பகுதி 1
ஆயுத பூஜை அன்று
காலை 8.55திற்கு…. ஓமலூர் பேருந்து நிலையத்திற்கு வந்து நின்ற ஒரு பேருந்தில் இருந்து இறங்கினால் 19 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்.
அவசரமாக இறங்கியவள் எதிரில் இருந்த தேநீர் விடுதிக்குள் நுழைந்து அங்கிருந்த தொலைபேசியில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு எண்களை அழுத்த… அழைப்புமணி அடித்து கொண்டிருந்ததே தவிர யாரும் எடுக்கவில்லை.
“ஐயோ…. இவனை” தலையில் அடித்துக் கொண்டவள், மீண்டும் அதே எண்ணுக்கு முயற்சிக்க உடனே அழைப்பு ஏற்கப்பட்டது.
“என்னடா பண்ற சீக்கிரம் கிளம்பி வா… நான் பஸ் ஸ்டாண்ட்ல நிக்கிறேன்” என அவள் கூற…
“கிளம்பிட்டேன்டி… இன்னும் கால் மணி நேரத்துல வந்துருவேன்” என்றான் அவன்.
“சரி…. சிக்கிரம் வா… நான் இங்கே ஒரு கடையில இருக்கேன்… கடை பேரு…. ஆஆ அம்மன் காஃபி பார்..” என எதிரில் இருந்த கடையின் பெயரை கூறியவள்.. அழைப்பை துண்டித்துவிட்டு, அங்கிருந்து ஒரு சிறிய கோவிலுக்குள் நுழைந்தாள்.
“அம்மா தாயே, அவன் வர வரைக்கும் யாரும் என்னை தேடி வந்துடக்கூடாது மா.. நானும் அவனும் எப்படியாவது ஒன்னு சேர்ந்துடனும். நீ தான் எங்களுக்கு துணையா இருந்து காப்பத்தனும் தாயே” என வேண்டிக் கொண்டவள், அவள் கூறிய தேநீர் விடுதிக்குள் சென்று காத்திருந்தாள்.
அவன் கூறிய கால் மணி நேரம் முடிந்தும் அவன் வராமல் போகவே, பயத்தில் நகம் கடித்துக் கொண்டிருந்தவள், மீண்டும் கோவிலுக்கு சென்று வேண்டிக்கொண்டு அதே கடையில் வந்து நின்றாள்.
நேரம் செல்லவே பயத்தில் நடுங்கியவள், மீண்டும் அவனுக்கு அழைக்க… “இதோ பக்கத்துல வந்துட்டேன்.. நீ அந்த கடையிலேயே நில்லு, எங்கேயும் போய்டாத., இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல நான் வந்துருவேன்” என்றான் அவன்.
“எனக்கு பயமா இருக்குடா சீக்கிரம் வா.. எங்க வீட்டிலிருந்து யாராவது என்னை கண்டுபிடிச்சிட்டாங்கன்னா,அப்புறம் என்னை கொன்னே போட்டுடுவாங்க.. புரியுதா” அவள் அழுதவாறே கூற…
“ஐயோ… பயப்படாதடி, நான் வந்துகிட்டே இருக்கேன்” என்றவன், அவன் கூறியது போல அடுத்த பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தான்.
அவனை கண்டதும்தான் உயிரே வந்தது போல் உணர்ந்தவள், “ராம்” என ஓடி வந்து அவன் கைகளை பற்றிக் கொள்ள…. “சாரி அம்மு கொஞ்சம் லேட்டாகிடிச்சு… வா போகலாம்” என அவளை இழுத்துக்கொண்டு ஓட… அந்த பஸ் நிலையம் முழுவதும் அவர்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க….
ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஏறி பறந்தனர்.
