Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 37
- Thread Author
- #1
விவாதக் காதல்
விவாதம் – 18
விவாதம் – 18
மகிழினி சமையல் அறையில் உணவுக்குத் தேவையான எல்லாம் செய்து கொண்டு இருக்க, “நான் எதாவது பண்ணவா.” என்று கேட்டாள் சசிகலா.
“வேணாம் அக்கா. நானே முடிச்சிடுவேன்.”
“சாரிமா” என்று சசி தம்பி சார்பாக மன்னிப்பு கேட்டாள்.
“எதுக்கு.?”
“என் தம்பி சும்மா தான் பேசினான்.”
“அது உண்மைக்கே இருந்தாலும், அது என்னோட பிரச்சனை இல்ல அக்கா. நான் அழு மூஞ்சியா இருந்தாலும் சரி. சிடு மூஞ்சியா இருந்தாலும் சரி. இது என்னோட இயல்பு. உங்க தம்பிக்கோ, இல்ல அடுத்தவங்களுக்கோ பிடிக்கணும்னு நான் என்னை மாத்திக்க மாட்டேன்.”
“ம்” என்று சசி தலையசைக்க,
“சரி அக்கா. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. நான் டின்னர் முடிச்சிட்டு வரேன்” என்றாள் மகிழினி.
“இல்லமா. நானும் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன்.”
“அத்த அத்த” என்று வேணு வர, “சொல்லுடா” என்றாள் மகிழினி.
“பாட்டி உங்கள கூப்பிடுறாங்க.”
“ஹாங் இதோ வரேன்.”
“எந்த பாட்டிடா” என்று சசி கேட்க,
“எங்க பாட்டி தான். ஏன் எனக்கு வேற யாரு இங்க பாட்டி?”
“எங்க அம்மா உனக்கு பாட்டி தானே.”
“நீங்க எல்லாம் எனக்கு சொந்தம் இல்ல. நான் உங்கள உறவுமுறை எல்லாம் சொல்லி கூப்பிடமாட்டேன்” என்றான்.
“அக்கா. இவன் இப்படி தான். இருங்க நான் பாட்டிகிட்ட என்ன ஏதுன்னு கேட்டுட்டு வரேன்.” என்று மகிழினி சமையல் அறையில் இருந்து ஹாலுக்கு செல்ல, அங்கே கொடியின் அம்மா ஜெயாவும், பாட்டியும் அமர்ந்து இருந்தார்கள்.
“என்ன பாட்டி கூப்பிட்டீங்களா?”
“ஆமா சித்ரா. நாளைக்கு இவங்க அம்மன் கோவில் போறாங்க. நீயும் வரியா?”
“எனக்குக் கேன்டீன்ல வேலை இருக்கு பாட்டி. நான் எப்படி வரது?
“ஏம்மா. ஒரு நாள் கூட நீ கேன்டீன் லீவு விடமாட்டியா?” எனக் கேட்டார் ஜெயா.
“ம்ஹூம் விட முடியாது அம்மா. மீறி எதாவது ரொம்ப அவசரம்னா, அங்க வேலை பாக்குற ஆளுங்ககிட்ட சொல்லி தான் பார்த்துக்க சொல்லுவேன்.”
“அப்போ நீ என் மக கல்யாணத்துக்கு எங்க ஊருக்கு வரமாட்டியா?” என்றார் வேகமாக.
“அதானே. அப்போ நீ என் கல்யாணத்துக்கு வரமாட்டியா?” என்று சசி வந்தாள்.
“இல்ல நான் அங்கெல்லாம் வர மாட்டேன்.”
“என்னமா இப்படி பேசுற. உன்னை பார்த்தா எங்க வீட்டு பொண்ணு மாதிரி தோணுது. நீயும் என் மக கல்யாணத்துக்கு வந்தா, நான் ரொம்ப சந்தோஷ படுவேன்.” என்றார் ஜெயா.
“ஆமா. எப்ப உங்க மகளுக்கு கல்யாணம்?” என்று வேணு கேட்க,
“இந்த மாத கடைசியில வேணு.”
“என்னமா சொல்றிங்க. இந்த மாத கடைசியிலயா? ஐயோ இன்னும் 25 நாள் தானே இருக்கு.” என்று கேட்டார் பாட்டி.
