Stories that touch hearts

Home  /  29. ராஜேஷ் (மதில் தாண்டுமா மனசு)  /  Chapter 6

CHAPTER 6

மனசு – 6

By karuppiahrajesh70@gmail.com · October 8, 2026

0

மதில் தாண்டுமா மனசு — 6

​அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய வேளை.

​

மதுமிதா, மீனா, ஆனந்தன் மூவரும் தாயம் விளையாடுவதற்காகச் சோழிகளை எடுத்துக்கொண்டு தரையில் அமர்ந்தார்கள்.

மீனா கோலமாவைக் கொண்டு அழகாகத் தாயக்கட்டம் வரைந்தாள். மர நாற்காலியில் அமர்ந்திருந்த சந்தோஷை மதுமிதா கைப்பிடித்து அழைத்து வந்து, தாயக்கட்டத்தில் ஒரு பக்கத்தில் அமர வைத்தாள்.

​”மது, இன்னைக்கு சந்தோஷ் மாமாவும் நம்மகூட விளையாடப் போறாரா?” என்று ஆனந்தன் கேட்க,

​”ஆமா மாமா! மாமாவுக்கு நானே காய் நகர்த்துவேன்… மாமா சோழியைச் சுழற்றிப் போட்டா மட்டும் போதும்!” என்றாள் மதுமிதா ஆசையோடு.

​மதுவின் பேச்சைக் கேட்டு மீனாவுக்குப் பெருமை தாங்கவில்லை; தன் மகளின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினாள்.

​

அப்போது அங்கே வந்த கனகம், சோபாவில் அமர்ந்தபடி, “மது பொண்ணு காட்டுற அக்கறையைப் பார்த்தா, சந்தோஷ் இன்னும் ஒரு வாரத்துல குணமாயிடுவான் போல இருக்கே!” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு அண்ணன்-தங்கை இருவரின் மனதிலும் சந்தோஷம் அள்ளிக்கொண்டது.

​சந்தோஷுக்கு எதிரப்புறத்தில் ஆனந்தனும், மதுவிற்கு எதிரப்புறத்தில் மீனாவும் என நால்வரும் விளையாட அமர்ந்தார்கள்.

தன்னைச் சுற்றி மூவரும் அமர்ந்து ஏதோ செய்கிறார்கள் என்பதை உணர்ந்த சந்தோஷ், எல்லையற்ற மகிழ்ச்சியில், “அக்கா… ஆனா… அக்கா… ஆனா…” என்று வீடு அதிரும் வண்ணம் சிரித்துக் கைதட்டத் தொடங்கினான்.

​”போதும், போதும்… ஃபர்ஸ்ட் நான் ஸ்டார்ட் பண்றேன்!” என்று கூறியபடி மது சோழிகளைச் சுழற்றி மெல்லத் தரையில் போட்டாள்.

அவளைத் தொடர்ந்து ஆனந்தனும், அவனைத் தொடர்ந்து மீனாவும் சோழிகளைத் தரையில் உருட்டினார்கள்.

​

அடுத்து சந்தோஷின் முறை வந்தது. சந்தோஷ் தன் கைகளை அகல விரித்துக் கேட்க, அவன் கைவிரல்களை ஒன்றாக இணைத்துப் பிடித்த மது, அதற்குள் சோழிகளை வைத்து மூடும்படி சொன்னாள்; அவனும் அவ்வாறே செய்தான்.

​”எங்கே… கீழே போடு!” என்று மது உத்தரவிட, “இகாகிகாக்கா…” என்று பலத்த குரலில், வாயிலிருக்கும் கடவாய்ப்பல் தெரியச் சிரித்தபடி சோழிகளை ஓங்கி எறிந்தான் சந்தோஷ்.

​சோழிகள் வீடு முழுவதும் சிதறியோடின. அதில் ஒன்று மதுவின் கண்ணுக்கு அருகில் பட்டுத் தெறித்தது.

​”அம்மா!” என்று மது கையால் கண்ணை மூடிக்கொள்ள, மீனா பதறிப்போனாள்.

​”லூசு! இப்படியா எறிவே?” என்று சந்தோஷின் தலையில் ‘நறுக்கு’ என ஒரு கொட்டு வைத்தாள்.

​அதுவரை சிரித்துக்கொண்டிருந்த சந்தோஷ், பயந்துபோய் சத்தமின்றி மிரண்டு விழித்தான்.

​

மீனா, “மது, என்னடா ஆச்சு?” என்று பதற்றத்துடன் அருகில் சென்று அமர, ஆனந்தன் மதுவின் தலையைத் தடவி, “ஒன்னும் இல்லடா… ஒன்னும் இல்லடா…” என்று ஆறுதல் கூறினான்.