வாகனத்தை செலுத்தியவாறே… “எப்படிடி மாட்டிக்காம வந்த…” அவன் கேட்க…
“அம்மா குளிக்க போயிருந்தாங்க, அப்பா வேலைக்கு கிளம்பிட்டாரு. அவங்க ரெண்டு பேரும் ஈரோடு போயிருந்தாங்க, வீட்ல வேற யாரும் இல்ல. அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்” என்றவள், “வரும்போது பெரிசா ஒன்னும் தெரியல.. ஆனா இப்போ, எங்க அப்பா அம்மாவ நினைச்சு
ரொம்ப கஷ்டமா இருக்குடா” என்றாள் அம்ரிதா.
“கவலைப்படாத அம்மு, எல்லாம் சரியாயிடும்…” என்றவன், “ நீ திடீர்னு கால் பண்ணவும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல, இன்னைக்கு கம்பெனில பூசைக்கு வச்சிருந்தாங்க அதனால காலையிலேயே குளிச்சிட்டு ரெடியாகி இருந்தேன், அதனால தான் நீ கால் பண்ண உடனே கிளம்பிட்டேன்., கரெக்டா அப்பாவோட பைக் எடுத்துட்டு வர வழியில் வண்டி பஞ்சர் ஆகிடிச்சி. அப்புறம் பஞ்சர் கடையில் கொண்டு போய் பைக்க விட்டுட்டு ஃப்ரண்டோட வண்டி எடுத்துட்டு வந்தேன்.. அதான் கொஞ்சம் லேட்” என அவன் வந்த கதையை விவரித்தான்.
அனைத்தையும் கேட்டவள், “இப்போ நாம எங்க போக போறோம்..” எனக் கேட்க…
“அதைதான் நானும் யோசிக்கிறேன்… எங்க போறதுன்னு எனக்கும் தெரியலை” என்றவாறு வண்டியை மெதுவாக ஓட்டிச் சென்றான்.
இப்படியே ஒரு மணி நேரம் கடக்க.. எங்கு செல்வது என்று தெரியாமல் அலைந்து கொண்டிருந்த ராமின் அலைபேசி இசைக்க…. அதை கையில் வைத்திருந்த அம்ரிதா… “யாரோ போன் பண்றாங்க” என்றாள் பயத்துடன்.
“என்ன பெயர் வருது” என்று அவன் கேட்க… “ பேர் எதுவும் வரல, நம்பர் தான் வருது” என்றாள் அவள்.
“சரி கொடு நானே பேசுறேன்” அலைபேசியை வாங்கியவன், அழைப்பை ஏற்க்க… “ஹலோ” என்றாள், நம் கதையின் நாயகி ஹேமலதா.
“ஹலோ யாரு” என்று ராம் கேட்க…
“நான் ஹேமா பேசுறே, அக்கா உங்கூடவா இருக்கா” என்றாள்.
“ஆமாடி.. நீ எங்க இருந்து பேசுற” என்றவனிடம்…
“நான் வீட்டு பக்கத்துல இருக்க ஒரு ரூபா காயின் ஃபோன்ல இருந்து பேசுறேன்… நீ அக்காகிட்ட கொடு” என்றாள் ஹேமா.
“அம்மு இந்தாடி… உன் தங்கச்சி தான் பேசுற பேசு” அவன் அலைபேசியை நீட்ட..
“ஹலோ ஹேமா எதுக்குடி ஃபோன் பண்ணுன” என்றாள் அவள்.
“இப்பதாண்டி உங்க அம்மா ஃபோன் பண்ணி எங்க அப்பாகிட்ட சொல்லுச்சு உன்னை காணோம்னு..” எனக் கூறியவள்… “வீட்டுக்கு வந்துறாதடி உனக்கு கொன்னே போட்டுருவாங்க… எல்லாரும் உன்னை கொலை வெறில தேடிட்டு இருக்காங்க.. பத்திரமா இருந்துக்கோடி..” என்றாள்.
“சரிடி நீ பாத்து பத்திரமா இரு… அம்முக்கிட்ட (அம்ரித்தாவின் உடன்பிறந்த தங்கை) சொல்லிருடி” என்றாள் அம்ரிதா.
