• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Dec 11, 2025
Messages
33
Chapter 18

காற்றாகி
என் மூச்சுக் காற்றுடன்
கலந்த உனை,
என்னிடமிருந்து,
யார் பிரிப்பது?

உனைப் பிரிந்தால்,
என்னுயிரும் அல்லவா
பிரிந்து போகும்.

கழுத்தில் பொன்னில் செய்த தாலி கொடி மின்ன லேசான பட்டில் செய்த சேலை உடுத்தி அமர்ந்து இருந்தாள் தேவயானி. அவள் அருகில் அமர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள் கற்பகம். அவள் பேசியது காதில் விழுந்ததே தவிர கருத்தில் பதியவில்லை. பார்வையில் படும் தூரத்தில் நின்று கோபாலுடன் பேசிக்கொண்டிருந்த வாசுவின் முதுகை துளைத்து கொண்டிருந்தது அவள் விழிகள்.

அவள் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்தும் திரும்பி பாராமல் இருந்தான் அவன். அவள் வீடு தான் இன்று புதிதாக தோன்றியது. கண்ணை உறுத்தாத இளம் வண்ணம் அடித்து, சில மாற்றங்கள் செய்து அவளுக்காக அந்த வீட்டை விலைக்கு வாங்கி இருந்தான் வாசு. இது கூட கற்பகம் சொல்லித்தான் அவளுக்கு தெரிந்தது. தந்தை கடைசியாக வாழ்ந்த வீடு அவளுக்கு அதை பிரிய மனமில்லை தான், ஆனால் யாரோ ஒருவர் வீட்டில் அப்படி ஆணி அடித்தது போல அமர்ந்து கொள்ள முடியாதே. இங்கே நடந்த கலவரங்கள் தெரிந்து வீட்டின் உரிமையாளர் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு போக இனி இதை விட்டு கிளம்பித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்தவளுக்கு, அடுத்து நடந்தது எல்லாம் இப்போதும் கூட கனவு போலத்தான் இருந்தது. திடீரென்று ஒரு நாள் வந்தான், நாளை திருமணம் என்றான். அதை நடத்தி காட்டி இதோ அவள் கழுத்தில் மின்னிக்கொண்டிருக்கிறது பொன் தாலி. குனிந்து அதை பார்த்து கொண்டாள்.

“தேவி, எதை பத்தியும் யோசிக்காத, இது உனக்கான வாழ்க்கை. சந்தோஷமா வாழும்மா. என்னால நடந்த எதையும் நம்பவே முடியலை, எப்படி எப்படியோ என்னவெல்லாமோ நடந்து போச்சு. நடந்தது எல்லாமே நல்லதுக்கா கெட்டதுக்கான்னு யோசிக்காத. உன்னை தேடி வந்த வாழ்க்கையை வாழும்மா” என கூறிய கற்பகம் எழுந்து வெளியே வந்தாள். அவள் வரவும் பேசிக்கொண்டிருந்த கோபால் “அப்போ சரி வாசு வரேன்” என கூறி விட்டு நகர, “வரேண்ணா” என கூறிவிட்டு கற்பகம் கணவனோடு நடந்தாள். இருவரும் பக்கத்தில் இருந்த அவர்கள் வீட்டை நோக்கி செல்ல, இவன் தனது கூட்டை நோக்கி சென்றான்.

கதவை தாழிட்டு விட்டு உள்ளே வந்தவன், தலையை சுவற்றில் சாய்த்து முட்டியில் கை பதித்து அமர்ந்து இருந்தவள் அருகே வந்து, “படுக்கலாம்” என்றான்.

அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, புதிய தலையணை மெத்தையை எடுத்து விரித்து கொண்டிருந்தான். அவள் வெறும் பார்வையாளராக மட்டும் இருக்க, அவனே எல்லாம் செய்தான். வேலையை முடித்தவன் பொத்தென அதில் விழுந்தான். குப்புற படுத்து கொண்டே தலையை மட்டும் உயர்த்தி அவளை பார்த்தான். அவள் விழிகள் அவனை தான் பார்த்து கொண்டிருந்தன. இருவரின் விழிகளும் ஒன்றோடொன்று உரசிக்கொள்ள ஒரு நொடி விழி மூடி திறந்தவன் மறுபக்கம் திரும்பி படுத்து கொண்டான்.

