பகுதி 2
அம்ரிதா சென்று ஒரு வாரம் கடந்திருக்க.. அப்பொழுதும் அவள் எங்கிருக்கிறாள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
காவல் நிலையத்தில் புகார் அளித்து, அவர்கள் ஒரு பக்கம் தேடியும், அந்த காதல் ஜோடியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தனர்.
இங்கு வீட்டிலோ.. அம்ரிதாவின் ஒன்றுவிட்ட அண்ணன், தம்பி, தங்கை, அத்தை மகன் முறையிலிருந்த இளவட்டங்கள் அனைவருக்கும் அவளின் காதல் விவகாரம் தெரிந்திருக்க., அதை ஏன் தங்களிடம் கூறவில்லை என்று பெரியவர்கள் அனைவரும் இளசுகளை வாட்டி எடுத்திருந்தனர்.
ஆனால் மற்றவர்களை விட ஹேமாவிற்கு தான் சற்று சேதாரம் அதிகமாக இருந்தது.
ஏனெனில் அவளும் அம்ரிதாவும் தான் எப்பொழுதும் ஒன்றாகவே சுற்றி திரிவார்கள் என்பதால், அவளுக்கு கண்டிப்பாக அம்ரிதா இருக்குமிடம் தெரிந்திருக்கலாம் என்றே பெரியவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.
தினமும் மகளை நான்கு அடியாவது அடித்து… “உங்க அக்கா எங்க இருக்கான்னு கேட்டியா இல்லையா” என ராணி அவளை கொடுமைப்படுத்த..
“அம்மா அவங்க ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டாங்கம்மா” என்பவள், அழுது கரைந்தாள்.
இப்படியே நாட்கள் செல்ல… அன்று பள்ளியில் அமர்ந்திருந்த ஹேமாவிடம் அவளது தோழி அப்சனா… “டெஸ்டுக்கு படிச்சிட்டியா இல்லையாடி” என்றாள்.
“ம்க்கும்.. எங்க வீடே கலவர பூமியா இருக்கு, இதுல நான் எங்க போய் படிக்கிறது” என்றாள்.
“இன்னுமாடி உங்க அக்காவ கண்டு பிடிக்கல” அவள் கேட்க…
“ஆமாண்டி போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தும் அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியல” பெருமூச்சோடு கூறியவள், “ஒருவேளை கண்டுபிடிச்சி அவளை கூட்டிட்டு வந்தாங்கன்னு வை, அவ இவங்ககிட்ட அடி வாங்கிதான் சாகனும். அதுக்காகவே எங்க அக்கா இருக்கிற இடத்தை இவங்க கண்டுபிடிக்க கூடாதுன்னு தோணுதுடி. ஆனா அவ பத்திரமா தான் இருக்காளான்னு தெரியாம அது வேற ஒரு பக்கம் பயமா இருக்கு” என வருந்தினாள்.
“ஏன் ஹேமா, உங்க அப்பா அம்மாவும் லவ் மேரேஜ்தானே. அப்புறம் ஏன் உங்க அக்கா லவ்வுக்கு மட்டும் இப்படி அகைன்ஸ்ட்டா நடந்துக்குறாங்க. உங்க பெரியம்மா பெரியப்பாகிட்ட பேசி சமாதானப்படுத்தலாம்ல” என அவள் கேட்க…
“ அது ஏன்னா, எங்க அம்மாப்பா ரெண்டு பேரும் வேற வேற ஜாதியா இருந்தாலும் ஒசந்த ஜாதியாம். எங்க அக்கா லவ் பண்ண பையன் எங்களை விட தாழ்ந்த ஜாதியாம். இதுவே அவன் எங்களுக்கு மேல இருக்க ஜாதியா இருந்து, பணம் காசு வச்சிருந்தான்னா, எங்க அக்காவை அவனுக்கே கட்டி கொடுத்து இருப்பாங்க. கீழ் ஜாதின்றதால வேண்டவே வேண்டாம் ஒத்த கால நின்னாங்க. ஆனா எங்க அக்கா டைம் பாத்துட்டு இவங்களுக்கு டிமிக்கி கொடுத்துட்டு கிளம்பிட்டா” என்றாள்.
