New member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
Chapter 17
அழியாத நினைவுகளாய்
என்னுள் பதித்து விட்டு போனாய்,
உன் காதல் முத்திரையை.
காலங்கள் கடந்த போதும்
மாறாமல் இருக்கிறது,
காதலின் நினைவுச் சின்னமாய்.
அதிகாலை ஐந்து மணிக்கு லேசாக சிணுங்கிய செல்போனின் ஒலியில் கண்களை திறந்து பார்த்தான் வாசு.
கோபால் தான் அழைத்திருந்தான், சலிப்பாக கண்களை கசக்கியவன் விருட்டேன எழுந்து அமர்ந்தான். வேகமாக போனை ஆன் செய்து காதில் வைத்தான், “தேவாக்கு ஒண்ணுமில்லையே” என்றான் படபடப்பாக.
“இல்லைப்பா அவங்க அப்பாக்கு தான் உடம்புக்கு முடியலை” என்றான் கோபால் அந்த பக்கம்.
ஒரு காதில் போனை வைத்து கொண்டே எழுந்து உடையை மாற்றியவன் “ஒரு ஐஞ்சு நிமிஷம் இதோ வந்துட்டேன் அவளை பார்த்துக்கோ” என்று சாவியை எடுத்து கொண்டு அறையை பூட்டிவிட்டு வெளியே வந்தான்.
அவனது கார் அதிகம் எடுப்பதே கிடையாது, எடுக்கும் அவசியமும் வந்தது இல்லை, எப்போதாவது எங்காவது லாங் டிரைவ் மாதிரி செல்லும்போது எடுப்பது தான், கடைசியாக சோமுவை மருத்துவமனை அழைத்து செல்லும்போது எடுத்தது. தூசி படிந்திருந்த உறையை உருவி வீசி விட்டு இருக்கையில் ஏறி அமர்ந்து வேகமாக கிளப்பி கொண்டு வந்து நின்றான்.
வாசலிலேயே கோபால் நிற்க, வேகமாக உள்ளே ஓடியவன் கண்கள் தன்னவளை தேடி அலைபாய்ந்தது. மூச்சு விட சிரமபட்டுக்கொண்டிருந்த தந்தையின் அருகில் செய்வதறியாது கண்கலங்கி நின்று இருந்தவள் அவன் அரவம் கேட்டு திரும்பி பார்க்க, மலுக்கென கண்ணீர் உடைப்பெடுத்து கொண்டது. ஆனாலும் உதட்டை கடித்து அதை அடக்க முயன்றவளை தாவி வந்து அணைத்து கொள்ள துடித்தவன் அருகில் கற்பகம் நிற்கவும் தன்னை கட்டுபடுத்தி கொண்டு சோமுவின் பக்கம் பார்வையை திருப்பினான்.
அடுத்து ஒரு நொடி கூட தாமதிக்காது, அவரை அப்படியே கையில் ஏந்திக்கொண்டவன், "கோபால் கதவை திற" எனவும் அவன் கார் அருகே ஓடினான்.
“ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்துக்கம்மா என்று தேவாவை பார்த்து கூறிவிட்டு, நீங்களும் கொஞ்சம் கூட வாங்க” என்றான் கற்பகத்திடம்.
“ஆ சரி வீட்டை பூட்டிட்டு வந்துடறேன்” என்று அவள் ஓடினாள். இவன் சோமுவை கார் அருகே தூக்கி கொண்டு வர கோபால் கதவை திறந்து விட்டான். தேவா முதலில் ஏறிக்கொள்ள அவள் மடியில் அவரின் தலையை வைத்து படுக்க வைத்தான். கற்பகம் ஓடி வந்து பின்புறம் ஏறிக்கொண்டு அவரின் காலை எடுத்து தனது மடியில் வைத்து கொண்டாள்.
கார் சீரி பாய்ந்து இயந்திர காளையாக ஓடிகொண்டிருக்க, கட்டுபடுத்த முடியாத அழுகையை இதழ்களை கடித்து அடக்கி கொண்டிருந்தவளை கண்ணாடி வழியாக பார்த்து கொண்டே வந்தவனுக்கு நெஞ்சை வலித்தது.
ஒண்ணும் ஆகாதுடி கலங்காத மனதோடு ஆறுதல் சொல்லிக்கொண்டே வந்தான். மருத்துவமனை வாசலில் வந்ததும் அவன் விடாது ஹாரன் அடிக்க, ஓடி வந்து கதவை திறந்து விட்டார் காவலாளி. இன்னும் சிறிது நேரம் தாமதித்து இருந்தாலும் கூட கதவை முட்டி உடைத்து இருப்பான் அவன். தீயாக வாட்ச்மேனை முறைத்து விட்டு வண்டியை நிறுத்தியவன், "ஸ்ரெட்சர் கொண்டு வா கோபால்" என கூறிக்கொண்டே இறங்கி கார் கதவை திறந்து அவரை வெளியே தூக்கினான். அதற்குள் மருத்துவ சிப்பந்திகள் ஓடி வர அவசரமாக உள்ளே அழைத்து செல்லப்பட்டார் சோமு.
