• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 3.1

New member
Joined
Jan 15, 2026
Messages
8
💙விவாதக் காதல்💙
Part 3

ஒரு வருடம் கடந்த நிலையில்..
‘என் பெயர் கொடிவீரன். நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே என்னைக் கொடி என்றுதான் அனைவரும் அழைப்பார்கள். எனக்கு வயது 25. என் அப்பா ஆலையில் வேலை பார்க்கும் பொழுது இறந்து விட்டதால், எங்களுக்கு அவர் இழப்புக்காக கொடுத்த பணத்தை வங்கியில் போட்டு என் அம்மா குடும்பத்தை நடத்தி வருகிறார்.
என் அக்காவுக்கு என்னை விட நான்கு வயது அதிகம். அவள் எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பால்வாடியில் பணி புரிகிறாள்.
சொந்த வீடு. மாடு கோழி வளர்ப்பதால் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான செலவை பார்த்து கொள்ளும் விதமாக பணப்புழக்கம் வீட்டில் இருக்க தான் செய்தது.
என் அக்காவுக்கு ஏனோ இது வரை வரன் கிட்டவில்லை. காரணம் கேட்டால் கட்டம் சரியில்லை ராகு ரெண்டாம் வீட்டிலும், குரு மூன்றாம் வீட்டிலும் அமர்ந்து இருக்கிறார் என்று ஜோசியக்காரர்கள் சொல்லும் கதையைக் கேட்டு புலம்புவது மட்டுமே என் அம்மாவின் முழு நேர வேலையாக மாறி இருந்தது.
நான் ஒரு பக்கம். என் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடி அலைந்தேன் எனக்கு வேலையும் கிடைத்தது. ஆனால் வேலை எங்கள் சொந்த ஊரில் இருந்து 6 மணி நேர பிரயாண தூரம் என்பதால், நான் வேலை பார்க்கும் ஊரில் இருக்கும் என் நண்பன் சுரேஷ் வீட்டின் மொட்டை மாடியில் வாடகைக்கு இருக்க முடிவு செய்து, இன்று நான் என் ஊரில் இருந்து என் அம்மா அக்காவின் ஆசியுடன் வேறு ஊருக்கு வந்துள்ளேன். இன்னும் சற்று நேரத்தில் என்னை அழைத்து போக சுரேஷ் வந்து விடுவான் என்று பேருந்து நிலையத்தில் காத்திருந்த என் எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல என் நண்பன் வந்தான்.’
“ஹாய்டா மச்சான். எப்படிடா இருக்க? வீட்டுல அம்மா அக்கா எல்லாம் எப்படி இருக்காங்க?” என்றவன் என் பையை வாங்கி கொண்டு என்னை கட்டி தழுவினான்
“ எல்லாரும் நல்லா இருக்காங்கடா. நீ எப்படி இருக்க? நம்ம நண்பன் பாண்டியன் சொன்ன ஒரே வார்த்தைக்காக, உன் வீட்டுல எனக்கு தங்க இடம் கொடுத்த பாரு மச்சி, உனக்கு ரொம்ப தேங்க்ஸ்டா” என்று நான் அவனுக்கு நன்றி சொன்னேன்.
“என்னடா கொடி நீ? இந்த ஊருல உனக்கு வேலை கிடைத்து இருக்கு. நீ தங்க இங்கே எதாவது சின்னதா ரூம் ஏற்பாடு பண்ணி தர முடியுமான்னு பாண்டியன் தான் கேட்டான். சரி நீ எங்க இருந்து வெளிய எல்லாம் வீடு தேடி அலையனும், எங்க வீட்டு மாடியிலயே ஒரு ரூம் சும்மா தான் இருக்கு, உன்னால முடிந்த வாடகையை தந்துட்டு நீ அங்கேயே இருந்துக்கலாம்னு, நான் தான் பாண்டியங்கிட்ட சொன்னேன்” என்றான் சுரேஷ்.
“இருந்தாலும் நீ பண்றது ரொம்ப பெரிய உதவிடா.” என்றான் மனதார.
“சரி சரி. அதெல்லாம் இருக்கட்டும். உனக்கு கல்யாணம் முடிஞ்சுதா” எனக் கேட்டான்.
“ஏய்! இல்ல இல்ல. இன்னும் என் அக்காவுக்கே கல்யாணம் முடியல. அதுக்குள்ள நான் எங்க?” என்று பதறிப்போய் சொன்னான் கொடி.
“சரிடா. வா கிளம்பலாம். நம்ம பைக்லயே போயிடலாம்.”
