New member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
Chapter - 9
நிலவுக்கும், உனக்கும்
என்ன போட்டி?
இருவருமே எனைத்
தொடர்ந்து வந்தாலும்
நெருங்கி வர மறுப்பதேன்!
“இங்கே பாருங்க உங்க கணக்கு சரியில்லை” நிதானமாக கூறினாள் தேவி.
“அதெப்படி நீங்க சொல்லலாம் இத்தனை நாள் நாங்க சொல்றது தான் கணக்கு, திடீர்னு வந்து நீங்க சொன்னா நான் கேட்கனுமா” தனது குட்டு வெளிபட்டு விடுமோ என்ற பயத்தில் எகிறி பேசினான் வேலு.
“இத்தனை நாள் எப்படியோ எனக்கு தெரியாது, ஆனா நீங்க சொன்ன கணக்கும் நான் பார்த்த கணக்கும் வேற வேறயா இருக்கு” அதை எப்படி நான் எடுத்துக்க முடியும் சொல்லுங்க.”
“அப்போ நான் பொய் கணக்கு சொல்றேன்னு சொல்ல வரீங்களா”
“ஆமா, அதான் உண்மை”
“ஏம்மா நீ இங்க வந்து கொஞ்சம் நாள் தான் ஆகுது. அதுக்குள்ள என்னமோ எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசற” நக்கல் பேச்சு அவனிடம் இருந்து வந்ததும் கோவம் துளிர்விட்டது தேவிக்கு.
“முதல்ல நீ வா போன்னு ஒருமையில பேசறதை நிறுத்திகோங்க. நான் மரியாதை கொடுத்துதானே பேசறேன் அதே மரியாதையை நீங்களும் கொடுத்து பழகுங்க. அப்பறம் நியாயத்தை சொல்ல ஆதி காலத்தில இருந்து இருக்கணும்னு அவசியமில்லை. யார் எவ்வளவு நாள் வேலை செய்தாலும் நியாயம் என்னவோ அதை தான் சொல்ல முடியும்.” என்றாள் பொறுமையை இழுத்து பிடித்துகொண்டு.
“என்ன பெரிய நியாயத்தை சொல்ல வந்துட்ட அப்படி என்ன நாங்க அநியாயமா இங்கே கொள்ளை அடிச்சுக்கிட்டு இருக்கோம்” என கொடி பிடிக்க துவங்கினான்.
“நான் மத்தவங்களை பத்தி பேசலை, நீங்க செஞ்ச தப்புக்கு எதுக்கு மத்தவங்களை கூட்டு சேர்க்கரீங்க”
“நீ எங்க எல்லாரையும் சேர்த்து தான் சொல்ற” அவன் மட்டும் தனியாக நின்றால் வேலைக்கு ஆகாது என்று மற்றவர்களையும் கூட்டு சேர்த்து கொள்ள துவங்கினான். ஏற்கனவே இவளால் தான் தன்னுடைய ஓசி சாப்பாட்டிற்கு பங்கம் வந்து விட்டது என அவள் மீது கடுப்பில் இருந்தவனுக்கு, கொஞ்சம் கணக்கை கூட்டி சொல்லி சம்பாதிப்பதையும் கண்டு பிடித்து விட்டாளே என்ற எரிச்சலும் சேர்ந்து கொண்டது.
“மத்தவங்க யார் கணக்கும் தப்பா இல்லை உங்க கணக்கு மட்டும் தான் தப்பா இருக்கு”
“ஆமா இப்போ என்னை மட்டும் குத்தம் சொல்லுவ, அப்பறம் எல்லாரையும் குத்தம் சொல்லுவ. அது தானே உன்னோட திட்டம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா எல்லாரையும் வெளியே அனுப்பிட்டு, வாசு அண்ணாவை மயக்கி கைக்குள்ள போட்டுக்கிட்டு, இந்த இடத்தை வித்து எல்லாத்தையும் ஆட்டைய போடலாம்னு பிளான். எல்லாரும் நைட்ல வருவாளுங்க இது பகல்லயே வந்து மினுக்கிட்டு அவரை வலைக்க பார்க்குது” என கூறிக்கொண்டே சென்றவன் அம்ம்மா..... என அலறலுடன் அவள் காலடியில் சென்று விழுந்தான்.
அவன் பேசிய பேச்சில் முகம் சிறுத்து போனவள் கலங்கிய கண்களை அடக்கி கண்ணீரை வெளியே விடாமல் தடுத்து நிறுத்த முயன்று கொண்டிருந்தாள். ஒரு பெண் தங்களை கேள்வி கேட்டு விட்டால் அதை பொறுத்து கொள்ள முடியவில்லை என்றால் அவள் குணத்தை, நடத்தையை இறக்கி பேசினாலே போதும் என்ற எண்ணம் இவர்களுக்கு எப்போது தான் போகும் என நினைத்து கொண்டிருக்க, அடுத்த நொடி முதுகில் மிதி வாங்கியவன் அவள் காலடியில் சரணடைந்தான்.