“உங்க அக்காவுக்கே இந்த நிலைமைன்னா, நீ லவ் பண்ணா என்னடி பண்ணுவாங்க” அப்சனா கேட்க…
“ஏண்டி நீ வேற… எங்க அக்கா லவ் பண்ணதுக்கே என்ன பொளந்துகிட்டு இருக்காங்க.. இதுல நான் லவ் பண்ணேன், அவ்ளோதான்.. பொதச்சிடுவாங்க” என்றாள்.
“ அப்போ நீ உங்க அப்பா அம்மா பார்க்கிற பையன தான் கல்யாணம் பண்ணிப்பியா” என்ற தோழியிடம்…
“ தெரியாது போடி.. நானே அடுத்த வருஷம் 12 கிளாஸ் போக போறதை நினைச்சி பீதில இருக்கேன். இதுல நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க போறேன்றது ரொம்ப முக்கியம் பாரு” என்றாள் ஹேமா.
“ஆனாலும் உன் மன தைரியத்தை பாராட்டியே ஆகனும் டி. வீட்ல இத்தனை அடி வாங்கியும் கொஞ்சம் கூட வருத்தப்படாம, ஜாலியா பேசிகிட்டு இருக்க பாத்தியா” அப்சனா சிரிக்க..
“என்னமோ இப்பதான் புதுசா நான் அடி வாங்குற மாதிரி பேசுற. பொறந்ததுல இருந்தே நான் அடி மட்டும் தானே வாங்கிட்டு இருக்கேன் அப்புறம் என்ன” என்றவள், “சரி நம்ப ராமாயணத்தை நிறுத்திட்டு, டெஸ்ட்க்கு படிப்போம் வா” என்றாள்.
எப்போதும் அவள் இப்படித்தான், எப்படிபட்ட சூழ்நிலையாக இருந்தாலும், அவள் தன்னை கொஞ்சம் விளையாட்டு பெண்ணாகவே காட்டிக் கொள்வாள்.
ஏனெனில் அவள் வளர்ந்த சூழல் அப்படி. தாய் தந்தை இருவரும் இரு குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தான் என்றாலும், இருவருக்கும் இடையில் எப்போதும் சண்டைதான்.
ராணியை திருமணம் செய்து கொண்டது பிடிக்காத செல்வத்தின் பெற்றோர், அவரை தங்கள் குடும்பத்திலிருந்து விலக்கி இருக்க.. மனைவியின் குடும்பத்தினர் இருக்கும் இடத்திற்கருகேயே தங்களது குடுத்தனத்தையும் அமைத்துக் கொண்டார் செல்வம்.
ராணி வீட்டிலும் செல்வத்தை திருமணம் செய்தது பிடிக்கவில்லை என்றாலும், வேறு வழியின்றி தாமரை இலை தண்ணீர் போலவே ராணியை பார்த்துக் கொண்டனர்.
செல்வம் மிகுந்த குடிப்பழக்கம் கொண்டவர். அடிக்கடி ராணியை அடித்து அவரது வீட்டிற்கு அனுப்பி விடுவார்.
ராணி மட்டுமில்லாமல் அவர்களது பிள்ளைகளான ஹேமா மற்றும் ஸ்ரீனிவாசன் இருவருக்கும் அதே நிலைமைதான். இதில் ஸ்ரீனிவாசனுக்கு மட்டும் சில சலுகைகள் உண்டு.
இதனாலேயே அடி உதையெல்லாம் அவளுக்கு பழகிருக்க.. இப்போது நடப்பது ஒன்றும் பெரிதாகவே அவளுக்கு தெரியவில்லை.
ஆனால் மற்ற விஷயங்களை போல அடி, உதையோடு மட்டும் நில்லாமல், தன் வாழ்க்கையையே இந்த நிகழ்ச்சி மாற்றும் என அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.
இப்படியே இரண்டு வாரம் சென்றிட… அம்ரிதா ராம் ஜோடி எங்கிருக்கிறார்கள் என காவல்துறையினர் கண்டுபிடித்திருந்தனர்.
தகவல் தெரிந்ததும் அம்ரிதாவின் பெற்றோர், ஹேமாவின் பெற்றோர், அவளது அத்தை மாமா என 15 பேர், சேலம் காவல் நிலையத்திற்கு செல்ல.. அதை பார்த்த ஹேமாவிற்கு தான் காய்ச்சல் கண்டிருந்தது.
“ஹேமா, அம்ரிக்கா வந்துருவா தானே..” ஹேமாவின் தம்பி சீனிவாசன் அவளிடம் கேட்க..
