• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 11, 2025
Messages
27
Chapter 6
உலர்ந்த மணலாய் இருந்தவள்
உன் கரங்கள் பட்டு உருவமாகிறேன்.
அதற்கு தானோ
இத்தனை நாளும் வெய்யிலில் தவம் இருந்தேன்...

அந்த இடத்தின் வேலை பிடிபட்டது தேவிக்கு. அதிகாலை நான்கு மணிக்கே வேலையை துவங்கி இருப்பார்கள். அதன் பிறகு அவள் வந்ததும் கணக்கு பார்த்து, லோடு ஏற்றுவார்கள். மதியம் பன்னிரண்டு மணிக்கே வேலையை ஓரங்கட்டி விடுவார்கள். அதன் பிறகு வெயில் தாழ்வதை பொறுத்து வேலை துவங்கும். இவள் ஒன்பது மணி போல வேலைக்கு வருபவள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு சென்று விட்டு பத்து நிமிட இடைவெளியில் மீண்டும் வந்து விடுவாள். மதிய உணவிற்கு மட்டும் அரைமணி நேரம் எடுத்து கொள்வாள். இது எதுவுமே அவன் விதித்த விதிமுறை இல்லை அவளாகவே கணக்கிட்டு வகுத்து கொண்ட வேலை நேரங்கள். மாலையில் ஆறு மணி வரை வேலையில் இருந்தவளை பார்த்தவன் கோபாலிடம் கூறி, ஐந்து மணிக்கே வீட்டிற்கு கிளம்ப சொன்னான்.

அதை கோபால் வந்து கூறியபோது, “அதெப்படிண்ணா ஒன்பது டூ ஆறு தானே வேலை நேரம். அதுல ரெண்டு முறை வீட்டுக்கு வேற போய்ட்டு வரேன். அதெல்லாம் சரி பண்ண வேண்டாமா”.. என்று கேட்டாள் இன்முகத்துடனேயே.

“எனக்கு தெரியலை தேவி, வாசு தான்”.. என அவன் கூற துவங்கும்போது அங்கே வந்து நின்றான் வாசு.

அவனை கண்டவன் “நீயே சொல்லிடுப்பா”..என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டான் கோபால்

அவன் போனதும் வாசலில் இருபக்கமும் முழங்கையை ஊன்றி நின்றவன், “வீட்டுக்கு போக விருப்பம் இல்லைன்னா நைட் கூட இங்கேயே இருக்கலாம் எனக்கும் கம்பெனிக்கு ஆள் கிடைச்ச மாதிரி இருக்கும்”.. என்றான் தலை சாய்த்து அவளை பார்த்தபடியே.

சட்டென அவனை நிமிர்ந்து முறைத்தவள், “ஏன் வழக்கமா கம்பெனி குடுக்கறவங்க வரலையோ, இப்படி நாளைக்கு ஒரு கம்பெனி தேடி அலையறதுக்கு பதில் முறையா கல்யாணம் பண்ணி பிழைக்கலாமே”.. என்றவாறே மேசையை ஒதுக்கி வைத்தாள்.

“கல்யாணமா அதை பண்ணி, பிடிக்கலைன்னு சொல்லி இன்னொருத்தரை தேடி போறதுக்கு, இப்படியே இருந்திடலாம்”.. என்றான் இதழ் வளைத்து.

“எப்படி அடுத்தவங்க குடும்பத்தை கெடுத்துகிட்டா, ரொம்ப நல்லா இருக்கு”.. என்றாள் இவளும் அவனை போலவே இதழ் வளைத்து. அவன் பார்வை அவள் வளைந்த இதழில் பதிந்து மீண்டது. இதுவரை அவள் இருக்கும் போது அந்த அலுவலக அறைக்குள் அவன் வந்தது இல்லை. அதை அவள் வேலைக்கு வந்த இந்த ஒருவாரத்தில் கண்டிருந்தாள்.

இப்போது சட்டென உள்ளே வந்தவன், “அதான் உன்னை கம்பெனி குடுக்க கூப்பிடறேன்”.. என்றான் மேசையில் கையை ஊன்றி நின்றபடி.

அவனை தீயாக முறைத்தவள், அங்கிருந்து அகல போக, குறுக்கே வந்து நின்றவன், “பதில் சொல்லாம போனா எப்படி”.. என்றான் இடக்காக. அவன் செய்கை என்ன உணர்த்தினாலும் அவன் பார்வை குறும்பை ஒத்து இருந்தது.

