New member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
Chapter 7
சுகமான நித்திரையில் வரும் இனிய கனவு நீ,
கைகளால் துழாவி உன் ஸ்பரிசத்தை
உணர முயல்கிறேன் முடியவில்லை,
கனவில் வந்து கண்ணோடு கண் கலந்து
காதல் சொல்லி போகிறாய்
கானல் நீர் போலே..
அன்றைய தினம் சம்பள நாள். வார சம்பளம் வாங்கி கொள்பவர்களும் உண்டு மாதத்தில் வாங்கி கொள்பவர்களும் உண்டு. இவள் வந்து சேர்ந்த முதல் வாரத்தில் இவளை பக்கத்தில் இருத்தி வைத்து கொண்டே எல்லாருக்கும் சம்பளத்தை கொடுத்தான். கோபால் அவனுடன் வேலை செய்யும் சில டிரைவர்கள், இன்னும் சிலர் மாத சம்பளம் வாங்கி கொள்வார்கள் என அவள் அறிந்து கொண்டாள்.
முதல் வாரம் மட்டுமே அவளுடன் இருந்து சம்பளத்தை கொடுத்தவன் அடுத்த அடுத்த வாரங்களில் அவளையே கொடுக்க வைத்தான் இவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு.
சம்பளத்தை வாங்கி சென்றவர்கள் சாதாரணமாக வாங்கி கொள்ள இவளால் தான் அதை ஏற்றிக்கொள்ள முடியவில்லை, “நீங்களே கொடுக்கலாமே” என்றாள் தயக்கமாக அருகில் அமர்ந்து போனை பார்த்து கொண்டிருந்தவனிடம்.
ஏன் உன்கையால கொடுத்த அஞ்சு பத்து குறைஞ்சு போய்டுமா என்ன என கேட்டான் போனில் இருந்து கண்ணை எடுக்காமல்.
“அதுக்காக சொல்லலை, நான் இப்போ வந்தவ அவங்க எல்லாம் ரொம்ப நாளா இங்கே வேலை பார்க்கறாங்க என்கிட்ட சம்பளம் வாங்க தயக்கமா இருக்கலாம் அதனால தான் சொல்றேன்” என்றாள் அவனுக்கு புரிய வைத்து விடும் நோக்கோடு.
“யார் எப்போ வந்தாங்கன்னு பார்த்தா அது அவங்க தப்பு, அவங்க உழைப்புக்கான சம்பளம் அதை என் கையால வாங்கினாலும் ஒண்ணு தான் உன் கையால வாங்கினாலும் ஒண்ணு தான். நம்மளை பிரிச்சு பார்க்க கூடாது” என்றான் இப்போதும் போனில் கவனம் வைத்து.
அதெப்படி ஒண்ணாகும் என யோசித்தவளுக்கு அவன் தன்னுடன் அவளை ஒன்று படுத்தி கூறுகிறான் என்று புரியாமல் போனது.
எல்லாரும் சென்ற பிறகு மேசை இழுப்பறையில் இருந்து ஒரு கவரை எடுத்து கொடுத்தான். அவள் அவனை கேள்வியாக பார்க்க, வாங்கு என்பதாக புருவத்தை அசைத்து கூறினான். அந்த கவரை வாங்கி பிரிக்க அதில் அவளுக்கான சம்பளமும் கூடவே ஒரு டெய்ரி மில்க் சில்க் சாக்லேட்டும் இருந்தது.
அவள் வியப்பாக அவனை பார்க்க, “என்ன வேண்டாமா” என கேட்டான்.
அதெப்படி வேண்டாம் என கூறுவது இதை வைத்து தானே இந்த மாத செலவை பார்க்க வேண்டும் இவனது கடனையும் அடைக்க வேண்டும் என நினைத்தவள் பணத்தை எண்ணி பார்த்தாள். உதடுகள் லேசாக ஒட்டி பிரிய அவள் பணத்தை எண்ண எண்ண அவள் மீன் குஞ்சு வாய் மீது அழுந்த முத்தமிட பேராவல் எழுந்தது அவனுக்கு. இமைக்க மறந்து அவளையே பார்த்து இருந்தான்.
அவள் எதிர்பார்த்ததை விட அதிக பணம் இருக்க, புருவம் சுருங்க அவனை பார்த்தாள். இப்போது என்ன என அவன் புருவம் உயர்த்தி வினவ, “இது அதிகமா இருக்கு” என்றாள்.
“சரியா தான் இருக்கு” என்றான் அவன்.
“நான் பார்க்கற வேலைக்கு இது அதிகப்படி சம்பளம் தான்” என்றாள் அவள் மீண்டும். ஏண்டி இப்படி படுத்தற என மனதிற்குள் முனகிக்கொண்டவன், “அப்படின்னா இன்னொரு வேலையும் சேர்த்து செய்” என்றான்.