இங்கே அவள் தான் வெறிக்க வெறிக்க அவனை பார்த்து கொண்டிருந்தாள். அந்த பக்கம் திரும்பியவனோ, இத்தனை நாளுக்கும் சேர்த்து வைத்து நிம்மதி பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவன் நிர்சலனமாக உறங்கி இருந்தான்.

எத்தனை நேரம் அவனை பார்த்து இருந்தாலோ அமைதியான அந்த இரவு பொழுதில் அவன் மூச்சு காற்றின் சத்தம் மட்டுமே சுவர்களில் பட்டு எதிரொலித்து கொண்டு இருந்தது. இதெல்லாம் எப்படி சாத்தியம் அன்று அருண் வந்து இவ என்னோட பொண்டாட்டி என்று கூறியபோது வாசலில் நின்று இருந்தவனின் முகம் அப்படியே இருளடைந்து போனதை அவள் கண்கூடாக கண்டாள். அருண் பேச பேச இவன் முகம் கண்றி வெளியேறியதை ஒரு வித கையாலாகா தனத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.

அங்கிருந்தவர்கள் எல்லாம் அருண் சொன்னதை மட்டுமே உண்மை என்று நம்பி அவளுக்கு அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று அவளையே குற்றம் சாட்டி விட்டு சென்ற போதும், அதெல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. ஆனால் அவன் ஒருவன் பதில் ஏதும் பேசாமல் வந்தவழியே திரும்பி சென்றதை தான் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மற்றவர்கள் அவளை எப்படி பார்த்தாலும் கூட பரவாயில்லை ஆனால் அவன் பார்வையில் அவள் தரம் தாழ்ந்தவளாக இருப்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது.

தந்தையின் இறப்பு ஒரு புறம் தாங்கிக்கொள்ள முடியாத வலியை தந்திருக்க, அவன் அவள் முகத்தை கூட பாராமல் எதுவும் பேசாமல் திரும்பி சென்றது இன்னும் அதிக வலியை ஏற்படுத்தியது. ஒரு பெண் எத்தனை வலிகளை தான் தாங்கி நிற்பாள். அவனிடம் சென்று அவளை நியாயப்படுத்த வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை. ஆனால் அவள் வாழ்வில் நடந்ததை இன்று அவனிடம் கூறியே ஆக வேண்டும் என்று ஒரு எண்ணம் எழுந்தது.

எப்படி எப்போது என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை சட்டென எழுந்து கிளம்பி இருந்தாள். இரவு நேரம் தெருவில் யாரும் இருக்கவில்லை. வேகவேகமாக நடந்தவள் கம்பெனியை அடைந்திருக்க அலுவலக அறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது அதை நோக்கி செல்ல அதன் வாசலிலேயே கட்டிலை போட்டு படுத்திருந்தான் வாசு. இவள் அரவம் கேட்டோ அல்லது உள்ளுணர்வின் உந்துதளிலோ கவிழ்ந்து படுத்திருந்தவன் சட்டென தலை நிமிர்த்தி பார்த்தான். அவனை கண்டதும் அங்கேயே நின்று விட்டாள் அவள். எழுந்தவன் கட்டிலின் விளிம்பில் இரு கைகளையும் ஊன்றி அமர்ந்தான்.

என்ன நடந்தது என்று ஒரு கேள்வி கூட கேட்காமல் வந்து விட்டாயே என்று அவள் பார்வை அவனை குற்றம் சாட்ட, அவனோ எதற்கு வந்தாய் என்பது போன்ற பார்வையை அவளை நோக்கி வீசினான். அவன் விலகல் குத்தூசியாய் இதயத்தை குத்த கண்களை மூடி திறந்தவள் “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.

“இனி பேச என்ன இருக்கு, எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றான் அவன் தரையை வெறித்தபடியே.