​

கனகமும் பதற்றத்துடன் சோபாவில் இருந்து எழுந்து வந்து, “என்னடா ஆச்சு?” எனக் கேட்டு மதுவைச் சூழ்ந்துகொண்டார்.

​”ஒன்னும் இல்லம்மா… பயப்படாதீங்க! மாமாவை யாரும் திட்டாதீங்க…” என்று மது ஒரு பெரிய மனுஷியைப் போலப் பக்குவமாகப் பேசுவதைக் கேட்டதும்,

ஆனந்தன் அவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

​பின்னர் அவள் கையை மெல்ல விலக்கி, “சாரி மது…” என்று சந்தோஷின் சார்பாக மன்னிப்பு கேட்டான்.

​”இட்ஸ் ஓகே மாமா, எனக்கு வலி இல்லை!” என்று மது புன்னகையோடு சொன்னதும், மீனா தான் அவசரப்பட்டுச் செய்த செயலுக்கு வருத்தப்பட்டாள். ஏதும் அறியாது மிரண்டு அமர்ந்திருந்த சந்தோஷிடம், “சாரி சந்தோஷ்…” என்று அவன் கன்னத்தைத் தடவி மன்னிப்பு கேட்டாள்.

தன் அக்கா இயல்பாகப் பேசுவதைக் கண்ட சந்தோஷ், மீண்டும் ஆரவாரமாகச் சிரிக்கத் தொடங்கினான்.

​அப்போது கனகம், “சரி, விளையாண்டதெல்லாம் போதும்… விளையாட்டுச் சாமானையெல்லாம் ஓரங்கட்டுங்க,” என்றார்.

​”பாட்டிமா! இன்னும் விளையாட ஸ்டார்ட் பண்ணவே இல்லை, இனிமேதான் விளையாட்டே ஆரம்பம்!” என்று சொன்ன மது, “சந்தோஷ் மாமா, நான் சொல்ற மாதிரி நீ கீழே வைக்கணும்… என்ன?” என்று சோழிகளைத் தரையில் மெல்ல வைத்தாள்.

​”எங்கே… நீ ஒருக்கா வை பார்ப்போம்…” என்று சொல்ல, சந்தோஷும் அதுபோலவே தரையில் மெல்ல வைத்தான்.

​”ஓகே, மாமா விளையாட்டுக்கு ரெடியாயிட்டான்!” என்று மது குதூகலிக்க, ஆனந்தனும் மீனாவும் மீண்டும் அவளோடு சேர்ந்து விளையாடத் தொடங்கினார்கள்.

​

ஒவ்வொரு முறையும் சந்தோஷின் முறை வரும்போதெல்லாம், அவன் களிப்பில் கனைத்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் சோழிகளை உருட்டி மகிழ்ச்சியோடு விளையாடுவதைப் பார்த்த கனகத்திற்கு கண்கள் கலங்கிவிட்டன.

​’இத்தனை நாளாக இப்படி ஒரு நாளும் அவனை அமரவைத்து நாம் விளையாட்டு காட்டியதில்லையே…’ என்று சின்னதாக ஒரு வருத்தம் அவருக்குள் தோன்றியது. அனுஷாவின் பெயர் நினைவில் இல்லை என்றாலும், ‘அந்த மகராசி நல்லா இருக்கணும்’ என்று மனதார வாழ்த்திக் கொண்டார்.

​சிரிப்பும் மகிழ்ச்சியுமாய் விளையாட்டு முடியும் தருணத்தில், கார்த்திக் வீட்டிற்குள் வந்தான்.

​

கனகம் அவனைப் பார்த்ததும், “கார்த்திக், வாப்பா! உனக்கு இப்பதான் வீட்டுக்கு வழி தெரிஞ்சதா?” என்று கேட்க, அதற்குப் பதிலாகக் கார்த்திக் ஒரு மெல்லிய புன்னகையை மட்டுமே பதிலளித்தான்.

​

மீனாவும் மரியாதை நிமித்தமாக, “வாங்கப்பா,” என்று வரவேற்றுவிட்டு எழுந்துகொண்டாள்.

​மது தன் பங்குக்கு, “கார்த்திக் சித்தப்பா… வெல்கம்!” என்று சொல்லிவிட்டுச் சந்தோஷோடு அமர்ந்திருக்க,

ஆனந்தன் கனகத்திடம் கோபத்தோடு பேசத் தொடங்கினான்.