“என்ன செய்யனும்”
“இனிமேல் வரும்போது எனக்காக சமைச்சு எடுத்துட்டு வந்திடு” என்றான் சாதாரணமாக.
“அது எதுக்கு” என அவள் முறைக்க.
“வீட்டு சாப்பாடு சாப்பிட்ட நினைவே இல்லை, அதான் கேட்டேன். முடியாதுன்னா வேண்டாம். ஆனா அந்த சம்பளம் உனக்கு தான்” என முடிவாக கூறியவன் எழுந்து சென்று விட்டான். அவன் எவ்வளவோ முயன்றும் அவனது குரல் ஏக்கத்தை பிரதிபலித்து விட்டது. அவளிடம் இருந்து மறைக்கவே சட்டென எழுந்து சென்று விட்டான்.
ஆனால் அதற்குள்ளாகவே அவளால் அவன் குரலில் வேறுபாட்டை உணர முடிந்திருந்தது. மனதிற்குள் சுருக்கென ஒரு வலி வந்து சேர்ந்து கொண்டது. அவன் வாய் வார்த்தையாக கூறவில்லை என்றாலும் அவன் வீட்டு உணவுக்காக ஏங்கி இருப்பது நன்றாகவே தெரிந்தது. ஒருவன் வாய் திறந்து சாப்பாடு வேண்டும் என கேட்டபிறகு எப்படி முடியாது என்று சொல்ல முடியும் என மனசாட்சி வாதாடியது. ஆனால் இது சரி வருமா இதெல்லாம் உனக்கு தேவை தானா என அறிவு கேள்வி எழுப்பியது. ச்ச சாப்பாடு தானே இதுக்கு போய் இவ்வளவு யோசிக்கற என மனது மூளையை தட்டி அமர்த்தி விட, கொண்டு வந்து கொடுப்போமே என முடிவு செய்து கொண்டாள்.
அவன் சென்ற பிறகு அவள் நின்ற இடத்தில் கேட்பாரற்று கிடந்தது அந்த சாக்லேட் இது எதுக்கு என அவள் நினைக்கையிலேயே, மீண்டும் உள்ளே வந்தவன், “இன்னும் கிளம்பலையா” என்றபடி ஏதோ பொருளை எடுத்து கொண்டிருந்தான்.
“இது.. இது எதுக்கு”
”சாக்லேட் எதுக்கு சாப்பிடத்தான்” என்றான் சாதாரணமாக.
“எனக்கு இதெல்லாம் வேண்டாம்” முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு அவள் சொல்ல நோட்டில் ஏதோ எழுதி கொண்டிருந்தவன் திரும்பி அவளை இமைகள் இடுங்க பார்த்து விட்டு, “அந்த குப்பை தொட்டியில போட்டுட்டு போ” என்று கூறிவிட்டு திரும்பி கொண்டான்.
அதை கையில் எடுத்து குப்பை தொட்டி வரைக்கும் எடுத்து சென்றவள் என்ன நினைத்தாளோ மீண்டும் மேசை அருகே வந்து அதை இழுப்பறையில் வைத்து பூட்டினாள்.
அவள் செய்கையை திரும்பி பார்க்காமலே பக்கவாட்டு பார்வையில் கவனித்து கொண்டிருந்தவன் இதழ்களில் லேசான புன்னகை அரும்பியது.
வீட்டிற்கு வந்தவள் முகம் கை கால்கள் கழுவிகொண்டு தந்தையிடம் ஓடினாள். அப்போது தான் விழித்திருந்த சோமு, பல நாட்கள் கழித்து மகள் ஆர்வமாக ஓடி வரவும் என்னவென்று பார்த்தார்.
“அப்பா சம்பளம் வாங்கிட்டேன்” என கூறினாள் ஒரு துள்ளலுடன். இத்தனை நாட்களும் வயதினை தாண்டிய முதிர்ச்சியுடன் அமைதியாக வலம் வந்து கொண்டிருந்த மகள் இன்று பழையபடி துள்ளி குதித்து வந்ததை கண்டு தானும் புன்னகைத்தார்.
“அப்போ அப்பாவுக்கு ட்ரீட் தர போறியா தேவி குட்டி” என்றார் ஆசையாக.
“சொல்லுங்கப்பா என்ன வேணும்” என அவர் காலருகே அமர்ந்து கொண்டாள்.
“எனக்கென்னம்மா வேணும் நாலு நல்ல துணிமணி வாங்கிக்கோடா வேலைக்கு போற நாளு பேர் பார்க்கற மாதிரி இருக்க வேண்டாமா. எப்போ பாரு இந்த சாயம் போன துணிமணியே ஊடுத்திட்டு நல்லாவா இருக்கு” என கேட்டார்.
