Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 35
- Thread Author
- #1
விவாதக் காதல்
அத்தியாயம் – 17
அத்தியாயம் – 17
“ஆமா. வீரனும் இதே மாதிரி சுட்டித்தனமான பையன் தான். ஆனா, பொண்ணுங்ககிட்ட பேச மட்டும் கொஞ்சம் பயப்படுவான்” என்று பழனி சொல்ல.
“அப்படியா. ஆனா, என்கிட்ட அவரு முதல் நாளே நல்லா சகஜமா தான் பேசினாரு.” என்று மகிழினி தன் கணவனை பற்றி சிரித்த முகத்துடன் சொன்னாள்.
“அது எப்படிம்மா. அவனை நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு தெரிஞ்சு உன்கிட்ட பேசலனா, அவன் வேஸ்ட்ன்னு நீ நினைத்துட மாட்டியா?” என்று சொல்ல, தன் கணவன் வீரனை நினைத்து மகிழினி தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்.
இவர்கள் இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டிருந்த தருணம், ஆட்டோ ஆசிரமத்தின் வாசலை சென்றடைந்தது.
“சரிப்பா. நீங்க பார்த்து போயிட்டு வாங்க. அதான் அவரு நாளைக்கு பணம் அக்கவுண்ட்ல வந்துரும்னு சொல்லிட்டாரு இல்ல. வந்ததும் நான் ஆசிரமத்து அக்கவுண்ட்ல மாத்திடுறேன்” என்று மகிழினி நம்பிக்கையாகச் சொன்னாள்.
“இருக்கட்டுமாம். நீ உடம்ப பாத்துக்கோ. அந்த மாத்திரையை தினமும் போடு. ஜாக்கிரதையா இரு. அப்புறம் ஒரு போன் வாங்குன்னு சொன்னேனே. ஏன் இன்னும் வாங்காம இருக்க? என்று பழனி கேள்வி கேட்க,
“இருக்கட்டும்பா. நான் யாருகிட்ட பேச போறேன். அதான் வாரத்துக்கு ரெண்டு முறை ஆசிரமத்துக்கு வரேன் இல்ல. அத மீறி ஏதாவதுனா உங்களுடைய அலைபேசிக்கு நானே போன் பண்றேன். எனக்கு செல் போன் வாங்கறதுல இன்ட்ரஸ்ட் இல்ல” என்று மகிழினி சொல்ல, பழனி
மேற்கொண்டு அவளைத் தொல்லை கொடுக்காத நிலையில், தன் ஆசிரமத்திற்கு சென்றார்.
ஆட்டோவில் வந்த மகிழினி சில நிமிடங்களில் தன் வீட்டிற்கு செல்ல, வாசலில் இவள் வருகைக்காக வேணு காத்து இருந்தான்.
“என்னடா கோவிலுக்கு எல்லாம் போயிட்டு வந்துட்டீங்களா.?” என்று தன் கையில் இருந்த மருந்து பையை மறைத்தபடி, மகிழினி வீட்டுக்குள் நுழைய பார்க்க,
“அத்தை பையில என்ன? எனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வந்திருக்கியா?” என்று வேணு அந்தப் பையை பிடுங்க போக, மகிழினி அவனுக்கு தெரியாமல் மாத்திரை பையை தன் முதுகுக்கு பின் மறைத்திருந்த சமயம், பைக்கில் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் கொடி.
“என்ன வேணு, கோவிலுக்கு எல்லாம் போயிட்டு வந்துட்டீங்களா?” என்று கொடியும் வேணுவை விசாரிக்க,
தன் கையில் இருந்த மருந்து பையை கொடியின் வண்டி முன்சீட்டில் மறைத்து வைத்தாள் மகிழினி.
“என்னங்க இதையேன் இங்க வைக்கிறீங்க?” என்று கொடி பொறுமையாக கேட்க.
“இப்போதைக்கு இந்த பையை உள்ள எடுத்துட்டு போக முடியாதுங்க. நான் அப்புறமா வந்து எடுத்துக்கிறேன். இந்த முருங்க பூ வாயன், என்ன ஏதுன்னு நோண்டி மருந்த கையில் எடுத்துட்டா. அப்புறம் பாட்டிக்கு தெரிஞ்சிடும்” என்று மகிழினி பயமகொள்ள,
“சரி. நைட் மறக்காம மாத்திரை எடுத்துட்டு போங்க” என்று சொன்னபடி கொடி மாட்டிக்கு செல்ல, மாடியில் இவன் அறையில் சசி அமர்ந்திருந்தாள்.
