Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 75
- Thread Author
- #1
விவாதக் காதல் – 35
“இருங்க இருங்க. அவங்க பொய் சொல்றாங்களா, இல்ல உண்மை சொல்லுறாங்களான்னு இப்போ தெரியும் பாருங்க.” ஆண்டாள் சொன்னதும், “என்ன தெரியும்?” என்று எரிச்சலாகக் கேட்டார் வனிதா.
“டேய்! சிவா. நீ போய் ரெண்டு பேப்பர்ல குங்குமமும், திருநீறும் கொண்டு வந்து, ஊர் மக்கள் முன்னாடி காட்டி, அந்த ரெண்டு பிரசாதத்தையும் மடித்து கடவுள் விக்ரகத்துக்கு முன்னாடி போடு. அப்புறம் ஒரு குழந்தையை அழைச்சி வந்து, அந்த ரெண்டு பொட்டலத்துல இருந்து ஒரு பொட்டலத்தை எடுக்கச்சொல்லு. அப்போ அந்த குழந்தை சரியா குங்குமத்தை எடுத்துட்டா, சசி சொல்லுறது சரி. இந்த சமயத்துல இவங்க இப்படி ஒரு கேவலத்தை பண்ணமாட்டாங்கன்னு நம்புவோம்” என்று ஆண்டாள் சொன்னதும் கீதா தன் பங்கிற்கு எதோ யோசித்தார்.
“அப்போ திருநீர் வந்தா?” என்ற நாராயணனிடம்,
“அதெல்லாம் வராது.” என்றார் கீதா.
“அத்தை...” என்ற கொடிவீரனிடம்,
“அட இருங்க மருமகனே. நீங்க ரெண்டு பேரும் தான் தப்பு பண்ணலையே அப்போ நமக்கு ஏன் பயம்?”
“பாட்டி இங்க என்ன நடக்குது? நீங்க சும்மா நின்னு வேடிக்கை பார்க்குறீங்க. எனக்கு எதுவுமே சரியாப்படல. இந்த கீதா அம்மா என்னன்னவோ உளறிட்டு இருக்காங்க” என்று பாட்டியை சத்தம் போட்டாள் மகிழினி.
“அதெல்லாம் சொன்னாதான் சித்ரா நம்ம இங்க இருந்து எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம வீட்டுக்கு போக முடியும். அதனாலதான் கீதா இப்படி ஒரு பிளான் போட்டுருக்கா.”
“இருந்தாலும் பாட்டி. எனக்கு இந்தப் பேச்சு பிடிக்கலை” என்று முகம் சுளித்தாள்.
“நீ சும்மா இரு. அவங்க எதாவது பண்ணி சசி கல்யாணத்த நல்லவிதமா முடிக்கட்டும். அப்போ தான் நிம்மதியா நம்மளும் ஊர் போய் சேர முடியும்” என்றார்.
ஆண்டாள் சொன்னது போலவே, சாமி சன்னதி முன் இரண்டு பொட்டலங்களை மடித்து போட்டவன், வேணுவை அழைத்து அதில் ஒன்றை எடுக்க, கேவி & சிஎம். இங்க நடக்கும் செயல்களை கண்டு குழம்பிய வண்ணம் நின்று இருக்க, பொட்டலத்தை பிரித்து பார்த்த ஆண்டாள் கையில் குங்குமம் தென்பட்டது.
“இவங்க குடும்பம் சொன்னது போல, இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க. அதனால இப்படி ஒரு அசிங்கத்தை இவங்க கோவில்ல பண்ண வேண்டிய அவசியம் இல்லைன்னு, அந்தக் கடவுக்ளே நமக்கு தெரிய வச்சிட்டாரு. அதனால இந்தக் கதையை இங்கேயே மறந்துட்டு, எல்லோரும் போய் அவங்கவங்க வேலையை பாருங்க. டேய்! சிவா. விடிந்தா உனக்குக் கல்யாணம். இன்னும் சில மணிநேரம் தான் இருக்கு. போ போய் தூங்கு. எல்லோரும் கிளம்புங்க. சசி. இனி ஒரு வார்த்தை கல்யாணம் வேணான்னு எல்லாம் சொல்ல கூடாது புரியதா?” என்றாள் ஆண்டாள்.
