New member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
Chapter 1
நெஞ்சம் மறந்திடாத
உன் நினைவுகளில்
எங்கே என்னை ஒட்ட வைத்திருக்கிறாய்
என்று தேடி பார்க்கிறேன்...
மதிய வெய்யில் உச்சியில் மண்டையில் சம்மட்டியால் ஓங்கி அடிப்பது போல வலிக்க வைத்து கொண்டிருந்தது. ஒரு கையில் மருந்துகளும் மறு கையில் சில அத்தியாவசிய மளிகை பொருட்களும் இருக்க, முகத்தில் வழிந்த வியர்வையை தோள் பட்டையிலேயே துடைத்து கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தாள் தேவயானி.
காலில் இருந்த ரப்பர் செருப்பு அடிக்கும் வெயிலுக்கு உருகி காலோடு ஒட்டி கொண்டுவிடும் போல இருந்தது. எப்படியும் வீட்டிற்கு சென்றுவிடும் நோக்கோடு வேக நடையை எட்டி போட்டவளை தடுத்தது ஒரு குரல்.
“தேவி நான் வேணும்னா தூக்கிட்டு வந்து தரட்டுமா”... பக்கத்து வீட்டு கற்பகம் கேட்டாள்.
“பரவாயில்லைக்கா, இதோ பக்கத்துல வந்தாச்சே இருக்கட்டும்”... என புன்னகை முகமாக மறுத்துவிட்டு வீட்டை அடைந்தாள்.
உள்ளே நுழைந்ததும் பைகளை ஓரமாக வைத்து விட்டு, மின் விசிறியை சுழல விட்டவள் அப்பாடா என்று சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள். வெளியே இருந்த தகிப்பிற்கு இந்த மின்சார இயந்திரத்தின் காற்று எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது அவளுக்கு.
அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவை எடுத்து முகம், கழுத்து துடைத்துகொண்டாள். இரண்டு நிமிட இளைப்பாறுதலுக்கு பிறகு எழுந்து சென்றவள் தண்ணீரை எடுத்து குடித்தாள். மண் பானையில் அடியில் கொஞ்சம் ஆற்று மணலை கொட்டி அதில் தண்ணீரை தெளித்து அதன் மீது பானையை வைத்திருக்க தண்ணீர் சில்லென இருந்தது.
இந்த காலத்திலும் ஃபிரிஜ் இல்லாத வீடா என்று கேட்காதீர்கள், அவள் வீட்டில் ஃபிரிஜ் இல்லை அவ்வளவு தான்.
போகும்போதே கஞ்சி வைத்து விட்டு தான் சென்றிருந்தாள். அடிக்கும் வெயிலுக்கு இன்னும் சூடாக தான் இருந்தது. அதில் கொஞ்சம் எடுத்து கிண்ணத்தில் போட்டு ஸ்பூன் ஒன்றை எடுத்து கொண்டாள். ஒரு தட்டில் கொஞ்சம் எலுமிச்சை ஊறுகாய் வைத்து கொண்டு அந்த வீட்டில் இருந்த ஒரே ஒரு படுக்கையறைக்கு சென்றாள்.
அங்கே படுக்கையில் கிடந்தார் சோமசுந்தரம். நன்றாக ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்த மனிதர் இன்று படுத்த படுக்கையாக இருக்கிறார். கைகால்கள் செயலிழந்து போய் விட்டது. அப்பாவின் அருகில் சென்றவள் “அப்பா”...என்று தட்டி எழுப்பினாள்.
ஒளி மயங்கிய கண்களை திறந்தவருக்கு மகளை கண்டதும் கண் கலங்கியது. அப்பா என அவரை முறைத்தவள் அவர் அருகிலேயே அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த கஞ்சியை ஊட்ட துவங்கினாள்.
பெயருக்கு தான் ஊறுகாய் அதை துளி அளவுக்கு மட்டுமே எடுத்து கொண்டாள்.
நான்கு வாய் வாங்கிய சோமு, “அம்மாடி இன்னும் கொஞ்சம் ஊறுகாய் கொடுடா வாய்க்கு பிடிக்கவே இல்லை”... என்றார் கெஞ்சலாக.
“அது சரி ஊறுகாய் சாப்பிட்டா அப்பறம் வயிறு எரியும், சும்மா கொஞ்சம் தான்”... என்று கூறிக்கொண்டே இன்னும் கொஞ்சம் அளவை அதிகப்படுத்தி கொடுத்தாள்.