“ ஏன் அவ உயிரோட இருக்கிறது உனக்கு பிடிக்கலையா, போய் வேலையை பாருடா” அவனை விரட்டியவள்… “ ஐயோ அம்ரி, இந்த காட்டான் குடும்பத்துகிட்ட நீ சிக்குனேன்னா என்னாகுமோ தெரியலையே… தயவு செஞ்சு வீட்டுக்கு மட்டும் வந்திராதடி, எல்லாரும் சேர்ந்து உனக்கு ஆப்பு அடிச்சிடுவாங்க” புலம்பியவளுக்கு தெரிந்திருக்கவில்லை அவளுக்கு தான் ஆப்பு அடிக்கப் போகிறார்கள் என்று.
காவல் நிலையம்…
“அந்த ரூம்ல தான் உங்க பொண்ணு இருக்கா… அந்தப் பையன் உங்க பொண்ண கல்யாணம் பண்ணிட்டான். நாங்க பேசி பாத்துட்டோம் பொண்ணு உங்ககூட வர சம்மதிக்க மாட்டிங்கிறா. நீங்க போய் சமாதானமா பேசி கூப்டுங்க. கோபத்துல கத்தி அடிச்சிட்டீங்கன்னா, வர மாட்டேன்னு சொல்லிடுவா. அப்றம் எங்களால எதுவும் பண்ண முடியாது.. ஏன்னா பொண்ணு இப்போ மேஜர்” அங்கிருந்த பெண் போலீஸ் அம்ரியின் அம்மா, சித்திகளிடம் கூற…
அழுது கொண்டே உள்ளே சென்றவர்கள், அம்ரிதாவை சமாதானம் செய்தனர்.
ஆனால், என்ன பேசியும் அவர்களால் அவளது மனதை மாற்ற முடியாமல் போக… கடைசியில் மகளை கோபத்தில் மோசமாகி பேசி, சாபமிட்டனர்.
உடனே அங்கிருந்து காவலர்கள் இப்படி எல்லாம் பேசக்கூடாது. முடிந்த அளவுக்கு அவளை சமாதானம் செய்ய முயற்சியுங்கள் எனக்கூற… மீண்டும் அவளிடம் பேசச் சென்றனர்.
ஆனால் தாய்மார்களின் கேவலமான பேச்சை கேட்டு மனம் உடைந்து அம்ரி, காவல் அதிகாரியிடம்.. “வேண்டாம் அவர்களிடம் பேச தனக்கு விருப்பமில்லை. இனி அவர்கள் என்ன பேசினாலும் நான் அவர்களுடன் செல்லவும் மாட்டேன்” என பிடிவாதமாக கூறி விட..
இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற காவல் அதிகாரி, இரு தகப்பினரிடமும் கையொப்பம் பெற்றுக் கொண்டு.. அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறியிருந்தார்.
அப்போது ஹேமாவின் தந்தை செல்வம், அந்த அதிகாரியிடம் எதோ பேசிக் கொண்டிருக்க… அங்கு வந்த ராம், “சார் என்னோட ஃபோன் ஒன்னு இவங்க பொண்ணு ஹேமாகிட்ட இருக்கு. அதை மட்டும் கொஞ்சம் வாங்கி தர சொல்றீங்களா” என்றான்.
இதை கேட்டு செல்வத்திற்கு இரத்த அழுத்தம் உயர்ந்திருக்க.. கோபமாக ராமை முறைந்தவர், “எதுக்கு இவன், என் பொண்ணுக்கு ஃபோன் குடுத்தான்” என்றார் காவலரிடம்.
ராம்.. “அது அம்ரிகிட்ட கொடுக்க சொல்லி நான்தான் கொடுத்தேன்” என்றான்.
அதை கேட்டு ஆத்திரமடைந்தவர், “நாளைக்கு ஸ்டேஷன்ல கொண்டு வந்து கொடுக்கிறேன். வாங்கிக்க சொல்லுங்க சார்” எனக்கூறிச் சென்றார்.
காவல் நிலைய வழிமுறையை முடித்துக் கொண்டு குடும்பத்தினர் அனைவரும் வேதனையோடு வீடு வந்து சேர்ந்திருக்க… அவர்களோடு அமிர்தா வராதத்தை கண்டு நிம்மதி அடைந்தாள் ஹேமா.
