Stories that touch hearts

Home  /  05. மீனாட்சி (அவள் இதயம் துடிக்கும் வரை)  /  Chapter 1

CHAPTER 1

இதயத்துடிப்பு – 1

By Meenatchi · October 1, 2026

0

அவள் இதயம் துடிக்கும்வரை

அத்தியாயம் 01

அழகிய மாலை நேரம். ஆனால் இருவருக்கு அந்த மாலை நேரம் அழகையும் அமைதியையும் கொடுக்கவில்லை.

கையில் இரண்டு வயது பெண் குழந்தையை வைத்துக்கொண்டு முப்பது வயது ஆண் மகன் சென்னையில் இருந்து கோவை வந்துவிட்டான். அவன் அரசு பேருந்தில் வந்து இறங்கி ஊருக்குள் ஆட்டோவில் வந்து மக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் வந்து இறங்கினான்..

அது ஒரு அழகிய கிராமம். அவன் எந்த ஒரு பொருளும் அங்கிருந்து எடுத்து வரவில்லை. கையில் ஒரு தோள் பை மட்டும் இருந்தது. அதில் அவனுக்கு இரண்டு ஜோடி உடை. குழந்தையின் உடை, குழந்தைக்கு தேவையான பொருள்கள் மட்டுமே இருந்தது.

பர்ஸில் இருந்து ஆட்டோவிற்கு பணம் எடுத்து கொடுத்துவிட்டு ஒரு கையில் பை. மறு கையில் குழந்தையுடன் கண்ணில் உயிர்ப்பு இல்லாமல் முகத்தில் சோகம் அப்பி அவன் திடமான உருவத்திற்கும் அவன் நின்ற கோலத்திற்கும் சம்மந்தமே இல்லாமல் நின்றான்.

கிராமம் என்பதால் அவனை பற்றி தெரிந்து கொள்ள அக்கம் பக்கம் இருந்தவர்கள் கூடி வந்து அவன் முன் நின்று அவனையே பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

அந்தக் கூட்டத்தில் வயதான பாட்டி ஒருவர் முன்னால் வந்து அருள்மொழியைப் பார்த்தார். “யாருங் தம்பி நீங்க? கையில குழந்தைய வச்சுக்கிட்டு எவ்வளவு நேரம்தான் இப்படியே ரோட்டுல நிக்கப் போறீங்க? நீங்க யாரு வீட்டுக்கு யாரைப் பார்க்க வந்துருக்கீங்க?” என்று கேட்டார்.

அருள்மொழி உடனே பதில் சொல்லவில்லை. சில நொடிகள் அமைதியாக அனைவரையும் பார்த்தான்.

பிறகு மெதுவாக அந்தப் பாட்டியை நோக்கி, “பாட்டி… இந்த ஊரில் வாடகைக்கு வீடு ஏதாவது கிடைக்குமா? நான் இங்கு புதிது. கூட்டுறவு வங்கியில் மேனேஜர் வேலைக்காக வந்திருக்கிறேன். எனக்கும் என் மகளுக்கும் தங்குவதற்கு ஒரு வீடு வேண்டும்.”

பாட்டி அவனை உற்றுப் பார்த்தார். அவனுடைய முகத்தில் தெரிந்த சோகமும், கையில் குழந்தையை வைத்திருந்த விதமும், அந்தக் குழந்தையை அவன் அணைத்திருந்த விதமும் பாட்டிக்கு ஏதோ சொல்லியது.

“வீடு கிடைக்கும் தம்பி… ஆனா இந்தப் பாப்பாவைப் பார்த்துக்கிட்டு நீங்க எப்படி வேலைக்குப் போறீங்க?”

அருள்மொழி வர்ணாவை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டு,

“அதுதான் பாட்டி எனக்குப் பெரிய கவலை. நான் வேலைக்குப் போகும் நேரத்தில் என் பாப்பாவை கண்ணும் கருத்துமாக அன்பாகப் பார்த்துக்கொள்ள ஒரு நல்ல ஆள் கிடைக்க வேண்டும்.”

அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, சுற்றிலும் கூடி நின்றிருந்த சிலர் அவனைப் பற்றியும் குழந்தையைப் பற்றியும் ஆர்வமாகப் பேசத் தொடங்கினர்.