மகள் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார். ஏனெனில் அவள் சொல்லி அவர் கேட்காமல் விட்ட விஷயம் தான் இன்று அவள் வாழ்வில் நெருஞ்சி முள்ளாக குத்திக் கொண்டிருக்கிறதே. எப்போதும் மகள் சொல் கேட்பவர் தான் ஆனால் அந்த ஒரு விஷயத்தில் மட்டும் கேட்காமல் போனார். அன்று ஏதோ பேய் வந்து அவர் மூலையில் அமர்ந்து கொண்டு அவரை அவ்வாறு செய்ய வைத்ததோ என்னவோ. தவறு செய்தவர்கள் அடுத்தவர் மீது பழியை போடுவது தானே வழக்கம். அப்படி யாருமே கிடைக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது விதி அதன் மீது பழியை போட்டு விட வேண்டியது தான்.
அவர் கொஞ்சம் யோசித்து இருக்கலாமோ என்று காலம் கடந்து சிந்திக்க செய்தது. காலம் கடந்த ஞானம் ஒரு போதும் பலன் தராது என்ற பெரியார் வார்த்தைகள் அவருக்கு தெரியவில்லை போலும்.
மகள் ஊட்ட ஊட்ட வாயை திறந்து வாங்கிக்கொண்டவருக்கு, நினைவுகள் பழையதை அசை போட துவங்கியது. அவர் எண்ணவோட்டம் அறிந்தவளாக அப்பா என்றழைத்து அவர் சிந்தனையை தடை செய்தாள்.
அவர் கண்கள் கலங்க மகளை பார்க்க, வேண்டாம் என்பது போல இடவலமாக தலையை அசைத்தவள் ஈர துணியால் அவர் வாய் முகம் எல்லாம் துடைத்து விட்டு, டேபிள் ஃபானை அவர் பக்கமாக இழுத்து வைத்து விட்டு எழுந்து வெளியே வந்தாள்.
அங்கேயே அமர்ந்து இருந்தால் எங்கே தானும் கழிவிரக்கம் கொள்ள துவங்கி விடுவோமோ என்ற பயம் அவளுக்கு. அடுத்தவர் பார்க்கும் அனுதாப பார்வை எத்தனை வலியை கொடுக்குமோ அதை விட கொடிய வலியை கொடுக்கும் இந்த சுய பச்சாதாபம்.
வாசலுக்கு வந்தவள் காலையில் உலர வைத்த துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து அப்படியே மடித்து கொண்டிருந்தாள்.
இன்றும் வேலை தேடி சென்றாள். வழக்கம் போல எதுவும் கிடைக்கவில்லை. வேலை என்னவோ இருக்கத்தான் செய்கிறது ஆனால் அவளுக்கு தான் தோதுபடவில்லை.
அவள் என்ன கலெக்டர் அலுவலகத்திலா வேலை தேடினாள் இல்லையே, ஏதோ துணிக்கடை, சூப்பர்மார்க்கெட், பாத்திரக்கடை அது தானே. அங்கே வேலை இருந்தது ஆனால் கண்டிஷன் தான் ஒத்து வரவில்லை. வேலை தருபவர்கள் கண்டிஷன் போட்டால் பரவாயில்லை. வேலை கேட்பவள் கண்டிஷன் போட்டால், அவர்களும் தான் என்ன செய்வார்கள். ஆனால் அவள் நிலை அப்படியாயிற்றே.
காலையில் பதினொரு மணியளவில் ஒருமுறை, மதியம் மூன்று மணிக்கு ஒரு முறை என வீட்டிற்கு சென்று வர அனுமதி கேட்டாள். அது எப்படி முடியும், அதான் மதியம் லஞ்ச் பிரேக் இருக்கே அதுல வீட்டுக்கு போய்ட்டு வாங்க என்று கூறினார்கள் கடை உரிமையாளர்கள். அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும் என கேட்டவளை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு வேலையே இல்லை என கையை விரித்து விட்டனர்.