“சாரி அண்ணி.”
“ம்... பரவாயில்ல. உன் தம்பியையும் அந்ப்த பெண்ணையும் அழைச்சிட்டு வீட்டுக்குக் கிளம்பு. முகூர்த்த நேரத்துக்கு நீங்க சரியா இங்க இருக்கனும்.”
“ம்... சரி அண்ணி.”
“தேங்க்ஸ் அக்கா.” என்றான் சிவா.
“சித்ரா வா போகலாம். டேய்! தம்பி வாடா.” என்றதும் கொடிவீரன் சம்மதமாய் தலையசைக்க, “கீதா அத்தை வாங்க. அம்மா பாட்டி வாங்க போகலாம்” என்றாள் சசி.
"எல்லோரும் கிளம்புங்க” என்று ஆண்டாள் சொல்ல, வனிதா. நாராயணனை பார்த்து கண்ஜாடை காட்டியதும்.
“ஒரு நிமிஷம் எல்லோரும் நில்லுங்க” என்று நாராயணன் சொல்ல, அனைவரும் அதே இடத்தில் நின்றனர்.
“சரி. நானும் கூட இந்ப்த பையனுக்கும், இந்தப் பொண்ணுக்க்கும் கல்யாணம் நடக்கப்போகுதுன்னு நம்புறேன். ஆனா, அதுக்கு முன்னாடி இவங்க இந்த ஊருக்காக ஒரு காரியம் பண்ணனும்” என்றதும் வனிதா மகிழினியை முறைக்க.
“என்ன பண்ணனும்?” என்று கேட்ட கொடிவீரன் அருகில் வந்த நாராயணன்,
"ஆண்டாளு. நாளைக்கு உன் தம்பி சிவாக்கு கல்யாணம் நடக்கப்போகுது தானே. அதுக்கு இந்த சசி வீட்டுல தானே செலவு பண்ணிருக்காங்க. அப்போ ஏன் இவங்க நாலு பேர் கல்யாணமும் ஒண்ணா ஒரே மேடையில நடக்கக்கூடாது” என்று நாராயணன் தனக்கு சாதகமாக அடுத்த திட்டத்தை போட்டு கொடிவீரனை பார்த்து முறைக்க.
"என்ன கல்யாணமா?” என்று விழி பிதுங்கியவளின் கண்களை பார்த்து, கொடிவீரனும் அதிர்ச்சி அடைந்த நிலையில் நின்று இருந்தான்.
"ஆமா கல்யாணம் தான். நாளைக்கு சசி சிவா கல்யாணம் நடக்கும்போது, இதோ இந்த கொடிவீரனுக்கும், சித்ரமகிழினிக்கும் கல்யாணம் முடிந்தாகணும். இல்லையா நாங்க சொன்னது போல, இவங்க கண்டிப்பா தீச்சட்டி எடுத்தே ஆகணும். அதுவும் நிர்வாணமாக” என்று வனிதா சொல்ல,
“அதுக்கென்ன. என்னைக்கோ நடக்கப்போற கல்யாணம் தானே. அது நாளைக்கு நடக்கும்” என்று ஆண்டாள் வாக்குறுதி தர,
“இல்ல. அதெல்லாம் நடக்காது” என்றாள் மகிழினி.
“ஆமா எங்க கல்யாணம் எல்லாம் நாளைக்கே நடக்காது” என்று கொடிவீரனும் சொல்ல,
“அப்போ நீங்க ரெண்டுபேரும் உள்ள போய், கேவலமான செயலை தான் பண்ணோம்னு ஒத்துகிட்டு, நாங்க தந்த தண்டனையை ஏத்துக்கோங்க.” என்று மீண்டும் நாராயணன் நயவஞ்சகமாக சொன்னதும்.
