Stories that touch hearts

Home  /  01. சீமா (பாறைக்குள் ஓர் பனித்துளி)  /  Chapter 1

CHAPTER 1

பாறைக்குள் ஓர் பனித்துளி

By seema · October 9, 2026

0

சிதம்பரம்:

நடராஜப் பெருமானின் அருள் பொங்கும் புண்ணிய பூமி. அதிகாலை நேரத்திலிருந்தே தில்லை நடராஜர் கோயிலின் சிவபுராண ஒலியும், தேவாரத் திருமுறைகளும் காற்றில் மிதந்து நகரத்தையே ஒருவிதப் தெய்வீக அமைதியில் மூழ்கடித்துக் கொண்டிருந்தது.

மேல வீதி, கீழ வீதி, தெற்கு வீதி என நாலம்பல வீதிகளிலும் பக்தர்களின் நடமாட்டமும், வாசல்களில் வண்ணக் கோலமிட்டுத் தெளிக்கப்பட்ட சாண வெள்ளத்தின் வாசமும் சிதம்பரத்திற்கு மட்டுமே உரித்தான ஒரு கலைநயத்தைக் கூட்டியிருந்தது.

கோயிலுக்குச் சற்று தொலைவில் உள்ள அமைதியான தில்லையம்பல நகரின் முதல் வீட்டில் வழக்கம் போல அந்த அதிகாலைப் பொழுது மிகவும் பரபரப்பாகத் தொடங்கியது.சமையலறையிலிருந்து கடுகு தாளிக்கும் வாசத்தோடு பாத்திரங்கள் உருளும் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.

“எழிலு… மணி ஏழரை ஆகப்போகுதுடி! இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க? ஹாஸ்பிட்டல் போக வேண்டாமா?” என்று சமையலறையிலிருந்து சத்தமாகக் குரல் கொடுத்துக்கொண்டே, தன் மகளுக்கான மதியச் சாப்பாட்டு டிபன் பாக்ஸை பையில் வைத்துக் கொண்டிருந்தார் இல்லத்தரசியான வள்ளி.

அந்நேரம் வழக்கம் போல் தனது நடைபயிற்சியை முடித்துவிட்டு, கையில் செய்தித்தாளுடன் வீட்டிற்குள் நுழைந்த வள்ளியின் கணவர் ரவி சுவரிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தவர், “எழிலு… மணி ஆயிடுச்சு பாரு! பஸ் வந்துடப் போகுது!” என்று தானும் தன் பங்கிற்கு மகளுக்குக் குரல் கொடுத்தார்.

“இதோ… வந்துட்டேன்பா!” என்ற மெல்லிய குரலுடன் தன் அறையிலிருந்து வெளியே வந்தாள் எழிலரசி.நேர்த்தியான செவிலியர் உடையில், தலைமுடியைச் அழகாக வாரி முடிந்து, நெற்றியில் சிறிய பொட்டுடன் வெளியே வந்த அவளது தோற்றம் அப்படியே நம் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் பார்க்கும் உணர்வைத் தந்தது.

சிவக்கம் அரசு மருத்துவமனையில் தான் எழிலரசி செவிலியராகப் பணிபுரிகிறாள்.

அம்மா நீட்டிய சாப்பாட்டு பையை வாங்கிக் கொண்டவள், “அப்பா, நான் கிளம்புறேன்” என்றபடி கண்ணாடியைப் பார்த்துத் தன் பூவைச் சரிசெய்தவாறு வெளியேறினாள்.

தில்லையம்பல நகர் வீட்டிலிருந்து புறப்பட்ட எழிலுக்கு, சிதம்பரம் பேருந்து நிலையம் வெறும் பத்து நிமிட நடைபயணத் தூரம்தான்.

காலை நேரத்துச் சுறுசுறுப்பில் வீதிகளில் நடமாடும் மனிதர்களையும், கடைகளில் ஒலிக்கும் பாடல்களையும் கடந்துதான் தினமும் பேருந்து நிலையத்திற்கு போக முடியும்.

ஆனால் எழிலுக்கு இது ஒரு இனிமையான தருணம் தான். வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து குவியும் பேருந்துகளின் ஹாரன் சத்தமும், பயணிகளின் கூச்சலும், தேநீர் கடைகளின் தட்டல் ஓசையுமாய் அந்த இடமே பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது.

அத்தனை இரைச்சல்களுக்கும் நடுவே, அவள் தினமும் செல்லும் சிவக்கம் பாதைக்கான பேருந்து அங்கே தயாராக நின்று கொண்டிருந்தது.