“என்ன அக்கா இங்கதான் இருக்கியா நீ. நான் கீழ இருப்பேன்ல நெனச்சேன்” என்று தன் அக்காவை விசாரித்துக் கொண்டே கொடி அறைக்குள் நுழைந்தான்.
“இல்லடா. அம்மாவும், பாட்டியும் கீழ தூங்குறாங்க. எனக்கு அடிக்கடி போன் வந்துகிட்டு இருந்துச்சா, அதான் ஏன் அவங்கள டிஸ்டர்ப் பண்ணனும்னு நான் மாடிக்கு வந்துட்டேன். அப்புறம் இன்னைக்கு உனக்கு வேலை எல்லாம் எப்படி போச்சு” என்று கேட்டாள்.
இன்றைய தினம் தன் அலுவலகத்திற்கு மகிழினி வந்ததும், அவள் மயங்கி விழுந்ததையும், அவளை மருத்துவமனையில் சேர்த்த கதையையும் கொடி தன் அக்காவிடம் சொல்லி முடித்தான்.
“என்னடா சொல்ற அடிக்கடி மயக்கம் போட்டு விழறாளா? பேசாம ஸ்கேன் ஏதாவது எடுக்கலாமா?
“நீ என்ன லூசா. நம்ப எப்படி அவங்க விஷயத்துல தலையிட முடியும்? நான் பாட்டி கிட்ட விஷயத்தை சொல்றேன்னு சொன்னதுக்கே, இந்த பொண்ணு கண்ண அந்த உருட்டு உருட்டுனா. ஹ்ம் நமக்கு ஏன்க்கா இந்த வேலை எல்லாம். அவங்க விஷயத்துல யார் தலையிடுவதும் அவங்களுக்கு பிடிக்காது. மேற்கொண்டு நம்ப ஏதாவது பண்ண போயி தேவையில்லாத பிரச்சனை தானே.”
“அப்படி இல்லடா. நான் என்ன சொல்றேன்னா.?”
“அக்கா நீ எதையும் சொல்ல வேணாம். சரி அம்மாவும், பாட்டியும் கீழ தூங்கட்டும். அப்புறம் மாப்பிள்ளை வீட்ல என்ன சொல்றாங்க?” என்றான்.
“அட போடா. அவரோட அக்காவும், மாமாவும் என்னமோ பஞ்சாயத்து ஊர் தலைவராம். ரொம்ப பீத்திக்கிறாங்க. கல்யாணம் மட்டும் முடியட்டும். மாப்பிள்ளையோட போய் நான் மும்பையில செட்டில் ஆயிடுவேன்.
“ஐயய்யோ ஒரு குடும்பத்தை பிரிக்கிறது பாவம் இல்லையா?”
“டேய் இந்த ஐடியாவை கொடுத்ததே உன் மாமா தான்.” என்றாள் கூலாக.
“என்னது மாமாவா? இது எப்போதுல இருந்து.?”
“ஆமாடா. அவரு என்னை கல்யாணம் பண்ணிக்க போறார்னா, உனக்கு மாமா தானே.”
“அக்கா இன்னும் அவருடைய பெயர் கூட எனக்கு முழுசா தெரியாது. அதுக்குள்ள மாமா மச்சானு உரிமை கொண்டாடணுமா?”
“இப்ப என்ன உனக்கு. அவரோட பெயர் தெரியணும் அவ்வளவு தானே. அவரோட பெயர் சிவா” என்றாள்.
“சிவா மாமா. ம் நல்லா தான் இருக்கு.”
“ஆளும் நல்ல மனுஷன் தான். என்ன ஒன்னு, அவங்க அக்கா மாமாவுக்கு தான் கொஞ்சம் பயப்படறாரு. அதனாலயே மும்பை பக்கம் வந்துடனும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு.”
“சரி. கல்யாணம் அவங்க அக்கா மாமா கிராமத்துல தானே நடக்க போகுது?”
“அம்மா. அப்படி தான் சொல்லிருக்காங்க.”
“ஆமா. பூஜை புனஸ்காரம் எல்லாம் எப்படி போச்சி?”
சசி - ம்நல்லா இருந்தது. ஆனா, அம்மா போற இடத்துல எல்லாம் உன்னுடைய கல்யாணத்துக்காக தான் வேண்டிக்கிட்டாங்க.
“என்ன கல்யாணமா.!? இப்ப எனக்கு என்ன அவசரம்? முதல்ல உன் கல்யாணம் முடியட்டும்.”
“ஏன்டா. நீ யாரையாவது காதலிக்கிறாயா?” தன் தம்பியின் வேகமான பதிலில் கேட்டாள்.
“யாரு நானா? கடுப்ப கிளப்பாதே.” என்றான் எரிச்சலாக.