“அதுக்கு எல்லாம் அவசியம் இல்ல. நாளைக்கு என் பேத்தி சித்ராவுக்கும், கொடிவீரனுக்கும், சசி, சிவாவுக்கு நடக்க இருக்கும் அதே முகூர்த்ததில் கல்யாணம் நடக்கும்” என்று மகிழினியின் பாட்டி சொல்ல, கேவி, சிஎம் அதிர்ச்சியில் நின்று இருந்தனர்.
“அதான் சொல்லிட்டாங்க இல்ல. எல்லோரும் கிளம்பிப்போங்க. நாளைக்கு என் தம்பிக்குக் குறித்த அதே முகூர்த்தத்துல, சசியோட தம்பிக்கும் கல்யாணம் நடக்கும்.” என்று ஆண்டாள் சொன்னதை கேட்டு அங்கே கூடி இருந்த அனைவரும் சூரியனை கண்ட பணியை போல மறைந்து போயினர்.
“பாட்டி. என்ன நினைச்சுகிட்டு நீங்க சபையில இப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருக்கிங்க?” என்று மகிழினி கடுங்கோபத்துடன் கத்த,
அவளின் கரங்களை பிடித்த கீதா, “இங்க பாருமா. நடக்குறது எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்கோ. நீயும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருப்ப. உன்னை எங்களுக்கு எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கும் என் மாப்பிளைக்கும் கல்யாணம் நடக்கணும்னு நாங்க எல்லாம் ஆசைப்படுறோம். இந்த ஒரு சந்தர்ப்பத்தை அந்த ஆண்டவனா ஏற்படுத்தி தந்து இருக்கான்னு நம்ம நினைச்சிப்போம். அதனால, நீ எதைப்பற்றியும் கவலைப்படாம. இந்தக் கல்யாணத்துக்கு சம்மந்தம் சொல்லு தாயி.” என்று சொன்னார்.
அவர் கையை தன் வசம் இருந்து விடுவித்த மகிழினி, “இல்லிங்க. நான்...” என்று மகிழினி ஏதோ சொல்ல வரும் முன்பு.
“தம்பி என் பேத்தியை கல்யாணம் பண்ணிக்கோப்பா.” என்று கெஞ்சிய பாட்டி கொடிவீரனின் காலில் யாரும் எதிர்பாராத விதமாக விழ, அதைப் பார்த்த மகிழினியின் கண்கள் கோவத்தில் சிவந்தது.
“சித்ரா நீ மட்டும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலைனா, என் மக கல்யாணம் நடக்காதுமா” என்று புலம்பிய வண்ணம் ஜெயா நெஞ்சில் கை வைத்து கீழே சரிந்து அழ, கீதா ஆறுதல் சொன்னார்.
ஆளுக்கொரு பக்கம் அவர்கள் அழுது புலம்பிக்கொண்டு இருக்க, வனிதா செய்த சூழ்ச்சியால், கொடிவீரனும் மகிழினியும் செய்வதறியாமல் திகைத்து போய் நின்றிருந்தார்கள்.
சில நொடிகள் யோசித்த மகிழினி கண்கள் மூடி பெருமூச்சியை வெளியேற்றி, "இவருக்கு சம்மதம்னா, நானும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்” என்றவள் மறுவார்த்தை பேசாமல் கோவில் வாசலில் இருந்து நேராக, இரண்டு தெரு தள்ளி அமைந்துள்ள வீட்டுக்குள் நுழைந்து. தனக்கு தரப்பட்ட அறைக்குள் சென்று கட்டிலில் படுத்திருக்க, அவள் கண்களில் கண்ணீரும் வற்றிப்போனது.