சிமெண்ட் படிந்திருந்த லுங்கியை உயர்த்தி கட்டிக்கொண்டே அங்கே வந்து நின்றான் வாசு. அய்யனார் போன்ற உருவத்துடன் விழிகள் சிவக்க நின்றவனை பார்த்து அங்கிருந்த அனைவருமே ஓரடி பின்னே நகர்ந்திருக்க, காலடியில் கிடந்தவனை பார்த்து தானும் ஓரடி பின்னடைந்து இருந்தாள் தேவி.
விழுந்தவன் நிமிர்ந்து எழ முயல அதற்குள் அவன் பின்னங்கழுத்தை பிடித்து தூக்கி, கன்னம் கிழியும் வரையில் விடாது நான்கு அறை விட்டான் வாசு. வலியில் கன்னம் பற்றிக்கொண்டு அலறினான் அவன்.
“ஏண்டா தப்பு கணக்கு எழுதும்போது வலிக்களையோ சுகமா இருந்துச்சா, இதுல கேள்வி கேட்டா தப்பா பேசுவியா” என இன்னும் நான்கு அறைகளை விட்டான்.
“அண்ணா தெரியாம செஞ்சிட்டேன் விட்டுடுங்க” என மீண்டும் அலறினான் அவன்.
“செஞ்சது தப்பு, பேசினது அதை விட பெரிய தப்பு, அதுக்கு உன்னை சும்மா விட முடியுமா”. என மீண்டும் அடிக்க அய்யோ.. என ஓடி சென்று தேவியின் காலில் விழுந்தான். அங்கிருந்த ஒருவர் கூட வாசுவை தடுக்கவோ அல்லது வேலுவை காப்பாற்றவோ முன் வரவில்லை. அனைவருமே ஒருவித நடுக்கத்துடனும் பதட்டத்துடனும் நடப்பதை பார்த்து இருந்தனர்.
தன் காலில் விழுந்தவனை என்ன செய்வது என தெரியாமல் அவள் தடுமாற, எங்கிருந்தோ ஓடி வந்த கோபால், “தேவி அவன்கிட்ட வேண்டாம்னு சொல்லும்மா இல்லைன்னா அடிச்சே கொன்னுடுவான்” என அவசரமாக கூறினான்.
அதே போல அங்கிருந்த ஒரு கட்டையை எடுத்து கொண்டு வாசு இவளை நெருங்கி இருக்க, வேலுவை அடிக்க ஓங்கிய அவன் கையை இவள் தடுத்து நிறுத்தினாள்.
“நீ விடு” என அவள் கையை விலக்க முனைய, “வேண்டாம் வாசு” என அழுத்தமாக கூறினாள்.
மிகவும் நெருக்கத்தில் அவனின் பெயர் விளிப்பும் அவள் பற்றி இருந்த கையின் அழுத்தமும் அவள் பேச்சை அவன் மீற கூடாது என்ற செய்தியை சொன்னது.
அவளையே பார்த்து கொண்டிருந்தவன், “எல்லாரும் கிளம்புங்க வேலையை நாளைக்கு பார்த்துக்கலாம்” என்று கூறினான் திரும்பி பார்க்காமல்.
அவன் கூறிய அடுத்த நொடி, புறா கூட்டத்தில் கல்லெறிந்தது போல அத்தனை பேரும் அவரவர் இருப்பிடம் சென்று சேர்ந்தனர். அடிபட்டவனை காலால் எத்திய கோபால் போடா என கண்ணை காட்ட அவன் பிழைத்தால் போதும் என ஓடி விட்டான்.
அவர்கள் எல்லாரும் போனதும் தானும் ஆபீஸ் அறைக்குள் புகுந்தவள் பார்த்து கொண்டிருந்த வேலையை எடுத்து வைத்து விட்டு வேகமாக வெளியேற சென்றாள். அப்போது குறுக்கே வந்து வாசலை மறித்தான் வாசு.
“எதுக்கு என்னை தடுத்த அவனை கொன்னுட போறேன்னா இல்லை நான் கொலைகாரன் ஆகிடுவேன்னா?”
அவனை தீ கக்கும் விழிகளால் முறைத்தவள், “ம்ம் உங்களுக்கு அறிவில்லைன்னு” என்றாள் அழுத்தமாக.