உடல் நலம் முடியாத அப்பா இருக்கிறார் என்று கூறி அனுதாபத்தை தேடி கொள்ள அவளுக்கு விருப்பம் இல்லை. அதனாலேயே வேலை கிடைக்கவில்லை. அவர்கள் இருக்கும் வீட்டிற்கும் கடைதெருவிற்கும் எப்படியும் இருபது நிமிட நடை இருக்கும். அதற்கே அவள் அரக்க பறக்க ஓடி வந்தால் கூட எப்படியும் பத்து நிமிடம் ஆகி விடும். அப்பாவை அப்படியே விட்டு விட்டும் இருக்க முடியாது. என்ன செய்வது என்ன செய்வது என்ற யோசனை மாம்பழத்தில் இருக்கும் வண்டாக மண்டையை குடைந்தது. கையில் இருக்கும் இருப்பு வேறு குறைந்து கொண்டே சென்றது. இன்னும் எத்தனை நாட்களுக்கு வரும் என்று நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது.
மடித்த துணிகளை எடுத்து கொண்டு உள்ளே செல்ல திரும்ப, “தேவி” என அழைத்து கொண்டே வந்தாள் கற்பகம்.
தனது கவலை எல்லாம் ஒதுக்கி வைத்தவள், “வாங்கக்கா”... என புன்னகை முகமாக அழைத்தாள்.
“அப்பா சாப்பிட்டாரா” என கேட்டவள் அவளுடனேயே உள்ளே வந்து அமர்ந்தாள்.
“ஆமாக்கா இப்போ தான் கொடுத்தேன், தூங்கராரு. நீங்க சாப்பிட்டீங்களா” என்று கேட்டாள்.
“ஆ அதெல்லாம் ஆச்சு, ஆமா வேலை தேடி போனியே என்ன ஆச்சு”...என கேட்டபடியே அவளுடன் சேர்ந்து துணிகளை மடித்தாள். இங்கே வந்ததில் இருந்து அவளுடன் மட்டும் தான் கொஞ்சம் பழகி கொண்டு இருக்கிறாள்.
“ம்ச்”... என உதட்டை பிதுக்கினாள் தேவி.
“சரி நான் ஒரு இடத்துல வேலை சொல்றேன் போறியா...”
“அதுக்கென்னக்கா, போய் பார்க்கறேன் சொல்லுங்க”...என ஆர்வமாக கேட்டாள் தேவி.
“இங்க பாரு நான் சொல்றதை ஒரு முறைக்கு n முறை நல்லா கேட்டுக்கோ, அதுக்கப்புறம் முடிவு பண்ணு”...என்றாள் கற்பகம்.
“என்னக்கா பீடிகை எல்லாம் பலமா இருக்கு. எனக்கிருக்க பிரெச்சனை உங்களுக்கு தெரியும். அப்பாவை வந்து போய் பார்த்துக்க கொஞ்சம் பர்மிஷன் தரனும். மத்தபடி சம்பளம் கம்மியா இருந்தாலும், அதிக நேரம் வேலை இருந்தாலும் கூட நான் செய்வேன், அவ்வளவு தான் என்னோட டிமாண்ட். அதுக்கு எந்த இடம்னாலும் சொல்லுங்க போறேன்”...என்றாள் பளீரென.
“நம்ம தெருவோட அந்த பக்கம் கடைசில இருக்குல்ல கல்லு கம்பெனி அங்க தான் வேலை”... என்றவளை அமைதியாக பார்த்தாள் தேவி.
“ஹே தப்பா நினைக்காதப்பா, உன்னை போய் கல்லு சுமக்கற வேலைக்கு போக சொல்வேனா. அங்க அக்கவுட்ன்ஸ் பார்க்க ஆள் வேணுமாம், என் புருஷன் அங்க தானே டிரைவர் வேலை பார்க்கராறு அவர் தான் சொல்லிட்டு இருந்தாரு. அதான் கேட்கறேன் போறியா”... என்றாள் தயக்கமாக.
“அக்கா நான் பார்த்ததுக்கு அர்த்தம் அது இல்லை. அங்க வேலை பார்க்கறதை நான் தப்பா நினைக்கலை. ஆனா அந்த ஓனர் ஏதோ பொண்ணுங்க விஷயத்துல சரியில்லைன்னு எல்லாரும் பேசறாங்களே. அதான்”... என இழுத்தாள்.
“ஏன் தேவி, நீ இங்க வந்ததுல இருந்து உன்கிட்ட பழகறேன், உன் குணம், நீ படர கஷ்டம் எல்லாம் தெரியும். அப்படி இருந்தும் நானே உன்னை அந்த மாதிரி பிரெச்சனையில மாட்டி விடுவேனா”... என கேட்டாள் கற்பகம்.