ஆனால் அந்த நிம்மதி அடுத்த நொடியே காணாமல் போயிருந்தது.
“ஏண்டி, உனக்கெல்லாம் எவ்வளவு கொழுப்பு இருந்தா, அந்த பொறுக்கிக்கு நீ ப்ரோக்கர் வேலை பார்த்திருப்ப..” ஆகங்காரமாக கத்திய செல்வம்… தனது இடுப்பிலிருந்த பெல்ட்டை உருவி, அந்த இளங்கன்றின் மேனியில் விளாசினார்.
தீடீரென அவர் இப்படி கத்தியதும் என்னாயிற்று என்று புரியாத ஹேமா.. வலியின் அலறிக்கொண்டே.. “அப்பா.. எனக்கு ஒன்னும் தெரியாதுப்பா, நான் எதுவும் பண்ணலப்பா” என்றாள், மூலையில் ஒடுங்கியபடி.
உடனிருந்த பெரியவர்கள் அனைவரும் அவரை கட்டுப்படுத்த… ஆனாலும் அடங்காத செல்வம்.. வயது பெண் என்றும் பாராமல் கண்மண் தெரியாமல் மகளை அடித்து “அந்த ஓடுகாலிக்கும் அவனுக்கு நடுவுல மாமா வேலை பார்க்க தான் பள்ளிக்கூடம் போறியா… பண்றதெல்லாம் பண்ணிட்டு எனக்கு தெரியாதுன்னு மழுப்புற” என்றவர், “எங்கடி.. எங்கடி அந்த பரதேசி கொடுத்த ஃபோன்” என்றார்.
அதன்பின் தான் தந்தை எதற்காக தன்னை அடிக்கிறார் என்பது புரிய, உடனே ஓடிச் சென்று பதுக்கி வைத்திருந்த அலைபேசியை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள்.
“இன்னும் ஸ்கூல் கூட முடிக்கல, அதுக்குள்ள நீ என்னென்ன வேலை பாக்குற.. உன்னை இப்படியே விட்டா நாளைக்கு அந்த அடங்காதவ மாதிரி தான் நீயும் பண்ணி என் மானத்தை வாங்கிடவே” என்றவர், “ போதும் இனிமே நீ ஸ்கூலுக்கும் போக வேணாம் ஒரு ம**க்கும் போக வேண்டாம் ஒழுங்கா வீட்டுல வேலை பார்த்துகிட்டு, நாங்க போடுற சோத்தை தின்னுட்டு ஒரு மூளையில கெட. அப்போதான் உனக்கு புத்தி வரும்” என்றார்.
அதைக் கேட்டு அதிர்ந்த ஹேமா… “அப்பா இனிமே இப்படி எல்லாம் பண்ண மாட்டேன்ப்பா.. சத்தியமா பண்ண மாட்டேன் பா, ப்ளீஸ்ப்பா. ஸ்கூலுக்கு போக வேணாம்னு சொல்லாதீங்க பா” எனக்கூறி அழ…
“இனிமே நீ பண்ண என்ன இருக்கு. அதான் எல்லாம் பண்ணிட்டியே.. ஒழுங்கா சொல்றதை கேட்டு மரியாதையா வீட்ல இரு, இல்ல சோத்துல விஷம் வச்சி சாவடிச்சிடுவேன்” என்றவர், அலைபேசியை கொடுக்க சென்றிருந்தார்.
அவர் செல்லவே மகள் அருகே வந்த ராணி… “இதெல்லாம் உனக்கு தேவையாடி.. அப்பவே இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லி இருந்தா இந்த அளவுக்கு நடந்திருக்குமா. அனுபவிடி அனுபவி.. வீட்ல இருக்க எல்லா நண்டு சிண்டுகளுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சும் ஒருத்தராவது மூச்சு விட்டீங்களா. இப்ப அவங்களுக்கு எல்லாம் எந்த பிரச்சினையும் இல்லையே உனக்கு தானே படிக்கப் போச்சி… அழுடி நல்லா அழு” என கரைந்து கொண்டிருந்தவளை கரித்துக் கொட்டினார்.
தனது படிப்பே போய்விட்டதே என அழுது கொண்டிருந்தவளுக்கு, அப்போதும் கூட அக்காவின் மீது கோபம் வரவில்லை.
தொடரும்….