“இந்த மாதிரி அசட்டு தனமான கேள்விக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது, வேணும்னா எழுதி கொடுத்திடறேன், எனக்கு இந்த வேலையே வேண்டாம்னு, செய்யட்டுமா”..என்றாள்.

“அதெப்படி நீ பணம் கொடுக்கணுமே” என்றான் தாடியை தடவிகொண்டே

“பணம் கொடுக்கணும் தான் அதுக்கு பதில் உடம்பை கொடுக்கணும்னு அவசியம் இல்லை”..என்றாள் அவள் காட்டமாக.

“உடம்பா, நான் எப்போ அப்படி கேட்டேன்”.. என்றான் அவன் போலியாக அதிர்ந்து.

“ஓஹ் நீங்க பேசினதுக்கு வேற என்ன அர்த்தம் வரும்”.. என்றாள் இவள் அதிராமல்.

ஹா ஹா.. என சத்தமிட்டு சிரித்தான் வாசு.

எதுக்கு இந்த ராட்சசன் சிரிப்பு என கடுப்பானவள், அவனை தான்டி கொண்டு செல்ல முற்பட, “நான் சா.. தா.. ரண பேச்சு வார்த்தையை மட்டும் தான் சொன்னேன், உனக்கு ஆசையா இருந்தா சொல்லு பார்த்து பண்ணிக்கலாம்”..என்றான் சிரிப்புடனே.

இடவலமாக தலையை ஆட்டி சலித்தவள், அடுத்து அவன் பேச துவங்கும் முன்னே வீட்டிற்கு கிளம்பி இருந்தாள்.

“இப்போவே சொல்லணும்னு இல்லை எப்போ சொன்னாலும் நான் ரெடி தான்”.. என்றான் சத்தமாக.

தூரத்தில் வந்துவிட்ட போதும் அவன் சொன்னது காதில் விழ, கடுப்புடன் வேகவேகமாக நடையை எட்டி போட்டாள் தேவயானி.

வீட்டிற்கு வந்தவளுக்கு அசதியும் அலுப்பும் அதிகமாகவே இருந்தது. இருந்தும் தனக்கும் தந்தைக்கும் என உணவை முடித்தவள், அடித்து போட்டது போல உறங்கி போனாள்.

அவள் இல்லாத அறையில் அப்படியே நின்று இருந்தான் வாசு. ஆழ்ந்த மூச்சை இழுத்து சவாசித்தான். எப்போதும் எங்கும் மணக்கும் சிமெண்ட்டின் மணத்தை தாண்டி அங்கே அவள் இருந்ததற்கான அடையாளத்தை உறுதி செய்தது அந்த அறையில் கமழந்த அவளின் மணம். அவள் வேலைக்கு வந்த சில நாட்களாக இப்படித்தான், அவள் போன பிறகு அந்த அறைக்குள் வருபவன் அப்படியே நின்று இருக்கிறான். அது எதனால் என்று அவனுக்கு தெரிவதில்லை. அதை தெரிந்து கொள்ளவும் அவனுக்கு விருப்பமில்லை.

சிமெண்ட் சல்லி என இருந்த இடம் அவள் வந்தபிறகு ஒரு அறையாக மாறி இருந்தது. அவளை பார்த்த தருணம் நினைவுக்கு வரும்போதெல்லாம் கன்னத்தை தடவி கொண்டான். அங்கே தானே அவள் கை தடம் பதித்து விட்டு போனாள். முதலில் கோபம், பிறகு அழுகையை அடக்கிக்கொண்டு அவள் பேசிய விதம், உதவியை கூட கெஞ்சி கேட்காமல் நிமிர்ந்து கேட்ட விதம் எல்லாமே அவனுக்கு புதிதாக இருந்தது.

கெஞ்சி காலில் விழுந்து அழுது ஆர்பாட்டம் செய்திருந்தால் கூட உதவி இருக்க மாட்டான். ஆனால் அவனையே அடித்து விட்டு அது அவனது தவறுக்கான தண்டனை என்று கூறினாளே அப்போதே அவளை பிடித்து போனது. ஏனோ பக்கத்தில் வைத்து பார்க்க மனம் துடித்தது. ஹாஸ்பிடல் போன போது அவள் மயங்கி விழ என்னவோ ஏதோ என்று மனம் பரபரத்தது.

எதுக்கு இந்த பரபரப்பு உணக்கெல்லாம் பட்டும் புத்தி வர மாட்டேங்குதே என அவனை அவனே திட்டி கொண்டாலும், என்னாச்சு அவளுக்கு என்று உள்ளே இருந்து குடைந்தெடுத்த கேள்வியை அவனால் புறம் தள்ள முடியவில்லை.