அருள்மொழியின் முகத்தில் ஏற்கனவே இருந்த சோகம் இன்னும் அதிகமாகத் தெரிந்தது.

அதைப் பார்த்த பாட்டிக்கு கோபம் வந்தது.

“என்னங்க எல்லாரும் வேடிக்கை பாத்துட்டு நிக்கிறீங்க? போங்கப்பா… போய் உங்க உங்க வேலையப் பாருங்க! புதுசா வந்திருக்கிற மனுஷனை இப்படிச் சுத்தி நின்னு கேள்வி கேக்காதீங்க!” என்று அவர்களை விரட்டினார்.

பாட்டியின் அதட்டலைக் கேட்டதும் மக்கள் மெதுவாக அங்கிருந்து கலைந்து சென்றனர். பிறகு பாட்டி அருள்மொழியைப் பார்த்து அன்பாக, “தம்பி… இந்தத் தெரு முடிவுல ஒரு வீடு வாடகைக்கு இருக்கு. நீங்க அங்க போயிக் கேளுங்க.”

அருள்மொழியின் முகத்தில் சிறிது நம்பிக்கை பிறந்தது.

“அது இசை பொண்ணு வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளிதான் இருக்கு. அந்தப் பொண்ணுக்கு நல்ல மனசு. உங்களுக்கு வீடு விஷயத்துலயும்… முக்கியமா இந்தப் பாப்பாவைப் பார்த்துக்கற விஷயத்துலயும் இசை பொண்ணு உதவி பண்ணுவா.”

“இசையா…?”

“ஆமாங்க தம்பி. நீங்க தெரு முடிவுக்குப் போயி கேட்டுப் பாருங்க. உங்களுக்கு தேவையான உதவி கிடைக்கும்.”

அருள்மொழி நன்றியுடன் தலையசைத்தான்.

“ரொம்ப நன்றி, பாட்டி.”

வர்ணாவை மார்போடு அணைத்துக்கொண்டு தெரு முடிவை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அவனுக்குத் தெரியவில்லை…

அந்தத் தெருவின் முடிவில் இருக்கும் ஒரு சிறிய வாடகை வீடு, அவன் வாழ்க்கையில் இன்னொரு புதிய கதவையும் திறக்கப் போகிறது என்று…

—

அருள்மொழி பாட்டி சொன்ன வழியில் தெரு முடிவை நோக்கி நடந்தான்.

அவன் கையில் இருந்த வர்ணா, அவன் தோளில் முகத்தைப் புதைத்தபடி அமைதியாக இருந்தாள்.

சிறிது தூரம் சென்றதும் தெருவின் கடைசியில் ஒரு பழைய அழகான வீடு தெரிந்தது.

வீட்டின் முன்புறம் சிறிய முற்றம். வாசலில் அழகான கோலம். அருகில் துளசி மாடம். சுற்றிலும் பூச்செடிகள்.

வாசலில் பதினெட்டு வயது இளம் பெண் நின்றிருந்தாள்.

அவளுடைய அருகில் இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று மணலில் விளையாடிக் கொண்டிருந்தது.

அந்தப் பெண் குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தவள், தெருவில் அருள்மொழி வருவதைக் கவனிக்கவில்லை.

வீட்டின் முன் வந்து நின்ற அருள்மொழி,

“பாப்பா… ஏங்க பொண்ணு…” என்று அழைத்தான்.

அந்தப் பெண் திரும்பிப் பார்த்தாள்.

அவனைப் பார்த்ததும் சற்றே ஆச்சரியப்பட்டு அவன் அருகில் வந்தாள்.

“ஹலோ… என்னைப் பாத்தா குட்டிப் பாப்பா மாதிரியா இருக்கு? யாருங்க நீங்க?”

அவளுடைய பேச்சைக் கேட்டதும் அருள்மொழியின் முகத்தில் லேசான குழப்பம் தெரிந்தது.

எளிமையான உடை. நீண்ட கூந்தல் அழகாகப் பின்னப்பட்டிருந்தது. முகத்தில் இயல்பான அழகு. கண்களில் ஒரு குழந்தைத்தனமான அமைதி.

