• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Dec 11, 2025
Messages
39
Chapter 22
என்ன உத்தேசம் உனக்கு?
கடலலை கரையை
அரிப்பதைப் போல
என் நினைவுகளில் புகுந்து,
ஏன் எனை
அரித்துக் கொண்டிருக்கிறாய்?


இரவெல்லாம் அவனையே வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டிருந்தாள் தேவி, என்ன செய்தான் அந்த அருண் வந்து இவள் காலில் விழுந்ததும் இல்லாமல் இவளுடைய சொத்து பத்திரங்களையும் கொடுத்து விட்டு, அவளுக்கும் தனக்கும் விவாகரத்து ஆகி விட்டது. இனி அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டு அடித்து பிடித்து வண்டியில் ஏறி சென்று விட்டானே.
பார்த்திருந்த எல்லாருமே, "என்னடி இது அன்னைக்கு என்னமோ பொண்டாட்டி ஓடி வந்துட்டா அப்படி இப்படின்னு பேசினான் இன்னைக்கு விவாகரத்து ஆகிடுச்சுன்னு சொல்லிட்டு ஓடறான் என்ன தான் நடக்குதோ. நமக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது" என பேசிக்கொண்டனர்.

“ஏன்கா, நான் அன்னைக்கே நினைச்சேன். அந்த பொண்ணை பார்த்தா அப்படி எல்லாம் தெரியலையே இவன் என்னமோ கதை சொல்றானேன்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்ப தானே தெரியுது இவன் லட்சணம்” என அப்படியே தோசையை திருப்பி போட்டாள் ஒருத்தி.

“அதாண்டி எனக்கும் புரியலை, ஓடி வரவ அப்பனை கூட்டிக்கிட்டா ஓடி வருவா. இவன் தான் ஏதோ கோளாறு புடிச்சவனா இருந்திருக்கனும்” என ஆள் ஆளுக்கு ஒவ்வொன்று பேச தேவியோ வாசுவைத்தான் பார்த்து கொண்டிருந்தாள்.

பதறி அடித்து ஓடிய நிலையிலும் அவன் வாசுவை கண்டு மிரண்டு விழித்து தலையை தொங்க போட்டு கொண்டு போனது அவள் கண்களில் இருந்து தப்பவில்லையே. அப்படி இவன் என்ன செய்தான். எங்கே சென்றான் எதுவும் புரியாமல் அவனையே பார்த்து நின்றாள்.

அங்கிருந்த கூட்டம் விலகியதும் அவள் அருகே வந்தவன், கோபால் என அழைத்தான். அவன் திரும்பி வந்ததில் முகமெல்லாம் சிரிப்போடு நின்று இருந்த கோபால் ஓட்டமாக அவனிடம் வந்து நின்றான்.

“என்ன வாசு”

“நாளைக்கு நம்ம தெரு முனையில இருக்கிற கோவில்ல எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம், நீயும் உன் பொண்டாட்டியும் தான் எல்லாருக்கும் அழைப்பு கொடுக்கனும் முடியுமா” என்று கேட்டான்.

அவன் கேட்டது என்னவோ உதவி தான், ஆனாலும் அதையும் கூட கம்பீரமாக நின்று கேட்ட விதத்தில் அங்கிருந்த அனைவரும் அவனை மெச்சும் பார்வை பார்த்தனர்.

அவன் சொன்னதை கேட்ட கோபாலும் கற்பகமும், முகம் கொள்ளா புன்னகையுடன் சரி என தலையசைத்தனர். அடுத்து தேவியும் அவனும் தனித்து விடப்பட, அவள் எதிரே வந்தவன் அவளை தாண்டி உள்ளறைக்கு சென்றான். என்ன செய்கிறான் இவன் என அவள் பார்த்து கொண்டிருக்கும்போதே அவளது உடைகளில் இருந்து ஜாக்கெட் ஒன்றை எடுத்து கொண்டவன், “கல்யாண புடவைக்கு அளவு கொடுக்கனும்” என காற்றை பார்த்து கூறிவிட்டு வெளியேறிவிட்டான்.

இவள் தான் நடப்பதை என்னவென்று உணரமுடியாமல் அப்படியே நின்று இருந்தாள்.