சரியாக சாப்பிடாததால் மயக்கம் வந்திருக்கு என கோபால் கூறிட, அப்போ தின்னு தொலைக்க வேண்டியது தானே என கோபமும் ஆற்றாமையும் வந்தது. எப்படியோ போகட்டும் என அப்படியே விட முடியாமல் தான் அன்று இரவு முழுவதும் அங்கேயே வாட்ச்மேன் வேலை பார்த்தான். காலையில் அவள் எழுந்து வந்து நிற்க, அம்மாடி பரதேவதை இப்போவாவது வந்தாளே என்று மனதிற்குள் நினைத்தவன் அவளை மேலிருந்து கீழ் வரை நன்றாக ஆராய்ந்து, அவள் நலமாக இருக்கிறாள் என்று மனம் திருப்தி பட்ட பிறகே அங்கிருந்து கிளம்பினான்.

கோபால் திரும்பி வந்தபோது எப்போது டிஸ்சார்ஜ் என பேச்சு வாக்கில் கேட்டு வைத்தான். அவன் சொன்ன நேரம் நெருங்க நெருங்க அவனுக்கு இங்கே இருப்பு கொள்ளவில்லை, வண்டியை எடுத்து கொண்டு புறப்பட்டு விட்டான். எங்கே அவள் வேறு வண்டி ஏற்பாடு செய்திருப்பாளோ என்று ஒரு யோசனை இருந்தாலும் கூட, ஏதோ ஒரு நம்பிக்கையில் சென்றவனை ஏமாற்றாமல் இருந்தாள் அவள்.

வீட்டில் கொண்டு வந்து விட்டவனுக்கு அவசரமாக நன்றி கூறியவளை, கடினப்பட்டு அசட்டை செய்தவன் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.

அவனுக்கு அவளிடம் என்ன வேண்டும் என்று அவனுக்கே தெரியவில்லை. உடல் தேவை என்றால் அதற்கு அவனுக்கு வழிகள் நிறைய இருந்தது. அவனாக இதுவரை யாரையும் நெருங்கியது இல்லை. என்னவோ அவன் முரட்டு குணம் பார்த்தோ அல்லது உடல் கம்பீரத்தை பார்த்தோ சிலர் வலிய வருவார்கள், அதை அப்படியே பயன்படுத்தி கொள்வான். அவனுக்கே தேவைப்படும் நேரத்தில் பணம் கொடுத்து சுகத்தை விலைக்கு வாங்கி கொள்வான். அவள் சொன்னது போல அடுத்தவன் குடும்பத்தை கெடுக்கும் எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை.

ஏதோ குடும்ப பெண்ணாக பார்த்து அவன் கொக்கி போட்டு பிடித்திழுப்பதை போல அவள் கூறியதற்கு நியாயப்படி அவனுக்கு கோபம் தான் வந்திருக்க வேண்டும் ஆனால் என்னவோ சிரிப்பு தான் வந்தது.

அவளை பார்த்த நொடியில் பக்கத்தில் வைத்து கொள்ள தோன்றியதே தவிர வேறு எதுவும் தோன்றவில்லை, ஆனால் இப்போது பார்க்க பார்க்க, நெஞ்சை ஏதோ செய்தாள். அவன் ஒன்றும் பால்ய பருவத்தினன் அல்ல இந்த காதல் கன்றாவி எல்லாம் அவனும் கடந்து தான் வந்திருந்தான். ஆனால் அவளிடம் என்னவோ ஒரு ஈர்ப்பு. அது உடல் தேவையையும் தாண்டிய ஏதோ ஒன்றாக இருந்தது. அவள் அருகில் இருக்கும்போது அவனது ஆற்றல் அதிகமாவது போன்ற உணர்வு. இதுவரையில் இப்படி ஒரு உணர்வை அவன் யாரிடமும் உணர்ந்ததே இல்லை.