வேகமாகச் சென்று பேருந்தில் ஏறியவளுக்கு, அது காலை நேரத்தின் ஆரம்பப் புள்ளி என்பதால் அதிர்ஷ்டவசமாக இடது பக்கமிருந்த ஜன்னலோர இருக்கை காலியாகக் கிடைத்தது. பையை மடியில் வைத்தபடி உட்கார்ந்துக்கொண்டு தன் நெருங்கிய தோழியான உஷாவிற்குத் தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பினாள்:

“பஸ் ஏறிட்டேன் டி, சீட் கிடைச்சுடுச்சு…”

மறுமுனையில் உஷாவிடமிருந்து உடனே பதில் வந்தது:

“சரிடி எழில், நான் வழக்கம் போல ஓமகுளம் ஸ்டாப்பிங்ல வந்து ஏறிக்கிறேன்.

“சரியாகக் கால் மணி நேரத்தில் பேருந்து சிதம்பரத்திலிருந்து புறப்பட்டு, நகரத்தின் எல்லைகளைத் தொட்டது.

ஓமகுளம் பேருந்து நிறுத்தம் வந்ததும், படியில் ஏறி வந்தாள் உஷா. எழில் அருகில் இருந்த இடத்தை நகர்ந்து கொடுக்க, உஷா அவளருகே அமர்ந்துகொண்டாள்.கடந்த மூன்று வருடங்களாக இருவரும் ஒரே அரசு மருத்துவமனையில்தான் செவிலியர்களாகப் பணிபுரிகிறார்கள்.

வெறும் சக ஊழியர்களாக மட்டுமின்றி, இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஆருயிர் தோழிகளாகவும் மாறியிருந்தனர். ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியே வீசிய இளம் காற்றை ரசித்தபடி, மருத்துவமனை விஷயங்களையும் வீட்டின் விசேஷங்களையும் பேசிச் சிரித்தவாறே அவர்களின் பயணம் தொடர்ந்தது.

சுமார் முக்கால் மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, பேருந்து சிவக்கம் அரசு மருத்துவமனைப் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது.இருவரும் இறங்கி, மருத்துவமனையின் என்ட்ரன்ஸை நோக்கி நடந்தனர். நகர்ப்புறச் சூழலிலிருந்து தள்ளி, கிராமப்புற எல்லைக்குள் அமைந்திருந்த அந்த அரசு மருத்துவமனை காலை நேரத்துக்கே உரித்தான ஒருவித எதார்த்தமான பரபரப்பில் மூழ்கியிருந்தது.

வாசலிலேயே வரிசையில் நிற்கும் ஏழை எளிய மக்கள், கையில் குழந்தையோடு காத்திருக்கும் தாய்மார்கள், முதியவர்களின் இருமல் சத்தம் என அங்கே மனித வலியும், அதைப்போக்கத் துடிக்கும் மனிதநேயமும் நிறைந்து வழிந்தன.

மருத்துவமனைக்குள் நுழைந்ததும் செவிலியர் அறைக்குச் சென்று தங்களின் வருகையைப் பதிவு செய்தனர் எழிலரசியும் உஷாவும். பின்னர் தன் கையில் உள்ள மருத்துவக் கருவிகளையும் நோயாளிகளின் பைல்களையும் எடுத்தபோது, எழிலின் முகத்தில் இருந்த எளிய புன்னகையும் கனிவும் அந்த மருத்துவமனையின் நோயாளிகளுக்கு ஒரு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.

அன்று திங்கட்கிழமை என்பதால், சிவக்கம் அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு வழக்கத்தை விடப் பல மடங்கு கூட்டத்தோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

காரணம், வாரத்தின் அந்த நாள் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிஒலி வரைவு  பரிசோதனை செய்யப்படும் சிறப்பு நாள்!

காலை எட்டு மணிக்கே சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து வயிறைத் தாங்கியபடி வந்து சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களும், அவர்களுக்குத் துணையாக வந்த தாய்மார்களும், கணவன்மார்களும் ஸ்கேன் அறையின் வெளிப்புற வராந்தாவில் வரிசையில் காத்திருந்தனர்.

ஒருவருக்கொருவர் பிரசவத்தைப் பற்றிய பயத்தையும், வயிற்றுப் பிள்ளையின் அசைவுகளையும் பகிர்ந்துகொள்ளும் மெல்லிய முணுமுணுப்புச் சத்தம் அந்த இடமெங்கும் நிறைந்திருந்தது.எழிலுக்கும் உஷாவிற்கும் அன்று ஓய்வெடுக்க ஒரு நொடி கூட நேரமில்லை.