“உங்க வீட்டுல இருந்து நான் வேலைக்கு போற இடம் எவ்வளவு தூரம் இருக்கும்? நான் எதுல போனா சரியா இருக்கும்னு பார்த்து சொல்லுடா.”
“ஏன்டா எல்லாதையும் பஸ் ஸ்டாண்டுல நின்னுகிட்டே கேப்பியா. வா வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.” என்று சுரேஷ் சொல்ல, “ம்...” என்று கொடி சொன்னான்.
சுரேஷ் தன் நண்பனை வீட்டுக்கு அழைத்து செல்லும் வழியில், “சுரேஷ் கொஞ்சம் இரு. நான் கோவிலுக்கு போய்ட்டு ஒரு விளக்கு போட்டுட்டு வந்துடுறேன்.” என்று வண்டியை நிறுத்தச் சொன்னான்.
“என்ன? விளக்கு போட போறியா?” எனது வித்தியாசமாக நண்பனைப் பார்த்தான் சுரேஷ்.
“போய் இறங்கினதும் விளக்குப் போட அம்மா சொன்னாங்கடா.”
“ஆனா நம்ம வீடு பக்கத்து தெரு தான்டா. வீட்டுக்கு போயிட்டு வந்து அப்புறம் கோவிலுக்கு வரலாம் இல்ல. இப்பவே எதுக்கு?”
“இல்லடா. முதல்ல கோவிலுக்கு போட்டுட்டு வர்றேனே. அப்ப தான் மனசுக்கு நிறைவா இருக்கும். பிளீஸ்டா” என்றான் கொடி.
“சரி உன் உணர்வை நான் தப்புன்னு சொல்ல முடியாது. நீ போயிட்டு வா. நான் இங்க இருக்கேன்.”
“டேய்! நீ கோவிலுக்கு வரலையா?”
“நான் உள்ள வந்தா, அந்தக் கடவுளை நான் கேக்குற கேள்வியில அந்த ஆளு இந்த ஊரை விட்டே ஓடிடுவான். அதனால நீ போயிட்டு வா. நான் இங்கேயே ஒரு தம் போட்டுட்டு நிக்குறேன்.” என்று சுரேஷ் சொன்னதும். கொடி நெய் விளக்கை வாங்கி கொண்டு கோவிலுக்குள் நுழைந்தவன், அங்கு இருந்த குழாயில் காலை அலம்பியப்படி கோவில் சன்னதிக்கு சென்றான்.
அங்கே நிறைய பேர் சாமியை வழிபட, தன் கையில் இருந்த விளக்கை ஏற்றுவதற்காக தீப்பெட்டியைத் தேடியவன், இவன் அருகில் விளக்கேற்றி கொண்டு இருந்த பெண்ணைப் பார்த்து, "ஏங்க கொஞ்சம் தீப்பெட்டி தரீங்களா? விளக்கு ஏத்திட்டு தரேன். பிளீஸ்ங்க" என்று அந்த பெண்ணிடம் கேக்க,
அவளோ இவன் பேச்சுக்கு செவி சாய்க்காமல், அவள் கையில் இருந்த விளக்கை ஏற்றியப்படி தன் தீப்பெட்டியை எடுத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
"இந்த ஊர்ல பொண்ணுங்க எல்லாம் ரொம்ப திமிரு பிடிச்சவங்களா இருப்பாங்க போ..." என்று கொடி சொல்லி முடிக்கும் முன்பு பக்கத்தில் இருந்த விளக்கை கொண்டு அவன் கையில் சூடு வைத்தான் சிறுவன் ஒருவன்.
"யோவ்! என்ன? என் அத்தையை பார்த்து திமிர் பிடிச்ச பொண்ணுன்னு சொல்லுற. என்னயா கோவில்ல வந்து பொண்ணுங்கள சைட் அடிக்கிறியா?" என்று அந்த சிறுவன் கேட்டதும், அங்கே சுற்றி இருக்கும் அனைவரும் அந்த சிறுவனையும், கொடியையும் பார்த்து முறைத்தனர்.
சட்டென்று முகம் வேர்த்து போன கொடி, அங்கே ஒரு நிமிடம் கூட நிற்கவில்லை. கோவிலில் இருந்து வெளியே வந்தவனை பார்த்த சுரேஷ், "என்ன மச்சான். போன வேகத்துல ஓடி வர? என்ன சாமி கண்ணை குத்திடுச்சா" என்று கிண்டல் பண்ண,
"ஐயோ மச்சான்! உள்ள ஒரு குட்டி சாத்தான், கொஞ்ச நேரத்துல என்னை ஈவ் டீசிங் கேஸ்ல உள்ள தள்ள பாத்துட்டான். வா வா மச்சான் உன் வீட்டுக்கு கிளம்பலாம். நான் நாளைக்கு வந்து சாமிக்கு விளக்கு போட்டுக்குறேன்" என்று சொன்ன கொடியை சிரித்தப்படியே சுரேஷ் தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு தன் வீட்டிற்கு சென்றான்.
