New member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
Chapter 4
நன்றி கூறி ஒதுங்கிக்கொள்ள,
இது பயணத்தில் ஏற்பட்ட பந்தமல்ல.
ஜென்ம ஜென்மமாய்
தொடர்ந்து வரும் பந்தம்.
இடையில் ஏற்பட்ட
தடங்களுக்கு மட்டுமே,
வருந்தி கொள்ளலாம்...
தந்தைக்கான வேலைகளை முகம் கோணாமல் செய்து கொண்டிருந்த மகளை பார்த்தார் சோமு. அவர் கண்கள் தானாக கலங்க “என்னப்பா” என்று கேட்டாள்.
“ரொம்ப கஷ்டப்பட்டியாம்மா”
இல்லை என்பதாக தலையசைத்தவளின் காதுகளை கவனித்தார். அவள் காதில் அணிந்திருந்த ஒன்றை பூக்கம்மல் காணாமல் போய்ருந்தது. அதை கண்டதும் என்ன நடந்திருக்கும் என புரிந்து கொண்டார்.
“நான் ஒரேயடியா போய்ட்டா கூட நல்லா இருக்கும், இருந்து உனக்கு பாரமா தான் இருக்கேன்”
அவரை விரக்தியாக பார்த்தவள், “நான் உயிர் வாழ ஒரே காரணம் நீங்க தானேப்பா நீங்களும் இல்லைன்னா நான் மட்டும் என்ன செய்ய போறேன்”... என்றாள் தெளிவாக.
மகள் சொல்வது அவருக்கு புரிந்தது, அவள் அவருக்காகத்தான் உயிரோடு இருக்கிறாள், அவள் வாழ வேண்டும் என்றால் அவர் இருக்க வேண்டும். அவள் பேச்சை திசை திருப்ப எண்ணியவர் “பசிக்குதும்மா”... என்றார். அவருக்காக செய்து வைத்த உணவை எடுத்து வந்து ஊட்டினாள்.
அவர் உண்டு முடித்ததும், “அப்பா நேத்து உதவி செய்தாங்கல்ல அவங்களுக்கு தாங்க்ஸ் சொல்லி இந்த காசை கொடுத்துட்டு வந்திடறேன். நீங்க கொஞ்சம் தூங்குங்க” என்றாள்.
“சரிம்மா, நான் கூட நன்றி சொன்னதா சொல்லிடு” என்றார் அவரும். பிறகு மருந்தின் வீரியத்தில் அவர் உறங்கி விட, கற்பகத்திடம் சென்றாள்.
“அக்கா வரீங்களா, இந்த காசை கொண்டு போய் கொடுத்துட்டு வந்திடலாம்”... என்று கேட்டாள்.
“நான் தலைக்கு குளிக்கணும் தேவி எப்படியும் லேட் ஆகும், உங்கண்ணன் அங்க தான் இருப்பாரு, பயமில்லாமல் போய்ட்டு வந்திடேன்”... என்று கூறினாள்.
இவள் தான் பயமின்றி அறைந்து விட்டே வந்தாளே, கோபால் மனைவியிடம் இது பற்றி எதுவும் சொல்லவில்லை என்று புரிந்தது. அதனால் தனியாக சென்று தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கிளம்பி சென்றாள்.
அவள் சென்றபோது கோபால் அங்கே இல்லை, யாரிடம் என்ன கேட்பது என்று புரியாமல் நின்றாள். பலரும் அங்கே வேலை செய்து கொண்டிருந்தார்கள் தான் ஆனால் ஓடிகொண்டிருந்த மெஷின் சத்ததில் இவள் யாரை கூப்பிட்டாலும் காதில் விழாது. எப்படி கேட்பது என புரியாமல் பார்க்க, அன்றைக்கு அவள் அவனை பார்த்த அந்த அறை கதவை திறந்து கொண்டு அவனே வெளியே வந்தான்.
அன்று அவள் பார்த்த காட்சி கண்ணுக்குள் வந்து போக, ஒரு நொடி திடுக்கிட்டவள் அவனை பார்த்து அப்படியே நின்றாள். வெளியே வந்தவனோ அவளை எதிர் பார்த்து இருந்ததை போல எந்தவித அலட்டலும் இல்லாமல் வேறு ஒரு அறைக்குள் நுழைந்தான்.
நன்றி கூற வேண்டிய கடமையும், மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயமும் அவளுக்கு தானே, அவன் பின்னேயே சென்று வாசலில் நின்றாள். அவளை பார்த்தவன் நோட்டு புத்தகத்தை எடுத்து வைத்து கொண்டு அமர்ந்து விட்டான்.
ஒரு ஆர்ம் கட் பனியனும், அழுக்கு லுங்கியும் தான் அணிந்திருந்தான். ஃபேன்க்கு கீழே அமர்ந்து இருந்தாலுமே வியர்வையில் நெற்றி நிறைந்து இருந்தது. திமிர் பிடிச்சவன் போல என நினைத்து கொண்டவள், “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”... என்றாள்.
இப்போது தலையை உயர்த்தி அவளை பார்த்தவன் பார்வை தலைமுதல் கால்வரை அளவிட்டது. இது என்ன பார்வை எக்ஸ்ரே போல என்று மனதினுள் திட்டி கொண்டாள். மீண்டும் அவன் தலை நோட்டுக்குள் புதைத்து கொள்ள, “நீங்க ஹாஸ்பிடல்ல கொடுத்த பணம், கொஞ்சம் கம்மியா இருக்கு சீக்கிரமே நான் திரும்ப கொடுத்துடறேன். அப்பறம் உங்களை அடிச்சதுக்கு சாரி, அப்பாவுக்கு முடியலைன்னதும் பயந்து போய்ட்டேன், அந்த நேரத்தில நீங்க பேசினது ரொம்ப கஷ்டமா போச்சு அந்த கோபத்துல தான், சாரி”... என்றாள் மீண்டும்.