“அக்கா…கொஞ்சம் வரிசையில நில்லுங்க. எல்லாரையும் கூப்பிடுவோம். தலைசுத்துற மாதிரி இருந்தா அந்தப் பக்கம் பெஞ்ச்ல உட்காருங்க…” என்று கனிவான குரலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தியபடி இருந்தாள் உஷா.

ஒவ்வொரு பெண்ணையும் ஸ்கேன் அறைக்குக் கூட்டிச் சென்று, அவர்களின் எடையையும் ரத்த அழுத்தத்தையும் பரிசோதித்து, கட்டிலில் படுக்க வைத்து, வயிற்றுக்கு ஜெல் தடவித் தயார் செய்வது வரை எழிலின் கரங்கள் பம்பரமாகச் சுழன்றன.

பயத்தோடு இருக்கும் இளம் கர்ப்பிணிகளின் கரங்களைப் பற்றிக்கொண்டு, “பயப்படாதீங்கமா… பாப்பா நல்லா ஆரோக்கியமா இருக்கு,” என்று டாக்டர் சொல்லும் ஒற்றை வார்த்தை, அந்தப் பெண்களுக்கு மாமருந்தாக அமைந்தது.

மருத்துவர் ஸ்கேன் மெஷினின் திரையைப் பார்த்துப் பரிசோதித்து முடிவுகளைக் கூற, அதைச் சற்றும் பிசகாமல் பைல்களில் பதிவு செய்வதும், போலிக் ஆசிட் மற்றும் அயர்ன் மாத்திரைகளை எடுத்து வழங்கி அவற்றுக்கான விளக்கங்களைக் கொடுப்பதுமாகச் எழிலும் உஷாவும் ஒருவருக்கொருவர் துணையாக நின்று களத்தில் இறங்கி வேலை செய்தனர்.

கால்கள் கடுக்க ஓடி ஓடி வேலை செய்தாலும், ஸ்கேன் திரையில் தன் குழந்தையின் இதயத் துடிப்பைக் கேட்டு அந்தத் தாய்மார்களின் முகத்தில் விரியும் ஒரு சிறிய புன்னகை… செவிலியர்களின் அத்தனை களைப்பையும் நொடியில் போக்கி விடும். அந்தப் பரபரப்பான நேரத்தில், மருத்துவமனையின் தலைமை அலுவலகத்திலிருந்து எழிலுக்கு அழைப்பு வந்தது.

சுற்றுவட்டாரத் தாலுகாவிலுள்ள அனைத்து அரசாங்க மருத்துவமனைகளுக்கும் இதுவே தலைமை அலுவலகமாகச் செயல்பட்டு வந்ததால், மாடியில் இருக்கும்  அறையை நோக்கி யோசனையுடன் சென்றாள்.

வரவேற்பறையைக் கடந்து, தலைமை அலுவலரின் அறைக்கு நேராகச் சென்ற எழிலரசி. கதவை மென்மையாகத் தட்டி, அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தாள்.அங்கே, தன் மருத்துவப் பணியின் அனுபவமும் கனிவும் முகத்தில் மிளிர அமர்ந்திருந்தார் மூத்த அறுவை சிகிச்சை நிபுணரும் தலைமை அலுவலருமான மருத்துவர் கலாராணி.

உள்ளே வந்த எழிலைக் கண்டதும், இன்முகத்தோடு நிமிர்ந்து பார்த்தவர், “வாம்மா எழில்… உனக்காகத்தான் காத்துட்டு இருந்தேன், உட்காரு,” என்று கனிவோடு சொன்னார்.தலைமை அலுவலரின் அந்த அன்பான வரவேற்பு எழிலின் மனதிலிருந்த சிறு பதற்றத்தைத் தணித்தது.

“இன்னைக்கு கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் எடுக்குற நாள் இல்லையா… கீழ பயங்கரக் கூட்டமா இருந்ததே, டியூட்டியை நல்லபடியா முடிச்சிட்டீங்களாமா?” என்று கலாராணி கேட்க, “எல்லாம் முடிச்சாச்சிங்க மேடம்,” என்று மரியாதையுடன் பதிலளித்தாள் எழிலரசி.