அவளுக்கு முனுக்கென கண்ணீர் எட்டி பார்த்தது, நீண்ட மூச்சை இழுத்து விட்டு கொண்டு தன்னை சமன் செய்து கொண்டவள், “என் தரப்பு நியாயத்தை சொல்லி அனுதாபம் தேடிக்க நான் இங்கே வரலை, என்னவோ மனசை அழுத்தி இறுக்கமா பிடிச்சிட்டு இருக்கற மாதிரி இருக்கு. நெஞ்செல்லாம் வலிக்குது, யார்க்கிட்டயாவது சொன்னா கொஞ்சம் தேவலாம் போல தோணுச்சி அதான் வந்தேன். இப்போதைக்கு உங்களை தவிர என் மனசுக்கு நெருக்கமானவங்க யாரும் இல்லை” என்ற போது அவள் குரல் உடைந்து போய்ருந்தது. உடல் இறுக அமர்ந்து இருந்தவனோ சற்று நகர்ந்து கொண்டு இடது கையை காட்டி அமருமாறு சைகையில் கூறினான். மெதுவாக எட்டு வைத்து அவனருகே வந்து அமர்ந்தாள். இப்போது அவன் முகத்தை முழுவதும் இருள் மறைத்து இருந்தது.

“அம்மா இறந்ததுக்கு அப்பறம் எல்லா சவால்களையும் மீறி அப்பா என்னை நல்லபடியா வளர்த்தார். பிரெச்சனைகள்னு எதுவும் இல்லாம நான் அப்பான்னு ரெண்டு பேர் மட்டுமே இருந்த கூட்டுக்குள்ள வாழ்க்கை ரொம்ப நல்லா போய்ட்டு இருந்தது. காலேஜ் மூணாவது வருஷம் படிக்கும்போது, ஒரு நாள் அப்பாவுக்கு கீழே விழுந்து அடி பட்டிருச்சு. லேசான அடி தான் சரியா போச்சுன்னு விட்டுடாரு. எக்ஸ்ரே எடுத்து பார்க்கலாம்னு எவ்வளவோ சொன்னேன் அவர் கேட்களை. திடமா இருக்கற மனுஷனை கலவரப்படுத்த வேண்டாம்னு நானும் விட்டுட்டேன்".

"அப்போ தான் ஒரு கல்யாணத்துல தூரத்து சொந்தமான ஜெயலக்ஷ்மி அத்தை எங்களை பார்த்தாங்க. பார்த்ததுமே என்னை புடிச்சு போய் அப்பாகிட்ட பொண்ணு கேட்டுடாங்க".

"என்ன தம்பி இப்படி யோசிக்கற, அம்மா இல்லாத குறை தெரியாம உன் புள்ளையை அருமையா வளர்த்து வச்சிருக்க. என்கிட்ட கொடுத்தா இன்னொரு அம்மாவா இருந்து நான் பார்த்துக்க மாட்டேனா”

“அதுக்கில்லைக்கா இப்போ தான் தேவி மூணாவது வருஷம் படிக்குது, படிப்பு முடிய இன்னும் ஆறு மாசம் தான் இருக்கு அதுக்கப்பறம் கல்யாணத்தை பத்தி பேசலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்க கேட்கறீங்க” என்றார் யோசனையாக.

“அட என்ன சோமு, படிப்பு முடிய இன்னும் ஆறு மாசம் தான் இருக்குன்னு நீயே சொல்ற கல்யாணத்தை முடிச்சுடுவோம், அப்பறம் ஆறு மாசம் தானே காலேஜ்க்கு போய்ட்டு வந்துடட்டுமே” என்றார்.

“கல்யாணம் பண்ணிட்டு காலேஜ் போறது எல்லாம் சரியா வருமாக்கா” சோமு இருமனதாகவே கேட்டார்.

