மேதினூர்:
தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டத்தில் பசுமையின் மடியில் அமைந்திருக்கும் இயற்கை வளம் நிறைந்த ஒரு எழில்மிகு சிற்றூர். சுற்றிலும் பச்சைப்பசேல் என விரிந்து கிடக்கும் வயல்வெளிகள், கம்பீரமாக வானைத் தொடும் மலைத் தொடர்கள், சலசலத்து ஓடும் காட்டாறுகள் என இயற்கை தன் அழகையெல்லாம் அள்ளித் தெளித்த அழகான கிராமம்.
அன்று அந்த மலைக் கிராமத்தின் காவல் தெய்வமாகவும், ஊர் மக்களின் குலதெய்வமாகவும் விளங்கும் அருள்மிகு மலையம்மன் கோயிலின் சித்திரை மாசித் திருவிழா!
ஊரே அதிகாலையிலேயே விழித்துக்கொண்டு, திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.மலை அடிவாரத்தில் அமைந்திருந்த அந்தப் பழமையான கோயிலில், கரகாட்டம், நையாண்டி மேளத்தின் அதிர்வுகளும், தாரை தப்பட்டைகளின் முழக்கமும் விண்ணைப் பிளந்தன.
ஊர் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, நெற்றியில் திருநீறும் குங்குமமும் இட்டு, பயபக்தியோடும் கோயில் பிரகாரத்தில் திரண்டிருக்க, அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் முடிந்து, தீபாராதனை காட்டியதும் பூசாரியின் சாமியாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது.
அடுத்து, ஊரின் பாரம்பரிய வழக்கப்படி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு தொடங்கியது.
தங்கள் குடும்பத்தின் கஷ்டங்கள் தீரவும், நோய்கள் அகலவும், வேண்டிக்கொண்டு, மக்கள் நேர்ந்து விட்டிருந்த ஆடுகளைக் கோயில் கருவறைக்கு முன்பாகக் கொண்டு வந்து நிறுத்த,ஆடுகளின் கொம்புகளில் பன்னீரும், மஞ்சள் நீரும் தெளிக்கப்பட்டு, கழுத்தில் செவ்வந்திப் பூக்களால் ஆன மாலைகள் சூட்டப்பட்டன.
பூசாரி பெரிய சொம்பில் இருந்த மஞ்சள் நீரைக் கையிலெடுத்து, அந்த ஆடுகளின் மீது தெளித்து மந்திரங்களை முழங்கினார். மஞ்சள் நீர் பட்டதும் ஆடுகள் தம் உடலைச் சிலிர்த்துத் தலையை ஆட்டின. அது அம்மன் நேர்த்திக்கடனை ஏற்றுக் கொண்டதற்கான அருளடையாளமாகக் கருதப்பட, கூட்டத்தில் இருந்த மக்கள் “ஆத்தா! மலையம்மா தாயே!” என்று பக்திப் பரவசத்துடன் பெருங்குரலெடுத்துக் கூச்சலிட்டனர்.
அம்மனின் அருள்வாக்கு கிடைத்ததும், மேள தாளங்களின் வேகம் கூடியது. பீடத்தின் அருகே ஆடுகள் கொண்டு வரப்பட்டு, அரிவாளுக்குத் தூப தீபம் காட்டப்பட்டதும் பூசாரி ஒரே வெட்டில் பலி பீடத்தில் ஆட்டைப் பலியிட, தெளித்த ரத்தம் அம்மனின் பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆட்டுப்பலி முடிந்த கையோடு, கோயில் வளாகத்தின் மர நிழல்களில் மதியக் கறி விருந்திற்கான பந்தல் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது.நீளமான வாழை இலைகள் வரிசையாகப் போடப்பட்டு, அதில் ஆவி பறக்கும் சம்பா சாதமும், கோயில் பலியிடலில் சமைக்கப்பட்ட காரசாரமான ஆட்டுக்கறிக் குழம்பும் கரண்டி கரண்டியாக ஊற்றினர்.