மருத்துவர் கலாராணி தன் மேஜை மீது இருந்த பைலை மெல்லத் திறந்து, அதில் கையொப்பமிட்டபடி அவளைப் பார்த்தவர் “எழில்… உன்னோட பணிப் பொறுப்பும், நோயாளிகள்கிட்ட நீ காட்டுற கனிவும் இந்த மூணு வருஷத்துல நாங்க எல்லாரும் பார்த்திருக்கோம்….” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.விஷயம் என்னவென்று புரியாத எழிலுக்கு, மருத்துவரின் தீவிரமான முகத்தைப் பார்த்ததும் உள்ளுக்குள் லேசான பதற்றம் தொற்றிக்கொண்டது.

மனதிற்குள் பல எண்ணங்கள் ஓடினாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “சொல்லுங்க மேடம்…” என்றாள் மெல்லிய குரலில்.

மருத்துவர் கலாராணி தன் கையிலிருந்த பேனாவைக் கீழே வைத்துவிட்டு, ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டு எழிலை ஒரு தாய் போன்ற வாஞ்சையோடு பார்த்தவர், “உனக்கு டிரான்ஸ்பர் வந்திருக்குமா…” என்றார் தயக்கத்தோடு.

“டிரான்ஸ்பரா?!”—அந்த ஒற்ற வார்த்தையைக் கேட்ட அடுத்த நொடி எழிலரசி அப்படியே அதிர்ந்துபோனாள்! அவள் கண்கள் அகல விரிய, இதயம் ஒரு நிமிடம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

எழிலின் அதிர்ச்சியைக் கண்ட மருத்துவர் கலாராணி, அவளது கையைத் தன் கரங்களால் மென்மையாகப் பற்றிக்கொண்டார்.”ஆமாம்மா… உன்னைப் போல பொறுப்பான, நோயாளிகள்கிட்ட அன்பா நடந்துக்கிற ஒரு நல்ல நர்ஸ் நம்ம ஹாஸ்பிட்டலை விட்டுப் போறது உண்மையிலேயே எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. அதிலும் எனக்கு இது கடைசி சர்வீஸ் வருஷம்… ஓய்வு பெறப்போற இந்த நேரத்துல உன்னைப் போன்ற ஒரு நல்ல பொண்ணு கூடவே இருந்தா எனக்கு எவ்வளவோ பக்கபலமா இருக்கும்னு நினைச்சேன்,” என்று மிகுந்த வருத்தத்தோடு கூறினார்.

தான் இத்தனை வருடங்களாகப் பழகிய இந்த மருத்துவமனை, கூட வேலை பார்க்கும் உஷா போன்ற தோழிகள், தன் மேலதிகாரியான கலாராணி மேடத்தின் தாய்மையான அன்பு… இவை அனைத்தையும் விட்டுப் பிரியப் போகிறோம் என்பதை நினைக்கையிலேயே எழிலின் நெஞ்சில் லேசான பாரம் ஏறியது.

“மேடம்… அது வந்து…” என்று எழில் தயங்கி இழுக்க, கலாராணி மேடம் அந்தப் பணிமாறுதல் ஆணையை அவளிடம் நீட்டினார்.அதிர்ச்சியிலிருந்து மீளாத எழில், நடுக்கத்தோடு அந்தக் கடிதத்தை வாங்கினாள்.

அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் பணிமாறுதல் என்பது இயல்பான ஒன்றுதான். எழிலும் இதை எப்போதோ எதிர்பார்த்து மனதளவில் தயார் நிலையில்தான் இருந்தாள். அதனால் உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு, சிரித்த முகத்தோடு அந்தக் கடிதத்தைப் வாங்கி, அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஊரின் பெயரைப் பார்த்த அடுத்த நொடி…எழில் அப்படியே திகைத்துப்போனாள்!

அதில் அச்சிடப்பட்டிருந்தது:

‘ மேதினூர்- ஆரம்ப சுகாதார நிலையம்’

இப்படி ஒரு ஊர் பெயரை அவள் கேள்விப்பட்டதேயில்லை.சிதம்பரத்தின் பரபரப்பான, வசதிகள் நிறைந்த சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, ஏதோ ஒரு ஊரின் பெயர். இத்தனை நாளாகப் பழகிப்போன இந்த சூழலை விட்டுவிட்டு, இனி ‘மேதினூர்’ எனும் புதிய ஊருக்குப் போகப் போகிறோம் என்ற எண்ணம் எழிலின் நெஞ்சில் ஒரு மெல்லிய பாரமாக அழுத்த, தேங்க்யூ மேடம் என்றவாறு எழுந்தவள் கதவை திறந்து வெளியே போனாள்.

பனி பொழியும்…

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!