எதற்காக வாழ்கிறோம் எதற்காக சம்பாதிக்கிறோம் என்ற இலக்கே இல்லாமல் வாழ்க்கையின் ஓட்டத்திற்கு ஓடிகொண்டிருந்தான். ஆனால் அவளை கண்ட பிறகு வாழ்வதற்கு ஒரு காரணம் கிடைத்தது போல தோன்றியது. கிடைத்த காரணத்தை பற்றிகொண்டு காலம் முழுமைக்கும் வாழ்ந்து விடு என்று மனம் துடித்தது. என்ன ஆனாலும் இந்த வாழ்க்கையை விட்டு விடாதே என்று உள்ளிருந்து ஒரு குரல் உரத்து கூறிக்கொண்டே இருந்தது. அந்த குரலை அசட்டை செய்ய முடியாமல் அதற்கு செவி சாய்க்கவும் முடியாமல் தவித்து கொண்டிருக்கிறான். பிறகு திடீரென பார்த்த ஒரு பெண்ணிடம் அவனுக்கு இது போல உணர்வுகள் ஏன் தோன்ற வேண்டும். அவனுக்கு தெரிந்தது எல்லாம் காதல் என்னும் பெயரால் ஏற்படும் உறவு அல்லது காமம் அதை தவிர்த்து சொல்லிக்கொள்ள வேறு என்ன இருக்கிறது இந்த மனிதர்களுக்கு. இப்படி நினைத்து கொண்டிருந்தவனுக்கு அதையும் தாண்டிய ஏதோ ஒரு பந்தம் அவளிடம் தோன்றியது. அதற்கு வரி வடிவம், உருவம் கொடுக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறான். அவள் அவன் அருகில் இருக்கிறாள் என்பதோடு திருப்தி பட்டுக்கொள்ள போகிறானா என்றால் அவனுக்கே அது இன்னும் முழுவதுமாக தெரியவில்லை.

ஒரு நெருப்பின் சரி பாதியான இரு வேறு வேதிபொருட்கள் போல, ஒன்று இல்லாமல் மற்றது தனி தனியாக இருந்தால் அதற்கு நெருப்பின் அளவிற்கு சக்தி இருக்காது அது போலத்தான். அவனுள்ளே இருக்கும் உயிர் அவள் என தோன்றியது. அவளில்லாமல் இதுவரை உயிரற்ற உடலாக மட்டுமே நடமாடியது போலத்தான் இருந்தது.
கண்ணிருந்தும் பார்வை இல்லாதது போல, நாவிருந்தும் ருசியை உணர முடியாதது போல, உணர்வுகள் இருந்தும் அதை அறிந்திடாதது போல, இப்படி பல. ஆனால் இதை எல்லாம் அவளிடம் எப்படி கூற முடியும். முதலில் அவனுக்கே அவனது உணர்வை புரிந்து கொள்ள முடியவில்லையே. பார்த்து சில நாட்களே ஆன பெண்ணிடம் சென்று நீ என் சரி பாதி என கூறிட முடியுமா. அப்படி கூறினால் அவனை என்னவென நினைப்பாள் பைத்தியக்காரன் என்று தானே. நினைக்க நினைக்க அவனுக்கே சிரிப்பு தான் வந்தது. நிச்சயமாக அப்படித்தான் நினைப்பாள். நினைப்பதோடு அவள் பார்க்கும் பார்வை இருக்கிறதே, உள்ளே புகுந்து சென்று அணுக்களிலெல்லாம் ஒரு சுற்று சுற்றி இதயத்தில் வந்து ஒரு வலியை உண்டாக்கும். சுகமாகவும் அதே நேரம் சித்ரவதையாகவும் மாறி மாறி கொல்லும் அந்த பார்வை. இத்தனைக்கும் அவள் அவனை ஒரு பொருட்டாக பார்த்து பேசியது கூட கிடையாது, ஆனால் அதற்கே அவன் விழுந்திருந்தான். இனி அவளுடன் தனியே பேசி தன்னை விளக்கப்படுத்தி தன் எண்ணங்களை சொல்லி, அப்பப்பா நினைக்கவே மலைத்து போனான்.

அவனா இது, எதற்கும் யாருக்கும் பயந்து பழக்கமில்லை, யாருக்கும் விளக்கம் சொல்லி நினைவு இல்லை. தானாக வளர்ந்த காட்டு மரம் அவன். தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டு இருந்தான். அவனுக்கு ஒரு பெண்ணிடம் பேச மலைப்பு. இது கூட அவனுக்கு ஸ்வாரஸ்யமாகத்தான் இருந்தது.

அவளை பற்றி நினைக்கலையில் நெஞ்சுக்குள் ஏதோ ஊற்று சுரப்பது போல இருக்கிறது. சுகமான வலியில் நெஞ்சை நீவிகொள்ள கைகள் தானாக பரபரக்கிறது. அப்படியே மோன நிலையில் படுத்து கிடக்க வேண்டும் போல இருந்தது. இருள் வானை கிழித்து கொண்டு சொட்டு சொட்டாய் துளிகள் அவன் மீது விழ, அவள் நினைவுகளில் அதையும் கூட ரசித்தபடியே அப்படியே மல்லாந்து படுத்து கிடந்தான் வாசுதேவன்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top