பின்னாலேயே ஓடியவளை இழுத்து பிடித்து தன்னுடன் நெருக்கிக்கொண்டவன் தன் கையணைவிலேயே அவளை அழைத்து சென்றான்.
அவர்கள் உள்ளே செல்ல, மருத்துவரிடம் அவரின் அறிக்கையை கொடுத்தான். அதை பார்த்து கொண்டே அவர் உள்ளே செல்ல தோய்ந்து போய் சரிந்தவளை சட்டென அவன் தாங்கி கொள்ள, மறுபுறம் கற்பகம் பிடித்து கொண்டாள். அங்கிருந்த ஒரு இருக்கையில் அவளை அமர வைத்து இருவரும் இருபுறமும் அமர்ந்து கொண்டனர். சுவற்றில் தலை சாய்த்து அமர்ந்து இருந்தவளை பார்க்க பார்க்க மனம் துடித்து போனான் வாசு.
“என்னம்மா இது உனக்கு தான் அவர் நிலைமை தெரியுமே தைரியமா இருக்க வேண்டாமா” என்றான் சற்று குரலை அழுத்தி.
கண்களை மூடிதிறந்தவள், “இதுவரைக்கும் அப்பா இவ்வளவு சிரமப்பட்டு நான் பார்த்தது இல்லை. அதனால தான் பயமா இருக்கு” என்றவள் கண்கள் மூடிக்கொண்டாள். அருகில் இருந்த கற்பகம் அவள் தோளை வருடி கொடுக்க, கோபால் அவளை கண்ணசைவில் வெளியே வா என்று அழைத்தான்.
“என்ன என்றபடியே கற்பகம் எழுந்து செல்ல, வாசு அந்த பொண்ணை பார்த்துப்பான். அவன் தவிப்பு உனக்கு புரியாது” என்றான் தூரத்தில் நின்று அவர்களை பார்த்தபடியே.
அப்படியா என்று கேட்டு கற்பகம் திரும்பி பார்க்க, அவள் எழுந்து செல்லவே காத்திருந்தவன் போல தேவியின் கை பற்றிக்கொண்டான். சட்டென அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள் பெண். அவன் அணைப்பை எதிர் பார்த்திருந்தாளோ என்னவோ அதற்காகவே காத்திருந்தது போல அவள் சாய்ந்து கொள்ள தோளோடு அவளை அணைத்து கொண்டவன் தலையை மெல்ல வருடி கொடுத்தான்.
அவள் கண்ணீர் துளி அவன் தோள் பட்டையை நனைக்க அவள் கை பற்றியிருந்தவன் அழுத்தம் கூடியது. “ஒண்ணும் ஆகாதும்மா” என்றான் முனுமுனுப்பாக.
“சின்ன வயசுலேயே எங்கம்மா இறந்துட்டாங்க வாசு, எல்லாரும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி அப்பாவை வற்புறுத்தி இருக்காங்க. ஆனா அவர் எனக்காகவே தனியா வாழ்ந்து என்னை வளர்த்து ஆளாக்கினார். ஒழுக்கம், சுயமரியாதை, தர்மம் இப்படி எல்லாமே சொல்லி கொடுத்தார். அவர் உடம்பு சரியில்லாம போகறதுக்கு என்னோட நிலைமையும் ஒரு காரணம். ஆனா நான் என்ன பண்ணுவேன் இப்படி எல்லாம் நடக்கும்னு நாங்க நினைக்கலையே. என்னால முடிஞ்சவரைக்கும் அவரை நல்லபடியா பார்த்துக்க தான் முயற்ச்சி செஞ்சேன். வருத்தமும் மன உளைச்சலும் அவரை இப்படி ஆக்கிடுச்சு. எப்படி ஓடி ஆடி வேலை செய்த மனுஷன் தெரியுமா. என்னால உருக்குலைஞ்சு போய்ட்டாரு”. தன் போக்கில் அவள் சொல்லிக்கொண்டிருக்க அவள் தோளை வருடி கொண்டே செவிமடுத்து இருந்தான் அவன்.
சிறிது நேரத்தில் அவள் பேச்சு நின்று இருக்க, தோள் சாய்ந்திருந்தவளின் கன்னம் நிமிர்த்தி பார்ததான் மயங்கி இருந்தாள். எது நடக்க கூடாது என்று நினைத்தானோ அது தான் நடந்து இருந்தது.