“ம் ஆமாம்மா. அதுக்குள்ள இந்த பூஜை எல்லாம் முடிக்கணும்னு ஜோசியர் சொன்னதால தான், கையோட பத்து நாள் இங்க தங்கி, எல்லா சாங்கியத்தையும் முடிக்கலாம்னு வந்தோம்.
“ஓ நல்லதுமா.” என்றார் பாட்டி.
“ஏங்க. கல்யாணம் எந்த ஊருல.?”
“அதான் சொன்னாங்களேடா. அவங்க மாப்பிள ஊருலயாம்.”
”இங்க பாருமா சித்ரா. நீ என்ன பண்ணுவன்னு எனக்கு தெரியாது. ஆனா, கண்டிப்பா நீங்க எல்லாம் குடும்பத்தோடு நேர்ல வந்து, என் மக கல்யாணத்தை முடிச்சுத் தரணும்.” என்று அன்புக் கோரிக்கை வைத்தார் ஜெயா.
“இல்லமா. நான் எப்படி அங்க எல்லாம். வேணாம் அம்மா. நான் வேணும்னா சசி அக்கா கல்யாணம் முடிந்த கையோடு, அவங்கள உங்க ஊருல வந்து பாக்குறேன்.” என்றாள் மகிழினி.
“அதெல்லாம் செல்லாது. நீ என் கல்யாணத்துக்கு வரலைனா, நான் இப்போவே என் அம்மாவை அழைச்சிட்டு இங்க இருந்து வெளிய போயிடுவேன்.” என்று மிரட்டினாள் சசி.
“ஐயோ அக்கா. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. சொன்னா புரிஞ்சிக்கோங்க. உங்களுக்கு ஒரு நல்லது நடக்கும் போது. நான் எப்படி உங்க முன்னாடி வந்து நிக்குறது.?” என்றாள் கேள்வியாய்.
“என்னமா பேசுற நீ. ஏன் நீ முன்ன வந்து நின்னா என்ன ஆகப்போகுது?” என்று கேட்டார் ஜெயா.
“இல்லமா. இந்த சமூகம் எனக்கு விதவைன்னு ஒரு அங்கீகாரம் தந்துருக்கு. ஏன் நீங்களே நல்ல நேரம். நல்லது, கெட்டது எல்லாம் பார்த்து பண்ற ஆளு தானே. அங்க நான் எப்படி?” எனக் கேட்டாள் மகிழினி.
“ஏன்மா நீ விதவைனா, அப்போ நான் யாரு? எனக்கும் இந்த சமூகம் அந்த பெயரை தந்துச்சு. ஆனா, நான் அந்த பெயரை எடுத்துக்கலையே. இப்போ கூட பார்த்தியா, என் நெற்றியில குங்குமம் இருக்கும். ஏன் நான் பூ வைக்காம வெளிய போகமாட்டேன். இதெல்லாம் பாக்குறவங்க கண்ணை உருத்துதுன்னா, அவங்க அவங்களோட கண்ணை மூடிக்கட்டும். இந்த பூ, பொட்டு எல்லாம் நான் பெண்ணாக பிறந்ததுல இருந்து, என் அம்மா எனக்கு வச்சி விட்டு அழகு பார்த்த ஒன்னு. அத நான் என் கணவன் மறைவுக்கு பிறகும் கடைபிடிக்கிறேன். ஆனா, என் கணவன் கட்டின தாலியை, நான் அவர் போன பின்னாடி கழட்டிட்டேன். என்னை யாரு என்ன சொன்னாலும், அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்ல. ஹாங்! என்ன சொன்ன. நல்ல நேரம் கெட்ட நேரமா? ஆமாம்மா. நான் நல்ல நேரம், கெட்ட நேரம் பாப்பேன். ஆனா, மனுஷங்கள அத வச்சி ஒதுக்கமாட்டேன். உன்னோட இந்தக் கோலம் நீயா ஏத்துக்குறது. உன் நிலைமையில நான் இருந்தா, கண்டிப்பா நான் இப்படி பூ பொட்டு எல்லாம் இல்லாம வலம் வரமாட்டேன்” என்றார் ஜெயா.
“நானும் எவ்வளோ சொல்லிட்டேன். இவ இப்படி தான் இருக்குறா.” என்று வருந்தினார் பாட்டி.