“அதெல்லாம் சரியா வரும் நீ சரி சொல்லு போதும், ஒரு வேலை நீ என்னோட புள்ளையை பத்தி யோசிக்கறியோ, நம்ம ஊர்ல வந்து கேட்டு பாரு அவனை மாதிரி தங்கமான புள்ளை எட்டு ஊருக்கும் கிடைக்க மாட்டான். படிச்சு வெளியூர்லயே வேலை கிடைச்சு கூட, நம்ம ஜனங்களுக்கு நாம தான் காவலா இருக்கனும்னு பஞ்சாயத்து பிரெஸிடெண்ட்க்கு நின்னு ஜெய்ச்சு ஊருக்கே தலைவரா இருக்கான். நீ வேணும்னா வந்து விசாரிச்சுக்கோ”

“அய்யோ விசாரிக்கறது எல்லாம் தேவை இல்லைக்கா, நான் எதுக்கும் புள்ளையை ஒரு வார்த்தை கேட்டுட்டு உங்களுக்கு சொல்றேனே”

“இங்கே பாரு சோமு தாயில்லா பிள்ளை அசல்ல கட்டி கொடுத்துட்டு என்ன பாடு படுதோன்னு எட்ட நின்னு நீ கண்ணை கசக்கி கிட்டு இருக்க வேண்டாம். நாம சாதி சனம் உறவு ஒண்ணுக்குள்ள ஒண்ணு நம்ம வீட்டுல நம்ம பொண்ணு இருந்தா உனக்கும் வயசான காலத்துல உரிமையா தங்கி போக இருக்கும்ல அதான் சொன்னேன் அப்பறம் உன் இஷ்டம்” என குட்டையை குழப்பி விட்டுவிட்டு சென்று விட்டாள் ஜெயலக்ஷ்மி.

ஏற்கனவே, தேவியின் அழகும் பாந்தமான குணமும் கண்டு இரண்டு மூன்று இடத்தில் கேட்கத்தான் செய்தார்கள். எல்லாமே அசல் அதனால் படிப்பை காரணம் காட்டி மறுத்து வந்தவருக்கு, இந்த இடத்தை மறுக்க காரணம் இருக்கவில்லை மகளிடம் பேசிபார்க்கலாம் என்று நினைத்தார்.

“நீ என்னம்மா சொல்ற” பாத்திரங்களை கழுவிகொண்டிருந்த மகளிடம் நடந்ததை சொல்லி கேட்டார்.

“அப்பா எதுவா இருந்தாலும் நான் படிப்பை முடிச்சு ஒரு வேலைக்கு போய் உங்களுக்கு என்னோட சம்பளத்துல ஏதாவது வாங்கி கொடுத்த பிறகு தான் என்னோட கல்யாணத்தை பத்தியே யோசிப்பேன்” உறுதியாக கூறினாள்.

ஆனால் அவள் ஏதோ சிறுபிள்ளை தனமாக பேசுவது போல தோன்றியது சோமுவிற்க்கு, எத்தனை வயதானாலும் பிள்ளைகள் பெற்றவர்க்கு குழந்தைகள் தானே. ஆனால் அதுவே கல்யாணம் என்று வந்தால் மட்டும் பெண் பிள்ளைகள் வளர்ந்து விட்டதாக தோன்றும் போல.

“அதென்னம்மா அப்படி சொல்லிட்ட, நம்மகிட்ட இல்லாதது என்ன இருக்கு சொல்லு, எனக்கு உன்னோட கல்யாணத்தை கண்ணால பார்க்கணும் கண்ணு அதான் சொன்னேன்”

“ஏன்பா நான் என்ன அவ்வையார் ஆக போறேன்னா சொன்னேன், நானும் கல்யாணம் பண்ணிப்பேன், அதுகுண்டான பக்குவம் வந்த பிறகு” என்றாள் பக்குவப்பட்ட பெண்ணாக.

“என்னம்மா நீ, இப்போ அவங்களுக்கு என்ன பதில் சொல்றது” சோமு தலையை சொறிந்தார்.

“என் பொண்ணு படிப்பை முடிச்ச பிறகு தான் கல்யாணம், அதுவரைக்கும் காத்திருக்க முடிஞ்சா இருங்க இல்லைன்னா வேற இடம் பாருங்கன்னு சொல்லிடுங்க”

எப்போதும் மகள் பேச்சு கேட்டு, அவள் விருப்பு வெறுப்புக்கு மரியாதை கொடுத்து வளர்த்தவர் இந்த விஷயத்திலும் அவள் பேச்சை கேட்டார். படிப்பு முடியட்டும் என அக்காவிடம் சொல்லி விட்டார்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top