Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 33
- Thread Author
- #1
விவாதக் காதல்
Part 16
Part 16
சித்ரமகிழினி மயங்கி விழவும், அவளிடம் வேகமாக வந்த கொடிவீரன், "ஐயோ! என்னங்க. என்னாச்சு இவங்களுக்கு?” என்று பதறினான்.
"தெரியல தம்பி. சித்ரா இங்க பாருமா” என்று பழனியும் பயந்த வண்ணம் மகிழினியை எழுப்பினார்.
"இருங்க நான் போய் தண்ணி கொண்டு வரேன்.” கொடி தண்ணீர் பாட்டிலுடன் வந்தவன், அவள் முகத்தில் தண்ணீரை தெளிக்க, மகிழினி எந்த ஒரு அசைவும் இல்லாமல் மயக்கத்தில் இருந்தாள். அதைக் கண்ட பழனி மேலும் பீதி அடைந்தார்.
"தம்பி. நாங்க வந்த ஆட்டோ வெளிய தான்பா நிக்குது. நீ சித்ராவை பார்த்துக்கோ. நான் போய் ஆட்டோகாரரை அழைச்சிட்டு வந்து, சித்ராவை நான் உடனே ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போறேன்” என்றார் பழனி.
"சார். நீங்க ஆட்டோவை வாசலுக்கு வர சொல்லுங்க. நான் இவங்கள அங்க தூக்கிட்டு வரேன்” என்று கொடி சொல்ல, அடுத்த சில நிமிடங்களில் பழனியும், கொடியும், மகிழினியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.
மருத்துவமனையில் மகிழினிக்கு சிகிச்சை தரப்பட்ட நிலையில்.சிகிச்சை அறைக்கு வெளியே நின்று பழனி அழுது கொண்டு இருந்தவருக்கு ஆறுதல் சொல்ல இயலாமல் கொடி தனித்து நின்றான்.
"சார். டாக்டர் உங்கள உள்ளே வர சொன்னாங்க” என்று செவிலி சொன்னதும். பழனி கொடியை பார்த்தவர்.
"நீயும் வா தம்பி” என்று அழைக்க. மறுக்க இயலாமல் கொடியும் உள்ளே சென்றான்.
“உக்காருங்க.” என்று மருத்துவர் சொல்லவும் அமர்ந்தார்கள்.
“டாக்டர். சித்ராவுக்கு பயப்படும்படி ஒண்ணுமில்லைங்களே.”
“அவங்களுக்கு இதுக்கு முன்னாடி இந்த மாதிரி அடிக்கடி மயக்கம் வந்து இருக்கா?”பழனி என்று பழனியிடம் கேட்டார்.
“அது” என்று அவர் தடுமாற,
“ஹாங். போன வாரம் கூட மயங்கி விழுந்துட்டாங்க டாக்டர். ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போய் ட்ரிப்ஸ் போட்டோம். அப்புறம் தான் நார்மலா ஆனாங்க” என்ற கொடிவீரன் பதிலில் பழனி அவனை யோசனையாகப் பார்த்தார்.
“ம் அவங்க ரெகுலரா காது மெஷின் யூஸ் பண்ணுறாங்க இல்ல” என்று மருத்துவர் கேட்கவும்,
“அது” என்று பதில் இல்லாது விழித்தார் பழனி.
“இல்ல டாக்டர். அவங்க ரெகுலரா யூஸ் பண்ணுறது இல்ல. தேவைக்குன்னா மட்டும் தான் யூஸ் பண்ணுவாங்க.”
“ஓ” என்றார் மருத்துவர்.
“என்ன டாக்டர் எதாவது பிரச்சனையா?”
“ம் பிரச்சனைன்னு சொல்ல முடியாது. ஆனா” என்று அவர் நிறுத்த, “என்ன டாக்டர்? எதுவா இருந்தாலும் சொல்லுங்க.” என்றான் கொடி.
“அவங்களுக்கு காதுல சின்னதா பிரச்சனை இருக்கு. அதனால தான் அடிக்கடி மயக்கம் வருது. நான் சில மாத்திரை எல்லாம் எழுதித் தரேன். அத கன்டினியூ பண்ண சொல்லுங்க. டக்குன்னு அதிகமா சத்தம் வர இடத்துல இருந்தா கூட அவங்களுக்கு மயக்கம் வர சான்ஸ் இருக்கு. சோ, அவங்கள டேப்லட்ஸ் கன்டினியூ பண்ண சொல்லுங்க.”
“மத்தபடி பயப்பட ஒரு பிரச்சனையும் இல்லையே டாக்டர்?”
“இல்ல சார். உங்க மனைவி நல்லா தான் இருக்காங்க. மாத்திரை மட்டும் மறக்காம தொடர்ந்து போடுங்க. நீங்க இப்போ அவங்கள வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்.” என்று மருத்துவர் சொன்னதும் கொடி முகம் மாறினான்.
“ஒரு நிமிடம் டாக்டர். அவங்க என் மனைவி இல்ல. என் நண்பனோட தங்கச்சி அவங்க” என்று அழுத்தமாக சொன்னான் கொடி.