வறுத்த கறி, இரத்தம் பொரியல், சுடச்சுட ரசம் என உணவின் நறுமணம் அந்த மலைக் காற்றின் குளிரையும் மீறி மூக்கைத் துளைத்தது. ஊர் மக்கள் அனைவரும் பந்தியில் அமர்ந்து பசியோடு, பக்தியோடு உண்டு மகிழ்ந்தார்கள்.
அந்த பந்தியின் தலைப்பகுதியில், மேதினூர் மலைக் கிராமத்தின் ஊர் தலைவரான மருது கம்பீரமாக அமர்ந்திருந்தார். முறுக்கிய மீசையும், தோளில் போட்ட துண்டுமாக ஊர் மரியாதையோடு அமர்ந்திருந்த அவருக்கு அருகே, அவரது மனைவி மயிலா உபசரிப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
அவர்களின் செல்ல மகள் குயிலா, கையில் தண்ணீர்ச் சொம்போடு பந்தியில் பரிமாறுபவர்களுக்கு வழிகாட்டியபடி, தன் பட்டுப் பாவாடை விசிறி வர அங்கிங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள்.
சொந்த பந்தங்கள், பஞ்சாயத்து பெரியவர்கள் என அனைவரும் கூட்டமாகச் சூழ்ந்து சிரித்துப் பேசி விருந்தைச் சுவைத்துக்கொண்டிருந்தனர். ஊர் தலைவர் மருதுவும் உரத்த குரலில் சொந்த பந்தங்களிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டாலும், அவரது கண்கள் மட்டும் பந்தலின் ஒவ்வொரு மூலை முடுக்கையும், கூட்டத்தின் முகங்களையும் கூர்ந்து தேடிக்கொண்டே இருந்தன.
அவரது தேடலைப் புரிந்துகொண்ட மயிலா, “என்னங்க… இலையில வச்ச கறியை அப்பிடியே போட்டுட்டு யாரைத் தேடுறீங்க?” என்று மெல்லிய குரலில் கணவனின் காதோரம் கேட்டாள்.
மருது தன் மீசையைத் தடவிக்கொண்டே, “கூட்டத்துல உன் மவனக் காணுமே மயிலா… கோயில் பூசையிலயும் முன்னாடி வந்து நிக்கல, இப்போ பந்தியிலயும் ஆளக் காணோம். இந்த நேரத்துல அவன் எங்கேடி போயிருப்பான்?” என்று கண்டிப்பும் கவலையும் கலந்த குரலில் கேட்டார்.
அப்பா தேடுவதைக் கவனித்துவிட்ட மகள் குயிலா, ஓடிவந்து, “அப்பா… அண்ணன் எங்கே போயிருக்கும்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? வழக்கம்போல அந்த மலையடிவாரத்துக் காட்டாத்துப் பக்கம்தான் போயிருக்கும்!” என்று ரகசியமாகச் சொல்லிச் சிரித்தாள்.
மகனின் இந்த வழக்கமான போக்கைக் நினைத்து மருது ஒரு பெருமூச்சை விட, அந்த மதியக் கறி விருந்தின் ஆரவாரத்திற்கு நடுவே, ஊர் தலைவரின் மகனின் வருகைக்கான எதிர்பார்ப்பு அங்கு மெல்ல எழத் தொடங்கியது.
கோயில் வளாகத்தில் மதியக் கறி விருந்தின் ஆரவாரம் விண்ணைப் பிளந்து கொண்டிருக்க, அதே நேரத்தில் ஊருக்குச் சற்றுத் தொலைவில் உள்ள அடர்ந்த மலையடிவாரக் காட்டிற்குள் ஒரு விசித்திரமானப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
அங்கிருந்த ஒரு பிரம்மாண்டமான முதிய மரத்தின் உயரமான கிளையில், ஆள் உயரத்திற்கு ஒரு பெரிய தேன்கூடு தொங்கிக் கொண்டிருந்தது. அந்தத் தேனீக்களை விரட்டி, தேன் அடையைக் கைப்பற்றுவதற்காக ஒருவன் தன் உடலையும் முகத்தையும் தடிமனான சாக்கால் சுற்றிச் சாதுரியமாக மூடியிருந்தான்.
