Member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 33
- Thread Author
- #1
Chapter 19
கைகூட்டையாகி
உன் கரங்களுக்குள்
சிக்கிக்கொள்ள நினைத்தேன்.
ஆனால், கசங்கியதும்
தூக்கி எரிந்து விடுவாய் என்று தான்,
உன் கைரேகையாகி,
உன்னுடனே பின்னிப் பிணைந்து இருக்கிறேன்.
தந்தையை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள் தேவயானி. மருத்துவமனையில் தந்தையை நினைத்து கதறி அழுதவள் தான் அதன் பிறகு அவள் அழவே இல்லை. என் அப்பாவை பார்த்துக்க நான் இருக்கேன் என மனதில் உறுதி கொண்டவள் அவரை கைகளுக்குள் வைத்து தாங்கினாள். ஆனால் ஒரு பெண் பிள்ளையாக இருந்து அப்பாவிற்கு அவள் செய்யும் சில வேலைகளில் மிகவுமே சங்கடப்பட்டு போவார் சோமு.
என்ன தான் மகள் முகம் சுளிக்காமல் அவருக்காக எல்லாம் செய்தாலும் பெற்ற தந்தையாக, ஒரு ஆணாக அவருக்கு அது மன வேதனையை தான் தந்தது.
வேலைக்கு ஆள் வைத்து கொள்ளலாம் என்று சோமு கூற, “அதெப்படிப்பா வரவங்க உங்களை நல்லபடியா கவனிச்சுப்பாங்கன்னு நான் நம்பறது, அப்படி வேற ஒருத்தவங்க கையில உங்களை கொடுத்துட்டு என்னால சும்மா இருக்க முடியாதுப்பா” என்றாள் அவள்.
“அம்மாடி என்னதான் இருந்தாலும் நீ பொம்பளை பிள்ளை”, அவர் சங்கடமாக தயங்கி நிறுத்த, “என்னப்பா பெத்த பிள்ளைக்கிட்ட ஆண் பொண்ணுன்னு பிரிச்சு பேசறீங்க. சின்ன வயசுல நீங்க தானேப்பா எல்லாம் செய்தீங்க. அப்போ இது மாதிரி நினைக்கலையே. அப்பறம் நான் மட்டும் எப்படிப்பா. பெத்த தகப்பனை பிள்ளை மாதிரி தாங்கற சந்தோஷம் யாருக்கு கிடைக்கும் எனக்கு கிடைச்சிருக்கு. ஏதாவது பேசிட்டு இருக்காம ரெஸ்ட் எடுங்க என்று அந்த பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தாள்.
சோமு அரசாங்க உத்யோகம் பார்க்கவில்லை, ஆனால் நல்லதொரு வேலையில் இருந்ததால் அவரின் உடல் நிலையை கருதி அவருக்கு விருப்ப ஓய்வும், குறிப்பிட்ட தொகையும் கொடுத்தார்கள். இன்னும் பத்து வருட சர்வீஸ் இருக்கும் கொஞ்சம் சம்பாதித்து மகளுக்கு சேர்த்து வைக்கலாம் என்று இருந்தவருக்கு இது கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால் நல்ல மனதோடு கொடுத்தவர்களுக்கு நன்றி கூறி அந்த தொகையை மகளின் பெயரில் போட முயன்றார். ஆனால் தேவி அதை தடுத்து பணத்தை தந்தையின் பெயரில் போட கூறி விட்டாள்.
இப்படியே சில நாட்கள் ஓடி இருக்க விஷயம் கேள்விபட்டு ஜெயலஷ்மி ஓடி வந்தாள். அவள் வந்த காரணம் அக்கறை ஒன்றும் இல்லை. தினம் தினம் மகன் தரும் தொல்லை தாங்க முடியாமல் இது தான் சாக்கென்றே சோமுவின் மூளையை சலவை செய்ய வந்தாள். எப்படியாவது பேசி அந்த பெண்ணை மகனுக்கு கட்டி வைத்து விட வேண்டும் என்று முடிவோடு வந்திருந்தாள்.
“எய்யா சோமு என்னய்யா இப்படி ஆகிடுச்சு” என அழுது புலம்பி கொண்டே வந்தவளை கண்டதும் தேவி புருவம் சுருக்கி யார் என தந்தையை பார்த்தாள்.
“அக்கா வாங்க” என வரவேற்றார் படுக்கையில் சோமு.