அடுத்து அடுத்து திருமண வேலைகள் அவசரகதியில் நடந்தேறியது. வீட்டிற்கு வெள்ளை அடிக்கப்பட்டது, சில அத்தியாவசிய பொருட்கள் வந்து இறங்கியது. கற்பகமும் கோபாலும் அந்த தெருவில் உள்ள வீடுகளுக்கு எல்லாம் சென்று சொல்லி வந்தனர். வாசு கடைகடையாக ஏறி இறங்கி அவளுக்கும் அவனுக்கு உடை வாங்கி வந்தவன் கோபால் கற்பகத்திற்க்கும் கூட வாங்கி வந்திருந்தான்.

அதை அவர்களிடம் கொடுத்த போது, “இதெல்லாம் இப்போ எதுக்கு வாசு” என்று கேட்டான் கோபால்.

“ஏன் எங்களுக்குன்னு இருக்கறது நீங்க மட்டும் தானே உங்களுக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன்” என்று வாங்கி வந்ததை இருவரிடமும் கொடுத்தான்.

மறுநாளில் அந்த தெருவே சூழ்ந்து நிற்க எதிரெதிரே நின்று இருந்தனர் தேவியும் வாசுவும். அதுவரையிலுமே பொம்மை போல கற்பகம் செய்ததை ஏற்றுக்கொண்டவள் தாலி கட்டும் முன் அவனை நிமிர்ந்து நோக்கி விட்டு மீண்டும் தலையை குனிந்து கொண்டாள்.

அவனோ குனிந்து இருந்த அவள் முகத்தை விட்டு பார்வையை எடுக்காமல், அவளையே பார்த்து நின்றான். உயர்ந்த கையில் மாங்கல்யம் தொங்கி கொண்டிருக்க அவன் இன்னும் கட்டாதது கண்டு அவள் விழி நிமிர்த்தி பார்க்க, கண்களால் அவளிடம் சம்மதமா என்று கேட்டான்.

அத்தனை பேர் மத்தியிலும் அவள் சம்மதம் வேண்டி அவன் நின்ற கோலம், நெஞ்சை நிறைக்க தலையை மேலும் கீழுமாக அசைத்து சம்மதம் கூறினாள் தேவி.

அடுத்து தேவியின் வீட்டு வாசலிலேயே போடப்பட்டு இருந்த ஷாமியானா பந்தலில் கீழ் எல்லாருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. தேவி வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. எல்லாமே வாசுவும் கோபால் தம்பதியும் தான் செய்தனர். வந்திருந்த எல்லார் மனதிலும் அன்றைய திருமணம் மட்டுமே நினைவில் நிற்க, பழையதை மறந்து அவர்களை வாழ்த்தி விட்டு சென்றனர்.

எல்லாம் முடிந்து இதோ அவள் வீட்டில் அவள் பக்கவாட்டில் படுத்து உறங்கி கொண்டிருக்கிறான் வாசு. அவள் கணவன். ஆத்மார்த்தமாக உணர்ந்து சொல்ல கூடிய உறவு.

“இன்னும் தூங்கலையா” அலைபாய்ந்த எண்ணங்களோடு போராடி கொண்டிருந்தவளின் கவனத்தை கலைத்தது வாசுவின் குரல்.

பதில் கூறாது பார்த்த விழி எடுக்காமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள். “நான் இங்கே இருக்கறது சங்கடமா இருந்தா நான் வேணும்னா கம்பெனிக்கு போய்டட்டுமா” என்றான் எழுந்து அமர்ந்து கொண்டு.

‘நன்றாய் இருக்கிறது, திருமணம் ஆன முதல் நாளே மனைவியை விட்விடுட்டு போகிறேன் என்கிறானே, என்ன நினைத்து கொண்டிருக்கிறான்’ என அவனையே முறைத்து கொண்டிருந்தாள் பெண்.

அவள் பார்வை மாறாமல் அவனையே முறைத்து வைக்க, தொண்டைக்குழிக்குள் எச்சில் விழுங்கியவன் “என்னம்மா” என்றான் கனிவாக.

அவ்வளவு தான் ஆக்ரோஷம் வந்தவள் போல எழுந்தவள் அவன் சட்டையை பிடித்து கொண்டு அழுது தீர்த்து விட்டாள். இடை இடையே அவள் தளிர் கரத்தால் அவனை அடிக்கவும் தவறவில்லை.