“ஏய்!” என அவன் கோபமாக கத்த, கையை உயர்த்தி அவனை தடுத்தவள், “அவனை அடிக்கறீங்களே நீங்க என்னைக்காவது சரியா இருந்திருக்கீங்களா. அவன் அப்படி பேசினதுக்கு நீங்க தான் காரணம். உங்களோட நடத்தை தான் காரணம். அதனால தான் அவன் என்னை தப்பா பேசினான். என்னை மட்டுமில்லை உங்களோட தொடர்புடைய எல்லாரையும் அப்படி தான் எல்லாரும் நினைப்பாங்க. இனியும் இங்கே வேலை பார்த்தா அது எனக்கு தான் அசிங்கம். எப்படியாவது உங்க கடனை குடுத்துடறேன் என்னை விட்டுடுங்க” என்றாள் இரு கையையும் ஒன்று சேர்த்து கும்பிடுவது போல செய்து.
“என்னை பத்தி தெரிஞ்சு தானே இங்கே வேலைக்கு வந்த. நான் எதையும் ஒளிச்சு மறைச்சு வைக்கலையே.” என கேட்டான் புருவங்கள் நெறிய அவளை பார்த்தபடியே.
“ஆமா தெரிஞ்சு தான் வந்தேன், நீங்க வெளிப்படையா செய்யறதால அது எல்லாம் சரின்னு அர்த்தம் கிடையாது. யார் எப்படி இருந்தா என்ன நாம சரியா இருந்தா போதும்னு நினைச்சேன். ஆனா ரயிலோட எல்லா பெட்டியும் சரியா இருந்தாலும் இன்ஜின் சரியா இல்லைன்னா கூட வண்டி தடம் புரளும்னு யோசிக்க மறந்துட்டேன். நீங்க சரியா இருந்தா தான் இங்கே எல்லாமே சரியா இருக்கும். முடிஞ்சா உங்களை மாத்திகோங்க, அது தான் உங்களை சுத்தி இருக்கற எல்லாருக்கும் நல்லது. இப்ப என்னை போக விடுங்க” என்றாள் தெளிவான குரலில்.
அவன் அசையவில்லை, ஒருவர் மட்டுமே செல்ல கூடிய வழியில் அவன் தன்னுடைய முழு உருவத்தை கொண்டு அடைத்தபடி நிற்க, அவள் அவனை பார்த்தபடி நின்றாள். அப்படியே செல்ல வேண்டும் என்றாலும் அவனை உரசி தான் செல்ல வேண்டும்.
அவனை விட உயரம் குறைவாக இருந்த போதும் அவன் கண்களை நேராக நோக்கிக்கொண்டிருந்தவளின் பார்வை உள்ளே ஊடுருவி உயிரை வருடி சென்றது. வெம்மையும் குளுமையும் கலந்த ஏதோ ஒன்றை உடலில் ஒவ்வொரு அணுவிலும் ஊற்றியது போல இனம் காண முடியாத உணர்வில் தவித்து போனான் ஆணவன். இந்த பார்வை காலம் முழுமையும் அவனை உரசி செல்ல வேண்டும், உள்ளே ஜீவனை நிரப்ப வேண்டும், உயிர் வாழும் ஜீவநதியாக வேண்டும். இவள் அருகில் வாழும் வரம் வேண்டும், இதை விட்டு விடாதே என மனம் இறைஞ்சியது. இப்போது போகிறேன் என்று சொன்னதே ஜென்ம வலியை கொடுக்கிறதே எப்படி இவளை விட்டுவிட்டு இருப்பான். குறைவான நொடியில் விரைவாக பற்றிக்கொள்ளும் தீப்பொறி போல அவனை சூழ்ந்து நிற்கும் அவளின் எண்ண அலைகளை எங்ஙனம் தவிர்ப்பான்.
இன்னும் அவன் வழி விடாதது கண்டு அவள் சலிப்பாக பார்த்து வைக்க, ஒரு நெடுமூச்சை இழுத்து விட்டு கொண்டு இடது கையால் நெற்றியை நீவிகொண்டவன், “சரி என்னை நான் மாத்திக்கறேன், நீ போகாத” என்றான்.
அவனை கேள்வியாக பார்த்தவள், “நீங்க உங்களை மாத்திக்கறதுக்கும் நான் போறதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு. இனிமேலும் என்னால இங்கே வேலை செய்ய முடியாது. தயவு செஞ்சு வழியை விடுங்க” என்றாள் பிடிவாதமாக.
“தேவா சொன்னா புரிஞ்சுக்கோடி, என்னால நீ இல்லாம இருக்க முடியாது. உண்மைய சொல்லணும்னா உன்னை பார்த்த நாள்ல இருந்து நான் எவ்வளவோ மாறிட்டேன். அதை எப்படி உனக்கு புரியவைக்கறது” என தவித்தான்.