“ஏன் சித்ரா நீ இப்படி இருக்க? உனக்கு உன் பாட்டி மறுமணம் பண்ணி வைக்க ஆசைப்படுறாங்க. அத நீ வேணான்னு சொல்றதுல கூட ஒரு அர்த்தம் இருக்கு. ஆனா. பூ. பொட்டு எல்லாம் வைக்காம. நீ ஏன் இப்படி இருக்குற?” என்று சசி கேட்க,
“அதெல்லாம் வச்சுக்கணும்னு எனக்கு தோணல அக்கா.”
“இதுவரை தோணலைனா என்ன. இனிமே நீ பூ, பொட்டு எல்லாம் வச்சிக்கோ.”
“ஹ்ம் அதெல்லாம் அப்புறம் பாத்துப்போம். உள்ள எனக்கு வேலை இருக்கு. நான் போய் டின்னர் ரெடி பண்ணுறேன்” என்று சொல்லிக்கொண்டே மகிழினி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
"இப்படி தான்மா இவ. அவளுக்கு ஒரு விஷயம் ஒத்துவரலைனா. அங்கிருந்து கிளம்பிடுவா. இவ மனசு எப்போ தான் மாறுமோ” என்று பாட்டி கவலைப்பட்டார் .
"எல்லாம் ஒரு நாள் நல்லதாவே மாறும்” என்று ஜெயா சொல்லிக்கொண்டு இருக்க.
"என்னம்மா மாறும்” என்று கேட்டுக்கொண்டே கொடி, இவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி வந்தான்.
"ம் என்னம்மா பதில் இல்லை. என்ன மாறும்” என்று மீண்டும் தன் அம்மாவிடம் கேட்டான்.
"எல்லாம் சித்ராவை பற்றி தான்பா பேசிகிட்டு இருக்கோம்” என்று பாட்டி சொன்னதும்,
கொடி அமைதியாக நின்றிருந்தவனின் கண்கள் மகிழினியைத் தேடியது.
"என்னடா. சித்ராவை தேடுறியா” என்று சசி கொடியின் காதைக் கடிக்க.
"ம் ஆமா. எங்க அவங்க?” என்று கேட்டான்.
"சித்ரா. உன்ன என் தம்பி தேடுறான் பாரு” என்று சத்தமாக சசி மகிழினியை அழைத்தாள்.
கையில் தோசை கரண்டியுடன் சமையல் அறையில் இருந்து வெளியே வந்த மகிழினி, கொடியை முறைத்து பார்த்தாள்.
"அக்கா. உனக்கு என்ன பாவம் பண்ணேன் நான். ஏன் இப்போ என்னை இப்படி கோர்த்து விடுற?” என்று பல்லைக்கடித்தான்.
"என்ன சார். மறுபடியும் எனக்கு எதாவது புது பெயர் வச்சி இருக்கீங்களா? அதை சொல்ல தான் என்னை கூப்பிடிங்களா. என்னனு சொல்லுங்க கேப்போம்." என்று கேட்டுக்கொண்டே தன் காது மெஷினை மகிழினி சரி செய்து கொண்டாள்.
"ஐயோ. இல்ல இல்லைங்க. உங்க அக்கௌன்டுக்கு பணம் ட்ரான்ஸ்பர் ஆகிடுச்சி. அத சொல்லதான் நீங்க எங்கன்னு என் அக்காகிட்ட கேட்டேன்” என்று கொடி அந்தர் பல்டி அடித்தவனை பார்த்து சசி சிரித்தாள்.
"ம் நான் நாளைக்கு போய் பேங்க்ல பாக்குறேன்” என்றாள் மகிழினி கடுப்புடனே.
"ம்" என்றவன், “அம்மா. நான் கடைக்கு போறேன். உங்களுக்கு எதாவது வேணுமா” என்று தாயிடம் கேட்டான்.
"இந்த நேரத்துல எங்கடா போற?” என்று ஜெயா கேட்டதும்.
"அம்மா. அவன் ஹோட்டலுக்கு போறான்மா” என்று சிரித்து கொண்டே சசி சொன்னாள்.
"என்ன ஹோட்டலுக்கா? ஏன்ப்பா. என் பேத்தி சமையல் உனக்கு பிடிக்கலையா?” என்று பாட்டி கேட்டதும், மகிழினி கொடியை கடுங்கோபத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள்.