• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 11, 2025
Messages
27
Chapter 15

எனக்குள் என்ன தான் நிகழ்கிறது?
என் அனுமதி இல்லாமல்
எனக்குள் நுழைந்து விட்டாய்.
ஏன் என்னை கேளாமல்
என்னை மாற்றிவிட்டாய்?
மாற்றம் மட்டுமே நிகழும் என்றாலும்
இந்த மாற்றம் என்றுமே மாறக்கூடாது
என நினைக்க வைத்து விட்டாய்.


அவர்களுக்குள் என்ன தான் நடக்கிறது என்று அவளுக்கு தெரியவில்லை. அவன் மீதான இவளின் எண்ணங்களுக்கு அவள் வண்ணம் கொடுக்கவில்லை என்றாலும் ஏழு வண்ண வானவில்லை போல நூறு வண்ணம் காட்டி கண்ணையும் கருத்தையும் நிறைத்தது அந்த உணர்வு.

இருவருமே அதன் பிறகு கல்யாணம் திருமணம் எதை பற்றியுமே பேசிக்கொள்ளவில்லை. ஆனால் மற்றபடி எல்லாவற்றை பற்றியும் பேசினார்கள். உலக அரசியல் பேசும் இரு நாட்டு தலைவர்கள் போல ஒட்டு மொத்த உலகையும் பற்றி பேசினார்கள். இப்போது தான் பேச்சு சுதந்திரம் கிடைத்தது போல இருவருக்குமே அந்த பேச்சு அத்தனை இனித்தது.

பேச்சு மட்டுமல்ல சில நேரங்களில் மௌனம் கூட தேனில் செய்த தீர்த்தமாக இனித்தது. ஒருவரை ஒருவர் பார்வையில் பரிமாறிக்கொள்ள, அங்கே மௌனம் மட்டுமே எஞ்சி இருந்தது. விழிவழி புகுந்து உயிரில் நிறைபவனை தடுக்க முடியாமல் தவித்து நிற்பாள். அவன் பார்வையில் கூர்மை தாளாமல் அந்த தருணங்களை அவளே உடைப்பாள்.

அதற்கும் கண்களால் சிரித்து அவளை கேலி செய்வான். எதுக்கு இப்படி கொத்தி தின்றது போல பார்க்கணும். முகத்தை திருப்பி கொண்டு வேறு வேலை செய்வது போல பாவனை செய்தாலும் முதுகை துளைக்கும் அவன் பார்வையில் முகம் சிவக்காமல் இருப்பதே பெரும்பாடாக இருந்தது.

அப்பாவின் இருப்பு மட்டுமே இந்த பூமியில் வாழ காரணமாக இருந்ததென்று நினைத்து கொண்டு வாழ்நாளை கடத்தி வந்தவள் இன்று தனக்காக சுவாசிக்க செய்கிறாள். அவள் சுவாசமாய் அவன் மாறி இருக்கிறான் அவளுக்கே தெரியாமல்.

காலையில் வேகமாக வந்து அலுவல் அறையை திறந்து சுத்தம் செய்து விளக்கை ஏற்றி விட்டு அமர எதிரே வந்து நின்றான் அவன்.
“உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா தேவா”

"நம்பிக்கை அப்படிங்கறதை விட ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்குதுள்ள அது பிடிக்கும். நெருப்பு எப்பவுமே கெட்டதை தன்னிடம் சேர்த்துக்காது. அதனால அந்த நெருப்ப தீபமா ஏத்தி வச்சா கெட்டது எதுவும் வீட்டை நெருங்காதுன்னு நமக்கு முன்னாடி இருந்த பெரியவங்க நம்பி இருக்கலாம். அதான் இந்த பழக்கம் வந்திருக்கும். என்னை பொருத்தவரைக்கும் எப்பவும் மேல் நோக்கி எரியற தீபத்தை பார்க்கும்போது நானும் அதே போலத்தான் எந்தநிலையிலும் என்னை நானே உயர்வா நினைக்கணும்னு மனசுக்குள்ள சொல்லிப்பேன். அதனால விளக்கேத்தறேன்".

கூறி முடித்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள், ஒற்றை காலை சுவற்றில் பதித்து மறுகாலை நிலத்தில் ஊன்றி கைகளை முன்னே மடக்கி நின்று இருந்தான். என்ன அவனை புருவம் உயர்த்தி கேட்டாள்.