அவன் அவளை பெயர் சொல்லி அழைத்ததை கேட்டே திகைத்து போனவள் அடுத்து அவன் சொன்ன வார்த்தைகளில் பிரம்மை பிடித்தது போல நின்று விட்டாள். என்ன உளறிகொண்டிருக்கிறான் இவன் என்ற எண்ணம் மட்டுமே அவள் மூளையில் ஓடிகொண்டிருந்தது.
அந்த குட்டி அறையில் இருவரின் மூச்சு காற்று மட்டுமே சுவர்களில் பட்டு அலைமோதிகொண்டிருக்க, சட்டென அவள் பின்னங்கழுத்தில் கை வைத்து தன்னை நோக்கி இழுத்தவன் நெற்றியோடு நெற்றி முட்டி, “சொன்னா உனக்கு புரியுமா தெரியலை, எனக்கு நீ வேணும்” என்றான் ஆழ்ந்த குரலில்.
பட்டென அவன் நெஞ்சில் கை வைத்து அவனை தள்ளி விட்டு இரண்டடி பின்னே சென்றவள், “உங்களுக்கு என்ன பைத்தியமா நான் வீட்டுக்கு போகணும் வழியை விடுங்க” என சீறினாள்.
கையை கட்டிக்கொண்டு வாசலை அடைத்து பவுன்சர் போல நின்றவன், “தாராளமா போ ஆனா எனக்கு பதில் இப்பவே வேணும்” என்றான்.
“என்ன பதில் சொல்லணும், உங்க முட்டாள் தனமான கேள்விக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது” என்று கத்தினாள்.
“முட்டாள் தனமா இருக்குல்ல” என தனக்கு தானே கேட்டுக்கொண்டே தலையை கோதி தன்னை சமன் செய்து கொண்டவன், “ஒருவேளை நான் படிக்கலை, இந்த மாதிரி வேலை செய்யறேன் இதனால உனக்கு என்னை பிடிக்கலையோ” என்றான்.
இப்போது அவள் நெற்றியில் கைவைத்து கொண்டாள், “இதை தான் முட்டாள்தனம்னு சொன்னேன்” என கூறிவிட்டு அவனை தாண்டி அவள் வெளியே செல்ல போக, அவள் முழங்கையை பற்றி நிறுத்தி தன்னோடு ஒன்றவைத்துகொண்டான். சட்டென அவன் இழுத்ததில் ஒரு பக்க உடல் முழுவதும் அவனோடு உரசி நின்றவள் அவனது அதிரடியில் அதிர்ந்து போனாள்.
எத்தனை வாட்ஸ் என கணக்கே கூற முடியாத மின்சார அதிர்வை அவன் தொடுகையில் உணர்ந்தவள் கண்கள் விரிய சற்றே பயந்த பார்வை பார்த்தாள்.
அசராமல் பார்த்தவன் “தேவா இந்த மாதிரி சூழ்நிலையில நான் இதை சொல்லணும்னு நினைக்கலை, ஆனா சொல்லிட்டேன். ஓகே சொல்ல உனக்கும் கொஞ்சம் டைம் வேணும்ல, வீட்டுக்கு போ நல்லா சாப்பிட்டு நல்லா தூங்கி ரெஸ்ட் எடு நாளைக்கு வந்து ஓகே சொல்லு. ஓகே மட்டும் தான் சொல்லணும். புரிஞ்சுதா” என்றான் உத்தரவாக.
அவன் குரலில் இருந்த கடினத்தன்மை, அவளுள் பயத்தை உண்டு பண்ணியது. இத்தனை அழுத்தனமான குரலில் அவன் உரைத்தது என்ன உத்தரவா அல்லது அவனது விருப்பமா அவளுக்கு புரியவில்லை. கூறி முடித்தும் இன்னும் கையை விடாமல் அவன் பற்றி இருக்க அவனையும் கையையும் மாறி மாறி பார்த்தாள். அதில் அவன் இதழ்கடையோரம் லேசான சிரிப்பு அரும்ப எத்தனை வேகமாக பற்றினானோ அதை விட பல மடங்கு நிதானமாக அவள் கையை விடுவித்தான்.
இப்போது விட்டால் மீண்டும் அவள் ஸ்பரிசம் கிடைக்காதோ என்ற ஏக்கம் அவனை வெகுவாக பாதிக்க, மெல்ல வருடியபடியே அவள் கையை விடுவித்தான்.
அவன் விட்டதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக அங்கிருந்து வெளியேறி இருந்தாள் தேவயானி.