​”அவன் எண்ணெய்க் கம்பெனிக்கு வேலைக்குச் சேர்ந்ததும், அந்த முதலாளிக்கே தத்துப் பிள்ளையாயிட்டான்… அதனாலதான் பெத்தவங்களைக் கூட வேண்டாம்னு ஒதுக்கி வச்சுட்டான்!” என்றான் கடுப்புடன்.

​

ஆனந்தனின் கோபத்திற்கான காரணம் தான் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றதுதான் என்று கார்த்திக்கிற்குப் புரிந்தது. ஆனால், அதற்கான நிஜமான காரணம் என்னவென்று ஆனந்தனுக்குத் தெரியாதே!

​அதனால், “அதெல்லாம் இல்ல ஆனந்த்…” என்று கார்த்திக் வாய் திறக்க,

ஆனந்தன் குறுக்கிட்டு, “போதும்டா! புதுசா சப்பக்கட்டு கட்டாத,” என்று வெட்டொன்று துண்டிரண்டாகப் பதிலளித்தான்.

​கனகம் அவனை அடக்கி, “அவனுக்கு வெளியேறிப் போக ஆயிரம் காரணம் இருக்கும்டா! நம்ம வெளியில இருந்து பார்க்கிறவங்க, நிஜமான காரணம் என்னன்னு தெரியாமப் பேசக்கூடாது,” என்று ஆனந்தனைக் கண்டித்தார்.

​ஆனந்தன் ஆத்திரத்துடன், “அப்படி என்ன பெரிய காரணம்? மாமியார்-மருமகள் சண்டைதானே! மாமியார்-மருமகள் சண்டை நடக்காத வீடே இல்லையா என்ன? அவங்க எல்லாம் சண்டை போட்டாலும் ஒரே வீட்டுக்குள்ளதான் இருக்காங்க. இப்படியா முறுக்கிக்கிட்டு வீட்டை காலி பண்ணிட்டுப் போவாங்க? இவன் பொறுப்பா ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தி இருக்கணும்… அதைச் செய்யாம விட்டுட்டான். அவனுக்கு சப்போர்ட் பண்றியேம்மா!” என்று கனகத்திடம் எகிறினான்.

​கனகம் அமைதியாக, “எத்தனை தடவைதான் சமாதானப்படுத்த முடியும்? கொஞ்சம் ஒதுங்கி இருந்தால்தான் பாசம் அதிகமா தெரியும். அதனால அவன் அப்படி ஒரு முடிவு எடுத்திருப்பான். இப்போ நம்ம ரெண்டு பேரும் சண்டை போட்டு, அவன் என்ன காரணத்துக்கு வந்தான்னு மறந்திடப் போறோம்…” என்றார்.

​

அனைவரும் அங்கு இருப்பதால், கார்த்திக் மென்மையான குரலில், “கொஞ்ச நாள் வீட்டைவிட்டு வெளியே இருக்கணும்னு என்னோட ஜாதகத்துல இருக்கு அத்தை… அதற்காகத்தான் வெளியே போனேன்,” என்று புதிதாக ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு, “அப்புறம்… நான் வந்த விஷயம்…” என்று இழுத்தான்.

​

ஆனந்தன் மீண்டும் கோபம் குறையாமல், “ஆமா! இப்போ நீதான் எண்ணெய் ஆலை ஓனர் ஆயிட்டியே… எங்க வீட்டுக்கு எதுக்காக வந்தாய்?” என்று சீறினான்.

​தான் கேட்க வந்த விஷயத்தை எப்படி கேட்பது என்று திணறிய கார்த்திக்கிற்கு, இப்போது ஆனந்தன் இருக்கும் மனநிலையில் அதைப் பற்றிக் கேட்கவா வேண்டாமா என்று யோசனையாக இருந்தது.

​

கனகம், “நீ கொஞ்ச நேரம் அமைதியா இருடா… அவன் என்ன சொல்ல வர்றான்னு சொல்ல விடு,” என்று ஆனந்தனை மீண்டும் ஒருமுறை கண்டித்தார்.

​

பின்னர் கார்த்திக்கை நோக்கி, “கார்த்திக், முதல்ல உட்காரு… நான் குடிக்கத் தண்ணி கொண்டு வர்றேன்,” என்று கனகம் எழுந்துகொள்ள முயன்றார்.

​மீனா குறுக்கிட்டு, “நீங்க உட்காருங்க அம்மா, நான் எடுத்துட்டு வர்றேன்,” என்று கூறிவிட்டுத் தண்ணீர் எடுக்கச் சமையலறைக்குச் சென்று தண்ணீரோடு வந்தாள். அதை கார்த்திக்கிடம் கொடுத்தாள் மீனா. கார்த்திக் தண்ணீரை வாங்கி ஒரு வாய் ஊற்றிக்கொண்டான்.