“பணத்தை திரும்ப கொடுத்துடுவ சரி அடிச்சதுக்கு சாரி சொன்னா போதுமா”... என்றான் நிமிர்ந்து பார்க்காமலே
வேற என்ன செய்ய முடியும் என அவள் நினைக்க, “ஆமா பணத்தை எப்படி குடுப்ப”... என கேட்டான். இப்போது இருக்கையில் ஒரு பக்கமாய் சாய்ந்து கொண்டு இடது கையால் தாடையை தேய்த்து கொண்டிருந்தான்.
அவன் கேள்வி ஒரு பக்கம் இருக்க, பார்வை அவளை மேய்ந்ததை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை.
“எப்படியோ கொடுத்துடுவேன், கொஞ்சம் நாள் பொறுத்துகோங்க”.. என்றாள் பல்லை கடித்து கொண்டு.
“ம்ம் அதான் எப்படி, ஏதாவது வேலை கிடைச்சி அதுக்கப்புறம் குடுக்கணும்னா கூட எப்படியும் ரெண்டு மாசம் ஆகுமே. அது வரைக்கும் வட்டி இல்லா கடன் கொடுக்க நான் என்ன தர்ம ஸ்தாபணமா நடத்தறேன்”... என்று நக்கலாக கேட்டான்.
இதற்கு என்ன பதில் சொல்வது, அவன் கட்டிய ஐம்பது ஆயிரத்துக்கு, இவள் கம்மலை விற்று கையில் இருந்த பணத்தை எல்லாம் புரட்டி போட்டு கொடுக்க இருபது ஆயிரம் தான் வந்தது. இன்னும் முப்பதாயிரம் கொடுக்க வேண்டுமே. அவன் சொன்னது போல வேலை கிடைத்து பணத்தை புரட்ட எப்படியும் இரண்டு மாதம் ஆகும் தான். என்ன செய்வது என அவள் திகைக்க, “நீ தானே கோபால் கிட்ட வேலை கேட்டு இருந்த”... என கேட்டான் சட்டென்று.
தெரிந்து கொண்டே தான் கேட்கிறான் என்று புரிந்தாலும் தலை ஆமாம் என்று அழகாக ஆடியது. அவன் பார்வை கம்மல் இல்லாத அவள் வெற்று காதுகளுக்கு சென்று மீண்டது.
“சரி அப்போ நாளையில இருந்து வேலைக்கு வந்திடு, உன் சம்பளத்தில இருந்து நான் என்னோடதை வசூல் பண்ணிக்கறேன்”... என்றான் கறாராக.
அவள் யோசித்து நிற்க, “அப்பறம் அந்த அடி அதை எப்போ எப்படி வசூல் பண்ணனும்னு எனக்கு தெரியும்”... என்றான் கன்னத்தை தேய்த்து கொண்டே.
அவன் பதிலில் இவள் திகைத்து நிற்க, எழுந்து சென்று விட்டான். சில நொடிகள் அங்கேயே நின்றவள் மெதுவாக அந்த இடத்தை விட்டு வெளியேறினாள். தூரத்தில் வேலை செய்துகொண்டிருந்தபடியே அவள் செல்வதையே பார்த்தவன் கண்களில் என்ன இருந்தது என்று தெரியவில்லை.
வீட்டிற்கு வந்தவளுக்கு அவனின் பார்வை சொல் செயல் எதுவுமே சரியாகபடவில்லை, ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாகவே தெரிந்தது. ஒரு நேரம் விழுங்குவது போல பார்க்கிறான், அதேபோல கண்டு கொள்ளாமலும் இருக்கிறான். வேலைக்கு வர சொல்லி உபகாரம் செய்கிறான், அவனுக்கான வசூலிலும் கறாராக இருக்கிறான். அன்று குடித்துவிட்டு யாரோ ஒரு பெண்ணுடன் இருந்தான், அது அவன் சொந்த விஷயம். ஆனால் உதவி என்று கேட்டபோது அலட்சியம் காட்டினான். பிறகு அவனே வந்து உதவியும் செய்தான். எப்படி பார்த்தாலும் முரணாகவே இருக்கிறானே என்று யோசித்து கொண்டிருந்தாள்.
அப்போது உள்ளே வந்த கற்பகம் “என்ன தேவி காசு கொடுத்திட்டியா, மிச்ச காசுக்கு என்ன சொன்னாரு”..என கேட்டபடி அருகில் அமர்ந்தாள்.
அவள் வந்ததையோ கேள்வி கேட்டதையோ அருகில் அமர்ந்ததையோ கவனிக்காமல் சிந்தனையில் இருந்தவளை, இரண்டுமுறை அழைத்து பார்த்தவள், தேவி என்று கையில் தட்டினாள்.
உறக்கதில் இருந்தது போல விழித்தவள் “அக்கா சொல்லுங்க”..என்றாள்.
“நல்லா கேட்ட போ, என்ன நினைப்புல இருக்க. என்ன சொன்னாரு வாசு”..என கேட்டாள்.
“எந்த வாசு”
“அதான் பணம் கொடுக்க போனியே அவர் தான்”
“வேலைக்கு வர சொன்னாருக்கா” என்றாள் சுரத்தே இல்லாமல்.
“சூப்பர், அதுக்கு ஏன் முகத்தை இப்படி சோகமா வச்சிருக்க” ஆர்வமானாள் கற்பகம்.
“அக்கா வேலை செய்யற இடத்தில உதவி கேட்கலாம், ஆனா உதவி செஞ்சவங்ககிட்ட வேலைக்கு போறது சரியான இருக்குமான்னு தெரியலை” என்றாள்.