அவள்தான் அந்த வீட்டில் அனைவராலும் இசை என்று அழைக்கப்படும் தமிழிசை.

அருள்மொழியின் கையில் இருந்த குழந்தையைப் பார்த்ததும் அவளுடைய பார்வை மென்மையானது.

“யாருங்க?”

அருள்மொழி மரியாதையாகப் பேசினான்.

“நான் இந்த ஊருக்குப் புதிது. கூட்டுறவு வங்கியில் மேனேஜர் வேலைக்காக வந்திருக்கிறேன். இந்தத் தெரு முடிவில் வீடு வாடகைக்கு இருப்பதாக ஊரில் ஒரு பாட்டி சொன்னாங்க . அதைப் பார்க்க வந்தேன்.”

“அப்படியா? அந்த வீடு எங்க வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளிதாங்க இருக்கு.”

அருள்மொழி நிம்மதியாக மூச்சுவிட்டான்.

“அந்த வீட்டை நான் பார்க்கலாமா?”

“கண்டிப்பாங்க. வாங்க… நான் கூட்டிக்கிட்டு போறேன்.”

இசை வீட்டை விட்டு வெளியே வந்து அவனுக்கு வழிகாட்டத் தொடங்கினாள்.

சில அடிகள் சென்றதும் அவளுடைய பார்வை மீண்டும் அருள்மொழியின் கையில் இருந்த குழந்தையின் மீது விழுந்தது.

“இந்தப் பாப்பா உங்க பொண்ணுங்களா?”

அருள்மொழி சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

பிறகு,

“ஆமாம்… என் மகள். பெயர் வர்ணா.”

“அட… ரொம்ப அழகா இருக்காளே!”

இசை புன்னகைத்தாள்.

அந்தப் புன்னகையைப் பார்த்த அருள்மொழியின் முகத்திலும் ஒரு கணம் மாற்றம் தெரிந்தது.

ஆனால் அடுத்த நொடியே அவன் மனைவியின் நினைவு மனதில் தோன்றியது.

அவனுடைய முகம் மீண்டும் சோகமாக மாறியது.

அதை இசை கவனித்தாள்.

ஆனால் அவனிடம் அதற்கான காரணத்தைக் கேட்கவில்லை.

இருவரும் இரண்டு வீடுகள் தள்ளி இருந்த வாடகை வீட்டை அடைந்தனர்.

இசை பூட்டைத் திறந்து கதவைத் திறந்தாள்.

“இதுதாங்க வீடு. வாங்க… உள்ள போயிப் பாருங்க.”

அருள்மொழி மெதுவாக உள்ளே சென்றான்.

சிறியதாக இருந்தாலும் வீடு மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது.

ஒரு சிறிய ஹால், ஒரு அறை, சமையலறை என குடும்பமாகத் தங்குவதற்கு ஏற்றதாக இருந்தது.

ஹாலில் சோபா, இரண்டு கதிரைகள் இருந்தன.

அறையில் கட்டிலும் அலமாரியும் இருந்தன.

வீட்டில் தேவையான அடிப்படைப் பொருட்கள் அனைத்தும் இருந்தன.

ஆனால் சமையலறையில் எந்தப் பொருளும் இல்லை.

அது மட்டும் முற்றிலும் காலியாகவும், சுத்தமாகத் துடைத்து வைக்கப்பட்டிருந்தது.

அருள்மொழி சுற்றிலும் பார்த்துவிட்டு,

“வீடு நல்லாத்தான் இருக்கு… வாடகை எவ்வளவு?”

“அதெல்லாம் வீட்டு ஓனர்கிட்ட கேட்டுத்தான் சொல்லணும். நான் கேட்டுட்டு சொல்றேன்.”

இசை வீட்டைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்போது வர்ணா அருள்மொழியின் கையிலிருந்து கீழே இறங்க முயன்றாள்.

அருள்மொழி அவளை மெதுவாக கீழே இறக்கிவிட்டான்.

வர்ணா உடனே இசையை நோக்கி நடந்தாள்.

இசை குனிந்து,

“பாப்பா… வீடு பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள்.