“அப்பா யார் பார்க்கவும் வேண்டாம், என்னோட துணி கிழிசல் இல்லை. என்னை பார்த்தா பாவமாவும் இல்லை. யாரும் என்னை பார்த்து அனுதாப படற மாதிரி இருக்கலை அது போதும் எனக்கு. சம்பளத்தை வாங்கி உங்ககிட்ட கொடுத்துட்டு ஹாஸ்பிடல் செலவுக்கு கொடுத்ததை பாதியாவது திருப்பி கொடுக்கலாம்னு இருக்கேன். மீதிக்கு கொஞ்சம் மளிகை சாமான் வாங்கணும்” ‘நாளையில இருந்து அவருக்கு நல்லதா ஏதாவது சமைச்சு எடுத்துட்டு போகணும்’ என்று மனதினுள் கூறிக்கொண்டாள்.
“சரிம்மா உன் இஷ்டம்” என கூறினார் சோமு. தந்தைக்கு தேவையானதை செய்து முடித்தவள், கற்பகத்தை தேடி சென்றாள்.
“அக்கா அக்கா” என குரல் கொடுத்தபடி வாசலில் நின்றாள்.
“உள்ளே வா தேவி” என அழைத்தபடியே வெளியே வந்தாள் கற்பகம்.
“அக்கா சம்பளம் வாங்கிட்டேன் உங்ககிட்டயும் அண்ணன்கிட்டயும் சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்” என்றாள்.
“அதுக்காக உள்ளே வந்து சொல்ல மாட்டியா, வா” என அவள் கைபற்றி இழுத்து போனாள் கற்பகம்.
உள்ளே சென்று அமர்ந்ததும் எவ்வளவு சம்பளம் என தேவி கூற, “பரவாயில்லையே நான் கூட இதை எதிர்பார்க்கலை. நல்ல தொகை தான். சீக்கிரமே அவர் கடனை குடுத்துடலாம்” என்றாள் அவள்.
“ஆமாக்கா, நானும் இதை எதிர் பாரக்கலை, அதை அவர்கிட்டயும்” சொன்னேன்.
“என்னன்னு”
“என்னோட வேலைக்கு இந்த சம்பளம் அதிகம்னு சொன்னேன்”
“அடிப்பாவி உனக்கென்ன பைத்தியமா, அவன் அவன் சம்பளம் கம்மியா இருக்குன்னு தான் கேட்பான், நீ அதிகமா இருக்குன்னு கேட்டிருக்க” என தலையில் அடித்து கொண்டாள் கற்பகம்.
“அதெப்படிக்கா வேலை செய்யற எனக்கு தெரியாதா என்னோட உழைப்புக்கு என்ன சம்பளம் சரியா இருக்கும்னு, நாமளும் அதிகமா ஆசைப்பட கூடாது இல்லையா” என்றாள் அடக்கமாக.
“ஆமாடி உன் நேர்மைக்கு சிலை வைக்க போறாங்க, அதுக்கு வாசு என்ன சொன்னாரு”
“அதிகமா இருக்கற மாதிரி தோணுச்சுன்னா நாளையில இருந்து எனக்கு சமைச்சு எடுத்துட்டு வந்து கொடு சரியா போய்டும்னு சொன்னாரு”
“பாருடா இது நல்லா இருக்கே, அப்போவாச்சும் நீயும் நல்ல சாப்பாடு சாப்பிடுவ என கூறினாள் கற்பகம்”
அவள் அப்படி கூறவும் தேவி அவளை ஆச்சர்யமாக பார்த்தாள். “என்ன அப்படி பார்க்கர”
“அப்போ அவர் கேட்டது உங்களுக்கு தப்பாவே தெரியலையா கற்பகம் அக்கா”
“இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு. அந்த மனுஷன் சாப்பாடு தானே கேட்டார். வேற ஏதாவது கேட்டாரா தப்பா நினைக்க” என கூறியவள் “ஆமா ஒருவேளை நீ தப்பா நினைச்சு ஏதாவது பேசிட்டு வந்துட்டியா. உனக்கு வேற சுருக்குன்னு கோபம் வருதுன்னு உங்கண்ணன் சொல்லிட்டு இருப்பாரு” என படபடத்து கேட்டாள் கற்பகம்.
சிறிதான வெட்க புன்னகையுடன் சிரித்தவள், “இல்லைக்கா முதல்ல கொஞ்சம் யோசிச்சேன் அப்பறம் நீங்க சொல்ற மாதிரி தான் நானும் நினைச்சேன். அதான் நாளையில இருந்து சாப்பாடு கொண்டு போய் குடுக்கலாம்னு நினைக்கிறேன்” என்றாள்.
“அதை செய் முதல்ல” என்றாள் கற்பகம்.
பிறகு இருவருமே சோமுவிடம் கூறிவிட்டு கடைக்கு சென்று பலசரக்கு வாங்கி கொண்டு வந்தனர்.
மகளிடம் புதிய உற்சாகம் கொஞ்சம் தலை தூக்கி இருப்பதை கண்டு அந்த தந்தை உள்ளம் சற்றே நிம்மதி பட்டு கொண்டது.