“மச்சான் இது தான் நம்ம வீடு. மாடியில தான் நீ தங்க போற.” என்று வீட்டைக் காண்பித்தான்.
“கீழே தான் நீ இருக்கியா மச்சான்?”
“எனக்குப் பக்கத்து ஊருல வீடுடா. சோ, நான் வார இறுதியில தான் இங்க வருவேன். என் பையனும், என் பாட்டியும், என் தங்கச்சியும் தான் கீழ் வீட்டுல இருக்காங்க.” என்றான் அவன்.
“என்னடா அதுக்குள்ள கல்யாணம், பிள்ளைன்னு லைப்ல செட்டில் ஆகிட்ட போல.”
“அட ஏன்டா நீ வேற. நான் படிக்கப் போன டியூஷன் வீட்டுல, என் டீச்சரோட தங்கச்சி, வீட்டுல யாருமே இல்ல எனக்குக் கொஞ்சம் முருங்கைக் கீரை உடைச்சு தாங்க. நான் அதுல அடை போடணும்ன்னு சொன்னாள். நானும் பெரிய இவனைப் போல முருங்கை கீரையை உடைச்சு அவ கையில தந்தேன். அப்பன்னு பார்த்து ஜோன்னு மழை வேற. முருங்கைக் கீரை மரத்துல இருந்த கம்பிளி பூச்சி என் மேல விழ, நான் பயந்து அவ மேல விழ...”
“ஐயோ அப்புறம்...” என்றான் பதறி.
“ம்... அடுத்த பத்தாவது மாசத்துல முருங்க வாயை வச்சிக்கிட்டு, எனக்கு ஒரு பையன் வேணு, வேணும்னே வந்து குதிச்சிட்டான்.” என்று கதை சொன்னான்.
“உலக வரலாற்றிலே இப்படி ஒரு FB யாருக்கும் இருக்காது மச்சான்.” என்று சிரித்தான் கொடி.
“ம்... ஆனா இதெல்லாம் பதினெட்டு, பத்தொன்பது வயசுல நடந்ததால என் பாட்டி என்னை ஊரை விட்டே ஒதுக்கி வச்சிட்டாங்க.”
“ஐயோ. அப்புறம்?”
“அப்புறம் என்ன, ஏதோ இப்போ தான் என் பாட்டி படுத்த படுக்கையா ஆகிட்டதால, என் மகனை மட்டும் ஏத்துக்கிட்டாங்க. அவனை காரணம் காட்டி நான் வாரக் கடைசியில் இங்க வந்துட்டு போவேன். என் பொஞ்சாதியை இந்த ஊர் பக்கமே வர கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அவளும் பாவம். மீதம் இருக்குற நாலு பிள்ளையை பார்த்துகிட்டு வயித்து பிள்ளை காரி ரொம்ப கஷ்டத்தை அனுபவிக்கிறா.” என்றான் அப்பாவியாக.
“என்ன. உனக்கு 5 பிள்ளைங்களா?” என்று அதிர்ந்தான் கொடி.
“ஏய்! இல்ல இல்ல.” சுரேஷ் வேகமாய் மறுக்க,
“அதானே பார்த்தேன்” என்று நிம்மதியானான் கொடி.
“இந்த முறை ட்வின்ஸ். மொத்தம் ஆறு பிள்ளைங்க மச்சான்.” என்று பல்லைக் காட்ட,
“ஏன்டா? எப்படிடா?”
“வீட்டுல இருக்குற முருங்கை மரத்தை நான் தொடும் போதெல்லாம், ஒரு பிள்ளை பிறக்குது. நான் என்ன மச்சான் பண்ணுறது.” அம்மாஞ்சி முகத்தை மாற்றாது சொன்னான் சுரேஷ்.
“ம்... அப்ப வெட்டிடு” என்றான் பட்டென்று.
“டேய் பாவி!” என்று அவன் அலற,
“சே நான் முருங்கை மரத்தை சொன்னேன் மச்சான். நீ வேற என்ன நினைச்ச?”
“நல்லா சொன்ன போ. சரி வா மாடிக்கு போகலாம்.”

“ம்...” என்று சொன்னவனை சுரேஷ் தன் வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்றான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top