“ஆத்திகத்திற்கு இப்படி ஒரு நாத்திகமான விளக்கம் யாரும் கொடுத்திருக்க முடியாது” என்றான் புன்னகையுடன்.

அவன் புன்னகை நெஞ்சை தொட்டு மருதாணி பூச, “இப்போ எல்லாம் அடிக்கடி சிரிக்கறீங்க” என்றாள் அவன் புன்னகையை ரசித்தபடியே.

“ஏன் பிடிக்கலையா” மீசையை முறுக்கி கொண்டே கேட்டான்.

கொடுவா மீசையும், அழுத்தமான உதடுகளும், சிரிக்கும் போது பளீரிடும் வெண்ணிற பற்களும், கூடவே சேர்ந்து சிரிக்கும் கண்களும் நெஞ்சை கொள்ளை கொள்ளாமல் இருந்தால் தான் தவறு.

“பிடிச்சதாலதான் கேட்டேன்” அவள் பதில் அவனை தேன் கடலில் திளைக்க வைத்தது.

“இப்போ தானே வாழ ஆரம்பிச்சு இருக்கேன்” என்றான் நெஞ்சை நீவி கொண்டே. அவன் பதிலை விட அவன் செய்கையில் கண்ணுற்றவள்

“என்ன ஆச்சு” என்றாள் படபடப்பாக.

“ஒண்ணுமில்லை, அப்படியே பன்னீர்ல நனைஞ்ச கத்தியை இதயத்தில வச்சு கீறின மாதிரி இதமா வலிக்குது”, குரல் கரைந்து கிறங்கிட அவன் சொன்னதை கேட்டவளுக்கு என்ன பதில் கூறுவது என்றே புரியவில்லை.

அவள் தடுமாறி அவன் முகம் பாராமல் தவித்து நிற்க, “நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்துடறேன்” என கிளம்பி சென்றான்.

அவன் சென்றதும் வெறுமையை உணர்ந்தவள், இவன் பக்கத்திலே இருந்தாலும் தவிக்க விடறான். விலகி போனாலும் தவிக்க விடறான் என்று பொருமிக்கொண்டே வேலையை பார்க்க துவங்கினாள்.

வேலையில் மூழ்கியவளை செருமல் குரல் உசுப்ப நிமிர்ந்து பார்த்தாள். ஒரு பெண் நின்று இருந்தாள். எப்படியும் வயது முப்பத்தைந்துக்கு மேல் இருக்கும். நல்ல வாட்டசாட்டமாக இருந்தாள்.

“யார் நீங்க என்ன வேணும்” கேட்டவளை ஏற இறங்க பார்த்தாள் அந்த பெண்.

என்ன இவள் எதற்காக இப்படி பார்க்கிறாள் என்று புரியாமல் எழுந்து வந்தவள், “என்ன வேணும் உங்களுக்கு” என்று கேட்டாள்.

“வேணும்றதை கொடுத்துடுவியா” நக்கல் கலந்த பேச்சு அவளிடம்.

“புரியலை”

"ம்ம், நீ இங்கே வேலைக்கு வந்து சேர்ந்ததுல இருந்து இந்த வாசு என்னை கிட்டவே சேர்த்ததுக்கவே மாட்டேங்குது. அதான் நீ என்ன அப்படி அதி ரூப சுந்தரின்னு பார்க்க வந்தேன்” கழுத்தை வளைத்து ஒரு சலிப்புடன் அவள் சொன்னதில் முகம் சுளித்து நின்றாள் தேவயானி.

“அதுக்கு” மேற்கொண்டு சொல் என்பது போல அவள் நிற்க, அந்த பெண்ணோ “இங்கே பாரு நீ எப்ப வேணும்னா வந்து போய்க்கோ ஆனா என்னோட சந்தோஷத்தை ஏன் கெடுக்கற. நான் நிம்மதியா இருக்கறதே இங்கே வர கொஞ்சம் நேரம் தான். அதுலயும் மண்ணை அள்ளி போட்டுட்டு” அந்த பெண் பேசிக்கொண்டே போக இவளுக்கு எரிச்சல் மண்டியது.

கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம இதென்ன பேச்சு என்று தான் முதலில் நினைத்தாள். ஆனால் அதை தாண்டி அவளிடமிருந்து வெளிபட்ட ஆதங்கம் தேவிக்கு அவள் மீது பச்சாதாபத்தை உண்டாக்கியது. இதெல்லாம் தான் சந்தோஷம் என்று பேசும் இந்த பெண்ணை என்னவென்று கூறுவது என்று தான் பார்த்தாள்.

அவள் பார்வை அந்த பெண்ணை பாவமாய் நோக்க, நிலைத்த பார்வையோடு தன்னை பார்த்தவள் மீது கோபம் வந்தது அவளுக்கு. ஆனால் அவளின் திடத்தன்மையில் தடுமாறியவள், “என்ன அப்படி பார்க்கற. என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது” என வாய் குழறி நின்றாள்.

அப்போதும் அசையாத பார்வை பார்த்தவள், “நீங்க கொஞ்சம் அமைதியா இருந்தா நாம பேசலாமா” என்று கேட்டாள்.

“என்ன.. என்ன.. பேச போற.., வாசுகிட்ட சொல்லிடுவேன்னு மிரட்ட போறியா” என்றாள் தடுமாற்றத்தோடு.

“அதெல்லாம் இல்லைங்க இதுல அவர் மட்டும் என்ன நியாயவானா, ரெண்டு பேருமே தான் தப்பு செஞ்சிறுக்கீங்க. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒழுக்கம் வேணும். தனி மனித ஒழுக்கதில தவறினா அது அடுத்தவங்களை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது”.

“குடிக்கறது தனி மனித சுதந்திரம் தான், ஆனா அதுவே குடிச்சுட்டு அடுத்தவங்களை தொல்லை செய்தா அது தவறு. அதே போலத்தான் அவர் கல்யாணம் ஆகாதவரா இருந்தாலும் கூட கல்யாணம் ஆன உங்களோட பழகினது ரொம்பவே தப்பு. இதனால அவரை சார்ந்து பாதிக்க யாரும் இல்லைன்னா கூட, அடுத்தவங்க குடும்பத்தை பாதிக்கும்னு அவர் நினைக்கவே இல்லை. அது ரொம்ப பெரிய தப்பு” என்றாள்.

“அது... அது.. அந்த பெண் தடுமாற, என்ன உங்களோட தனிபட்ட விருப்பம்னு சொல்ல போறீங்களா. அதெப்படி உங்க கணவர் பிள்ளைகள் எல்லாருமே ஏதோ ஒரு விதத்தில உங்களை சார்ந்து தானே இருக்காங்க. நீங்களும் கூட அவங்களை சார்ந்து தானே வாழறீங்க. அப்படி இருக்கும்போது அவங்க நிம்மதியை கெடுக்கற மாதிரி நீங்க செய்யற இந்த செயல் அவங்களுக்கு தெரிஞ்சா என்ன ஆகும், கொஞ்சம் யோசிச்சு பார்த்தீங்களா. வெளியே சொல்ல வெட்கப்படற எந்த செயலும் தவறு தாங்க. அது திருட்டு, கொலை, கொள்ளை எதுவா இருந்தாலும்” என்றாள்.

அந்த பெண் கண்கள் எல்லாம் கலங்கி போனது, நான்... தொண்டை அடைக்க அவளால் பேச முடியவில்லை. வேகமாக உள்ளே சென்று ஒரு தம்பளர் தண்ணீரை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தாள் தேவி.

அதை வாங்கி குடித்தவள், சிறிது நேரத்திற்கு பிறகு பேச துவங்கினாள். "நான் வேணும்னு இப்படி செய்யலை. அவருக்கு வேற ஒரு பெண்ணோட தொடர்பு இருக்கு. என்னை கண்டுக்கறதே இல்லை. நானா வலிய போனா கூட ச்சீ போன்னு உதாசீனம் செய்வார். பொறுத்து பொறுத்து பார்த்தேன் என்னால முடியலை. பிறந்த வீட்டுல சொன்னா பசங்க இருக்காங்க அவங்களுக்காக பொறுத்து போன்னு சொல்றாங்க. புகுந்த வீட்டுல எல்லாம் தெறிஞ்சும், உங்களை வீட்டை விட்டு துரத்தலை தானே அப்பறம் என்னன்னு கேட்கறாங்க. இதெல்லாம் யோசிச்சு யோசிச்சு எனக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான். சில நேரங்கள்ல உடல் தேவை அதிகமா இருக்கும் போது தவிச்சு போறேன். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. அதான் இந்த மாதிரி” மேற்கொண்டு பேச முடியாமல் சங்கடமாக முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