அவனது கூர்மையான இரு கண்கள் மட்டுமே வெளியில் தெரிந்தன.கையில் புகையும் தீப்பந்தத்தோடு, அந்த உயரமான மரத்தின் கரடுமுரடான பட்டைகளைப் பற்றிக்கொண்டு அவன் மேலே ஏறிய வேகத்தைப் பார்த்தாலே தெரிந்தது—அவனுக்கு இது ஒன்றும் புதிதல்ல, கைதேர்ந்த விளையாட்டு என்று!
மரத்தின் கீழே நின்றிருந்த அவனின் பால்யகால மூன்று நண்பர்களும் பதற்றத்தோடு அண்ணாந்து பார்த்தபடி, “டேய்… ராயா பார்த்துடா! பார்த்து மெதுவா ஏறு!” என்று கத்திக் கவலைப்பட்டனர்.
மரத்தின் மீதிருந்தவன் தன் முகத்தைச் சுளித்து, சாக்கின் உள்ளிருந்தபடியே “டேய்… கொஞ்சம் சத்தம் போடாம வாய மூடுறீங்களா? உங்க சத்தத்தைக் கேட்டு அதுவே முழிச்சுக்கிட்டு பறந்து வந்து கொத்தப்போகுது!” என்று திட்டிக்கொண்டே, இன்னும் லாவகமாக மரத்தின் கிளைகளில் தவழ்ந்து தேன்கூட்டின் அருகே சென்றான்.
தேன்கூட்டை அடைந்ததும், கையில் வைத்திருந்த தீப்பந்தத்தின் புகையைத் தேன்கூட்டின் மீது காட்ட, புகையின் நெடி தாங்காமல், ஆயிரக்கணக்கான தேனீக்கள் ரீங்காரமிட்டபடி கூட்டிலிருந்து வெறித்தனமாக வெளியேறி வானத்தில் பறக்கத் தொடங்கின.
கீழே நின்றிருந்த நண்பர்களும் ஏற்கனவே தங்களைச் சாக்கால் மூடியிருந்ததால், கோபத்தோடு சுற்றிய தேனீக்களிடமிருந்து தப்பித்துக் கொண்டனர்.
தேனீக்கள் அனைத்தும் கலைந்து சென்றதும், மரத்தில் இருந்தவனோ தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த கூர்மையான குறுவாளை மின்னல் வேகத்தில் வெளியில் எடுத்தவன் தேன் சிந்தாதபடி, மிகச் சுத்தமாக அந்தத் தேன் அடையின் மேல் பகுதியை லாவகமாகக் கீறிப் பிரித்தான்.
“டேய்… பிடிங்கடா!” என்று அவன் மேலிருந்து கூப்பிட, “டேய், டேய்… மெதுவா விட்டுடாதடா!” என்று பதறிய நண்பர்கள் மூவரும், மரத்தின் கீழே ஒரு பெரிய அகலமான சாக்கின் நாலு மூலைகளையும் இறுக்கமாகப் பிடித்துப் பரப்பி நின்றனர்.
அடுத்த நொடி… மரத்தின் கிளையிலிருந்து பிரிக்கப்பட்ட அந்தப் பிரம்மாண்டமான, கெட்டியான தேன் அடை, ‘பொதிர்’ என்ற சத்தத்துடன் அவர்கள் பரப்பிப் பிடித்த சாக்கின் நடுவே பத்திரமாக வந்து விழுந்தது! பொன்னிறத் தேன் அந்த அடையிலிருந்து சொட்டுச் சொட்டாக வழிந்தோடியது.
பின்னர் சராலென்று மின்னல் வேகத்தில் சருக்கியபடி வந்தவனோ மரத்திலிருந்து லாவகமாகக் கீழே குதித்து, தன் முகத்தில் சுற்றியிருந்த சாக்கை மெல்ல விலக்கியவன் தான்,ஊர் தலைவர் மருதுவும், அவரது மனைவி மயிலாவும் கோயில் பந்தியில் தேடிக்கொண்டிருந்த அவர்களின் ஒரே மகன்— இளந்திரையன்!
மலையடிவாரக் காட்டின் காத்தையும், மண்ணின் வாசனையையும் சுவாசமாகக் கொண்டு வளர்ந்தவன்.