“ம்ம்ம்… எங்களை பத்தி நீ கவலைப்படாதே…. நாங்க சமாளிச்சிக்கிறோம், நீ நல்லபடியா உன் வாழ்க்கையை தொடங்கு…” என்றவள், “சரி, நான் வைக்கிறேன்…” என அழைப்பை துண்டித்து விட்டு வீட்டிற்கு சென்றாள் அங்கே அவளுக்கு காத்திருக்கும் துன்பம் என்னவென்று தெரியாமல்.
“எங்கடி போன” வீட்டிற்குள் நுழைந்ததும் தாய் ராணி கேட்க…
“அவ்வா வீட்டுக்கு போய் இருந்தம்மா” என்றாள்.
“அவ்வா வீடு என்ன அந்த பொட்டி கடைக்குள்ளயா இருக்கு…” ஆத்திரமாக பேசியவர், “ ஒழுங்கா சொல்லு யார்கிட்ட ஃபோன்ல பேசிக்கிட்டு இருந்த.. உங்க அக்காகாரிட்ட தானே” என்றார்.
“இல்லம்மா அவகிட்ட பேசல” என்றாள் ஹேமா பயந்தவாறு.
உடனே… “அவ கிட்ட பேசலன்னா, வேற யார்ட்யடி பேசிக்கிட்டு இருந்தா சொல்லு… மரியாதையா உண்மையை சொல்லிடு” என்றவர், மகளை கன்னம் கன்னமாக அறைந்திருக்க…
வலி தாங்க முடியாமல் அலறிய அந்த 15 வயதே நிரம்பிய சிறுமியோ… “அடிக்காதம்மா… வலிக்குதுமா சொல்லிறமா” என்றவள், அக்காவிடம் தான் பேசினேன் என உண்மையை ஒப்புக் கொண்டாள்.
“ஏண்டி அவளே எங்க அக்காவோட மானத்தை வாங்கிட்டு எவன் கூடவோ ஓடி போய்ட்டா. நீ அவளுக்கு ஃபோன போட்டு பேசிக்கிட்டு இருக்கியா…” என கொதித்தவர்… “ எங்கடி போயிருக்கா அவ..” என்றார் கோபமாக.
“தெரியாதும்மா, அவன் கூடத்தான் போயிருக்காளான்னு மட்டும்தான் கேட்டேன், எங்க போறாங்கன்னு எல்லாம் கேட்கலாமா” என்றாள் தேம்பியவாறே.
“பொய் சொல்லாதடி” என்றவர், மேலும் அவளின் தலைமுடியை பிடித்து அடிக்க…
“ஆஆஆ…” அலறிய ஹேமா… “சத்தியமா உண்மைதாமா சொல்றேன் பொய் சொல்லலாமா” என்றாள் அழுகையுடன்.
மகளை அடித்து ஓய்ந்த ராணி… “ஓஓஓஹோ.. சரி அப்போ மறுபடியும் போய் ஃபோன் பண்ணி, அவ எங்க போயிருக்கா? என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு கேளு போ”
எனக்கூற…. வேறு வழியின்றி தமக்கைக்கு அழைக்கச் சென்றாள்.
சென்றவள் மீண்டும் கடைக்கு வர… அங்கிருந்த கடைக்கார பெண்மணி… “இப்போ தான வீட்டுக்கு போன உடனே வந்துட்ட…” எனக் கேட்க…
“நான் தான் ஃபோன் பண்ணனும்னு கூட்டிட்டு வந்தேக்கா..” என்றார் மகள் பின்னே வந்த ராணி.
“அப்படியா… சரி..” என்ற அப்பெண்மணி.. “சரி கடையை கொஞ்சம் பாத்துக்க… நான் உள்ள போயி ஜாமான் எடுத்துட்டு வந்துடறேன்” எனச் சென்றிட… ராம் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள் ஹேமா.