“இங்கே பாருங்க அழாதீங்க, உங்க நிலைமை எனக்கு புரியுது. ஆனா அதுக்கான முறை இது இல்லை. முறையில்லாத எந்த உறவும் தவறு தான். உங்க கணவர் தவறு செய்தா, நான் சரியா இருக்கேன் பாருடான்னு அவர் முன்னாடி வாழ்ந்து காட்டுங்க. அதை விட்டுட்டு நானும் தப்பு செய்வேன்னு சொன்னா என்ன அர்த்தம்”

“அவர் முன்னாடி அப்படி வாழ்ந்து காட்டறதுல எனக்கென்ன கிடைக்க போகுது, என்னோட சந்தோஷம் நிம்மதி இதெல்லாம் கிடைக்குமா சொல்லு” என்றாள் ஒரு வேகத்துடன்.

“நான் சொன்னது நீங்க எல்லாத்தையும் துறந்து துறவியா வாழணும்னுற அர்த்ததுல இல்லை.. உங்களோட உணர்வுகளை கட்டுபடுத்தி வாழ்ந்தா மட்டும் யாரும் உங்களுக்கு தியாகி பட்டம் கொடுக்க மாட்டாங்கதான். ஆனா அதே நேரம் நேர்மையான வாழ்க்கை வாழ இங்கே எல்லாருக்குமே உரிமை இருக்கு. நீங்க உங்களுக்கான ஒரு நல்ல துணையை தேடிக்கலாம். உங்க பிள்ளைகளுக்கு உங்களோட நிலையை புரிய வச்சு அவங்க முன்னாடியே தலை நிமிர்ந்து வாழணுமே தவிர இப்படி ஒளிஞ்சு மறைஞ்சி இல்லை சரியா” என்றாள்.

அவள் அமைதியாக இருக்க தேவியே தொடர்ந்தாள். “உங்களால இந்த உறவை என்கிட்ட சொன்ன மாதிரி உங்க பிள்ளைகள் கிட்ட சொல்ல முடியுமா” என கேட்க பதறி போன அந்த பெண் இல்லை என வேகமாக தலையாட்டினாள்.

“அப்போ இதை தொடர நினைக்காதீங்க, அது அவங்களுக்கு உங்களை ஒரு மோசமான முன்னுதாரணமா காட்ட வழி கொடுத்திடும். அவங்க வாழ்க்கை உங்க வழிக்காட்டுதலோட நல்லபடி அமைய வேண்டாமா. அதை நினைச்சு பாருங்க” என்றாள்.

அந்த பெண்மணி தலை குனிந்து அமர்ந்து இருந்தாள், “இங்கே பாருங்க நீங்க தலை குனிய தேவை இல்லை. எப்போ செஞ்சது தப்புன்னு உணர்றீங்களோ அப்போவே அதை திருத்திக்க பாருங்க அது தான் நல்லது. இல்லைன்னா உங்களோட குற்றவுணர்ச்சியே உங்களை ஒருநாள் கொன்னுடும்”

அவர் பேச பேச நிமிர்ந்து அமர்ந்த பெண்மணி, “சின்ன பொண்ணா இருக்க உனக்கு தெரிஞ்ச நியாயம் கூட எனக்கு தெரியலை பாரேன். யாரையோ பழி வாங்கறேன்னு. என்னை மன்னிச்சுடுமா” என்று கேட்டாள்.

“மன்னிப்பெல்லாம் வேண்டாம்மா மனம் திருந்தினாலே போதும்” என்றாள் தேவி.

“நான் போறேன்மா” என்று விட்டு அந்த பெண்மணி அங்கிருந்து வேகமாக சென்று விட வாசலில் வந்து நின்றவள் இடபுறமாக திரும்ப அங்கே கைகள் கட்டிகொண்டு சுவற்றில் சாய்ந்து நின்று இருந்தான் வாசு.

“நீங்க எப்போ” அவள் கேட்டு முடிக்கவில்லை, அவள் காலில் விழுந்திருந்தான் அவன்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top