“இளந்திரையன் சுருக்கமாக அனைவருக்கும் ராயன் ஆகிவிட்டான்…!”
பெயருக்கு ஏத்தாப்போலவே அவனிடம் ஒரு கம்பீரமும், அஞ்சாத வீரியமும் இருந்தது. ஆனால், படிப்பைப் பொறுத்தவரை அவனது பள்ளி வாழ்க்கை ஐந்தாவது வகுப்போடு முடிந்துபோனது. புத்தகப் பக்கங்களை விடவும், காட்டின் மரங்களும், பறவைகளின் சத்தமுமே அவனுக்குப் பெரிய பாடங்களைக் கற்றுக்கொடுத்தன.
ராயனுக்குப் பிரியமான உலகம் என்றால் அது அவனது காடும், மலையும்தான். காட்டின் எந்தப் பாதையில் எந்த மிருகம் நடமாடும், எந்தக் கிளையில் தேன்கூடு கட்டியிருக்கும் என்பதெல்லாம் அவனுக்கு விரல் நுனியில் அத்தனை அக்குவேறாகத் தெரியும்.
இடுப்பில் சொருகிய குறுவாளோடும், தோளில் சாக்கோடும் அவன் காட்டுக்குள் வேட்டைக்குக் கிளம்பிவிட்டால், அவனை மிஞ்ச அந்தச் சுற்றியிருக்கும் கிராமங்களிலேயே ஆள் கிடையாது.வேட்டையாடுவது ஒருபுறமிருக்க, ராயனின் ஆருயிர்ச் செயல் என்றால் அது அவனது சொந்த வயலில் இறங்கி வேலை செய்வதுதான்.
ரசாயனம் எதுவுமில்லாமல், தன் உழைப்பை மட்டுமே மூலதனமாகப் போட்டு, தங்களின் சொந்த நிலத்தில் கம்பு, சோளம், மரவள்ளிக் கிழங்கு எனப் பயிரிடுவது அவனுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது.
காலை நேரத்துச் சூரியன் உதிக்கும் முன்னே வயலுக்கு வந்து, மண்வெட்டியைப் பிடித்துக் காலையிலிருந்து உழைத்து, தன் கையால் அறுவடை செய்த கம்புச் சோற்றையும், சுட்ட கிழங்கையும் சாப்பிடுவதில் அவன் அடையும் திருப்திக்கு ஈடு இணையே இல்லை.
சாக்கைக் கழற்றி எறிந்துவிட்டு, தன் தடித்த மீசையை நீவிக்கொண்டே நின்ற ராயனைப் பார்த்த அவனது நண்பர்கள், “டேய் ராயா… ஊர்ல கோயில் விருந்து நடந்துக்கிட்டு இருக்கு, நம்ப அப்பனுங்க நிச்சயமாக நம்மை தேடிக்கிட்டு இருக்குங்கடா!” என்றார்கள்.
தான் எடுத்த அந்தப் பொன்னிறத் தேன் அடையைப் பார்த்தபடியே ராயன் ஒரு கம்பீரமான புன்னகையைச் சிந்தினான்.
பின்னர் ஆளுக்கொரு பக்கம் தேனடையை பிய்த்து தின்று விட்டு மீதமிருந்ததை சாக்கில் கட்டியவன் சரி வாங்கடா என்றவாறு காட்டுப் பாதையில் நடந்து செல்லும் வழியிலிருந்த சில்லென்ற சுனையைக் கண்டதும், நால்வருக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.
தேன் எடுத்தக் களைப்பும் காட்டுப் பிசுபிசுப்பும் போக, அந்தப் படிகாரத் தண்ணீரில் குதித்துக் குதூகலமாகக் குளித்து முடித்தனர்.
பின்னர், தாங்கள் உடுத்தியிருந்த ஆடைகளையே அந்த நீரில் அலசி, லாவகமாகப் பிழிந்து உதறி அதையே உடுத்திக்கொண்டு சுத்தபத்தமாகக் கோயில் வளாகத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் வந்து சேர்ந்தபோது மதியக் கறி விருந்து பாதி முடிந்திருந்தது..
பனி சசிந்தும்…