“எங்கே போனீங்க, அப்பாவும் இல்லாம நீங்களும் இல்லாம நான் தவிச்சு போவேன்னு உங்களுக்கு தெரியாதா. ரெண்டு நாள் உங்களுக்கும் என்னை பிடிக்காம தான் என்னை விட்டு போயிட்டீங்கன்னு நினைச்சு நினைச்சு செத்துகிட்டு இருந்தேன். இப்போ திரும்பி வந்ததும் என்னவெல்லாமோ செய்யறீங்க. போதாததுக்கு இப்பவும் என்னை விட்டு தனியா போறேன்னு சொல்றீங்க. சொல்லுவீங்களா இனிமே என்னை விட்டு போவீங்களா. போக மாட்டேன்னு சொல்லுங்க வாசு. என்னால தனியா இருக்க முடியாது. நீங்க இல்லாம இருக்க முடியாது. அப்பா உங்களை நம்பி தானே என்னை விட்டுட்டு போய்ருக்காரு. இப்படி என்னை தவிக்க விட்டுட்டு போவீங்களா, மாட்டேன்னு சொல்லுங்க வாசு” என அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு கதறினாள். அதுவரையில் கூட அவளை தொடாமல் பிரமித்து இருந்தவன், நெஞ்சில் புதைந்து கொண்டு அழுதவளின் கண்ணீர் துளியில், அவன் மீது வைத்திருந்த காதலை சொல்லாமல் சொல்லியதில், ஜென்ம சாபல்யம் பெற்றவன் போல உயிர்த்தெழுந்தான்.

மெதுவாக அவன் கைகள் உயர்ந்து தன் நெஞ்சில் புதைந்து கிடந்தவளின் தலையை நிமிர்த்தின. அவளோ முடியவே முடியாது என்னும் அளவிற்கு அவனிடம் ஒன்றிக்கொண்டாள்.

இதுவரையில் கைகளை மட்டுமே பிடித்து பேசி இருக்கிறான், மருத்துவமனையில் தந்தை உடல் நலன் பற்றிய கவலையில் அவன் தோள் சாய்ந்த போதும் ஏதும் தெரியவில்லை. இப்போது முதல் முதலாக மனைவியான பிறகு நெஞ்சில் சாய்ந்து உரிமையாக அவனை கேள்வி கேட்டு அழுது கொண்டிருப்பவளை அப்படியே இறுக நெஞ்சோடு அணைத்து கொள்ள கைகள் தடுமாறியது. ஏன் என்று அவனுக்கு தெரியவில்லை.

“தேவா இங்கே பாரும்மா” என்று அவள் முகம் நிமிர்த்தினான்.

கண்களை தாண்டி வழிந்த கண்ணீரை உள்ளங்கை கொண்டு துடைத்து விட்டான். அவள் கண்களை ஆழமாக பார்த்தவன் “என் தேவா எப்படி பட்ட பொண்ணு தெரியுமா, உடம்பு சரியில்லாத அப்பாவை தனி ஆளா நின்னு இத்தனை நாள் கண்ணுக்குள்ள வச்சு காப்பாத்தினவ. எதுக்குமே பயப்படாம தப்புன்னு மனசுக்கு பட்டதை அப்படியே நேரா முகத்தில அடிக்கிற மாதிரி சொல்றவ. அவளுக்கு நியாயம்னு தெரிஞ்ச ஒரு விஷயத்துக்காக தன்னோட வாழ்க்கையை பத்தி கூட யோசிக்காம இன்னொருத்தருக்காக நிக்கறவ. அவ்வளவு தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டவ, நான் இல்லை யார் இருந்தாலும் இல்லைன்னாலும் அவ தைரியம் என்னைக்கு குறையாது. அவ அழுது நான் பார்த்ததே இல்லை. அப்பா ஹாஸ்பிடல்ல இருந்தப்ப அழுதது அவருக்காக. மத்தபடி இனி எதுக்குமே அழ கூடாது, எனக்கே ஏதாவது ஆனா கூட” அவன் கூறி முடிக்கையில் அவள் கரம் அவன் வாயை மூடி இருந்தது.