​

கனகம் கார்த்திக்கிடம், “சொல்லு கார்த்திக்… நீ வராதவன் வந்திருக்கேன்னா ஏதோ முக்கியமான விஷயமாத்தான் இருக்கும். சொல்லு…” என்றார்.

​

கார்த்திக் தயங்கியபடி, “அத்தை… நான் சொல்றேன்னு கோபப்படாதீங்க. நம்ம ஆனந்தனுக்கு இப்போ 35 வயசாகுது. இப்படிப்பட்ட மாப்பிள்ளைக்கு 21 வயசுப் பொண்ணைக் கொடுக்கறதுக்கும் கொஞ்சம் யோசிப்பாங்க. அதோட 35 வயசு வரைக்கும் பொண்ணுங்க யாரும் கல்யாணம் பண்ணிக்காம வீட்ல இருக்க மாட்டாங்க…” என்று வளவளவென்று பேசத் தொடங்கினான்.

​

கனகம் பொறுமையின்றி, “நீ நேரடியாக விஷயத்துக்கு வாப்பா…” என்றார்.

​

கார்த்திக் மூச்சை இழுத்துவிட்டு, “ஆனந்தனுக்கு நான் ஒரு பொண்ணு பார்த்திருக்கேன்,” என்று சொன்னான்.

​

அதனைக் கேட்டதும் கனகத்தின் முகத்தில் ஒரு புது மலர்ச்சி தோன்றியது. “நம்ம வீட்டு நிலைமை என்னன்னு விஷயத்தைச் சொல்லிட்ட இல்ல? அதுக்கெல்லாம் சம்மதம் சொல்லிட்டாங்களா?” என்று படபடப்புடன் கேட்டார்.

​”அதுக்கெல்லாம் அவங்க சம்மதம் சொல்லிட்டாங்க அத்தை… ஆனா, பொண்ணு…” என்று கார்த்திக் இழுக்க,

​

கனகம் பதற்றத்துடன், “என்ன பொண்ணு? எதுவும் ஊனமா இருக்குதா? பரவாயில்லை கார்த்தி, சொல்லு…” என்றார்.

​”அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை… பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, மாப்பிள்ளை இறந்து போயிட்டாரு,” என்றான் கார்த்திக்.

​

கனகம் சட்டென்று ஸ்தம்பித்துப்போய் நின்றுவிட்டார்.

​கார்த்திக் தொடர்ந்து, “பொண்ணு நல்ல பொண்ணு அத்தை… எங்க மில் ஓனரோட இரண்டாவது பொண்ணு,” என்றான்.

​

சிறிது நேர அமைதிக்குப் பிறகு கனகம், “இரண்டாம் தாரமா? சரி கார்த்திக்… நாள் கடக்கக் கடக்க வயசு போய்க்கிட்டே இருக்கும். சரி, எப்ப போய் பார்க்கலாம்?” என்று பெருமூச்சுடன் கேட்டார்.

​

அங்கிருந்த மீனாவும், ‘ஆனந்தனுக்கு எப்படியாவது கல்யாணம் நடந்துவிட வேண்டும்’ என்ற மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.

​

ஆனால் ஆனந்தன் திடீரென குறுக்கிட்டு, “எனக்கு இரண்டாம் தாரம் பொண்ணைக் கட்டிக்கச் சம்மதமும் இல்லை, விருப்பமும் இல்லை!” என்று முகத்திலடித்தாற்போல் பதில் கொடுத்தான்.

​கார்த்திக் சட்டென்று ஆனந்தனிடம், “விதவைப் பொண்ணுங்கன்னா தப்பானவங்கன்னு அர்த்தமா ஆனந்த்?” என்று கேட்டான்.

​”அவங்க தப்பானவங்களோ நல்லவங்களோ… எனக்கு விருப்பம் இல்லைப்பா, நீ கிளம்புறியா?” என்று ஆனந்தன் அழுத்தமாகக் கூறிவிட்டான்.

​

கார்த்திக் அடுத்த நொடியே அங்கிருந்து விறுவிறுவென வெளியேறிச் சென்றான்.

​கனகம், “கார்த்தி… கார்த்தி…” என்று அழைத்தபடி அவனைப் பின்தொடர்ந்தார். ஆனால், அவன் தன் இருசக்கர வாகனத்தை ஆன் செய்து அதிவேகமாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டான்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!