“ஓ சாரி சார். அவங்கள பற்றிய இன்பர்மேசன் நீங்க சரியா சொன்னதும். அவங்க உங்க மிசஸ்னு நினைச்சேன். எனிவே நீங்க அவங்கள வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்.” என்று மருத்துவர் சொன்னதும், கொடி அந்த அறையில் இருந்து வெளியே வர, பின் தொடர்ந்து வந்தார் பழனி.
"யாரு என்னனு தெரியாம, இவர்களே ஒரு முறையை வச்சிடுவாங்க” என்று புலம்பினான் கொடி.
"தம்பி” என்று பழனி அழைக்க.
"ஹான் சார். நீங்க அவங்கள போய்ப் பாருங்க. நான் போய் மருந்து வாங்கிட்டு வரேன்” என்றான் கொடி.
"ம். சரிப்பா” என்று பழனி தலையசைத்தார்.
"சார் ஒரு நிமிஷம்” என்று கொடி பழனியை அழைக்க.
"சொல்லு தம்பி” என்று பழனி ஆர்வமாக கேட்டார்.
"இல்ல. அவங்கிட்ட போய் இந்த டாக்டர் கேனத்தனமா பேசுனத பற்றி எல்லாம் சொல்லி வைக்காதிங்க” என்று சொன்னான்.
"என்ன தம்பி சொல்ற நீ?” என்று புரியாமல் பழனி கேட்க,
"இல்ல சார். இந்த டாக்டர். அவங்கள என் மிசஸ்னு சொன்னதை எல்லாம் அவங்கிட்ட சொல்லிடாதீங்க. ஏற்கனவே அவங்களுக்கு என் மேல நல்ல மரியாதை. இப்போ இந்த டாக்டர் சொன்னது தெரிந்தா, அதோட என்னை அடிச்சே துரத்திடுவாங்க” என்று சலித்து கொண்டே சொன்னான் கொடி.
"ஐயோ தம்பி. சித்ரா பூவைப் போல மென்மையான பொண்ணுபா” என்று பழனி மகிழினிக்கு பரிந்து பேசினார்.
"அவங்க கிட்ட நீங்க ஒரு அறை வாங்கின பின்னாடி சொல்லுங்க சார். அவங்க பூவா புயலான்னு” என்று வாய்க்குள் புலம்பியப்படி கொடி மருந்து சீட்டை எடுத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அவனின் பேச்சை கேட்ட பழனிக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. எனினும் கொடியின் நடவடிக்கை, பழனிக்கு பிடித்து போனதாக தான் இருந்தது.
மகிழினி இருக்கும் சிகிச்சை அறைக்கு சென்ற பழனி. அவள் அருகில் சென்று அமர,
"அப்பா என்னாச்சு எனக்கு? எதுக்காக ஹாஸ்பிடலுக்கு எல்லாம் வந்திருக்கோம்?” என்று மகிழினி புரியாமல் கேட்டாள்.
“நீ திடிர்னு மயங்கி கீழே விழுந்துட்டமா. அதான் உன்னை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு வந்தோம். ஆமா உனக்கு அடிக்கடி மயக்கம் வருதாமே. ஏன்மா? என்னாச்சு உனக்கு.? என்று பழனி அக்கறையாகக் கேட்க.
"உங்களுக்கு யாருப்பா சொன்னது?” என்று தன் புருவத்தை சுருக்கினாள் மகிழினி.
"அது வந்து” என்று பழனி தடுமாற.
"என் அண்ணனோட ஃப்ரெண்டு சொன்னாரா?” என்று மகிழினி கேட்டதும்
"ஆமாமா. அந்த பையன் தான் சொல்லுச்சு. ஏன் என்ன ஆச்சு உனக்கு? ஏன் அடிக்கடி மயங்கி விழற?” என்று பதட்டமாக விசாரித்தார் பழனி.
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லப்பா. அங்க சட்டுன்னு பட்டாசு சத்தம் கேட்டுச்சு இல்ல. அதான் காது வலி எடுத்து, பின் தல வலிக்க ஆரம்பிச்சிடுச்சி. அப்போ தான் மயக்கம் வந்தது போல. ஆனா, என் முகத்துல தண்ணி தெளிச்சு இருந்தாளே நான் எந்திரிச்சிருப்பேனே. அதுக்காக எதுக்கு ஹாஸ்பிடல்க்கு எல்லாம் அழச்சிட்டு வந்தீங்க?” என்று மகிழினி கேட்க. அதே சமயம் கையில் மருந்துடன் கதவை தட்டிக் கொண்டு கொடி உள்ளே நுழைந்தான்.
"அப்பா இவரு” என்று மகிழினி கொடியை பார்க்க.
"நானும். இந்த தம்பியும் தான்மா, உன்ன ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு வந்தோம்” என்று சொன்னார் பழனி.
"ஐயோ என்னப்பா இது. வேல நேரத்துல இவரை எதுக்கு தொல்லை கொடுத்தீங்க. சாரி சார்” என்று கொடியை பார்த்து மன்னிப்பு கேட்டாள் மகிழினி.