அவசரமாக அங்கிருந்த சிஸ்டரை கத்தி அழைத்தவன் அவளை தூக்கி கொண்டு அவர் காட்டிய படுக்கையறையை நோக்கி சென்றான். அதற்குள் அவன் குரல் கேட்டு கோபாலும் கற்பகமும் ஓடி வந்தனர். உள்ளே தேவயானிக்கு மருத்துவம் செய்யப்பட்டது, அவள் கையில் ஊசி ஏற்ற இங்கே அவனுக்கு வலித்தது. பெற்றவர்களே இல்லாமல் வாழ்ந்த அவனுக்கு அவர்களின் இழப்பு பெரிதாக தெரியவில்லை. ஆனால் பெற்றவர்கள் அரவணைப்பில் வாழ்ந்தவளுக்கு கண் முன்னே அவர்களின் இழப்பு நிச்சயம் வலியை கொடுக்கும் தான். அவளை பார்த்து கொண்டே நின்று இருந்தவனை வந்து அழைத்தார் ஒரு நர்ஸ்.
“சார் டாக்டர் கூப்பிடறாங்க”
அவள் சொல்லி செல்ல, “நீங்க கொஞ்சம் அவளை பார்த்துகோங்க” என்று கற்பகத்திடம் கூறியவன் சோமு இருந்த அறையை நோக்கி செல்ல, கோபாலும் அவனுடன் வந்தான்.
“இல்லை நீ இங்கேயே இரு” என்று அவனை விட்டுவிட்டு இவன் மட்டும் சென்றான்.
மருத்துவர் இவனை கண்டதும், “நீங்க இவருக்கு என்ன வேணும்” என கேட்டார்.
“நான் அவர் மகளை கல்யாணம் பண்ணிக்க போறவன்”. உறுதியாக அழுத்தமாக அவன் சொன்ன விதத்தில் தலையை அசைத்தவர் அவனுக்கு இருக்கையை காட்டினார்.
“இங்கே பாருங்க அவர் நிலைமை சரியில்லை, ரொம்ப நாளாவே அவஸ்தை பட்டுட்டு தான் இருந்திருக்கார். எப்படியும் இன்னும் கொஞ்சம் நேரம் தான் தாங்குவார். நீங்க ஏதாவது பேசணும்னா பேசுங்க” என்றவர் கிளம்பி சென்று விட, கட்டிலில் போர்வையோடு போர்வையாக கிடந்தவரை பார்த்தான் வாசு. பெற்ற மகளுக்காக இன்னொரு வாழ்க்கையை கூட உதறி தள்ளி இருக்கிறார். தேவா இவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்ததில் தவறே இல்லை என்று தான் தோன்றியது.
அவர் அருகே சென்று நிற்க, மெல்ல கண் விழித்தார் சோமு, இவனை கண்டதும் லேசாக முறுவலிக்க முயன்று தோற்றவராக அவர் கையை நீட்ட அவன் அதை பற்றிகொண்டான். “தேவியை நல்லா பார்த்துகோங்க தம்பி, எங்கே அவளை தனியா விட்டுட்டு போய்டுவேனோன்னு பயந்துட்டே இருந்தேன், ஆனா இப்போ நிம்மதியா போவேன். அவ வாழ்க்கையில நிறைய கஷ்டத்தை அனுபவிச்சுட்டா, அவ மேலே எந்த தப்பும் இல்லை, எல்லா தப்பும் நான் தான் செஞ்சேன், நான் பண்ண தப்பால என் பொண்ணோட நிம்மதியே போச்சு. இனிமேலாவது அவ சிரிச்சுட்டே இருக்கணும். அது உங்க கையில தான் இருக்கு. நீங்க அவளை பார்த்துக்கனும்” சொல்லிக்கொண்டே இருந்தவர் அப்படியே தனது பேச்சையும் மூச்சையும் நிறுத்தி இருந்தார்.
அவரையே பார்த்து கொண்டிருந்தான் அவன், அப்பாவும் மகளும் ஒருவருக்கொருவர் எத்தனை அன்பு வைத்திருக்கிறார்கள். இந்த பாசம் தனக்கு கிடைக்கவில்லையே என்று தானே ஏங்கி தவித்து இருந்தான். இனி ஒரு தந்தையின் இடத்தில் இருந்து அவளுக்கு அந்த அன்பை கொடுக்க வேண்டும், மகனாக மாறி அவள் அன்பை பெற வேண்டும் என்று நினைத்து கொண்டான். ஆனால் இப்போது இந்த செய்தியை எப்படி தன்னவளிடம் தெரிவிப்பது. இதை எப்படி அவளால் தாங்கி கொள்ள முடியும். அவனுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. எப்படி இருந்தாலும் இதை சொல்லித்தானே ஆக வேண்டும், தள்ளி போடக்கூடிய விஷயம் அல்லவே.