‘என்ன இவன் படுத்த படுக்கையா இருக்கான்னு சொன்னாங்க இவன் என்னை வரவேற்கறான்’ என யோசனையோடு வந்தாள் ஜெயலக்ஷ்மி.
உட்காருக்கா என உபசரித்தவர், மகளை திரும்பி பார்க்கும் முன்னே அவளுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்திருந்தாள் தேவி. “உனக்கு ஏதோ உடம்புக்கு முடியலைன்னு”.. ஜெயலஷ்மி சந்தேகமாக கேட்கவும் “ஆமாக்கா இடுப்பு எலும்புல அடிபட்டு நடக்க முடியாம ஆகிடுச்சு” என்றார் வருத்தமாக.
“ஓஹோ, மத்தபடி வேற” வேறு ஏதாவது இருக்க வேண்டுமே என்று வேண்டி கொண்டே கேட்டாள் ஜெயலஷ்மி.
“அப்படி எதுவும் இல்லை அப்பா நல்லா இருக்காங்க” என சோமுவை முந்திக்கொண்டு பதில் சொன்னாள் தேவி.
“ஆ.. ஆ.. அப்படின்னா சந்தோஷம் தான், இனி எல்லாம் படுக்கையிலே தான்னா யாரு உன்னை பார்த்துப்பாங்க, வேலைக்கு ஆள் வச்சிருக்கியா மத்த விஷயமெல்லாம் எப்படி”
“இல்லைக்கா, ஆள் எல்லாம் வேண்டாம்னு பாப்பா வேண்டாம் சொல்லிடுச்சு, அதுவே தான் பார்த்துக்குது”
அய்யே.... என முகத்தை சுளித்தவள் தேவியின் இடுங்கிய பார்வையில் சுதாரித்து, “அது சரி பெத்தவனை பிள்ளை பார்க்காம யார் பார்ப்பா. என்ன இருந்தாலும் நம்ம பார்க்கறமாதிரி வேலையாட்கள் பார்ப்பாங்களா” என பேச்சை மாற்றினாள்.
அடுத்து ஏதோ பேச வந்தவள், “ஏம்மா தேவி அத்தைக்கு ஒரு வாய் காபி கொடுக்க மாட்டியா” என கேட்டு வைக்க, “இதோ போட்டு வச்சிருக்கேன் நீங்க பேசிட்டு இருந்தீங்க அதான்” என கையோடு கொண்டு வந்து கொடுத்தாள் தேவி.
காபியை எடுத்து கொண்டவள் ம்ம் தெளிவு தான் போல என நினைத்து கொண்டு, “சரிம்மா நீ கொஞ்சம் உள்ளே இரு” என கூற, தந்தையை பார்த்தவள் அவர் தலையசைக்கவும் உள்ளே சென்றாள்.
“இங்கே பாரு சோமு என்னடா அக்கா இந்நேரத்திலே இப்படி பேசறாளேன்னு நினைக்க கூடாது. நாம நல்லா இருக்கும்போதே நம்ம புள்ளைங்களுக்கு ஏதாவது நல்லது செஞ்சிடனும். இல்லை நாளைக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு நடந்த பிறகு அதுங்களை அனாதையா விட்டுட்டு போய்டா கூடாது பாரு அதான் சொல்றேன். இப்பவவும் உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன், உன் மகளை என் வீட்டுக்கு அனுப்பு நான் தங்கமா வச்சுக்குவேன். நீயும் உன்னோட மக வீடு சொந்த அக்கா வீடுன்னு உரிமையோட அங்கே வந்து தங்கலாம். அப்படி இல்லையா பக்கத்திலேயே ஒரு வீடு பிடிச்சு தரேன் அங்கே இரு, உன் புள்ளையை பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியும் ஆச்சு உனக்கு ஒத்தாசைக்கு பிள்ளை பக்கத்திலேயே இருக்கும் அவ்வளவு தான் சொல்வேன். இதுல எனக்கு எந்த ஆதாயமும் இல்லை இதை போடு அதை போடுன்னு உன்னை நான் கேட்க போறது கிடையாது. நீ பார்த்து எது செஞ்சாலும் சரி செய்யலைன்னாலும் சரி. நாளைக்கு உனக்கு முடியாம போய்ட்டு நீ அந்த பிள்ளையை தனியா விட்டுட்டு போய்ட கூடாது அதான் என் வருத்தம் யோசிச்சு சொல்லு. நான் வரேன்” என்று கிளம்பி விட்டாள்.