வர்ணா அவளைப் பார்த்து சிரித்தாள்.

அந்தச் சிரிப்பைப் பார்த்த அருள்மொழியின் முகத்திலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறிய புன்னகை மலர்ந்தது.

சில நொடிகள் கழித்து அருள்மொழி தயக்கத்துடன்,

“இசை…”

“சொல்லுங்க.”

“நான் ஒரு உதவி கேட்கலாமா?”

“என்னங்க?”

அருள்மொழி வர்ணாவைப் பார்த்தான்.

“நான் தினமும் வேலைக்குப் போக வேண்டியிருக்கும். என் குழந்தையைத் தனியாக விட்டுவிட்டுப் போக முடியாது. அவளைப் பார்த்துக்கொள்ள ஒரு ஆள் வேண்டும்.”

இசை உடனே பதில் சொல்லாமல் வர்ணாவைப் பார்த்தாள்.

அந்த நேரத்தில் வர்ணா இசையை நோக்கி இரண்டு சிறிய கைகளையும் நீட்டினாள்.

“அம்மா…”

அந்த ஒரு வார்த்தையைக் கேட்டதும் அருள்மொழியும் இசையும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

அருள்மொழியின் கண்கள் கலங்கின.

“வர்ணா… அது அம்மா இல்லடா…”

அவனுடைய குரல் உடைந்தது.

இசையின் முகமும் மாறியது.

அவள் மெதுவாக வர்ணாவைத் தூக்கிக்கொண்டாள்.

குழந்தை அவளுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு சிரித்தது.

இசை குழந்தையை அணைத்தபடி அருள்மொழியைப் பார்த்தாள்.

“நீங்க கவலைப்படாதீங்க… உங்களுக்கு சம்மதம்னா, நீங்க வேலைக்குப் போற நேரத்துல வர்ணாவை நான் பார்த்துக்கறேன்.”

அருள்மொழி அவளை நம்ப முடியாமல் பார்த்தான்.

“நிஜமாகவா?”

“ஆமாங்க. குழந்தையப் பார்த்துக்கறது பெரிய கஷ்டமில்ல. அன்பா பார்த்துக்கிட்டா போதும்.”

அருள்மொழியின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

“ரொம்ப நன்றி, இசை.”

இசை மெதுவாகப் புன்னகைத்தாள்.

“அதுக்கெல்லாம் நன்றி எதுக்குங்க? பாப்பா நல்லா இருந்தா போதும்.”

சில நொடிகள் அமைதியாக இருந்த அருள்மொழி,

“ஆனா… மாதம் சம்பளம் தர வேண்டும். சரியா?” என்றாள் இசை.

“அதுக்கு என்னங்க? தாராளமா தரலாம். ஆனா… என் வர்ணா குட்டியை நீங்க நல்லா பார்த்துக்கிட்டா போதும். அவதான் எனக்கு எல்லாமே.”

அந்த வார்த்தைகளைக் கேட்ட இசை அமைதியாக அவனைப் பார்த்தாள்.

அருள்மொழியின் வாழ்க்கை முழுவதும் அந்தக் குழந்தையைச் சுற்றித்தான் இருக்கிறது என்பதை அவள் அப்போது புரிந்துகொண்டாள்.

அந்த நாள்வரை அருள்மொழியின் உலகம் அவன் மகள் வர்ணாவைச் சுற்றியே இருந்தது.

ஆனால் அந்த நாளிலிருந்து…

அவனுடைய உலகத்தில் மீண்டும் காதல்  மெதுவாக ஒரு இடத்தைப் பிடிக்கத் தொடங்கியது.

அவனுக்குத் தெரியாமலேயே…

—

அருள்மொழி வீட்டிற்குள் மீண்டும் ஒருமுறை சுற்றிப் பார்த்தான்.

“வீடு அழகா இருக்கு . நான் எடுத்துக்கொள்கிறேன்.”

இசை மகிழ்ச்சியுடன் தலையசைத்தாள்.

“சரிங்க. நான் வீட்டு ஓனர்கிட்ட பேசிக்கறேன்.”

அருள்மொழி தன் பயணப் பையை எடுத்துக்கொண்டான்.