“இங்க பாரு எனக்கு அந்த ஓனரை நேரடியா பழக்கம் இல்லை. ஆனால் என் வீட்டுக்காரர் சொன்னதை வச்சு சொல்றேன். அவர் யாரையும் கட்டாயப்படுத்தி கையை புடிச்சு இழுக்கற ஆள் இல்லை. அங்க வேலை செய்யற பல பொம்பளைங்க கூட நல்ல மாதிரி தான் சொல்லிருக்காங்க. நீயும் அதுக்கு ஏத்த மாதிரி நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இருக்கற ஆள். அதனால எந்த பிரெச்சனையும் வராது. நம்ம வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கு. அப்பாவுக்கு ஏதாவது வேணும்னா அஞ்சு நிமிஷத்துல ஓடி வந்து பார்த்துட்டு போகலாம். அதனால தான் சொன்னேன். உனக்கு சரிப்படுமா பாரு”... என்றாள் முடிவை அவள் பக்கமே திருப்பி விட்டு.
சற்று நேரம் அமைதியாக இருந்த தேவி "சரிக்கா நான் கொஞ்சம் யோசிச்சுட்டு சொல்லட்டுமா”... என்று கேட்டாள் தேவி.
“நல்லா யோசி, நாளைக்கு காலையில நேரா கூட போய் பாரு. அப்பறம் முடிவு பண்ணு. அடுப்புல குழம்பை போட்டுட்டு வந்தேன். நான் போய் பார்க்கிறேன்”... என ஓடினாள் கற்பகம்.
மதியம் வீட்டிற்கு வந்த கணவனிடம், தேவியிடம் பேசியதை கூறினாள் கற்பகம்.
“ஏண்டி உனக்கு என்ன பைத்தியமா. அந்த பொண்ணை போய் அங்க வேலைக்கு போக சொல்ற” என்றான் கத்தலாக.
“ஏங்க, நீங்க தானே அங்க அக்கவுண்ட்ஸ் பார்க்க ஆள் வேணும்னு பார்த்துட்டு இருக்கறதா சொன்னீங்க. அந்த பொண்ணு பாவம் அப்பாவை பார்த்துட்டு வேலைக்கு போக முடியாம செலவுக்கு திண்டாடுது. அதான் சொன்னேன்”...
“கற்பகம் நீ தப்பான எண்ணத்தில சொன்னேன்னு நானும் சொல்லலை. ஆனா அவன் ஒரு முசுடுடி இந்த பொண்ணை எப்படி வேலைக்கு வச்சிப்பான்” என்றான் யோசைனயாக.
“ஏங்க அதெல்லாம் பார்த்தா வேலைக்கு போக முடியுமா, நான் வேற சொல்லிட்டேன்க. நீங்க அவர்கிட்ட சொல்லி வைங்க, அந்த பொண்ணு போய் பார்க்கட்டும் அப்புறம் வேலை குடுக்கறதும், வேலைக்கு போறதும் அவங்க அவங்க விருப்பம்”... என்றாள்.
“ம்ம் சரி சொல்லி வைக்கறேன்”... என்ற கோபால் என்ன சொல்ல போறானோ என்ற எண்ணத்துடனேயே வேலைக்கு சென்றான்.
அப்பாவுக்கு கொடுத்த கஞ்சியையே தானும் தம்பளரில் ஊற்றி குடித்தவள், அப்படியே தரையில் சரிந்து படுத்தாள்.
அவளும் எத்தனையோ இடத்தில் வேலை கேட்டு பார்த்து விட்டாள். முடிக்காத டிகிரியை வைத்து கொண்டு அவளால் எந்த கம்பெனி வேலைக்கும் செல்ல முடியாது. அப்படி இருக்கையில் சிறு வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிற நேரத்தில், இந்த வேலைக்கு ஏன் முயற்ச்சி செய்ய கூடாது.
போகும் இடமெல்லாம் எல்லாரும் சரியாக இருப்பார்கள் என்று என்ன நிச்சயம். நாம சரியா இருந்தா போதாதா, யார் எப்படி இருந்தா நமக்கென்ன. மீன் வித்த காசு நாறும் அதே போல பூ வித்த காசு மணக்கவா செய்யுது. அந்த வேலைக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிட்டா போதும். நாளைக்கு போய் தான் பார்க்கலாமே. காலையில் எழுந்ததுமே கற்பகம்க்கா கிட்ட சொல்லி வச்சிடனும் என முடிவு செய்தவள் அப்படியே உறங்கி போனாள்.