தேவயானி அனுமதிக்கபட்டு இருந்த அறைக்கு சென்றான், வாடிய கொடியாய் மயங்கி கிடந்தவளை பார்க்கவே வருத்தமாக இருந்தது, இதில் அவள் தந்தையின் இறப்பை வேறு அவளிடம் எப்படி கூறுவான். அவன் அமைதியாக நிற்க, “டாக்டர் என்ன சொன்னாங்க வாசு” என்று கேட்டான் கோபால்.
"அவர் இறந்துட்டாரு" வெறித்த பார்வையுடன் அவன் அவளை பார்த்திருக்க, மயங்கி இருந்தவளின் கண்களில் ஓரம் நீர் பெருகி வழிந்தது.
அய்யோ என கற்பகம் அழ, “என்னப்பா பண்றது” என்று கேட்டான் கோபால்.
“எனக்கும் புரியலை இவ எப்படி இதை தாங்கிக்க போறா தெரியலை” என்றான் பின்னங்கழுத்தை தேய்த்து கொண்டே.
“அதுக்காக சொல்லாம இருக்க முடியாதே” அவன் கூற ஆமோதிப்பாக தலையை ஆட்டினான்.
சிறிது நேரத்தில் தேவி கண்களை திறக்க, அருகே இருந்த மூவரின் முகமுமே தான் கேட்ட செய்தியை உறுதி படுத்தியது.
மெல்ல எழ முயன்றவள் அருகே வந்தவன் அவளை தாங்கி கொள்ள, “எனக்கு அப்பாவை பார்க்கணும்” என்று உதடு பிதுக்கி அழுதாள் சிறுபிள்ளை போல.
“பார்க்கலாம்மா நீ கொஞ்சம் திடமா இருந்துக்கனும் சரியா” என்று அவன் கனிவாக கூற சரி என தலையாட்டினாள்.
கற்பகம் ஒரு பக்கம் அவள் கையை பற்றிக்கொள்ள தன்னோடு தோளில் சாய்த்தபடியே சோமுவின் அறைக்கு அழைத்து வந்தான். இமைகள் மூடி மீளா உறக்கத்தில் ஆழ்ந்து இருந்த தந்தையை கண்டவள் ஒரு கணம் உறைந்து மறுநிமிடமே அப்பா என்ற கதறலோடு அவர் அருகே ஓடி அவர் காலடியில் விழுந்து அழுதாள்.
அடிவயிற்றில் இருந்து அவள் கதறிய அழுகையில் வாசுவிற்கும் கண்ணீர் உடைப்பெடுக்க தோள் பட்டையில் அதை துடைத்து கொண்டு அவள் முதுகை வருடி கொண்டிருந்தான். கற்பகம் வாய் பொத்தி அழுதபடி நிற்க அங்கே தேவியின் அழுகுரலை தவிர வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை.
அப்பா அப்பா என்ற வார்த்தை மட்டுமே தான் அவள் வாயில் இருந்து வந்து கொண்டிருந்தது. பிறந்து தாய் முகம் அறிவதற்கு முன்பே அவளை பறிகொடுத்தவள், தாயுமானவனாக வளர்த்த தந்தையையும் பறிகொடுத்து விட்டு தாங்க முடியாத துயரத்தில் கதறிகொண்டிருந்தாள். பாரத்தை அடைத்து வைக்காமல் அழட்டும் என அருகே அவளை தாங்கி பிடித்தபடி சிலையாக நின்று இருந்தான் வாசு.
அவ்வளவு தானா தான் பட்ட துன்பம் எல்லாம் இந்த மனிதருக்காகத்தானே, அது எல்லாமே வீணாகி விட்டதா. தன்னை நிர்கதியாக தவிக்க விட்டு விட்டு சென்று விட்டாரா. எல்லாம் முடிந்து விட்டதா அப்பாவின் உயிர் கூட்டை விட்டு பிரிந்து விட்டதா ஆற்றாமை அழுகையாக வெளியே வர “அப்பா என்னை ஏன்பா தனியா விட்டுட்டு போனீங்க, நீங்க இல்லாம நான் அனாதையா ஆகிடுவேன்னு தெரியாதா. இப்படி என்னை அனாதையா விட்டுட்டு போகவா பாடுபட்டு வளர்த்தீங்க. அதுக்கு அம்மா போன அப்போவே என்னையும் எங்கயாவது தூக்கி போட்டு இருக்கலாமே. இனி யாருக்காக நான் உயிர் வாழனும்”. அவள் போக்கில் அவள் புலம்பிக்கொண்டிருக்க, அருகில் நின்றிருந்த வாசுவிற்கு அவள் வார்த்தைகள் சுருக்கென ஊசியாக தைத்தது.