வர்ணாவை மறுகையில் தூக்கிக்கொண்டான்.

வீட்டின் வாசலைத் தாண்டி உள்ளே வந்தவுடன் அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.

இங்கிருந்துதான் நம்ம வாழ்க்கையை புதுசா ஆரம்பிக்கணும்.

அந்த எண்ணத்தோடு அறைக்குள் சென்றான்.

கட்டிலில் அமர்ந்தபடி வர்ணாவை அருகில் வைத்துக்கொண்டான்.

பிறகு தனது மனைவியின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான்.

அவன் கண்களில் மீண்டும் கண்ணீர் தேங்கியது.

புகைப்படத்தைப் பார்த்தபடி மெதுவாக,

நீ இல்லாத இந்த வாழ்க்கையை எப்படி வாழ்றதுன்னே எனக்குத் தெரியல… எல்லாரும் காலம் எல்லா வலியையும் ஆற்றிடும்னு சொல்றாங்க… ஆனா என் வலி மட்டும் நாளுக்கு நாள் அதிகமாகுது. நீ என்னைவிட்டு போயிட்ட… ஆனா உன் நினைவுகள் மட்டும் என்னைவிட்டு போகவே மாட்டேங்குது… என் கையில் இருக்கிற இந்தக் குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம், ‘நம்ம பொண்ணை நல்லா பார்த்துக்கோங்க’ன்னு நீ சொன்ன அந்தக் கடைசி வார்த்தைதான் காதுல கேட்குது… நீ இல்லாத ஒவ்வொரு நொடியும், நான் உயிரோட இருக்கிறதே ஒரு தண்டனை மாதிரி இருக்கு…!”

“நீ என்னை விட்டு போகும்போது, உன்னோட சேர்ந்து என் சந்தோஷத்தையும் எடுத்துட்டுப் போயிட்ட… இந்தக் குழந்தை மட்டும் இல்லன்னா , நான் எதுக்காக இன்னும் உயிரோட இருக்கிறேன்னு கூட எனக்குத் தெரியாது. அவளுடைய முகத்தில் உன்னைப் பார்க்கிறேன்… அவள் சிரிக்கும்போது உன் சிரிப்பு கேட்குது… அதனாலதான் அவளை என் உயிரைவிட அதிகமா பாதுகாக்கிறேன்.”

“ஒரு நாள் இந்தப் பாப்பா ‘அம்மா எங்கே?’ன்னு என்னைக் கேட்கப் போறா… அப்போ நான் என்ன பதில் சொல்வேன்? ‘உன் அம்மா என்னை தனியா விட்டுட்டு போயிட்டா’ன்னு சொல்ல முடியுமா? அவள் அம்மாவைப் பற்றி கேட்கும் ஒவ்வொரு முறையும் என் மனசு மீண்டும் உடையும்… ஆனாலும் அவளுக்காக நான் அழக்கூடாது… நான் அவளுக்கு அப்பாவாக மட்டும் இல்ல… அவளுடைய அம்மாவாகவும் இருந்து வாழணும்.

“நம்ம பொண்ணுக்காக நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்… நீ கவலைப்படாதே.”

என்று சொன்னான்.

பிறகு வர்ணாவைத் தூக்கிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தான்.

அந்தச் சிறிய வீட்டில்…

அருள்மொழியின் புதிய வாழ்க்கை அன்று முதல் தொடங்கியது.

அவனுக்குத் தெரியாமல்…

அந்த வீட்டின் அருகிலேயே இன்னொரு இதயம் அவனுடைய வாழ்க்கைக்குள் மெதுவாக நடந்து வரத் தொடங்கியிருந்தது.

அது யாருடைய இதயம் என்பதை…

காலம்தான் சொல்லப் போகிறது.

← Previous All Chapters Next →

2 comments

Jacqueline October 2, 2026 - 1:01 am

அருள் மொழியின் இதயத்தில் வர்ணாவினால் தமிழிசை ராகங்கள் பாடப் போகிறாள்.

Jacqueline October 2, 2026 - 9:10 pm

Next Episode Eppa Varum Sis

Leave a Comment

error: Content is protected !!