அவள் சென்றதும் விட்டத்தை பார்த்து படுத்து கொண்டிருந்த தந்தை அருகே வந்தாள் தேவி. “அப்பா அவங்க சொன்னதை எல்லாம் நான் கேட்டுகிட்டு தான் இருந்தேன். உங்களுக்கு ஒண்ணும் இல்லை நீங்க இன்னும் ரொம்ப வருஷம் நல்லா இருப்பீங்க, சொல்லப்போனா இன்னும் கொஞ்சம் நாள்ல நல்லபடியா எழுந்து நடமாடவே ஆரம்பிச்சுடுவீங்க. ஆளாளுக்கு அறிவுரைன்னு ஏதேதோ சொல்வாங்க அதை எல்லாம் மனசில வச்சுக்காதீங்க. எல்லாம் சரியாகிடும்” என்று கூறினாள்.
மகள் அவருடைய ஆறுதலுக்கு என்ன கூறினாலும் சோமுவின் மனம் சமாதானம் அடைய மறுத்தது. ஒரு வேலை அக்கா சொன்னது போல ஏதாவது நடந்து என் மகள் தனியாக நின்று விட்டால் என்று அதிலேயே உழன்று கொண்டிருந்தவர் அடுத்த இரண்டு நாட்களில் தேவியிடம் இது பற்றி பேசினார்.
“ஏம்மா அப்பாவை கடைசி வரைக்கும் உன் கூடவே வச்சிருக்கணும்னு நீ நினைக்கறியா” என்று கேட்டார்.
“என்னப்பா இப்படி கேட்கறீங்க, நான் என்ன நினைப்பேன்னு உங்களுக்கு தெரியாதா”
“அதனால தான்மா சொல்றேன், அப்பா உன்னை விட்டு போக கூடாதுன்னு நினைச்சா நீ ஜெயாக்கா பையனை கல்யாணம் பண்ணிக்கணும்மா” என்றார்.
“என்னப்பா பேசறீங்க, அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு”.
“இருக்கும்மா, நாளைக்கு உன்னை வேற வீட்டுக்கு கொடுத்தா என்னை தனியா விட்டுட்டு தான் நீ போக வேண்டி இருக்கும், அதுவே சொந்தம்னா கொஞ்சம் புரிஞ்சுக்குவாங்க, அக்காவும் என்னை அங்கேயே உன்கூடவே தங்கிக்க சொல்றாங்க அதான் மா யோசனையா இருக்கு” என்றார்.
“அப்பா அவங்க பையன்னு இல்லை நான் யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் எங்கப்பா என்கூடத்தான் இருப்பார்னு கண்டிஷனோடதான் கல்யாணம் பண்ணிப்பேன். அதனால நீங்க இப்போவே இதை எல்லாம் யோசிக்காதீங்க”
“நீ சொல்லலாம் கண்ணு ஆனா உனக்கு வர போறவங்க முதல்ல சரின்னு சொல்லிட்டு அப்பறம் மறுத்தா என்னடா பண்ண முடியும்”
“இப்படி சொன்னா எப்படிப்பா, நாளைக்கு இவங்க மாற மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்”
“இருக்கலாம்மா ஆனா சொந்ததுல உரிமையா கேள்வி கேட்க முடியும்”
அவர் நினைப்பது அவளுக்கு புரிந்தது, எங்கே இந்த நிலையில் மகளை தனியாக விட்டு சென்று விடுவோமோ என்ற பயம். அதனால் தான் ஏதேதோ யோசிக்கிறார். அவருக்கு இப்போதைக்கு தைரியம் சொல்லி தேற்ற முடியாது, ஏனெனில் ஏற்கனவே மனைவியை இழந்தவர் மகளை பிரிய முடியாமல் தவிப்பது தான் இந்த குழப்பத்திற்கு எல்லாம் காரணம். அதற்கு மேல் தந்தையுடன் வாதிட முடியாதவளாக, “ஆனா அப்பா படிப்பு முடியட்டுமே” என தயங்கினாள்.
“அது வரைக்கு அவங்க காத்திருக்க மாட்டாங்களேம்மா, படிப்பு முடிய இன்னும் நாலு மாசம் தானே இருக்கு கல்யாணத்தை பண்ணிட்டு எக்ஸாம்ஸ் எழுதலாம்டா” மிகவுமே கெஞ்சினார் மனிதர். பாவம் அவருக்கு அவர் பயம்.
