையை முறுக்கிவிட்டு, “ஏன் மாமா… அறிவானவங்களுக்குத் தான் அறிவான புள்ள பிறக்கும்! பின்ன உங்களுக்கு எல்லாம் எப்படிப்பட்ட புள்ள பிறக்கும்?” என்று டைமிங்காகக் கேட்க, சுற்றியிருந்த மூன்று நண்பர்களும் சிரிப்பை அடக்க முடியாமல் திணறினர்.

தங்கச்சி மகனின் குறும்புத்தனமான கேள்வியைக் கேட்டுப் பேச வார்த்தையின்றி தவித்த குப்பன், “எல்லாம் எங்க தலையெழுத்து… நாங்கள் வாங்கி வந்த வரம்!” என்று தன் நெற்றியில் அடித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.

பனி சிந்தும்…

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!