“ஏன்டா. உன் வயசு பசங்க எல்லாம், அங்கங்க காதலிச்சு பொண்ணை வீட்டுக்கே அழைச்சிட்டு வராங்க. நீ என்னடானா, காதலிக்கவும் மாட்டேன்ற. கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு பொண்ணு பார்க்கணும்னு சொன்னாலும் அதுக்கும் சம்மதிக்க மாட்ற.” என்றாள் சலிப்பாக.
“அக்கா கல்யாணம் எல்லாம் நேரம் கூடி வரும்போது தானாக நடக்கும். இப்ப நான் காதலிச்சு. அது உங்க யாருக்கும் பிடிக்காம, பொண்ணு வீட்லயும் புடிக்காம, காதல் தோல்வியில நான் சுத்துறதுக்கு பதிலா, நம்ம அம்மா பார்க்கிற பொண்ணையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். சோ சிம்பிள்” என்றான்.
“ஏன்டா உனக்கு பொண்ணு இப்படி வரணும், அப்படி வர வரணும்ன்னு ஆசை எல்லாம் இல்லையா?”
“ம் எனக்கும் ஒரு பெண்ணை பார்த்து, ஒரு முறை இந்த ஆசை வந்துச்சு தான்.”
“என்னடா சொல்ற? யாரு அந்த பொண்ணு? எங்க இருக்கா?” என்று ஆர்வமாகக் கேட்டாள் சசி.
“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, நம்ம கிராமத்துக்கு ப்ரீ மெடிக்கல் கேம்ப் போட்டு இருக்கும் போது, நம்ம அம்மாவை நான் அங்க அழைச்சிட்டு போனேன். அப்போ ஒரு பொண்ண பார்த்தேன். இல்லையில்ல அவ கண்ண மட்டும் தான் பார்த்தேன்.” என்றான்.
“ஏன் அவகிட்ட பார்க்க உனக்கு வேற ஏதும் கிடைக்கலையா.?” என்றாள் நக்கலாக.
“சும்மா இரு அக்கா. நல்ல ஆம்பளைக்கு அழகு, பொண்ணோட கண்ணை மட்டும் பாக்குறது தான்.”
“அதுக்கு நீ கண் டாக்டரா தான் பொறந்து இருக்கணும்.”
“அட நான் கண் டாக்டர் எல்லாம் இல்ல தான். ஆனா, நான் பார்த்த பொண்ணு ஒரு நர்ஸ்” என்றான்.
“என்ன நர்ஸா?”
“ம் ஆமா அக்கா. அவங்க நர்ஸ் தான். வாய் மொழி எல்லாம் பேசல அக்கா. நான் நம்ம அம்மாவை அந்த கேம்ப்கு அழைச்சிட்டு போனேன் இல்ல. அப்போ அம்மாக்கு சட்டுன்னு பிபி ரைஸ் ஆகி மயங்கிட்டாங்க. நான் பதறியே போயிட்டேன். ஆனா, அந்த பொண்ணு நம்ம அம்மாவ ரொம்ப அன்பா. பாசமா அரவணச்சி. ஒரு குழைந்தையை போல பாத்துக்கிட்டாங்க. அந்த ரெண்டு கண்ணுல என்ன ஒரு கருணை தெரியுமா. ஆனா, என்னால அந்த பொண்ணோட முகத்தையும் பார்க்க முடியல. குரலையும் கேக்க இயலல” என்று உச்சு கொட்டினான் கொடி.
“ம் மேல சொல்லு?” என்றாள் ஊக்கினாள் சசி.
“என்ன சொல்லுறது, எப்படிச் சொல்லுறது? அவங்களுக்கு என்ன கண்ணு தெரியுமா? பார்த்ததும் அப்படியே பிளாட் ஆகிட்டேன். மூளை அப்படியே ஸ்டன் ஆகிருச்சி. அந்த கண்ணை பார்த்துகிட்டே இருக்கணும்னு தோணுச்சு. அதுக்கேத்த மாதிரி. அந்த பொண்ணு வேற முகத்துல மாஸ்க் போட்டு இருந்தாங்க. பாதி திரையில் மறைந்து இருக்கும் வதனத்தை காண முடியலைன்னாலும், மீதி இருக்கும் அந்த ரெண்டு விழிகளுக்குள், என் எதிர்கால வாழ்க்கையின் ரகசிய வழியே கிடைத்த மாதிரி ஒரு பீல். அவங்க கண்ணுல அப்படி ஒரு சாந்தம்.” என்று அப்பெண்ணை வர்ணித்தான் கொடிவீரன்.