“அப்படி சொல்லாதீங்க வாசு, நீங்க எனக்கு வேணும். எப்போ நான் உங்களை இந்த அளவுக்கு நேசிக்க ஆரம்பிச்சேன் தெரியலை. நீங்க சொல்லாம போனதும் என்னவோ என்னோட மொத்த பலமும் போன மாதிரி, இந்த உலகத்துல கடைசி மனுஷன்னு யாருமே இல்லாத மாதிரி, நான் மட்டுமே தனியா இருக்கற மாதிரி உணர்ந்தேன். யாருமே பக்கத்துல இல்லாதப்ப உங்களை மட்டுமே என் மனசு தேடுச்சு, உங்க தோள்ல சாய்ஞ்சுக்கனும் உங்க மடியில படுத்து தூங்கணும், நீங்க மட்டும் தான் என்னோட நிம்மதிக்கு வடிகால்ன்னு தோணுச்சு. அந்த நேசம் தான் நீங்க என்னை தப்பா நினைச்சுட்டீங்களோன்னு பதற வச்சது. உங்ககிட்ட எல்லா உண்மையும் சொல்லிடனும்னு துடிக்க வச்சது. உங்க பார்வையில நான் தப்பானவளா இருக்க கூடாதுன்னு நினைக்க வச்சது”.

அவள் கூறி கொண்டிருக்க, “யாரும்மா தப்பானவ, நீயா? தீயை விட புனிதமானவ என் தேவா. தப்பான என்னையே திருத்தி ஒரு மனுஷனா மாத்திருக்க. தப்பான ஒருத்தன்கிட்ட இருந்து ஒரு பொண்ணை காப்பாத்தி இருக்க, அதுவும் உன் வாழ்க்கையை கூட நினைச்சு பார்க்காம. நீ எப்படிம்மா தப்பானவளா இருப்ப. நான் எப்படி உன்னை அப்படி நினைப்பேன்” என்றான் அவள் கண்கள் பார்த்து.

“அப்பறம் ஏன் சொல்லாம கூட போனீங்க”

“தேவா சொல்லிட்டு போகவோ விளக்கம் சொல்லவோ எனக்கு நேரம் இல்லம்மா. முடிக்க வேண்டிய வேலை நிறைய இருந்தது அதனால தான் அப்படி கிளம்பி போனேன்”

“ஆனா நீங்க அப்படி சொல்லாம போகவும் என் மேலே கோபம்னு நினைச்சேன்”

“கோபமே இல்லைன்னு சொல்ல மாட்டேன். உன்கிட்ட என்னால பொய் சொல்ல முடியாது. கோபம் தான் இப்படி ஒரு பிரெச்சனை இருக்கறதை நீ என்கிட்ட சொல்லலைன்ற கோபம், உனக்கு என் மேலே நம்பிக்கை இல்லாம போச்சேன்னு கோபம். எவனோ ஒருத்தன் வந்து என் தேவாவை பத்தி தப்பா பேசும்போது என்ன ஏதுன்னு தெரியாம என்னால எதுவும் செய்ய முடியலையேன்னு கோபம். எல்லாத்துக்கும் மேலே அப்பா இறந்ததும் எனக்கு யாருமே இல்லை நான் அநாதை ஆகிட்டேன்னு சொல்லி அழுதியே அப்போ நான் எதுக்காக இருக்கேன்னு கோபம். அவர் உன்னை என்கிட்ட ஒப்படைச்சாரு. கடைசி நேரத்திலே கூட அவருக்கு இருந்த நம்பிக்கை உனக்கு இல்லைன்னு கோபம். இனி உனக்கு எல்லாமா நான் இருப்பேன்னு உன்கிட்ட சொல்ல முடியலைன்னு கோபம். என்னோட கோபத்தை கூட உன் கிட்ட உரிமையா காட்ட முடியலைன்னு கோபம். அழுதுகிட்டே இருந்த உன்னை அனைச்சு ஆறுதல் சொல்ல முடியலைன்னு கோபம் எல்லாம் சேர்ந்து தான் அப்படி கிளம்பி போக வச்சது. ஆனா அப்படி போனதும் நல்லதுக்கு தானே. எல்லாம் சரியா செய்ய முடிஞ்சது” என்றான் வருத்தம் தாங்கிய குரலில்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top