ஒரு நெடுமூச்சை இழுத்து விட்டவள், ”சரிப்பா உங்க இஷ்டம், ஆனா எனக்கு ரெண்டு கண்டிஷன் இருக்கு, ஒண்ணு எக்காரணம் கொண்டும் என்னோட படிப்புல நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டேன், அதே போல நீங்க என்னோட தான் இருக்கனும், இப்போ சொல்லிட்டு அப்புறம் மாத்தி பேசறது எல்லாம் சரியா இருக்காது” என்றாள் உறுதியாக .
உடனே உற்சாகமானார் சோமு, “சரிம்மா நீ சம்மதம் சொன்னதே போதும் நான் ஜெயா அக்காகிட்ட பேசிக்கிறேன்” என்று கூறினார்.
இங்கே மகனிடம் குதூகலமாக சோமு திருமணத்திற்கு ஒத்து கொண்டதை பற்றி கூறி இருந்தாள் ஜெயா. நக்கலாக தாயை பார்த்தவன் “அந்த ஆள் தப்பிச்சுட்டான்” என்றான்.
“என்ன தம்பி சொல்ற”..
“ஆமா அந்த ஆளுக்கு மட்டும் இப்படி ஒரு விஷயம் நடக்காம இருந்திருந்தா, ஒரு வேலை செத்து போய்ருப்பான்” சந்தேகமாக அவன் கூற புரியாமல் பார்த்த தாய் “என்னப்பா சொல்ற” என்றாள்.
“ஆமா நான் அவனை ஆள் வச்சு போட்டுருப்பேன்ல” என்றான் சாதாரணமாக.
“அய்யோ தம்பி அப்படி எல்லாம் பண்ணிடாத, தாய் பதறவும், என்ன தம்பி பாசமா” என்றான் நக்கலாக.
“அதெல்லாம் நமக்கெதுக்குப்பா, சும்மா எதுக்கு அந்த உயிர் போகணும் என்னைக்கு இருந்தாலும் நமக்கு தேவைப்படுமே அதான் சொன்னேன்” என்றாள் அவனின் தாய் என்பதை நிரூபிக்கும் விதமாக.
ம்ம் என தாயை மெச்சும் பார்வை பார்த்தவன், “எப்போ கல்யாணம்” என்றான் அவசரமாக.
“உடனே வச்சுக்கலாம்னு சொல்லிட்டு தான் வந்தேன், நீ தான் பொண்ணை பார்த்துட்டியே”
“அவ என்னை பார்க்கலையே”
“அவங்கப்பன் பார்த்தா போதும்னு சொல்லிட்டா”
“சரி சரி, சீக்கிரம் தேதி குறி”
அவன் சொன்னது போல விரைவிலேயே தேதி குறிக்கப்பட்டது, சோமு கேட்டுக்கொண்டது எல்லாம் மகளின் கோரிக்கைகள் மட்டுமே. அதை அப்படியே நிறைவேற்றுவதாக ஜெயா சொல்லிவிடவும் வேறு எந்த பேச்சுக்கும் இடமில்லாமல் திருமணம் நடந்தேறியது. தந்தைக்கு தெரியும் என்பதாலேயே தனக்கு என எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தவள் வேறு எந்த கேள்விகளும் கேட்காமல் திருமணத்திற்கு தயாரானாள். அவளுக்கு தேவையானதாக குணம் மட்டுமே முன்னிலையில் இருக்க, தந்தை தனது குணத்திற்கு ஏற்றவரை தான் தேர்ந்தெடுப்பார் என்று கண்ணை கட்டிகொண்டு களத்தில் இறங்கி இருந்தாள் பெண்.
முதன் முதலில் அவனை பார்த்தது சடங்குகளின் போது தான், பெரிதாக எதிர் பார்ப்புகள் இல்லாத பெண்ணாதலால் அவனின் தோற்றத்தில் எந்த வித ஏமாற்றமும் அவளுக்கு ஏற்படவில்லை. அவனும் பார்வைக்கு நன்றாகவே இருந்தான் என்பது வேறு விஷயம். சகஜமாக பேசினான் மரியாதையாக நடத்தினான் கனிவாக தெரிந்தான். அவ்வளவு தான் அப்போதைக்கு அவனை பற்றி தெரிந்தது.