"இருக்கட்டும்ங்க. இப்ப எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரித்தான்.
"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல சார். நான் நல்லா தான் இருக்கேன்” என்று மகிழினி தைரியமாக சொன்னதும்.
"அதான் பார்த்தேனே சட்டுன்னு மயங்கி கீழே விழுந்ததை. ஹ்ம் இந்தாங்க டாக்டர் உங்கள இந்த மாத்திரையை எல்லாம் கரெக்டா பாலோ பண்ண சொன்னாரு. கண்டிப்பா இத டெய்லி கன்டின்யூ பண்ணனுமாம். இல்லனா இப்படித்தான் அடிக்கடி மயக்கம் வருமாம்” என்று தன் கையில் இருந்த மருந்து பையை மகிழனியிடம் நீட்டினான் கொடி.
"மருந்து சீட்டு என்கிட்ட கொடுத்திருந்தால் நானே வாங்கி இருப்பேனே. உங்களுக்கு எதுக்கு வீண் செலவு” என்று மகிழினி கேட்க,
"பரவால்லைங்க. நான் வாடகைல கழிச்சு கிட்டே உங்களுக்கு மீதி பணத்தை கொடுக்கிறேன்” என்று கொடி சொன்னதும், மகிழினி சிரித்துக் கொண்டாள்.
"சித்ரா. தம்பி மட்டும் இல்லனா ரொம்ப கஷ்டமா இருந்துருக்குன்மா. நீ திடீரென மயங்கி விழுந்ததும், எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அப்புறம் நம்ம வந்த ஆட்டோல தான், தம்பியும் நானும் உன்ன ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு வந்தோம்” என்று நடந்த விவரத்தை பழனி சொன்னார்.
"எனக்கு ஒன்னும் இல்லப்பா. சின்ன மயக்கம் தான். இதுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றீங்கன்னு தெரியல” என்று மகிழினி. பழனியை கடிந்து கொள்ள.
"ஏங்க உங்களுக்கு சின்ன மயக்கமெல்லாம் இல்ல. நீங்க கண்டிப்பா இந்த மாத்திரையை கண்டினியூ பண்ணனுமாம். இல்லனா பிரச்சனை பெருசாயிடும்னு டாக்டர் சொல்லி இருக்காரு. ஒழுங்கா அந்த மாத்திரையை எல்லாம் போடுற வழிய பாருங்க” என்று கொடி உரிமையாக மகிழினியிடம் பேசுவதை பார்த்து, பழனி மனதளவில் மகிழ்ச்சி அடைந்தார்.
"சரி சரி. நான் மாத்திரையை போடுறேன். ஆனா, நம்ம ஹாஸ்பிடலுக்கு வந்ததையெல்லாம் நீங்க பாட்டிகிட்ட சொல்லக்கூடாது” என்று மகிழினி அன்பாக கொடிக்கு உத்தரவிட்டாள்.
"என்ன. சொல்லக்கூடாதா? என்னங்க விளையாடுறீங்களா? உங்களுக்கு உடம்புல பிரச்சனைனா அத கண்டிப்பா உங்க பாட்டிக்கு தெரியப்படுத்தணும்ங்க. அப்போதானே அவங்க உங்களை நல்லா பாத்துப்பாங்க. அதெல்லாம் முடியாது. கண்டிப்பா நான் உங்க பாட்டிகிட்ட இன்னைக்கு நடந்த விஷயத்தை சொல்லுவேன்” என்று கொடி சொன்னான் .
"நான்தான் என்னைப் பற்றிய விஷயத்தை எதுவும் சொல்லாதீங்கன்னு சொல்றேன் இல்ல.பி ன்ன என்ன?” என்று கோபமாக கண்களை உருட்டினாள் மகிழினி.
"பாத்துங்க. கண்ணு ரெண்டும் வந்து கீழே விழுந்துடப்போகுது. ஹ்ம் நான் ஒரு பைத்தியக்காரன். எவ்வளவு பட்டாலும் எனக்கு புத்தி வரமாட்டேங்குது. நீங்க உங்க பாட்டிகிட்ட சொன்னாலும் சரி, சொல்லாட்டியும் சரி. எனக்கு என்ன வந்துச்சு. சார் நான் வெளிய நிக்கிறேன். நீங்க அவங்கள அழச்சிட்டு வாங்க. அப்போ என்னமோ சொன்னிங்களே பூவுன்னு. இவங்க பூ இல்ல. பூகம்பம்” என்று கொடிவீரன் பழனியிடம் கடுப்பாக பேசுவதை பார்த்து மகிழினியின் முகம் மாறியது.
"அப்பா அவரு என்ன சொல்றாரு? என்னது பூவு, புயல்னு? எனக்கு ஒன்னும் புரியலையே” என்று மகிழினி பழனியை கேட்க.
பழனி சிரித்துக்கொண்டே, "அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. மருந்து பையை எடுத்துக்கோ. நம்ம கிளம்பலாம்” என்று சொன்ன பழனியை பின் தொடர்ந்து வந்தாள் மகிழினி.