அலைபேசி இசைக்கவே “இவ ஏன் மறுபடியும் கூப்பிடுற” என யோசித்த அம்ரிதா, அழைப்பை ஏற்று
“சொல்லு ஹேமா” என்றாள்.
“அம்ரி எங்கடி இருக்க..” அழுகையை அடக்கியவாறு கேட்க…
“எங்க இருக்கோம்ன்னு சரியா தெரியலடி” என்றாள் அம்ரி.
“தெரியலையா.. தெரியாம எங்கடி போவீங்க…” என்றவளிடம்….
“அதுதான் புரியல ஹேமா… எங்க போக போறோ, என்ன பண்ண போறோன்னு ஒன்னும் தெரிய மாட்டேங்குது…” என்றாள் அவள்.
தாய் அருகிலேயே நின்றிருக்க, அதை தமக்கையிடம் கூறவும் முடியாமல்… தமக்கையை தாயிடம் காட்டிக் கொடுக்கவும் விரும்பாமல்… அலைபேசியை கையால் மூடிக்கொண்ட ஹேமா… “அம்மா அவளுக்கு தெரியலையாம்” என மெதுவாக கூற…
“ஒழுங்கா கேளுடி” என மகளின் கால் விரல்களை மிதித்தார் ராணி.
வலியில் அழக்கூட முடியாமல் அதை அடக்கியவள், “வழியில் இருக்க ஏதோ ஒரு போர்டு பார்த்து எந்த ஊருன்னு சொல்லுடி” ஹேமா விடாமல் கேட்க…
“ராம், நம்ம எங்க இருக்கோம்னு என் தங்கச்சி கேக்குறா. இங்க இருக்க ஏதாது ஒரு போர்டு பார்த்து சொல்ல இது எந்த ஊருன்னு” என்றாள் அம்ரி.
உடனே சுதாரித்துக் கொண்ட ராம்… “ஃபோனை கட் பண்ணு அம்மு” எனக்கூற….
“ஏண்டா… என் தங்கச்சி லைன்ல இருக்கா” என்றாள் அம்ரி.
“ஐயோ” என அலைபேசி அவளிடம் இருந்து பிடுங்கிய ராம்.. அழைப்பை துண்டித்திருந்தான்.
“ஏய்… நான்தான் சொன்னேன்ல அவ லைன்ல இருக்கான்னு எதுக்கு கட் பண்ண” அம்ரி ராமிடம் சண்டையிட…
“அவ இந்நேரம் உங்க வீட்ல மாட்டி இருப்பா, அதுனால தான் திரும்பத் திரும்ப கேட்கிறானு நினைக்கிறேன்” என்றான்.
அவன் கூறியதைக் கேட்டு மிரண்டவள், “அடக்கடவுளே… எங்க சித்தப்பாக்கு மட்டும் அவ என்கூட பேசனானு தெரிஞ்சது அவளை உயிரோடு புதைச்சிடுவாரு” என கலக்கினாள்.
“இப்ப அத பத்தி யோசிச்சு ஒன்னும் ஆகப் போறது இல்ல. எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் நீ ஃப்ரீயா விடு” என்ற ராம் நண்பனுக்கு அழைத்து தாங்கள் அவன் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தான்.
“அம்மா அவ ஃபோனை கட் பண்ணிட்டாமா.. எங்க போயிட்டு இருக்கான்னு தெரியலயாம்” ஹேமா தாயிடம் கூற…
“வந்து தொலை” என மகளை இழுத்துச் சென்ற ராணி… கணவனிடம் கூறி மகளை நன்றாக கவனித்திருந்தார்.
தமக்கை செய்த தவறுக்கு தனக்கு தண்டனை கிடைத்தாலும் அதைப் பற்றி கலங்காதவள், தமக்கை மட்டும் தங்கள் குடும்பத்தினரிடம் மாட்டிக் கொள்ளவேக் கூடாது என இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்.
தொடரும்….